ஜேம்ஸ் ஹான்சன்: அறிவியலின் மனசாட்சி

கட்டுரைகள்

-மோனிகா

முனைவர் ஜேம்ஸ் ஹான்சன் இயற்பியல் ஆய்வாளர். நாஸா கோடார்ட் விண்வெளி ஆய்வு நிறுவனம் என்ற ஆய்வகத்தின் இயக்குனர். இந்த அமைப்பு கோடார்ட் விண்வெளி பயண மையம் என்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தின் புவி நிறுவனத்தின் (Earth Institute) அங்கமாகும். இவர் இருபதாண்டுகளுக்கு முன்னால் (ஜூன் 23, 1988) அமெரிக்க நாடாளுமன்றத்தில் (காங்கிரஸ்) புவி வெப்பமடைகிறது என்று சாட்சியமளித்தன் மூலம் இப்பிரச்சினை குறித்து பொது மக்கள் கவனத்தை ஈர்த்தவர்.

இவர் சென்ற ஜூன் மாதம் அமெரிக்க செனட் உறுப்பினர்களின் விசேஷ குழுவின் முன் “இருபதாண்டுகளுக்குப்பின் புவி வெப்பமடைதல்: கவிழ் புள்ளிகளின் (Tipping Points) அருகாமையில்” என்ற தலைப்பில் ஆற்றிய உரை சுருக்கமாகவும், தெளிவாகவும் பிரச்சினையின் தீவிரத்தை சுட்டுகிறது. http://www.columbia.edu/~jeh1/2008/TwentyYearsLater_20080623.pdf

அவரது உரையிலிருந்து: “மீண்டும் புவி வெப்பமடைதல் என்ற நிகழ்வுக்கு தொடர்புடைய அறிவியல் சமூகத்திற்கும், கொள்கை வகுப்பாளர்கள்-பொதுமக்களுக்குமிடையே பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. அன்று போலவே இன்றும் அறிவியல் தரவுகளின் அடிப்படையில் எட்டப்படும் முடிவுகள், அரசியல் சமூகத்திற்கு அதிர்ச்சியளிப்பதாகவே இருக்கின்றன. இன்றும் இந்த முடிவுகள் 99 சதவிகிதத்திற்கும் அதிகமாக உறுதியானவை என்று என்னால் சான்று பகர முடியும் …பண்பாடுகள் தோன்றி வளர்ந்த இவ்வுலகென்ற படைப்பை காப்பாற்றுவதற்கு தேவையான மாற்றங்கள் என்னவென்பது தெளிவு. ஆனால் குறுகிய லாப நோக்கங்களைக் கொண்ட ஆதிக்க சக்திகள் வாஷிங்டனிலும், பிற தலைநகரங்களிலும் கோலோச்சுவதால் இம்மாற்றங்கள் நிகழாவண்ணம் தடுத்து வருகின்றன… எரிபொருள் கம்பெனிகளின் தலைவர்கள் (CEOS) தங்கள் வர்த்தக நடவடிக்கைகளின் நீண்ட கால விளைவுகளை நன்கறிந்துள்ளனர். என் பார்வையில் இவர்கள் மானுடத்திற்கும் இயற்கைக்கும் எதிரான குற்றங்களுக்காக குற்றவாளிக் கூண்டிலேற்றப்படவேண்டும்.”

கடந்த மார்ச் 21ஆம் தேதியன்று Democracy Now என்ற செய்தி நிறுவனம் ஒரு நேர்காணலை நிகழ்த்தியது. ஜேம்ஸ் ஹான்ஸனின் பத்திரிகைக் குறிப்புகளை வெள்ளை மாளிகை தகவல் தொடர்பு அதிகாரிகள் தொடர்ந்து தணிக்கை செய்ததும், அவரை ஊடகங்களில் உரையாட அனுமதிக்காததையும் குறித்த விவரங்களை ஹான்சனும், Censoring Science: Inside the Political Attack on Dr.James Hansen and the Truth of Global Warming என்ற நூலை எழுதியுள்ள மார்க் போவனும் (Mark Bowen) அந்த நேர்காணலில் விரிவாக பதிவு செய்துள்ளனர். www.democracynow.org/2008/3/21/

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள் என விட்டுவிட முடியாது. ஏற்கனவே காலம் கடந்துவிட்டதோ என்றுதான் அறிவியலாளர்கள் சிந்திக்கின்றனர். ஜான் ஹோல்ட்ரன் (John Holdren) என்ற விஞ்ஞானி புவி வெப்பமடைதல் என்று கூறுவதைவிட புவியை ஊறுசெய்தல் (Global Disruption) எனக்கூறுவதே பொருந்தும் என சென்ற வாரம் கூறியுள்ளார். ஜேம்ஸ் ஹான்சனின் உரை மற்றும் வேறு சில பதிவுகளிலிருந்து திரட்டிய சில தகவல்களை இங்கே தருகிறேன். அடிப்படை தகவல்களாக இருந்தாலும் என் போன்று இப்பிரச்சனைக்கு அறிமுகம் பெறுபவர்களுக்கு உதவியாக இருக்கலாம்.
ஹான்ஸன் 2006ம் ஆண்டு மக்களின் கவனத்தை கவரும் வகையில் ஒரு அறிக்கையை முன் வைக்க வேண்டி, “விலங்கினங்கள் குறைந்து வருகின்றன: தாவரங்கள் இடம் பெயர்கின்றன” என்ற வாக்கியத்தை தனது ஆய்வு முடிவாக வெளியிட்டார்.

மனிதர்கள் வசதியாக வாழ்கின்ற காரணத்தால் (மேலைநாடுகளில்!) தினசரி ஏற்படும் தட்பவெப்ப மாற்றங்களை அவர்கள் சரிவரக் கவனிப்பதில்லை. ஆனால், ஒரு குறிப்பிட்ட தட்பவெப்பநிலையை நம்பி மட்டுமே வாழக்கூடிய தாவரங்களும் விலங்கினங்களும் தற்போது பெருஞ்சிக்கலுக்கு உள்ளாகியுள்ளன.

இப்புவி வெப்பமடைதல் எப்படி ஏற்படுகிறது? பூமி சூரிய கதிர்கள் மூலம் வெப்பமடைவதும் சமநிலையை பராமரிக்கும் வகையில் அதே அளவு வெப்பம் பூமியிலிருந்து வெளியேற்றப்படுவதும் இயற்கை. சூரிய ஓளி அதிகமாதல், எரிமலைக் குமுறல்கள் போன்ற இயற்கை நிகழ்வுகள் ஓரளவுக்கு வளிமண்டலத்துக்கு செல்லும் வெப்பத்தை அதிகரிக்கலாம். ஆனால், பெருமளவில் இந்த அதிகரிப்பு துருவப் பிரதேசங்களுக்குள் ஊடுவிச் செல்லும் வளிமண்டலத்திலுள்ள பச்சை இல்ல வாயுக்களான மீத்தேன், கார்பன்- டை ஆக்ஸைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு போன்றவை இவ்வெப்பத்தை தக்க வைத்துக் கொள்வதனால்தான் ஏற்படுகிறதென்று பண்டைய நிலவியல் தட்பவெப்ப (paleo climatic/ past geolithical climatic) ஆய்வுகள் கூறுகின்றன. பூமியும் கடலும் அதிவெப்பமடைய இவையே காரணமென அந்த ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

கிட்டத்தட்ட 943 வகை விலங்கினங்கள் தம் தகவமைப்பை மாற்றிக் கொண்டுள்ளன. துருவப்பிரதேசமான அண்டார்டிகாவில் அடிலி, எம்பரர் பென்குயின் போன்ற விலங்கினங்கள் குறைந்து வருகின்றன. பனிப்பாறைகள் உருகுவதால் துருவக்கரடிகள் சீல்களை வேட்டையாட முடியாமல் போகவே இருபது சதவிகிததுக்கு மேல் குறைந்துவிட்டன. இவ்வுயிரனங்களின் இருப்பு மானுட இருப்புடன் தொடர்புடையது.

இம்மாற்றங்களுக்கு மூல காரணமாகிய கார்பன்- டை ஆக்ஸைடு வெளியேற்றத்தை தடுத்து நிறுத்தாவிட்டால் மூன்றில் ஒரு பங்கு விலங்கு மற்றும் தாவிர இனத்தையும் நம்மில் இலட்சக் கணக்கானவர்களையும் இழக்க நேரிடும். உலகெங்கும் வியாபித்துள்ள தொழில்மயமாதல் என்னும் பேய் நிலக்கரி, எண்ணெய், எரிவாயு போன்றவற்றை ஆக்கிரமித்துக் கொண்டமையால் லண்டன் நகரமே படிவத் திரவங்களின் புகையால் உழன்றது, அமெரிக்காவில் ஒரு ஆற்றையே தீக்கிரையாக்கியது, காடுகளை அமில மழையால் ஆழ்த்தியது. வெப்பமடைதல் பிரச்சினை நம்மை முற்றும் முழுவதும் பீதியிலாழ்த்தும் வரை நாம் இதற்கு விடை தேடப்போவதில்லை. ஆனால் நின்று, நிதானித்து சரிசெய்துவிடலாம் என்று நம்புவதற்கு இடமில்லாத ஒரு இக்கட்டான சூழலில் இன்று நாம் இருக்கிறோம். காரணம் 350ppm க்கு குறைவாக இருக்க வேண்டிய கார்பன்-டை ஆக்ஸைடின் அளவு ஏற்கனவே 385ppm ஆக உயர்ந்துள்ளது. இதே வேகத்தில் போனால் அது வருடத்திற்கு 2ppm அதிகரித்துக் கொண்டேபோய் தற்போது எஞ்சியுள்ள படிவத் திரவங்கள் (fossil fluids), எண்ணெய், கரி, கச்சாப் பொருட்களான தார்மணல், மீத்தேன் ஹைட்ரேட், கடின எண்னெய்கள் போன்ற எரிபொருள் முழுவதும் எரிவதால் எட்டக்கூடிய 450ppm அளவை விரைவில் அடைந்துவிடும். இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வழி வெப்ப அதிகரிப்பை 2 டிகிரி செல்சியஸ் அல்லது 3.6 fahrenheit குறைப்பதுதான். அப்படி செய்வதன் மூலம் உடனடி நாசத்தை தவிர்க்கலாமே தவிர தீர்வை சென்றடைந்துவிட முடியும் என்று சொல்ல முடியாது.

ஏற்கனவே நிகழ்ந்து கொண்டிருக்கும் கார்பன்-டை ஆக்ஸைடு உமிழ்வை நிறுத்துவதற்கு முட்டுக்கட்டையாக இருப்பவை தொழில் நிறுவன அதிபர்களின் கைக்கூலிகளாக இருக்கும் நமது அரசாங்கங்கள்தான். அதிலும் அமெரிக்க அரசாங்கத்தின் பங்கு அளவிலடங்காதது. துந்திரப் பிரதேச தட்பவெப்ப மண்டலங்கள் ஏற்கனவே துருவங்களை நோக்கி நகரத் தொடங்கிவிட்டன. இது கிட்டத்தட்ட 250 மைல்களை தாண்டிவிட்டது. தெற்கு அமெரிக்கா, பூமத்திய ரேகைப் பகுதிகள், ஆஸ்திரேலியா மற்றும் தெற்கு ஆப்பிரிக்கப் பகுதிகள் ஏற்கனவே பாதிப்படைந்துள்ளன. கார்பன்- டை ஆக்ஸைடு வளர்ச்சியை கட்டுப்படுத்தி பழைய நிலைக்கு கொண்டு வராவிட்டால் காட்டுத்தீயும், ஏரிகள் வரண்டு போவதும் வழமையாகிவிடும். பனிமலைகளிலிருந்து வரும் நல்ல தண்ணீரை நம்பி பல லட்சக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள். இமயமலை, ஆண்டஸ், ராக்கி மலைத்தொடர்களின் நீராதாரங்கள் வற்றிக் கொண்டு வருகின்றன. தொடர்ந்து அதிகரித்து வரும் பசுமை இல்ல வாயுக்களால் ஏற்படும் வெப்பத்தின் காரணமாக எழும் ஹைட்ராலஜிக் சுழலால் வெள்ளங்களும் பஞ்சங்களும் அதிகரிக்கும். ஆழ்கடலிலுள்ள பவழப்பாறைகளும், மழைக்காடுகளும் மூன்றிலொரு பங்கு கடல் வாழ் விலங்கினங்களின் உரைவிடமாக விளங்குகின்றன. கார்பன்- டை ஆக்ஸைடு அதிகரிப்பால் கடல் நீருடன் அமில மழைக்கலப்பு ஏற்பட்டு இவை பழுதடைந்து வருகின்றன.

எங்கெல்லாம் எரிபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றனவோ அங்கெல்லாம் கார்பனை தக்கவைத்து பூமிக்குள் திருப்பி அனுப்புவதன் மூலம் புவி வெப்பமடைவதை தவிர்க்கலாம். வாகனங்களில் பயன்படுத்தப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எண்ணெய்களிலிருந்து கார்பனை பிரித்தெடுப்பது கடினம். அதுமட்டுமல்லாது எண்ணெய்களின் அளவும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தொடர்ந்து எரிபொருள் சக்தியை தக்கவைத்துக் கொள்ளவேண்டுமானால் இனி அது நிலக்கரியிலிருந்து எண்ணையை பிழிந்து எடுப்பதன் மூலமோ, படிவத் திரவங்களின் மூலமோ சாத்தியம் இல்லை. அவற்றின் முடிவை நாம் மிக விரைவில் சென்றடைய இருக்கிறோம். எண்ணெயின் விலை உயர இதுவும் ஒரு முக்கிய காரணம்.
மறு உற்பத்திக்குப் பயன்படக்கூடிய எரிபொருள் சக்தி மூலங்களை கண்டடைவதை விட்டு விட்டு எண்ணெய் நிறுவன ஜாம்பவான்கள் புவி வெப்பமடைவதைப் பற்றின ஐயப்பாட்டினை உண்டாக்குவது “புகைத்தல் உடல் நலத்துக்கு கேடு” என்று நமது சிகரட் பெட்டிகளின் மீது விளம்பரப்படுத்துவதை போன்றது. அரசியல் வாதிகளை அவர்கள் பகடைக்காய் ஆக்கிவிட்ட நிலையில் மக்கள்தான் விழித்துக்கொள்ள வேண்டும். கடைசி சொட்டு வரை நிலத்திலிருந்தும், கடலுக்குள்ளுமிருந்து படிவத் திரவத்தைப் பிழிந்தெடுக்கத் துடிக்கும் சுய நலம் பிடித்த இந்த வர்த்தக நிறுவங்களை குடிமக்களாகிய நாம்தான் தடுத்து நிறுத்த வேண்டும்.

நமக்கு அருகிலேயே நாம் உண்பதற்குத் தேவையான பயிர் விளையும்போதிலும் உலகின் மற்றொரு மூலையிலிருந்து அது கொண்டுவரப்படுகிறது. ரயில் வண்டியைவிடவும் விமானத்தில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை இன்று அதிகமாகிவிட்டது. விமான தளங்கள் நம் வெளியூர் பேருந்து நிலையங்களைக் காட்டிலும் அதிக வாகன நெருக்கடிக்கு உள்ளாகின்றன. இது பெரு முதலாளிகளுக்கு எளிதில், மலிவான விலையில் படிவத்திரவங்கள் கிடைக்கின்ற காரணத்தினால்தான். கார்பன் வரியென்றும் கார்பனுக்கு 100% டிவிடெண்டும் விதிப்போமேயானால் அவர்கள் இப்போதையிலிருந்து தெளிவடைய வாய்ப்புண்டு. அதே நேரம் பொது மக்களாகிய நமக்கு அவர்கள் ஏற்படுத்தி வரும் நாசத்திற்கும் அவர்களை எவ்வாறு ஈடு செய்ய வைப்பதெப்படி என்று தெரியவில்லை.

ஹான்சனின் எச்சரிக்கைகள் இப்படியிருக்க இதனிடையில் கடந்த ஜூன் 22ம் தேதி ஜெடாவில் நடைபெற்ற எண்ணெய் உற்பத்தியாளர் (Organisation of petroleum exporting companies)- வாடிக்கையாளர் கூட்டத்தில் நடந்த சூடான விவாதத்தில் எண்ணெய் தட்டுப்பாட்டுக்கு காரணம் போதிய அளவு உற்பத்தி நாடுகள் ஏற்றுமதி செய்யாததுதான் என்று வாடிக்கையாளர்களான (பெரும்பாலும்) மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்ட மற்றொரு புறம் உற்பத்தியோ, நுகர்வோ பெரிய மாற்றமடையாதபோது போன வருடம் 70$ ஒரு பேரலாக இருந்த பெட்ரோல் இப்போது 140$ ஆக மாறக் காரணம் என்ன என்று பி.சிதம்பரம் குரலெழுப்பியுள்ளார். இந்த சர்ச்சையில் தெரிய வந்தது என்னவென்றால், பெட்ரோலியத்தில் முதலீடு செல்லும் பண முதலைகளுக்கும் அதன் உடனடி பயன்பாட்டுக்கும் எந்த உறவும் கிடையாது. அமெரிக்காவைச் சார்ந்த பெரிய நிதி நிறுவனங்கள், ஓய்வுப் பண வைப்பு நிதி நிறுவனங்கள், ஜே.பி. மார்கன் சேஸ், மார்கன் ஸ்டான்லி போன்ற நிறுவனங்கள் “எதிர்கால வர்த்தகம்” என்ற பெயரில் பெருவாரியான சரக்கை விலைபேசும் காரணத்தால் பெட்ரோல் விலை உயர்ந்துவிட்டதென்பது ஒரு அசிங்கமான/கசப்பான உண்மை. உதாரணத்துக்கு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பெட்ரோல் விலை 60 ரூபாய் ஆகும் என்பதை கணக்கிட்டுக் கொண்டு இப்போது 10 ரூபாய்க்கு விற்கும் பெட்ரோலை முன் கூட்டியே 2018 ஆண்டுக்காக நாற்பது ரூபாய் முன்பணமாக கொடுத்து வாங்கிவிடுவது.

இழவு வீட்டில் பந்தலிலே பாவற்காய் என்று பாடுவது நினைவிற்கு வருகிறதல்லவா?

13 thoughts on “ஜேம்ஸ் ஹான்சன்: அறிவியலின் மனசாட்சி

  1. இது தான் சுயநலத்திற்கும் பொதுநலத்திற்கும் உள்ள உறவு
    தனியுடமைக்கும் பொதுஉடமைக்கும் உள்ள வேறுபாடு.உழைப்பாளிகள் முன்னேறுவார்கள்.மானிடவரலாறு இதை
    தான் போதிக்கிறது.தற்போது மந்தநிலை.அதையும் கூடியவிரைவில்
    ஈடுசெய்வார்கள்.ரஷ்சியாவுடனும் சீனாவுடனும் நிற்கமாட்டார்கள்
    அதைதெளிவற ஆய்வு செய்வார்கள்.
    அதையும் தாண்டி முன்னேறுவார்கள். நம்பிக்கை கொள்வோம்.

  2. உலகில் அதிக அளவில் கரியமில வாயுவை வெளிவிடுவது ‘சோசலிச’ சீனா. எண்ணை என்ன விலை விற்றாலும் அதில் லாபம் அடைவது எண்ணெய் ஏற்றுமதி
    செய்யும் நாடுகள்தான்.
    “உதாரணத்துக்கு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பெட்ரோல் விலை 60 ரூபாய் ஆகும் என்பதை கணக்கிட்டுக் கொண்டு இப்போது 10 ரூபாய்க்கு விற்கும் பெட்ரோலை முன் கூட்டியே 2018 ஆண்டுக்காக நாற்பது ரூபாய் முன்பணமாக கொடுத்து வாங்கிவிடுவது.”
    முதலில் forward contract முறை எப்படி செயல்படுகிறது
    என்பதை புரிந்து கொள்ளுங்கள். யாரும் அன்றைக்கு
    கொடுக்கும் விலையை இன்றைக்கே முன்பணமாக
    கொடுப்பதுமில்லை, 10 ஆண்டுகளுக்குப் பின் என்று
    இப்போதே விலை நிர்ணயித்து வணிகம் செய்வதில்லை.

  3. சத்திய கடதாசி, மோனிகாவுக்கு நன்றிகள் பல. நல்ல கட்டுரை. சமூக அக்கறையுள்ள பதிவு. இன்றைய உலகம் வெப்படைதல் பிரச்சினையின் ஆரம்பம் மற்றும் அதன் தொடர்ச்சியை வர்க்க நலன் சார்ந்து எழுதியுள்ளீர்கள். குறிப்பாக பன்னாட்டு ஏகபோகங்களே இந்த புவிப் பந்தைக் கூட விட்டு வைக்காமல் வேட்டையாடுகின்றனர். இவர்களுக்கும் திமிங்கலத்தை வேட்டையாடும் கொள்ளையர்களுக்கும் எந்தவிதமான வித்தியாசமும் கிடையாது. நல்ல பதிவு தொடருங்கள் உங்கள் பயணத்தை.

  4. ஐயா சந்திப்பு செல்வபெருமாள், உங்களுடைய ‘சோசலிச’ சீனாவும், அன்றைய சோவியத் யுனியனும் சுற்றுச்சூழலை
    எப்படி பாழாக்கின என்பது உலகறிந்த உண்மை.முதலாளித்துவ
    அமெரிக்காவில் சுற்றுச்சூழல் இயக்கங்கள் உண்டு,சூழலை
    பாதுக்காக்க சட்டங்கள் உண்டு. ஆயிரம் குறை இருந்தாலும்
    வாய் திறந்து கத்தவாவது முடியும்.சோசலிச நாடுகளில் அதெல்லாம் கிடையாது. முதலாளியமும்,மார்க்ஸியமும்
    சுற்றுச்சூழலைப் பொருத்தவரை கூட்டுக் கொள்ளையர்கள்தான்.
    இப்போதும் கூட சீனாவின் பிஜிங்கை விட நியுயார்க்கும்,
    லண்டனும் சுத்தமான நகரங்களாக உள்ளன.

  5. சுற்றம் சூழல் மாசு படுத்துவதுபற்றியே கேள்வி நிற்கிறது இதை
    எப்படி நிவர்த்தி செய்வதே பதில்லாக அமைய வேண்டும்.ஆதாயத்திற்கான உற்பத்தி முறையே இந்த சீர்கேட்டுக்கு காரணம்.உலக மக்களின் தேவைக்காக உற்பத்தி செய்ய முடியாதா?

    இதற்கு ஏதாவது போராட்ட வழிமுறைகள் இருக்கிறதா?
    உலக மக்களின் தேவைக்காக உற்பத்தி செய்வது என்பது வெறும்
    கற்பனை வார்தைகளா? மேற்சொல்லப்பட்ட சீனா ரசியா அமெரிக்கா
    பிரித்தானியா தொடர்ந்தும் ஆதாயத்திற்காவா? உற்பத்திசெய்வார்கள்.
    இதற்கெதிராக கிளர்தெழ மாட்டார்களா? இதற்கு பதில் தேடுவதிலேயே தீர்வும் அடங்கியிருக்கிறது.

  6. “யாரோ” விற்கு பதில் சொல்லும் கடப்பாடு எந்த எழுத்தாளருக்கும் எக்காலத்திலும் தேவையில்லாத ஒன்று. எனினும், விளம்பிய கேள்வியின் அவசியம் குறித்து சில கடப்பாடுகளினால் சிலவற்றை தெளிவுபடுத்த முயல்கின்றேன். Future market/future contract என்பது “யாரோ” சொன்னபடி இன்றே அந்த தொகையை அளிக்க முரண்பட்ட ஒன்றாக இருக்கலாம். ஆனாலும் அந்த குறிப்பிட்ட காலம் வரை பொருளை தன் கைவசம் இருத்திக் கொள்ள வேண்டி ஒரு குறிப்பிட்ட விலையை நிர்ணயம் செய்து அந்த விலையில் உறைய (freeze) செய்து விடும் உத்திதான் இது என்பதில் ஐயமில்லை.
    காண்க: http://en.wikipedia.org/wiki/Futures_contract and http://en.wikipedia.org/wiki/Forward_contract

    மேலும், சைனாவும் ரஷ்யாவும்(!)தான் அதிக அளவில் சுற்றுச்சூழலை பாழாக்கின என்பது சந்தேகத்திற்கிடமின்றி ஒரு தப்பான கருத்து. காரணம் மேலை நாடுகளின் கச்சாப் பொருள்களிலிருந்து, சோப்பு, சீப்பு, கண்ணாடி வரை சகல பொருட்களையும் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வது மூன்றாம் உலக நாடுகளான இந்தியா, சீனா, பாகிஸ்தான், மெக்சிகோ, ஹோண்டுராஸ் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள். அங்குள்ள அதிக பட்ச ஜனத்தொகை மற்றும் ஏழ்மை காரணமாக கழிவுகளும், சுற்றுச்சூழல் கேடும் அதிகம் நிகழ்கின்றன. அமெரிக்காவின் ஒவ்வொரு சராசரி கீழ்-நடுத்தர வர்க்கத்தினரும் (lower middle class) கூட குளிர்சாதனபெட்டியை பயன்படுத்துவதில் சிரமம் காண்பதில்லை. அங்குள்ள தனியாரல்லாத பொது வாகனங்களுக்கும்கூட (public transport like trains and buses) குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கிறது. இங்குள்ள மக்கள் தொகை மற்றும் நிலப்பரப்புடன் ஒப்பிடுகையில் இதன் கழிவின் விகிதம் மிகவும் அதிகம்.
    http://www.columbia.edu/~jeh1/2008/StateOfWild_20080428.pdf என்ற வலைத்தளத்தில் நீங்கள் கீழ்க்கண்ட தகவல் படத்தைக் காணலாம். அதாவது 2005ம் ஆண்டின் கணக்கின் படி அமெரிக்க படிவ திரவக் கழிவு 27.5; ரஷ்யா-7.5, சீனா; 7.8. அமெரிக்காவிற்கு இந்த ஒரு விஷயத்தில் பொருந்தாமற்போனாலும் இத்தருணத்தில் ஹென்றி லேபேப்ரனின் (Henri Lefebvre) எனக்குப் பிடித்த ஒரு கருத்தை நினவு கூற விழைகிறேன்: Purity is the greatest corruption, because the only people who do not sell themselves are those who can buy everything.

  7. சில திருத்தங்கள்:
    1.மேற்கண்ட பதிவு என்னுடையது. நானும் ராஜன் குறையும் ஒரே கணிணியை உபயோகிப்பதால் பிழையாக ராஜன் குறை என்று பதிவாகிவிட்டது.
    2. “Future market/future contract என்பது “யாரோ” சொன்னபடி இன்றே அந்த தொகையை “அளிக்க முரண்பட்ட” ஒன்றாக இருக்கலாம்.” என்ற வாக்கியம்- “Future market/future contract என்பது “யாரோ” சொன்னபடி இன்றே அந்த தொகையை அளிப்பது பற்றிய குறிப்பில் தவறான ஒன்றாக இருக்கலாம்”. என்று திருத்தம் கொள்ளவிழைகிறேன்.

  8. இந்த றூற்றாண்டின் நடுப்பகுதிகளில் பூமியில் இருக்கும் எண்ணை
    வளங்கள் அனைத்தும் காலியாகிவிடும் என்பது புவியல் விஞ்ஞானிகளுடைய கணிப்பீடு
    இரண்டு வருடங்களுக்கு முன்பு சவுதிஅரேபியா எண்ணை மந்திரி தனது பேட்டியில் தேவையான எண்ணையிருக்கிறது ஏன் இந்த எண்ணை கெம்பனிகள் வழக்கத்திற்கு மாறாக கூடுதலாகஎண்ணையை உற்பத்தி
    செய்யச்சொல்லுகிறார்கள் என்று புரியவில்லை என்று சொன்னார்.
    சமூகவிஞ்ஞானிகளின் கருத்து படி இருறூறுவீதம் முண்றுவீதம்
    லாபம் கிடைக்கும்மென்றால் இந்தபணம் உலகத்தல் தலையிடதா விசயமே இல்லைஎனலாம்
    இப்ப சுலபமாக புரியுமென்று நினைக்கிறேன் பணமா? பதுக்கலா?
    ஆதாயமா? பஞ்சமா? உலகமக்களா? என்று.

  9. பேரன்புடன் மோனிகா,ராஜன்!
    கென்றி லுபெவ்வர் பற்றிய குறைந்தபட்ச அறிமுகம் தேவை.
    ஒரு பத்தாண்டுகள் முன்பின்னாக இருக்கலாம்.அவரது கருத்தரங்கில் கலந்துகொண்டிருக்கிறேன் கலாமோகனுடன்.
    தேசியம் குறித்த அவரது நூல் குறித்து வாசகர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது அது முப்பது வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது .அதுபற்றி இப்போது பேசக்கூடாது ,என்றார் .அதுமட்டுமே இப்போது நினைவில் உளது.

  10. தனிமனித குறைபாடுகளை விட்டொழித்து ஆக்கபூர்வமான தீர்வுகளை முன்வையுங்கள் வழியைத்தேடுங்கள்.
    ஆரோக்கியமானது.
    இது உலகத்தை மாசுபடுத்துகிற பிரச்சனை!
    மனிதஉயிர்களுக்கு அவலங்களை ஏற்படுத்துகிற பிரச்சனை.

  11. அன்புள்ள சுகன், உங்கள் எதிர்வினையை ஊக்கிவிப்பாகக் கொண்டு லபேவ்ரைப் பற்றி கூடிய சீக்கிரம் ஒரு கட்டுரையை வழங்க முயற்சிக்கிறேன். நன்றி.

  12. அற்புதமான கட்டுரை.இயற்கை அழிவுக்கு காரணமாக இருப்பது எந்த கோட்பாட்டாளர்களாக இருந்தாலும் கண்டிக்கப்படவேண்டியவர்கள் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

  13. //ஜே.பி. மார்கன் சேஸ், மார்கன் ஸ்டான்லி போன்ற நிறுவனங்கள் “எதிர்கால வர்த்தகம்” என்ற பெயரில் பெருவாரியான சரக்கை விலைபேசும் காரணத்தால் பெட்ரோல் விலை உயர்ந்துவிட்டதென்பது ஒரு அசிங்கமான/கசப்பான உண்மை. உதாரணத்துக்கு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பெட்ரோல் விலை 60 ரூபாய் ஆகும் என்பதை கணக்கிட்டுக் கொண்டு இப்போது 10 ரூபாய்க்கு விற்கும் பெட்ரோலை முன் கூட்டியே 2018 ஆண்டுக்காக நாற்பது ரூபாய் முன்பணமாக கொடுத்து வாங்கிவிடுவது.//

    இது ஒருவகையில் தவறு தான் என்றாலும்,
    பயங்கர ரிஸ்கிலும் அவர்கள் முதலீடு செய்கிறார்கள் என்பதை பார்க்கவேண்டும்,
    – டாலர்களாக இருந்த கச்சா எண்ணை இப்பொழுது -டாலர்கள். இதனால் அவர்களுக்கு பெருத்த நட்டமே. ஒரு நிறுவனமோ, விலை பொருள்களோ விலை ஏறும் என்று வாங்கி போடுவதில் தவறிருப்பதாக எனக்கு தெரியவில்லை.

    முதலீடு செய்ததால் தலையில் துண்டை போட்டு உட்கார்ந்திருக்கும் நிறுவனங்களை குற்றம் சாட்டுவதை விட கச்சா எண்ணை விலையுயர்ந்த போது பெட்ரோல் விலையை உயர்த்தி விட்டு, அது இறங்கிய பின்னும் பெட்ரோல் விலையை குறைக்காமல் இருக்கும் அரசாங்கத்தை கேள்வி கேத்கலாமே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *