பினனோக்கிச் செல்லுதல் தகுமா ?

கட்டுரைகள்

அ.மார்க்ஸ்

ண்பர் ராஜன் குறை தமிழ்ச் சூழலில் முக்கிய சில சிந்தனை உசுப்பல்களுக்குக் காரணமானவர். அவரது தெறிப்பான சிந்தனைகளால் பயனடைந்தவர்களில் நான் முதன்மையானவன். சமீபத்தில் ஷோபா சக்தியின் `சத்தியக் கடதாசி’ வலைத்தளத்தில் அவரது கட்டுரை ஒன்றை வாசித்தேன். `முதலீட்டியத்தின் எரிபொருள் கனவுக் காலம்’ என்பது தலைப்பு (http://www.shobasakthi.com/archives/146). உலகம் இன்று எதிர்நோக்கியுள்ள ஆகப் பெரிய நெருக்கடியான படிம எரிபொருள் தீரும் நிலை, அதன் விளைவுகளில் ஒன்றாக இன்று நாம் எதிர் கொண்டுள்ள உணவுப் பஞ்சம், விலைவாசி ஏற்றம் குறித்த ஒரு மிகப் பெரிய எச்சரிக்கை மணியை ஒலித்திருக்கிறார் ராஜன்.

சென்ற முறை சென்னை வந்திருந்தபோது, என்னைச் சந்திக்க வாய்த்த போதெல்லாம் அவர் இதைத்தான் பேசிக் கொண்டிருந்தார். உலகம் வெப்பமடைதல், ஓசோன் படலத்தில் துளை விழுதல் ஆகியவற்றின் விளைவுகள் குறித்து மனிதர்கள் உரிய கவலை கொள்ளாதிருத்தல் குறித்து மிகவும் விசனப்பட்டார். இன்னும் முப்பதாண்டுகளில் மனிதர்க்கு இதைத் தவிர வேறு எந்தச் சமூக முரண்கள் குறித்தும் நினைப்பதற்கே நேரமிருக்காது என்று கூட ஒரு சந்தர்ப்பத்தில் சொன்னார். இந்தச் சிந்தனைகளின் தொடர்ச்சியாகவே மேலே குறிப்பிட்ட கட்டுரையை எழுதியுள்ளார்.

முதலாளியத்தின் தீய விளைவு முதலாளி தொழிலாளியைச் சுரண்டுதல் என்கிற அம்சத்தில் மட்டுமே இங்கு எதிர்கொள்ளப்பட்டது. மாறாக, அதன் முதலீட்டுத் தன்மை என்பதே (investment Pattern) இயற்கை வளங்களை அபரிமிதமாக உறிஞ்சுவதாக இருந்தது குறித்த கவலையை முதலாளிய எதிர்ப்பாளர்கள் அதற்குரிய முக்கியத்துவத்துடன் கண்டு கொள்ளவில்லை. ராஜன் குறையின் இக்குற்றச்சாட்டு முக்கியமான ஒன்று. இது குறித்து சோசலிசக் கட்டுமானங்களின் வீழ்ச்சியை ஒட்டி இங்கே விரிவாகப் பேசப்பட்டது (பார்க்க: எனது `மார்க்சியத்தின் பெயரால்’) உற்பத்தியைச் சமூக உடைமையாக்கினால் போதும்,முதலாளிய வடிவங்களை அப்படியே வைத்துக்கொள்வதால் பெரிய ஆபத்துகள் வந்து விடாது என்பதே லெனின், ஸ்டாலின் மற்றும் அவர்களை அப்படியே பின்பற்றிய உலக கம்யூனிஸ்டுகளின் கருத்தாக இருந்தது.`சோவியத்து முதலாளிய வடிவங்கள் சோசலிஸம்’ என்று அவர்கள் நம்பினர். முதலீட்டு வடிவத்தில் மட்டுமின்றி கல்விமுறை,மருத்துவம்,குடும்ப அமைப்பு என எல்லாவற்றிலும் முதலாளியத்தை அப்படியே எடுத்துக் கொள்வதில் அவர்கள் தயக்கம் காட்டவில்லை. விளைவுகள் நாம் அறிந்ததே.

இன்று சோசலிசக் கட்டுமான முயற்சிகள் தோல்வியடைந்தது இன்னொரு பக்கம் முதலாளியம் வெற்றியடைந்ததாகக் கருதப்படும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. இது முதலாளிய – அல்லது ராஜனின் மொழியில் சொல்வதானால் `முதலீட்டியத்தின்’ ஆபத்தை இரட்டிப்பாக்கியுள்ளது. மிகப் பெரிய அளவில் இன்று உலக முதலாளியம் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. 1930களில் சந்தித்த நெருக்கடியிலிருந்து அது மீண்டது போல இன்று சாத்தியமா எனத் தெரியவில்லை. பணவீக்கம் இன்று வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது.இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது இந்தியாவில் பணவீக்கம் 7.83 சதம், சமீப காலத்தின் மிக அதிக அளவு எனப் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. கடந்த சில மாதங்களில் உணவுப் பொருட்களின் விலை 25 முதல் 75 சதம் அதிகரித்துள்ளது. உலகமயச் செயற்பாடுகளின் விளைவாக, இந்திய அரசிடம் உள்ள கோதுமைக் கையிருப்பு கடந்த பல ஆண்டுகளிலேயே ஆகக் குறைவாக உள்ளது. சென்ற ஆண்டைப் போல இறக்குமதி செய்யவும் வழியில்லை. ஏனெனில், 90 சதம் விலை அதிகம் கொடுத்து வாங்கியாக வேண்டும். `பாரல்’ என்று வெறும் பத்து டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை இன்று 325 டாலராக ஏறியுள்ளது.

இந்தப் பணவீக்கமும் கூடச் சரியாகக் கணக்கிடப்படவில்லை எனத் தொழிற்சங்கத்தினரும் எதிர்க் கட்சியும் குற்றம் சாட்டுகின்றனர். பணவீக்கத்தைக் கணக்கிடும்போது சில்லறை விலையைக் கணக்கில் கொள்ளாமல் மொத்த விலையை எடுத்துக் கொள்கின்றனர் எனவும், உணவு மற்றும் அத்தியாவசியத் தேவைப் பொருட்கள் ஆகியவற்றின் விலைக்கு உரிய பங்களிப்பதில்லை என்றும், இன்று நமது வாழ்க்கை முறையிலிருந்து பிரிக்க இயலாமற்போன சேவைத் (Service) துறை சார்ந்த தேவைகள் (கல்வி, மருத்துவம், `இன்டர்நெட்’ தொடர்பு உட்பட) கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர். இவற்றை எல்லாம் எடுத்துக்கொண்டால் பணவீக்கம் இரண்டு இலக்கத்தைத் தாண்டும்.

எனது வயதொத்தவர்களுக்கு நினைவிருக்கலாம். 1970களில் இதுபோன்ற நெருக்கடியை, விலைவாசி ஏற்றத்தை உலகம் சந்தித்தது. எண்ணெய் விலை (Crude Oil) ஏறியது. உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. ஆனால், அன்று பிரேசில் முதலான பல பகுதிகளில் புதிதாக எண்ணெய் ஊற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன. புதிய விளைநிலங்கள், நீர் வசதி உருவாக்கப்பட்டன. இவற்றின் மூலம் அந்த நெருக்கடியை நாம் எதிர்கொண்டோம். இன்று அது சாத்தியமா? இன்னும் தோண்டி எடுப்பதற்கு இயற்கை வளங்கள் அகப்படுமா? கிணறுகள் தோண்ட இடமிருக்குமா? அணைகள் கட்ட ஆறுகள் உள்ளனவா?

கடந்த எட்டு லட்சம் ஆண்டுகளில் காணாத அளவிற்கு அதிகமாக பசுமை இல்லை. வாயுக்கள் இன்று வெளியேற்றப்படுகின்றன. கரியமிலவாயு 28 சதம், மீதேன் 124 சதம் அதிகரித்துள்ளது. ஓசோன் படலத்தில் துளை, உலகப் பந்து வெப்ப மடைதல்,ஆர்டிக் பகுதிகளில் பனிப்படலம் உருகுதல் என்பதான ஆபத்துக்களை நாம் உடனடியாக எதிர்கொண்டுள்ளோம்.2050-ல் இந்தப் பனிப்படலம் முற்றிலுமாய் உருகிவிடும் என்கிறார்கள். இவற்றால் விளையும் பருவநிலை மாற்றம் ஏற்கெனவே பல விளைவுகளை ஏற்படுத்திவிட்டது. விவசாய உற்பத்தி வீழ்ச்சிக்கு அதுவும் ஒரு காரணம். இந்தக் கோடையில் பெய்த மழை தமிழகத்தில் உளுந்து முதலான பருப்பு உற்பத்தியைப் பெரிய அளவில் பாதித்துள்ளதை விளக்க வேண்டியதில்லை.

ஆனால் முதலாளியமோ, இதுகுறித்து எந்தக் கவலையும் படவில்லை. பனிப்படலம் உருகினால் கீழை நாடுகளுக்கு சூயஸ் கால்வாய் வழியாகச் சுற்றிக்கொண்டு வரவேண்டியதில்லை. சில ஆயிரம் மைல்கள் மிச்சமாகும் என அது கணக்கிட்டுக் கொண்டுள்ளது. பனிப்படலம் உருகிய பின் தோண்டி எடுக்கப்படக்கூடிய கனிவளங்களுக்கு யார் உரிமை கோரலாம் என்கிற போட்டி தொடங்கிவிட்டது.

உடனடி எதிர்காலத்தில் ஏற்படவுள்ள உணவு நெருக்கடியின் காரணங்களை மட்டும் தொகுத்துக்கொள்வோம். 2050 வாக்கில் உலக மக்கள் தொகை 9 பில்லியனாகும் (இன்று 6.4 மில்லியன்). எனவே உணவு உற்பத்தி இரண்டு மடங்காக வேண்டும். ஏனெனில், இதுகாறும் குறைந்த அளவே உணவை உண்டு கொண்டிருந்த மக்கட் பிரிவினர் இனி அதிகம் நுகரக்கூடிய நிலை ஏற்படும். இன்றைய உணவு நெருக்கடிக்குக் காரணம் சீன, இந்திய மத்திய தர வர்க்கத்தினர் அதிகம் தானியங்களைச் சாப்பிடத் தொடங்கியதுதான் என புஷ்ஷும் கான்டலீசா ரைசும் கூறியுள்ளது இங்கே கடுமையான எதிர்ப்பலைகளை உருவாக்கியதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அந்தக் கூற்றில் உண்மை இல்லாமலில்லை. இவ்விரு நாடுகளிலும் பொருளாதார உற்பத்தி வீதம் அதிகரிப்பது,இங்குள்ள மத்திய தர வர்க்கத்தின் வருவாயை அதிகரித்துள்ளது.அவர்களின் நுகர்வுத்தன்மை இதனால் வேறுபட்டுள்ளது.தானியங்களைக் குறைத்துக்கொண்டு, காய்கறி, பழங்கள், பால் பொருட்கள், கோழி மற்றும் மாமிசம் முதலானவற்றை அதிகம் உண்ணும் வழக்கம் ஏற்பட்டுள்ளது. 100 கலோரி சத்துள்ள இறைச்சியை உருவாக்குவதற்கு 700 கலோரி மதிப்புள்ள தாவர உணவை ஆடு, மாடுகட்குச் சாப்பிடக் கொடுக்கவேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது.

இன்றளவும் நமது நாட்டின் சராசரி உணவு நுகர்வு அமெரிக்கர்களின் வீட்டு வளர்ப்பு நாய்கள் சாப்பிடுவதைக் காட்டிலும் கூடக் குறைவு என்பது உண்மைதான். புஷ் மற்றும் காண்டியின் கூற்று பிரச்சினையைத் திசை திருப்புவதுதான். ஆனாலும்கூட இங்குள்ள கடுமையான ஏற்றத்தாழ்வுகள், பெருத்துள்ள மத்திய தர வர்க்கம், உலக மக்கள் தொகையில் 40 சதம் இவ்விரு நாடுகளிலும் குவிந்திருத்தல் ஆகியவற்றையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொண்டு பார்த்தால் இதன்மூலம் உருவாகியுள்ள நுகர்வு அதிகரிப்பை நாம் விளங்கிக்கொள்ள இயலும். அணு ஆயுதப் பரவலைத் தடுப்பதில் உலக முதலாளியம் எத்தகைய நேர்மையற்ற போக்கைக் கைக்கொள்கிறதோ,அதே போக்கின் வெளிப்பாடுதான் புஷ்ஷின் கூற்றும். அதாவது, நாங்கள் அணு ஆயுதங்களைச் செய்து குவித்தாயிற்று. இனி புதிதாய் யாரும் இதில் நுழையக்கூடாது. உணவு நுகர்வு, பசுமை இல்ல வாயு வெறுயேற்றம் ஆகியவற்றிலும்கூட முதலாளியத்தின் அணுகல் முறை இதுதான்.

உணவு நெருக்கடியின் காரணங்களுக்குத் திரும்புவோம்.மூன்றாவது காரணம், விவசாய உற்பத்தி உணவுக்குப் பதிலாக இயற்கை எரிபொருளை (Bio Fuels) நோக்கித் திருப்பப்படுவது. சோளம், எண்ணெய் விதைகள், கரும்பு எல்லாம் இனி எத்தனால் (Ethanol)தயாரிப்பை நோக்கித் திருப்பப்படுவது தொடங்கியாயிற்று. 2020 வாக்கில் சுமார் 400 மில்லியன் டன் தானியம் (கிட்டத்தட்ட மொத்த அரிசி உற்பத்தி அளவு) இவ்வாறு எரிபொருளாக மாற்றப்படும். சில ஆண்டுகட்கு முன்பு நமது சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர்களால், படிம எரிபொருளிலிருந்து வெளியேறும் ஆபத்தான வாயுக்களிலிருந்து பாதுகாக்கும் ஆபத்பாந்தவனாக முன்னிறுத்தப்பட்ட தாவர எரிபொருள் இன்று உணவுப் பஞ்சத்திற்குக் காரணமாக எல்லோராலும் கரித்துக் கொட்டப்படுகிறது.அமேஸான் மழைக் காடுகளெல்லாம் இதனால் அழியப் போகின்றன என்கிறார்கள். உணவுக் கலவரம் முதல் விலைவாசி ஏற்றம் வரை பேசுகிற எல்லோரிடமும் வாங்கிக் கட்டிக்கொள்வது இந்த `பயோ ஃப்யூயல்’ உற்பத்திதான். இதிலும் ஒரு அரசியல் இருக்கத்தான் செய்கிறது. எண்ணெய் விலை அதிகரிப்பின் பின்னுள்ள நலன்கள், விலைவாசி ஏற்றத்தில் ஊக வணிகத்தின் பங்கு எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளும் நோக்கமும் இதன் பின்னே உள்ளது. `எத்தனால்’ தயாரிப்பிற்கான பயிர்செய்கையால் அமேஸான் காடுகள் அழிந்துவிடும் என்பதெல்லாம் ரொம்ப `ஓவரான’ கற்பனையாகத்தான் தெரிகிறது.

உணவு நெருக்கடியின் இன்னொரு காரணம் பருவநிலை மாற்றம். இதுகுறித்து முன்பே பார்த்தோம்.

சரி…இன்றைய இந்த நெருக்கடிகளிலிருந்து தப்பிப்பதற்கு என்ன வழி? பின்னோக்கிச் செல்வதா?ராஜன் குறை இதுகுறித்துப் பேசிக் கொண்டிருந்தபோது நடந்ததாக ஒரு சம்பவம் கேள்விப்பட்டேன். ஒரு நண்பர் எழுந்து சென்று அறையிலிருந்த விளக்கை அணைத்தாராம். இரண்டு மணி நேரங்களுக்குப் பின் வாதத்தைத் தொடரலாம் என்றாராம். தொடர்ந்தபோது `பின்னோக்கிச் செல்லுதல் சாத்தியமா?’ எனக் கேட்டதாக அறிந்தேன். பிரச்சினையை அவ்வளவு எளிமையாகப் பார்க்கவேண்டாம். எனது சிறிய வயதில் மின்சாரமே இல்லாத ஒரு கிராமத்தில் நான் இரண்டாண்டுகள்இருந்துள்ளேன்.அப்போது அதை நான் உணரவேயில்லை. மின்சார சாதனங்களை நம்பியே ஒரு நகரத்தை,இப்படியான ஒரு அடுக்குமாடிக்கட்டடத்தைக் கட்டிவிட்டு மின்சாரமில்லாமல் வாழ்வதெப்படி என்கிற கேள்வி எப்படிச் சரியாகும் என்கிற ரீதியில் ராஜன் பதில் சொல்லியுள்ளார்.

அப்படித்தானே சொல்லியாக வேண்டும்.பின்னோக்கிச் செல்வதா இல்லையா, பின்னோக்கிச் செல்வதெனில் அது எப்படி அமையவேண்டும்? இன்றைய உற்பத்தி மற்றும் நுகர்வுக்கு ஏற்ப கட்டமைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்டுமானங்களையும் தகர்த்துவிடுவதா? முதலீட்டியமோ, இல்லை முதலாளியமோ அவை வெறுமனே முதலீடு, உற்பத்தி இவை தொடர்பான உறவுகள் ஆகியவை மட்டும்தானா?முதலாளியம் செம்மைப்படுத்திய சமூக உறவுகள்,உருவாக்கிய ஜனநாயகச் சிந்தனைகள் எல்லாவற்றிலிருந்துமே பின்னோக்கிச் சென்றுவிடுவதா? நிச்சயம் ராஜன் குறை இத்தகைய கருத்துடையவரல்ல என்பதை அறிவேன். பின்னோக்கிச் செல்வது எதுவரை, எந்தெந்த அம்சங்களில் என்பதெல்லாம் ரொம்பவும் ஆழமாகவும் அற அடிப்படையிலும் விவாதிக்கப்பட வேண்டிய அம்சங்களாக உள்ளன என்பது மட்டும் புரிகிறது.

அறிவியலைப் (science) பொறுத்தமட்டில் அது பின்னோக்கிச் செல்வதை ஏற்காது. இயற்பியலின் மிக நவீனமான கோட்பாடாகிய string Field theoryயை முன்வைத்தவர்களில் ஒருவரும், நியூயார்க் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியருமான மிசியோ காகுவின் பேட்டி ஒன்றைச் சமீபத்தில் படிக்க நேரிட்டது. “கண்டுபிடிப்புகளின் காலத்திலிருந்து (Age of Discovery) நாம் வெற்றிகொள்ளும் காலத்திற்கு (Age of Mastery) மாறிக்கொண்டிருக்கிறோம்” என்கிறார் அவர். இயற்கையின் நடனத்தை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கும் நிலையிலிருந்து இயக்குபவர் (Choreographer) என்கிற நிலைக்கு நாம் வளர்ந்துள்ளோம். உயிர் தொடர்பான டி.என்.ஏ. அணுகல்முறை, பொருண்மை பற்றிய அணுக்கோட்பாடு, மூளையின் இயக்கத்தை தர்க்க மின் சுற்றுகளாகப் புரிந்துகொள்ள வைக்கும் கணினித் தொழில்நுட்பம் முதலியன இயற்கையில் நாம் இடையீடு செய்து அதைத் தகவலமைக்கச் சாத்தியமானவை என்கிறார் பேராசிரியர் காகு.

எரிபொருள் நெருக்கடியைப் பொறுத்தமட்டில் இன்னும் 15 ஆண்டுகளில் எண்ணெய் விலை கடுமையாக அதிகரிக்கும். அதே நேரத்தில் சூரிய ஹைட்ரஜனின் விலை மிகவும் குறைந்து இரு வரைபடங்களும் ஒரு புள்ளயில் சந்திக்கும். இயற்கையை மாசுபடுத்தாத, வற்றாத எரிபொருள் இதன்மூலம் உருவாகும். அணு ஆற்றலை எடுத்துக்கொண்டால், அணுவை உடைத்து ஆற்றலை உருவாக்கும் இன்றைய `பிளவை’ (Fission) முறைதான் ஆபத்தானது; கதிர்வீச்சு ஆபத்துடையது; இன்னும் 30 ஆண்டுகளில் உருவாகவுள்ள அணுக்கருக்களை இணைத்து ஆற்றலை உருவாக்கும் ‘Fusionமுறை இந்த ஆபத்தில்லாமலேயே, யுரேனியத்தின் பயன்பாடு இல்லாமலேயே அணுக்கரு ஆற்றல் நம் வசமாகும் என்கிறார்.

ராஜன் குறைக்கு மட்டுமல்ல, இன்றைய நெருக்கடிகளை உற்றுக் கவனிக்கும் யாருக்கும் காகுவின் கூற்றுகள் ஏதோ “இறைவாக்கு போல தர்க்க பலமற்றவையாகத் தோன்றலாம்.ஆனால் இந்தச் சாத்தியப்பாடுகளையும் நாம் கணக்கில் கொள்ளாதிருக்க இயலாது. இத்தகைய சாத்தியங்கள் கையகப்பட்டாலுங்கூட முதலாளிய முதலீட்டு முறையை நாம் ஏற்றுக்கொள்ள இயலாது என்பதென்னவோ உண்மைதான்.

இத்தனை பெரிய மக்கள் தொகையை உருவாக்கிவிட்டு (6.4 மில்லியன்) பூச்சி மருந்தும், உரமுமில்லாத பழைய இயற்கைச் சாகுபடிக்குத் (Organic Farming) திரும்பிவிட இயலுமா? இயற்கை வேளாண்மை எல்லோருக்கும் சோறுபோடுமா? தடுப்பூசிகளால் பிரச்சினைகள் எழுகின்றன என்பதற்காகத் தடுப்பூசியே (Vaccination தேவையில்லை எனச் சொல்லலாமா? நல்ல குடிநீர், தூய காற்று, சத்துணவு எல்லாம் அளிக்கப்படாமல் தடுப்பூசியை மட்டும் நிறுத்திவிட முடியுமா? தடுப்பூசிகள் வந்த பின்புதானே இங்கு அம்மை, போலியோ முதலான நோய்களெல்லாம் கட்டுக்கு வந்தன.

`மார்டனிசத்தின்’ தீய விளைவுகளை நவீனத்திற்கு முந்திய (Pre-modern) நிலையிலிருந்து விமர்சித்துவிட இயலுமா? நவீனத்துவத்தின் பயங்கரத்தை நாம் கண்டிக்கும் அதே நேரத்தில், இந்தியச் சமூகம் போன்ற வருண சாதிச் சமூகம் ஒன்று நவீனத்துவத்தால் அடைந்த பயன்களைத் துறந்துவிட முடியுமா?

ஒன்றைச் சொல்லி முடிக்கத் தோன்றுகிறது.இன்றைய இந்த நெருக்கடிகளை எதிர்கொள்ளுவதில் காந்தி நமக்கு எந்த அளவுக்குப் பயன்படுவார்? நவீனத்துவத்தை முற்றாக மறுத்தவரல்ல அவர். அதே சமயத்தில் அதை அப்படியே ஏற்றுக்கொண்டவரும் இல்லை. தனது தொடக்க நூல்களில் ஒன்றாகிய `ஹிந்த் சுயராஜ்’லிருந்து பின்னாளில் பல அம்சங்களில் வேறுபட்டார். கடும் நோய்வாய்ப்பட்டபோதும் ஊசி போட்டுக்கொள்ள மறுத்த அவர், ரயில் பயணத்தைத் தவிர்த்ததில்லை. இந்தியாவின் பன்மைத் தன்மையைத் தக்க வைப்பதில் காந்திய அனுபவங்கள் இன்றளவுக்கும் நமக்குக் கைகொடுப்பது போலவே இன்றைய இந்த நெருக்கடியை எதிர்கொள்வதிலும்கூட அவரது சிந்தனைகளும்,அனுபவங்களும் நமக்குக் கைகொடுக்கும் என்றே தோன்றுகிறது.

நன்றி. தீராநதி 01.06.2008

1 thought on “பினனோக்கிச் செல்லுதல் தகுமா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *