நெடுங்குருதி: Behind the scene

கட்டுரைகள்

-ஷோபாசக்தி

வெலிகடைப் படுகொலைகளின் நினைவுநாள் முடிந்து, கந்தன் கருணைப் படுகொலைகளின் நினைவு நாளும் வரப்போகிறது. ஆனால் வெலிகடைச் சிறைப் படுகொலைகளின் இருபத்தைந்தாவது வருடத்தை நினைவு கூர்ந்து நாங்கள் பிரான்ஸில் நடத்திய ‘நெடுங்குருதி’ நிகழ்வின் மீதான அவதூறுகளும் சேறடிப்புகளும் இன்னும்தான் ஓயவில்லை. இம்மாத ‘தீராநதி’ இதழின் எதிர்வினைப் பகுதியில் அசோக் ‘நெடுங்குருதி’ நிகழ்வு மீதான உச்சக்கட்ட அவதூறுகளையும் தோழர் அ. மார்க்ஸின் மீதான தனது நீண்டகாலக் காழ்ப்புணர்வையும் கொட்டித் தீர்த்திருக்கிறார்.

நெடுங்குருதி நிகழ்வு குறித்து அவதூறுகளும் தவறான செய்திகளும் நிகழ்வுக்குப் பின்னால் ஊடகங்களால் போட்டி போட்டுக்கொண்டு பரப்பப்பட்டன. இந்த அவதூறு பரப்பும் போட்டியிலும் வழமைபோலவே ‘தேசம்’ இணையத்தளமே முதலாம் இடத்தைத் தட்டிச்சென்றது. அதுவரை அவதூறுகளின் ராஜாவாகயிருந்த ‘நிதர்சனம்.கொம்’ இணையத்தளத்தை ‘தேசம்’ இணையத்தளம் ‘ஓவர்டேக்’ செய்த திருப்புமுனைக் கட்டமாக இந்தக் காலகட்டத்தைச் சொல்லலாம்.

நெடுங்குருதி நிகழ்வு மீது இதுவரை வெளியான அவதூறுகளுக்குப் பதிலெழுத நாங்கள் முற்பட்டதில்லை. ஏனெனில் அந்த அவதூறுகளைப் படிப்பவர்களே அவற்றின் நம்பகமற்ற தன்மையை உணர்ந்து கொள்வார்கள் என்றொரு நம்பிக்கை எங்களுக்கிருந்தது. அந்தளவுக்கு அந்த அவதூறுகள் வலுவற்றவவையாக இருந்தன. பொய் சொல்லவும் ஒரு கெட்டிக்காரத்தனம் வேண்டும். அது அந்த அவதூறுகளை எழுதியவர்களிடமில்லை.

ஆனால் அந்தக் கெட்டிக்காரத்தனம் அசோக்கிடம் தேவைக்கு அதிகமாகவே கொட்டிக் கிடக்கிறது. ‘தீராநதி’யில் அவர் எழுதியிருக்கும் எதிர்வினையைப் படித்துப் பாருங்கள். புதுமைப்பித்தனின் நடையைத் தவளைப் பாய்ச்சல் நடை என்பார்கள். காஃப்காவின் நடை உடும்புப்பிடி நடை. அசோக்கின் நடையோ பாம்பு நடை. அடியும் இல்லாமல் நுனியுமில்லாமல் சென்ற தடமுமில்லாமல் போய் விஷத்தைக் கக்கும் நடையது. அவரின் எழுத்துகளில் சம்பவங்கள் குறித்த தரவுகள் முழுமையாயிருக்காது. இருந்தாலும் அவற்றுக்கு ஆதாரமிருக்காது. ஆனால் வெற்று வெளியிலேயே அவதூறுகளையும் அவற்றிலிருந்து குற்றச்சாட்டுகளையும் கட்டியெழுப்பும் தந்திரம் அவரின் எழுத்துகளில் ஒளிந்திருக்கும். மறைந்திருந்து தீண்டும் எழுத்து.

‘நெடுங்குருதி’ நிகழ்வு குறித்து இதுவரை எதுவும் அறிந்திராத ஒரு வாசகர் அசோக்கின் எதிர்வினையை வாசிக்கும்போது கீழ்வருமாறுதான் புரிந்து கொள்வார்:

பாரிஸில் எஸ். ராமகிருஷ்ணனின் ‘நெடுங்குருதி’ நாவல் விமர்சனக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நடந்த கருத்து விவாதம் சண்டையில் முடிய கூட்ட ஏற்பாட்டாளர்கள் எதிர்க் கருத்தாளர் ஒருவரைப் போட்டுத் தள்ளிவிட்டாரர்கள். கொலை விழுந்த பின்பும் கலை இலக்கிய விமர்சனத்தை அ. மார்க்ஸ் பிணத்தின் மீது ஏறிநின்று செய்திருக்கிறார். இந்த சனநாயக விரோதச் செயலுக்காக மார்க்ஸுக்கு ஷோபாசக்தி கும்பலிடமிருந்து பெரும் தொகை கை மாறியது. அதற்கு கைமாறாக மார்க்ஸ், ஷோபாசக்தியிடம் ஒரு நேர்காணலைப் பெற்று வந்து தீராநதிக்குத் தள்ளிவிட்டிருக்கிறார்.

இதற்கு மாறாக அந்த வாசகர் வாசிப்பதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவே. வேண்டுமென்றே ‘நெடுங்குருதி’ என்றால் என்னவென்ற குறைந்தபட்சத் தகவல்கூட இல்லாமல் தந்திரமாக எழுதப்பட்ட எதிர்வினை அசோக்குடையது. ‘மார்க்ஸ், ஷோபாசக்தி போன்றவர்களிடமிருந்து பொருளாதார ஆதாயங்களைத் தேடிக்கொள்வதும் இதன் முலம் ஷோபாசக்தி இலக்கிய ஆதாயம் தேட முயல்வதும் தனக்கு ஒரு பொருட்டேயல்ல’ என்று கூறிக்கொண்டே அந்தக் குற்றச்சாட்டுகளைப் போகிற போக்கில் விதைத்துச் செல்லும் ஓக்குமாக்கு எழுத்து அசோக்கினுடையது. அசோக்கின் எதிர்வினையிலுள்ள அவதூறுகளையும் தவறான தகவல்களையும் பார்ப்பதற்கு முன்னால் ‘நெடுங்குருதி’ நிகழ்வு குறித்தும் அது உருவாகிய விதம் குறித்தும் சுருக்கமாகச் சொல்லிச் செல்ல தோழர்கள் என்னை அனுமதிக்க வேண்டும்:

யூன் மாதத்தில் பாரிஸில் நடந்த தோழர். கலைச்செல்வனின் நினைவுநாள் நிகழ்வின் இடைவேளையின் போது ‘ஈரோஸ்’ குகன் யூலைப் படுகொலைகளின் இருபத்தைந்தாவது நினைவு நாளை ஒட்டி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யலாமா என்று எங்கள் சிலரிடம் ஆலோசனை கேட்டார். இலங்கையின் அரசியல் வரலாற்றிலும் ஈழப் போராட்டத்திலும் ஒரு மிகப் பெரிய மாற்றத்துக்கு காரணமான யூலைப் படுகொலைகள் குறித்த நிகழ்வை நடத்துவது மிகவும் முக்கியமானது என்றும் எங்களது முழு ஆதரவையும் அந்த நிகழ்வுக்கு வழங்குவதாகவும் நாங்கள் சொன்னோம். அன்று என்னோடும், சுகன், தேவதாசன், ராகவன், ஜென்னி போன்ற பலரோடும் குகன் இது குறித்து உரையாடினார்.

குகன் ‘ஈழப் புரட்சி அமைப்பில்’ (EROS) நீண்ட நாட்களாகவே இயங்கி வருபவர். பிரான்ஸில் அமைப்பின் முன்னணி செயற்பாட்டாளர் அவர்தான். ஈரோஸின் மறைந்த தலைவர்களான இரத்தினசபாபதி, சங்கர்ராஜி இருவரினதும் நினைவேந்தல் கூட்டங்களையும் தோழர். சி. புஸ்பராஜாவின் முதலாவது நினைவஞ்சலிக் கூட்டத்தையும் அவர்தான் பொறுப்பேற்று நடத்தினார். அந்த மூன்று கூட்டங்களிலும் பிரான்ஸ் மற்றும் அயல்நாடுகளிலிருந்து பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.

யூலைப் படுகொலைகள் நினைவு நிகழ்வுக்கு என்ன பெயர் வைப்பது, யாரை உரையாற்ற வைப்பது என எதுவுமே முடிவு செய்யப்படாத நேரத்தில் இந்த நிகழ்வு குறித்துப் பேச குகன் என்னை அழைத்தார். அந்தச் சந்திப்பில் தோழர்கள்: அழகிரி அந்தோனிப்பிள்ளை, ஜென்னி, சுகன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள். ‘நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஒரு ஏற்பாட்டுக் குழுவை அமைக்க வேண்டும்’ என்றார் ஜென்னி. பாரிஸ் மாற்றுக் கருத்தாளர்கள் குழுக்களாகப் பிரிந்து கிடப்பதால் ஏற்பாட்டுக் குழுவை அமைப்பது சிக்கலில் முடியும், எனவே எல்லோருக்கும் பொதுவானவரான, எல்லோருடைய நிகழ்ச்சிகளிலும் பங்கெடுக்கும் குகனே அமைப்பாளராயிருக்கட்டும் என்பது அனுபவசாலியான அழகிரித் தோழரின் வாதம். நீண்ட உரையாடலின் பின்பு குகனே நிகழ்ச்சியின் அமைப்பாளர் பொறுப்பை ஏற்றுக்கொள்வது எனவும் மற்றவர்கள் வெளியிலிருந்து தங்களால் முடிந்தளவு உதவிகளைச் செய்வது என்றும் முடிவாகியது. நிகழ்வுக்கு ‘நெடுங்குருதி’ என்ற பெயரும் அன்று முடிவு செய்யப்பட்டது. நிகழ்ச்சியை 27. 07. 2008 அன்று சார்சலில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. ‘நெடுங்குருதி’ நிகழ்வின் இறுதியில் ‘தமிழ்த் தேசியம்: எழுச்சியும் வீழ்ச்சியும்’ என்ற தலைப்பில் விரிவானதொரு கலந்துரையாடலும் நடத்த முடிவானது.

அடுத்து வந்த நாட்களில் குகன் தொலைபேசியும் கையுமாகச் சுழன்றுகொண்டிருந்தார். நிகழ்ச்சியில் வெலிகடைச் சிறைப் படுகொலைகளிலிருந்து தப்பி வந்தவர்களான தோழர்கள் அழகிரி, மு. நித்தியானந்தன், நிர்மலா ஆகியோரைப் பேச வைப்பதாக முடிவானது. அவர்களுடன் ரஞ்சித் ஏகநாயக்கா, ராஜேஸ் பாலா, எம். எஸ். எம் . பஷிர், எம். ஆர். ஸ்டாலின் ஆகியோர்களையும் உரையாற்றக் கேட்பதென குகன் முடிவெடுத்தார். ‘தேசம்’ சோதிலிங்கம் தானும் உரையாற்ற விரும்புதாகக் கேட்டதாகக் குகன் எங்களிடம் தெரிவித்தார். இந்தியாவிலிருந்து யாரையாவது அழைக்கலாமா என ஆலோசிக்கப்பட்டபோது நான், தேவதாஸ் போன்றவர்கள் அ.மார்க்ஸை அழைக்கலாம் என்று குகனுக்கு ஆலோசனை சொன்னோம்.

அ. மார்க்ஸ், ஈழப் போராட்டத்தை அதன் ஆரம்ப காலகட்டத்திலிருந்தே ஆழமாகக் கவனித்து வருபவர். ஈழப் போராட்டத்துக்கு ஆதரவான நிலையெடுத்ததால் எண்பதுகளின் மத்தியில் அவர் உறுப்பினராயிருந்த பொதுவுடமைக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர். எண்பதுகளில் PLOTE இயக்கத்தின் உட்படுகொலைகளிலிருந்து தப்பியோடியவர்களைத் தனது வீட்டில் மறைத்து வைத்து ஆதரவளித்தவர். தந்தை கே. டானியலோடு மிகவும் நெருக்கமான தோழர். ‘புலம்பெயர்ந்த தமிழர்கள் நல மாநாட்டை’த் தமிழகத்தில் முன்னின்று நடத்தியர்களில் ஒருவர். டானியலின் நாவல்களிலிருந்து புஸ்பராஜாவின் ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’ வரை ஈழத்தவர்களின் பல வெளியீடுகள் வெளிவர முன்னின்று உழைத்தவர். குறிப்பாகத் தமிழகத்துச் சிந்தனையாளர்களில் தமிழ்த் தேசிய அலைக்குள் சிக்கிக்கொள்ளாத மிகச் சிலரில் ஒருவர். அரசியல் – பண்பாட்டுத் தளங்களில் தனது இடையறாத எழுத்துகளின் மூலம் புதிய வெளிச்சங்களைப் பாய்ச்சி வருபவர். தலித் மக்களுக்காகவும் இசுலாமியரின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்பவர். எனவே அவரை அழைப்பது பொருத்தமாயிருக்கும் என்பது என்னைப் போன்றவர்களின் கருத்தாயிருந்தது.

தமிழகத்திலிருந்து வேறு யாரை அழைக்கலாம் எனத் தான் அசோக்கிடம் ஆலோசனை கேட்டதாகவும் அசோக் வெலிகடைப் படுகொலைகளிலிருந்து தப்பி இப்போது தமிழகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் டேவிட் அய்யாவை அழைப்பதற்கு தான் உதவுவதாகச் சொன்னதாகவும் குகன் எங்களிடம் தெரிவித்தார். பேச்சாளர்கள் வெளிநாடுகளிலிருந்து வரவிருந்ததால் விசா, விமானப் பயணச்சீட்டு எனப் பல சிக்கல்களால் பேச்சாளர்களின் இறுதிப் பட்டியல் முடிவாகமலேயிருந்தது.

என்னிடமும் அசோக்கிடமும் மட்டுமல்ல, பரவலாக எல்லோரிடமும் குகன் நிகழ்வுக்கு வேண்டிய ஆலோசனைகளைக் கோரியபடியே இருந்தார். ‘சமர்’ ரயாகரன் தனது ஆலோசனைகளை நீண்ட கட்டுரையாக எழுதிக் குகனுக்கு அனுப்பிவைத்தார். அவரின் அந்தக் கட்டுரை பின்பு ‘தமிழரங்கம்’ இணையத்தளத்திலும் வெளியாகியது. அ. மார்க்ஸை ‘ஸ்பொன்ஸர்’ செய்யும் பொறுப்பு தலித் சமூக மேம்பாட்டு முன்னணியிடம் கொடுக்கப்பட்டது. நிகழ்வு குறித்த முதல் அறிவித்தல் பரவலாக இணையத்தளங்களில் வெளியாகின. ‘உயிர்நிழல்’ இதழாளர்கள் ‘நெடுங்குருதி’ நிகழ்ச்சி அறிவித்தலைப் பெற்று அதைப் பரவலாக எல்லோருக்கும் அனுப்பி வைத்தார்கள். நெடுங்குருதி அழைப்பிதழை அசோக் ‘ஹியுமன் ரைட்ஸ் வோச்’ எனும் இணைய முகவரியிலிருந்து பரவலாக அனுப்பி வைத்திருப்பதாகக் குகன் என்னிடம் தெரிவித்தார். வழமை போலவே போஸ்டர்கள் எழுதும், ஒட்டும் டிப்பார்ட்மென்ட் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.

எல்லோருடைய பேராதரவுடனும் ‘நெடுங்குருதி’ பேரெழுச்சியாக நடைபெறும் என்ற தோற்றம் நிகழ்ச்சிக்கு முந்திய வியாழக்கிழமை வரை இருந்தது. அதாவது வியாழக்கிழமை வரைக்கும் குகன், ‘தோழர் குகனாகவும்’, ‘ஈரோஸ் குகனாகவும்’, ‘சார்சல் குகனாகவும்’, இலங்கையிலிருந்து அய்ரோப்பாவிற்கு வரும் தமிழ்க் கட்சித் தலைவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் மெய்ப்பாதுகாவலராகவும் மட்டுமே நமது மாற்றுக் கருத்தாளர்களுக்குக் காட்சியளித்தார். அப்போது அவர் ‘ரவுடி’ குகனல்ல.

வியாழன்று மாலையில் ‘குகனின் வர்த்தக நியைத்தில் இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்காகக் குகன் பொலிஸாரால் தேடப்படுவதாகவும் குகன் தலைமறைவாகிவிட்டதாகவும்’ எங்களுக்குச் செய்தி கிடைத்தது. அடுத்தநாள் வெள்ளிக்கிழமை குகனின் வாக்குமூலம் ‘தேசம்’ இணையத்தில் வெளியாகியது. அந்த வாக்குமூலத்தில் தனக்கும் துப்பாக்கிச் சூட்டுக்கும் எதுவித சம்மந்தமுமில்லை எனக் குகன் தெரிவித்திருந்தார். குகன் தொடர்ந்தும் தலைமறைவாகவேயிருந்தார். ஞாயிறு நடக்கவிருக்கும் ‘நெடுங்குருதி’ நிகழ்வில் குகன் கலந்துகொள்ள முடியாதென்று எங்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது.

ஞாயிறு நடக்கவிருப்பது தனிப்பட்ட குகனின் கலியாண வீடு, செத்தவீடு என்றால் அதில் கலந்து கொள்வது குறித்து நாங்கள் ஒன்றுக்கு நாலுதரம் சிந்தித்திருப்போம். ஆனால் நடக்கவிருந்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த யூலைப் படுகொலைகளின் நினைவுதினம். எனவே குகன் இல்லாத நிலையில் ‘நெடுங்குருதி’யின் பொறுப்பை நானும் தேவதாசும் எங்கள் கைகளில் எடுத்தோம். சுகன், அசுரா மற்றும் தோழர்கள் எங்களுடனிருந்தனர்.

‘நெடுங்குருதி’ நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்காக பெர்லினிலிருந்து ந. சுசீந்திரனும், ரஞ்சித் ஏக்கநாயக்கவும் ஏற்கனவே பாரிஸ் வந்திருந்தனர். வெள்ளிக்கிழமை மாலை நான் சுசீந்திரனையும் ‘உயிர்நிழல்’ லஷ்மியையும் சந்தித்து நிலமை குறித்து உரையாடினேன். அவர்களும் நிகழ்ச்சியை நடத்தியே தீரவேண்டும் என உறுதியாயிருந்தனர்.

சனிக்கிழமை காலையில் குகன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். மதியம் தேவதாஸின் வீட்டில் நானும், தேவதாசனும், அசுராவும், சுசீந்திரனும், ரஞ்சித் ஏக்கநாயக்கவும் கூடிப் பேச்சாளர்களின் இறுதிப்பட்டியலைத் தீர்மானித்தோம். ஏற்கனவே குகன் பேச்சாளர்களிடம் பேசி சம்மதம் பெற்றிருந்த நிலையில் பேச்சாளர்களின் பெயர்களை நிரல்படுத்தி அழைப்பிதழை வடிவமைப்பது மட்டுமே எங்களின் வேலையாயிருந்தது. அந்த அழைப்பிதழை இணையத்தளங்களிற்கு மாலையில் அனுப்பிவைத்தோம்.

மாலையில் அ. மார்க்ஸ் இந்தியாவிலிருந்து வந்து சேர்ந்தார். சற்று நேரம் கழித்து லண்டனிலிருந்து மு. நித்தியானந்தனும், நிர்மலாவும், ராகவனும், காண்டீபனும், ஜீவமுரளியும் தேவதாஸ் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். நிகழ்ச்சிக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு மு. நித்தியானந்தனிடம் கேட்டுக்கொண்டோம். அவரும் சம்மதித்தார். காலையில் பத்துமணிக்கு நேரே நிகழ்ச்சி நடக்கும் மண்டபத்திற்கு வருவதாகச் சொல்லிவிட்டு மு. நித்தியானந்தனும், சுசீந்திரனும், ரஞ்சித்தும் அங்கிருந்து இரவே புறப்பட்டுச் சென்றார்கள்.

அவர்கள் மூவரும் விடியற் காலையில் எங்கள் நெஞ்சில் இடிகளை இறக்கினார்கள். தங்களால் ‘நெடுங்குருதி’யில் கலந்துகொள்ள முடியாது எனத் தொலைபேசியில் சொன்னார்கள். ஆனால் அவர்கள் அசோக்கோ, தேசம் இணையத்தளத்தில் அருட்செல்வன் எழுதியது போலவோ துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தாலேயே தாங்கள் நிகழ்வில் கலந்துகொள்ளப் போவதில்லை எனத் தெரிவிக்கவில்லை. துப்பாக்கிச் சூடு குறித்துக் கேள்விப்பட்ட, வாசித்த பின்புதான் அவர்கள் பாரிஸுக்கு வந்து தேவதாசனின் வீடுவரையும் வந்து சென்றார்கள். நிகழ்வில் எம்.ஆர். ஸ்டாலின் உரையாற்றவிருப்பதைத் தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் ஸ்டாலினின் அரசியலோடு தங்களுக்கு உடன்பாடு இல்லாததால் தங்களால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாது என்றும் அவர்கள் சொன்னார்கள்.

“மாறுபட்ட கருத்துகளை வரவேற்பதும் விவாதிப்பதும்தானே எமது பண்பு, நாம் எவருடன் உரையாடத் தயாராயிருக்க வேண்டும்” என்றெல்லாம் தேவதாசனும், ராகவனும் தொலைபேசியில் அவர்களுடன் நீண்ட நேரமாக விவாதித்தார்கள். ஏலாக் கட்டத்தில் நிர்மலா அக்கா இங்கிலிஸிலும் விவாதித்துப் பார்த்தார். நேரம் காலை ஒன்பது மணியானதுதான் மிச்சமேயொழிய விவாதம் முடிவதாகத் தெரியவில்லை. நாங்கள் மண்டபத்திற்கு புறப்பட வேண்டிய நேரம் நெருங்கியது. தலைமை தாங்கவிருந்த மு. நித்தியானந்தன் வராத காரணத்தால் ராகவன் முன்வந்து தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

அன்றைய காலை பத்து மணியை நினைத்துப் பார்க்கிறேன்; அதுவொரு கடும் ‘ரென்ஸனான’ தருணம். நிகழ்வு பத்து மணிக்கு ஆரம்பிக்கும் என நாங்கள் அறிவித்திருந்த போதும், நூற்றுக்கணக்கான போஸ்டர்கள் ஒட்டியிருந்தபோதும் மண்டபத்தில் பத்து மணியளவில் பத்துப் பேர்களே இருந்தோம்.

நடந்த துப்பாக்கிச் சூடு குறித்துப் பலவிதமான வதந்திகள் நகரத்தில் ஏற்கனவே புழக்கத்திலிருந்தன. ‘நெடுங்குருதி’ ஏற்பாட்டளர்களுக்கும் புலிகளுக்குமிடையில் துப்பாக்கிச் சண்டை, நிகழ்வு நடக்காது, நடந்தாலும் துப்பாக்கிச் சண்டை நிகழும், பிரஞ்சு உளவுத் துறையினர் நிகழ்ச்சியைக் கண்காணிப்பார்கள் என்றெல்லாம் வதந்திகளும் ஊகங்களும் பரப்பப்பட்டிருந்தன. போதாதற்கு அன்றைய தினம் ‘நெடுங்குருதி’ நிகழ்ச்சி நடைபெற்ற மண்டபத்துக்கு அருகிலேயே புலிகளும் யூலைப் படுகொலைகள் குறித்த ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

மதியம் பன்னிரெண்டு மணிக்கு முப்பது பேர்களோடு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. நிகழ்வு எவ்வித இடைஞ்சலும் இல்லாமல் காத்திரமாககவும் பொறுப்புணர்வோடும் நடைபெற்றது. நிகழ்ச்சி முடியும் தறுவாயில் அய்ம்பத்தைந்து பேர்கள் மண்டபத்திலிருந்தார்கள். மாலை 6 மணியளவில் நிகழ்வு முடியலாயிற்று.

***
மறுபடியும் அசோக்கின் எதிர்வினைக்கே வருவோம். இந்த இடத்தில் அசோக்கைப் போலவே பாம்பு நடையை நானும் கைக்கொள்வது சரியாகாது. புகலிட இலக்கிய அரசியலில் அதிகப் பரிச்சயம் இல்லாத வாசகர்களிற்காக அசோக்கை முதலில் அறிமுகப்படுத்திவிடுகிறேன்:

துரதிர்ஷ்டவசமாக ஒரு இலக்கிப் பிரதியை முன்வைத்தோ, அல்லது ஒரு காத்திரமான கட்டுரைப் பிரதியை முன்வைத்தோ அவரை அறிமுகப்படுத்தி வைக்கும் வாய்ப்பை எனக்கு அவர் வழங்கவில்லை. மரியசீலன், கருணைதாசன் போன்ற பெயர்களில் ‘தேனி’ இணையத்தளத்திலும் ‘தீப்பொறி’ இணையத்தளத்திலும் அவதூறுக் கட்டுரைகளை எழுதியவர் அசோக்தான் என்றொரு பேச்சு புகலிட இலக்கிய வட்டாரங்களில் உண்டு. இதை உறுதி செய்வதற்கு நம்மிடம் போதிய ஆதாரங்கள் கிடையாது எனினும் அந்த அவதூறுக் கட்டுரைகளின் பாம்பு மொழிநடை மற்றும் அந்தக் கட்டுரைகளில் M.R.ஸ்டாலினையும், என்னையும், தலித் முன்னணியையும் குறிவைத்துத் தாங்கிய பாங்கு ஆகியவற்றை அவதானிக்கையில் அந்த மொட்டைக் கட்டுரைகளை எழுதியவர் அசோக் என்றுதான் கருத இடமிருக்கிறது. இந்த விடயத்தில் ‘தேனி’ ஆசிரியரோ ‘தீப்பொறி’ ஆசிரியரோ தலையிட்டு உண்மையை வெளியிட்டால் அவர்களுக்குப் புண்ணியமாய்ப் போகும்.

இதைத் தவிர தந்தை பெரியாரைத் தலித் விரோதியென்றும், முசுலீம் விரோதியென்றும் கடுமையாக அவதூறு செய்து அசோக் கட்டுரையொன்றை ‘உயிர் நிழலில்’ எழுதியிருக்கிறார். பெரியாரை தலித் விரோதியாகவும் முசுலீம் விரோதியாகவும் சித்திரித்த அயோக்கியத்தனத்தில் அசோக் ‘காலச்சுவடு’க்கே முன்னோடி என்பதும் கவனிக்கப்பட வேண்டியது. அசோக் அந்தக் கட்டுரையை ‘ஸ்ருட்கார்ட்’ இலக்கியச் சந்திப்பில் வாசித்தபோது மனம் நெக்குருகி நா. கண்ணன் அய்யங்கார் ஆனந்தக் கண்ணீர் சொரிந்ததும் நாங்கள் அந்தக் கட்டுரையை எதிர்த்துக் கடுமையாகப் பேசியதும் சில வருடங்களிற்கு முன்பு நடந்த சம்பவங்கள். அசோக்கின் கட்டுரையைக் கடுமையாகக் கண்டித்து தோழர். எஸ்.வி. ராஜதுரையும் உயிர்நிழலில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.

பின்வந்த நாட்களில் “நாங்களும் பேசுவோம்ல தலித்தியம்” என்ற ரீதியில் அசோக் சில அழும்புகளைச் செய்தார். அவரும் இன்னுஞ் சிலரும் சேர்ந்து நடத்திய டானியல் நினைவு தினக் கூட்டத்தில் தலித் இலக்கியத்தின் முன்னோடி டானியலை ‘பஞ்சமரிய இலக்கியவாதி’ எனக் குறிப்பிட்டு விளம்பரங்களை வெளியிட்டார்கள். அவ்வாறே கூட்டத்தில் பேனரும் கட்டினார்கள். ‘பஞ்சமர்’ என்பது இந்துமதக் கறை படிந்த இழிவுச் சொல். அதை மறுத்தே தலித் மக்கள் ‘தலித்’ என்ற அடையாளத்தை ஏற்றிருக்கிறார்கள் என்று நாங்கள் திரும்பத் திரும்பச் சொல்லி வருவதொல்லாம் அவர்களுக்கு உறைப்பதாகத் தெரியவில்லை. ‘தலித்’ என்ற சொல்லை உச்சரிக்கக் கூட அவர்களது நா கூசுகிறது போலும். அதாவது எங்களுக்குத் தலித் இலக்கியம் எனப்படுவது அவர்களிற்குப் பஞ்சமரிய இலக்கியமாம். இது ‘கண்டாக் கட்டாடி, காணாட்டி வண்ணான்’ வகையை ஒத்த கொழுப்பு அல்லாமல் வேறென்ன? இதை எதிர்த்து அந்தக் கூட்டத்திலேயே சுகனும், அருந்ததியும் கடுமையாகப் பேசினார்கள்.

இவற்றைத் தவிர, கலை பண்பாட்டுத் தளங்களில் இயங்குபவர்களின் நேர்மையையும் ஒழுக்கத்தையும் கண்காணிக்கும் இலக்கிய அறத்துறை டிப்பார்ட்மென்டும் அசோக் வசம் தானுள்ளது. அ. மார்க்ஸ் தொடக்கம் வி.சிவலிங்கம் வரைக்கும் திறந்த மடல்களை வரைந்து அவர்களை நீதி வழுவாமல் காக்கும் பாரத்தையும் இவர் தனியாளாகச் சுமக்கிறார். இலக்கியவாதிகளைச் சதா கண்காணிக்கும் புகலிட இலக்கிய உளவுத்துறையும் இவர் வசமேயுள்ளது. சுருக்கிச் சொன்னால் இவரைப் புகலிட இலக்கியத் துறையின் கமிஷார் எனச் சொல்லலாம். இத்துடன் அறிமுகத்தை முடித்துக்கொள்வோம்.

‘தீராநதி’ இதழில் இன்றெமக்கு வேண்டியது சமாதானமே என்ற தலைப்பில் அ. மார்க்ஸும் நானும் நடத்திய உரையாடலில் யூலைப் படுகொலைகள், அரச பயங்கரவாதம், யுத்தம், பேச்சுவார்த்தை, புலிகள், கிழக்கின் சுயநிர்ணயம் என நாங்கள் பல திசைகளிலும் உரையாடியிருந்தோம். அந்த உரையடலில் கிழக்கின் சுயநிர்ணயம் குறித்து நான் பேசிய கருத்துகள் நிச்சயமாக அசோக்குக்கு ஏற்புடையதாயிருக்காது. வேறு பல புள்ளிகளிலும் அவருக்கு மாற்றுக் கருத்திருக்கலாம். ஏன் மொத்த உரையாடலுமே லூசுத்தனமாக அவருக்குத் தெரிந்திருக்கலாம். அவை குறித்து அவர் தனது எதிர்வினையை எழுதியிருந்தாரென்றால் அதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் அந்த உரையாடலின் ஒரு புள்ளியை, கமாவைக் கூட விமர்சிக்காத அசோக் “நீ ஏன் நெடுங்குருதியில் கலந்து கொண்டாய்” என அ. மார்க்ஸை நோக்கி ஒன்றரைப் பக்கத்திற்கு ஒரேயொரு கேள்வியைக் கேட்டிருந்தார். பசு மாட்டைப் பற்றி எழுதச் சொன்னால் தென்னைமரத்தைப் பற்றி எழுதிய தேய்ந்துபோன பகடித் துணுக்கு ஒன்று இந்த இடத்தில் உங்கள் ஞாபகத்தில் வந்து உங்களைத் தொந்தரவு செய்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. அசோக்கே பொறுப்பு.

நடந்து முடிந்த ‘நெடுங்குருதி’ நிகழ்வு குறித்த நமது கருத்து ஒன்றுதான். யூலைப் படுகொலைகளை நினைவு கூர்ந்து புகலிட நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளை இலங்கை அரசு கசப்புடனேயே கவனித்து வருகிறது. தனது தூதுவராலயங்கள் மூலம் அது இப்படியான நிகழ்வுகளுக்கு இடைஞ்சல் செய்து வருகிறது. மறுபுறத்தில் ஈழப் போராட்டத்தை மட்டுமல்லாமல் இப்படியான நிகழ்வுகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே விடுதலைப் புலிகள் விரும்புகிறார்கள். குறிப்பாக நம்மைப் போலப் புலிகளைக் கடுமையாக விமர்சிப்பவர்கள் இவ்வாறான கூட்டங்களை நடத்துவதையும் அதில் புலிகள் அமைப்பின் முன்னாள் பிரபலங்களான நிர்மலா, ராகவன், நித்தியானந்தன் போன்றவர்கள் முன்நிலைப்படுத்தப்படுவதையும் புலிகள் விரும்பவே மாட்டார்கள். இந்தச் சூழலில் நெடுங்குருதி நிகழ்வை நடத்துவது மாற்றுக் கருத்து அரசியலுக்கு வலுச் சேர்க்கும் என்றே நினைத்தோம். அத்தகைய நிகழ்வை பேரினவாத இலங்கை அரசுக்கு எதிரான கண்டனமாக மட்டுமல்லாமல், புலிகளின் ‘ஏகபிரதிநிதி’த்துவ அரசியலைக் கேள்விக்குள்ளாக்கும் ஓர் எதிர்ப்பு அரசியற் செயற்பாடாகவும் நாங்கள் கருதுகிறோம்.

‘நெடுங்குருதி’ நிகழ்வின் அமைப்பாளராக இருந்தவரின் கடையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கோ அவரின் தனிப்பட்ட தவறுக்கோ, குற்றத்துக்கோ நாங்கள் ஒருபோதும் பொறுப்பாளிகள் ஆக முடியாது. அவர் கைது செய்யப்பட்டதற்காக ‘நெடுங்குருதி’ நிகழ்வை நிறுத்துவதற்கும் நான்கு நாட்கள் முன்புவரை டேவிட் அய்யாவைக் கூப்பிட்டுத் தருகிறோம், நிகழ்வுக்குத் தேவையான உதவிகளைச் செய்கிறோம் என இனிக்க இனிக்கப் பேசிவிட்டு ஒரு சூடு விழுந்ததும் கல்லெறிபட்ட காக்காய் கூட்டம் போல சிதறி ஓடுவதற்கும் நாங்கள் கோழைகளல்ல.

நாங்கள் நிச்சயமாகவே அந்தத் துப்பாக்கிச் சூட்டைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். நெடுங்குருதி நிகழ்வின் ஆரம்பத்தில் தலைமையுரையில் ராகவன் குகன் கைதுசெய்யப்பட்டதைக் குறிப்பிட்டே நிகழ்வைத் தொடங்கினார். ஒட்டுமொத்த ஆயுதக் கலாச்சாரத்தையே அன்று முழுவதும் பேச்சாளர்கள் கண்டித்துப் பேசியவாறேயிருந்தார்கள். நெடுங்குருதி நிகழ்வில் கலந்துகொண்ட யாராவது இவற்றை மறுக்க முடியமா?

அந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையோ அல்லது வேறெந்தக் கொலையையாவது நாங்கள் எப்போதாவது ஆதரித்துப் பேசினோமா? புலிகள் செய்யும் கொலைகளை மட்டுமல்லாமல் EPDPயின் கொலைகளையும் TMVP யின் கொலைகளையும் இன்னும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களான ஜோசப் பரராசசிங்கமும் சிவநேசனும் கொல்லப்பட்டதையும் கண்டித்துப் பேசிய வரலாறு எங்களுடையது. சந்தேகமிருந்தால் பஞ்சியைப் பாராமல் ‘சத்தியக் கடதாசி’யின் பக்கங்களைத் தட்டிப் பாருங்கள். புலிகளின் கொலைகளை நியாயப்படுத்திக்கொண்டு அரசின் கொலைகளைக் கண்டிப்பது, அல்லது இராணுவத்தினரின் EPDPயின், PLOTEன், TMVPயின் கொலைகளை நியாயப்படுத்திக்கொண்டு புலிகள் செய்யும் கொலைகளைக் கண்டிப்பது போன்ற தகிடுதத்த அரசியல் நமக்குச் சுட்டுப்போட்டலும் வராது. பின் எதற்காக எங்களுக்கு ‘நெடுங்குருதியை’ முன்வைத்து வன்முறையாளர்கள் பட்டம்? தோழர்கள் சிந்திக்க வேண்டும்.

அசோக் தீராநதியில் எப்படி அடிக்கிறார் என்று கவனியுங்கள்: “பாரிஸில் நெடுங்குருதி ஏற்பாட்டாளர்கள் தொடர்பான வன்முறை நிகழ்வு குறித்துத் தாங்கள் இப்போது அறிந்தே இருப்பீர்கள்.” என்று அவர் எழுதுகிறார். கவனிக்கவும்: ‘ஏற்பாட்டாளர்’ அல்ல. எற்பாட்டாளர்கள் என்று பன்மை விகுதியே இங்கே உபயோகிக்கப்பட்டிருக்கிறது. இது அந்த வன்முறைச் சம்பவத்தில் மற்றவர்களையும் கோர்த்து விடும் அற்பத்தனம்தானே! வன்முறையில் சம்மந்தப்பட்டவர் குகன். அதுசரி! அப்போ யார் அந்த ‘கள்’? அசோக் சொல்ல வேண்டும், அவர்களுக்கும் இந்த வன்முறை நிகழ்வுக்கும் என்ன தொடர்பு என ஆதாரத்துடன் நிரூபிகக வேண்டும் என்றெல்லாம் கேட்பதற்கு நான் முட்டாளல்ல. ஏனென்றால் அவரிடமிருந்து ஓர் நேர்மையான பதிலையோ, நறுக்கான சொல்லையோ எதிர்பார்க்க நான் ஏமாளியல்ல.

அவர் தன்னை நாங்கள் ஆள் வைத்ததுத் தாக்கிவிட்டோம் எனக் கொஞ்சக் காலமாக அனுதாப அரசியல் செய்துகொண்டு திரிந்தார். அது பச்சை அவதூறு எனக் கடுமையாகச் சாடிய சுகன் நிரூபிக்க முடியுமா எனக் கேட்டுச் சிலிர்த்தவுடன் அந்த அவதூறுப் புயல் இன்றுவரை வாயை மூடிக்கொண்டு பம்மித் திரிகிறது. இந்த ‘கள்’ பிரச்சினை கூட அச்சுப்பிழை என்று சொல்லிவிட்டு அசோக் தப்பிச் செல்கிறாரா இல்லையா என இருந்து பாருங்கள். இது நடக்கத்தான் போகிறது.

தனது எதிர்வினையில் “கொலை அரசியலுக்கு நீங்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறீர்கள்” என அசோக் நேரடியாகவே அ. மார்க்ஸை குற்றம் சாட்டுகிறார். குகனின் கடையில் நடந்த அந்தச் சம்பத்திற்கு எந்த அரசியற் பின்னணியும் கிடையாது. தனிப்பட்ட காரணங்களால் நடந்த சண்டையது. அதற்குக் அரசியல் சாயம் பூசும் அசோக்கின் கபடத்தனத்தை என்ன செய்வது. ஒரு வேளை அசோக் ஆழமாகப் போய் “ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னும் வர்க்கம் ஒளிந்திருக்கிறது, ஒவ்வொரு செயலுக்குப் பின்னும் அரசியல் ஒளிந்திருக்கிறது” என்று லெனின் ரேஞ்சுக்கு யோசிக்கிறாரோ தெரியவில்லை. அட வெங்காயமே அப்படிப் பாத்தாலும் அந்தச் சம்பவத்திற்கும் யூலைப் படுகொலைகளை நினைவுகூரும் நிகழ்வில் அ. மார்க்ஸ் தேசிய இனங்களின் போராட்டங்கள் குறித்துப் பேசியதற்கும் என்ன தொடர்பு? இது எப்படி கொலை அரசியலுக்கு ஆதரவாய் இருக்க முடியும்? காழ்ப்புணர்வு கண்ணை மறைக்கும்போது உண்மைக்கு மட்டுமல்ல தருக்கத்துக்கும் அங்கே வேலையில்லை என்பதை அசோக் மறுபடியும் மறுபடியும் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்.

அ. மார்க்ஸ் மீதான அசோக்கின் காழ்ப்புணர்வு இன்று நேற்றுத் தொடங்கியதல்ல. அதற்குப் பத்து வருட வரலாறு இருக்கிறது. 1998ல் ‘அம்மா’ இதழில் ‘துடைப்பான்’ என்ற பெயரில் ஒரு புகார் கட்டுரை வெளிவந்தது. அசோக்கின் அறிந்த மற்றும் அறியப்படாத பல புனைபெயர்களில் ‘துடைப்பான்’ என்பதும் ஒன்று. அந்தக் கட்டுரையில் அசோக், அ.மார்க்ஸை அந்தோனிசாமி மார்க்ஸ் என விரித்தெழுதி அ. மார்க்ஸ் மீது வலிந்து ஒரு கிறிஸ்தவச் சாயத்தை ஏற்றியும், தன்னார்வக் குழு அது இதுவென்றெல்லாம் ஆதாரமற்ற அவதூறுகளையும் அள்ளி எறிந்திருந்தார்.

அடுத்த அம்மா இதழில் அ.மார்க்ஸ் இவ்வாறு எழுதினார்:

“துடைப்பான் என்பவர் எழுதியுள்ள (அம்மா-8) கட்டுரை தன்னார்வக் குழுக்களால் இயக்கப்படுபவர்களாக எங்களைச் சித்திரிப்பது மிகவும் வருத்தத்திற்குரியது. இதை எழுதியுள்ள துடைப்பானும் இதை வெளியிட்ட ‘அம்மா’வும் இதை நிறுவுவதே நேர்மையான காரியமாக இருக்க முடியும். துடைப்பானின் கட்டுரையில் நான் அந்தோனிசாமி மார்க்ஸ் எனக் குறிப்பிடப்பட்டுள்ளேன். எழுத்துத் துறையிலோ இல்லை வேறெந்தத் துறையிலோ நான் அவ்வாறு அறியப்பட்டவனல்ல. இவ்வாறு தலைப்பெழுத்தை விரித்தெழுதுவது எங்கள் மரபுமல்ல. மேலும் துடைப்பானோ இல்லை ‘அம்மா’வோ பிற எழுத்தாளர்களைக் குறிப்பிடும்போது (எஸ்.வி.ராஜதுரை, கோ. கேசவன் ) அவ்வாறு தலைப்பெழுத்தை விரித்து எழுதுவதுமில்லை. எனது பெயரை மட்டும் இவ்வாறு குறிப்பிடுவதின் உள்நோக்கம் என்ன? எனது விருப்பம் அதுவல்ல என்பதும் பலமுறை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் அவ்வாறு குறிப்பிடுவதென்பது ‘அம்மா’ என்மீது பகையுணர்வு கொண்டுள்ளதையே காட்டுகிறது.”

அ.மார்க்ஸின் இந்த மறுப்புக்கு அசோக்கிடமிருந்து எதுவித பொறுப்பான பதிலோ, வருத்தமோ இதுவரை வெளிவரவில்லை. இனியும் வராது. விஷத்தைக் கக்கியவுடன் சட்டையைக் கழற்றிவிட்டு ஓசையின்றி நழுவித்தானே பாம்புக்குப் பழக்கம். தன்னார்வக் குழுக் குற்றச்சாட்டெல்லாம் நிரூபிக்கப்படாமல் தேங்கிப் போய் பத்து வருடமாய் அப்படியே கிடக்கிறது.

கருத்துகளுக்குக் கருத்துகளாலேயே பதில் சொல்ல வக்கற்றவர்கள் எதிராளி மீது அவதூறுகளைக் கொட்டி அழித்துவிட நினைக்கும் சம்பவங்கள் உலகத்துக்கு ஒன்றும் புதிதல்ல. அந்த அவதூறுகளில் பாலியல் முறைகேடுக் குற்றச்சாட்டும், பணம் குறித்த குற்றச்சாட்டுமே முதன்மையாக எதிராளி மீது ஏவப்படும். வாலியை இராமன் மறைந்திருந்து அடித்த புராண காலத்திலிருந்தே இதுதான் ஃபோர்முலா.

அ. மார்க்ஸ் சற்று வயதானவரென்ற காரணத்தால் அவர் பாலியல் குற்றச்சாட்டிலிருந்து அசோக்கிடம் தப்பித்திருக்கலாம். ஆனால் நிதிக் குற்றச்சாட்டில் ‘மாட்டிக்கொண்டார்’. அசோக் தனது எதிர்வினையில் இவ்வாறு எழுதுகிறார்:

“ஷோபாசக்தி போன்றவர்களுடனான தங்களது உறவு அரசியல் ரீதியிலானது என்பதை விடவும் அதிகமும் தனிப்பட்ட ரீதியானது என்பதை நான் அறிந்தே இருக்கிறேன்.அது எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. பரஸ்பரம் அதற்கான பொருளாதார இலக்கியத் தேவைகள் உங்களுக்குள் இருக்கலாம்.”

அ. மார்க்ஸ் பொருளாதாரத் தேவைகளுக்காக எங்களுடன் பழகுகிறார் என்று எந்த அடிப்படையில், ஆதாரத்தில் அசோக் இப்படியானதொரு அயோக்கியத்தனமான குற்றச்சாட்டைக் கூசாமல் சொல்கிறார்? ஒரு மனிதருடைய முப்பதாண்டுகால அரசியல் – இலக்கிப் பணியையும் நூறு புத்தகங்கள் எழுதிய சிந்தனை உழைப்பையும் வெறும் லஞ்சக் குற்றச்சாட்டில் அசோக் முடக்கிவிட நினைப்பது எது சார்ந்த அறம்?

அசோக் தனது எதிர்வினையில் குறிப்பிட்டிருப்பது போல அ. மார்க்ஸ், சுகனின் தொகுப்புக்கு மட்டுமே முன்னுரை எழுதவில்லை. இப்போது அசோக்கின் இணையத்தளத்தில் தொடர்ச்சியாகக் கட்டுரைகளை எழுதிவரும் சபா. நாவலன் எழுதி அண்மையில் ‘தேசம்’ வெளியீடாக வெளிவந்த ‘இலங்கை இனப் பிரச்சினையில் ஏகாதிபத்தியங்களின் சதி’ என்ற நூலுக்கும் முன்னுரையை நாவலன் அ.மார்க்ஸிடமே கேட்டுப் பெற்றார். அந்த நூலை அச்சிடுவதற்கும் மார்க்ஸே துணை நின்றார். இதற்காக எவ்வளவு பணத்தை நாவலனிடம் மார்க்ஸ் பெற்றுக்கொண்டார் என்பதை அசோக் நாவலனிடம் கேட்டுச் சொல்லட்டும். தேசம் குழுவினரால் வெளியிடப்படும் ‘இன்மை’ சஞ்சிகையில் த. ஜெயபாலன், சேனன் ஆகியவர்களோடு அ.மார்க்ஸும் ஆசிரியர் குழுவில் இருக்கிறார். இதற்காக அவர் ‘தேசம்’ நண்பர்களிடம் எவ்வளவு பணம் வாங்கினார் என்பதை அசோக் ‘தேசம்’ நண்பர்களிடம் கேட்டுச் சொல்லட்டும். அ.மார்க்ஸ் பணத்திற்காக தனது அரசியலையும் எழுத்தையும் விற்பவரா? என அவர்கள் சொல்லட்டும்! எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டை அ.மார்க்ஸ் மீது சுமத்தினார் என்பதை அசோக் எமக்கு விளக்க வேண்டும். அதைச் செய்ய வக்கில்லாவிட்டால் அசோக் இந்தக் குற்றச்சாடடைச் சுமத்தியதற்காகப் பகிரங்க வருத்தம் தெரிவிக்க வேண்டும். இவற்றில் ஏதாவது ஒன்றைச் செய்யாமல் கையில் பேனாவை எடுத்து அசோக் இன்னும் ஒரே ஒரு வரி எழுதுவதும் ஒன்றுதான் அவர் தன்னைத்தானே செருப்பாலே அடித்துக்கொள்வதும் ஒன்றுதான்

சோதிலிங்கம் ‘நெடுங்குருதி’ நிகழ்வில் கலந்துகொள்ளாமல் ஜனநாயகத்தைக் காப்பாற்றிவிட்டார் என்றொரு பாராட்டையையும் அசோக் தனது எதிர்வினையில் வழங்கியிருக்கிறார். சோதிலிங்கம் குறித்தும் ஒரு மினி அறிமுகத்தைச் செய்துவைக்க என்னை அனுமதியுங்கள்: சோதிலிங்கம் ‘தேசம்’ ஆசிரியர் குழுவில் ஒருவர். செல்வம் அடைக்கலநாதனை அவர் நேர்காணல் செய்து தேசத்தில் வெளியாகிய உரையாடல் முக்கியமானது.

பல கொலைகளுக்குப் பொறுப்பாளியும், புலிகளின் பாஸிசச் செயற்பாடுகளை இன்று உலகம் முழுவதும் சென்று நியாயப்படுத்துபவரும், TELO இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனைச் சந்திப்பதும் உரையாடுவதும் ஜனநாயக எல்லைகளுக்கு உட்பட்டது, ஆனால் நான்கு நாட்களுக்கு முன்பே அமைப்பாளர் தலைமறைவாகிவிட மற்றைய சமூக அக்கறையாளர்கள் தமது கைகளிலே பொறுப்பெடுத்து நடத்திய யூலைப் படுகொலைகளுக்கு எதிரான நெடுங்குருதி நிகழ்வில் கலந்துகொள்வது, அங்கு வந்து தனது கருத்துக்களையோ, வாதங்களையோ, கண்டனங்களையோ வைப்பது போன்றவை நண்பர் சோதிலிங்கத்துக்கு ஜனநாயக விரோதச் செயற்பாடாகத் தெரிகிறது. ஜனநாயத்திற்கான சோதிலிங்கத்தின் வரைவிலக்கணம் நம்மை அயர வைக்கிறது. எம்.ஜி. ஆரின் ‘அண்ணாயிசம்’ மாதிரி இதுவொரு புதுமாதிரியான ‘ஜனநாயகயிஸம்.’

அசோக் தனது எதிர்வினையில் “பெரும்பாலுமான அரசியலறிந்த ஈழத்தமிழர்கள் வன்முறைக்கு எதிராக இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்த வேளையில் நீங்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு நேபாளப் புரட்சி பற்றியும் ஜனநாயகம் பற்றியும் பேசியிருக்கிறீர்கள்” என்றும் எழுதுகிறார். பொதுவாகவே பாரிஸில் நம்மைப் போன்ற மாற்றுக் கருத்தாளர்கள் நடத்தக்கூடிய கூட்டங்களிற்கு குறைந்த பட்சம் இருபது பேரிலிருந்து அதிகபட்சம் எண்பதுபேர்கள் வரை வருவார்கள். தலித் மாநாடு என்றாலும் சரி இலக்கியச் சந்திப்பென்றாலும் சரி கிட்டத்தட்ட இதுதான் கணக்கு. நெடுங்குருதி நிகழ்வில் அய்ம்பத்தைந்து பேர்கள் கலந்துகொண்டார்கள். சராசரிக்கும் அதிகமானோர் கலந்துகொண்டார்கள் என்று சொல்லி ஆறுதலைடவதற்காக நான் இந்தப் புள்ளிவிபரங்களை இங்கே தரவில்லை. நாங்கள் என்ன சினிமா ஸ்டார்களை அழைத்து ஷோவா நடத்தினோம் கணக்குப் பார்க்கவும் கலக்ஸன் எண்ணவும்? பத்துப் பேர்களுடன் இலக்கியக் கூட்டத்தைச் சிறப்பாகவும் நிறைவாகவும் திருப்தியாகவும் கொண்டாட்டமாகவும் நடத்திய அனுபவமெல்லாம் எங்களுக்கிருக்கிறது. ஆனால் விழுந்த பாட்டிற்கு குறி சுடும் அசோக்கின் சின்னத்தனத்தை தோலுரிக்கவே இவற்றையெல்லாம் குறிப்பிட வேண்டியிருக்கிறது.

அசோக் நாங்கள் நடத்தும் கூட்டங்களைத் தொடர்ச்சியாகவே புறக்கணித்துத்தான் வருகிறார். தவிரவும் தோழர்கள். புஸ்பராஜா, கலைச்செல்வன் ஆகியோரின் நினைவுநாள் கூட்டங்களையும் புறக்கணித்தவர் அவர். எனவே அவர் ‘நெடுங்குருதி’ நிகழ்வைப் புறக்கணித்ததில் ஆச்சரியங்கள் ஏதுமில்லை. வேண்டுமானால் அவரோடு சேர்ந்து அவரது ‘கோளயாக்கள்’ இரண்டுபேர் நிகழ்வைப் புறக்கணித்திருக்கக் கூடும். இதைத் தவிர வன்முறையை எதிர்ப்பதாகச் சொல்லி ‘நெடுங்குருதி’ நிகழ்வைப் புறக்கணித்த பாரிஸ்வாழ் அரசியலறிந்த ஈழத் தமிழர்கள் யார்? அசோக் பெயர்களைக் குறிப்பிடுவரா? நெடுங்குருதி நிகழ்வை நடத்தியவர்கள் வன்முறையாளர்கள், எனவே அவர்கள் நடத்திய கூட்டத்தை ஜனநாயகவாதிகள் புறக்கணித்தார்கள் என்றொரு கோணங்கிக் கதை சொல்லவே அசோக் முயற்சிக்கிறார். அப்படியானால் கூட்டத்தில் கலந்துகொண்ட அய்ம்பத்தைந்து பேரும் வன்முறையின் ஆதாரவாளர்களா? இருபது, முப்பது வருடங்களாக உயிரைப் பயணம் வைத்துக் கருத்துச் சுதந்திரத்திற்காகவும் சனநாயகத்திற்காகவும் குரல் கொடுத்தும் போராடியும் வரும் அவர்களை ஒரே வார்த்தையில் வன்முறையின் ஆதரவாளர்களாகச் சித்திரித்துத் தோசையைத் திருப்பிப்போடுகையில் அசோக்கிற்கு மனச்சாட்சி கொஞ்சமேனும் உறுத்தவில்லையா? அடுத்துக் கெடுப்பதென்பது இதுதானா! காட்டிக் கொடுப்பதென்பது இதைத்தானா!!

அரசியல் மோதல்கள் முற்றி அவை தனிநபர் தாக்குதல்களாகத் தரம் தாழ்ந்து செல்வதை நாம் கண்டிருக்கிறோம். ஆனால் தனிநபர்கள் மீதான காழ்ப்புணர்வுகளை அரசியல் சாயம் பூசி நாறடிக்கும் தலைகீழ் செயற்பாடு அசோக்குடையது. எங்கள் மீதான காழ்ப்புணர்வுகளை வாந்தியெடுப்பதற்கு அசோக்கிற்கு அரசியல் போர்வை தேவைப்படுகிறதே ஒழிய அவருக்கென்று ஒரு அரசியல் பார்வையோ, கொள்கையோ இருப்பதற்கான தடயங்கள் அவர் எழுத்துகளிலில்லை. அவரின் செயற்பாடுகளிலுமில்லை. அப்படி ஏதாவது துண்டு துணுக்குகள் இருப்பின் அது தலித் அரசியல் எதிர்ப்பும் பெரியாரிய எதிர்ப்பும் மட்டுமே. மற்றப்படிக்கு அவர் தீவிரமான புலியெதிர்ப்பாளர் எனபதில் நமக்குச் சந்தேகமில்லை. ஆனால் வெறும் புலியெதிர்ப்பை ஒரு அரசியல் போக்காக மதிப்பிட முடியுமா என்று தெரியவில்லை. அப்படி மதிப்பிடால் ஜெயதேவன்தான் நம் காலத்தின் மாபெரும் அரசியலாளர் என்றும் கே.ரி. ராஜசிங்கம்தான் நம் காலத்தின் மாபெரும் பத்திரிகையாளர் என்றும் கொண்டாடும் இழிநிலைக்கு நாம் தள்ளப்படுவோம். அசோக் அவ்வப்போது ‘லைட்’டாகத் தன்னை மார்க்ஸியவாதி என்று கூறிக்கொள்வது உண்டு. அதற்காக நாங்கள் கலங்கிவிட மாட்டோம். தன்னை ஒரு சோஸலிஸ்ட் என்று அ. அமிர்தலிங்கம் சொன்னதையே தாங்கியவர்கள் நாங்கள், இதைத் தாங்க மாட்டோமா!

அசோக்கின் ‘தீராநதி’ எதிர்வினை குறித்து அ. மார்க்ஸின் கருத்தைத் தெரிந்துகொள்ள விரும்பி அவருடன் பேசினேன். அவர் ஒரே வார்த்தையில் ‘படிக்கச் சிரிப்புத்தான் வருகிறது’ என்று சொல்லி விட்டார். தூற்றல்களையும் சிரித்துக்கொண்டே புறக்கணிக்கும் பக்குவத்தை அவரின் வயதும் அநுபவமும் அவருக்கு வழங்கியிருக்கலாம். ஆனால் எனக்கோ ஓடுகிற பாம்பை மிதிக்கிற பருவம். என்றாலும் எப்போதும் நான் பாம்பு அடித்துக்கொண்டே இருக்க முடியாது.

அய்யா அவதூறுப் புயலே! அவதூறுகளை எழுதுவது உங்களின் முழுநேர வேலையாக இருக்கலாம். ஆனால் அவதூறுகளுக்குப் பதிலெழுதுவது என்னுடைய பகுதிநேர வேலைகூட அல்ல. நீங்கள் ‘பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணமுண்டா’ என விவாதித்து நேரத்தை ‘வேஸ்ட்’ செய்த நக்கீரன் பரம்பரையில் உதித்தவராயிருக்கலாம். ஆனால் நான் கே. டானியல் பரம்பரையில் வந்தவன். எனக்குக் கதை எழுதுவது, நாவல் எழுதுவது, நாடகம் எழுதுவது என்று ஏகப்பட்ட வேலைகளிருக்கிறது. எனவே மீண்டும் மீண்டும் நீங்கள் இவ்வாறான அவதூறுகளையும் கட்டுக்கதைகளையும் பரப்புவது உங்களின் நேரத்தை மட்டுமல்லாமல் என் நேரத்தையும் பாழாக்கும் வீணாய் போன வேலையே. உங்கள் அவதூறுகளால் என்னையோ நம் தோழர்களையோ நிலைகுலைய வைத்துவிடலாம் என்று மட்டும் ஒருபோதும் நினைக்காதீர்கள். உங்களின் அவதூறு எழுத்துகளால் எங்களின் ஒரு ரோமத்தைக்கூட உதிர்த்துவிட முடியாது!

6 thoughts on “நெடுங்குருதி: Behind the scene

  1. சோபா…
    அசோக் அவர்களை தீவிரமான புலி எதிர்ப்பாளர் என்று குறிப்பிட்டுள்ளிர்கள். தவறு. அவர் அந்த தகுதியையும் இழந்து விட்டிருக்கிறார். புலியை எதிர்ப்பதற்கும் எதாவது காரணம் வேண்டும். அப்படி எதாவது ஒன்று நேர்மையாக இருக்கிறதா என்று கேளுங்கள். இருக்காது. அவர் ஒரு பாவப்பட்ட மனிதனாகவே தனது துண்டுப்பிரசுர எழுத்துக்களுக்கூடாக வலம் வருகிறார். அவருக்குப் போய் நாங்கள் ரென்சனாகக் கூடாது.ஸ்டாலினைப்பற்றி சொன்னதை விடவா நெடுங்குருதியைப்பற்றி சொல்கிறார்.மார்க்சைப்பற்றி சொல்கிறார். இதெல்லாம் அவருக்கு சகசமப்பா.

    கற்சுறா

  2. இலக்கிய தளத்தில் ‘வெற்று வேட்டு’ ஆக இருக்கும் ‘அசோக் அண்ட் கொம்பனி’ இயல்பாக அரசியலிலும் ‘வெறு வாய்’ மார்க்ஸ்ஸிட் ஆக வீணாய் போனதை விளங்கிக்கொள்ள இச்சமாச்சாரங்கள் ஒன்றும் ரொக்கெற் சையன்ஸ் அல்ல.

  3. பனையால விழுந்தவனை மாடு ஏறி மிதித்த கதையாக சுகன் போட்ட அடியிலே இன்னும் மிள முடியாமல் இருக்கும் தேசம் குழுவினருக்கு தற்போது சோபா கொடுத்திருக்கும் அடியோ ஜென்மத்திற்கும் எழும்பமுடியாத பலத்த அடி.போதும். பாவம். பிழைத்துப் போகட்டும் .விட்டு விடுங்கள்.

  4. பின்னூட்டத்தில் சுயஇன்பம் காணும் பிரகிருதிகளை நீங்கள் இப்படிபோட்டு அடித்து நொருக்ககூடாது. அவங்களும் மனுசங்கதானே. விடுங்க.

    அந்தராத்திரிக்கு சாட்சியில்லை – நாவல பாருங்க. எவ்வளவு பாவமாக்கிடக்கு. வேலிக்கு ஓணான் சாட்சி.
    வினவு வின் மொக்கைப்பதிவுகள நல்லபதிவு.

    குகன் ஆயுதம் தூக்கியதால் வன்முறையாளனாக இனங்கண்டோம்.
    ஆயுதந்தூக்காத வன்முறையாளர்கள இனங்காண்பதெப்படி?

    சோபா உதுகள விட்டுப்போட்டு நீங்க உருப்படியான உங்கட வேலையளப்பாருங்க.
    காலம் உங்களப்போல ஆட்களுக்காக நீண்டு காத்துக்கிடக்கு.

  5. சோபா நீங்களும் மார்க்ஸ் போல சிரிச்சுப்போட்டு விட்டிருக்கலாம். நீங்களும் அசோக்கும் மட்டுமல்ல நாங்களும் நேரத்தை வீனாக்குகிறோம்.

  6. //லங்கை ஜனாதிபதியாக நெல்சன் மண்டேலாவோ, மகாத்மா காந்தியோ இருந்திருந்தால் கூட மகிந்த ராஜபக்ஷ எடுத்த முடிவையே எடுத்திருப்பார்களென ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதி, பிரதமர் செயலகங்கள், அரசியலமைப்பு சபை, பாராளுமன்றம் போன்றவற்றுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தர்.//

    //பின்னூட்டத்தில் சுயஇன்பம் காணும் பிரகிருதிகளை நீங்கள் இப்படிபோட்டு அடித்து நொருக்ககூடாது. மொக்கைப்பதிவுகள நல்லபதிவு….தூக்கியதால் வன்முறையாளனாக இனங்கண்டோம்.
    …தூக்காத வன்முறையாளர்கள இனங்காண்பதெப்படி?

    சோபா …விட்டுப்போட்டு நீங்க …உங்கட வேலையளப்பாருங்க.
    காலம் … நீண்டு காத்துக்கிடக்கு.//

    //சோபா… தீவிரமான புலி எதிர்ப்பாளர் … புலியை எதிர்ப்பதற்கும் எதாவது காரணம் வேண்டும். அப்படி எதாவது ஒன்று நேர்மையாக இருக்கிறதா …//

    //பனையால விழுந்தவனை மாடு ஏறி மிதித்த கதையாக …போதும். பாவம். பிழைத்துப் போகட்டும் .விட்டு விடுங்கள்.//

    //சோபா …நீங்களும் … நாங்களும் நேரத்தை வீனாக்குகிறோம்.//

Comments are closed.