வெளியே தமிழ்த்துவம் உள்ளே இந்துத்துவம்

கட்டுரைகள்

2009 ஜனவரி ‘த சண்டே இந்தியன்’ இதழில் ‘தைப்பொங்கல் அனைத்துத் தமிழர்களின் விழா கிடையாது, அதுவொரு இந்து மதப் பண்டிகையே’ என நான் ஒரு கட்டுரை எழுதியபோது பெரியளவில் எதிர்வினைகள் ஏதும் எழவில்லை. இம்முறை பொங்கலையொட்டி அதே கருத்தை நான் சமூக வலைத்தளங்களில் சொன்னபோது கன்னா பின்னாவென்று எதிர்வினைகள் கிளம்பலாயின. வழமைபோலவே ‘இது தமிழர்களைக் கூறுபோடும் முயற்சி’ என்றும் பல எதிர்வினையாளர்கள் சொல்லத் தயங்கவில்லை. அண்மைக்காலங்களில் ஆங்காங்கே கிளம்பும் ‘முப்பாட்டன் முருகன்’ போன்ற தமிழ்த்துவ எழுச்சிகள் இந்த எதிர்வினைகள் எனப் புரிந்துகொள்ள வேண்டியதுதான்.

இன்றைக்கு முப்பது வருடங்களிற்கு முன்புவரை இந்துகளைத் தவிர்ந்த ஏனைய மதத்தவர்கள் தைப் பொங்கல் கொண்டாடியதேயில்லை. முப்பது வருடங்களிற்கு உள்ளாக மிகச் சில கத்தோலிக்க ஆலயங்களில் மட்டுமே பொங்கலிடும் வழக்கம் நுழைந்திருக்கிறது. ஏனைய கிறிஸ்தவப் பிரிவுகளின் ஆலயங்களில் பொங்கலிடும் வழக்கம் இன்றுமில்லை. மசூதிகளிலும் பொங்கிப் படைக்கும் வழக்கமில்லை. இந்துகளைத் தவிர்த்த ஏனைய தமிழ்பேசும் மதத்தவர்கள் இன்றுவரை தங்களது வீடுகளில் பொங்கலைக் கொண்டாடுவதில்லை. அவ்வாறானால் இதை எவ்வாறு தமிழர்களின் பொது விழா என அழைக்கமுடியும்?

இன்றைக்கு ஓர் நூற்றாண்டுக்கு முன்புவரை தமிழ்ச் சமூகத்தில் தலித்துகளின் உரிமைகளும் நிலமைகளும் எவ்வாறிருந்தன என்பது எல்லோரும் அறிந்ததே. கோயிலிற்குள் நுழைய முடியாது, கோயில்களில் தேங்காய் உடைக்க முடியாது, பொதுக் குளங்களில் குளிக்க முடியாது, தண்ணீர் அள்ள முடியாது, நிலம் வைத்திருக்க உரிமையில்லை, பொது வழிகளில் நடமாடக்கூடாது, மேற்சட்டை அணிய முடியாது, தாலி கட்ட உரிமையில்லை, அவ்வளவு ஏன் சில பிரிவினருக்கு வீட்டில் பாயாசம் சமைக்கக் கூட உரிமையில்லை. அவ்வாறெனில் இந்த மக்கள் உண்மையில் பொங்கலைக் கொண்டாட வாய்ப்புகள் இருந்தனவா? பிற சாதித் தமிழர்களோடு பொங்கலைப் பகிர்ந்துண்டு களித்தார்களா? இல்லையெனில், வரலாற்றுரீதியாக இதுவொரு சாதி இந்துகளின் பண்டிகையே தவிர ஒட்டுமொத்தத் தமிழர்களின் பண்டிகை அல்ல.

எந்த நேரத்தில் வரலாறு என்ற பெயரை உச்சரித்தேனோ தெரியாது, பொங்கல் பிரியர்கள் பொங்கல் தமிழர்களின் ஆதி விழாவே என நிறுவுவதற்காக, சங்க காலம்வரை ஆதாரங்களைத் தேடிச் சென்றார்கள். அகநானூறில் ஆதாரம் இருக்கிறது என்றார்கள், புறநானூறில் ‘புரூவ்’ இருக்கிறது என்றார்கள். ஆனால் யாரும் இதுவரை உருப்படியாக ஓர் ஆதாரத்தைக் கூடக் காட்டியதில்லை. தை முதல் நாளில், தமிழர்கள் பொங்கல் விழா எடுத்தார்கள் என்பதற்கு எந்த இலக்கியத்திலிருந்தும் அவர்களால் ஆதாரங்களைக் காட்ட முடியவில்லை. எனவே, பழந்தமிழ் இலக்கியங்களில் காணக்கிடைக்கும், விவசாயத்திற்கு மழை அருளிய இந்திரனுக்கு புதியவற்றைப் பொங்கலிட்டு வழிபடும் ‘இந்திரவிழா’வின் எச்சமா இன்றைய பொங்கல் என நான் கேட்க வேண்டியிருந்தது.

தை முதல் நாளில் பொங்கலிடுவதின் காரணம், தாற்பரியம் மற்றும் வரலாறு குறித்து மிகத் தெளிவான குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன. தேடுதலில் ஆர்வமுள்ளவர்களிற்காக இணையம் முழுவதும் கட்டுரைகளும் ஆதாரங்களும் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றின் சாரங்களைத் தொகுத்துக்கொள்ளலாம்:

தை முதல் நாளில் சூரியனிற்கு பொங்கலிடும் வழக்கத்தின்  அடிப்படை ‘மகர சங்கராந்தி’ ஆகும். புவி சூரியனைச் சுற்றி வந்தாலும், இந்துமத சாஸ்திரங்கள் பன்னிரெண்டு இராசிகளாகப் பிரிக்கப்பட்ட வான்வெளியில் சூரியன் நகர்வதாகக் கருதுகின்றன. இந்த நகர்வில் சூரியன் வடக்கு நோக்கித் தனது பயணத்தை திருப்புகின்ற நாள்  -மகர இராசியினுள் பிரவேசிக்கும் நாள் – மகர சங்கராந்தி எனப்படுகிறது. சமஸ்கிருதத்தில் ‘சங்கரமண’ எனில் நகரத் தொடங்கு எனப் பொருள். இதுவே இந்நாளில் இந்துகள் சூரியனிற்குப் படையலிட்டு எடுக்கும் விழா ‘சங்கராந்தி’ என அழைக்கப்பட காரணமாயிற்று. பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் கும்பமேளா, மகர சங்கராந்தி அன்று தொடங்குகிறது. இந்த நாளில்தான் இன்றுவரை தைப் பொங்கலும் கொண்டாடப்படுகிறது. அதனால்தான் இந்துப் பஞ்சாங்கக் கணிப்புக்கு ஏற்றவாறு பொங்கல் விழாவும் ஓர் ஆண்டில் சனவரி 15ம் நாளும் இன்னொரு ஆண்டில் சனவரி 14ம் நாளும் கொண்டாடப்படுகின்றது. இந்த வருடம் பொங்கல் 14ம் தேதியா அல்லது 15ம் தேதியா எனத் தீர்மானிப்பது இராசிபலனும் சோதிடர்களும்தானே தவிர தமிழரின் வரலாறு அதைத் தீர்மானிப்பதில்லை.

இல்லை, இந்தப் பஞ்சாங்கத்திற்கும் தமிழர்களின் பொங்கலிற்கும் தொடர்பில்லையெனில் ஏன் பொங்கல் விழா ஒரு நிலையான நாளில் அல்லாமல் 14 – 15 என மாறி மாறிக் கொண்டாடப்படுகின்றது என நான் கேட்பேனா மாட்டேனா? இன்றுவரை தமிழ் பஞ்சாங்கக் கலண்டர்கள் இந் நாட்களைச் ‘சங்கராந்திப் பொங்கல்’ என்றே குறிப்பிடுகின்றன.

இந்த நாளை ஏதோ தமிழர்கள் மட்டும்தான் கொண்டாடுவதாகவும் இது தமிழர்களிற்கே உரித்தான விழாவாகவும் நினைத்துவிட வேண்டியதில்லை. இதே நாளை மகர ஜோதி, லோரி , உத்தராயண், மகர சங்கராந்தி அல்லது சங்கராந்தி என்று இந்தியா முழுவதிலுமுள்ள இந்துகள் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடுகிறார்கள்.

மூடத்தனமான இராசிபலன் கணிதத்தை முன்வைத்துக் கொண்டாடப்படும் விழாவையும், அந்நாளில் சூரியனையும் நெருப்பையும் வணங்கிக் கற்கால வழமையைத் தொடர்வதையும், தமிழர்களின் விழாவென ஏந்தித் தாங்குவதையும்  எவ்வாறு புரிந்துகொள்ளவது? வேறொரு சரியான காரணம் எனக்குச் சொல்லப்படாதவரை இதைத் தமிழ்த்துவ முகமூடிக்குள் உறைந்திருக்கும் இந்துத்துவம் என்று மட்டுமே என்னால் சொல்ல முடிகிறது.

இந்துக்களின் கொண்டாட்டமாக இருந்துவந்த இந்த விழா எந்தக் கட்டத்தில் தமிழர்களின் விழாவென்ற குரலைப் பெறுகிறது? சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் மறைமலையடிகள் போன்றவர்கள் இந்தக் குரலை ஒலித்தாலும் இதை ஓங்கி ஒலித்தவர் தந்தை பெரியார்.

அவர் விடுதலை இதழில் (30.01.1959) இவ்வாறு எழுதினார்:

“தமிழனுக்குக் கடவுள், சமயம், சமய நூல், வரலாற்றுச் சுவடி, இலக்கியம் முதலியவை என்று சொல்ல எதுவும் காண மிகமிகக் கஷ்டமாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில், தமிழர் விழா  என்பதாக நான் எதைச் சொல்ல முடியும்? ஏதாவது ஒன்று வேண்டுமே? அதை நாம் கற்பிப்பது என்பதும், எளிதில் ஆகக்கூடியவை அல்லவே என்று கருதிப் பொங்கல் பண்டிகை என்பதைத் தமிழன் விழாவாகக் கொண்டாடலாம் என்று முப்பதுஆண்டுகளுக்கு முன் நான் கூறினேன்.” 

இங்கே பெரியார் பொங்கல் விழாவை தமிழ் மரபு , தொன்மை என்றெல்லாம் ஏதும் சொன்னாரில்லை.  “ஏதாவது ஒன்று வேண்டுமே” என்பதற்காக தீபாவளியைக் காட்டிலும் சமயத்தன்மை குறைவாகக் காணப்படுகிறது என அவர் மதிப்பிட்ட பொங்கல் பண்டிகையைத் தமிழர் விழாவாகப் பரிந்துரைக்கிறார்.

அதேவேளையில் “நான் சொல்கிறேன் என்பதால்  நம்பாமல் உங்கள் பகுத்தறிவால் நான் சொல்வதை ஆராய்ச்சி செய்து நல்லதை ஏற்று அல்லாததைத் தள்ளிவிடுங்கள்” என எப்போதும் உரைத்தவரும் பெரியார்தான். இருபத்தோராம் நூற்றாண்டில்,  இந்து சமயக் காலக்கணிதத்திற்கு உட்பட்டு சமஸ்கிருதமொழியில் பயன்பாடுள்ள ஒரு  மடத்தனமான சாஸ்திரத்தை தமிழர் விழாவென நாங்கள் தூக்கிப்பிடிக்கத்தான் வேண்டுமா? சூரியன் தனுவை விட்டு மகர ராசிக்கு நகர்ந்தால் நமக்கென்ன மக்களே! அதுக்கெல்லாமா நாங்கள் விழா எடுக்க முடியும்!

தமிழர்களில் ஒரு பகுதியினர் மட்டுமே இந்து சமயக் காலக் கணித சாஸ்த்திரத்தின்படிக்குக் கொண்டாடும் ஒரு விழாவை ஒட்டுமொத்தத் தமிழர்களின் விழாவாக, ஏனைய மதத்தவர்கள் மீதும் எல்லாத் தமிழர்கள் மீதும் திணிக்கும் செயல் தமிழ்த்துவமா இல்லை இந்துத்துவமா?

சமூக வலைத்தளங்களில் மூர்க்கத்தோடு இயங்கும் இந்துத்துவ சக்திகளை நம்மால் எளிதாக அடையாளம் கண்டுவிட முடியும். ஆனால் நசிந்து நசிந்து “யார் என்ன செய்தாலும் என்ன… எனக்குப் பொங்கல் தின்னக் கிடைத்தால் சரிதான்” என்று மறைமுகமாக முட்டுக்கொடுப்பவர்கள்தான் ஆபாசமானவர்கள். இது வெறுமனே பொங்குதல், தின்னுதல் என்றளவில் நிற்கமட்டும் நமக்கென்ன பிரச்சினை. ஆனால் இதையொரு தமிழ் பண்பாட்டுப் பொது அடையாளமாக வலியத் திணிக்க முற்படும்போதுதான் நாம் மறுத்துப் பேச வேண்டியிருக்கிறது.

பொங்கல் விழாவால் தமிழர்களை ஒன்றிணைப்பதை, நான் கேள்விகேட்டுக் குழப்பிவிடுகிறேன் என்றுகூட ஒரு பொங்கல் பிரியர் எழுதியிருந்ததைப் பார்த்தேன். அய்யா! நீங்கள் சொல்வது போல தமிழர்கள் பல்லாயிரம் வருடங்களாகப் பொங்கலைச் சேர்ந்து கொண்டாடிவருகிறார்களென்றால் என்ன மயிருக்கு இந்தக் கணம்வரை சாதியாகப் பிரிந்துகிடக்கிறார்கள் எனக் கேட்கிறேன். தமிழர்களை வெறுமனே  புக்கை, சுண்டல் கொடுத்து இணைக்கலாமென்றா நீங்கள் நினைக்கிறீர்கள்?

கிளிப்பிள்ளைக்குச் சொல்வதுபோல திருப்பித் திருப்பிச் சொன்னால், இப்போது தமிழர் ஆண்டென அழைக்கப்படும் பிரபவ-விபவ என்னும் அறுபது ஆண்டுகள் வட்டம் இந்துக் காலக் கணித முறையை (சக சம்வாட் ) அடிப்படையாகக்கொண்ட ஆண்டுவட்டம். இந்தக் காலக் கணித முறையில் இராசி சக்கரத்தில் தனு இராசியிலிருந்து மகர இராசிக்குள் சூரியன்நுழையும் நாளே தை மாதத்தின் முதல்நாள் ஆகிறது. இந்த நாள் நிலையானதல்ல. இராசிபலன் கணிப்பிற்கேற்ப முன்னும்பின்னுமாக மாறும். இந்த நாட்களில்தான், சோதிடர்கள் குறிக்கும் பஞ்சாங்க தினங்களில்தான் நீங்கள் சூரியனிற்குப் பொங்கல் இடுவீர்களானால் இது இந்து சாஸ்திர வகைப்பட்டதே ஒழிய இது ஒருபோதும் தமிழ்த்துவ விழாவாகாது.

சாஸ்திரங்களென்று சொன்னேன். “அதனால் இப்ப என்ன வந்தது?” என்று ஒரு சிறங்கைப்  பொங்கல் உண்ட மிதப்பில் கேட்காதீர்கள். கீழே அண்ணல் அம்பேத்கர் சொல்வதைக் கவனியுங்கள்:

“நீங்கள் வீழ்த்த வேண்டிய எதிரி சாதியைக் கடைப்பிடிக்கும் மக்களல்ல. சாதிகளின் மதமான இந்து மதத்தை மக்களுக்குக் கற்றுத் தந்திருக்கிற சாத்திரங்களே உங்களின் பயங்கர எதிரி!”

5 thoughts on “வெளியே தமிழ்த்துவம் உள்ளே இந்துத்துவம்

  1. தொல்குடி சமூகங்கள் உணவு தேடி அலைந்து, வேட்டையில் இறங்கி, கருவிகளை கையாண்டு, முன்னேறி
    கால்நடைகளை வயப்படுத்தி, வளர்த்து, மேய்ச்சல்சமூகமாக கிளைகொண்டு , பயிர்தொழில் அறிவுடன், நீரிடமேலாண்மை வளமுடன் வேளாண்மை சமூக மக்களாக பெற்ற வாழ்நிலையை குறிஞ்சி,முல்லை, மருதம், நெய்தல், பாலை திணை வாழ்க்கைசெய்திகளாக பண்டைதமிழ் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன்
    வேளாண் சமுக வாழ்க்கையின் பண்பாட்டு வெளிப்பாடாக உழைப்புக்கு பகல் பொழுது அதிகம் இருக்கும் சூரியனின் வடதிசை பயணமாக கருதும் தை முதல் தேதிசிறப்பு பெறுகிறது.தினை அறுவடை கால கொண்டாட்டமான கார்த்திகை கொண்டாட்டம் போல் நெல் அறுவடை கொண்டாட்டம் சந்திரனை அடிப்படையாக கொண்டபருவ கணிப்பிலிலிருந்து சூரியனை அடிபடையாக கொண்ட புதிய பருவகால ஆண்டு கணிப்பு ஆதலால் அறுவடை திருநாள் புத்தாண்டு என்றும் பொங்கல் போற்றப்படுகிறது.சூரியனை அடிப்படையாக் கொண்ட ஆண்டுக்கணக்கு சமயம் சாராதது.நாட்டார் மரபில் தை முதல் தேதியை வருடபிறப்பு மாசப்பிறப்பு என்றே மக்கள் குறிப்பிடுவர். பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் வேளாண் சமூகஉடமை படி நிலைவெளிப்படுவதும்அதனை கடந்து மொழிசார்ந்த வளமை பண்பாடு வெளிப்பாடாய் இருப்பதையும் மறுப்பதற்கில்லை

  2. ///இன்றைக்கு முப்பது வருடங்களிற்கு முன்புவரை இந்துகளைத் தவிர்ந்த ஏனைய மதத்தவர்கள் தைப் பொங்கல் கொண்டாடியதேயில்லை. முப்பது வருடங்களிற்கு உள்ளாக மிகச் சில கத்தோலிக்க ஆலயங்களில் மட்டுமே பொங்கலிடும் வழக்கம் நுழைந்திருக்கிறது. ஏனைய கிறிஸ்தவப் பிரிவுகளின் ஆலயங்களில் பொங்கலிடும் வழக்கம் இன்றுமில்லை. மசூதிகளிலும் பொங்கிப் படைக்கும் வழக்கமில்லை. இந்துகளைத் தவிர்த்த ஏனைய தமிழ்பேசும் மதத்தவர்கள் இன்றுவரை தங்களது வீடுகளில் பொங்கலைக் கொண்டாடுவதில்லை. அவ்வாறானால் இதை எவ்வாறு தமிழர்களின் பொது விழா என அழைக்கமுடியும்?/// எங்கள் கிராமத்தில் இந்துக்களும் கிறித்தவர்களும் சரிபாதி உள்ளனர். அனைவரும் ஒரே நாளில் பொங்கல் கொண்டாடுவதை நான் சிறுவயது முதல் பார்த்து வருகின்றேன்… ஒரு கட்டுரையாளர் எப்படி //////இன்றைக்கு முப்பது வருடங்களிற்கு முன்புவரை இந்துகளைத் தவிர்ந்த ஏனைய மதத்தவர்கள் தைப் பொங்கல் கொண்டாடியதேயில்லை./// இப்படி அருதியிட்டுக் கூற முடியும்… இவர் எத்தனை ஆண்டுகளாக எத்தனை கிராமங்கள், எத்தனை கிறித்தவர்களை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்????

  3. ///இங்கே பெரியார் பொங்கல் விழாவை தமிழ் மரபு , தொன்மை என்றெல்லாம் ஏதும் சொன்னாரில்லை. “ஏதாவது ஒன்று வேண்டுமே” என்பதற்காக //// என்னவோ பெரியார் தோன்றியபிறகுதான் உலகமே தோன்றியது போல் பேச வேண்டால்…

    தமிழன் ஏதுமற்ற அறிவிலியாகவா தெருவில் சுற்றிக் கொண்டிருந்தான்… ஏதோ ஒன்று வேண்டும் என்பதற்காக,

    சாப்பிட சாப்பாடு ஏதும் இல்லை என்றால் பெரியார் ஏதோ ஒன்றைச் சாப்பிட வேண்டுமே என்று கொல்லைப்புறத்தில் கிடப்பதைச் சாப்பிடலாம் என்று சொல்வாரோ????

  4. மதிப்பிற்குரிய ஷோபாசக்தி

    நீங்கள் கம்யூனிஸ்டாக இருப்பதால் உங்களுக்கு ஹிந்து மதத்தின் மேல் இருக்கும் எதிர்ப்பு ஞாயமானது .
    நீங்கள் ஹிந்து மதத்தை பின்பற்றுபவர்களை நண்பர்களாக ஏற்று கொல்லமாட்டீங்களா ?
    ஹிந்து மதமும் ஹிந்துத்வவும் ஒன்று என்று நினைக்கிறீர்களா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *