காலச்சுவடும்.. திருமாவும்..

கட்டுரைகள்

ஒரு இடத்தில் அநியாயம் அனுமதிக்கப்படும்போது, எல்லா இடங்களிலுமுள்ள நியாயங்களை அது பாதிக்கிறது.
*****

சக மனிதர்மேல் ஒரு மதிப்பும் மரியாதையும் வேண்டாம்

காலச்சுவடு மே 2006 இதழில் ‘விருது வாங்கலியோ’ விசமத்தனப் பகுதி குறித்தது இக் கண்டனம்ஏலவே ‘இலக்கிய மனேஜர்’ ‘இலக்கியக் கொமிசார்’ ஆகிய பெருமைகளைச் சுமந்திருக்கும் காசு கண்ணனின் காலச்சுவட்டுக் கொம்பனி, எழுத்துகளின் மீதும் எழுத்தாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கை நடத்தைகளின் மீதும் தனது கண்காணிப்பையும் அதிகாரத்தையும் தெடர்ந்து உறுதி செய்யு முகமாக எழுத்தாளர்களுக்குக் கேலிப்பட்டங்களையும் ஏளனங்களையும் நையாண்டிகளையும் ஒரு சேரக் குத்திச் சமகாலத் தமிழ் எழுத்தியக்கம் மீது தனது வன்முறையைத் தொடர்கிறது. இது ஒன்றும் காலச்சுவட்டிற்குப் புதிதில்லை. தனக்கு ஒவ்வாத தனது ஒரே குடைக் கீழ் வராத எழுத்தாளர்களிற்கு அவர்கள் சார்ந்த நிறுவனங்களிலிருந்து வேலையை விட்டுத் தூக்குவதற்கு நிர்ப்பந்தித்தல்- ஞானபாரதியையும் சங்கர ராமசுப்ரமணியனையும் தூக்கினார்கள், தளவாய் சுந்தரத்தையும் பீர் முகமதுவையும் தூக்க முயன்றார்கள்- போன்ற நாலாந்தரக் காடைத்தனத்திலிருந்து இப்போது விருதுப் பட்டியல் வரை வந்து நிற்கிறது.

எழுத்துகளினதும் எழுத்தாளர்களினதும் தன்மதிப்பு, சுயமரியாதை, சமூக மதிப்பு இவை குறித்து எவ்விதக் கரிசனையும் பொறுப்புணர்வுமின்றிய சிறுபிள்ளைத்தனமான சின்னத்தனமான சிந்தனையிது. வெளிப்பார்வைக்குப் போகிற போக்கில் வாசித்து விட்டுச் சிரித்துவிட்டுப் போய்விடக் கூடிய பக்கங்களாக இது தோன்றலாம்.. ஆனால் உள்ளார்ந்திருப்பது மோசமான அதிகாரத்தைக் கட்டவிழ்த்துவிடுகிற, சக எழுத்தாளர்களை; இவர்களை இப்படிப் பாருங்கள் என்ற சாதி மனோபாவத்திற்கொப்பான குரூர சிந்தனையிது. ஒரு நீண்ட நாள் கண்காணிப்பிலிருந்து இது பிறந்தது.

அம்பைக்குப் பூலான் தேவி விருதும்
சல்மாவிற்கு ராணி மங்கம்மா விருதும் கொடுத்து விட்டு;
லீனா மணிமேகலைக்குப் ‘பயாஸ்கோப்’ விருதும்
சாரு நிவேதிதாவிற்குக் ‘குத்துப்பாட்டு மைனர்’ விருதும்
லக்ஷ்மி மணிவண்ணனுக்கு ‘வொட்காவிலிருந்து மாம்பட்டை வரை’ விருதும் கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு ‘முதல் குடிமகன்’ விருதும் கொடுப்பதற்கு இவர்கள் யார்?
யார் கொடுத்த அதிகாரம் இது? எவருடைய முப்பாட்டன்மார் கொடுத்த அடிமை ஓலை இது?

லீனா மணிமேகலை அவர்களின் மாத்தம்மாவிலிருந்து பலிபீடம் வரையான ஏழு ஆவணப்படங்களும் பயாஸ்கோப்புகளா என்ன? லீனா மணிமேகலை இவர்களுக்கு வேறு எதைக் காட்ட வேண்டுமென்று கேட்கிறார்கள்? யாருக்கு என்ன சொல்ல வருகிறார்கள்? ‘சிலேட்’ என்னும் இலக்கிய சிற்றிதழை ஒரு பனை ஏறியின் குடும்பத்திலிருந்து வேறு யார் இங்கு நடத்த முடியும்? நடத்த வந்தார்கள்? இன்று தாழ்த்தப் பட்டோரைச் சாதி சொல்லி இழிவு படுத்த முடியாத நிலையில்; இது நவீன முறையா?

‘விருது வாங்கலியோ’ என்ற தலைப்பிட்டு எல்லோருமே இங்கு விருதுகளிற்காக ஏங்கி நிற்பதாகவும் அலைந்து கொண்டிருப்பதாகவுமான ஓர் தோற்றப்பாட்டைக் காலச்சுவட்டின் கடைசிப்பக்கம் காட்ட வருகிறது.சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் எவருமே இங்கு விருதுகளிற்காக அலைபவர்களில்லை. எழுத்துகளின் மீதும் வாசகர்கள் மீதும் எழுத்தாளர்கள் மீதும் சகமனிதர்கள் மீதும் மரியாதையுள்ளவர்கள்தான். தமது படைப்பின் பேரால் ஓர் பெருமை தம்மைத் தேடி வரும் போது அதை கவுரவப்படுத்துபவர்கள்தான்.

சிறுபத்திரிகையாளர்களின் சமூகப் பொறுப்புணர்வும் விமர்சனப்பாங்கும் மாற்றுச் சிந்தனை மரபும் கா.சு விற்குமுன் குறிப்பிடும்படியாகத்தான் இருந்தது. அதை மலினப்படுத்திச் சீரழித்து நீர்த்துப் போக வைத்ததில் இடைநிலைப் பத்திரிகை என்ற ஏமாற்றுத்தனத்தோடு “நீ அரிசி கொண்டு வா நான் உமி கொண்டு வாறன் ஊதி ஊதித் தின்னலாம்” என்று தனக்கு ஆதாயப்படுத்துவதை மட்டுமே கா.சு செய்து வருகிறது.

கா.சுவின் இந்த இடை நிலை வியாபாரத் தன்மையும், இலக்கியத்தின் பேரால் நடாத்தப்பட்ட நடாத்தப்பட்டுவரும் மெகா திருவிழாக்கள் களியாட்டங்கள் போன்ற இத்தன்மையும் ம.க.இ.க போன்ற சமூக விமர்சன இயக்கங்கள் முழுச் சிறுபத்திரிகை இயக்கத்தையும் இவர்களையே வைத்து நோக்குவதும், மதிப்பிடுவதும் பெருந்துயரம்.

இடதுசாரி கம்யுனிஸ்ட் பின்னணியிலிருந்து புதிய சிந்தனைகளையும்,தலித்திய பின்நவீனத்துவ சிந்தனைகளையும், புதிய மதிப்பீடுகளையும் தாங்கிவந்த வண்ணமிருக்கும் சிறுபத்திரிகைகள் வேறு.

வலதுசாரி மேற்சாதி மேட்டிமை இலக்கிய மதிப்பீடுகளுடன் வரும் தமிழ்நாடு பிராமணர் சங்கக் காலச்சுவடு வேறு.

கள்ளச்சாராயப்பட்டியும் வொட்கா.. மாம்பட்டை, குடிமகன் நையாண்டியும் இங்கு இவர்களைத் தவிர வேறு எவருக்கு வரும்?

கா.சு இப்படியான கண்காணிப்பு அதிகார நடவடிக்கைகளை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

‘என் படுக்கையறையில் யாரோ ஒழிந்திருக்கிறார்கள்..’ என்றார் ஓர் கவிஞர். (எழுத்தாளர்களின் படுக்கையறைகளில்) ஒழிந்திருப்பவர் அனேகமாக கா.சு கண்ணன்தான் என்பதை கா.சுவின் கடைசிப்பக்க விருதுப்பட்டியல் ஆள்காட்டிச் செல்கிறது.

பின்குறிப்பாக:

அண்மையில் கனடாவில் நடந்த நிகழ்வொன்றில் தோழர் கண்ணன்.எம், காலச்சுவடு இதழின் தினமலர், RSS தொடர்பு குறித்தும் கா.சுவின் பார்ப்பனச் சாய்வு குறித்தும் பேசியதை டிசே தமிழன் தனது பதிவில் குறிப்பிட அதற்கு கவிஞர் திருமாவளவன் இவ்வாறு பின்னூட்டமிட்டிருந்தார்:

“//இந்திய அரசியல் போலவே இலக்கிய அரசியலும். இதில் யாரை யார் நம்புவது. வந்திருந்த புதியவரும் கூட இந்த (பதிப்பக) இலக்கிய அரசியலுக்குள் உள்ளவர்தான். (அடையாளம் என்ற பதிப்பகம் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்டார். தகவல் தவறாகவும் இருக்கலாம்.) அதுவல்ல பிரச்சனை. புகலிட இலக்கியம் நீத்துப்போய் விட்டது உண்மைதான். இதற்காண காரணம் தமிழக இலக்கிய மேலாண்மைதான். பின் நவினத்துவம் தலித்தியம் என்கிற சொலாடல் கவர்ச்சியும் அ. மார்க்ஸ், சாருநிவேதா போன்றவர்களின் வெளிநாட்டு வருகைகளும், எமது இந்திய மோகமும் இயல்பாகவே அடித்து சென்றுவிட்டது. நாங்கள் இப்பொழுதும் இதையேதான் செய்துகொண்டிருக்கிறேம். முடிவாக தேவகாந்தன் சொன்னதே சரி. எமக்கென்றொரு பதிப்பகம், விமர்சன உலகம், வாசகர் வட்டம் இல்லாத வரை ஈழத்து இலக்கியம் தனித்து தளிர்த்து வளர முடியாது.//”

இது என்ன அயோக்கியத்தனம்? ஒட்டுமொத்தத் தமிழகப் பதிப்பாளர்களையும் “பதிப்பக இலக்கிய அரசியல்” என திருமாவளவன் சேறடிப்பதை என்னவென்பது? தாம் வரித்துக்கொணட அரசியல் நிலைப்பாடுகளில் உறுதியாக நின்று காவற்துறையினரின் அடக்கு முறைகளுக்கெல்லாம் அஞ்சாமல் இலாபத்திற்காக இல்லாமல் சமூக நீதிக்காகப் புத்தகங்களை வெளியிடும் பதிப்பாளர்களை திருமா அறிய மாட்டாரா? விடியல் சிவா, அலைகள் சிவம், சிலிக்குயில் பொதியவெற்பன், தோழமை பதிப்பகம், அடையாளம் சாதிக், கீழைக்காற்று, கருப்புப் பிரதிகள், யாதுமாகி லெனா குமார் எனப் பல பதிப்பாளர்களை இவ்வகையில் என்னால் குறிப்பிட முடியும். இவர்கள் அனைவருமே இலாப நோக்கம் கருதாமல் அரசியல் நிர்பந்தங்களுக்குப் பணியாமல் ஈழத்தவர்களின் புத்தகங்களையும் வெளியிட்டிருக்கிறார்கள். புதியதோர் உலகம், ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம், டானியலின் ஒட்டுமொத்த நாவல்கள், டானியல் கடிதங்கள், தோழர் இரயாகரனின் புத்தகங்கள், பண்டிதர் வி.சி.கந்தையாவின் மட்டகளப்புத் தமிழகம்,பெண்கள் சந்திப்பு மலர்கள், சனதருமபோதினி, கறுப்பு….என இப்பட்டியல் நீளும். இப் பதிப்பாளர்களையும் கண்டதையும் விற்றுக் காசாக்கும் காலச்சுவடுக் கும்பலையும் நாம் ஒரே தட்டில் வைத்து எடைபோட முடியுமா?முடிந்தால் காலச்சுவடு குறித்து கண்ணன்.M வைத்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்க வேண்டும்.முடியாவிட்டால் மூடிக்கொண்டிருக்க வேண்டும். அதை விடுத்து கண்ணண்.எம்மின் விமர்சனத்துக்கு உள்நோக்கம் கற்பிப்பது அயோக்கியத்தனமானது.

திருமா கூறுமாதிரி “வந்திருந்த புதியவர்” கண்ணன்.M, தமிழ் சிற்றிலக்கிய உலகிற்கு புதியவரல்ல.அந்தத் தோழர் French Institute of Pondicherry யில் பணியாற்றுபவர்.கடந்த சில வருடங்களாக விடியல் சிவா வெளியிட்ட முக்கிய அரசியல் புத்தகங்களிற்க்கு வழிகாட்டியாகச் செயற்பட்டவர் (சே குவேரா வாழ்வும் மரணமும் உட்பட) பின் ஏன் திருமா கண்ணனை “அடையாளத்”துடன் முடிச்சுப்போடுகிறார்? இதற்கு திருமாவின் அடுத்தடுத்த வரிகளில் பதில் தொக்கி நிற்கிறது.

பாரிஸிற்கு அ.மார்க்சும், சாருநிவேதிதாவும் வந்தது குறித்து கோயிற் கருவறைக்குள் தீண்டத்தகாதவர்கள் நுழைந்ததை கட்டுவன் வெள்ளாளன் எதிர்கொண்டது போல் பெரும் பயத்துடனும் பதற்றத்துடனும் திருமா எதிர்கொள்கிறார். இந்தப் பதற்றம் கவிஞருக்கு தேவையில்லாதவொன்று. புகலிட இலக்கியம் குறித்து இவ்வளவு பலவீனமான முட்டாள்தனமான ஒரு மதிப்பீட்டை வைத்திருப்பதற்கு க.திருமாவுக்கு பூரண உரிமையுண்டு. ஒரு முப்பதாண்டு கால புகலிட நாடோடி அகதி இலக்கியத்தில் அ.மார்க்சுக்கும் சாருவுக்கும் அவர்கள் ஆற்றிய தலா அரை அரை மணிநேர உரைகளிற்காக இட ஒதுக்கீடு செய்வது SUPER! இங்கு பிரமிளுக்கான இடத்தைப் பறித்து சுந்தரராமசாமி பாரிஸில் தமிழ்க் கவிதைப் பிரதிநிதியாக வந்தது குறித்தோ அல்லது தனது வியாபாரத்திற்காக காசு கண்ணன் வரும் போதோ தமிழ் நாட்டில் தனது கவிதைக்காக விருது பெற்று அந்த விழாவில் கனடாவிலிருந்தே செய்மதி மூலம் ஏற்புரையாற்றிய திருமாவுக்கு ‘தமிழக இலக்கிய அரசியல்’ குறித்து எந்தப் பிரச்சனையும் எழவில்லை. பிரசன்னா ராமசாமி, அம்பை, மங்கை, இந்திரா பார்த்த சாரதி,வெங்கட் சாமிநாதன் ஜெயமோகன் புலம் பெயர் தேசங்களுக்கு NGO, அக்கடமிக், மானிய, குறுக்கு வழிகளில் வரும் போது திருமாவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் நமது சொந்த உழைப்பில் சொந்தக் கடனில் நாம் நமது தோழர்களை அழைத்தவுடன் திருமாவுடைய புலம் பெயர் இலக்கியம் நீர்த்துப் போய்விட்டதா? அவ்வளவு பலவீனமாகவா புலம் பெயர் இலக்கியம் இருந்தது? மேலும் சுருக்கமாகக் கூறுவான்வேண்டி செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பதும் மேலும் மேலும் வானத்தால் போம் பிசாசை ஏணி வைத்திறக்கி விருந்தோம்புவதும் நமது இலக்கிய விழுமியங்களிலொன்றாம். கவி திருமா நீங்கள் எப்போதாவது மற்றவர்களின் பேச்சை ரசித்ததுண்டா?

அ.மார்க்ஸின் சாருவின் புகலிட வருகைகள் எவ்வாறு புகலிட இலக்கியத்தை நீர்த்துப் போக வைத்தது என்பதைத் தயவு செய்து திருமா விளக்குவாரா? அ.மார்க்ஸ், சாரு, சிவகாமி, பாமா, பிரேம் -ரமேஷ், இந்திரன், தலித் தோழமை மையம் ரஜனி, அம்பேத்கர் பேரவை நிக்கொலஸ், கடைசியாகக் கண்ணன்.M வருகை எப்படிப் புகலிட இலக்கியத்தைச் செழுமைப்படுத்தியது என்பதை விளக்க நான் தயார். நாம் தோழர் அ.மார்கஸின் சிந்தனைப் பள்ளியில் உருவாகியவர்கள் என்பதை அறிக்கையிட நானோ, ஷோபாசக்தியோ, தேவதாஸோ, அசுராவோ மற்றைய எக்ஸில் நண்பர்களோ என்றுமே தயங்கியதில்லை.

திருமா காயும் “இறக்குமதி” பின்நவீனத்துவ, தலித்திய, விளிம்புநிலைச் சிந்தனைகள் புகலிட இலக்கியப் பரப்பில் புனைவு, விமர்சனம், செயற்பாடுகள், பிரதிகளை அணுகும் முறைகள், வாசிப்புத் தன்னிலைகள், இவற்றிற்குப் புதிய சாத்தியப்பாடுகளைத் திறந்து வைத்தன. மேற்சாதி, அதிகார, ஆண்மையவாத, தேசியவாத, மனோபாவங்களைக் கேள்விகளிற்குள்ளாக்கின.விளிம்புநிலைப் பிரதிகளையும் மறுத்தோடிக் குரல்களையும் முன்னிறுத்தின. இந்தச் செல்நெறிகளைத் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருபவர்களென்ற வகையில் அ.மார்க்சும் சாருவும் ஒட்டுமொத்தத் தமிழ் இலக்கியப் பரப்பிற்கும் முக்கியமானவர்கள் என்பதை எவராவது மறுத்துரைக்க முடியுமா? திருமா மறுக்கிறார் என்றால் அந்த மறுப்பின் பின்னால் உள்ளது எவ்வகையான மனோபாவம்? மேற்சாதி உளவியல்? சொல்லுங்கள் திருமா!

//இனி நமக்கென்றொரு பதிப்பகம்…// கிழித்தீர்கள்! ஏற்கனவே வாழ்நாள் சாதனையாளர் பத்மநாபனும் அப்பால்தமிழ் அரவிந்தனும் பதிப்பகங்கள் தொடங்கிப் பாஸிசப் பிரதிகளைப் பதிப்பித்துக் கிழித்துத்கொண்டிருக்கிறார்கள். எஸ்.பொவின் மித்ர பதிப்பகம் இன்னோரு பக்கத்தால் போட்டுத் தாக்கிக்கொண்டிருக்கிறது.இன்னும் தாய்மண், ஈழமுரசு, நிகரி எனப் பல ஈழத்துப் பதிப்பகங்கள் இருக்கின்றன. இப் பதிப்பகங்கள் விளிம்புநிலைக் குரல்களையும், “துரோக” எழுத்துக்களையும் வெளியிடத் தயாரா?

மறுபுறத்திற் சனநாயக வழிநின்று புத்தகங்களை வெளியிடும் விளிம்புநிலைக் குரல்களுக்கு முன்னுரிமையை வழங்கும் மல்லிகை, புதியபூமி, குமரன், மூன்றாவது மனிதன், காலம் போன்ற பதிப்பகங்கள் இருக்கின்றன.போதாததற்கு ஒன்றுக்கு இரண்டாக இரண்டு எக்ஸில் பதிப்பகங்கள் வேறு இருக்கின்றன.

எனவே புதிதாகப் பதிப்பகம் அமைப்பதை விடுத்து நாம் புதிது எழுத முயன்றாலே புகலிட இலக்கியம் இன்னொரு அடி நோக்கி நகரும்.அல்லாவிடின் ஆடத் தெரியாதவன் மேடை சரியில்லை எனச் சொன்ன கதையாக நாசமாய்ப் போகும்.

இறுதியாக ஒன்று: புரட்சியாளர்கள் மட்டுமல்ல, இலக்கியவாதிகளும் குறுகிய தேசியவாதச் சிந்தனைகளைத் தாண்டி சர்வதேசவாதிகளாக நிற்க வேண்டும். இளங்கோவடிகளும், சித்தர்களும், டால்ஸ்டாயும், பிரைடோ காலாவும், சதத் ஹசன் மண்டோவும், மார்க்ஸிம் கோர்க்கியும், ஆனா ப்ளன்டியானாவும், சீனுவா ஆச்சபேயும், ஜோன் ஜெனேயும் நமது பேராசான்கள்.இதை விடுத்து ஈழம் VS இந்தியா என்று கச்சை கட்டுவதிற் பொருளில்லை. நமது கைலாசபதியைத் தமது தத்துவ ஆசிரியராக வரித்துக்கொண்டு இந்தியாவில் கோ.கேசவன், அருணன், அ.மார்க்ஸ் என ஒரு புதிய விமர்சனப் பரம்பரையே உருவாகவில்லையா! கே.டானியலைத் தந்தை டானியலென்றும், தலித் இலக்கியத்தின் முன்னோடி எனவும் தமிழகத் தோழர்கள் கொண்டாடுகிறார்கள். நமது பிரேமிளை “மேஜர் பொயட்” என அவர்கள் மகிமைப்படுத்தினார்கள். எஸ்.பொவையும் மு.தளயசிங்கத்தையும் அவர்கள் பின் தொடர்ந்தார்கள். இதே வேளை அங்கே இலக்கிய மேலாண்மையும் இல்லாமலில்லை. இந்தியாவில் இலக்கிய மேலாண்மை என்பது பார்ப்பன வெள்ளாள மேலாண்மை என்றே பொருள்படும்.அவர்கள் ஈழத்து இலக்கியங்களை மட்டுமல்லாது தமிழகத்து தலித், பிற்படுத்தப்பட்ட சாதியினரின் எழுத்துகளையும் இருட்டடிப்புச் செய்தார்கள்.சற்றுக் காலங்களிற்கு முன்வரை கல்வியும் ஊடகங்களும் அவர்களின் பூரண கட்டுப்பாட்டிலேயே இருந்ததால் இது சாத்தியமாகியது.

இம் மேலாண்மைப் போக்கின் பிரதிநிதிகள் அ.மார்க்சும், சாருவும், எம்.கண்ணனுமா? அல்லது சுந்தர ராமசாமியும், அசோகமித்திரனும், சுஜாதாவும், மாலனும், வெங்கட் சாமிநாதனும் காலச்சுவடுமா? என்று தோழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இத்தகைய இலக்கிய நாட்டாமைகள் ஈழத்திலும் இல்லாமலில்லை. அவர்கள் டானியலின் எழுத்துக்களையும் டொமினிக் ஜீவாவின் எழுத்துக்களையும் இழிசனர் வழக்கு எனப் பழித்துரைத்தார்கள். இன்று மாற்றுக் குரல்களையும் எதிர் எழுத்தாளர்களையும் “ஈழமுரசிலும்”, “ஒரு பேப்பரிலும்” துரோகிகள், உளவாளிகள் என்று கட்டங் கட்டுகிறார்கள். மாற்றுக் கருத்தாளர்களிடையேயும் இலக்கியச் சந்திப்புக்களிலும் கூட இந்த இலக்கிய நாட்டாமைகளும் இருட்டடிப்புக்களும் தொடருகின்றன என்பது வருத்தப்படவேண்டிய ஓர் உண்மை. இதைச் சுட்டிக்காட்டி நாட்டாமை என்றொரு தொகுப்புப் பிரசுரத்தை நாம் பெர்லின் இலக்கியச் சந்திப்பில் விநியோகித்திருந்தோம்.

இலக்கிய மேலாண்மைகள் ஈழத்திலுமுண்டு இந்தியாவிலுமுண்டு புகலிடத்திலுமுண்டு.இந்த இலக்கிய மேலாண்மைகளின் இலக்கிய முகமூடிகளைக் கழற்றிப் பார்த்தால் உள்ளே சாதியமும் ஆண்மையவாதமும் குறுந்தேசிய வெறியும் பாஸிசமும் பல்லிளிக்கும்.அதேபோல் சமூக நீதிக்காகக் குரலெழுப்பும் முற்போக்கு இலக்கியவாதிகள் ஈழத்திலுமுண்டு இந்தியாவிலுமுண்டு. எங்கிருந்தாலும் அனைத்து மேலாண்மைகளையும் எதிர்ப்பதும், எந்த மூலையில், எந்த நாட்டில் முற்போக்கு சக்திகளிருந்தாலும் அவர்களைத் தேடித்தேடி இணைவதும் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதும் அவர்களுக்கு ஆதரவளிப்பதுவுமே நமது தலையாய கடமையாக இருக்கவேண்டும். இது திருமாவளவன் என்ற யாழ்ப்பாண மேட்டுக்குடி வெள்ளாள மூளைவீங்கிக்கு வேண்டுமானால் உறைக்காமலிருக்கலாம், நமது தோழர்களுக்குமா உறைக்காமல் போய்விடும்?

சுகன்

1 thought on “காலச்சுவடும்.. திருமாவும்..

  1. காலச்சுவடின் அரசியல் வெகுசன ஊடகங்களுக்கு எந்த விதத்திலும் குறைந்ததில்லை.கிண்டலடிப்பது அவர்கள் உரிமையும் கூட ஆதலால் இதைப் போன்ற விருதுகளை நகைச்ச்வையாக எண்ணி மறப்பதே மேல் .
    எல்லா படைப்பாளிகளுக்கும் ஒரூ அரசியல் இருக்கும் ..அதையெல்லாம் பார்க்க ஆரம்பித்தால் அவர்கள் எழுத்தப் படிக்கும்ப் போது ஒரு சார்பு நிலையுடனையே படிப்போம் ..அது நம் வாசிப்பின் தரத்தைக் குறைக்கவேச் செய்யும்..
    நல்லப் பதிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *