வேலைக்காரிகளின் புத்தகம்

கட்டுரைகள்

les bonnes - ShObA SaKtHi

ShObA SaKtHi

ரிஸ் மெத்ரோ நிலையமொன்றிற்தான் “Les Bonnes” நாடகத்திற்கான விளம்பரத்தை நான் பார்த்தேன். இந்த நாடகத்தைக் குறித்துப் பிரம்மராஐன் எழுதிய கட்டுரையொன்றை அப்போது நான் படித்திருந்தேன். நாடகப் பிரதியை எழுதிய Jean Genet குறித்துத் தமிழ்ச் சிறுபத்திரிகைகள் மூலம் சில குறிப்புகளையும் அறிந்திருந்தேன். அந்தத் தூய்மையற்ற சிறிய நாடக அரங்கு பாரிஸின் புறநகர்ப் பகுதியிற் தொழிலாளர் குடியிருப்புகளிடையேயுள்ள ஒரு சதுக்கத்திலிருந்தது. நாடகத்தின் இயக்குனர் அரங்க வாயிலில் நின்று நுழைவுச் சீட்டுக்களை விற்றுக்கொண்டிருந்தார். அந்த நாடக அரங்கில் முப்பதிற்கும் குறைவான பார்வையாளர்களே இருந்தோம்.

என்னுடைய பிரஞ்சு மொழியறிவு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இருந்து வரும் கடிதங்களைப் படிப்பது, பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளைப் படிப்பது, விளம்பரங்களைப் படிப்பது என்பவற்றுடனேயே என்னுடைய பிரஞ்சு மொழியறிவு அசையாமல் நின்றுவிட்டது. இதற்கு மேலாக நான் பிரஞ்சு மொழியைக் கற்றுக்கொள்ள முயன்ற ஒவ்வொரு தருணங்களிலும் நான் பிரஞ்சு மொழியிடம் தோற்றுக்கொண்டேயிருந்தேன். தவிரவும் ஏற்கனவே பிரஞ்சு மொழி ஜெனேயால் தோற்கடிக்கப்பட்டிருந்தது என்றும் கேள்விப்பட்டிருந்தேன். எனவே நாடகத்தை எவ்வளவு தூரத்துக்கு என்னால் உள்வாங்கிக்கொள்ள முடியும் என்ற கேள்வி என்னை அலைக்கழித்துக்கொண்டிருந்தது. 1947ல் ஜோன் ஜெனே எழுதிய அந்த நாடகத்தைப் பார்ப்பதற்காக அய்ம்பத்து நான்கு வருடங்களிற்குப் பின்பாக நாங்கள் காத்துக்கொண்டிருந்தோம்.

திரை விலகுவதும் க்ளேரின் ஏளனம் ததும்பும் குரல் ஒலிப்பதும் ஒரே கணத்தில் நிகழலாயின. க்ளேர், சோலான்ஜ் இருவரும் இளம் பெண்கள்;சகோதரிகள்;பணிப்பெண்கள். இவர்களைத் தவிர அவர்களுடைய எசமானி, அவளும் இளம் பெண். இவர்கள் மட்டுமே நாடகப் பாத்திரங்கள். மேடையின் நடுவே தொங்கிக்கொண்டிருந்த சுவர்க் கடிகாரத்தின் ‘டிக் டிக்’ ஒலியைத் தவிர வேறு எந்தப் பின்னணி ஒலியோ இசையோ நாடகத்திற்குக் கிடையாது. ஒளி விளக்குகளாற் புள்ளி,வட்டம், முக்கோணங்கள் போடும் சலித்துப் போன உத்திகள் எதுவுங் கிடையாது. ஒலிவாங்கி,ஒலிபெருக்கியுங் கிடையாது. அங்கிருந்தவை எல்லாம் இரு பணிப்பெண்களின் துயரமும் மற்றும் கொலை – தற்கொலை குறித்த உரையாடல்களும்தான். என் வாழ்வில் இதற்கு முன் எந்தவொரு நாடகமும் என்னுட் கிளர்த்தாத மன எழுச்சியை இந் நாடகம் உருவாக்கிக் காட்டிற்று. பின்பு விழுப்புரத்தில் நான் பார்த்த திருநங்கைகளின் நாடகமான ‘மனசின் அழைப்பு” நாடகமும் என்னில் இதையொத்த மன எழுச்சியை உருவாக்கிற்று.

“Les Bonnes” (பணிப் பெண்கள்/ The Maids) நாடகம் எனக்காகவே எழுதப்பட்டிருப்பதாக அக் கணத்தில் எனக்குத் தோன்றியது. அது என்னுடைய நாடகமாக இருந்தது. அப்போது நான் நடசத்திரத் தங்குவிடுதியொன்றில் ‘அறைப் பணியாளனாய்” வேலை செய்து கொண்டிருந்தேன். அந்த நட்சத்திர விடுதி Euro Disneyland வலயத்துள் அதன் நிர்வாகத்திற்குள் இருந்தது. வேலையில் நானும் ஒரு கானா நாட்டுப் பெண்ணும் சோடிகள். எட்டு மணி வேலை நேரத்திற்குள் நாங்கள் நாற்பத்தெட்டு அறைகளைத் தயார் செய்ய வேண்டியிருந்தது. ஒரு அறையைத் தயார் செய்யப் பத்து நிமிடங்கள் என்ற கணக்கு. ஒரு அறையில் இரண்டு கட்டில்களுக்கு ஆறு படுக்கை விரிப்புகள் மாற்றவேண்டும். தொலைக்காட்சி, தொலைபேசி, குளிர்சாதனப் பெட்டி, மின்விசிறி, மேசை, கதிரை,சன்னற் கண்ணாடி, நிலைக்கண்ணாடி எல்லாவற்றையும் மருந்து போட்டுச் சுத்தமாகத் துடைக்க வேண்டும். தரைவிரிப்பை இயந்திரத் துடைப்பானாற் சுத்தப்படுத்த வேண்டும். அறையில் அந்தந்த இடங்களிற் சவர்க்காரங்கள், துண்டுகள், கண்ணாடிக் குவளைகள் என்று சாய்ப்புச் சாமான்களை வைக்க வேண்டும். குளியலறையையும் மலசலக் குழியையும் பவுண் போல மினுக்க வேண்டுமென ஊருப்பட்ட வேலைகள். தவிரவும் விருந்தினர்களின் வேண்டுகோள்களையும் ஏவல்களையும் நிறைவேற்ற வேண்டும்.

கட்டிலுக்குக் கட்டில் ஒரு கொரில்லா போலத் தாவித்தாவித்தான் மிருக உழைப்பு உழைக்க வேண்டியிருக்கும். இங்கே வேலை செய்யும் பெண்களுக்குக் கர்ப்பம் கலைவதற்குக்கூடச் சாத்தியமுள்ளது. அந்த கானா நாட்டுப் பெண் விடுதி நிர்வாகத்தையும், கண்காணிகளையும், கடவுளையும் சில நேரங்களில் என்னையும் திட்டிக்கொண்டே வேலை செய்வார். எரிச்சலின் உச்சியில் தொலைபேசியிலும் கண்ணாடிக் குவளைகளிலும் நிலைக் கண்ணாடியிலும் எச்சிலை உமிழ்ந்து தனது பாவாடையைக் கிளப்பிப் பாவாடையால் துடைப்பார். இந்த வேலைகளிற்காகப் பிரஞ்சு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அடிப்படைச் சம்பளமே எங்களிற்குக் கொடுக்கப்பட்டது. இவ்வளவு வன்கொடுமைகளையும் பொறுத்தாலும் அங்கு நிலவிய விருந்தினர் – பணியாளர்கள் ஒழுங்கைத் தான் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாமல் இருந்தது.

அங்கே அறைப் பணியாளர்களாக வேலை செய்த அய்ம்பதிற்கும் மேற்பட்டவர்களில் ஒருவர் கூட வெள்ளையர் இல்லை. நாங்கள் அனைவருமே ஆசிய-ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த பணியாட்களாக இருந்தோம். அங்கே தங்கவரும் விருந்தினர்கள் வெள்ளையர்களாகவே இருந்தார்கள். விடுதி நிர்வாகம் விருந்தினர்களோடு பழகும் ‘நாகரீக’ முறைமைகள் குறித்து எமக்கு ஓயாமற் பயிற்சி வகுப்புக்களை நடாத்தியது. நாங்கள் எந்தக் கட்டத்திலும் நாகரீகத்திலும் கடமையிலுமிருந்து வழுவிவிடாமல் இருப்பதற்காகக் கண்காணிகள் எங்களைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள். Euro disneylandல் வேலை செய்யும் பணியாளருக்கு மீசை வைத்திருக்க அனுமதியில்லை. முடியை ஒட்ட வெட்டியிருக்க வேண்டும். கறுப்பு நிறத்திற் தான் காலுறைகளும் காலணிகளும் அணிய வேண்டும். அங்கே எனக்கு வழங்கப்பட்ட சீருடைகளான கறுப்புநிறக் காற்சட்டையும் சிவப்பு நிறக் ‘கோட்’டையும் கழுத்துப்பட்டியையும் ஓலைத் தொப்பியையும் அணிந்துகொண்டு கிளின்ட் ஈஸ்ற்வுட் ‘கெட்டப்’பில் வேலைத்தளத்தில் நான் திரிந்துகொண்டிருந்தேன். வேலைத்தளம் முழுவதும் ஒரு இராணுவ ஒழுங்கு நிலவியது.

2

நாடக அரங்கிலிருந்து வெளியே வரும்போது ஜெனேயின் ஆடு-புலி-புல்லுக்கட்டு மொழி என்னை உலைத்துக் கொண்டேயிருந்தது. கற்பனையின் எண்ணற்ற சாத்தியங்களால் எழுதப்பட்டிருந்த அந்த நாடகத்தின் ஒவ்வொரு சொற்களையும் நாடகத்தின் ஒரு தமிழ் மொழிபெயர்ப்பைப் படிப்பதால் மட்டுமே என்னால் புரிந்துகொள்ள முடியும் எனத் தோன்றியது. அடுத்து வந்த நாட்களில் Les Bonnes நாடகப் புத்தகமும் நானுமாக அலைந்து கொண்டிருந்தேன். அந்த நாடகத்தைப் பிரஞ்சிலிருந்து தமிழிற்கு மொழிபெயர்ப்பதற்கான ஒருவரை என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

நான் தமிழ்நாடு சென்றிருந்தபோது சாருநிவேதிதாவுடன் பேசிக்கொண்டிருக்கையில் இந்த நாடகத்தைக் குறித்துப் பேச்சு வந்தது. சாருநிவேதிதா நாடகத்தை ஆங்கில மொழிபெயர்ப்பிற் படித்திருந்தார். சாரு நாடகத்தை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கலாம் என்றும் கோபிகிருஷ்ணன் நன்றாக மொழிபெயர்க்கக் கூடியவர் என்றும் யோசனை சொன்னார். Les Bonnes நாடகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பான The Maids புத்தகம் அ.மங்கையிடம் கிடைத்தது. மங்கை அந்த நூலைப் பிரதியெடுத்துத் தந்தார். அந்தப் பிரதியுடன் நானும் சாருவும் கோபிகிருஷ்ணனை அவரின் வீட்டிற் சந்தித்தோம். அந்தச் சந்திப்புத்தான் எனக்குக் கோபிகிருஷ்ணனுடனான முதலாவது சந்திப்பாகவும் கடைசிச் சந்திப்பாகவுமிருந்தது. அந்த நாடகப் பிரதியின் மொழிபெயர்ப்புப் பணியை கோபிகிருஷ்ணன் ஏற்றுக்கொண்ட போது அவர் தனது இறுதி நாட்களை வாழ்ந்துகொண்டிருந்தார்.

ஒரு மாதத்திற் கோபிகிருஷ்ணன் தனது தமிழ் மொழிபெயர்ப்பைத் தபால் மூலம் எனக்கு அனுப்பி வைத்தார். அந்த மொழிபெயர்ப்பைப் படித்தபோது நான் பெருத்த ஏமாற்றத்தையடைந்தேன். கோபியின் உடல் நிலை மொழிபெயர்ப்பில் அவர் முழுவதுமாகக் கவனத்தைச் செலுத்துவதற்கு இடையூறாக இருந்திருக்கலாம். தட்டையான மொழியில் சலிப்பூட்டுவதாக மொழிபெயர்ப்பு இருந்தது. அப்போது தேவா சுவிஸிலிருந்து பிரான்சுக்கு வந்திருந்தார். தேவா ஏற்கனவே சில ஆங்கில – தமிழ் மொழிபெயர்ப்புகளை ‘மனிதம்’ இதழ்களிற் செய்திருந்தார். கோபிகிருஷ்ணனின் மொழிபெயர்ப்பை நான் அவரிடம் காட்டினேன். வாசித்து விட்டு அவரும் என் மாதிரியே அபிப்பிராயப்பட்டார். கடைசியில் தேவா The Maids நாடகப் பிரதியைத் தானே தமிழில் மொழிபெயர்த்துத் தருவதாகச் சொன்னார்.

சில நாட்களில் மொழிபெயர்ப்பை முடித்தக்கொணடு தேவா மறுபடியும் பிரான்சுக்கு வந்தார். தேவாவின் மொழிபெயர்ப்பு எனக்குத் திருப்தியாயிருந்தது. நாடகத்தின் பிரஞ்சுப் பிரதி, ஆங்கிலப் பிரதி, கோபிகிருஷ்ணனின் மொழிபெயர்ப்பு, தேவாவின் மொழிபெயர்ப்பு என எல்லாவற்றையும் விரித்து வைத்துக்கொண்டு நானும் தேவாவும் சில நாட்கள் உழைத்து தேவாவின் பிரதியைச் செப்பம் செய்தோம். அந்தச் செப்பனிட்ட மொழிபெயர்ப்புப் பிரதியை நானும் சுகனும் தொகுத்த ‘கறுப்பு’ தொகுப்பு நூலில் வெளியிட்டோம். அந்த மொழிபெயர்ப்பைப் படித்த எல்லோருமே அதுவொரு மோசமான மொழிபெயர்ப்பு என்றார்கள்.

3

சோலான்ஜ்/ க்ளேர் இருவரும் பணிப்பெண்கள்,சகோதரிகள், முப்பதிலிருந்து முப்பத்தைந்து வயதிற்குள் இருப்பவர்கள். சோலான்ஜ் மூத்தவள். அவர்களின் எசமானிக்கு ஏறத்தாழ இருபத்தைந்து வயதிருக்கலாம். பணிப்பெண்கள் இருவரும் எசமானியின் வீட்டில் ஒரு இருட்டுப் பொந்து போன்ற வேலைக்காரிகளிற்கான அறையில் வசிக்கிறார்கள். எசமானியின் காதலன் திருட்டுக் குற்றத்திற்காகக் காவற்துறையால் கைதுசெய்யப்பட்டிருந்தான். ஒரு மொட்டைக் கடிதத்தின் பெயரிலேயே அவன் கைது செய்யப்பட்டிருந்தான். அந்த மொட்டைக் கடிதத்தை இளைய பணிப்பெண்ணான க்ளேர் தான் காவற்துறைக்கு அனுப்பியிருந்தாள். அந்த மொட்டைக் கடிதத்தை எழுதி அனுப்பியவர் யார் என்பதை எந்த நேரத்திலும் எசமானி கண்டுபிடித்து விடக் கூடும் என்று இரு சகோதரிகளும் அச்சத்தில் உழன்றுகொண்டிருந்தார்கள்.

எசமானி வீட்டில் இல்லாத போது எசமானியின் படுக்கை அறையுட் பணிப்பெண்கள் இருவரும் ‘விளையாட்டுத்’ தனமான ஒரு நாடகத்தை நடத்துகிறார்கள். இந்த நாடகத்திற் க்ளேருக்கு எசமானியின் பாத்திரம். அவள் எசமானியின் உடைகளாலும் ஒப்பனைப் பொருட்களாலும் தன்னை எசமானி போலவே அலங்கரித்துக்கொண்டிருக்கிறாள். சோலான்ஞ்சுக்கு இப்போதும் பணிப்பெண் பாத்திரம்தான். எசமானியாகத் தன்னைப் பாவனை செய்து கொள்ளும் க்ளேர் ஏளனமும் திமிருமாகப் பணிப்பெண்ணை அவமதிக்கத் தொடங்குகிறாள். பதிலுக்குப் பணிப்பெண் இரட்டிப்பாக எசமானி பாத்திரமேற்றவளை – எசமானியாகப் பாவனை செய்து – அவமதிக்கத் தொடங்குகிறாள். எசமானி தன் காலணிகளைச் சுத்தம் செய்யச் சொல்லும்போது பணிப்பெண் காலணியில் எச்சிலை உமிழ்ந்து எச்சிலால் சுத்தம் செய்கிறாள். பின் எசமானியின் கன்னத்தில் அறைகிறாள். ‘நீ ஒரு திருடனின் காதலி’ என்று எசமானியை ஆத்திரமூட்டுகிறாள்.

இரு பெண்களினதும் உரையாடல் மூலம் மேடையில் ஜெனெ ‘கிரனட்டுகளை’ உருட்டிக்கொண்டிருக்கிறார். பணிப்பெண்களின் அவலமான வாழ்க்கை, அவர்களுக்குப் பாற்காரன் மரியோவுடன் உள்ள ‘கள்ளக்’ காதல், எசமானர்களின் அயோக்கியத்தனமான போலி வாழ்வு என்று எல்லாவற்றையும் ஜெனே எழுதிச் செல்கிறார். க்ளேர் தனது எசமானியைக் கழுத்தை நெரித்துக் கொலைசெய்ய முயன்று தோற்றுப்போனதும் தெரியவருகிறது. பணிப்பெண்கள் நடத்தும் நாடகத்தின் மையம் தமது எசமானியைக் கொலை செய்வது குறித்தும் கொலை செய்வதற்கான நியாயங்களை தேடிச் செல்வதுமாகவே இருக்கிறது. ஆனால் எப்பொதுமே இவர்களின் நாடகம் எசமானியைக் கொலை செய்யும் அந்த உச்சக்கட்டத்தைச் சென்றடைவதில்லை. நாடகத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போதே உச்சக்கட்டத்தை சென்றடைவதைப் பற்றி இருவருக்கும் குழப்பம் ஏற்பட்டு விடும். “நாம் உச்சக் கட்டத்தை சென்றடைய முடியாததற்கு நீ தான் காரணம்” என இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொள்கிறார்கள். மறுபடியும் நாடகத்தை முதலில் இருந்து தொடங்குகிறார்கள். இப்போது எசமானியின் பாத்திரம் மூத்த சகோதரி சோலாஞ்க்கு. திரும்பவும் எசமானி பணிப்பெண்ணையும் பணிப்பெண் எசமானியையும் மாறி மாறி அவமானப்படுத்தும் சொற்களுடன் தொடரும் நாடகம் இந்த முறையும் கொலை செய்யும் உச்சக்கட்டத்தை அடைய முடியாமலேயே நிறுத்தப்படுகிறது. வெளியே சென்றிருக்கும் அவர்களது எசமானி வீட்டிற்கு திரும்பும் நேரம் நெருங்குகிறது. பணிப்பெண்கள் இருவரும் எசமானியின் தேனீருக்குள் விசத்தைக் கலந்து கொடுத்து எசமானியைக் கொலை செய்யத் திட்டமிடுகிறார்கள். அவர்களின் எசமானி வீடு திரும்பியபோது அவளுக்காக விசம் கலந்த தேனீர் தயாராகவுள்ளது.

எசமானி தனது காதலனைத் தேடி அலைந்து மிகுந்த களைப்புடன் வீட்டுக்குத் திரும்பி வந்துள்ளாள். அவளுக்குப் பணிப்பெண்கள் இருவரும் ஆறுதல் சொல்கிறார்கள். பணிப்பெண்களின் மிதமிஞ்சிய பரிவால் எசமானி நெகிழ்ந்து போகிறாள். “உனது பரிவு என்னைக் கோபம் கொள்ள வைக்கிறது, உன் பரிவு என்னை நசுக்குகிறது, என்னைச் செயலற்றுப் போகச் சொல்கிறது” என்று சோலான்ஜிடம் எசமானி சொல்கிறாள். பதிலுக்கு சோலான்ஜ் எசமானியின் இரக்கத்தையும் கருணையையும் புகழ்கிறாள். எசமானி தனது பழைய ஆடைகளையும் தொப்பியையும் பணிப்பெண்களுக்குத் தானமாகக் கொடுக்கிறாள். அப்போது எசமானியின் காதலன் விடுதலை செய்யப்பட்டுவிட்டதாகத் தகவல் கிடைக்கிறது. உடனே எசமானி துள்ளலுடன் மீண்டும் வெளியே புறப்படுகிறாள். அப்போது க்ளேர் எசமானியைத் தடுத்து நிறுத்தித் தேனீரைக் குடிக்கச் சொல்கிறாள். எசமானி தேனீர் வேண்டாம் என்கிறாள். க்ளேர் தேனீரைக் குடிக்குமாறு எசமானியை மிரட்டும் கட்டத்திற்கு நகரும் போது சோலான்ஜ் தன் சகோதரியைத் தடுத்து வடுகிறாள். எசமானி வெளியேறுகிறாள்.

எசமானி இல்லாத வீட்டில் சகோதரிகள் இருவரும் தமது விளையாட்டை மீண்டும் தொடங்குகிறார்கள். ஆனால் இம்முறை அது மரண விளையாட்டு. இப்போது க்ளேருக்கு எசமானியின் பாத்திரம். அவள் மூர்க்கத்துடன் சோலான்ஜை வார்த்தைகளால் அவமதிக்கத் தொடங்குகிறாள். பதிலுக்கு தன்னை அவமதிக்குமாறு சோலான்ஜிடம் கேட்கிறாள். “இழிவு படுத்தலை ஆரம்பி அதனைக் கட்டவிழ்த்து விடு! அது என்னை மூழ்கடிக்கட்டும். எனக்கு வேலைக்காரர்களை அடியோடு பிடிக்காது. அடிமைப் புத்தியுள்ள இழிவான அருவருப்பான சமூகம் அது. அவர்கள் மனித இனத்திற் சேர்த்தியில்லாதவர்கள், நாற்றம் பிடித்தவர்கள், அழுக்கின் ஊற்றுக்களான அவர்கள் எங்கள் வாய் வழியாக உட்புகுந்து எங்களை அழுக்காக்குபவர்கள்!” என்கிறாள் க்ளேர். பதிலுக்கு சோலான்ஜ் க்ளேரை எசமானியாகப் பாவனை செய்து இழிவுபடுத்தலைத் தொடங்குகிறாள். “ம்.. மதாம் என் முன்னே மண்டியிடு ! ஆகா!! உன் அழகிய கரங்களை மடக்கிய விதம் எவ்வளவு அழகாக இருக்கிறது, உன் கண்ணீர் மலர்கள் உன் அழகிய முகத்தில் வழிகிறது, தரையில் ஓர் புழுப்போல் ஊர்ந்து செல்!” என்று சோலான்ஜ் க்ளேரைச் சவுக்கால் அடிக்கிறாள்.

இம்முறை அவர்கள் மெது மெதுவாகத் தமது நாடகத்தின் உச்சக்கட்டத்தை நெருங்கி விடுகிறார்கள். உச்சக்கட்டத்தில் மூத்த சகோதரி சோலான்ஜ் பின்வாங்கத் தொடங்குகிறாள் ஆனால் எசமானி பாத்திரம் ஏற்றிருந்த க்ளேர் உறுதியோடு நாடகத்தை தொடர்கிறாள். தனக்கு தேனீர் வழங்கச் சொல்லிச் சோலான்சுக்குக் கட்டளையிடுகிறாள். சோலான்ஜ் தயங்குகிறாள் “தயாரித்திருந்த தேனீர் ஆறிப் போய்விட்டது” என்கிறாள். “பரவாயில்லை கொடு” என்கிறாள் க்ளேர். “நீ என்னைத் திணறடிக்கிறாய்” என்கிறாள் சோலான்ஜ். “வேசியே என் கட்டளைக்குப் பணிந்து போ! தேனீரைக் கொடு! நான் தூங்க வேண்டும்!”. என்கிறாள் க்ளேர். சோலான்ஜ் தேனீரைக் கொடுக்க க்ளேர் அதைக் குடிக்கிறாள். இப்போது அந்த இரு பணிப்பெண்களும் தமது நாடகத்தின் உச்சக்கட்டக் காட்சியை நிகழ்த்திக் காட்டிவிட்டார்கள்.

4

அந்தப் பணிப்பெண்கள் மீது பார்வையாளர்களுக்குப் பச்சாதாபத்தை ஏற்படுத்தும் நாடகமாகவோ, திடுக்கிடும் முடிவைக் கொண்ட விநோத நாடகமாகவோ இந்த நாடகம் தன்னளவில் நின்று விடுவதில்லை. ஜெனே தனது அரசியலை – விளிம்பு நிலை மனிதரின் அரசியலை – செறிவும் நுட்பமும் விளையாட்டுத்தனமும் நிறைந்த தனது மொழியால் நூல் முழுவதும் எழுதிச் செல்கிறார். இந்த நாடகத்தில் வரும் எசமானி ஜெனேயால் கொடுமைக்கார ‘வில்லி’யாகச் சித்திரிக்கப்படுவதில்லை, அவள் ஜெனே காலத்து வெள்ளைச் சீமாட்டிகளின் கிறீஸ்தவ அறங்களையும் கருணையையும் அன்பையும் ஏமாளித்தனமான காதலையும் கொண்டவளாகவும் காதலனைப் பிரிந்து துடித்துக் கொண்டிருக்கும், தனது காதலனைத் தீவாந்திரத் சிறைவரை பின்தொடர ஆயத்தமாகவிருக்கும் பாவப்பட்டவளாகவுமே அவள் ஜெனேயால் சித்திரிக்கப்படுகிறாள். அவள் கொலை செய்யப்பட வேண்டியவள்தான் என்ற நியாயத்தை ஜெனே பிரதியில் பேசுவதில்லை. ஆனால் துயரத்தில் உழன்று கொண்டிருக்கும், இருட்டுப் பொந்துக்குள் வியர்வை நாற்றமும் அழுக்கும் மூழ்கடிக்க அழுந்திக்கொண்டிருக்கும் இரு பணிப்பெண்களிற்கும் கொலை செய்வதற்கான நியாயத்தை ஜெனே பிரதியில் அழுத்தமாக உருவாக்கிக் காடடுகிறார்.

JeAn GeNeT.....

ஜோன் ஜெனே மணமாகாத பெண்ணுக்குப் பிறந்த குழந்தை. ஜெனே தெருப் பொறுக்கியாகவும் திருடனாகவும் தண்டனைக் கைதியாகவும் ஓரினச் சேர்க்கையாளனாகவும் சமூகத்தின் ஒழுங்குகளுக்குப் புறம்பாக இறுதிவரை வாழ்ந்தவர். கிறிஸ்தவ ஒழுக்கவியல்மீதும் வெள்ளை முதலாளிய அறங்கள் மீதும் ஆண் முதன்மைச் சமூகத்தின்மீதுமான அவரது எதிர்ப்புக் குரல் பிரதியில் ஒவ்வொரு வரிகளிடையேயும் எக்காளமிடுகிறது.
போல் லஃபார்க்கின் “The Right To Be Lazy” என்ற கட்டுரையையும் பொப் பிளாக்கின்”The Abolition Of Work” என்ற கட்டுரையையும் அண்மையில் வளர்மதி தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். இந்த இரு கட்டுரைகளையும் ஒரு நாடகப் பிரதியாக எழுத முற்பட்டால் அது Les Bonnes நாடகமாகத்தான் வருமென்று எனக்குத் தோன்றுகின்றது.

“கிறிஸ்துவ அறவியலின் கேலிக்குரிய, இரங்கத்தக்க போலியான முதலாளிய அறவியல், கொஞ்சங்கூட வெட்கமில்லாமல் உழைப்பாளிகளின் உடல்களின்பாற் தன் வெறுப்பு அத்தனையையும் கொட்டுகிறது. உழைப்பாளர்களை மிகக் குறைந்த தேவைகள் மட்டுமே உடையவர்களாகச் சுருக்கி, அவர்களுடைய உணர்ச்சிகளையும் நாட்டங்களையும் ஒடுக்கி இயந்திரத்தின் பகுதியாக அவர்களை மாற்றி, உழைப்பு என்பதை எந்த மரியாதையும் அற்ற ஓய்வு ஒழிச்சலற்ற ஒரு சுமையாக மாற்றி விடுவதென்பதே அதன் கனவாக இருக்கிறது” என்பார் போல் லாஃபார்க்.

இந்தக் கொடுங்கனவின் இரத்த சாட்சிதான் ஜெனேயின் க்ளேர். எல்லாப் பணிப்பெண்களின் அவலங்களும் க்ளேரின் உடலைச் சூழ மிதக்கின்றன. இன்றும் பிரான்சின் பெரிய வில்லாக்களினதும் கடந்த நூற்றாண்டுகளின் பெருமைகளைப் பீற்றிக்கொண்டிருக்கும் அடுக்கு மாளிகைகளினதும் வேலைக்காரர்களுக்கான இருட்டுப் பொந்து அறைகளிற்குள் அந்த அவலங்கள் திரிந்து கொண்டுள்ளன. பரிதாபத்துக்குரிய க்ளேர், சோலான்சுகளுடன் இப்போது பாத்திமா, மைமூன், பிந்து, அமுதா, கவிதாக்களுடைய அவலங்களும் பிரான்சின் சுதந்திரம் – சமத்துவம் – சகோதரத்துவம் என்ற கல்வெட்டுக்களில் படிந்துள்ளன.

“இதுவரை உழைத்தது போதும் எனவே உலகத் தொழிலாழர்களே ஓய்வெடுங்கள்!” என்றார் பொப் பிளாக். அவர் எழுதுகிறார்: “இதன் அர்த்தம் சும்மா இருப்பதே சுகம் என்பதல்ல. மாறாக விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு அமைந்த ஒரு புதிய வாழ்க்கை முறையை உருவாக்க வேண்டுமென்பதேயாகும். மகிழ்சியாகக் கூடி,உண்டு, மது அருந்தி மயக்கங் கொண்டு கொண்டாடுகிற ஒரு வாழ்க்கை முறையை, இன்னமும் சொல்லப் போனால் கலையை, கலைமயமான ஒரு வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்பதாகும்.” ஜெனேயின் சோலான்ஜ், க்ளேரிடம், தனது சகோதரியிடம் “நான் உனக்கு உதவத்தான் விரும்புகிறேன்… ஆனால் நான் உன்னை வெறுக்கிறேன். உன்னைக் காணவே எனக்குப் பிடிக்கவில்லை. ஏனெனில் நீயும் என்னை வெறுக்கிறாய். இரண்டு அடிமைகள் ஒருவரை ஒருவர் நேசிக்க முடியாது” என்கிறாள். உழைப்புக்கு அடிமைகளாக்கப்பட்ட நாம் நமது சக மனிதரை நேசிப்பதற்கு உழைப்பிலிருந்து மட்டுமல்ல நவீன முதலாளியம் சிருட்டித்துள்ள உழைப்புக் குறித்த புனிதக் கட்டுக் கதைகளிலிருந்தும் நம்மை விடுவிப்பதே முன் நிபந்தனையாக இருக்கும். இது சாத்தியப்படாதவரை தற்கொலை மற்றும் கொலை குறித்த சிந்தனைகளையும் உரையாடல்களையும் எத்தனங்களையும் நாம் எப்படி எம்மிடையேயிருந்து துரத்திவிட முடியும்? இந்தக் கேள்வியைத் தான் Les Bonnes பிரதியின் ஆதாரமான கேள்வியாக என்னால் கொள்ள முடிகிறது.

பவுத்தர்களுக்கு ‘தம்மபதம்” புனித நூல். உலகத் தொழிலாளர்களுக்கு ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ மூல ஆவணம். கொரில்லாப் போராளிகளுக்கு சே குவேராவின் ‘கொங்கோ பயண நாட்குறிப்புகள்” முக்கியமான வழிகாட்டி நூல். இவை போன்று வேலைக்காரிகளுக்கு என்று ஒரு புத்தகம் இருந்தால் அது ஜெனேயின் Les Bonnes நாடக நூலாகவிருக்கும்.

5 thoughts on “வேலைக்காரிகளின் புத்தகம்

  1. இந்தப் படத்தை இப்ப ரிலீசாக்க என்ன அவசரம்? லெக்சன் முடியும்வரைக்கும் முதல்படத்தையே ஓடவிட்டிருக்கலாமே!

  2. முதல்படத்தை ஓடவிட்டிருந்தால் 6ம் திகதிக்கு பிறகு சுகன் கோவணம் இல்லாமல் திரியிற காட்ச்சி ஒளிபரப்பவேண்டிவரும் எண்டுதான் மாத்தினவை போலை.

  3. தேனி இணையத்தளத்தையும் சத்தியக் கடதாசியையும் ஒன்றாக இணைத்துவிடுவதுதான் புத்திசாலித்தனமானது. இரண்டு தளங்களும் கருத்தொற்றுமை கொண்டவையாக உள்ளதால் இரண்டையும் ஒன்று படுத்துவதால் ஜனநாயக சக்திகளின் பலத்தை அதிகரிக்கலாம் என்பது என் கருத்து.

  4. இதென்ன புத்தகமே வந்தபிறகு கட்டுரை போட்டிருக்கிறீர்கள்?

  5. ஷோபா சக்தி அவர்களுக்கு நான் உங்களது அனைத்து படைபப்புகலளையும் படித்தேன்.நீங்கள் பேசும் இடது சாரி தத்துவம் தோல்வி அடைந்து விட்டது.மிக விரிவான விமர்சனத்தோடு பிரிதொரு நாளில் மீண்டும் சந்திப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *