காயா

கதைகள்

ன்பது வயதுச் சிறுமியும் பாரிஸின் புறநகரான சார்ஸலின் ‘அனத்தலே பிரான்ஸ்’ பள்ளி மாணவியும் எனது உற்ற தோழன் திருச்செல்வத்தின் ஒரே மகளுமான செல்வி. காயா கொல்லப்பட்டதற்குச் சில நாட்களிற்கு முன்னதாக நடந்த ஒரு சம்பவமே ‘காயா’ என்ற இந்தக் கதையை நான் எழுதுவதற்குக் காரணமாகிறது.

முதலில் காயாவின் அப்பா திருச்செல்வத்தைக் குறித்துச் சொல்லிவிடுகிறேன். நானும் திருச்செல்வமும் ஒரே கிராமத்தில் ஒரே நாளில் ஒரே மாதத்தில் 1967-ம் வருடம் பிறந்தவர்கள். முதலாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை ஒன்றாகவே படித்தவர்கள். பத்தாவது வகுப்பு இறுதிப் பரீட்சை எழுதியதன் பின்பாக நான் படிப்பைத் தொடரவில்லை. திருச்செல்வம் அதற்குப் பின்பு யாழ்ப்பாணம் சென்று படித்துப் பேரதனைப் பல்கலைக்கழத்திற்கும் தேர்வாகினான்.

பள்ளிக்காலங்களில் நானும் திருச்செல்வமும் அப்படியொரு கூட்டாளிகள். இரண்டுபேரும் எப்போதுமே சோடி போட்டுத்தான் திரிவோம். நாங்கள் இரண்டுபேருமே கிராமத்திற்குள்ளும் பள்ளிக்கூடத்திலும் பெரிய குழப்படிகாரர்களாகயிருந்தோம். ஆனால் நான் கொஞ்சம் பயந்தாங்கொள்ளிதான். திருச்செல்வம் முரடன். பேசிக்கொண்டிருக்கும்போதே ஓங்கி அடித்துவிடுவான். பல நிற ‘வயர்’களால் தானே பின்னிய பட்டியை இடுப்பில் எப்போதுமே கட்டியிருப்பான். என்னோடு யாராவது பையன்கள் சண்டை வலித்தால் அவர்களைத் திருச்செல்வம் ‘வயர்’ப் பட்டியால் அடித்து மூஞ்சி முதுகெல்லாம் பிய்த்துவிடுவான்.

அப்போது எங்களிற்கு பதின்மூன்று அல்லது பதினான்கு வயது இருக்கும். பள்ளிக்கூட மண்டபத்தில் போயிருந்து சேர்ந்து படிக்கப்போகிறோம் என வீடுகளில் சொல்லிவிட்டு இரவுகளில் கிளம்பிவிடுவோம். இருட்டின் போர்வைக்குள் கிராமத்தின் மணல்மேடுகளில் ஏறுவதும் வயல்வெளிகளிலே நடந்து திரிவதும் வாய்த்தால் யாருடைய தென்னைகளிலாவது ஏறிக் களவாக இளநீர் பறித்து அதைக் கல்லால் குத்தி உடைத்துத் திறக்கப்பண்ணிப் பருகுவதுமாகத் திரிந்துகொண்டிருந்தோம். இரவுகளில் இலக்கற்றுப் பேசியவாறு திரிவதில் அப்படியொரு விறுவிறுப்பு எங்களிற்கு.

எங்களது கிராம அபிவிருத்திச் சபையில் ஒரு சிறிய நூலகமிருந்தது. அந்த நூலகத்தில் நூலகராக திருச்செல்வத்தின் அக்கா இருந்தார். அந்த நூலகத்திற்கு நூற்களை தெரிவு செய்து வாங்கிய புண்ணியவான் யாரென்று தெரியவில்லை. ஜெயகாந்தன், நா. பார்த்தசாரதி, அகிலன், ஜி.நேசன் என்றெல்லாம் நான் அங்குதான் படிக்கத்தொடங்கினேன். ‘வால்காவிலிருந்து கங்கைவரை’ நூல் அப்போது என்னை வெகுவாக ஈர்த்ததற்கு அந்நூலில் வரும் மெலிதான பாலுறவுச் சித்திரிப்புகளே காரணமாகயிருந்தன.

அந்த நூலகத்தில் தமிழ்வாணன் எழுதிய சில பாலுறவு விளக்க நூல்களுமிருந்தன. ‘உடலுறவில் மனைவியை மகிழ்விப்பது எப்படி?’, ‘இல்லற இன்ப விளக்கம்’ போன்ற தலைப்புகளில் அந்த நூல்களிருந்தன. நூலகத்திற்கு வரும் சிலர் அந்தவகை நூல்களை இரவலாக எடுத்துப் போவதை ஓரக்கண்ணால் கவனித்திருக்கிறேன். ஒருநாள் திருச்செல்வத்தின் அக்காவின் மேசையிலேயே அப்படியான நூலொன்று விரித்தபடியிருப்பதை நான் பார்த்தேன். திருச்செல்வம் அந்தவகை நூல்களில் இரண்டை நூலகத்திலிருந்து திருடிக்கொண்டே வந்துவிட்டான். கடற்கரையில் தாழம்புதர்களிடையே உட்கார்ந்து நானும் திருச்செல்வமும் அந்த இரண்டு புத்தகங்களையும் அவசர அவசரமாகப் படித்து முடித்த பின்பாகத் திருச்செல்வம் மறுபடியும் அந்தப் புத்தகங்களை யாருக்கும் தெரியாமல் நூலக அலுமாரியில் வைத்துவிட்டான்.

கிராமத்திற்கு ஒதுக்கமாகக் கடற்கரையில் அன்னை வேளாங்கன்னி கோயில் உள்ளது. இரவு வேளையில் அந்தக் கோயில் மண்டபத்தில் நானும் திருச்செல்வமும் படுத்துக் கிடந்தபோதுதான் இருவரும் முதன்முதலாகச் சுய இன்பம் செய்வதில் ஈடுபட்டோம். முதல் தடவை விந்து வெளியேறிய அந்த அனுபவம் இப்போதும் அரளிப் பூ மணத்துடனும் ஈரப்பசையுடனும் என் நெஞ்சிலுள்ளது.

உண்மையில் அதுவொரு அச்சமூட்டும் கிறுகிறுப்பாகவே அப்போது இருந்தது. அடுத்த மூன்று நாட்களிற்கு விந்துவின் மணம் என் உடலிலிருந்தது. சிலநேரங்களில் வாந்தி வருவதுபோலவுமிருந்தது. அன்னை வேளாங்கன்னி கோயிலில் படுத்துக்கிடந்து சுய இன்பம் செய்ததால் கடவுள் என்னைத் தண்டிக்கிறாரோ என்றுகூடப் பயந்தேன். சில நாட்களிலேயே மெதுமெதுவாக அச்சம் தணிந்து போயிற்று. இரவுகள் வருவதே சுய இன்பம் செய்து திளைப்பதற்காகவே என ஆகிப் போயிற்று எனக்கு.

நான் இயக்கத்தின் பயிற்சி முகாமிலிருந்த காலங்களில் இரவுக் காவல் கடமையிலிருக்கும்போது சுய இன்பம் செய்வதுண்டு. இயக்கத்தில் சுய இன்பம் செய்யக்கூடாது என நானறியக் கட்டுப்பாடுகள் ஏதுமில்லை. அப்போது எங்களது இயக்கத்தில் இயக்க உறுப்பினர்கள் காதலிக்கவோ கல்யாணம் செய்யவோ தடையிருந்தது. தனிநாடு கிடைக்கும்வரை சுய இன்பத்தைத் தவிர வேறு என்னதான் வழி.

காவல் கடமையிலிருந்து சுய இன்பம் செய்யும்போது உச்சம் நிகழும் தருணத்தில் எதிரி நுழைந்துவிட்டால் உடனடியாக நான் துப்பாக்கியை எடுப்பேனா என்பது சந்தேகம்தான் என நான் அடிக்கடி எனக்குள் சொல்லிக்கொள்வதுண்டு. சுய இன்பத்தில் உச்சம் நிகழும் தருணம் அப்படியொரு மயக்க அனுபவத்தை எனக்குக் கொடுத்தது. அடி வயிற்றில் தீ கனன்று கடக்கும். உடல் அப்படியே காற்றாக மாறி மாயமாக அலையும். உச்சி மண்டையில் குளிர்ந்த அருவி உடைந்து கடகடவெனக் கொட்டும்.

எனது கிராமமும் அடங்கிய ஏரியாவிற்குப் பொறுப்பாளராக நான் இயக்கத்தால் நியமிக்கப்பட்டபோது எனக்கு இருபது வயது. திருச்செல்வம் பல்கலைக்கழகத்தில் முதல் வருடம் படித்துக்கொண்டிந்தவன் விடுமுறைக்கு கிராமத்திற்கு வந்திருந்தான். கிட்டத்தட்ட மூன்று வருடங்களிற்குப் பிறகு நான் அவனைச் சந்திக்கிறேன்.

திருச்செல்வம் ஆளே மாறிப்போயிருந்தான். நவீனரக உடைகள், காலிலே சப்பாத்துகள், கண்களிலே மெல்லிய சட்டகங்களாலான கண்ணாடியோடிருந்தான். சிங்களவர்கள் போல மீசையை  மழித்திருந்தான். வார்த்தைகளை அளந்து அளந்து நிதானமாகப் பேசினான். நான் ஒரு இரண்டு நிமிடங்கள் போராட்டத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி அவனிடம் பேசினேன். புன்னகையுடன் கண்களைச் சுருக்கியவாறு கேட்டுக்கொண்டிருந்தான். நான் புறப்படும்போது “வைச்சிரு” என நூறு ரூபாய் தாளொன்றை என் சட்டைப் பைக்குள் திணித்தான். எனக்கு அப்போது அது தேவையாக இருந்தது. அந்தப் பணத்தில் ‘மரணத்துள் வாழ்வோம்’ கவிதைத் தொகுப்பை வாங்கினேன்.

இப்போது எங்களது கிராம நூலகத்தில் திருச்செல்வத்தின் அக்காவிற்குப் பதிலாக மாயோள் என்ற விநோதமான பெயரைக்கொண்ட ஒரு வெளியூர் இளம்பெண் நூலகராகப் பணியாற்றிக்கொண்டிருந்தாள். அவள் புளியங்கூடலிலிருந்து பஸ்ஸில் வேலைக்கு வந்துபோய்க்கொண்டிருந்தாள். ஒருநாள் காலையில் அந்தப் பெண் தனது தந்தையையும் அழைத்துக்கொண்டு நான் பொறுப்பாயிருந்த முகாமிற்கு வந்தாள்.

திருச்செல்வம் நூலகத்திற்கு அடிக்கடி போவானாம். அவனது கண்கள் விஷமத்தனமானவை என்றும் அவனுடைய பேச்சுகள் எப்போதுமே பாலியல் சீண்டலானவை என்றும் அந்தப் பெண் சொன்னாள். நேற்று நூலகத்தில் மாயோள் தனியாக இருந்தபோது அங்கே திருச்செல்வம் போயிருந்தானாம். அவள் நாற்காலியில் உட்கார்ந்திருந்தபோது புத்தக அலுமாரியில் ஏதோ தேடுவதாகப் பாவனை செய்துகொண்டிருந்த அவன் அவளை அருகே வருமாறு அழைத்தானாம். இந்தப் பெண் போகவில்லை. வெறித்தனமான பார்வையுடன் வேகமாக இந்தப் பெண்ணை நோக்கி திருச்செல்வம் வந்தபோது இவள் பயத்துடன் எழுந்து நிற்கவும் திருச்செல்வம் கெட்ட கெட்ட வார்த்தைகளால் இந்தப் பெண்ணைத் திட்டி மிரட்டிவிட்டுப் போனானாம்.

நான் அந்தப் பெண்ணின் கண்களைப் பார்த்தேன். அவளது கண்களில் அச்சமிருக்கவில்லை, ஆனால் கடும் சினமிருந்தது. அவளது முழு முகமும் கோபத்தால் கொப்பளித்துக்கொண்டிருந்தது. நான் திருச்செல்வத்தை விசாரித்துவிட்டு நடவடிக்கை எடுக்கிறேன் என மாயோளிடம் சொன்னேன். என்ன நடவடிக்கை என எனக்குத் தெரிய வேண்டும் என என்னை அச்சுறுத்தும் தொனியில் மாயோள் சொன்னாள். அவர்களை நான் போகலாம் எனச் சொன்னபோது அவளது தந்தை கவனிக்காத கணப்பொழுதில் மாயோள் எனது மேசையில் ஒரு துண்டுச்சீட்டை வைத்துவிட்டு என்னைப் பார்த்தாள்.

அவர்கள் போனதும் நான் அந்தத் துண்டுச் சீட்டை எடுத்துப் பார்த்தேன். அந்தச் சீட்டில் ஆங்கிலத்தில் ஒருவரி எழுதப்பட்டிருந்தது. அது என்னவென்று தெரியவில்லை. முகாம் பொடியன்களிலும் யாருக்கும் ஆங்கிலம் வாசிக்கத் தெரியாது. அந்தச் சீட்டை சட்டைப்பைக்குள் போட்டுக்கொண்டு மோட்டார் சைக்கிளில் திருச்செல்வம் வீட்டை நோக்கிப் போனேன்.

திருச்செல்வம் அவர்களது வீட்டுப் படலையருகே நின்றிருந்தான்.

“என்ன திரு படலையடியில நிக்கிறாய்?” என்று கேட்டேன்

“உன்ர மோட்ட சைக்கிள் சத்தம் கேட்டுது அதுதான் வந்தனான்” என்றான். அவனது குரலில் பதற்றமிருந்தது.

நான் வருவேன் என்று எதிர்பார்த்து நிற்கிறான்.

“திரு… இதை ஒருக்கா படிச்சு என்னெண்டு சொல்லு” என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட துண்டுச் சீட்டை அவனிடம் கொடுத்தேன்.

மெதுவாக அந்தச் சீட்டை வாங்கிய திருச்செல்வம் சீட்டில் எழுதப்பட்டிருந்த வரியைப் படித்ததும், கண்கள் திடீரெனச் சிவந்துபோக அமைதியாக நின்றான். தனது மூக்கை வேகவேகமாக உறிஞ்சிக்கொண்டான்.

“என்ன மச்சான் உனக்கும் இங்கிலிஷ் தெரியாதா?” என்றேன்.
தெரியும் என்பதுபோல மெதுவாகத் தலையசைத்தான்

“அப்ப சொல்லு”

திருச்செல்வம் மறுபடியும் ஒருமுறை துண்டுச் சீட்டைப் பார்த்துவிட்டுச் சொன்னான்:

“அவன் எனது மார்பைப் பிடித்துக் கசக்கிவிட்டுப் போனான்”

அவனது தலை நிலத்தை நோக்கிக் குனிந்தபோது அதை வானத்தைப் பார்க்க வைக்குமாறு ஓங்கியொரு அறை கொடுத்தேன். திருச்செல்வம் தனது கன்னத்தைக் கையால் பொத்தியவாறு “ப்ளீஸ் மச்சான்” என முணுமுணுத்தான்.

நான் அவனை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு முகாமிற்குப் போனேன்.

முகாமின் ஓர் அறை சிறையாக மாற்றப்பட்டிருந்தது. சிறைக்குள் ஏற்கனவே நான்கு திருடர்களைப் பிடித்து வைத்திருந்தோம். முகாமின் முற்றத்தில் திருச்செல்வத்தை நிற்க வைத்துவிட்டு அந்த நான்கு திருடர்களையும் முற்றத்திற்கு அழைத்துவருமாறு பொடியளிடம் சொன்னேன். திருடர்கள் வெடவெடுத்து நடுங்கியபடியே வரிசையாக வெளியே வந்தார்கள். முற்றத்திற்கு அழைத்தாலே பச்சைப் பனைமட்டை அடி என்பது அவர்களிற்குப் பழக்கமாயிருந்தது.

அந்தத் திருடர்களிடம் நான் திருச்செல்வத்தைக் காட்டிச் சொன்னேன்:

“இவர் என்ர கூட்டாளி திருச்செல்வம். என்னோடதான் படிச்சவர். நான் நாட்டுக்காக இயக்கத்துக்கு வர இவர் எஞ்சினியருக்குப் படிக்க யூனிவர்சிட்டிக்குப் போனவர். அங்க என்ன படிச்சாரெண்டா பொட்டையளின்ர பாச்சியப் பிடிக்கத்தான் படிச்சிருக்கிறார்…”

திருச்செல்வம் எனது முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றான். அவனுடைய மனதில் வன்மம் நுழைகிறாதாக்கும் என நினைத்துக்கொண்டேன். முகத்தைத் திருப்பிக்கொண்டு திருடர்களைப் பார்த்து “ஆள் மாறி ஆள் இவன்ர கன்னத்தில அடிச்சுக்கொண்டே இருக்கவேணும். சத்தம் எனக்குக் கேட்டுக்கொண்டேயிருக்க வேணும்” என்றேன். திருடர்கள் தங்களது பலத்தையெல்லாம் திரட்டி திருச்செல்வத்தை அறையத் தொடங்கினார்கள்.

சற்றுநேரத்திலேயே திருச்செல்வத்தின் முகம் அழுகிய ஈரப்பலாக்காய் போல ஆகிவிட்டது. அவனை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு நூலகத்திற்குப் போனேன். அங்கே மாயோளும் அவளது தந்தையுமிருந்தார்கள். திருச்செல்வத்தை மாயோளிடம் மன்னிப்புக் கேட்கச் சொன்னேன். திருச்செல்வம் என்ன சொல்வதெனத் தெரியாமல் தடுமாறினான். “இங்கிலிஸில மன்னிப்புக் கேள்..என்ர கூட்டாளி இங்கிலிஸ் பேசுறது எனக்குப் பெருமைதானே” என்றேன்.

திருச்செல்வத்தை மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு போய் அவனது வீட்டுப் படலையடியில் இறக்கிவிட்டேன்.

நான் கிளம்பியபோது திருச்செல்வம் எனது தோளைத் தொட்டு “மச்சான் நான் செய்தது பெரிய பிழை” என்றான்.

 

2

 

நான் பிரான்சுக்கு வரும்போது திருச்செல்வத்தின் தொலைபேசி எண் எழுதியிருந்த துண்டுச்சீட்டு மட்டுமே என்னிடமிருந்தது. ரஷ்யாவில் இருந்து தரை வழியாகப் பல நாட்களாக, பல எல்லைகளைக் கடந்துவந்த பயணத்தில் நான் இலங்கையிலிருந்து எடுத்து வந்த பயணப் பையை என்னோடு எடுத்துவர எல்லை கடத்துபவர்கள் அனுமதிக்கவில்லை. மூன்று சோடி உடுப்புகளும் ஒரு ஆங்கில – தமிழ் லிப்கோ அகராதியும் வைத்திருந்த அந்தப் பையைத் தூக்கி அவர்கள் ஆற்றிற்குள் வீசி எறிந்துவிட்டுத்தான் என்னைச் சிறு ரப்பர் படகில் ஏற்றி ஆற்றைக் கடக்க வைத்தார்கள்.

ஓர் உறைபனி அதிகாலையில், பாரிஸின் இருளிற்குள் என்னைக் கடத்திக் கூட்டிவந்தவர்களின் கார் ஒரு பொதுத் தொலைபேசிக் கூண்டருகே என்னை இறக்கிவிட்டுச் சென்றது. பொதுத் தொலைபேசியில் அழைப்பதற்குச் சில ‘ப்ராங்’ நாணயக் குற்றிகளைத் தந்திருந்தார்கள். நான் திருச்செல்வத்தைத் தொலைபேசியில் அழைத்தேன். அடுத்த அரைமணி நேரத்தில் திருச்செல்வம் கையில் ஒரு பெரிய குளிரங்கியோடு என்னைத் தேடி வந்துவிட்டான்.

“முதலில ஜக்கெட்டைப் போடு மச்சான்” எனக் குளிரங்கியை என்னிடம் தந்துவிட்டு என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டான். நாங்கள் சந்தித்த அந்த நாள் எங்கள் இருவரது முப்பதாவது பிறந்தநாளாக இருந்தது. அவனது வீடு அன்றுமாலை எனக்கான வரவேற்புக் கொண்டாட்டமாகவும் இரட்டைப் பிறந்தநாள் விழாவாகவும் அமளிதுமளிப்பட்டது.

அப்போது பாரிஸில் தமிழர்களது வாழ்க்கை கொஞ்சம் சிக்கல்பிக்கலாயிருந்தது. செல்வம் அண்ணர் எழுதிய ‘எழுதித்தீராப் பக்கங்கள்’ பாரிஸ் வாழ்க்கை நினைவுச் சித்திர நூலிலுள்ள அளவுக்கு இல்லாவிட்டாலும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்தன. ஒரு சிறிய அறைக்குள் நால்வர் அய்வராக இருந்துகொண்டு விசா, வேலைப் பிரச்சினைகளோடு போராடிக்கொண்டிருந்த காலமது.

ஆனால் திருச்செல்வத்திற்கு அவனது படிப்புக் கைகொடுத்திருந்தது. ஓரளவு நல்ல வேலையும் திருப்தியான சம்பளமும் அவனுக்குக் கிடைத்தன. ஓர் அழகிய சிறிய வீட்டில் தனியாகத்தான் இருந்தான். அவனுக்குப் பவானியுடன் கல்யாணம் ஆகும்வரை நான் அவனுடன்தான் இருந்தேன்.

என்மீதான நேசமும் அன்பும் அவனுக்கு அப்படியே மாறாமலிருந்தன. மிகப் பொறுப்புள்ள மனிதனாக மாறியிருந்தான். கொஞ்சம் பணம் சேர்க்கவேண்டும், அழகான மனைவியும் குழந்தைகளும் வேண்டும் என்பது மட்டுமே அவனது கனவுகளாகயிருந்தன. “இலக்கியம் படி திரு..” என்பேன். படித்தால் தூக்கம் வருகிறது என்பான். என்னுடைய கதைகளை மட்டும் படித்து படித்துக் கெக்கடமிட்டுச் சிரிப்பான். ஏனெனில் நான் பெரும்பாலும் என்னுடைய கதைகளில் என் கிராமத்து மனிதர்களைத்தான் சற்று மாறிச்சாறிப் பதிவு செய்கிறேன். என்னுடைய கதைகளில் வரும் அநேக பாத்திரங்களும் அநேக சம்பவங்களும் அவனுக்கும் தெரிந்தவையாகவே இருக்கும். அவன் கதையைப் படித்தபின்பு அந்த மனிதர்களைக் குறித்தும் சம்பவங்களைக் குறித்தும் நாங்களிருவரும் நனவிடை தோய்வோம்.

ஆனால் ஊரில் இருக்கும்போது, மாயோள் என்ற பெண்ணின் மார்பை அவன் பிடித்ததற்காக நான் அவனைத் தண்டித்தது குறித்து ஒருநாள் கூட நாங்கள் சாடைமாடையாகக் கூடப் பேசிக்கொண்டதில்லை.

அவனுக்கும் பவானிக்கும் திருமணமாகி எட்டு வருடங்கள்வரை குழந்தை இல்லை. திருகோணமலையில் ஒரு மந்திரவாதி குழந்தைப் பாக்கியம் பெற்றுக்கொடுக்கிறாராம் எனக் கேள்விப்பட்டு திருச்செல்வமும் பவானியும் இலங்கைக்குப் போய் வந்தார்கள். மந்திரவாதி பவானியைத் தனியாக அழைத்துச் சென்று தன்னிடம் தனியாக மூன்றுநாட்கள் பூஜையில் அமர வேண்டும் என்றும் பவானியினது அந்தரங்க உறுப்பிலிருந்து ‘குவியம்’ எடுத்துப் பூஜை செய்ய வேண்டும் என்றும் சொன்னாராம். பதறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்து பவானி இதைத் திருச்செல்வத்திடம் சொல்லவும் திருச்செல்வம் மந்திரவாதியை அடிக்கப்போய்விட்டானாம். மந்திரவாதி பேய்களை திருச்செல்வத்தின் மீது ஏவிவிடுவதாகவும் பவானியின் வயிற்றை நிரந்தரமாகவே திறக்காமல் பண்ணிவிடப்போவதாகவும் சொன்னாராம்.

இதை என்னிடம் திருச்செல்வம் சொன்னபோது அதை மையமாக வைத்து ‘குவியம்’ என்ற தலைப்பில் ஒரு சிறுகதையை எழுதினேன். பெயர்களை மாற்றியும் பிரான்ஸைக் கனடாவாக மாற்றியும் கதையை எழுதியிருந்தேன். அந்தக் கதையின்படி மனைவி குவியம் எடுக்கச் சம்மதித்துவிடுகிறாள். குழந்தையைத் தவிர அவளிற்கு வேறெதுவும் ஒரு பொருட்டேயல்ல. அந்தக் கதை எக்ஸிலிலோ அம்மாவிலோ பிரசுரமானது. அந்தக் கதையைப் படித்துவிட்டு திருச்செல்வம் பவானியைக் கூப்பிட்டு அந்தக் கதையைப் படிக்கச் சொன்னான்.

கடைசியில் அவனது நாற்பதாவது வயதில், பவானியின் வயிறு திறந்து காயா பிறந்தாள். அப்போது நான் பாரிஸ் நகர வாழ்க்கை பிடிக்காமல் நோர்வேக்குச் சென்றுவிட்டேன். நோர்வே வாழ்க்கையும் பிடிக்காமல் நான் திரும்பப் பாரிஸ் வந்தபோது காயாவுக்கு ஒன்பது வயதாகியிருந்தது. வாரத்தில் நான்கு நாட்களாவது மாலையில் நான் திருச்செல்வத்தின் வீட்டிற்குப் போவேன். கொஞ்சம் மதுவருந்திக்கொண்டும் பேசிக்கொண்டும் திருச்செல்வம் சமைப்பான். பவானி பத்து மணிக்குத்தான் வேலை முடிந்து வருவாள். பவானிக்கு எனக்கு ஒரு கல்யாணம் பண்ணிவைக்க வேண்டுமென்று ஆசை.

“வயசு போச்செண்டு நினைக்காதேயுங்கோ..ஊருக்குப் போய் ஒரு விதவைப் பிள்ளையை கல்யாணம் செய்துகொண்டு வாங்க..அதுகளுக்கும் உதவியாயிருக்கும்” என்று ஒருமுறை பவானி சொன்னபோது நான் புன்னகைத்தபடி சும்மாயிருந்தேன்.

“நீங்கள் எல்லாம் எழுதுற கதையிலதான் புரட்சி..” என்றாள் பவானி. நான் அதற்கும் புன்னகைத்தேன்.

குழந்தை காயா நல்ல கறுப்பு நிறம். உயரமாகவும் ஒல்லியாகவுமிருப்பாள். சுருள் சுருளாக முடி. முன்வாய்ப் பற்கள் இரண்டு சற்றே முன்தள்ளியிருக்கும். பற்களிற்கு க்ளிப் போட்டிருந்தாள். அவள் எப்போதும் திருச்செல்வத்தோடு ஒட்டிக்கொண்டேயிருப்பாள். திருச்செல்வத்தை அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நகரவிடமாட்டாள். தாய்க்காரி வேலையிலிருந்து திரும்பிவரும்வரை தூங்கவும்மாட்டாள். இளமையில் திருச்செல்வம் இருந்ததுபோலவே காயாவும் கொஞ்சம் துடியாட்டமாகவே இருந்தாள்.

அன்று நான் திருச்செல்வம் வீட்டுச் சமையலறை மேசை முன்னால் அமர்ந்திருந்தேன். என் முன்னால் ஒரு க்ளாஸ் விஸ்கி இருந்தது. திருச்செல்வம் கையில் விஸ்கிக் க்ளாஸோடு சட்டியில் பன்றி இறைச்சித் துண்டங்களைப் பொரித்துக்கொண்டிருந்தான். எனக்கு அன்று உடம்பு சரியில்லாததுபோல இருந்தது. உடல் அளவுக்கு அதிகமாகக் குளிர்ந்துகொண்டிருந்தது. விஸ்கியை குடிக்கலாமா வேண்டாமா என நான் யோசித்துக்கொண்டிருக்கும்போது காயா “உங்களுக்கு பிரான்ஸே படிக்கத் தெரியுமா” என்ற கேள்வியோடு என்னிடம் வந்தாள். நான் ‘ஆம்’ என்றதும் எனக்கும் மேசைக்கும் நடுவாகத் தனது மெல்லிய உடலை நுழைத்துவந்து எனது மடியில் ஏறி உட்கார்ந்தவாறே கையிலிருந்த புத்தகத்தை விரித்து எனக்கு கதை வாசித்துக்காட்ட ஆரம்பித்துவிட்டாள். குட்டி இளவரசி குறித்த கதையது.

காயாவின் முதுகு என் மார்பில் சாய்ந்திருந்தது. அவளது பிடரியில் வழிந்த சுருட்டை முடி என் கழுத்தில் படர்ந்திருந்தது. அவள் தனது குச்சிக் கால்களை எனது தொடைகளின் இருபுறங்களிலும் போட்டபடி உடலையும் தலையையும் அசைத்து அசைத்து உரக்க ராகம் போட்டு வாசித்தபடியிருந்தாள்.

“Et elle pensait combien il etait étranger de se trouver à un certain moment sous le soleil…”

அப்போது எனது உடல் மேலும் குளிரத் தொடங்கியது. எனது கால்கள் மெல்ல நடுங்குவதை உணர்ந்தேன். வயிற்றின் அடியில் குறுகுறுக்கத் தொடங்கியது. கண்களைச் சடாரென மூடித்திறந்தேன். காயா எனது மடியில் ஆடியவாறு வாசிப்பில் லயித்திருந்தாள். எனக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. எனது உடல் மாறிக்கொண்டே வருவது தெரிகிறது.

“எனக்கு கால் நோகுது” எனச் சொல்லிக்கொண்டே சட்டெனக் காயாவின் இடுப்பில் கைகொடுத்து அவளைச் சடுதியில் தூக்கி என் மடியிலிருந்து கீழே இறக்கும்போது எனக்கு விந்து வெளியாவதை உணர்ந்தேன்.

நான் காயாவை அவசரமாகத் தூக்கி இறக்குவதைப் பார்த்துக்கொண்டிருந்த திருச்செல்வத்திடம் முகத்தைச் சுழித்துக்கொண்டே “காலில ஏதோ பிரச்சினை” என்றேன்.

“இந்தக் குளிருக்கு கால் குறண்டும்..விஸ்கியைக் குடி” என்றான் திருச்செல்வம்.

இப்போது காயா திருச்செல்வத்திற்கு அருகே போய் நின்று புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தாள். நான் அவளது பின்புறத்தைக் கடைக்கண்ணால் பார்த்தேன். அங்கே ஏதாவது ஈரம் பட்டிருக்கிறதா எனக் கவனித்தேன். எதையும் அனுமானிக்க முடியவில்லை.

அப்படியே குனிந்து எனது மடியைப் பார்த்தேன். ஒரு துளியாகக் காற்சட்டையில் ஈரம் துளிர்த்திருந்தது. எழுந்து தலையைக் குனிந்தவாறே குளியலறைக்குள் நுழைந்தேன். எனக்குத் தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது. உடம்பு முழுவதும் அந்தக் குளிரிலும் வியர்த்துக்கொட்டியது. காற்சட்டையை அவிழ்த்துப் பார்த்தேன். தொடையிடுக்கில் விந்து படிந்திருக்கிறது. உள்ளாடை நனைந்துபோயிருந்தது. தண்ணீரைத் திறந்து தொடையிடுக்கைக் கழுவினேன். மறுபடியும் காற்சட்டையை அணிந்துகொண்டு சமையலறை வாசற்படிக்குச் சென்று உடலைச் சுவரில் முடிந்தளவுக்கு மறைத்துக்கொண்டு தலையை மட்டும் உள்ளே நீட்டி எனக்கு உடம்பு சுகமில்லை என்று திருச்செல்வத்திடம் சொன்னேன்.

“சாப்பிட்டிட்டு போ” என்றான் திருச்செல்வம்.

“வேணாம்’ என்றுவிட்டு நான் வெளியேறினேன். காயா உரத்துக் கதை படித்துக்கொண்டிருந்தாள். நான் கதவைத் திறந்துகொண்டு தெருவுக்கு இறங்கி நடந்தபோது தூரத்தே பவானி நடந்து வருவது தெரிந்தது. சடாரெனத் திரும்பி எதிர்ப்புறமாக நடந்தேன். அப்படியே நடந்துகொண்டேயிருந்தேன்.

எனது மூளை வெட்டப்பட்ட ஆட்டு மூளைபோல உறைத்திருப்பதை உணர்ந்தேன். நான் சிறுமிகளைப் புணர்வதாக ஒரு போதும் நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. சொல்லப்போனால் எனக்குள் காமம் இப்போது மங்கிக்கொண்டிருக்கிறது. பெண் உடல் முன்புபோல இப்போது என்னை ஈர்ப்பது குறைவு. அந்தக் குறைபாடுதான் சிறுமிகள் மீதான காமமாக எனக்குத் தெரியாமலேயே என்னுள் புகுந்திருக்கிறதோ எனத் திடீரென என் மரத்துப்போன மூளை கேட்கப் படாரென என் கன்னத்தில் ஓங்கி அறைந்துகொண்டேன்.

தலையைக் கவிழ்ந்து என் எச்சிலை என் மார்பில் பலமுறை உமிழ்ந்துகொண்டேன். என்னுடைய இளம் வயதில் எனக்கு வாரத்திற்கு மூன்று தடவைகளாவது தூக்கத்தில் விந்து வெளியாகும். முப்பத்தைந்து வயதைக் கடந்த பின்பு அது நடப்பதில்லை. என்னை ஆட்டிப் படைத்த காமம் என்னைக் கடந்துபோனதாகத்தான் நான் நினைத்துக்கொண்டிருந்தேன். மகாத்மா காந்திக்கே எழுபது வயதில் தூக்கத்தில் விந்து வெளியேறியிருக்கும்போது நாற்பத்தொன்பது வயதில் நீ காமத்தைக் கடந்திருப்பதாக நினைத்திருப்பது அடிமுட்டாள்தனமானது என எனது மரத்துப்போன மூளை சொன்னது. அப்படியே நடந்துபோய் ஆற்றுக்குள் இறங்கி மூழ்கிவிடலாம் போலிருந்தது. மகள் காயா என் மனம் முழுவதும் துண்டு துண்டாகக் குட்டிக் குட்டி அரூபங்களாகவும் ஒலியாகவும் என்னை வதைக்கலானாள். அதன் பின்பு நான் திருச்செல்வத்தின் வீட்டிற்குப் போகவில்லை. இது நிகழ்ந்த ஆறாவது நாள் நான் காயாவைப் பிரேதமாகத்தான் பார்த்தேன்.

காலையில் பள்ளிக்கூடத்திற்கு நடந்து சென்றுகொண்டிருந்த காயாவை கட்டுப்பாட்டை இழந்து நடைபாதைக்கு ஏறிய கார் கொன்று போட்டுவிட்டு நிற்காமல் தப்பித்து ஓடியது. காயா வெண்ணிற நீண்ட அங்கியும் வெண்ணிறப் பட்டுக் கையுறைகளும் அணிவிக்கப்பட்டு தேவதைபோல மலர்ப்படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தாள். வெட்கத்தை விட்டுச் சொல்வதானால் அந்த வெண்ணிற உடையில் எனது விந்தின் வாசனை வருகிறதா என என் மரத்துப்போன மூளை அச்சத்துடன் தேடியது.

காயாவை அடக்கம் செய்ததன் பின்பாக நான் ஒவ்வொருநாள் மாலையும் திருச்செல்வம் வீட்டிற்குப் போனேன். திருச்செல்வம் தளர்ந்து போயிருந்தாலும் மூர்க்கம் கொண்டிருந்தான். காயாவைக் கொன்றவனை அடையாளம் தெரிந்தால் அவனைத் தனது கையாலேயே கொன்றுவிடப் போவதாகச் சொன்னான். திடீர் திடீரெனத் தேம்பி அழுதான். ஒருநாள் “அந்தத் திருகோணமலை மந்திரவாதி உண்மையில பேய்களை ஏவி விட்டிருப்பானா மச்சான்?’ எனக் குழந்தையைப் போல என்னிடம் கேட்டான். இன்னொருமுறை “மச்சான் நான் அந்த லைபிரரிப் பொட்டைக்குச் செய்த பாவம்தானோ இது” என்று அழுதான்.

அந்த நாட்களில் நான் உயிரோடு செத்துக்கொண்டிருந்தேன். என் ஆண்குறியை அறுத்துப்போடலாமா என்றுகூட யோசித்தேன். என் கையால் ஆண்குறியை அழுத்திக் கசக்கிப் பிசைந்து இப்போது இல்லாமல் அன்று மட்டும் ஏன் அப்படியானது என யோசித்தேன். எங்கோ ஓரிடத்தில் உன்னிடம் அப்போது காமம் ஒளிந்திருந்தது என என் மரத்துப்போன மூளை சொல்லியது. இல்லவே இல்லை என என் இருதயம் சொல்லிற்று. முப்பது வருடங்களிற்குப் பின்பாக நான் மீண்டும் என் மார்பில் சிலுவை குறி இட்டுக்கொண்டேன். கடற்கரை அன்னை வேளாங்கன்னியை நினைத்துக்கொண்டேன்.

காயா இறந்த இருபதாவது நாள் நான் திருச்செல்வம் வீட்டிற்குப் போயிருந்தேன். பவானி வேலைக்குச் சென்றிருந்தாள். திருச்செல்வம் இப்போது கொஞ்சம் தேறியிருப்பது போலயிருந்தது. சமையலறை மேசையில் இரண்டு க்ளாஸ்களை வைத்து விஸ்கியை ஊற்றினான். பின்பு காயாவுடைய ஓர் அழகிய நிழற்படத்தைக் கொண்டுவந்து என் முன்னே மேசையில் வைத்துவிட்டு ” இதை எடுத்துக்கொண்டு போ!” என்றான். பின்பு “காயாவைப் பற்றி எழுது மச்சான்” என்றான்.

காயாவின் 31 -வது நினைவு தினத்துக்கு நான் அஞ்சலிக் கவிதையொன்றை எழுதிக் காயாவின் அந்த நிழற்படத்துடன் பத்திரிகைகளில் வெளியிட வேண்டும் என்று திருச்செல்வம் என்னைக் கேட்டுக்கொண்ட அந்தத் தருணத்தில் நான் எதைப் பற்றியும் யோசியாது கடகடவென நடந்த அனைத்து உண்மைகளையும் ஒளிவு மறைவில்லாமல் அவன் முன்னே வைத்தேன். அப்போது எனக்கு வெட்கமே வரவில்லை. நான் விடுதலையாகிக்கொண்டிருக்கும் உணர்வே என்னோடிருந்தது.

நான் சொன்னவற்றை எங்கோ பார்த்தவாறு திருச்செல்வம் கேட்டுக்கொண்டிருந்தான். பின்பு தனது தலையைக் கவிழ்ந்துகொண்டு ” நீ வேணுமெண்டு செய்யேலத்தானே” என்று மெல்லிய குரலில் சொன்னான்.

நான் அவனது கைகளைப் பற்றிக்கொண்டேன்.

தனது கைகளை என்னிடமிருந்து விடுவித்துக்கொண்டவன் ” சிலவேளை காயா இப்ப உயிரோட இருந்தா நான் வேற மாதிரி யோசிச்சிருப்பன்” என்று முணுமுணுத்தான்.

பின்பு விஸ்கிக் கோப்பையை எடுத்து என்னிடம் தந்துவிட்டுத் தனது கோப்பையை உயர்த்தி “காயாவின் ஆன்ம சாந்திக்காக” என்றான்.

 

3

 

‘காயா’ என்ற மேற்கண்ட கதையை எழுதி முடிக்கும்வரை நான் திருச்செல்வத்தின் வீட்டிற்குப் போகவில்லை. காயாவின் இறுதிச் சடங்கு நிகழ்ந்த அன்று அவனை இடுகாட்டில் பார்த்ததுதான் கடைசி.

காயா இறந்த இருபதாம் நாள் மாலை நான் திருச்செல்வம் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினேன்.
கதவைத் திறந்தவன் “எங்க போனாய் இத்தின நாளா ?” எனக் கேட்டான்.

“கதை எழுதிக்கொண்டிருந்தன்” என்றேன்.

அவன் என்னை ஆழமாகப் பார்த்தான். “வா” என்று சொல்லிவிட்டு உள்ளே போனான்.
நானும் அவனும் எதிர் எதிராக அமர்ந்திருந்தோம். நான் எடுத்துச்சென்றிருந்த தாள்களை மேசையில் அவன் முன்னே ஒழுங்குபடுத்தி வைத்துவிட்டு ” நான் எழுதின கதை..நீ படிக்கவேணும் திரு” என்றேன்.

அவன் தலையைக் குனிந்துகொண்டே “நான் இப்ப படிக்கிற மனநிலையிலயா இருக்கிறன் மச்சான்” என்றான்.

“இது காயாவைப் பற்றிய கதை..நீ கண்டிப்பாகப் படிக்கவேணும்” என்றேன்.

சடாரெனத் தலை நிமிர்த்தியவன் மேசையில் இருந்த தாள்களை வாரியெடுத்துக் கண்கள் ஒளிரப் படிக்கத் தொடங்கினான்.

நான் அவனது கண்களைப் பார்த்தவாறே காத்திருக்கலானேன். அவன் எந்த இடத்தில் படிப்பதை நிறுத்துகிறானோ அந்த இடத்தில் ‘காயா’ என்ற இந்தக் கதை முடிவுறும்.

(காலம் – 50வது இதழில் வெளியாகியது)

13 thoughts on “காயா

  1. You are a disturbing writer Shoba Shakthi. I had skip a few lines to get through the story.

  2. இதை படிக்கையில் ஒன்று புரிகிறது ஷோபா எனும் எழுத்தாளன் தன்னை பலிகொடுத்து (சுய இன்பம்) செய்து கொள்வது போல் இக்கதையை (புனைவு) கதையை எழுதி உள்ளான். காயா மடியில் இருக்கையில் வெளியேறிய விந்தின் அந்த ஈரத்தில் காமம் இல்லை என்பதை பெண்ணியம் பேசும் எத்தனை ஆண்களால் புரிந்து கொள்ள முடியும் என்று தேரியவில்லை….

  3. கண்ணில் இருந்து வடியும் கண்ணீருக்கே நூறு வர்ணணைகள் இருக்கும் போது ஆண்குறியில் இருந்த வடியும் விந்துக்கு…?

  4. உண்மைகளை ஒன்றுவிடாமல் ஒப்பு கொள்வது மன்னிப்பு கேட்பதை விட உன்னதமானதாக படுகிறது.. நீங்கள் அவரிடம் மன்னிப்புக்கோரவில்லை.. உன்னதப்படுகிறீர்கள்… கண்டிவீரன் சிறுகதைத் தொகுதி முடிய, உங்கள் எழுத்து எதனையும் வாசிக்கவில்லை. அது நடந்து ஒரு வருடத்துக்கு மேல்… ஒரே மூச்சில் காயாவை வாசித்து முடித்தேன்…

  5. அண்ணன் உங்களுடைய கொரில்லா புத்தகத்தை படித்த பின் நண்பர்கள் அனைவரையும் படிக்கச் சொல்லி வற்புறுத்தியதுண்டு…மற்ற சில படைப்புகளை படிக்கத் தவறியதற்க்காக இப்போது இக்கதையைப் படித்தப் பின் வருந்துகிறேன்.. புதிய genre எழுத வரும் இளைஞர்களுக்கு நீங்கள் முன்னோடியாக இருப்பீர்கள்…. நன்றி…செ.ஜார்ஜ் சாமுவேல்…

  6. நீர் ஒரு பொறுக்கி!!! காயா உமது சொந்த மகளாயிருந்து உமது மடியில் உட்க்காரந்திருக்கும்போது உமக்கு விந்து வெளியேறி இருக்குமா ??? திருவுக்கு நீர் உண்மையான நண்பனாய் இருந்தால்!!!?நண்பனின் மகள் உம்முடைய மகள்தானே ??? அப்படி என்றால் ஏன் இப்படி??? உமது மனதில் கோளாறு இருக்கு,தயவுசெய்து ஒரு நல்ல மனநல வைத்தியரைப்பார்க்கவும் அல்லது Boulogne காட்டுக்குள் போகவும்

  7. அறிவியல் நோக்கில் காமம் என்பதுவும் ஒரு பசி போன்றதொரு உணர்வே. பசி எடுக்கும் பொது உணவுண்பது போல காமத்திற்கும் அவ்வப்போது தீனி போட வேண்டியிருக்கும். இங்கே நடைபெற்றதாக சொல்லப்பட்டிருக்கும் நிகழ்வு எதேச்சையாக நடைபெற்றிருக்கின்றது. அதனை கதை சொல்லி திட்டமிட்டு செய்யவில்லை. அவருக்கு இதனால் பெரும் குற்றவுணர்வு ஏற்பட்டிருப்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான தீர்வையும் அறிவியலிடம் தான் தேடவேண்டும். நிச்சயமாக நவீன அறிவியலில் இதற்கான தீர்வு இருக்கும். பலரும் போலிப்புனிதர்களாக நடமாடும் இந்த உலகில் இவ்வகையான சிறுகதைகள் வரவேற்புக்குரியதே.

  8. கதை வழமை போல சிறப்பு.. அந்த “கவிதை” – ” கதை ” இரண்டுக்கும் இடையே நிகழ்த்தியிருக்கும் மாயை அற்புதம்.

    குற்ற உணர்வின் மொழி அவள் அமர்கையில் கதை சொல்லியின் உடலெங்கும் விரவுகிறது.
    அது காமத்தினும் கடிது.கொடிது.

    மார்பை இச்சையால் அழுத்தியவர் ஜாக்கெட் தருவது..
    மார்பை அழுத்தியதற்காய் சினங் கொண்டு தண்டனை தந்தவர்
    பின், விந்து வடிந்ததா என
    சிறுமியின் பின் நோக்குவது..

    உண்மைக்கும் புனைவுக்குமான
    தூரத்தை கதை பதபதப்போடு அளக்கிறது.

    லைப்ரரி, இயக்க தண்டனைகள், இடப் பெயர்வுகள், சுய இன்பம், கதை சொல்லியே குற்றங்களை ஏற்கும் பாங்கு, சிறார் சுய இன்பங்கள், பாலியல் சீண்டல்கள் ஆகியன
    உங்கள் எழுத்துகளில் முன்னரே பரிச்சயம் தான்.

    ஆனாலும் ஆங்காங்கே சில புதிய விசயங்கள் அற்புதம். ஒட்டு மொத்தமாகவும் ஆகிவிடுகிறது முடிவில்.

  9. 2=> காயா இறந்த இருபதாவது நாள் நான் திருச்செல்வம் வீட்டிற்குப் போயிருந்தேன். பவானி வேலைக்குச் சென்றிருந்தாள். திருச்செல்வம் இப்போது கொஞ்சம் தேறியிருப்பது போலயிருந்தது. சமையலறை மேசையில் இரண்டு க்ளாஸ்களை வைத்து விஸ்கியை ஊற்றினான். பின்பு காயாவுடைய ஓர் அழகிய நிழற்படத்தைக் கொண்டுவந்து என் முன்னே மேசையில் வைத்துவிட்டு ” இதை எடுத்துக்கொண்டு போ!” என்றான். பின்பு “காயாவைப் பற்றி எழுது மச்சான்” என்றான்.

    3=> காயா இறந்த இருபதாம் நாள் மாலை நான் திருச்செல்வம் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினேன்.கதவைத் திறந்தவன் “எங்க போனாய் இத்தின நாளா ?” எனக் கேட்டான்.“கதை எழுதிக்கொண்டிருந்தன்” என்றேன்.

    இந்த முரண் எனக்கு புரியவில்லை!

  10. யாரும் மறுக்க முடியாத உண்மைகள். கதைகளில் மறைக்கத் தேவையில்லை. புனைவு களும் , கவிதைகளும் அதற்குத்தானே. அருமை

  11. இலக்கிய குரங்குகளின் கதைகாரன் பரிந்துரை மூலமாக இந்த கதையை படிக்க ஆரம்பித்தேன்…

    படிக்க ஆரம்பித்த போது ஷோாசக்தி மீது கோவம் வந்தது ஆனால் மேலும் படிக்க இதை ஒரு உளவியல் பார்வை கொண்டு பார்கலானேன்… இது உடல் மனதை மீரும் ஒரு தருணம்… உடல் அடங்கியபின் மனது அதற்கான தண்டனையை ஏற்கும்… வாடும்… இறக்கவும் தோன்றும்…. அதை தாண்டி மீண்டு வருவதும் ஒருவகை தண்டனையே… அது வாழ்வு முழுவதும் அதற்கான தருணத்தை நோக்கி நெஞ்சில் ஈட்டி இரக அயூர்தமாய் இருக்கும்… இதுவும் ஒரு நரகம் தானே…

    ஒருவேலை காயா இறகாமல் இருந்ததால் அது இதணினும் கொடீது என்றே தோன்றுகிறது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *