எதிர்வினை: அ.மார்க்ஸ்

கட்டுரைகள்

‘அம்மா’ இதழில் யமுனா ராஜேந்திரன் எழுதிய “பின்நவீனத்துவம், தலித்தியம், மார்க்ஸியம்” என்ற கட்டுரைக்கு எதிர்வினையாகத் தோழர்.அ.மார்க்ஸ் எழுதிய “அவதூறுகளுக்குப் பதிலளிப்பது அலுப்பைத்தான் தருகிறது” என்ற கட்டுரை ‘அம்மா’ இதழ் 10ல் வெளியாகிற்று. யமுனா தத்துவார்த்தப் போர்வைக்குள் பதுங்கிக்கிடந்து எழுதிய அவதூறுகளுக்குப் பதிலளித்திருந்த அ. மார்க்ஸ் யமுனாவின் திடீர் மார்க்ஸிய வேடத்தையும், யமுனாவின் கட்டுரையில் பொதிந்திருந்த ஆதிக்கசாதித் திமிரையும், யமுனாவின் அறிவுஜீவி நாடகத்தையும் தோலுரித்திருந்தார். இன்று ‘தேசம்’ இணையத்தளத்தில் யமுனா தொடக்கிவைத்து ‘சத்தியக் கடதாசி’யில் நடந்து கொண்டிருக்கும் விவாதங்களின் அடிப்படைகளைத் தோழர்கள் மேலும் விளங்கிக் கொள்வதற்காக அ.மார்க்ஸின் அந்த எதிர்வினையை இங்கே வலையேற்றுகிறோம். தேசத்தில் யமுனா பின்நவீனத்துவம், தலித்தியம் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கான பதில்களும் இந்தக் கட்டுரையிலுள்ளன. இதன் பொருள் அ.மார்க்ஸ் இன்றைய கேள்விகளுக்கெல்லாம் பத்து வருடங்களுக்கு முன்னதாகவே பதிலளிக்கும் வல்லமை வாய்ந்த பேரறிஞர் என்பதல்ல. மாறாக, யமுனா ராஜேந்திரனின் அரசியல் – இலக்கிய அறிவு பத்து வருடங்களாக வளரவேயில்லை என்பதுதான் இதன் பொருள் என சத்தியக் கடதாசி வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறது.

‘அம்மா’ ஆசிரியர் குழுவினருக்கு,

வணக்கம். கடிதத்திற்கு நன்றி. தாங்கள் எழுதியிருப்பதுபோல நான் ரொம்ப பிஸியானவனெல்லாம் இல்லை. பின்நவீனத்துவத்தையும் தலித்தியத்தையும் கடுமையாகத் தாக்கி திரு. யமுனா ராஜேந்திரன் எழுதிய கட்டுரைத் தொடருக்கு (அம்மா 7-8), நான் பதில் எழுதாமைக்குக் காரணங்கள் வருமாறு:

1. பின்நவீனத்துவம் தலித் அரசியல் ஆகியவற்றுக்கு எதிராக ஏற்கனவே பலமுறை முன்வைக்கப்பட்ட தாக்குதல்களுக்கு மேலாக ய.ரா எதையும் புதிதாக எழுதிவிடவில்லை. எ-டு: குவிக்கப்பட்ட அதிகாரத்திற்கு எதிராகப் போராடுகிற சக்திகளைப் பலவீனப்படுத்தல், அவநம்பிக்கைவாதம், மார்க்ஸியத்திற்கு எதிரானது, மேற்கத்திய மதிப்பீடுகளைச் சரணடைதல், ஜாதியம் சார்ந்த குறுங்குழுவாதக் கருத்துநிலை, இலக்கியத்தின் முக்கியத்துவத்தை அறியாமை….

இவை அனத்திற்கும் நாங்கள் ஏற்கனவே பலமுறை திரும்பத் திரும்பப் பதில் சொல்லிக் களைத்தாயிற்று. இதற்கு மேல் விவாதத்தைக்கொண்டு செல்லல் என்பது இவ்வாறு நாங்கள் சொன்ன பதில்களை மறுத்தல், அவற்றின் போதாமையைச் சுட்டிக்காட்டல் என்பதாகத்தான் இருக்க வேண்டுமேயொழிய அவற்றை இருட்டடிப்புச் செய்து மீண்டும் பழைய தாக்குதல்களையே முழக்கும்போது அது விமர்சனம் என்ற நிலையைத்தாண்டி அவதூறு என்ற நிலையை அடைகிறது.

2. இத்தகைய கருத்தியல் ரீதியான அவதூறுகள் தவிர நேரடியான தனிநபர் மீதான அவதூறுகளாகவும் அம்மாவில் வெளிவந்துள்ள கட்டுரைகள் அமைந்து மனச்சோர்வை ஏற்படுத்துகின்றன. எ-டு: கிறிஸ்தவச் சார்பு எழுத்து, நாகரிகமின்மை, வன்முறைத் தன்மை, தட்டையான வாசிப்புத் தன்மை…

தவிரவும் துடைப்பான் என்பவர் எழுதியுள்ள (அம்மா-8) கட்டுரை தன்னார்வக் குழுக்களால் இயக்கப்படுபவர்களாக எங்களைச் சித்திரிப்பது மிகவும் வருத்தத்திற்குரியது. இதை எழுதியுள்ள துடைப்பானும் இதை வெளியிட்ட ‘அம்மா’வும் இதை நிறுவுவதே நேர்மையான காரியமாக இருக்க முடியும். துடைப்பானின் கட்டுரையில் நான் அந்தோனிசாமி மார்க்ஸ் எனக் குறிப்பிடப்பட்டுள்ளேன். எழுத்துத் துறையிலோ இல்லை வேறெந்தத் துறையிலோ நான் அவ்வாறு அறியப்பட்டவனல்ல. இவ்வாறு தலைப்பெழுத்தை விரித்தெழுதுவது எங்கள் மரபுமல்ல. மேலும் துடைப்பானோ இல்லை ‘அம்மா’வோ பிற எழுத்தாளர்களைக் குறிப்பிடும்போது (எஸ்.வி.ராஜதுரை, கோ. கேசவன் ) அவ்வாறு தலைப்பெழுத்தை விரித்து எழுதுவதுமில்லை. எனது பெயரை மட்டும் இவ்வாறு குறிப்பிடுவதின் உள்நோக்கம் என்ன? எனது விருப்பம் அதுவல்ல என்பதும் பலமுறை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் அவ்வாறு குறிப்பிடுவதென்பது ‘அம்மா’ என்மீது பகையுணர்வு கொண்டுள்ளதையே காட்டுகிறது.

3. தோழர்கள் சேனன் (அம்மா- 8 ) ஷோபாசக்தி (அம்மா-9) ஆகியோரின் கட்டுரைகள் மேற்படி அவதூறுகளின் பலவீனங்களைச் சரியாகவே சுட்டிக்காட்டுகின்றன. பின்நவீனத்துவம் மற்றும் தலித் அரசியலின் நிலைப்பாடுகளை மிகச் சரியாகவும் புரிந்து அவை எழுதப்பட்டுள்ள நிலையில் எனது பதில் அதிகப்படியானதாக இருக்குமோ என அய்யமாக இருந்தது.

எனினும் புலம்பெயர் சூழலில் பின்நவீனத்துவம், தலித் அரசியல் முதலியவை ஒரு முக்கிய விவாதப்பொருளாக மாறியுள்ள சூழலில் மேற்குறிப்பிட்ட அவதூறுகளின் இலக்காக நிறுத்தப்பட்டள்ள நான் ஒதுங்கிக்கொள்ளல் சரியாக இராது. மேலும் தனிநபர் அடிப்படையிலான சில தாக்குதல்களுக்கு நான் விளக்கமளித்தல் கடமையாகிறது. இந்த வகையில் முதலில் சில தன்னிலை விளக்கங்கள்:

1. அமைப்புரீதியான செயற்பாடுகளை எங்கள் எழுத்துகள் மூலமாகவோ நடைமுறைகளினூடாகவோ நாங்கள் என்றும் மறுத்ததில்லை. எல்லாச் சந்தர்ப்பங்களிலும் – இன்னும் கூட- நாங்கள் ஏதேனும் ஒரு அமைப்பில் நின்றே செயற்படுகிறோம். ஆதிக்க சக்திகளுக்கு எதிரான எங்களது இயக்கரீதியான செயற்பாடுகளின் விளைவாக இன்றளவும் நாங்கள் அரச வன்முறைகளுக்கு மட்டுமல்ல, பாஸிச அமைப்புகளின் தாக்குதல்களுக்கும் கண்காணிப்புகளுக்கும் இலக்காகி நிற்கிறோம்.

2. எங்கள் செயற்பாடுகள், வெளியீடுகள் எல்லாவற்றிற்கும் நாங்கள் மக்களைச் சார்ந்தே நிற்கிறோம். எங்களது நூற்கள் இதுவரை இடது சார்புடைய சிறு சிறு வெளியீட்டு நிறுவனங்களால்தான் வெளியிடப்படுகின்றன. அல்லது எங்கள் சொந்தச் செலவில் மிக நெருக்கமான நண்பர்களின் உதவியோடு வெளியிடப்படகின்றன. ‘விளிம்புநிலை ஆய்வுகளும் தமிழ் கதையாடல்களும்’ என்கிற நூலை முழுப்பணம் செலுத்தி அச்சகத்திலிருந்து வெளிக்கொணர்வதிற்கு எங்களுக்கு முன்று மாதங்களாயின.

3. எங்கள் எழுத்துகளில் நாங்கள் மிகுந்த நேர்மையையும் கண்ணியத்தையும் கடைப்பிடிக்கிறோம். விவாதங்களினூடாக எழுதப்பட்ட சில சொற்களை அல்லது வரிகளை முன்னும் பின்னும் சூழலிலிருந்து விலக்கி எடுத்து ஆதாரங்காட்டுவது நேர்மையான விவாதமல்ல. எத்தகைய விவாதங்கள், தாக்குதல்கள் அவதூறுகளுக்குப் பதிலாக நாங்கள் இவ்வாறு எழுத நேர்ந்தது என்பதைச் சொல்வதே சரியாக இருக்கும். ‘புதிய ஜனநாயகம்’ இதழுக்கு ‘நிறப்பிரிகை’யில் அளித்த பதில் குறித்து எழுதும் ய.ரா. ‘மருதையன், வீரசாமி ஆகியோரின் அன்னையரது படத்தை வெளியிட முடியுமா எனக் கேட்டது நிறப்பிரிகையின் ஆணாதிக்க மனோபாவத்தைக் காட்டுவதா’கச் சொல்வது அபத்தம். ஒரு குறிப்பான உள்நோக்கத்துடன் கிறிஸ்தவ அடையாளமொன்றைச் சுமத்தும் பார்ப்பன மனநிலையை விளக்குவதற்காக எழுதப்பட்டது அது. தங்களது சொந்த வீட்டுக்குள்ளேயே மிகக் கொடூரமான பார்ப்பனிய ஆணாதிக்க வன்முறையைத் தமது வீட்டுப் பெண்களிடமே பிரயோகிக்கிறவர்கள் இவர்கள் என்பதைச் சொல்லத்தான் அக்கேள்வி எழுப்பப்பட்டது.

4. எங்கள் எழுத்துகளில் நாங்கள் இந்துமதத்தை மட்டுமே தாக்குகிறோம். சிறுபான்மை மதங்களைக் குறிப்பாக, கிறிஸ்தவத்தைத் தாக்குவதில்லை என்கிற குற்றச்சாட்டு பொருளற்றது. இத்தகைய குற்றச்சாட்டு ஏற்கனவே டாக்டர் அம்பேத்கர், பெரியார் ஈ.வெ.ரா. ஆகியோர்மீது வைக்கப்பட்டதுதான். காலத்தையும் சூழலையும் பொறுத்துத் தாக்குதலின் இலக்கு அமைகிறது.

இந்தியச் சூழலில் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக (சூத்திரர் – தீண்டப்படாதோர்) நின்று பேசுகின்ற யாரும் பார்ப்பனிய- வருணாச்சிரம மதத்தை விமர்சிக்காமல் இருக்க இயலாது. அதுவும் குறிப்பாக இந்துப் பாஸிசம் மிகக் கொடூரமாக மேலெழும்பிக்கொண்டுள்ள ஒரு சூழலில் சனநாயத்தில் நம்பிக்கையுள்ள யாரும் அதனை எதிர்க்காமல் இருக்க முடியாது. கிறிஸ்துவ /இஸ்லாமிய மதங்களைப் பொறுத்த மட்டில் அவை பெரும்பான்மையாகவும் அரச மதங்களாகவும் இருக்கிற நாட்டில் அவற்றின் பங்கையும் பாஸிசத் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ள இந்தியச் சூழலில் அதன் பங்கையும் ஒன்றே போல் மதிப்பிட முடியாது.

உலக அளவில் கிறிஸ்துவம் என்பது ஒரு விரிவாக்க மதம். அதிலும் குறிப்பாக சோசலிஸ நாடுகளின் வீழ்ச்சிக்குப் பின்பு அதன் பிற்போக்குத்தனமான விரிவாக்கப் பண்பு அதிகரித்துள்ளது. அதனை நாங்கள் பலமுறை ‘நிறப்பிரிகை’ கட்டுரைகளில் சுட்டிக்காட்டி வந்துள்ளோம். இந்தியாவில் கிறிஸ்தவம் சாதியத்திற்குப் பலியாகிப் போனதையும் தொடர்ந்து விமர்சித்து வந்துள்ளோம். கிறிஸ்தவத்தின் சாதியத்தன்மை மீதான கடும் விமர்சனத்தை மேற்கொள்கிற கே.டானியலின் ‘கானல்’ நாவலை வெளியிட்டவர்கள் நாங்கள். அதற்கு எழுதப்பட்ட எனது முன்னுரையையும் வாசகர்கள் படித்துப் பார்க்க வேண்டும்.

இந்தியாவைக் பொறுத்தவரையில் கிறிஸ்தவர்களின் சனத்தொகை 2.5 வீதம். இந்துவத்தின் மையமாக விளங்கும் வட இந்தியாவில் அவர்களின் எண்ணிக்கை படுசொற்பம். வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் திராவிடப் பகுதிகளில் வாழ்கின்ற பழங்குடி மற்றும் அடித்தளச் சாதிகளின் மதமாகவே இங்கு கிறிஸ்துவம் அமைந்துள்ளது. இன்று இந்துவத்தின் இலக்காக இத்தகைய ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களே நிறுத்தப்பட்டுள்ளனர். இந்துத்துவம் மற்றும் கிறிஸ்துவம் மீதான விமர்சனங்கள் இந்த உண்மைகளைக் கணக்கிலெடுக்காமல் இருக்க முடியாது. இந்த மாதிரியான விசயங்களில் ஒற்றை நிலைப்பாடு சாத்தியமில்லை என்பதைத்தான் வாசகர்கள் சிந்திக்க வேண்டும். இந்தச் சூழலில் இஸ்லாமியரது உரிமைகளை ஆதரித்துப் பேசுகிற நாம் வங்க தேசத்தில் தஸ்லீமாவின் மீது விதிக்கப்பட்டுள்ள ஃபட்வாவை ஆதரிக்க மாட்டோம். ருஷ்டி மீதுள்ள ஃபட்வாவை எதிர்க்கும் நாம் இந்துத்துவ சக்திகள் ருஷ்டிக்கு வரவேற்பளிக்கும்போது அவற்றோடு இணைந்து நிற்கமாட்டோம்.

கிறிஸ்துவத்தின் மீதான எங்களது விமர்சனத்தையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு எங்கள்மீது ஒரு கிறிஸ்துவச் சாயத்தைப் பூச முயலும் ய.ரா.வின் வன்முறையை என்னவென்பது. அவைதீக மரபை நாங்கள் ஆதரிப்பதென்பதை வைத்து வைதீக இந்து மதத்தை ஏன் ஆதரிக்கவில்லை எனக் கேட்பது எத்தகைய அபத்தம்? “பரந்துபட்ட மக்கள் நலனைப் பக்தி இயக்கம் இணைத்ததாக வரலாறு இருக்கிறது” என்கிறார் ய.ரா. பரந்துபட்ட மக்களை பார்ப்பன- வேளாள மேலாண்மையின் கீழ் தீண்டாமை உள்ளிட்ட கொடுமைகளோடு இணைக்க முயன்ற செயற்பாடுகளை நாங்கள் சுட்டிக் காட்டுகிறோம். தீண்டாமையைக் கண்டுகொள்ளாதது ஒரு மேற்சாதி மனநிலைக்கு உகந்ததாக இருக்கலாம். காலங்காலமாகத் தீண்டாமையை அனுபவித்தவர்களும் பக்தி இயக்கத்தில் முற்போக்குக் கூறுகளைத் தேடுவார்கள் என நீங்கள் எதிர்பார்ப்பது என்ன நியாயம்? உங்கள் கருத்தை நீங்கள் பிரச்சாரம் செய்கிற அதே நேரத்தில், ஒரு அடித்தட்டு மனநிலை மாற்றுக்கருத்தைச் சுமப்பதைத் தடைசெய்ய உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?

புதுமைப்பித்தன், மௌனி முதலானோரின் பிரதிகள் மீதான அடித்தள வாசிப்பைப் பற்றிய ய.ரா.வின் கருத்தும் இத்தன்மையானதுதான். புதுமைப்பித்தன் அல்லது மௌனி அம்பேத்கர் நூற்றாண்டில் வாழ்ந்தார்களா என்பதல்லப் பிரச்சினை. அவர்களுக்கு இந்த விசயங்கள் தெரிந்திருந்ததா என்பதும் இங்கு பிரச்சினையல்ல. இன்றைய பீடங்கள் இவற்றைப் புனிதப் பிரதிகளாக முன்வைக்கும்போது அவற்றை எதிர்கொள்ளும் ஒரு அடித்தள வாசகரின் மனநிலையே எங்கள் கரிசனம்.

இந்த அடித்தள வாசகர்களையும்கூட நாம் உயிரியல் அடிப்படையில் ஒருபடித்தானவர்களாகப் பார்க்க வேண்டியதில்லை. அவர்களுக்குள்ளும் நளினமானவர்கள் (Sophisticated) இருக்கலாம், அவர்களுக்கு இப்பிரதிகள் இலக்கிய ரசனையை அளிக்கலாம். கச்சாவானவர்கள் இருக்கலாம், அவர்கள் இப்பிரதிகள் தம்மீது சுமத்தும் குற்றவுணர்வை, ஒதுக்கல் உணர்வை சகியாமல் இருக்கலாம். அந்த உரிமையை நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள்?

பிரமாண்டமான பீடங்களில் ஏறிக்கொண்டு புதுமைப்பித்தனையும் மௌனியையும் பாராட்டுகின்ற கட்டுரைகள் ஆயிரம் உள்ளன என்றால், அடித்தள நோக்கில் நின்று எழுதப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை ஒன்று அல்லது இரண்டு வந்திருக்கலாம். அதற்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் காட்டுகிறீர்கள்? சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் யார்? ஏகப்பட்ட பெயர்களை உதிர்ப்பதில் எள்ளளவும் கூச்சம் காட்டாத ய.ரா. ஆங்கிலப் புனிதப் பிரதிகளின் இனவாதக் கூறுகளைத் தோலுரித்த எட்வர்ட சயித் பற்றிய எங்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல இயலாதது ஏன்? ரேமன்ட் வில்லியம்ஸ் பற்றியும் ய.ரா. எழுதியுள்ளார். ( அவர் யாரைப்பற்றி, எதைப்பற்றித்தான் எழுதித் தீர்க்கவில்லை!) ரேமன்ட் வில்லியம்ஸின் எழுத்துகளிலும் கூடப் பொதிந்து கிடக்கும் இன மையக் கூறுகளை சயித் சுட்டிக்காட்டியதையும் வில்லியம்ஸ் குற்ற உணர்வோடு ஏற்றுக்கொண்டதையும் கூட நாங்கள் பலமுறை சொல்லியாயிற்று. ய.ரா. ஏன் இதற்கெல்லாம் முகங்கொடுக்க மறுக்கிறார். அய்ரோப்பியச் சூழலில் வாழும் வாய்ப்புப்பெற்ற வாசகர்கள் இந்த எழுத்துகளைத் தேடிப்பிடித்துப் பயில வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இரண்டு

யமுனா ராஜேந்திரனின் கட்டுரையிலுள்ள ஏகப்பட்ட தகவற் பிழைகளையும் குழப்பங்களையும் நண்பர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அவற்றை ஒருமுறை தொகுத்துக்கொள்வோம்.

1. பின்நவீனத்துவம் மற்றும் தலித்தியம் பேசுகிறவர்கள் பட்டியலில் அ. மார்க்ஸ், ரவிக்குமார், ராஜ்கௌதமன் தொடங்கி ஓவியா, எம். எஸ். பாண்டியன், வெங்கடாசலபதி வரை பட்டியலை நீட்டுகிறார் ய.ரா. இவர்களில் சலபதி போன்றோர் முழுமையாகத் தலித் அரசியலை மறுப்பவர்கள். ஓவியா, எம். எஸ். பாண்டியன் போன்றவர்கள் திராவிட இயக்கங்களின் வரலாற்று முக்கியத்தை வலியுறுத்துகிறவர்கள். தலித் அரசியலின்பால் அனுதாபமுடையவர்கள். எனினும் அவர்கள் பின்நவீனத்துவக் கருத்துகளை ஏற்றுக்கொண்டவர்களாகத் தங்களை வெளிப்படுத்திக்கொண்டதில்லை. தமிழகத்தில் வேர் கொண்டுள்ள தலித் அரசியலையும் தலித் இலக்கியக் கோட்பாடுகளையும் பின்நவீனத் திட்டமொன்றின் (Post Modern Project) கூறாகப் பார்ப்பதும் தவறு.

இங்கள்ள தலித் அரசியலாளர் யாரும் தம்மைப் பின்நவீனத்துவவாதிகள் என அறிவித்துக்கொண்டதில்லை. சொல்லப்போனால் ஒருசிலர் தம்மைப் பின்நவீனத்துவத்திலிருந்து தூரப்படுத்தி அடையாளம் காட்டியுள்ளனர். இந்த நுணுக்கமான வேறுபாடுகளையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் சண்டப்பிரசண்டம் செய்வதில் பொருளில்லை. தமிழில் எழுதுகிறவர்களையாவது கவனமாகப் படித்து எழுதுவதற்கு யமுனா ராஜேந்திரன் முயற்சிப்பது நல்லது. பின்நவீனத்துவ எதிர்ப்பு என்கிற போர்வையைப் போர்த்துக்கொண்டு தலித் அரசியலைத் தாக்க வேண்டியதில்லை. நீங்கள் தலித் அரசியலின் எதிரிகள் என்பதை நேரடியாகச் சொல்வதே நேர்மை.

2. தமிழக அரசியற் தளத்தில் இன்று ஏற்பட்டுள்ள ஒரு நிகழ்வு இங்கே குறிப்பிடத்தக்கது. கோவை செழியன் தலைமையிலுள்ள ‘கொங்கு வேளாளர் சங்கம்’ என்கிற சாதிய அமைப்பு சமீபத்தில் பிற ஆதிக்கசாதி அமைப்புகளை ஒன்றிணைத்து தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு போன்ற சலுகைகளையும் ‘தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்முறை தடுப்புச் சட்டத்தையும்’ வாபஸ் பெறவேண்டுமென ஒரு கோரிக்கையை முன்வைத்தது. சாதிய அமைப்புகள் வெளிப்படையாகச் செய்த வேலையைப் புலம்பெயர் சூழலில் கம்யூனிஸ – மார்க்ஸியப் போர்வையைப் போர்த்துக்கொண்டு ய.ரா. செய்ய முயற்சிப்பது கவனிக்கத்தக்கது.

திடீரென அவருக்கு மார்க்ஸியத்தின்பால் வந்துள்ள கரிசனத்தின்மீது நமக்கு அய்யம் வருகிறது. அமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் அவர் எந்த மார்க்ஸிய அமைப்பிலிருந்து செயற்படுகிறார்? அவரது எழுத்துகள் மார்க்ஸிய ஆய்வுமுறையின்பாற் பட்டதெனில் இந்தியா அணுகுண்டு வெடித்தது பற்றியும், கமல்ஹாசன், மணிரத்தினம் முதலானோர் குறித்த தனது மதிப்பீடுகளையும் கூட மார்க்ஸிய நோக்கிலானது என உரிமை கொண்டாடுகிறாரா?

ஈழப்போராட்டம், ஈழவிடுதலை இயக்கங்கள், புலம்பெயர்ந்தோர் மத்தியில் எழுப்பப்படுகின்ற இந்துத்துவ உணர்வு முதலியவை பற்றிய தனது மார்க்ஸியப் பார்வைகளை அவர் வெளியிடுவாரா? அடித்தள மக்களின் பிரக்ஞை என்பதற்குள் எல்லா விடயங்களையும் நியாயப்படுத்திவிட முடியாது“ எனத் தீர்ப்பு வளங்குகின்ற ய.ரா. மார்க்ஸியம் முன்வைக்கும் வர்க்கப் பிரக்ஞை (Class Conciousness) என்பது பற்றி என்ன சொல்கிறார்?

3. மார்க்ஸியம் சுயவிமர்சனம் செய்துகொண்டு புத்தெழுச்சி பெறுவது பற்றி ய.ரா. பூரித்துப் போகிறார். நல்லது. என்னென்ன அம்சங்களில் மார்க்ஸியம் தன்னை மாற்றிக்கொண்டள்ளது? புதிய சமூக உறவுகளையும், புதிய சமூக இயக்கங்களையும் அணுகுவதில் மார்க்ஸியத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன? இந்தியச் சூழலுக்கே உரித்தான சாதியம் குறித்தான அணுகல்முறையில் மார்க்ஸியம் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது? சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு அய்ரோப்பிய நாடுகளின் வீழ்ச்சியின் வாயிலாக மார்க்ஸியம் கற்றுக்கொண்ட பாடங்கள் என்னென்ன? இத்தகைய கேள்விகள் முக்கியமானவை. கடந்த பத்தாண்டுகளாக நிறப்பிரிகை வாயிலாக இந்த விவாதங்களை நாங்கள் மிகுந்த பொறுப்போடு செய்துவருகிறோம். வெறும் வாதங்களோடு நின்றுவிடாமல் இடதுசாரிச் சார்பெடுத்து இயக்கச் செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறோம். திடீர் மார்க்ஸிய வேடம் போடும் ய.ரா. இந்தக் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்கிறார்?

பின்நவீனத்துவம் கிடக்கட்டும் தலித் அரசியல், தலித் பெண்ணியம் முதலான அம்சங்களை எதிர்கொள்வதில்கூட இவரிடம் மாற்றங்களின் சுவடுகள் தென்படவில்லையே ஏன்? ‘சோசலிஸ யதார்த்தவாதம் பற்றி சேகுவேராவே விமர்சனம் செய்துவிட்டார். தலித்தியம் என்ன புதிய விமர்சனத்தை வைக்கிறது?’ என கேட்கிறார் ய.ரா. இரண்டு விமர்சனங்களும் ஒன்றுதான் என அவர் சொல்கிறாரா? இரண்டும் ஒன்றுதான் எனில் தலித் இலக்கியக் கோட்பாட்டின்மீது இத்தனை காழ்ப்பு ஏன்? இரண்டுக்கும் வித்தியாசங்களுண்டு எனச் சொன்னால் பின் “சேகுவாராவே சொல்லிவிட்டாரே…” என்கிற கேள்வி எதற்கு? இரண்டாயிரமாண்டு காலச் சாதியக் கொடுமைகளைச் சகித்துவந்த மக்கட் பிரிவொன்று இன்று தலைநிமிர்த்தி நின்று தனது தனித்துவத்தை முழங்குவதைக் கண்டு அதிர்ந்துபோன சாதிவெறியின் புலம்பெயர்ந்த வெளிப்பாடன்றி இது வேறென்ன?

மூன்று

வட்ட மேசை மாநாட்டில் டாக்டர் அம்பேத்கர் முன்வைத்த நிபந்தனை இதுதான்: “தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்களல்ல. நாங்கள் தனி. எல்லா இந்தியர்களுக்கும் ஒரே பிரதிநிதி இருக்க முடியாது”. காந்தி இதை மறுத்தார். எல்லா இந்தியர்களுக்கும் தானே பிரதிநிதியாக இருக்க முடியும் என்றார். இந்த வாதம் உலக வரலாற்றில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நடைபெற்றுள்ளது. நடைபெற்று வருகிறது. ஒடுக்குபவர்கள் எப்போதும் “வித்தியாசங்களெல்லாம் ஒன்றுமில்லை நாமெல்லோரும் ஒன்றுதான் என வழிமொழிவதும், ஒடுக்கப்படுகிறவர்கள் “இல்லை…இல்லை, வித்தியாசங்களும் வேறுபாடுகளும் நிறைந்த உலகமிது, நாங்கள் வித்தியாசமானவர்கள்” என அரற்றுவதும் இன்றும் நடைபெறும் நிகழ்வுகள். அமெரிக்கக் கருப்பர்கள் தாம் பேசுகிற ‘எபோனிக்ஸ்’ என்பது ஆங்கிலமல்ல தனிமொழி என வாதிடுவதும் கிளின்டன் தலையிட்டு ‘எபோனிக்ஸ்’ எனத் தனிமொழி கிடையாது அதுவும் ஆங்கிலம்தான் என ஆணையிட்டதும் இரண்டாண்டுகளுக்கிடையில் நடந்த கதை.

ஒடுக்கப்படுகிறவர்கள் தங்கள் வித்தியாசங்களை நிறுவுவதன் மூலமாகவே அதனடிப்படையில் உரிமைகளைக் கோர முடிகிறது. ஒடுக்குபவர்கள் இந்த வித்தியாசத்தை மறுப்பதன் மூலமாகவே எல்லோருக்குமான மொத்த விடுதலை பற்றிய பெருங் கதையாடலை அவிழ்த்துவிட முடிகிறது. இந்தப் பெருங் கதையாடலின் மறுபக்கமாக எல்லோரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமையை ஒடுக்குகிற சாதி பெற்றுக்கொள்கிறது.

பின்நவீனத்துவம் இந்த “வித்தியாசத்தை” அங்கீகரிக்கிறது. இதன் மூலம் எல்லாவிதமான பெருங்கதையாடல்களுக்கும் எதோச்சாதிகாரங்களுக்கும் எதிரான வியூகங்களிற்கு வழி வகுக்கிறது. ஒடுக்கப்பட்ட சக்திகளை உண்மையிலேயே பிரதிநிதித்துவப்படுத்திய போராளிகள் அறிந்தோ அறியாமலோ இதனை எல்லாக் காலங்களிலும் வலியுறுத்தி வந்துள்ளனர். அம்பேத்கர் ‘We are seperate and distinct’ என அழுத்தம் திருத்தமாய் பலமுறை கூறினார்.அரசியல் சட்ட அவையில் அவரது பேச்சுகள் இதனை வலியுறுத்தின. “சட்டத்தின் முன் எல்லோரும் சமம்” என்கிற வழமையான பெருங்கதையாடலை அவர் எள்ளி நகையாடினார். சமூகத்தில் நிலவும் வித்தியாசங்களை சட்டம் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். அந்த வகையில் தனி ஒதுக்கீடு தனித் தொகுதி தனி வாழிடம் (Seperate Settelment) முதலான கோரிக்கைகளை முன்வைத்தார்.

இவ்வாறு தாழ்த்தப்பட்டவர்களின் வித்தியாசமான வாழ்நிலையைக் கணக்கிலெடுத்துக்கொண்டு இயற்றப்பட்ட ஒரு சட்டம்தான் இன்று ஆதிக்க சாதியினரால் கடுமையான கண்டனத்துக்குள்ளாகியிருக்கிற ‘தாழ்த்தப்பட்டவர்கள் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்’. இந்தச் சட்டத்தைப் பிரயோகிப்பதால் எழுந்த சர்ச்சையின் விளைவாக இருமுறை உத்திரப்பிரதேச அரசுகள் கவிழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

விதிகளின் பொதுத்தன்மையைக் கேலிசெய்த ஒரு முக்கிய சிந்தனையாளன் நீட்ஷே. பொதுப்படையான விதிகளின் சாத்தியமின்மையை அவன் சுட்டிக்காட்டினான். எல்லாச் சட்டகங்களும் (Systeme), மதம் சார்ந்த /சாராத அறவியல் மதிப்பீடுகளும் ஒரு குறிப்பான குழுவிற்காக உருவாக்கப்பட்டுப் பின்னர் எல்லோருக்குமாகப் பொதுமைப்படுத்தப்பட்டதைத் தோலுரித்துக் காட்டினான்.

சற்று யோசித்தீர்களானால் எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் மனதில் நிழலாடும். மனுநீதி ஒன்று போதாதா? பார்ப்பன உயர்சாதி நலனுக்கான சட்டவிதிகள் பின்னர் பொதுச்சட்டங்களாக / தேசவழமைகளாக மாற்றப்படவில்லையா? கடவுள் செத்தான் என நீட்ஷே உலகுக்கு அறிவித்ததென்பது கடவுளோடு எல்லாவிதமான Authority- பிரமாணங்களும் – அடிப்படைகளும், மதிப்பீடுகளும் செத்தொழிந்த செய்தியையும்தான் என்பதை நாங்கள் விளங்கிக்கொள்வதற்கு நீட்ஷேயின் சில பக்கங்களையாவது நாம் சிரத்தையெடுத்துப் படித்தாக வேண்டும். இத்தகைய எந்த முயற்சிகளிலும் இறங்காது “நீட்ஷேயின் அவநம்பிக்கைப் பாரம்பரியம்” என ஒதுக்க முயல்வது எத்தனை பெரிய அசட்டுத்தனம்!

இன்று மீண்டும் ‘வேதங்களை’ அடிப்படையாக்கி வேதக் கல்லூரியைப் பாடத்திட்டத்தில் புகுத்த இந்துத்துவம் முயலும்போது நாம் ஆசிரியரின் மரணத்தை, கடவுளின் மரணத்தை, அடிப்படைகளின் மரணத்தை உரத்து ஒலிக்காமல் வேறென்ன செய்வது!

நான்குவிதமான மேலை மரபுகளையும் நீட்ஷே போட்டுடைத்தான். கிறிஸ்தவ அறவியல், கிரேக்க புராதான அறவியல், அன்றாடப் பொது அறவியல், ‘மந்தை’ அறிவியல் ( Herd Morality) என எல்லா மதிப்பீடுகள் மீதும் அவனின் தாக்குதல் குவிந்தது. இதன் உச்சக்கட்டமாக நாகரீகங்களையும் பண்பாடுகளையும் மனித இழிவின் உச்சம் என அவனால் ஒதுக்க முடிந்தது. கடந்த காலமும் கலாச்சாரமும் கர்வப்படக் கூடியதாக உங்களுக்கு இருக்கலாம். இரண்டாயிரம் ஆண்டு காலமாக மலம் அள்ளிச் சுமந்தவர் அடிப்படை மனித கண்ணியம் மறுக்கப்பட்டவர் தீட்டு என ஒதுக்கிவைக்கப்பட்டவர் இவர்களிடம் போய் “கடந்த காலம் பற்றிய அறிவும் கலாச்சாரம் பற்றிய கர்வமும் இல்லாத மக்கள் கூட்டம் அடிமைகளாகிவிடும்” என அறிவுரை கூற எத்தனை மூளைக் கொழுப்பு இருக்க வேண்டும்! சாதியச் சமூகங்களுக்கு கூட்டு நினைவு ஏது? பார்ப்பானுக்கும் பறையனுக்கும் ஒரே நினைவா (Memory) என்ன வேடிக்கை.

வித்தியாசமான வாழ்க்கைமுறை என்பது வித்தியாசமான மதிப்பீடுகளை, உறவுகளை, சிந்தனைகளை, அடையாளங்களை, நினைவுகளை உருவாக்கி விடுகிறது. பின் இந்த அடையாளங்களையே அடிப்படையாக்கி சாராம்சப் பண்புகளை வரையறுக்கின்றன ஆதிக்கசாதிகள். சமூக ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்த இத்தகைய சாராம்ச வரையறைகள் பயன்படுகின்றன. பாஸிசம் இத்தகையை சாராம்சப் பண்புகளைக் கோட்பாட்டுருவாக்கம் செய்கிறது. எதிரி, நாம் என்பதெல்லாம் இந்த அடிப்படையில் கண்டுபிடிக்கப்படுகின்றன. கற்பிதம் செய்யப்படுகின்றன.

கலாச்சாரம், மரபு, இனம், மொழி… எல்லாமே இவ்வாறு கற்பிதம் செய்யப்பட்டவைதான் என்பதைப் பாஸிசத்தை எதிர்ப்பவர்கள் நினைவில் கொள்ளாமல் எப்படி இருக்க முடியும்? இந்து x இசுலாமியர், ஆண்மை x பெண்மை, உயர்வு x தாழ்வு, தீண்டத்தக்கவர் x தீண்டத்தகாதவர், பார்ப்பனர் x பார்பனரல்லாதவர் என்கிற கலாச்சார வேறுபாடுகளை, பாஸிசத்தை எதிர்க்கும் நாம் மறுக்க வேண்டியவர்களாகயிருக்கிறோம்.

ஆம்! வித்தியாசங்கள் சாராம்சரீதியானவை என்பது பாஸிசம். வித்தியாசங்கள் வரலாற்றுரீதியானவை என்கிறோம் நாம். வரலாற்றுரீதியான வித்தியாசங்களை முன்னிலைப்படுத்தி அந்த வித்தியாசங்களின் விளைவுகளைத் தகர்க்க முயல்வது அடித்தள மக்களின் செயல்பாடாக இருக்கிறது? சாராம்சரீதியான வேறுபாடுகளை முன்வைத்து கருத்துகளை வரைவது (எ-டு: கருவறைக்குள் நுழையாதே!) பாஸிசத்தின் செயற்பாடாக இருக்கிறது. சாராம்சரீதியாக விதிக்கப்பட்ட கருத்துகளைத் தகர்த்தெறியாமல் வைத்துக்கொண்டு “வித்தியாசங்களை முதன்மைப்படுத்தாதீர்கள்” எனப் பொத்தாம் பொதுவாக அறிவுரைப்பதென்பது யாருக்குப் பயன்தரும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

வித்தியாசங்களை எல்லாவற்றிலும் அங்கீகரிக்கும்போது உயிரியல் அடிப்படைகள் அடிபட்டுப் போகின்றன. தலித்துகளுக்குள்ளும் இருக்கும் வித்தியாசங்களையும் நாம் பேசித்தான் ஆகவேண்டும். இன்று பேசவும் படுகிறது. தலித்துகளுள்ளும் ஒரு பிரிவினர் கூடுதலாக ஒடுக்கப்படும்போது அவர்கள் தங்கள் தனித்துவத்தை வற்புறுத்துவது அவசியமாகிறது. எனினும் தீண்டாமைக்கெதிராக எல்லோரும் ஒன்றிணைந்து நிற்கவும் வேண்டியிருக்கிறது. இங்குதான் வானவில் கூட்டணி என்பதன் பொருளையும் அவசியத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

வித்தியாசத்தின் முக்கியத்துவம் அரசியல் களத்தில் மட்டுமல்ல இலக்கியத்திலும் தவிர்க்க இயலாததாகிறது. இலக்கியங்களில் தனித்துவங்களை அங்கீகரிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை இன்று கறுப்பின எழுத்தாளர்கள் முன்வைக்கின்றனர். இலக்கியக் கோட்பாடுகள் விமர்சன அணுகல்முறைகள் என்பதெல்லாம் எல்லா இலக்கியங்களுக்கும் பொதுவாக இருக்க இயலாது என்பதை அவர்கள் வலியுறுத்துகின்றனர். ‘குறிப்பான பிரதிகள், குறிப்பான அணுகல்முறை ( Text specific criticism)’ என்பது அவர்கள் முன்வைத்துள்ள சிந்தனை.

நீட்ஷே அறவியல் குறித்துச் சொன்னதைப் போலவே இவர்களும் இலக்கியம் பற்றிச் சொல்கின்றனர். இன்று உலகப் பொதுவான இலக்கிய அணுகல்முறைகள் எனச் சொல்லப்படுவன எல்லாம் குறிப்பான இலக்கியங்களுக்காக உருவாக்கப்பட்டவைதான். இவற்றை எல்லாவற்றுக்குமான அணுகல்முறையாக முன்வைத்து எங்கள் இலக்கியங்களையும் அளக்க முயற்சித்தல் என்ன நியாயம்? என்கிற கேள்விகளை எழுப்புகின்றனர்.

நான்கு

புலம்பெயர்ந்த இலக்கிய ஆர்வலர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்:

தயவுசெய்து ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாக முன்வைக்கிற இந்தக் கேள்விகளையும் நியாயங்களையும் சற்றுக் காது கொடுத்துக் கேளுங்கள் என்று நான் உங்களிடம் மன்றாடவில்லை. தயவுசெய்து இந்தக் குரல்களை அங்கீகரியுங்கள் என்றுதான் கேட்கிறோம். ரொம்பவும் எளியமுறையில்தான் எங்களைப் போன்ற ஆதரவுக் குரல்களும் முன்வைக்கப்படுகின்றன.

யமுனா போன்றவர்கள் எங்களது கருத்துகளாக உங்களுக்குச் சுருக்கிச் சொல்கின்ற விசயங்களைத் தயவுசெய்து நேரடியாக ஒருமுறை வாசியுங்கள். நீட்ஷே, ஃபூக்கோ, லியோதார் போன்றோர் பற்றிய மிக எளிமைப்படுத்தப்பட்ட அவதூறுகளுக்குத் தயவுசெய்து பலியாகாதீர்கள். குறைந்தபட்சம் அவர்களது பேட்டிகள், அவர்களைப் பற்றிய அறிமுக நூற்கள், விமர்சன நூற்கள் முதலியவற்றைப் படிக்க நாம் எல்லோரும் சேர்ந்து முயல்வோம். இடைத்தரகர்களை நாம் நம்ப வேண்டாம் -நாங்கள் உட்பட- இன்னும் ஒருமுறை இத்தகைய வெற்றுச் சவடால்களுக்கு மயங்க வேண்டாம். காலத்தின் படுவேகமான மாற்றங்களை நாம் கணக்கிலெடுப்போம். நம்மைச் சுற்றியுள்ள நிகழ்வுகள் எத்தனை வேகமாக இயக்கம் கொள்கின்றன!

முப்பதாண்டுகளுக்கு முன்னால் வீடுவரை உறவு / வீதிவரை மனைவி/ காடுவரை பிள்ளை / கடைசிவரை யாரோ எனக் கண்ணதாசன் ‘அற்புத’ தத்துவங்களை முன்வைத்தார், இன்றைய சினிமா நாயகன் போர்த்திகினும் படுத்தக்கலாம்/ படுத்துகினும் போர்த்திக்கலாம்/ கடிச்சுக்கினும் ஊத்திக்கலாம்/ ஊத்திக்கினும் கடிச்சிக்கலாம் எனப் பாடுகிறான். இதனைக் கலாச்சாரச் சீரழிவு என ஒதுக்கினோமெனில் கண்ணதாசனை நாம் கலாச்சார உன்னதம் என ஏற்கிறோமா? தத்துவங்கள் இப்படி கவிழ நேர்ந்ததன் பின்னணி என்ன என நாம் யோசிக்க வேண்டாமா? கே.பாலசந்தர் அல்லது மணிரத்தினத்தின் ‘சீரியஸ்’ படங்களைவிட இந்த விளையாட்டுத்தனங்கள் ஆபத்தானவையா?

போஸ்ட் மார்டனிசம் பின்நவீனத்துவம் போன்ற பெயர்கள் இங்கே முக்கியமில்லை. வித்தியாசங்களை /சிறு அடையாளங்களை அங்கீகரித்தல், சாராம்ச /அடிப்படைவாதங்களின் ஆபத்துகளை உணர்தல், பெருங்கதையாடல்களின் வன்முறைகளைப் பற்றிய பிரக்ஞையை கொண்டிருத்தல் என்கிற அம்சங்கள் இன்றைய பாஸிசச் சூழலை எதிர்கொள்ளப் பயன்படும் என நாங்கள் நினைக்கிறோம். அவ்வளவுதான்.

நாங்கள் மார்க்ஸியத்துக்கோ இடதுசாரி இயக்கங்களுக்கோ எந்தவகையிலும் எதிராகச் செயற்படவில்லை. கட்சிகளின் உடைவுகளுக்குக் காரணமாயிருக்கிறோம், மக்கள் திரள் அடிப்படையிலான பொதுவுடமைக் கட்சிகளைத் திட்டித் தீர்க்கிறோம் என்பதெல்லாம் அப்பட்டமான பொய்கள். அபாண்டமான குற்றச்சாட்டுகள். எந்தக் கட்சியையும் உடைக்கிற அளவுக்கு நாங்கள் பலமானவர்களில்லை. எல்லாக் கட்சிகளும் ஏற்கனவே உடைந்துகொண்டுதான் இருக்கின்றன.

மார்க்ஸியத்தின் பெயரால் இயங்கும் பொதுவுடமைக் கட்சிகள் மட்டும் இருபதுக்கும் மேலுள்ளன. தமிழ்த் தேசியக் கட்சிகள் பத்துக்கும் மேலுள்ளன. பெரியார் பெயரில் இயங்கும் இயக்கங்கள் நான்கைந்து. இதற்கெல்லாம் நாங்களா பழி? எங்களை யார் திட்டுகிறார்களோ அவர்கள்தான் கட்சியை உடைத்தவர்கள். மக்கள் திரள் நிறைந்த பொதுவுடமைக் கட்சிகளை விமர்சிக்கக் கூடாதென்ற நியாயம் எனக்கு விளங்கவில்லை. அப்படியே வைத்துக்கொண்டாலும் இங்கு மக்கள் திரளுள்ள பொதுவுடமைக் கட்சிகளான சி.பி.அய் /சி.பி.எம் ஆகியவற்றை இன்று யமுனா வக்காலத்து வாங்குகின்ற மருதையன், வீராசாமி குழுவினர் திட்டித் தீர்த்தில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட நாங்கள் பேசியிருக்கமாட்டோம்.

ஈழத்தின் சாதியப் பிரச்சினைகளை “விளங்கிக்கொள்ள முடியாமல்” நாங்கள் இருப்பதாக அவதூறு பேசுவதெல்லாம் ரொம்பப் பொறுப்பற்ற செயல். ஒன்றைப் பற்றி எழுதுவதற்கு முன் கூடியவரை அது குறித்த தரவுகளையெல்லாம் தொகுத்துக்கொண்டுதான் பேசத் தொடங்குகிறோம். ஈழத்தின் சாதியப் பிரச்சினை குறித்துக் கடந்த பதினைந்து ஆண்டுகளாக எழுதிவருகிறோம். கே.டானியல் நாவல்களுக்கு நான் எழுதியுள்ள முன்னுரைகளை ஒருமுறை தொகுத்துப் பாருங்கள். ( சத்தியக் கடதாசியின் குறிப்பு: அ. மார்க்ஸ், அண்மையில் ‘ஈழத்து தலித் சிறுகதைகள்’ என்ற தொகுப்பிற்கும், நாவலனின் “தேசிய இனப்பிரச்சனையில் ஏகாதிபத்தியங்களின் சதி” என்ற நூலுக்கும் எழுதிய முன்னுரைகளையும் தோழர்கள் அவசியம் படித்துப் பார்க்க வேண்டும்.)

ஈழத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் பிரச்சனை / இயக்கங்கள் தனித்துவத்துடன் வெளிப்படாமை பற்றி ய.ரா. விதந்தோதுகிறார். சண்முகதாசனின் பங்கு குறிப்பிடத்தக்கது என்பதில் நமக்கு அய்யமில்லை. ஆனால் அது எல்லாக் காலங்களுக்குமான பொதுவிதியாக இல்லை என்பதை நான் விளக்க வேண்டியதில்லை. ‘சரிநிகர்’ இதழ்களைத் தொடர்ந்து படிப்பவர்களுக்குத் தெரியும் – ஈழத்திலும் இன்று தலித்தியம் தொடர்பான விவாதங்கள் முளைவிடத் தொடங்கியுள்ளமை.

புலம்பெயர் சூழலுக்கும் தமிழகச் சூழலுக்குமுள்ள வேறுபாடுகளையும் நீங்கள் கவனத்தில் கொள்ளத் தவறக் கூடாது. இந்துப் பாஸிசம் இங்கே எங்களின் முதன்மையான இலக்காக உள்ளது. உங்களுடைய சூழலில் உங்களின் தனித்துவத்தை நிலைநாட்டும் ஒரு அடையாளமாக இந்துவத்தைப் புத்துயிர்ப்புச் செய்யும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் நியாயங்களை எங்களால் புரிந்துகொள்ள முடிகின்றதெனினும் யாழ்ப்பாணச் சாதியப் பின்னணி / தமிழ் – முஸ்லீம் பிளவு முதலான அம்சங்களை கணக்கில் கொள்ளாமல் இந்தப் புத்துயிர்ப்பு மேற்கொள்ளப்படுதல் என்பது விளிம்புநிலை மக்களை அந்நியப்படுத்துவே செய்யும். இத்தகைய இந்தத்துவ புத்துயிர்ப்பு என்பது இந்தியாவிலுள்ள இந்துத்துவ இயக்கங்களோடு இணைந்து செயற்படக் கூடிய நிலை உருவாகுமானால் அது இன்னும் மோசமானது.

விளிம்பு நிலையினர் புலம்பெயர் சூழலிலும் அந்நியப்பட்டதன் விளைவே இன்று அங்கு தலித்தியம், பின்நவீனத்துவம் முதலான சிந்தனைகள் எழுச்சிகொண்டமை. இதனைக்கண்டு மருள்வது, அவதூறுகளை அள்ளி வீசுதல் என்பதைக்காட்டிலும் இத்தகைய சூழல் ஏற்பட்டதன் பின்னணியை ஆய்வு செய்தலும் சனநாயகபூர்வமான உரையாடலை மேற்கொள்ளுதலுமே பயன்தரும்.

இந்தக் கருத்துகளை தயவு செய்து கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம். இந்தக் கடிதம் முழுமையிலும் நான் / நாங்கள் என்னும் தொனி உரத்து ஒலிப்பதற்காக வருந்துகிறேன. முழுக்க முழுக்க தனிநபர் தாக்குதலாக உங்களின் கட்டுரைகள் அமைந்து போனதன் விளைவாகவே கொஞ்சம் அதிகப்படியாகவே தன்னிலை விளக்கங்கள் கொடுக்க நேர்ந்துவிட்டது.

நன்றி
தோழமையுடன் அ.மார்க்ஸ்

8 thoughts on “எதிர்வினை: அ.மார்க்ஸ்

  1. சத்திய கடதாசி அதிகம்தான் உணர்ச்சிவசப்படுகிறது.
    இருந்தாலும்- யமுனா ராஜேந்திரனும் இதற்கு அம்மாவில் பதில் எழுதித்தானே இருப்பார். அதையும் பிரசுரிப்பீர்களா?

  2. நான் ஜ ரா வின் கட்டுரையை படிக்கவில்லை. அ மார்க்சின் எதிர்வினை படித்ததன் மூலம் அக்கட்டுரை எப்படி இருக்கும் என்ற ஊகம் உண்டு. அது சரி ஆசிரியன் இறந்துவிட்டான் என ரோலண்ட் பாத் சொன்னதுபோல் பிரதி இறக்க சந்தர்ப்பம் வருமா.

  3. நான் ஜ ரா வின் கட்டுரையை படிக்கவில்லை. அ மார்க்சின் எதிர்வினை படித்ததன் மூலம் அக்கட்டுரை எப்படி இருக்கும் என்ற ஊகம் உண்டு. அது சரி ஆசிரியன் இறந்துவிட்டான் என ரோலண்ட் பாத் சொன்னதுபோல் பிரதி இறக்க சந்தர்ப்பம் வருமா. யாராவது உதவி

  4. //By the end of the Millennium the new papal encyclical found John Paul II embracing postmodern despair rather than giving a message of hope. Noting that postmodern ‘nihilism has been justified in a sense by the terrible experience of evil which has marked our age’, the pope asserts that ‘such a dramatic experience has ensured the collapse of rationalist optimism, which viewed history as the triumphant progress of reason, the source of all happiness and freedom’.[1] His Holiness warns against ‘a certain positivist cast of mind’ which ‘continues to nurture the illusion that, thanks to scientific and technical progress, man and woman may live as a demiurge, single-handedly and completely taking charge of their destiny’.

    The Pope is echoing the judgement of the postmodernists. It was Jean-François Lyotard who best summed up the assessment of the modern age and its overriding ideologies. ‘I will use the term modern to designate any science that legitimates itself with reference to a metadiscourse … making an explicit appeal to some grand narrative, such as the dialectics of Spirit, the hermeneutics of meaning, the emancipation of the rational or working Subject, or the creation of wealth.’[2] Rejecting these defining narrative structures of modernity, Lyotard announced the post-modern age in the following way: ‘I define postmodernism as incredulity towards metanarratives.’ [3] As is now well-known, postmodernism was defined as a time when we could do away with the ideologies upon which we had relied, as so many tall tales, designed to make the listener happy and satisfied, but with no greater significance. Socialism, the free market, Christianity, the nuclear family, scientific progress were ‘exposed’ as so many bedtime stories told to lull us children into sleep.//

    http://www.marxists.org/reference/subject/philosophy/works/en/heartfield-james.htm

    மேற் குறிப்பிட்ட கட்டுரை பின் நவீனத்துவச் சிந்தனை எங்கனம் கத்தோலிக்க உயர் பீடத்தால் கருதியல் ரீதியாக உள் வாங்கப்படுள்ளது என்பதை விளக்குகிறது.
    யமுனாவின் பின் நவீனதுவம் மீதான கருதியல் அடிப்படையிலான குற்றச் சாட்டுக்களுக்கு அ.மாக்ஸின் கட்டுரை எந்தப் பதிலையும் அழித்தாக நான் கருதவில்லை.

  5. //…பின் நவீனத்துவச் சிந்தனை எங்கனம் கத்தோலிக்க உயர் பீடத்தால் கருதியல் ரீதியாக உள் வாங்கப்படுள்ளது என்பதை விளக்குகிறது…//

    ‘மார்க்ஸிசம்’ கூட ‘பொல்பொட்’ஆல் கருத்தியல் ரீதியாக உள் வாங்கப்பட்டுள்ளது என்னும் விமர்சனத்தால் ‘மார்க்ஸிசம்’ மானிடவிரோத மனுநீதியென்றாகி விடாது.

  6. அற்புதன்
    தயவுசெய்து யமுனாவின் குற்றச்சாட்டுகளை வரிசைப்படுத்துவீர்களா?
    பதில்களை தேடி கற்றுக்கொளவோம்.

  7. சோவியத் அரசின் வீழ்ச்சியின் பின் மாக்சியம் தொல் பொருள் காட்சி சாலைக்கு அனுப்பபட்டதென்றனர் முதலாளித்துவவாதிகள். அதே அமெரிக்க முதலாளித்துவ வாதிகள் மாக்சியத்தை முதலாளித்துவத்தை விளங்கி கொள்வதற்கான அவசிய கைநூலாக பார்க்கின்றார்கள். இதற்கு மாக்சிய தத்துவத்தை குறை சொல்ல முடியுமா

  8. கருதியல் ரீதியாகா அ மாக்சின் பின் நவீனத்துவம் ஏன் மார்கிசசதிற்கு எதிரானாதாக இருக்கிறது என்பது பற்றிய உரையாடல்களை இந்த இணைப்புக்களில் பார்க்கவும்.
    அ மாக்சோ அல்லது சோபாசக்தியாலோ முடிந்தால் கருத்தியல் ரீதியாகா பதில் சொல்லுங்கள்.
    தனி நபர்கள் மீதான முத்திரை குத்தல்களூடான எந்த விவாதத்திலும் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை.

    http://aatputhan.blogspot.com/2008/03/blog-post_9041.html

    http://innomado.blogspot.com/2008/03/blog-post_16.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *