அன்புள்ள ஹெலன் டெமூத்

கட்டுரைகள்

ன்னையே!

நான் உங்களைப் பற்றி எழுதிய ஒரு குறிப்பால் கடந்த சில நாட்களாக ‘தேசம்’ இணையத்தளத்திலும், நேற்றுமுதல் ‘தமிழ் அரங்கம்’ இணையத்தளத்திலும் நீங்கள் சந்திக்கும் அவமதிப்புகளையிட்டு மனம் பதைபதைத்து, இந்தக் கடித்தை உங்களுக்கு  எழுதுகிறேன்.

நான் பத்து வருடங்களிற்கு முன்புதான் முதன்முதலாக உங்களது பெயரை ஷீலா ரௌபாத்தம் எழுதிய ‘அன்புள்ள டாக்டர் மார்க்ஸ்’ என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பிலிருந்து அறிந்துகொண்டேன். அந்த நூலின் 70வது பக்கத்தில் ஷீலா ரௌபாத்தம் இவ்வாறு உங்களைக் குறித்து எழுதியிருந்தார்:

“1845ல்  மார்க்ஸும் திருமதி மார்க்ஸும் புலம் பெயர்ந்து பிரஸ்லெஸ்ஸில் வாழ்ந்துகொண்டிருந்தபோது ஹெலன் டெமூத் என்ற 25 வயது இளம்பெண் அவர்களிடம் ஒரு பணிப்பெண்ணாகச் சேர்ந்தார். 1851ல் அவர் கார்ல் மார்க்ஸின் மகனைக் கருத்தரித்தார். ஃபிரெட்டி டெமூத் என்றழைக்கப்பட்ட அக்குழந்தை இலண்டனிலுள்ள ஹாக்னி ( Hackney ) என்ற இடத்தில் ஒரு தொழிலாளி வர்க்கத் தம்பதியால் வளர்க்கப்பட்டது.”

இதைப் படித்ததும் முதலில் நான் பதறிப்போனேன். ஆனால் கண்டிப்பாக அது கலாச்சார அதிர்ச்சி கிடையாது. வருடக்கணக்காகத் தெருவில் நின்று ‘தொழிலாளர் பாதை’யும் ‘மார்க்ஸிய முன்னோக்கு’ம் விற்றுவிட்டு,  இவ்வளவு காலமாக இதுகுறித்து எதுவும் தெரியாமலிருந்தேனே என்ற சுயபச்சாதாபத்தால் ஏற்பட்ட பதற்றமேயது. என்றாலும் ஒருபுறம், ஷீலா ரௌபாத்தமின் அந்த நூல் ‘எதிர்க் கட்சிகளின் திட்டமிட்ட சதியோ’ என்ற சந்தேகமும் எனக்கு ஏற்பட்டது என்பதையும் அன்னையே நான் வெட்கத்துடன் உங்களிடம் ஒப்புக்கொள்கிறேன்.

ஷீலா ரௌபாத்தம் யாரென்று தேடி, அவர் மூத்த மார்க்ஸியரும் பெண்ணியவாதியும் ஆய்வாளரும் கல்வியாளரும் என்று அறிந்தபின்பு எனக்கு அந்தச் சந்தேகம் சற்று மங்கினாலும் ஒருவேளை இது தமிழ் மொழிபெயர்ப்பாளரின் இடைச்செருகலாக இருக்குமோ என்ற ‘சமுசயம்’ இருக்கத்தான் செய்தது. ஆனால் நூலை மொழிபெயர்த்தவர்கள் தோழர்கள் வ. கீதாவும், எஸ்.வி. ராஜதுரையுமாயிருக்க அவர்களின் மொழிபெயர்ப்பைச் சந்தேகப்பட்டால் நான் மனிதனே இல்லை என்று என் மனச்சாட்சி சொன்னது. ஏனெனில் அவர்கள் இருவரும் மொழிபெயர்ப்புகளில் மற்றும் தங்களது எழுத்துகளில் மார்க்ஸியம் குறித்தும் பெரியாரியம் குறித்தும் இலக்கியம் குறித்தும் எவ்வளவு தீவிரமாகவும் நேர்மையாகவும் உழைப்பவர்கள், அவர்களையா நான் அய்யுறுவது!

சரி பதிப்பாளர்களிற்கு உள்நோக்கங்கள் ஏதும் இருக்குமோ என்ற கோணத்திலும் கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன். ஷீலா ரௌபாத்தமின் அந்தப் பிரதியை ஆங்கிலத்தில் வெளியிடவர்கள் Socialist Register: Vol 34. (1998). தமிழில் வெளியிட்டதோ ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான நூல்களையும் மார்க்ஸிய நூல்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டுவரும் ‘விடியல் பதிப்பகம்’. எஞ்சியிருந்த சந்தேகமும் என்னிடம் இல்லாமல் போயிற்று அன்னையே.

பின்னொருநாள் நான் இலண்டன் வந்திருந்தபோது, பேராசான் கார்ல் மார்க்ஸின் கல்லறைக்கு வந்தேன். அங்கே ஒரே கல்லறையில் மார்க்ஸோடு நீங்களும் ஜென்னியும் நித்தியமாகத் துயின்றுகொண்டிருந்தீர்கள். அங்கே கல்லறையைப் பராமரிக்கும் அமைப்பு வழங்கிய பிரசுரத்திலும் ஷீலா ரௌபாத்தம் உங்களைக் குறித்து எழுதியிருந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அடுத்த வருடம் வெளியான எனது முதல் நாவலான ‘கொரில்லா’வை நான் உங்களுக்கே காணிக்கையாக்க விரும்பினேன். நான் அந்த நாவலில் காணிக்கைக் குறிப்பை இவ்வாறு எழுதினேன்:

பேராசான் கார்ல் மார்க்சுக்கு
காதலியாய்க் கிடந்து, மரித்து
வரலாற்றின் இருள் அடுக்குகளில் சிதிலமாய்
கீறப்பட்ட அந்த ஊழியக்காரி
ஹெலன் டெமூத்தின் நினைவுகளுக்கு…

அன்னையே! ‘கொரில்லா’ நாவல் இதுவரை மூன்று பதிப்புகள் வெளியாகிவிட்டன. மின்நூலாகவும் இணையத்தில் கிடைக்கிறது. ‘கொரில்லா’ ஆங்கிலத்தில் வெளியாகிய போதும் நான் இதே வரிகளுடன் உங்களுக்கே காணிக்கையாக்கியிருந்தேன். ‘கொரில்லா’ குறித்து இதுவரை ஏராளமான விமர்சனங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் பத்திரிகைளில் /  இணையங்களில் வெளியாகியிருந்தபோதும், உங்கள் குறித்த அந்தக் காணிக்கைக் குறிப்பை ஒருவர் கூட மறுத்துப் பேசியதில்லை. இப்போது ‘தமிழ் அரங்கம்’ இணையத்தில் “கார்ல் மார்க்ஸ் தன் வேலைக்காரியுடன் தகாத உறவு வைத்து பிள்ளை பெற்றுக்கொண்டார் என்று  ஷோபாசக்தி எழுதியுள்ளார்! இதற்கான ஆதாரத்தை  ஷோபாசக்தி  முன்வைக்க முடியுமா?” என்று ‘தில்’லாய் கேள்வியைப் பிரசுரித்திருக்கும் இரயாகரன் கூட சமர் 30வது இதழில் ‘கொரில்லா’ நாவலிற்கு ஒரு நீண்ட விமர்சனத்தை எழுதியிருந்தார். ஆனால் அவர்கூட அந்தக் காணிக்கைக் குறிப்புக் குறித்து எதுவும் கேள்வி எழுப்பியிருக்கவில்லை. சென்னையில் நடந்த ‘கொரில்லா’ விமர்சனக் கூட்டத்தில் கருத்துரைத்த தோழியர் அ. மங்கை “எனக்கு இந்த நாவலைவிட இந்த நாவல் யாருக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது என்ற விடயமே முக்கியமாகப்படுகிறது” என்று உவகையுடன் சொன்னது எனக்கு இப்போதும் ஞாபகத்திலிருக்கிறது.

தோழர் பாலன் “ஷோபாசக்தி, கார்ல் மார்க்ஸ் தன் வேலைக்காரியுடன் தகாத உறவு வைத்து பிள்ளை பெற்றுக்கொண்டார் என்று எழுதியுள்ளார்” எனத் தவறாக என்னைத் ‘தேசம்’ இணையத்தில் மேற்கோள் காட்டுகிறார் அன்னையே. இருவர் மனமொத்த உறவில் தகாத உறவு, தக்க உறவென்று ஏதுமுள்ளதா சொல்லுங்கள்! காதலில் கள்ளக் காதல், நல்ல காதல் என்றெல்லாம் ஏதுமுண்டா? சமூக  அதிகாரங்களின் இந்தக் கற்பிதமான துவிதங்களால் வஞ்சிக்கப்பட்டவரல்லவா நீங்கள். நான் ‘அம்மா சத்தியமாக’ தகாத உறவு என்றெல்லாம் எழுதவேயில்லை அன்னையே. உங்களைக் குறித்து நான் இப்படித்தான் எழுதியிருந்தேன்:

“ஹெலன் டெமூத்தோடு தனக்கிருந்த காதலையோ, தன்மூலம் ஹெலன் டெமூத்துக்குப் பிறந்த குழந்தையையோ கார்ல் மார்க்ஸ் அவர் மரணிக்கும்வரை வரை ஒப்புக்கொள்ளவேயில்லை. நீண்ட காலத்திற்கு அது ஏங்கெல்ஸ் உட்பட வெகுசிலருக்கு மட்டுமே தெரிந்த உண்மையாயிருந்தது. ஹெலன் டெமூத் மரணித்த பின்புதான் அவருக்கு கார்ல் மார்க்ஸின் காதலியென்ற ‘அங்கீகாரம்’ கிடைக்கப்பெற்று அவர் மார்க்ஸின் கல்லறையிலேயே புதைக்கப்பட்டார்.”

அன்னையே! தோழர் பாலன் ‘தகாத உறவு’ போன்ற சொற்றொடர்களை உருவாக்குவதைத் தயவு செய்து ஒரு சிறப்புக் குற்றமாகக் கருதாதீர்கள். நீங்கள் வாழ்ந்த காலத்தில் அய்ரோப்பாவில் குடும்பம் குறித்து என்னவகையான கட்டுப்பெட்டித்தனமான மதிப்பீடுகள் இருந்தனவோ அவைதான் இப்போதும் எங்களது ஈழத் தமிழ்ச் சமூகத்தில் நிலவிவருகின்றன. பொதுசனங்கள் இந்த மதிப்பீடுகளில் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் கூட நமது சமூகத்தில் கட்சி சார்ந்த மார்க்ஸியர்கள் இவ்வகையான  ஒழுக்கவாத மதிப்பீடுகளில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களாகவேயுள்ளார்கள்.

தோழர் பாலன் இதுவரை சற்றொப்ப 2000 வார்த்தைகளில் நீங்கள் கார்ல் மார்க்ஸின் காதலி அல்ல என்பதற்கான வாதத்தை வைத்துள்ளார். அவற்றில் ஒருமுறை கூட அன்னையே அவர் உங்களைப் பெயர் சொல்லிக் குறிப்பிடவில்லை. வேலைக்காரி…வேலைக்காரி என்றே எழுதுகிறார். ‘வேலைக்காரி’ என்று உங்களை அழைப்பதை உழைப்பையே மூச்சாகக் கொண்டிருந்த நீங்கள் தவறாகக் கருதமாட்டீர்கள். ஆனால் இங்கே பாலன் உங்களை ‘வேலைக்காரி’ என்றே தொடர்ந்து அழைப்பதின் உள்ளே உறைந்திருக்கும் அலட்சியத்தை குமுதத்தில் வெளியாகும் மோசமான வேலைக்காரி ‘ஜோக்’குகளைப் படித்தறிந்திராத நீங்கள் உணர்ந்துகொள்ள வாய்ப்பில்லை. பாலனிடமிருப்பது ‘போயும் போயும் ஒரு வேலைக்காரியிடமா நமது மாமேதை பிள்ளை பெற் றுக்கொள்வார்!’ என்ற மேட்டுக்குடி மனநிலையே என்பதை அவரின் ‘வேலைக்காரி’ என்ற இடைவிடாத விளிப்புகளில் நான் காண்கிறேன். அட, ஒருமுறை கூட அவரின் வாயில் உங்கள் பெயர் நுழையமாட்டேன் என்கிறது அன்னையே! தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என்பது பார்ப்பனியத்தின் கொடையெனில்  வாயால் உச்சரித்தாலே தீட்டு என்பது மார்க்ஸியத்தின் கொடையா? வெட்கமாயிருக்கிறது அன்னையே! நீங்கள் மரணித்தபோது ஏங்கெல்ஸ் வெளியிட்ட அறிக்கையில் நீங்கள் கார்ல் மார்க்ஸின் எழுத்துப் பணிகளிற்கு அறிவுசார்ந்தும் துணைநின்றதாகக் குறிப்பிடுகிறார். ஆனால் இவர்களிற்கு நீங்கள் வேலைக்காரி மட்டுமே.

தோழர் ராஜன்குறையுடனான ஒரு  தனிப்பட்ட உரையாடலில் “மார்க்ஸும், ஹெலன் டெமூத்தும் காதலர்கள் என்ற அடிப்படையில்தான் குழந்தை பிறந்திருக்க முடியுமே தவிர மார்க்ஸ் பலவந்தம்  செய்ததாலோ, வெறும் இச்சையிலோ நடந்திருக்க முடியாது. ஏனெனில், குழந்தை பிறந்தது 1851இல். அதன் பிறகு 1883இல் மார்க்ஸ் மரணிக்கும் வரை ஹெலன் மிகுந்த அன்புடன் மார்க்ஸ் குடும்பத்தை நிர்வகித்திருக்கிறார். மார்க்ஸ் மரணத்திற்குப்பின் ஏங்கெல்ஸிடம் சென்று பணி புரிந்திருக்கிறார். இயக்கம்
சார்ந்தவர்கள் அனைவரும் ஹெலனை மார்க்ஸ்- ஏங்கெல்ஸின் உண்மைத் தோழராக அறிந்துள்ளனர். எனினும்  மார்க்ஸும் ஏங்கெல்ஸும் ஃபெடரிக் டெமூத்திற்கு எந்த நியாயமும் செய்யவில்லை என்பதை ஏற்கவேண்டியிருக்கிறது. ‘மார்க்ஸின் மகனாக இல்லாவிட்டால் கூட’ தங்கள் உண்மைத் தோழரான ஹெலனின் மகனை அவர்கள் உதாசீனம் செய்த விதம் அவர்கள் பேசிய இலட்சியத்திற்கு முற்றிலும் முரணாக இருக்கிறது. ஆண்+அறிவு என்பது அயோக்கியத்தனமின்றி இருக்காது என்று பெண்ணிலைவாதிகள் சொன்னால் தலைகுனிந்து நிற்பதைத்தவிர வேறு வழியில்லை” என்று ராஜன்குறை குறிப்பிட்டார்.

அன்னையே! அந்தக் கட்டுரையில் உங்களுக்கும் கார்ல் மார்க்ஸிற்குமான உறவு குறித்து நான் சுட்டிக்காட்டியது சமூக ஒழுக்கங்களின் வன்முறையை விவரிக்கவே தவிர மார்க்ஸை இல்லாததும் பொல்லாததும் சொல்லி அவதூறு செய்வதற்காகவல்ல. அவருக்கு இன்னும் நான்கு காதலிகளும் உங்களிற்கு இன்னும் அய்ந்து காதலர்களும் இருந்தாலும் எனக்கு மகிழ்ச்சியே. மரபான ஒழுக்க விதிகளிற்குக் கட்டுப்பட்டு உங்களையும் மகனார் ஃபெடரிக் டெமூத்தையும் மார்க்ஸ் வஞ்சித்ததை  நான் சுட்டிக்காட்டுவது அவதூறு ஆகாது.

பாலன் இந்தச் செய்திக்கு ஆதாரம் கேட்போது நான் கொடுத்த ஒரு சான்றாதாரம் வலுவற்றது என்கிறார் பாலன். க்ளாரா ஸெட்கின் ஒரு கடிதத்தில் தன்னிடம் எலினார் மார்க்ஸே ‘கார்ல் மார்க்ஸுடைய மகன்தான் ஃபிடரிக் டெமூத்’ எனக் கூறியிருப்பதாக சொல்லியிருக்கிறார். இந்தக் கடிதம் Heinrich Gemkow, Rolf Hecker  ஆகியோர் 1994 இல் பிரசுரித்த ‘Unbekannte Dokumente überMarx’ Sohn Frederick Demuth’ [‘Unknown Documents concerning Marx’s Son Frederick Demuth’] என்ற நூலில் இருக்கிறது. இதைச் சுட்டுவதற்காகத்தான் நான் அந்தத் தொடுப்பைக் கொடுத்திருந்தேன். ஆனால் பாலன் சொல்வதுபோல Terrell Carver கிளாரா ஸெட்கினை மறுக்கிறார். கிளாரா ஸெட்கினை நம்புவதா அல்லது கார்வரை நம்புவதா என்பது பாலனின் தேர்வு. இந்த ‘நசலு’க்காகத்தான் பாலனையே சான்றாதாரங்களை இணையத்தில் பஞ்சியைப்பாராமல் தேடிப்பார்க்குமாறு நான் கேட்டுக்கொண்டேன். அதை ஒரு அவமதிப்பாக அவர் எடுத்துக்கொண்டுவிட்டார். உழைக்கச் சொல்லிக் கேட்பதெல்லாம் ஒரு அவமதிப்பா என்ன!

உலகளாவிய மார்க்ஸிய இயக்கங்களும் அதிகாரமும் ஒரு உண்மையைத் திட்டமிட்டு மறைத்து வைத்துள்ளபோது ‘உண்மை’யை உரித்து நோகாமால் வாய்க்குள் கொண்டு வந்து யாராவது ஊட்டிவிடுவார்கள் என்று பாலன் போன்றவர்கள் எதிர்பார்க்கக் கூடாது. என்னை ‘மடக்குவது’தான் அவர்களின் நோக்கமென்றால் இப்படியே ‘எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி’ என்றரீதியில் அவர்கள் அனர்த்திக்கொண்டிருக்கலாம். ஆனால் உண்மையைக் கண்டுகொள்ள விரும்பினால் ஒன்றுக்கொன்று எதிராய் புதிராய்க் கிடக்கும் பிரதிகளிலிருந்தும் பிம்பங்களிலிருந்தும் கவனமான ஆய்வுகளின் மூலம்தான் அவர்கள் உண்மையைக் கண்டடைய முடியும். எல்லாவித சர்வதேசத் தொலைக்காட்சிகளிலும் ‘முள்ளிவாய்க்கால்’ சண்டையை இரவிரவாக முழித்திருந்து பார்த்துவிட்டு விடிந்தபின்பு பிரபாகரன் உயிரோடிருக்கிறார் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்களையும் நாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். பிரபாகரனின் மரணச் சான்றிதழை இலங்கை அரசாங்கம் தங்களுக்குத் தபாலில் அனுப்பிவைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களுக்கும் பாலன் போன்றவர்களிற்கும் என்ன வித்தியாசம்?

சொந்தமாகக் கொஞ்சமாவது யோசிக்கமாட்டார்களா? கிளாரா ஸெட்கினுக்கு கார்ல் மார்க்ஸ்மீது அவதூறு சுமத்த வேண்டுமென்று  நேர்த்திக் கடனா? ஹெலன் டெமூத்தின் மகனுக்குக் குடும்பப் பெயராக ஏங்கல்ஸின் குடும்பப் பெயரான ஃபிடரிக் என்ற பெயர் ஏன் சூட்டப்பட்டது? ‘மார்க்ஸின் குடும்பத்திற்குச் செய்த சேவைக்காகவும் மார்க்ஸின் அறிவுப் பணிகளில் துணை நின்றதற்காகவுமே ஹெலன் டெமூத் மார்க்ஸின் குடும்பக் கல்லறையில் புதைக்கப்பட்டார்’ என ஏங்கெல்ஸ் சொல்வது சரியான தர்க்கமெனில் ஏங்கெல்ஸுமல்லவா மார்க்ஸின் குடும்பக் கல்லறையில் புதைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏங்கெல்ஸை விட மார்க்ஸிற்குத் துணைநின்றவர் வேறுயார்? 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஒரு பெண் தந்தையில்லாத குழந்தையைப் பெற்றெடுப்பது எவ்வளவு பெரிய வலியும் சமூக அவமானமும் சட்ட விரோதமும். குழந்தை பிறந்த பின்பும் சரியாக 32 வருடங்கள் கார்ல் மார்க்ஸுடனும் ஜென்னியுடனும் நீங்கள் வாழ்ந்திருக்கறீர்கள் அன்னையே. அந்த நீண்ட காலப்பகுதியில் உங்களது குழந்தையின் தந்தையைக் கண்டுபிடிக்கவும்  சமூகத்திற்கு அறிவிக்கவும் ஏன் மார்க்ஸோ ஜென்னியோ முயற்சி செய்யவில்லை என்று கூட இவர்கள் சிந்தித்துப் பார்க்கமாட்டார்களா அன்னையே? தந்தையே இல்லாமல் குழந்தை பெற்றெடுக்க நீங்கள் என்ன கன்னி மரியாளா?

கீழேயும் சுட்டிகளில் சில சான்றாதாரங்களை வழங்கியிருக்கிறேன். ஆனால் இந்த  ‘விரலை விட்டுப் பார்க்கும் தோமஸ்கள்’ அதை ஏற்றுக்கொள்ளவா போகிறார்கள்! (உங்கள் காதலர் கூட அடிக்கடி விவிலியத்திலிருந்து உவமானங்கள் வழங்குவார் அல்லவா அன்னையே). இவர்கள் ஒன்று இப்படியே சைலண்டாவார்கள் அல்லது இவையெல்லாம் ‘முதலாளித்துவ சதி’ என்பார்கள். அவர்கள் கிடக்கட்டும்…. அன்னையே உண்மையான மார்க்ஸியவாதிகளின் மனதிலும் மாசற்ற காதலர்களின் ஆன்மாவிலும் நீங்கள் நீடூழி வாழ்ந்திருப்பீர்கள்.

வணக்கத்துடன்
ஷோபாசக்தி
09.03.2010

தொடுப்புகள்:

 

1.ஷீலா ரெளபாத்தம் (விக்கிபீடியா)
http://en.wikipedia.org/wiki/Sheila_Rowbotham

2.ஹெலன் டெமூத் (விக்கிபீடியா)
https://en.wikipedia.org/wiki/Helene_Demuth

3.அன்புள்ள டாக்டர் மார்க்ஸ்
https://jps.library.utoronto.ca/index.php/srv/article/view/5698

4.ஹெலன் டெமூத் குறித்த ஏங்கெல்ஸின் அறிக்கை:
http://www.marxists.org/archive/marx/bio/family/demuth/obitry.htm