மரண தண்டனை ஒழிப்பு

அ.மார்க்ஸ் கட்டுரைகள்

ராஜன் குறையின் ‘சமயோசித’ அணுகல் முறையும் ஷோபா சக்தியின் ‘மூர்க்கமான’பேச்சுக்களும்

அ.மார்க்ஸ்

ரண தண்டனை ஒழிப்பு குறித்து ஷோபா சக்தி எழுதிய கட்டுரைகள் இரண்டையும் (‘விருமாண்டியிசம்’), ராஜன் குறை எழுதிய இரு கட்டுரைகளையும் அவரவர் முகநூல் பக்கங்களில் படித்தேன். ராஜனின் இரண்டாவது கட்டுரை ஷோபாவின் இரு கட்டுரைகளுக்கும் பதிலாக எழுதப்பட்டது. பின்னூட்டங்களில் நண்பர்கள் சொல்லியிருப்பதுபோல ராஜனுக்கே உரித்தான பதமையோடும், பண்போடும், ஆழத்தொடும், நிரம்ப சுய எள்ளலோடும்  எழுதப்பட்டுள்ளது அக்கட்டுரை. அந்தச் சுய எள்ளல்களில் ஒன்றில்தான் தன்னுடையதை “சமயோசித அணுகல் முறை” என அவர் சொல்லிக் கொள்கிறார். ஷோபாவோ அவருக்கே உரித்தான ஆவேசத்துடனும், அபார நினைவாற்றலுடனும், நகையுணர்வு தொனிக்கவும் எழுதியுள்ளார். அந்த நகையுணர்வின் ஓரங்கமாகத்தான் தான் கொஞ்சம் மோசமாகப் பேசக் கூடியவன் என சொல்லிக் கொள்கிறார்.

தனது முகநூல் நிலைத்தகவலில் ஷோபா மரண தண்டனை ஒழிப்பு குறித்து எழுதியுள்ளதற்கான ஒரு கடுமையான மறுப்பாகவே ராஜனின் கட்டுரை உருவாகியுள்ளது. எனினும் ராஜனின் பதமையான எழுத்து முறையில் அந்தக் கடுமை வெளித் தோன்றுவதில்லை. ஆனால் ஷோபாவின் ஒவ்வொரு சொல்லிலும் அவரது ஆவேசமும் கோபமும் வெளிப்பட்டு விடுகிறது.

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது மரண தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் எனக் கருத்துக் கூறிய ஷோபா, இது பற்றிப் பேசும்போது புலிகள் வழங்கிய ஏராளமான மரண தண்டனைகளையும் நாம் கண்டிக்கத் தவறக்கூடாது என்கிற ரீதியில் எழுதியிருப்பார் போலும் (நான் பார்க்கவில்லை). இது குறித்து எழுதும் ராஜன் மரண தண்டனையை எதிர்ப்பது”போல” ப் பேசி புலிகளின் கொலைகளை நடுவே செருகிவிடுகிறார் எனச் சொல்லுகிறார். இதன் மூலம் அவர் ஷோபாவின் மரண தண்டனை எதிர்ப்பையே உள் நோக்கமுடையதாக்குகிறார். இது ராஜனிடம் எதிர்பார்க்காத ஒன்று. இதைத்தான் பதமைக்குக் கீழே ஒளிந்துள்ள ‘கடுமை’ என்றேன். ராஜனைப் பற்றிச் சொல்ல வரும்போது ‘வன்முறை’ என்ற சொல்லைப் பயன்படுத்த எனக்கு மனம் வராது.

விருமாண்டியிசம் கட்டுரையில் ஷோபா வலியுறுத்தும் இன்னொரு அம்சம், நாம் யாருடைய மரண தண்டனையை ரத்து செய்யக் கோருகிறோமோ அவர்கள் குற்றமற்றவர் என்பதற்காக அதை ரத்து செய்யக் கோருவதைக் காட்டிலும், குற்றம் செய்திருந்தபோதிலும் கூட அவர்களது தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்கிற மட்டத்திலேயே நமது கோரிக்கை அமைய வேண்டும் என்பது. மூவரின் மரண தண்டனை மட்டுமல்ல அஃப்சல் குரு, அஜ்மல் கசாப் எல்லோருடைய மரண தண்டனைகளும் கூட ரத்து செய்யப்பட வேண்டும். ஆக மரண தண்டனையை யார் அளித்த போதிலும் அது தவறு. அது யாருக்கு அளிக்கப்பட்ட போதிலும் அதை ஏற்க முடியாது என்கிற இரு கருத்துக்களை முன்வைக்கிறார் ஷோபா.

ராஜனும் இந்த இரண்டு அம்சங்களையும் ஏற்றுக்கொள்பவர்தான். எனினும் அவர் இந்த இரண்டு அம்சங்களிலும் தனது சமயோசித அணுகல் முறையினூடக மாறுபட்டு நிற்கிறார், புலிகளின் சகாப்தம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன, இப்போது அதைப் பேசி தெவையில்லாமல் பலரது வெறுப்புக்கும் ஆளாக வேண்டியதில்லை. அடுத்து பேரறிவாளன் உள்ளிட்ட மூவரும் உண்மையான குற்றவாளிகள் அல்ல என்கிற அம்சத்தை உயர்த்திப் பிடிப்பது சரியே. அதன் மூலம் மக்கள் ஆதரவு கிடைக்குமானல் பயன்படுத்திக்கொள்ள வேண்டியதுதான். தவிரவும் குற்றவாளிகள் இல்லை என்பதற்காக மக்கள் மரண தண்டனை ஒழிப்பை ஏற்றுக்கொண்டால், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக குற்றம் செய்திருப்பாராயினும் மரண தண்டனை கூடாது என்கிற கருத்தைக் கொண்டு சென்று விடலாம். அப்படிச் செய்வது சூழ்ச்சியல்ல, அதுதான் அரசியல் என்பன ராஜனின் வாதங்கள்.

ராஜனின் கருத்துக்களில் பல ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவையே. இந்த நேரத்தில் புலிகள் குறித்துப் பேசிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.  மரண தண்டனை அளிக்கப்பட்டவர்கள்  உண்மையிலேயே நேரடியாகக் குற்றத்தில் தொடர்பில்லாதவர்கள். அவர்களுக்கு இந்தத் தண்டனை பொருந்தாது என்பதையும் நாம் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

என்னைப் பொருத்தமட்டில் 20 ஆண்டுகட்கு முன் ராஜீவ் கொலை வழக்கில் 26 பேர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட போது அதை எதிர்த்து எழுத்தாளர்கள் சார்பாக சென்னையில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன். எங்களின் மனித உரிமைகளுக்கான மக்கள் கழகத்தின் சார்பாக மதுரையில் பெரிய மாநாடொன்றையும் நடத்தினோம். அஃப்சல் குருவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட போது சிறு பிரசுரம் ஒன்றை வெளியிட்டதோடு, திருவல்லிக்கேணியில் கண்டித்து அறைக் கூட்டம் ஒன்றையும் நடத்தினோம். தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் மூன்று அ.இ.அ.தி.மு.க பிரமுகர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட போது அதைக் கண்டித்து பத்திரிக்கையாளர் சந்திப்பொன்றையும் நடத்தினோம். இரு மாதங்களுக்கு முன்னர் அஃப்சல் குரு மற்றும் பேரறிவாளன் உள்ளிட்ட மூவர் ஆகியோரது கருணை மனுவுக்கு எதிராக உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்த  சில நாட்களில் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் என்னைத் தொடர்பு கொண்டு, மூவரின் மரண தண்டனை ஒழிப்பு தொடர்பாக எழுத்தாளர்கள் பங்கு பெறும் கையெழுத்து இயக்கம் ஒன்றில் நீங்களும் பங்கு பெறலாமா எனக் கேட்டார். “தாராளமாகப் பங்கு பெறலாம். ஒரு சிறு வேண்டுகோள். ஏன் அஃப்சல் குரு பெயரையும் மூவரோடு சேர்த்துக் கொள்ளக் கூடாது? ஆனால் இது நிபந்தனை அல்ல. நீங்கள் சேர்த்தாலும் சேர்க்காவிட்டாலும் கையெழுத்துப் போடுகிறேன்” என்றேன். தமிழச்சிக்கும் அந்தக் கருத்தில் ஒப்புதல் இருந்தது. சில வாரங்களுக்குப் பின் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி மூன்று பெண் வழக்குரைஞர்கள் உண்ணாவிரதம் இருந்த நிகழ்வில் சந்தித்த தமிழச்சி, அஃப்சல் குருவின் பெயரைச் சேர்க்க வேண்டாம் என முடிவெடுக்கப்பட்ட செய்தியைச் சொன்னார். பின்னர் நடந்த போராட்டங்களில் வாய்ப்புக் கிடைத்த இடங்களிலெல்லாம் கலந்து கொண்டேன்.  அஃப்சல் குருவின் கருணை மனு குறித்து குடியரசுத் தலைவர் முடிவெடுக்காத பின்னணியில், மூவரது மரண தண்டனை நிறைவேற்றமே உடனடிப் பிரச்சினையாக இருக்கும் நிலையில் தற்போது அதற்கு முக்கியத்துவம் அளித்து முன்னெடுப்பது  என்கிற நிலையுடன் செயல்பட்டு வருகிறேன்.

என்னுடைய கதையை நிறுத்திக் கொண்டு ராஜன் குறையைப் பின்தொடர்வோம். அவர்  இப்படியான நிலைபாட்டை வலியுறுத்துவது என்பதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. மேலும் விரிவாகவும் ஆழமாகவும் தனது நிலைபாட்டிற்கு ஆதாரங்களைத் தேடிச் செல்கிறார். அதன் மூலம் தனது இந்த நிலைபாட்டை ஒரு தற்காலிகமான, அரசியல் தந்திர ரீதியான நிலைப்பாடு என்பதைத் தாண்டி, ஒரு நிரந்தரமான அறவியல் நிலைப்பாடாக முன்வைக்கிறார். ‘இறையாண்மை’ என்கிற கருத்தாக்கத்தை எடுத்துக் கொண்டு, பூரண இறையாண்மையுள்ள ஒரு அரசு அளிக்கும் மரண தண்டனையையும், பூரண இறையாண்மையற்ற அரசல்லாத அமைப்புகள் (Non- State Actors) அளிக்கிற மரண தண்டனையையும்  ஒன்றாகக் கருதக் கூடாது. ஒரே போல எதிர்க்கக் கூடாது. இறையாண்மையின் பெயரால் அரசு அளிக்கும் மரண தண்டனையே முக்கியமாக எதிர்க்கப்பட வேண்டியது என்கிற நிலைபாட்டை வந்தடைகிறார். அரசல்லாத அமைப்புகள் அளிக்கும் மரண தண்டனை (மற்றும் இன ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை மீறல்களையும் சேர்த்துக் கொள்ளலாம்?) என்பது “அடைய முடியாத இறையாண்மை, ஏற்படுத்த முடியாத கருத்தொருமிப்பு உருவாக்கும் பதட்டம், மன விகாரம்” ஆகியவற்றின் விளைபொருள் என்று ஒதுக்கிச் செல்கிறார்.

இதை நான் தட்டச்சு செய்து கொண்டுள்ளபோது லிபியாவில் கிளர்ச்சிப் படையினர் 20,000 கறுப்பினத்தவரைக் கொன்று குவிக்கின்றனர், வெளியேற்றுகின்றனர் எனச் செய்தி வருகிறது. முன்னதாக கடாஃபியைத் தேடும் வேட்டையில் சிர்டேயில் கடும் மனித உரிமை மீறல்கள் குறித்த செய்திகள் வந்தன. இவையெல்லாமும் கூட இறையாண்மையைப் பூர்த்தி செய்யும்  நோக்கிலான பதட்டத்தின் விளைவுதான். இன்னும் ஏராளமான எடுத்துக் காட்டுகளை வரலாற்றிலிருந்து சொல்ல முடியும். ஏன் ஸ்டாலின் காலத்திய அழித்தொழிப்புகள், அத்துமீறல்கள் எல்லாவற்றையும்கூட இவ்வகைப் பதற்றத்திற்குள் அடக்கலாம். சோஷலிசம் பேசுகிற ஒரு புது வகை அரசின் இறையாண்மையை முதலளிய நாடுகள் அழித்தொழிக்கத் தீவிரம் காட்டிய சூழல் உருவாக்கிய பதட்டத்தின் விளைவுதானே அவை.
அரசுகள் அளிக்கும் மரண தண்டனைக்கும், அரசல்லாத அமைப்புகள் அளிக்கும் மரண தண்டனைக்கும் வித்தியாசமில்லை எனச் சொல்ல வரவில்லை. ஆனால் அரசல்லாத அமைப்புகளின் கொடிய அத்து மீறல்களைப் பேசவே கூடாது எனச் சொல்வதுதான் மிகவும் அச்சமூட்டக் கூடியதாக இருக்கிறது. நான் அப்படிச் சொல்லவில்லை என ராஜன் மறுக்கக் கூடும்.  ஆன்னால் அப்படிச் சொல்கிறவர்களின் வெறுப்பைச் சம்பாதித்துவிடக் கூடாது என வெளிப்படையாக அவர் அறிவிப்பது கவனத்திற்குரியது. அவர்களுடைய வெறுப்பை மட்டுமல்ல, அரசல்லாத அமைப்புகள்  அளித்த மரண தண்டனைகளையும், செய்த கொலைகளையும் நியாயப்படுத்திச் சுவைபடப் பேசுகிற, எழுதுகிறவர்களின் வெறுப்பையும் சம்பாதிக்கக்  கூடாது. இந்த மரண தண்டனை எதிர்ப்பினூடாக இவ்வாறு மரண தண்டனையைக் கொண்டாடும் ஒரு போக்கும் இணையாக உள்ளது  குறித்த ஷோபாவின் கேள்விக்கு ராஜனிடம் கிடைக்கும் பதில் வெறும் மௌனந்தான்.

இன்னொன்றையும் நாம் யோசிக்க வேண்டும். இறையாண்மையுள்ள ஒரு அரசு அளிக்கும் தண்டனை கூட ஏதோ ஒரு விசாரணை, தீர்ப்பு, கருணை மனு, போராட்டம் எனப் பல சாத்தியங்களை உள்ளடக்கியுள்ளது. அரசல்லாத அமைப்புகள்  இந்தச் சாத்தியங்கள் எதையும் கூட குற்றம் சுமத்தப்பட்டவருக்கோ, உறவினர்களுக்கோ, மக்களுக்கோ அளிப்பதில்லை என்பது குறிப்பிடத் தக்கது. ஒரு காலைப் பொழுதில் ஒரு எலக்ட்ரிக் போஸ்ட்டில் கழுத்தில் ஒரு அட்டையுடன் தொங்கும் சடலங்களைப் பார்த்த பின்பே உறவினர்களுக்கும் மக்களுக்கும் தண்டனை நிறைவேற்றப்பட்ட செய்தி தெரிய வரும்.

என் நினைவில் உள்ளவரை சமீப ஆண்டுகளில் குறைந்த பட்சம் மும்முறையேனும் ஒரு இந்திய ஆயுதப் போராட்ட இயக்கம் தான் செய்த கொலைகள் தவறாகச் செய்யப்பட்டவை என வருத்தம் தெரிவித்துள்ளது. சிறுவர்களைப் படையில் சேர்ப்பதும், அவர்கள் சில நேரங்களில் தன்னிச்சையாக முடிவெடுப்பதும் கூட சில நேரங்களில் இத்தகைய தவறுகளுக்குக் காரணமாகி விடுகின்றன. சமீபத்தில் கூட அப்படியான ஒரு தவறும் நடந்துள்ளது. ஆனாலும் இவற்றையெல்லாம் பேசிக் கொண்டிருப்ப்து உசிதமல்ல என்கிறார் ராஜன்.

ராஜன் முன்வைக்கும் இறையாண்மை என்கிற கருத்தாக்கத்திலும் பல சிக்கல்கள் உள்ளன.  இந்தியத் துணைக்கண்ட மரபில் இறையாண்மை என்கிற அரசியல் கருத்தாக்கத்தின் பொருள் மேலைக் கருத்தாக்கத்திலிருந்து பெரிதும் வேறுபடுகிறது. இந்திய அரசுருவாக்கம் என்பது தொடக்கம் முதலே மிகவும் நெகிழ்வுத் தன்மை உடையதாகவும், கூறு வடிவ அதிகரப் பரவல் உடையதாகவும், பல்லினங்களை உள்ளடக்கிய பேரரசு என்கிற வடிவிலும் (loosely structured, segmentary, power sharing, multi national imperial form) அமைந்தது. ஐரோப்பிய வடிவமோ பெரிய அளவில் மத்தியப்படுத்தப் பட்டதாகவும், ஏகபோக இறையாண்மை உடையதாகவும், தேசிய அரசு வடிவிலானதாகவும் (centralised, monopoly sovereignity, nation state form) இருந்தது.  இது சாதி, பிராந்தியம், மதம், நம்பிக்கை (sects), மொழி, இனம் ஆகிய அடிப்படையிலான பல்வேறு அதிகார மையங்களுக்கிடையே ஒருவகையில் பகிர்ந்து கொள்ளப்பட்ட இறையாண்மையுடைய (shared sovereignity) இந்தியச் சூழலிலிருந்து பெரிதும் வேறுபட்டிருந்தது.

சிவில் சமூகம், சமூக ஒப்பந்தம் (social contract) முதலான கருத்தாக்கங்கள் இந்தியச் சூழலில் கிடையாது. பொதுக் குடியுரிமை (common citizenship) என்கிற கிரேக்கக் கருத்தாக்கம், விசுவாசிகளின் சமூகம் (community of beleivers) என்கிற கிறிஸ்தவ மதவியல் சார்ந்த கோட்பாடு  ஆகியவற்றினூடாக 17ம் நூற்றாண்டு வாக்கில் பரிணமித்த சிவில் சமூகம் என்பதிலிருது விகசித்தனவே நவீன தேசிய உருவாக்கமும், தேசிய இறையாண்மையும். சமூக வேறுபாடுகள், ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்றுக்கு அப்பாலான அல்லது அவற்றைப் பெரிதுபடுத்தாது உள்ளடக்கிய அறவியல் மற்றும் அரசியற் சமூக மேல்வடிவமாக(superordinate moral and political community of state) மேலை அரசுகள் உருவாயின.  சிவில் சமூகம், தேசிய இறையாண்மை ஆகியன இவற்றின் பின்புலமாக அமைந்தன.
ஆனால் இந்தியாவில் உருவான ஏராளமான ஒறுப்புச் சட்ட நூல்களான (civil and penal codes) தர்மசாஸ்திரங்களோ ஏற்றத்தாழ்வாக ஒழுங்கமைக்கப்பட்ட சமூகப் பிரிவினைகளை அங்கீகரித்தன. தமக்குள் சகோதரத்துவமும், பொதுச் சட்ட ஒழுங்கும், சமூக மரபு மற்றும் சொத்துடமை முதலான அம்சங்களில் பூரண இறையாண்மையும் உள்ள உள் அமைப்புக்கள் தனித்துவத்துடன் அமைந்து, ஒரு ஏற்றத்தாழ்வாக ஒழுங்கமைக்கப்பட்ட பன்மைத்துவத்தை உருவாகியிருந்தன. இத்தகைய சுயேச்சையானவையும் பகிர்ந்து கொள்ளப்பட்ட இறையாண்மை உடையவையுமான உட்சமூகங்கள் அரசின் ஏகபோக அதிகாரத்திற்கு வரம்புகள் வகுத்தன. இத்தகைய சமூகங்கள் இங்கே அரசுக்கு முன்னதாக அமைந்தன. இங்கு உருவான அரசுகளின் பணி இத்தகைய உட்சமூகங்களின் இறையாண்மையில் தலையிடாமல் இருப்பது மட்டுமல்ல, இந்த இறையாண்மைகளைப் பாதுகாப்பதாகவும் ஆகியது.

இதெல்லாம் பழைய கதைகள், காலனீய ஆட்சியின் ஊடாக மேலிருந்து திணிக்கப்பட்ட நவீனத்துவம் இங்கு பூரண இறையாண்மையுடைய அரசுகளை உருவாகியபின் இந்தக் கதைகள் தேவையில்லை என ஒருவருக்குத் தோன்றலாம். ஆனால் இன்றளவுக்கும் இத்தகைய பகிர்ந்து கொள்ளப்பட்ட இறையாண்மைகளை அரசிறையாண்மையால் ஒழித்துக் கட்ட முடியவில்லை  இன்றளவிற்கும் செயலில் இருக்கும் ‘கப்’ பஞ்சாயத்துகள், நாட்டார் அதிகார முறைமைகள், ‘சதி’ முதலான நிகழ்வுகள் இதற்குச் சாட்சியங்களாக அமைகின்றன. காந்தியின் பஞ்சாயத்து ராஜ் முறைக்கு எதிராக மைய அரசு வலிமையானதாகவும் பூரண அதிகாரம் மிக்கதாகவும் இருக்க வேண்டுமென ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களான அம்பேத்கர், பெரியார் முதலானோர் வற்புறுத்தியதின் பின்புலமும் இதுவே.

எதற்காக இவ்வளவையும் இங்கே பேச வேண்டி ஏற்பட்டு விட்டதென்றால், ‘இறையாண்மை’ என்கிற ஒரு கருத்தாக்கத்தை வைத்துச் சொல்லாடுவதன் மூலம் மக்களைப் பெரிதும் பாதிக்கக் கூடிய மனித உரிமை மீறல்களை அரசு சாரா அமைப்புகள் எடுக்கும்போது அவற்றை பூரண இறையாண்மைக்காகத் தவிக்கும் பிரதேச அதிகாரத்தின் பதட்டத்தால் விளைந்தவை என்கிற ரீதியில் அமுக்கி வாசித்துவிட முடியாது என்பதைச் சொல்லத்தான்.

அரசுக்கும், அரசாங்கத்திற்கும் உள்ள வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தி ராஜன் பேசுகிற விஷயங்களிலும் பிரச்சினைகள் உள்ளன. இரண்டும் வேறு வேறுதான். ஆனாலும் பொதுப்புத்தி தூலமான அரசாங்கத்தினூடாகவே அரசைப் புரிந்துகொள்கிறது. அரசின் இருப்பிற்கு மட்டுமல்ல, அரசாங்கத்தின் இருப்பிற்கும் கருத்தொருமிப்பு அவசியமாகிறது. “All Governments rest in opinion” என மேடிசன் சொல்வதன் பொருள் இதுவே. கருத்தொருமிப்பு (consensus) என்பது இறையாண்மையைக் காட்டிலும் அதிகாரத்தைத் (power) தக்க வைப்பதற்கே அவசியமாகிறது. கருத்தொருமிப்பு குறையக் குறைய அரசு தன் அதிகாரத்தைத் தக்க வைப்பதற்கு வன்முறையின் அடிப்படையிலான வற்புறுத்தலைச் (coercion) சார்ந்து இயங்குவது  அதிகமாகிறது.

ஒரு நூற்றாண்டுக்கு முன் கார்ல் ஷ்மிட் சொல்லிப்போன “Sovereign is he who decides on the exception” என்கிற கருத்தாக்கம்தான் இன்று நம்மிடையே வாழும் மெய்யியலாளரான யூகின் அகம்பென்னால் விரிவுபடுத்தி  பேசப்படுகிறது. நிலவுகிற சட்ட முறைமை குடிமக்களுக்கு வழங்கியுள்ள உயிர் வாழ்வு உட்பட்ட அடிப்படை உரிமைகளை ரத்து செய்து ‘நெருக்கடி நிலையை’ அறிவிக்கும் திறன் யாருக்கு உள்ளதோ  அவரே இறையாண்மையுள்ளவராகக் கருதப்படுவார் என்பதே இதன் பொருள். இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்தபோது அவரது அட்டர்னி ஜெனரல் நெருக்கடி நிலை ஆட்சியில் குடிமக்களுக்கு உயிர் வாழும் உரிமை கிடையாது, அரசின் விருப்பின் அடிப்படையிலேயே ஒருவர் உயிர் வாழ முடியும் என நீதிமன்றத்தில் வாதிட்டது நினைவிருக்கலாம்.

ஆக அரசின் காரணத்திற்காக (reason de etat) எனச் சொல்லி நெருக்கடி நிலையை அறிவிக்கும் ஒருவர் பூரண இறையாண்மையுடையவர் ஆகிறார். இதை அவர் அரசின் பெயரால் மட்டுமின்றி கொள்கையின் பெயரால், இனம் அல்லது மொழியின் பெயரால், குல மரபுப் பெருமை, சாதி ஆகியவற்றின் பெயராலும்கூடச் செய்து விட முடிகிறது. இந்த ஏதொன்றின் பெயராலும் கருத்தொருமிப்பு முழுமையாய்ச் சாத்தியமில்லாத நிலையில் அவர் அல்லது அவ்வமைப்பு அதிக பட்ச வன்முறை மிக்கதாக மாறிவிடுகிறது. அதன் பலன் மக்கள் மீதே விடிகிறது.

இறையாண்மையின் சர்வதேச அங்கீகாரம் பற்றியும் ராஜன் சொல்கிறார். அதுவும் மிகவும் சிக்கலானதே. சதாமாகட்டும் இல்லை கடாஃபியாகட்டும் ஒரு கட்டத்தில் சர்வாதிகாரிகளை அங்கீகரித்து எதிர்ப்பாளர்களுக்கு எதிராக உளவு உதவிகளைச் செய்யும் சர்வதேச அங்கீகாரம், இன்னொரு கணத்தில் பூரண இறையாண்மை அற்ற அதே எதிர்ப்பாளர்களை அங்கீகரித்து நிற்பதையும் பார்த்தாயிற்று. சர்வதேச அங்கீகாரம் என்பது சட்டபூர்வமான இறையாண்மையைக் காட்டிலும் சர்வதேச மற்றும் பிராந்திய அரசியல் நலன்களை வைத்தே அமைகிறது

ராஜனின் கட்டுரையினூடாக விவாதிக்க வேண்டிய புள்ளிகள் நிறைய இருப்பினும், ஒரு முக நூல் குறிப்பின் எல்லைக்குள் நிற்க வேண்டும் என்பதைக் கருதி ஒன்றை மட்டும் சொல்லி முடிக்கிறேன். ராஜன் இன்று எழுப்பியுள்ள இப்பிரச்சினை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு முன்வைக்கப்பட்டு பெரிதும் விவாதிக்கப்பட்ட ஒன்றுதான். அப்போது அதைச் செய்தவர் நான் பெரிதும் மதிப்பவரும், இரண்டாண்டுகளுக்கு முன் மறைந்தவருமான டாக்டர் பாலகோபால் அவர்கள். அவர் ஒரு களச் செயல்பாட்டாளர் மட்டுமல்ல. இந்தியாவின் மிக முக்கியமான சிந்தனையாளர்களிலும் ஒருவர். EPW இதழ்களில் அவர் எழுதியுள்ள கட்டுரைகளுக்கு ஈடாக மிகச் சிலவற்றை மட்டுமே சொல்ல முடியும்.

காகதீயப் பல்கலலைக் கழகத்தில் கணிதப் பேராசிரியராக இருந்த அவர் கண்முன் நடந்த அரச வன்முரைகளைப் பொறாமல் கணிதத் துறையில் மிக முக்கியமான ஒரு carrier ஐத் துறந்து வேளியேறி மனித உரிமை அமைப்பொன்றில் இணைந்தார். அவர் இறந்தபோது ஒருவர் இப்படி எழுதினார்: ”அவர் கணிதத் துறையிலேயே இருந்திருந்தால் நோபல் பரிசு பெற்றிருப்பார்”. இது மிகைப் படுத்தப்பட்ட கூற்றாகக் கூட இருக்கலாம். எப்படிப்பட்ட வாய்ப்புகளைத் துறந்து அவர் எந்த வகையிலும் சுய முன்னேற்றத்திற்குப் பயனில்லாத மனித உரிமைக் களத்தைத் தேர்வு செய்தார் என்பதற்காக இதைச் சொன்னேன். அவர் இணைந்தது ஒரு மிக முக்கியமான நக்சல்பாரி கட்சியின்  மனித உரிமை அமைப்பு. சுமார் பத்தாண்டு காலம் அதிலிருந்து மிகத் தீவிரமாகப் பணி செய்து அரச பயங்கரவாதங்களை வெளிக் கொணர்ந்தார். அரசின் தாக்குதல்களுக்கும் உள்ளானார். ஒருமுறை அவரைக் காவல்துறையினர் கடத்தியும் சென்றனர். இதற்கிடையில் தமது பணிக்குதவுமென சட்டம் பயின்று வழக்குரைஞரும் ஆனார். அரசின் அத்து மீறல்களுக்கு எதிராகவும், ஏழை எளிய மக்களின் பிரச்சினைகளுக்காகவும் ஏராளமான வழக்குகளை இலவசமாகவும் குறைந்த ஊதியத்திற்கும் நடத்தினார். அவர் இறந்த அன்று சுமார் 500க்கும் மேற்பட்ட எளிய கட்சிக்காரர்கள் கவலையோடு நின்றிருந்ததை ஒரு பத்திரிக்கை குறிப்பிட்டிருந்தது.

1992 என நினைக்கிறேன். அவர்களது அமைப்பின் மாநில மாநாடு ஆந்திர மாநிலத்தில் நடந்தது. தமிழகத்திலிருந்து பேரா. கல்யாணி, தோழர் கோ. சுகுமாரன் ஆகியோரும் பங்கு பெற்றனர். அன்று பாலகோபால் இந்தப் பிரச்சினையை விவாதத்திற்குக் கொண்டு வந்தார். சிவில் உரிமை இயக்கங்களுக்கும் மக்கள் இயக்கங்களுக்குமான உறவை அவர் பிரச்சினைப்படுத்தினார். ஒரு சிவில் உரிமை இயக்கம் சுதந்திரமாக இயங்க வேண்டும். அரச அத்து மீறல்களை மட்டுமல்லாது இயக்கங்களின் அத்து மீறல்களையும் சுட்டிக்காட்டும் திராணி மிக்கதாய் அவை அமைய வேண்டுமானால் அவை மக்கள் இயக்கத்தின் தொங்கு சதையாய் அமையக் கூடாது என்கிற அவர் கருத்து  அன்றிரவு வாக்கு எண்ணிக்கையில் தோற்கடிக்கப்பட்டது. எனினும் அவர் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். பதவி ஏற்க மருத்த பாலகோபால் அமைப்பை விட்டு விலகி சுயேச்சையான Human Rights Forum என்கிற அமைப்பை உருவாக்கி இறுதி வரை செயற்பட்டார்.

அவரது இந்த இரண்டாங்கட்டச் செயற்பாடுகள் என்பன ஏதோஅரசல்லாத அமைப்புகளின் அத்துமீறல்களை வெளிக் கொணர்வதற்காக அர்ப்பணிக்கப் பட்டதாக யாரும் நினைத்தால் அதைவிட அபத்தம் வேறு எதுவும் இருக்க முடியாது. வழக்கம்போல அரச அத்து மீறல்களை அவர் வெளிக் கொணர்ந்து அம்பலப் படுத்தினார். ஆனால் அது அறம் சார்ந்ததாக அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். மனித உரிமைச் செயற்பாடு என்பது மிகவும் அறம் சார்ந்து செயற்பட வேண்டிய ஒன்று.  மக்கள் ஆதரவை இழந்து விடுவோமென்றோ, ஆதரவு அலை அந்தப் பக்கம் வீசுகிறது என்றோ, நம்மை வெறுப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிடும் என்றோ நமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்ள இயலாத ஒன்று.

பாலகோபாலிடமிருந்து இந்த விவாதத்தை ஒட்டி நாம் கற்றுக் கொள்ள வேண்டிய அம்சம் ஏதேனும் இருக்கிறதா என்றால் அது இதுதான். அறம் சார்ந்த நிலைபாட்டையும் அரசியல் நிலைபாட்டையும் அவர் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. வன்முறை வடிவிலான அரசியல் வழிமுறைகள் குறித்த அவரது கட்டுரையின் மொழியாக்கம் எனது இணையப் பக்கத்தில் உள்ளது (amarx.org). வன்முறை வழி முறைக்கு எதிராக அவர் பேசுவது அது அறம் சார்ந்த வழிமுறை அல்ல என்கிற அடிப்படையில் அல்ல. மாறாக அரசியல் ரீதியாகவும் அது தோல்விக்கே இட்டுச் செல்லும் என்பதுதான், தயவு செய்து அந்தக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.

ராஜன் சொல்வதுபோல முதலில் இவர்கள் குற்றவாளிகள் இல்லை எனச் சொல்லி மரண தண்டனைக்கு எதிராக மக்கள் ஆதரவைத் திரட்டுவோம்; அப்புறம் உண்மையிலேயே கொடிய குற்றம் செய்தவர்களானாலும் மரண தண்டனை கூடாது என்கிற கருத்தை அவர்களை ஏற்கச் செய்வது எளிதாகிவிடும் என்பது சாத்தியமல்ல. இது கொக்கு தலையில் வெண்ணை வைத்துப் பிடிப்பது போன்ற செயல். இப்படிச் செய்வதற்குப் பெயர்தான் அரசியல் என்று வேறு ராஜன் சொல்லுகிறார். நாம் புத்திசாலிகள் எனவும் மக்கள் ஏமாளிகள் எனவும் நாம் நினைத்துவிடக் கூடாது.  நீங்கள் அப்படிச் சொல்வீர்களாயின் மக்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா? “உங்களை எங்களுக்குத் தெரியும். முதலில் அவர்களுக்காக வருவீர்கள். அப்புறம் உங்கள் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்துவீர்கள்.”

எனது சமீபத்திய அனுபவம் ஒன்றைச் சொல்லுகிறேன். எங்களோடு மனித உரிமைப் பணிகளில் தொடர்ந்து இணைந்து செயற்பட்டு வருபவரும்  மென் பொருள் பொறியாளருமான ஒரு தோழி, தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் தண்டனையை ரத்து செய்யக் கோரும் எங்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொள்ள கறாராக மறுத்துவிட்டார்.  மூன்று மாணவிகளைக் கொடுமையாக எரித்துக் கொன்ற அரசியல்வாதிகளுக்கு மன்னிப்புக் கூடாது என்பது அவர் கருத்து. மரண தண்டனை குறித்து இப்படி selective ஆக அணுகும் போக்குத்தான் மக்கள் மத்தியில் உள்ளது. இதை நாம் மாற்றியாக வேண்டும். கூடங்குளம் ஆகட்டும், மரண தண்டனை ஆகட்டும் பிரச்சினையை அறம் சார்ந்து கொண்டு செல்லும்போதுதான் இதைச் செய்ய முடியும். அரசியல் ரீதியாகவும் அது பயனுடையதாய் இருக்கும்.  மரண தண்டனையைப் பொருத்த மட்டில், ”மரண தண்டனை ஒழிப்பு என்றால் அது பகத்சிங்குக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு மட்டுமல்ல. கோட்சேக்கு வழங்கப்பட்ட தண்டனையையும் சேர்த்துத்தான் சொல்கிறோம்.  அரசு அளிக்கும் மரண தண்டனையை மட்டுமல்ல, அரசு சாரா அமைப்புகள் கொடுக்கும் மரண தண்டனையையும் எதிர்க்கிறோம்” என்பதே நமது அணுகல் முறையாக இருக்க முடியும். அதுவே மக்கள் மத்தியிலுள்ள selective அணுகல் முறைக்கு மாற்றாக இருக்கும்.

மறுபடியும் சொல்கிறேன் இதன் பொருள் உடனடியாக நாம் எதிர் கொண்டுள்ள மூவரின் மரண தண்டனை எதிர்ப்பை எல்லாவற்றோடும் சேர்த்துக் குழப்புவதல்ல. இன்று மரண தண்டனையை எதிர்க்கும் அரசியல் இயக்கங்கள் பலவும்  இந்த மூவரைக் குறிப்பிட்டு இயங்குபவை. இந்தப் பிரச்சினை முடியும் பட்சத்தில் அவர்கள் இப்போதைப்போல் இதில் ஆர்வம் செலுத்தப் போவதில்லை. நாம் அவர்களோடு சேர்ந்து குரல் கொடுத்த போதிலும் நமது பார்வை மேலும் விசாலமானதாக இருக்க வேண்டும். ஏனெனில் நாம் இந்தப் பிரச்சினையை தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டியவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *