வட- கிழக்கு இன்றைய நிலை

கட்டுரைகள்

18.05.2008 ல் சூரிச் நகரில் ‘மனிதவள அபிவிருத்தி ஆய்வு நிறுவனத்தால்’ வட- கிழக்கு இன்றைய நிலை என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கைத் தொடக்கி வைத்துத் தோழர். திலக் ஆற்றிய உரை:

பிழைப்புவாத தமிழ் அரசியல் கட்சிகளினால் தோற்றுவிக்கப்பட்ட பிரதேசப் பாகுபாடு அரசியலை ஓரம் தள்ளிவிட்டுப் பொது எதிரிக்கு எதிரான ஆயுதப் போராட்டம் என்ற பாதையில் நாம் ஒன்றுபட்டிருந்தோம். வடக்கு – கிழக்கே தாயகப் பிரதேசங்கள் எனக் கூறி சுயநிர்ணயத்தைக் கோரி நின்றோம். சில அமைப்புகள் அதற்கும் அப்பாற் சென்று மலையகத்தையும் தாயகக் கோட்பாட்டிற்குள் சேர்த்துக்கொண்டிருந்தன.

இருபது வருடங்களுக்கு மேலாக பொது எதிரியோடு உக்கிரமான சண்டையையும் பகை முரண்பாட்டையும் கொண்டிருந்த, கொள்கைப் பிடிப்பும் உறுதியும் கட்டுப்பாடும் கொண்ட அமைப்பு என்று மார்தட்டிய புலிகள் அமைப்பிலிருந்து கிழக்கில் மட்டக்களப்புப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் கிழக்குவாழ் தமிழ் பேசும் மக்களிற்காக தாம் தனித்து நின்று போராடப் போவதாக அறிவித்துப் பிரிந்தனர். ‘கிழக்குத் தனித்துவம்’, ‘கிழக்கின் சுயநிர்ணயம்’ போன்ற கோஷங்கள் எழுந்தன. ஆனால் எல்லாமே இன்று ஒரு குழப்பவாத அரசியலைத் தோற்றுவித்துள்ளன. இந்தக் குழப்பவாத அரசியலை சிறிலங்கா முதலாளித்துவ அரசு தனது நலன்களைப் பேணி நகர்த்துகிறது. இணைப்போம்/ பிரிப்போம் என்ற அரசியலுக்குள் மக்களை இழுத்துவிட்டிருக்கும் இந்த அரசியல்வாதிகள் எதைச் சாதிக்கப் போகிறார்கள் என்பதுதான் எம்முன்னே எழும் முக்கிய கேள்வியாகும்.

‘கிழக்குத் தனித்துவம்’ என்ற கருத்தை எவ்வாறு அங்குள்ள மக்கள் ஆதரிக்கிறார்கள் என்ற கேள்வியை நாம் அப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்களைக் கேட்டபோது தனித்துவக் கோஷத்திற்கான வரவேற்பும் ஆதரவும் அன்று இருந்தாலும் இன்றோ நிலைமை வேறாக இருப்பதாகச் சொல்கிறார்கள். ஏனெனில் எந்த எதிரிக்கு எதிராகப் பல போராளிகளைப் பலியிட்டு போராடினார்களோ அந்த எதிரியோடு சமரசம் என்ற கொள்கையை முன்னிறுத்தி நடைபெறும் அரசியற் சம்பவங்களை மக்கள் முழுதாக ஏற்றக்கொண்டதாகத் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு வட – கிழக்கு இணைந்த போராட்டத்தை பின்னடைவுக்குத் தள்ளியிருக்கும் “கிழக்குத் தனித்துவம்’ என்ற கோஷத்தை வெறுமனே மேலெழுந்தவாரியாகப் பார்க்காமல் சற்று ஆழமாகவும் வரலாற்று ஆய்வுரீதியாகவும் பார்க்க வேண்டிய தேவை எம் முன்னால் உள்ளது.

அதற்காக இந்த உரை முழுவதும் மட்டக்களப்பு மக்கள் குறித்த வரலாற்று ஆய்வுகளை மட்டுமே நான் சொல்லிக்கொண்டிருக்கப் போவதில்லை. அதேபோல் தமிழ் முதலாளித்துவ சந்தர்ப்பவாத அரசியற் கட்சிகளினால் கிழக்கைச் சேர்ந்த திறமையாளர்கள் ஒதுக்கப்பட்டு முரண்பட்ட சம்பவங்களையும் நான் இங்கே தவிர்த்துக்கொள்கிறேன். ஏனெனில் இவை எமக்கு ஓரளவேனும் ஏற்கனவே தெரிந்த விடயங்கள்தாம்.

மன்னராட்சிக்கு உட்பட்ட காலங்களில் வடக்குக் கிழக்குப் பிரதேச மக்களுக்கிடையில் ஒரு கோழிக்குஞ்சு கூடப் பரிமாறப்பட்டிருப்பதாக வரலாற்று உண்மைகள் தெரிவிக்கவில்லை. இதை பண்டிதர் வி. சீ. கந்தையா எழுதி 1964ம் வருடம் வெளியிடப்பட்ட ‘மட்டக்களப்புத் தமிழகம்’ என்ற நூலில் ஆதாரங்களோடு அவர் வைக்கும் ஆய்வுகளிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம். இவ்வாறு இன்னும் பல அறிஞர்களும் எழுதியிருப்பதாக அறிகிறேன்.

‘கிழக்குத் தனித்துவம்’, ‘கிழக்கு சுயநிர்ணயம்’ என்ற பதங்களோடு அல்லது கோஷங்களோடு பல்வேறுபட்ட வாதப்பிரதிவாதங்களை உண்டாக்கியிருக்கும் கிழக்குப் பிரச்சிகைளைக் குறித்து ஆய்வுகளைச் செய்பவர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் ஒரு தேசிய இனத்திற்கான அடையாளமாக அடிப்படை அத்திவாரங்களாக என்னென்ன விடயங்களை முன்னிறுத்துகிறார்கள் எனச் சுருக்கமாகத் தொகுத்துக்கொள்வோம்:

1.ஒரு பொதுவான வரையறையைக்கொண்ட வாழ்நிலைப் பிரதேசம்.
2.பொதுவான மரபுவழியைப் பெற்ற கலாசாரம் – பண்பாடு.
3.அச் சமூகத்தின் வாழ்விற்கான அடிப்படைத் தேவைகளைப் பேணக்கூடிய உற்பத்தியும் பொருளாதார வளமும்.
4. ஒரே மொழியைப் பேசுதல்.

என நான்கு முதன்மையான வரையறைகள் ஆய்வாளர்களால் முன்னிறுத்தப்படுகின்றன.

கிழக்கு வாழ் தமிழ் மக்களை எடுத்துக்கொண்டால், வடக்கு வாழ் தமிழர்களுடன் ஒப்பிட்டால், பேச்சு வழக்கால் மாறுபட்ட ஒரே மொழியைப் பேசுகிறார்கள் என்பதுதான் ஒருமித்த தன்மை. ஏனைய விடயங்களில் எல்லாம் மாறுபட்ட தன்மைகளே காணப்படுகின்றன. இந்த இடத்தில் தேசிய இனப் பிரச்சினையைக் குறித்து நேர்த்தியான ஆய்வுகளைச் செய்த ஜோஸப் ஸ்டாலின் அவர்கள் கூறும் ஒரு விடயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது ஒரே மொழி பேசும் இரண்டு வெவ்வேறான தேசிய இனங்கள் ஒரே நாட்டில் வாழலாம் என ஸ்டாலின் குறிப்பிடுகிறார்.

ஏன் நான் இங்கு இதைக் குறிப்பிடுகிறேன் என்றால் எங்கு தனித்துவம் உள்ளதோ அதை அலட்சியப்படுத்தாமல், அல்லது கொச்சைத்தனமான எழுந்த மாதிரியான எதிர் விமர்சனங்களால் பிரச்சினையைப் பார்க்காமல் எதிர் காலத்தில் இப்பிரதேச மக்களை ஒன்றுபடுத்தக் கூடிய அரசியல் பாதையை நாம் கண்டடைய வேண்டும் என்பதற்காகத்தான்.

‘பிரதேசவாதம்’ என்ற முத்திரையைக் குத்தி எதிர் விமர்சனம் செய்பவர்கள், “மட்டக்களப்பு தனியாக வேண்டும் என்பார்கள் நாளை வல்வெட்டித்துறையையும் தனியாக வேண்டும் என்பார்கள்” என்று சொல்பவர்கள் ஒரு முக்கியமான விடயத்தைக் கவனத்திற் கொள்ள வேண்டும். அதாவது அரசியல், பொருளாதாரம், பண்பாடு என்ற நிலைமைகளில் மட்டக்களப்பு இராச்சியம் முற்று முழுதாகவே வடக்கோடு தொடர்பற்ற பிரதேசமாகவே இருந்திருக்கிறது. ஒல்லந்தரின் வருகைக்குப் பின்புதான் மொழிவாரியாக ஒல்லாந்தரின் நலனுக்காக மட்டக்களப்பு இராச்சியம் வடக்கோடு இணைக்கப்பட்டது என்பதே வரலாற்று உண்மை.

ஆனால் வல்வெட்டித்துறை எவ்வாறு அதன் சுற்றாடல் கிராமங்களையும் சிறுநகரங்களையும் விலக்கி வாழ முடியும்? சற்று அறிவார்த்தமாகச் சிந்திக்க வேண்டும். ஆனால் மட்டக்களப்புப் பிரதேசம் சுயாதீனமாகத் தனது எல்லாத் தேவைகளையும் நிறைவாக்கி வாழ்ந்திருக்கிறது என்பதும் வரலாற்று உண்மை.

கிழக்குத் தனித்துவக் கோஷத்தை எழுப்பியவர்களின் இன்னொரு குற்றச்சாட்டு –அது உண்மையானதும் கூட- எவ்வாறு பிழைப்புவாத அரசியற் கட்சிகள் கிழக்குப் பிரதிநிதித்துவத்தை மதிக்காமல் புறக்கணிப்புச் செய்தார்கள் என்பதாகும். அதேபோல் விடுதலைப் புலிகள் தரப்பும் நடந்துகொண்டது. அதனாலேயே தனிக் கிழக்கு கோஷத்தை எழுப்புகிறோம் என்று சொல்லிப் புலிகளிலிருந்து பிரிந்து சென்றவர்கள் இன்று எதிரியுடன் சமரசம் என்ற கொள்கையுடன் அரசியல் நடத்துகின்றனர். அவர்களை ஆதரிக்கும் அறிவுஜீவி வட்டத்தினர் ‘கிழக்கு சுயநிர்ணயம்” என்ற கோஷத்தை முதன்மைப் படுத்துகின்றனர். ஆனால் அக்கருத்துக்கு அப்பாற்பட்ட அரசியல் கொள்கையை ஆதரித்துத்தான் அவர்களும் நிற்கின்றனர்.

ஒரு இனத்தைத் திட்டமிட்டவாறு எவ்வாறு எவ்வாறு ஒடுக்கினர் என்பதையெல்லாம் மறந்து சிங்களக் குடியேற்றங்கள் பாரபட்சமானரீதியிலோ கபட நோக்கங்களைக் கொண்டதாகவோ இருக்கவில்லை என்ற தோரணையில் அவற்றை நியாயப்படுத்தும் அரசியற் போக்குகள் காணப்படுகின்றன. ஆதாவது தமிழர்களுக்கு பூர்வீகக் காணிகள் போதியளவு இருந்ததால் அக்காலத்தில் அவர்கள் குடியேறத் தயாராயிருக்கவில்லை என்று கூறுவதில் உண்மையுமுண்டு.

ஆனால் தமிழ் பேசும் மக்களின் குடிசனப் பெரும்பான்மையை குறைத்துவிட எடுத்த முடிவுகளே திட்டமிட்ட குடியேற்றங்கள் என்பதை அலட்சியப்படுத்திவிட முடியாது. மிகப் பொருத்தமான ஓர் உதாரணத்தை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். திருகோணமலை நகரத்தின் கடலோரங்களில் சிங்களக் கடற் தொழிலாளர்கள் குடியேற்றப்பட்டனர். இதுவென்ன தெற்குப் பகுதிகளில் கடல் வளம் இல்லாததாலா நடந்தது? இல்லை! இதுவொரு திட்டமிட்ட நகர ஆக்கிரமிப்பே!

வடக்குக் கிழக்கு இணைந்த தீர்விற்காகவே நாம் போராடினோம். எனவே அவ்வாறான தீர்வையே வலியுறுத்த வேண்டும் என்ற கருத்தும் நிலவுகிறது. வடக்கும் கிழக்கும் இணைந்த ஒரு தனி நாட்டிற்கான போராட்டம் என்பது மிகவும் பயனுள்ளது. பொருளாதாரம், அதைத் தொடர்ந்த விரிந்த வருமானம், மூலவளங்களின் பரிமாற்றம், ஒன்றிணைக்கப்பட்ட உழைப்புச் சக்திகள், பாதுகாப்பு இவ்வாறு பல விடயங்களைச் சாதகமாகக் குறிப்பிடலாம்.

ஆனால் இணைக்கச் சொல்பவர்களுக்கு என்ன அரசியல் உண்டு? போராட்டம் முழுவதும் இஸ்லாமியர்களுடன் முரண்பாட்டைக் கொண்டிருந்தவர்களால் அம் மக்களின் நலனைப் பேண முடியுமா? இன்னும் இஸ்லாமியருக்கு எதிரான கருத்தைக் கொண்டவர்களாவே இருக்கிறார்கள். இத்தன்மையானது மீண்டும் சந்தேகமானதும் விலைபோகக் கூடியதுமான பிழைப்புவாத அரசியலையே முன்னிறுத்தும். இதனால் சமூகங்களுக்டையில் மீண்டும் முரண்பாடுகளும் முறுகல்களும் கலவரங்களும் கூட மூளலாம். இணைந்த பிரதேச ஆட்சிமுறை தேவையென்றால் அதன்கீழ் இயங்கப்போகும் அரசியற் பணிகள் என்னென்ன? அதிகாரப் பகிர்வுகள் என்னென்ன? இதனால் யாருக்கு லாபம் என்பது தெளிவாகச் சொல்லப்பட வேண்டும்.

கிழக்கு தனியாகவே நிர்வாகங்களைப் பேணவேண்டும் என்பது இன்னொரு சாராரின் நிலைப்பாடு. இன்று இதனைக் கோரி நிற்போரின் சார்பாக தீர்ப்புக்கள் முன்வைக்கப்பட்டாகி விட்டது. நடந்து முடிந்த தேர்தல்களையே இவ்வாறு கூறுகிறேன். கிழக்குக்கு முதலமைச்சர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆனால் அதிகாரப் பகிர்வு எவ்வாறு செய்யப்படப் போகிறது? எங்கிருந்து இயக்கப்படவுள்ளது? எல்லாமே மர்மம்! முதலமைச்சர் தேர்வின் போதே இன முரண்பாடுக் குறிகள் தோன்றியுள்ளன. இது ஆரோக்கியமானது தானா?

கிழக்குத் தனித்துவம் என்ற கோஷத்தை திருகோணமலைத் தமிழ் மக்கள் சற்று ஓரம் கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கின்றன. பிரிவு – இணைவு என்று அரசியல் சித்துவிளையாட்டுகளில் ஈடுபட்டிருப்பவர்கள் தமது அரசியல் வங்குரோத்துத்தனத்தால் மக்களைப் பிழைப்புவாத அரசியல் மாயையினுள் வீழ்த்தியுள்ளனர்.

இன்றைய தனித்துவ கோஷமானது முதலாளித்துவ சக்திகளுக்குச் சார்பான ஜனநாயக புரட்சிகர சக்திகளுக்கு எதிரான தன்மையுடனேயே கிழக்கில் கோலோச்ச விரும்புகிறது என்பதைப் பிரிவுக்குப் பின்னரான சம்பவங்கள் கோடிட்டுக் காட்டுகின்றன. வடக்குத் தலைமையும் புதிய கிழக்குத் தலைமையும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்றே நடுவுநிலை விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

கிழக்குப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களை அந்நியப்படுத்தும், சந்தேகிக்கும் போக்கையே புலிகளின் அரசியலுக்குள் வளர்க்கப்பட்ட யாழ் பிரதேச மக்கள் தமது கருத்துகளாகக் கொண்டுள்ளனர். இதனால் பிரதேசப் பாகுபாடு நிரந்தரப் பாகுபாடாகியுள்ளது. எனவே எமது கருத்துகள் கிழக்கு மக்களின் யதார்த்த நடைமுறை வாழ்நிலைகளிலிருந்து அந்த மக்களின் உள்ளார்ந்த விருப்பங்களிலிருந்து ஆரோக்கியமாகப் புறப்பட வேண்டும். வெறுமனே எங்கோயிருந்து அச்சுறுத்தும் காரணிகளால் ஏற்படும் பீதி காரணமாக எமது கருத்துகள் வெளிவரக் கூடாது. நடைமுறைகளும் யதார்த்தங்களும் எமது கருத்தின் அடித்தளமாக அமையட்டும் எனக் கூறி எனது உரையை முடித்துக் கொள்கிறேன்.

3 thoughts on “வட- கிழக்கு இன்றைய நிலை

  1. சுவிஸ் இல் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் நடத்திய கருத்தரங்கை முன்வைத்தும், அதற்கு வெளியிலும்…

    18.5.2008 அன்று இந்தக் கலந்துரையாடல் நடந்தது. சுமார் 40 பேர் பங்குபற்றியிருந்தனர். வடக்குக் கிழக்கு பிரிப்புப் பற்றியதும் கிழக்கின் நிலை பற்றியதுமான கருத்தரங்காக இது விரிந்திருந்தது. வடக்குக் கிழக்குப் பிரிப்பைப் பற்றிய விவாதம் அவசியமற்று இருந்தது. அதை அநேகமாக எல்லோருமே ஏற்றுக்கொண்டிருந்தார்கள். கிழக்கின் நிலை பற்றிய விவாதங்கள் நடந்தன. எதிர்விவாதங்களின் வலு குன்றி இருந்தாகவே எனது கணிப்பு. கலந்துரையாடல் நெடுகிலும் புலியெதிர்ப்பு மனஉளவு நிலையிலிருந்து வெளிவர முடியாது கருத்துக்கள் கணிசமானளவு இருந்ததாகச் சொல்ல முடியும். இது ஒன்றும் ஏதோ புதிய விடயமுமல்ல. இன்று ஐரோப்பிய சந்திப்புகள் எல்லாமே அல்லது கருத்தாடல்கள் எல்லாமே இதற்குள் புதையுண்டதாக சொல்லப்படுவது கவனத்திற்குரியதுதான்.

    http://www.kariththundu.com/oodaru.com,ஆகியவற்ஙறில் வெளிவந்துள்ளது

    -ரவி

  2. தோழர் திலக் மென்ற விழுங்காமல் தனக்கப்பட்டதை தெளிவாக முன்வைக்கமுன்வரவேண்டும். அதுவே தெளிவான கருத்துநிலையை வந்தடைய உதவும். விமா;சனங்களுக்கு பயந்து ஓடி ஒளிக்ககூடாது. தோழர் திலக் வடக்கு கிழக்கு இணைப்பை விரம்புகிறராரா அல்லது எதிர்க்கிறாரா என்பதை அவரது உரையினூடு அறியமுடியாதுள்ளது. திலக் சரியோ தவறோ உங்கள் கருத்தை துணிந்த வையுங்கள். மிகுதியை பிறகு பார்க்கலாம்!

  3. There are so many problems in Sri Lanka than this unwanted issue.
    Talking about Tamil’s issue, there is no North Tamil or East Tamil.
    ALL THE Tamils in Sri Lanka have have their own brain. They know what’s going on in Sri Lanka. People like Mr.Thilak or even any politicians, Media,etc. thing that their words will make some change. People will not be changed. They can not be cheated.
    Last but not least, North people and East people are not brother sisters. Actually there is no North or East. There is only one issue, that is ‘Northeast’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *