தேசம், அரசத்துவம், முதலீட்டியம்

ராஜன் குறை

-ராஜன் குறை

தேசம், தேசீயம் குறித்த விவாதங்கள் தமிழில் மீண்டும் நிகழத்துவங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. அவதூறுகளும், பதட்டங்களும் வழக்கம்போலவே கருத்துப்பரிமாற்றத்தின் கழுத்தை நெறித்தாலும் அறிவுத்தாகம் மிகுந்த வாசகர்கள் நீரையும் விஷத்தையும் நீக்கி பாலை மட்டும் அருந்துவார்கள் என்று அசட்டுத்தனமாகக் கூட நம்ப விரும்புகிறேன். என் பங்குக்கு சில இரவல் கருத்துக்களை பதிக்க விரும்புகிறேன். நான் தத்துவ அடிப்படையில் சுயம் என்பதை நம்புவதில்லையாதலால், கோபால் ராஜாராம் திண்ணை கட்டுரையில் (ஜனவரி 15,2009: http://www.thinnai.com/?module=displaystory &story_id=20901157&format=html) வலியுறுத்தியுள்ள சுயசிந்தனையில் சுயத்தை நீக்கிய சிந்தனையை மட்டுமே என்னால் தர முடியும்.

கேள்வி : தேசம் என்பது என்ன?

பதில் : நவீன அரசத்துவம் குடியிருக்கத்தேவையான கூடு.

கேள்வி : அது என்ன செய்கிறது?

பதில் : நவீன மனிதனால் உருவான நவீன அரசத்துவம் நிகழ்த்துவது தங்கு தடையற்ற முதலீட்டிய வளர்ச்சியை.

கேள்வி : அதில் என்ன பிரச்சினை?

பதில் : அதன் ஒட்டுமொத்த விளைவு விரைந்து அணுகும் மானுட அழிவு. உடனடி விளைவு பகுதி, பகுதியான அழிவு.

இதைவிட எளிமையாக என்னூடாக ஓடும் சிந்தனையைக் கூற முடியாது. மீண்டும் மீண்டும் விரிவாகவும் சுருக்கியும் வேறு வார்த்தைகளிலும் கூறலாம். பல்வேறு அறிஞர்களையும் சிந்தனையாளர்களையும் மேற்கோள் காட்டலாம். எதையும் நிரூபிக்கவல்ல. சிந்தனையை தொடர்ந்து செயல்படுத்த. அ.மார்க்ஸ் ஏற்கனவே பல முக்கியமான பெயர்களையும், பிரதிகளையும் சுட்டியுள்ளார். “சுய”சிந்தனையாளர்கள் பொறுமையாகப் படிக்கலாம். மேற்சொன்ன பிரச்சினைகளை குறித்து காகமோனா என்ற கருத்தாக்கத்தை உருவாக்கி இரண்டு மாதங்களுக்கு முன் எழுதினேன். மீண்டும் தொடர்ந்து எழுதுவேன். (பார்க்க: சத்தியக் கடதாசி: http://www.shobasakthi.com/2008/11/12) இப்போது இது தொடர்பான சில கருத்துக்களை பதிக்கிறேன்.

மேலே கேள்வி பதிலாகக் கூறியதை ஒரு கதை மாதிரியும் கூறலாம். ஹாரி பாட்டரில் வால்டர்மாட் என்ற தீய சக்தி படிப்படியாக உருப்பெருவதை படித்தீர்களா? அதைப்போல ஒரு கதையாக்கி கூறுகிறேன். பதினேழாம் நூற்றாண்டில் தேகார்த் என்ற மனிதர் ஒரு அறையில் அமர்ந்து “சிந்திக்கிறேன் எனவே இருக்கிறேன்” (cogito ergo sum) என்ற மந்திரத்தை உருவாக்கினார். உலகெங்கும் அந்தந்த கலாசாரங்களின் கற்பனைக்கேற்றபடி துர்சகுனங்கள் தோன்றின. நரிகள் ஊளையிட்டன. பேய்க்காற்று சுழன்றடித்தது. இப்படியிப்படி. அந்த மந்திரத்தை அவர் தொடர்ந்து உச்சரிக்கவும் நவீன மனிதன் என்ற பிண்டம் தோன்றியது. அதையறிந்த ஹாப்ஸ் என்ற மனிதர் “லெவியதான்” என்ற நூல் எழுதி நவீன அரசத்துவம் என்ற கவசத்தை அந்த பிண்டத்திற்கு அணிவித்தார். ஆனால் ஒரு அங்கியால் மூடப்படாமல் அந்த பிண்டத்தால் இயங்க முடியாதே. எனவே, தேசியம் என்ற மாய இழைகளால் தேசம் என்ற அங்கியை தயாரித்தார்கள். இந்த பிண்டத்தை இயக்குவதற்கான அருவ சக்தியான முதலீட்டியம் ஏற்கனேவே உருவாகிக் காத்திருந்தது. அது அறிவியல் தொழில்நுட்பம் என்ற மந்திரக் கோல்களை உருவாக்கியும் கொடுத்தது. இப்படி உருவான காகமோனா என்ற பேயுருவம், உலகெங்கும் தன் அழிவினை நிகழ்த்தத் தொடங்கியது.

மிகவும் எளிமைப்படுத்தியதாகவும், குதர்க்கமாகவும், அதிர்ச்சி மதிப்புள்ளதாகவும் இந்தக் கதை தோன்றலாம். “உரையாடிவிடுவோம்” என்று ஓயாமல் பயமுறுத்தும் தமிழ் சிந்தனையாளர்களை உரையாடத் தூண்டவே அதிக எளிமைப்படுத்துகிறேன். பின்னால் உரையாடல் விரிவுகொள்ளுமானால் அப்போது நெளிவு சுளிவுகளை பார்க்கலாம். சான்றாதாரங்களையும் பேசலாம்.

இதைப்படிக்கும் வாசகர்களுக்கு மூன்று கேள்விகள் உடனேயெழும். 1) இதற்கு என்ன தீர்வு? 2) தேசம், அரசன், முதலீட்டியம் இதெல்லாம் எல்லா காலங்களிலும் இருந்ததுதானே? விஷ்ணுபுரங்கள் தோன்றும் அழியும் – காலாதீத்தில் இதெல்லாம் சகஜம்தானே? 3) 500 ஆண்டுகளில் மனிதன் அடைந்த முன்னேற்றத்தை மறுத்துவிட்டால் பழைய ஒடுக்குமுறைகள் மீண்டும் தலைதூக்காதா?

பாகம் ஒன்று: தேசத்தின் பிரச்சினையும், தீர்வும்


தேசம் என்பதை எப்படியாவது செப்பனிட்டு மானுடம் சந்தோஷமாக வாழ வழி தேடவேண்டும் என்று பலரும் விரும்புவது புரிந்துகொள்ளத்தக்கதே. ஆனால் தேசம் சாரம்சப் பசி கொண்டது. காந்தி போன்ற இலட்சியவாதிகளின் தேசியமும், அ.மார்க்ஸ் பரிந்துரைக்கும் அனைவரையும் உள்ளடக்கிய தேசியமும் சாத்தியமில்லாமல் போவதற்கு தேசத்தின் சாராம்சப்பசி காரணம். இது நவீன மனிதனின் ஓயாத காயசண்டிகையொத்த அடையாளப்பசியுடன் தொடர்புடையது. தேசம்நெற் வலை இதழில் நாகார்ஜுனனின் உரையொன்றை தேசம்திரை என்ற பகுதியில் பார்க்கலாம். இப்பிரச்சினை தொடர்பான சில சிக்கல்களை அவருக்கேயுரிய விதத்தில் பேசியுள்ளார். நாகார்ஜுனன் சிந்தனைகளும், அவர் தீவிரமாக கவனம் கொள்ளும் இலக்கிய பண்பாட்டுக் களங்களும் இந்த அடையாளப் பசியை நீக்கவும், நவீன மனிதப்பிண்டத்தை அரசத்துவம், தேசம் களைந்த, முதலீட்டிய இயக்குவிசையிலிருந்து விடுபட்ட முழு மனிதானாக்கவும் சில அட்சய பாத்திரங்களை உருவாக்க முயல்வன. ஆனால், முதலீட்டியம் அடையாளப் பசி நீக்க அனுமதிக்காது. ஏன் என்றால், தான் உருவாக்கும் உற்பத்தி-நுகர்வுச் சுழற்சியிலிருந்து விலகக் கூடிய எந்த ஆன்மீக கவித்துவ ஆற்றலையும் அது அனுமதிக்காது. இலக்கியத்தை பண்டமாக்கி ஆசிரியனை தனிமைப்படுத்தி அங்கீகாரத்துக்கு அலையவைக்கும். ஆன்மீக ஊற்றுக்களான மதங்களை அடையாள இயந்திரங்களாக மாற்றி ஒன்றையொன்று எதிர்ப்பதையே இலட்சியமாகக் கொள்ள வைக்கும். “தேசம் என்ற ஒன்று இல்லாவிட்டால் எல்லோரும் சின்னாபின்னாமாகி விடுவீர்கள்” என்று கூறி தன்னுடைய ஆயுத உற்பத்தித் தொழிலை விரிவாக்கும். தன்னியல்பான கவின்மையுணர்வும், இறைமையுணர்வும் துண்டிக்கப்பட்ட கார்ட்டீசிய மனிதப் பிண்டம் அடையாளம், அடையாளம் என அலைந்து, கிறித்துவத்துவம், இஸ்லாமியத்துவம், இந்துத்துவம் எனப்பெருகும் அடையாளப் பொறிகளில் சிக்கி வன்முறையைப் பெருக்குவதை தவிர வேறு வழியின்றிப்போகும்.

இதன் தீர்வு முதலீட்டிய அருவ சக்தியை ஆற்றலிழக்கச் செய்வதிலிருந்தே தொடங்க முடியும். அதற்கு ஒரு சிறந்த வழி நுகர்வை மறுப்பதுதான். ஓகோ, பழைய துறவா என்று உங்களுக்குத்தோன்றலாம். இல்லை, புதிய அழகியல் என்பதுதான் பதில். எளிமையாக வாழ்வதும் நுகர்வை மறுப்பதும் கடினமா என்ன? காந்தி கைபாணமான ராட்டையின் பொருள் அதுதானே? முதலீட்டியத்தின் ஆதார விசைகளனைத்தும் இன்று அங்காடிகளில்தான் இருக்கின்றன. புதிய நுகர்வு மறுப்பு இயக்கத்தின் மாற்று அழகியல் மட்டுமே நாம் தப்பிக்கத் திறக்கும் முதல் சிறு கதவு. அங்கு வழிகாட்டியாக காந்தி நிற்கிறார். அவர் காகமோனா என்ற பூதத்துடன் தேசிய விளையாட்டு விளையாடினார், அதனால் காவு கொள்ளப்பட்டார் என்பதை மறந்து விடக்கூடாது. தேசம் என்பது ஆன்மீக சக்தியல்ல என்று தால்ஸ்தோயும், ரவீந்திரரும் வற்புறுத்துவதும், பெரியார் மோசடி என எளிமையாகக் குறிப்பிட்டதும் அதனால்தான்.

முதலீட்டியம் தன் சுழற்சியில் ஏற்ற தாழ்வுகளையும், வாழ்வாதார மாற்றங்களையும் உருவாக்கும். இதற்காக பெரும் மக்கள் திரள்களை கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு நவீன அரசத்துவம் இன்றியமையாதது. அரசத்துவம் என்ற வார்த்தையை இறையாண்மை (sovereignty) என்ற பழைய இறையாண்மை கருத்தாக்கத்திற்கும், அரசாங்க மயமாதல் (governmentality) என்ற ஃபூக்கோல்டிய கருத்தாக்கத்திற்கும் பொதுவான தமிழ் சொல்லாக்கமாக பாவிக்கிறேன். அரசத்துவம் என்பது இறையாண்மையின் நவீன வடிவம். எனவே நவீன அரசத்துவம் என்று அழுத்திக் குறிப்பிட்டேன். இதை மக்கள் ஏற்றுக்கொள்ள வைக்க சாராம்சங்களும், அடையாளங்களும், தேசீய மாயைகளும், தீவிரவாத அச்சுறுத்தல்களும் தேவை. எனவே, முதலில் காகமோனாவின் அடிப்படை பிரச்சினை முதலீட்டியம் என்று தெளிக. முதலீட்டியத்தின் செயல்பாடுகளை ஆழ்ந்து பரிசீலத்தால் அடையாளப்பசி, அங்கீகார வேட்கை, சாரம்சப்பித்து ஆகியவற்றிலிருந்து தப்பி உண்மையான கவியுணர்வையும், ஆன்மீக விழிப்பினையும் பெற வழி பிறக்கும். அப்போது நாம் மெள்ள, மெள்ள இந்த தேசீய இராணுவ தீவிரவாத இடியாப்பச்சிக்கலிலிருந்து விடுபடுவது குறித்து யோசிக்கலாம். ஆனால், நாம் நன்றாக இருக்கும்வரை முதலீட்டியம் நல்லதுதான் என்று நினைத்தால் அது உருவாக்கும் மாய எதிரிகளை வசைபாடிக்கொண்டு காலம் கழிக்கலாம். சில புத்திசாலிகள் உடனே நீங்கள் ஏன் மரவுரியுடுத்தி காட்டுக்குப் போகக்கூடாது என்று கேட்பார்கள். சிந்தனை, தர்க்கம் பற்றிய புரிதலற்ற இத்தகைய கேள்விகளால் நாம் சோர்வடைந்துவிடக்கூடாது. உலகின் பிரச்சினைகள் கூர்மையடையும்போது காந்தியை புறக்கணிக்கமுடியாது.

பகுதி இரண்டு: எல்லாக் காலமும், காகமோனா காலமும்

தேசம் என்பது பழைய சமாசாரம்தானே, அங்க, வங்க, கலிங்க தேசத்து அரசகுமாரர்களெல்லாம் காம்போஜ தேசத்து அரசகுமாரியின் சுயம்வரத்திற்கு வருவார்கள்தானே என்று சிலருக்கு தோன்றும். காகமோனோ தேசத்திற்கும் அந்த பழைய தேசங்களுக்கும் தொடர்பெதுவும் கிடையாது. பழைய இறையாண்மை என்பது அரசன், தெய்வம் என்ற குறிகள் சார்ந்தது. எனவே அத்தேசங்களுக்கு மையம் உண்டு, எல்லைகள் கிடையாது. படைகள், நிர்வாகம் போன்றவை நெகிழ்ச்சியானவை. மக்கள் பிரஜைகளாக இருக்கலாம். ஆனால் குடியுரிமையாளனாக இருக்க முடியாது. ஆங்கிலத்தில் சொன்னால் Subject உண்டு. Citizen கிடையாது. காகமோனா தேசம் என்பது எல்லோரும் இன்னாட்டு மன்னர் என்ற கருத்திலமைந்தது. அதாவது குடிமையுரிமையாளர்கள் சட்டத்தின் துணையுடன் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்வது. இதற்கு திட்டவட்டமான பிரதேச எல்லைகள் அவசியம். இன்றைய உலகில் பிறந்தவுடனேயே மனித உயிரி ஒரு குறிப்பிட்ட தேசத்தின் குடியுரிமைச்சட்டத்தின்கீழ் வந்துவிடும். இதை ஒழுங்குசார் அரசத்துவம் (juridical sovereignty) என்று சொல்வதுண்டு. இப்புதிய தேசத்தை நிலைபெறச் செய்ய தேசீயம் என்ற கருத்தாக்கம், சொல்லாடல், கதையாடல் எல்லாம் தேவை. அதற்கு சாராம்சங்கள் இன்றியமையாதவை. “தேசிய குண இயல்புகள்” என்ற புனைவை மேற்கொள்ளாத காகமோனா சிந்தனையாளர்களே கிடையாது. ஃபிரெஞ்சுக்காரர்கள் உல்லாசிகள், இத்தாலியர்கள் சோம்பேறிகள் என்றெல்லாம் இம்மானுவெல் காண்ட் போன்ற மாபெரும் தத்துவ அறிஞர்களே எழுதினார்கள். இந்தியர்கள் எல்லாம் கோழைகள் என்றார் ரூஸோ. ஆப்பிரிக்கர்களை மனிதர்கள் என்று சேர்க்க முடியுமா என்று சந்தேகித்தார் ஹெகல். இப்படியாகப் பெருகியது சாரம்சவாத தேசியம். சாராம்சம் கற்பிப்பது ஆதிவிளையாட்டென்றாலும், அது தேசியத்தின் அடிப்படையாக காகமோனாவில் பயன்கண்டது.

அடுத்து முதலீட்டியம். அதுதான் பாண்டிய நாட்டு வியாபாரிகள் ரோமாபுரிக்கு சென்றார்களே? அவர்களெல்லாம் இலாபம் பார்க்கவில்லையா? எதற்காக பண்டைய அரசுகள் நாணயங்களை உருவாக்கின? மொகஞ்சதாரோ, ஹரப்பாவிலே நாணயங்களும் அங்காடிகளும் இருந்தனவே? அதெல்லாம் முதலீட்டியம் இல்லையா? என்பது இன்னொரு கேள்வி. நாணயம், வர்த்தகம், இலாபம் என்பதெல்லாம் முதலீட்டியம் ஆகாது. அதை mercantilism என்று கூறுவார்கள். முக்கியமான வேறுபாடு என்னவென்றால் அப்போது பண்டங்களின் பரிமாற்றத்துக்கு பணம் உதவியது. இப்போது பணத்தை எல்லையின்றிப் பெருக்க பண்டங்கள் உற்பத்தி செய்யப் படுகின்றன.

பண்டம்→பணம்→பண்டம்

என்ற சுழற்சி

பணம்→பண்டம்→மேலும் பணம்

என்பதாக மாறுவதுதான் முதலீட்டியம்.

கோபால் ராஜாராம் இத்தகைய வரலாற்று மாற்றங்களை, காகமோனா தோற்றத்தை அங்கீகரிக்க மறுக்கிறார். அதனால்தான் தால்ஸ்தாய் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஐரோப்பிய தேசங்கள் போரிட்டதை பார்த்து வருந்தினார் என்கிறார். காகமோனாவை எதிர்த்தவர்கள் எல்லோரையும் மனித பலவீனங்களாக சாராம்சம் கொள்ளும் வன்முறை, சுயநலம், பேராசை ஆகியவற்றை எதிர்த்தவர்களாக புரிந்துகொள்வது ஆபத்தானது. ஹன்னா ஆரெண்ட் ஸ்டாலினசத்தையும், ஹிட்லரையும் மட்டும் எதிர்க்கவில்லை. இம்பீரியலிசம் என்பதையும் தீவிரமாக எதிர்த்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ராஜாராம் பரிசீலிப்பார் என நம்புகிறேன். ஹன்னா ஆரெண்ட் சிந்தனைகளை இன்னும் நான் இரவல் வாங்கவில்லை. அ.மார்க்ஸை அடையாளம் காட்டவாவது ராஜாராம் அகம்பென், தெரிதா போன்றவர்களையும் விவாதித்தால் நல்லது.

இப்போது ஒரு சந்தேகம் வரலாம். இந்திய ஞான மரபில் ஆர்வம் கொண்ட ஜெயமோகன் ஏன் இந்த காகமோனா நவீன தேசத்தை கொண்டாடுகிறார்? வலதுசாரி தேசியவாதிகள் அனைவரும் உபநிடதம் என்றால் புல்லரிக்கிறார்களே? பிறகு ஏன் அடையாள அரசியலை விரும்புகிறார்கள்? காரணம் எளிமையானதுதான். அவர்கள் எதிர்வினையாளர்கள் (Reactionaries). கிறித்துவர்களும், இஸ்லாமியர்களும் நவீன அடையாளமாகிவிட்டதால், இந்துக்களும் நவீன அடையாளம் கொள்ளவேண்டும் என்பதே அவர்களது பிரச்சினை. பள்ளியில் ஆசிரியரிடம், “அவன் தான் முதலில் அடித்தான்” என்று சொன்னால், “அவன் செய்வதை நீயும் செய்யவேண்டுமா?” என்று கேட்பார்கள். வேறொரு கோணத்தில் நாயகன் படத்தில் வேலு நாயக்கர் “அவனை நிறுத்தச் சொல்லு; நான் நிறுத்துகிறேன்” என்பார். இதற்கெல்லாம் பதிலை காந்தி உள்ளிட்ட எண்ணற்ற சிந்தனையாளர்கள் கூறிவிட்டனர், கூறிவருகின்றனர். காந்திய சிந்தனையாளர் பலரை, இந்திய தேசியத்தை மதிப்பவர்களைக் கூட வலதுசாரி தேசியவாதிகள் படிப்பதில்லை. ஆஷிஸ் நந்தி என்றோ, பார்த்தா சாட்டர்ஜி என்றோ சொல்லிப்பாருங்கள். வெறுப்பை உமிழ்வார்கள். அ.மார்க்ஸ்தான் தகா நட்பு கொண்டவர், அ.கொ.தீ.க உறுப்பினர் (அழிவு, கொலை, தீமை கழகம்—நன்றி:முத்து காமிக்ஸ்), சுயசிந்தனை இல்லாதவர். ஆஷிஸ் நந்தியும், பார்த்தாவும் கூடவா? காலச்சுவடு பத்திரிகையில் நந்தியை மொழிபெயர்த்தார்களே? கண்ணில் படவில்லையா? நவீன அரசத்துவத்தின் தேசியத்தின் ஆபத்துகளை, காந்தி ஏன் கொல்லப்பட்டார் என்பதை அவர் விளக்குகிறாரே? (அ.மாவுக்கு ஸ்டாலினிஸ்டுகள் நண்பர்கள் என்று ராஜாராம் குறிப்பிடுவது நல்ல நகைச்சுவை. அ.மா மட்டுமல்ல, எஸ்.வி.ஆர், ஞானி ஆகியவர்களும்கூட ஸ்டாலினை எந்த சமரசமுமின்றி எதிர்த்தவர்கள் என்பதை ராஜாராம் மறந்தது வியப்பளிக்கிறது)

வலதுசாரிகளின் இன்னொரு பிரச்சினை முதலீட்டியத்தை குறித்த ஆழ்ந்த வரலாற்றுப்பார்வையின்மை. அத்தகைய பார்வை மார்க்சீயத்தை நினைவுபடுத்துவதால் அதன் மீது வெறுப்பு. முதலீட்டிய எதிர்ப்பு என்பது மார்க்ஸுக்கு மட்டும் சொந்தமானதல்ல. எமர்சன் கூட எதிரிதான். நீட்சேவும் எதிரிதான். தோல்ஸ்தோயும் எதிரிதான். முதலீட்டியத்தின் ஆன்மீக வறுமை புரியாமல் எந்த கலைஞனும், சிந்தனையாளனும் இயங்கியதில்லை. (அயன் ராண்டை கலைஞர் என்று ஏற்றுக்கொண்டாலேயொழிய) என்ன, அதன் செயல்பாடுகளை நுணுக்கமாக ஆராயும் பொறுமை இல்லாததால், ஊரை அடித்து உலையில் போடுவதை கண்டிக்கத் தெரியாமல் ஏதாவது பேசிக்கொண்டிருப்பார்கள். கார்ல் மார்க்ஸ் சில காத்திரமான ஆய்வுகளை விட்டுச்சென்றார்.

இதைவிட முக்கியமாக ஜெயமோகன் உபநிடதத்தையே கார்ட்டீசிய கோணத்தில் புரிந்துகொள்கிறாரோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. சமீபத்தில் அவர் மனிதன் “நானே கடவுள்” என்று புரிந்துகொள்ளவேண்டும், மீன் “நானே கடல்” என்று நினைக்கவேண்டும் என்றெல்லாம் வலியுறுத்தியிருப்பது, அறிதல் வகைப்பட்ட சுய உறுதிப்பாடாகத் தோன்றுகிறதேயல்லாமல், இந்திய ஞானம் வலியுறுத்தியதாக நான் புரிந்துகொள்ளும் இறைமுதல்வாத தோற்றவியல் சார்ந்த சுய மறுப்பாகவோ (onto-theological self negation) அல்லது விஷ்ணுபுர அஜிதனின் வாதத்தில் இடம்பெற்ற பெளத்த முற்று உள்ளுறை வாதமாகவோ (total immanence) தோன்றவில்லை.(பார்க்க: அவர் வலைத்தளத்தில் “நான் (கிட்டத்தட்ட) கடவுள்” கட்டுரை மற்றும் அது குறித்த கடிதங்கள்-பதில்கள்.) இது குறித்தும், அவர் புனைவுகளில் வெளிப்படும் தத்துவப்பிரச்சினைகள் குறித்தும் விரிவாகப் பிறகு எழுதுவேன். அவரைப் போன்ற கவிமனமும், தத்துவ நோக்கும் கொண்ட எழுத்தாளர்களெல்லாம் கொஞ்சம் முயற்சித்தால்கூட இன்று மானுடம் சந்திக்கும் சிக்கலின் பரிமாணத்தை தானும் புரிந்துகொண்டு, பிறருக்கும் எடுத்துரைக்கலாமே என்றுதான் என் மனம் ஏங்குகிறது. தீவிரவாத இஸ்லாமே இன்றைய உலகின் முக்கிய பிரச்சினை என்று அதை உருவாக்கி விட்ட, இன்றும் ஊக்கமூட்டும் முதலீட்டிய சக்திகள் சொன்னால், நாமும் அதை வெகுளியாக நம்பினால், அதனால் இந்துக்களுக்கும் நன்மையில்லை. இஸ்லாமியர்களுக்கும் நன்மையில்லை. இந்தியாவும், பாகிஸ்தானும் போட்டி போட்டுக்கொண்டு லாக்ஹீட் போர்விமானங்களை வாங்காவிட்டால் அமெரிக்க பொருளாதாரத்திற்குதானே ஆபத்து? ஈராக்கிற்கும், ஈரானிற்கும் போதிக்கும் மக்களாட்சி நெறிகளை அமெரிக்காவால் செளதி அரேபியாவிற்கு போதிக்க முடியுமா? “என்ன கூத்து இது சொந்தங்களே” என்று சீமான் போல கேட்கத் தோன்றுகிறது.

மனிதர்களின் வன்முறை, அடையாள வெறி இன்னபிற குரூரங்களெல்லாம் காகமோனாவிற்கு முன்னமே காலம் காலமாக இருப்பதுதான். ஆனால் காகமோனா காலத்தில் அவையெல்லாம் எங்கும் நிறைந்த நூதன அதிகாரத் தொழில்நுட்பங்களாகவும், பேரழிவு இயந்திரங்களாகவும் உருமாறிவிட்டன என்பதுதான் பிரச்சினை. இதை விளக்கவே தன் வாழ்வை செலவிட்டார் மிஷேல் ஃபூக்கோ. கொஞ்சம் பொறுமையாக தமிழில் வந்துள்ள அவர் படைப்புகளை நான்கைந்து முறை படித்தால்கூட சில அடிப்படைகளை புரிந்துகொள்ளலாம். (உதாரணம்: தன்னிலையும் அதிகாரமும், வெகுஜன நீதி குறித்த மாவோயிஸ்ட்டுகளுடனான உரையாடல்)

பகுதி மூன்று: நாம் பெற்ற நலன்களை இழக்கலாமா?



மக்களாட்சியின், அறிவியலின் பலன்களை அனுபவித்த யாருக்கும் என்னுடைய காகமோனா எதிர்ப்பை ஏற்கப்பிடிக்காது. நானும்கூட பத்தாண்டுகளுக்கு முன் இதை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டேன். 2000 ஆண்டிற்கு பிறகு அறிவியல் கண்டுகொண்ட பிரச்சினைகளும், அரசியல் நிலைகளும், நான் பெற்ற தத்துவப் பயிற்சியுமே என் இன்றைய நிலைபாட்டிற்குக் காரணம். இதை பிற கட்டுரைகளிலும், நாகார்சுனனுடனான அவர் தளத்தில் நிகழும் உரையாடலிலும் பதிவு செய்து வருகிறேன். காகமோனா குறித்த விழிப்புணர்வு என்பது அனைத்தையும் துறந்துவிட்டு காட்டுக்குச்செல்லவேண்டும் என்பதல்ல. ஆழ்ந்த விமர்சன சிந்தனையை வளர்க்க வேண்டும், மானுடம் பகுதி, பகுதியான அல்லது ஒட்டுமொத்த அழிவிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளவேண்டும் என்பதுதான். காகமோனாவை உருவாக்கியவர்கள் கெட்டவர்களோ, முட்டாள்களோ கிடையாது. அதனால் நன்மையே விளையும் என்று நினைத்தார்கள், இன்றும் நினைக்கிறார்கள். உண்மையில் காகமோனா வாதங்களுடன் விரிவான விவாதத்திற்கான குறிப்புகளே இக்கட்டுரை. எஸ்.என்.நாகராசன் செய்தது போல ஃபிரான்ஸிஸ் பேகனை அயோக்கியன் என்று சாடுவதால் மட்டும் பயனில்லை. தெகார்த்தையோ, ஹாப்ஸையோ, லாக்கையோ, ரூஸோவையோ, பேகனையோ ஏற்றுக்கொள்ளும் மனநிலையை நாம் சிறு வயதிலேயே பெற்று விடுகிறோம். காகமோனா எதிர்ப்பாளர்கள்/விமர்சகர்களான நீட்சே, காந்தி, ஹைடெக்கர், ஃபூக்கோ, தெல்யூஸ், தெரிதா, லதூர் முதலியோரை புரிந்துகொள்வதுதான் கடினம்.

இந்தியாவில் குறிப்பாக சாதீயம், தீண்டாமை இரண்டும் இறந்தகாலமாக காட்சியளிக்கும்போது காகமோனாவை எப்படி விமர்சிப்பது என்ற கேள்வி எழும். நான் என்ன நினைக்கிறேனென்றால், காகமோனாவினால் விளைந்த நன்மைகளை அங்கீகரிக்கும் அதே நேரத்தில், அந்த நன்மைகளை தக்கவைத்துக்கொள்ள காகமோனாதான் ஒரேவழி என்று நினைக்க வேண்டாம் என்று சொல்லலாம் என்பதுதான். ஆனால் இதை குறித்து பேசும் முன்பாக சமூகத்தில் பணக்காரர்களும், உயர்சாதியாக்கப்பட்டவர்களும் செய்துவரும் நுகர்வை விமர்சிக்க வேண்டும். எப்படி வளர்ச்சியடைந்த நாடுகள் முதலில் தங்கள் நுகர்வை குறைக்கவேண்டும் என்று சொல்கிறோமோ அதேபோல உள்ளுரில் வசதி படைத்தவர்கள் நுகர்வை குறைத்தால்தான் மற்றவர்களிடம் காகமோனா பற்றி பேசமுடியும். தத்துவத்தளத்தில் கார்ட்டீசிய தனிமனித வாதம் புரட்சிகரமானதல்ல என்பதை எளிதில் சொல்லமுடியும். ஏனென்றால் சமூகம் என்ற சிந்தனையே இந்தியாவில் பரவலாக இருக்கிறது. ஆனால் சாரம்சவாதத்தையும், வரலாற்றுவாதத்தையும் தவிர்ப்பதுதான் கடினம். உள்ளூர் புராணிகங்களுடன், நவீன சிந்தனைகளும் இணைந்து ஆபத்தான அடையாள அரசியலையே எங்கும் தோற்றுவிக்கின்றன. முதலீட்டியத்தின் செயல்பாடுகளை குறித்த விமர்சனத்தை வளர்ப்பதே மற்ற சிந்தனைகளுக்கும் வழிகாட்டியாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆன்மீக தாகமும், கலைகளும், தத்துவமும், தர்க்கமும் செழித்த இந்தியாவில் காகமோனா விமர்சனத்தை வளர்ப்பது கடினமாக இருக்க முடியாது. சிந்தனையாளர்களாகும் வாய்ப்புப் பெற்றவர்கள் மனது வைத்தால் போதும். அடையாள அரசியலே நம் காலத்தின் பிரச்சினை என்பது சிந்தனைச் சோர்வையே சுட்டுகிறது. காகமோனாவே நமது பிரச்சினை. அடையாள அரசியல் அதன் தவிர்க்க முடியாத உப விளைவு.

இறுதியாக ஒன்று. காலாதீதமாக செயல்படும் அநீதியின் சுழற்சியை பேசுபவர்கள், அழிவைத் தவிர்க்க முடியாது என நினைப்பவர்கள் ஆகியோருக்கு ஒரு வார்த்தை. எனக்கு மானுடத்தை அழிவிலிருந்து தப்புவிப்பதில் எந்த தனிப்பட்ட ஆர்வமும் கிடையாது. ஒரு பேச்சுக்கு சொன்னால் குழந்தை குட்டி கூட கிடையாது. என் வாதங்களையெல்லாம் நிரூபித்து எதையும் காப்பாற்றிவிடவேண்டும் என்றெல்லாம் கற்பனை செய்வதில்லை. தத்துவத்தின் சாத்தியங்களை யோசிப்பது எனது தேர்வு. “வாழலாமேடா பகவானே” என சம்பத்தின் இடைவெளியில் தினகரன் நினைப்பது போலத்தான்.

இரவு நேரத்தில் யார் கண்ணிலும் படாத குடுகுடுப்பைக்காரன் போலவே செயல்பட விரும்புகிறேன். மானுட அழிவு குறித்த என் ஆரூடங்களும் அனுமானங்களும் தவறாக இருக்கவேண்டும் என்றுதான் விரும்புகிறேன். தவறு என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கும்வரை, இப்போதுள்ள சுட்டிகளின் அடிப்படையில் சிந்திப்பேன், எழுதுவேன். ஏற்பதும், மறுப்பதும் வாசகர்கள் பொறுப்பு.

5 thoughts on “தேசம், அரசத்துவம், முதலீட்டியம்

  1. தலைவரே!
    இரண்டு சந்தேகங்களுக்கு விடை தெரிஞ்சாகணும்!
    1)புதிய உலக ஒழுங்கு இனி எப்படி இருக்கும்?
    2)வெனிஸுவெலா,ஈரான் போன்ற நாடுகள் வேறுமாதிரி உலகைக் கட்டமைக்கமுடியுமென்று முயற்சிக்கிறமாதிரித் தெரிகிறதே?

  2. லெனின் நினைவுகளுக்கு லால் சலாம். சுகன், முப்பதாண்டுகளுக்குப் பிறகு உலகமிருக்கலாம், ஒழுங்கென்று எதுவுமிருக்குமா என்பது தெரியவில்லை. 1) பாதுகாப்பான அணு ஆற்றல் வாகனங்கள் உருவாகவேண்டும்; 2) ஆர்டிக் பனியின் பரப்பளவு மிகவும் குறையாமலிருக்க வேண்டும்; அதாவது புவி வெப்பமடைதல் குறையவேண்டும். இரண்டும் இரு பத்தாண்டுகளுக்குள் நடக்காவிட்டால் கட்டாவது, அமைப்பாவது.

  3. பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை!
    நமக்குப்பொருளுமில்லை அருளுமில்லை!
    மாயாகொவ்ஸ்கிக்கு சூரியனைக்கேட்பதற்கு ஒருகோப்பை தேனீராவது இருந்தது!
    நம்மிடம் வைன் இருக்கிறது அதைக்குடிப்பதற்கான தகுதியில்லை!
    கொண்டைஊசி வளைவு வால்பாறையில் மட்டுந்தான் சாத்தியமா?

  4. ஸ்ரீரங்கம் முற்போக்குப்பின்நவீனத்துவப்பெரியார்ப்பாப்பான் says:

    /இரவு நேரத்தில் யார் கண்ணிலும் படாத குடுகுடுப்பைக்காரன் போலவே செயல்பட விரும்புகிறேன்/
    அதுதானே காலங்காலமாக நாம் செய்துவருவது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *