வெள்ளாளர்க்கு நாத்திகமும் தலித்துகளிற்கு ?

கட்டுரைகள்

-சுகன்

Suganகோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது அவ்வையார் வாக்கு. அது அனேகமாக வெள்ளாளர்களுக்குத்தான் சொல்லப்பட்டிருக்க வேண்டும். யாழ்ப்பாண சமூக அமைப்பில் மட்டுமல்ல,தமிழ்ச்சமூக அமைப்பிலும் அதிகார அமைப்பிலும் கோவில்களின் இடம் திட்டவட்டமாகவே அசைக்கமுடியாதவாறு வெள்ளாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது எனச்சொன்னால் அதை இறந்த காலமாகக் கருதி உலாந்தாக்காறர்களின் தோம்புப் பதிவுகளைத்தேடி நாம் ஆய்விற்குப் போகவேண்டியதில்லை.தீண்டத்தகாதவர்கள் உட்பிரவேசிக்கக்கூடாது என்பது ஆறுமுக நாவலர் வகுத்த சமய நெறி,சைவநெறி,வாழ்க்கை முறை.

நிர்மலா அக்கா தேசிய உருவாக்கத்தில் கிரேக்க தொன்மக் கடவுளை உதாரணப்படுத்தி அக்கடவுளிற்கு முன்னுக்கு ஒரு முகமும் பின்னுக்கு ஒருமுகமுமாக இருமுகக்கடவுளை அழகாக உதாரணப்படுத்தினார். நமது வெள்ளாளர்களிற்கு ஆறுமுகம் கொண்ட கடவுள் உண்டு.கோவில் என்பது வெள்ளாளர்களிற்கு வணக்கத்தலம் மட்டுமல்ல.அது சமூக அதிகாரத்தின் அதிஉச்சமான வடிவம். அதிகாரமற்றவர்களாக ஏனைய சமூக மக்களை தொடர்ந்து வைத்திருப்பதன் ஆயுத வடிவம்.கந்தபுராணக் கலாச்சாரம் யாழ்ப்பாணக் கலாச்சாரம் என்பதன் ஆய்வுப்புலமும் அதுதான். ஏனைய சமூகக் குழுக்களோடு யுத்தம் புரிவதற்கு வெள்ளாளர்களிற்கு வீரபாகுத்தேவர்கள் எப்போதும் தேவை என்பதே கந்தபுராணக் கலாச்சாரத்தின் சாரம்.

இங்கு பன்முகப் பார்வையில் தோழர்கள் காத்திரமாக பெரியாரின் காலமும் கருத்தும் அவரது இயக்கமும் பற்றி பேசினார்கள். பெண்ணியம், பத்திரிகைத்துறை, கலகம் இவற்றில் பெரியாரின் உழைப்பு (பெரியாரின் பாசையில் சொன்னால்: தொண்டு), சரியானதைப் பிழை எனவும் பிழையானதைச் சரி எனவும் தலைகீழாக அவர் மாற்றிவைத்த முறைகள் குறித்துப் பேசினார்கள். இந்துத்துவம், வருணாச்சிரமம் இவைகளின் சாதியப் படிநிலைகள் குறித்துப் பேசினார்கள். சுயமரியாதை இயக்கத்தின் அதேதளத்தில் இயங்கிய தலித்துகளின் அரசியல் போராட்டம் இவைகளின் ஒத்திசைவுகள், அவ்வவற்றின் தனித்தன்மைகள், வித்தியாசங்கள், வேறுபாடுகள் குறித்துப் பேசவேண்டியது முக்கியமானது. மிகக் குறுகிய நேரத்தில் இவற்றைப் பேசமுடியாவிடினும் அவற்றைச் சுருக்கமாகவேனும் பேசுவது முக்கியமானது.

கோவிலுக்கு வராதே! என்று தலித்துகளை தடைபோடும் சூழ்நிலையில் தலித்துகளிடம் நாம் நாத்திகம் குறித்துப் பேசமுடியுமா? எந்த வெள்ளாளன் ஈழச்சூழ்நிலையில் முழுமையான நாத்திகனாக இருந்திருக்கிறான்?அமெரிக்க நாசாவிலும் விஞ்ஞானியாகவோ ஆய்வாளனாகவோ இருந்துகொண்டு தனது சமய நெறியிலும் வெள்ளானால் இருக்க முடியும், அது கு றித்து அவன் எப்போதும் குழம்பியது கிடையாது. வெள்ளாளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட யாழ்ப்பாண சமூக அமைப்பில் பெரியார் இயக்கம் தோன்றாமைக்கான காரணத்தை இந்தப் பின்னணியிலேயே நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

இங்கே இடதுசாரிகள் வலதுசாரிகள் என்ற பேதமின்றி இந்துத்துவத்தையும் அதன் சாதிய அணுகுமுறைகளையும் எவரும் கேள்விக்குள்ளாக்கவில்லை. இடதுசாரிகளின் ஆலயப்பிரவேசப் போராட்டங்கள் தலித்துகள் ஆலயத்திற்குள் போய் கும்பிடும் உரிமையை உறுதிப்படுத்த முயன்றன. அதற்கப்பால் வெள்ளாள அதிகாரத்தைத் தலைகீழாகக் கவிழ்த்துப்போடும் முயற்சியை வலதுசாரிகளாலும் எடுக்கமுடியவில்லை, இடதுசாரிகளாலும் எடுக்க முடியவில்லை. ஆனால் சிங்கள பெளத்தமும் இலங்கை அரசும் இதில் பெரிய பங்களிப்பைச் செய்தன. அகில இலங்கை தமிழ் பெளத்த சங்கத்தின் தோற்றம் இங்குதான் கவனத்தில் வருகிறது. வரலாற்றின் அதிசயம் அது. அதன் தலைவர் வைரமுத்து அவர்கள் ஈழத்தில் தோன்றிய மிகவும் தீர்க்கதரிசமான தலைவரும் என்னைப் பொறுத்தவரை தமிழர்களின் நேர்மையான ஒரே பெருந்தலைவரும் அவர்தான்.

ஆக இங்கே கோவில்களைக் கைவிடுவதற்கு வெள்ளாளார்கள் கேணையர்கள் அல்ல. அவர்கள் எப்போதுமே நாசூக்கானவர்கள். உலகத்திலேயே சாதியின் பேரால் கிறிஸ்தவக் கோவிலைப் பூட்டிவைத்த பெருமை இளவாலை வெள்ளாளர்களைச் சாரும். ‘பள்ள’ அந்தோனியாரையும் நாலுபரப்புக் காணியையும் தலித்துகளிற்கு வழங்கியபோது எப்போதுமே வெள்ளாளார்களே அதிமேற்றிராணியாராகவரும் யாழ் வெள்ளாள சமூகத்தின் முகம் இங்கு தெரியவரும்.

நமது வலைத்தளத்தில் சுகனுக்கும் ஷோபாசக்திக்கும் இனிப் பரந்த மைதானம் கிடைக்கப்போகிறது, புலிகள் பி.ஜே.பி யின் ஆதரவைக்கேட்டுவிட்டார்கள், இடிக்கப்படுவது இந்துக் கோவில்கள் என்று சங்கராச்சாரியாரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முறையிடுகிறார்கள் என்றவாறான ஆதங்கங்கள் வெளியிடப் படுகின்றன.பெரியாரின் பாசையில் சொன்னால் உங்களுக்கு யோக்கியமும் மானமும் இருந்தால் 22 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர்கூட ஏன் தலித் இல்லை? அரசியல் அதிகாரமும் தமிழர் பிரதிநிதித்துவமும் ‘பஞ்சமர்’களுக்கு இப்போதும் தீண்டப்படாததுதானா?தீண்டத்தகாதவர்கள் உட்பிரவேசிக்கக் கூடாது என்பது கோவில் முறைகளில் தானா?தமிழ் அரசியலில் அதி உட்சபட்ச அபத்தமாக அது இப்போது தொழிற்படுவதில்லையா?

தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு பிரச்சனைகளையும் கோவில் பிரச்சனையாக தமிழ் அரசியல் சார்ந்து முன்வைக்கும் வெள்ளாள அரசியல், சமூகத்தில் வெள்ளாளார்களின் கோவில் மதம் சார்ந்த அதிகார உச்சப் படிநிலை,சாதிவெறி இவை அல்லாமல் வேறென்ன?கூட்டு வெள்ளாளப் பிரக்ஞை என்பது இதுதானா? தலித் அரசியல் பேசும் நாம் இது குறித்து விழிப்பாக இருக்க வேண்டும். வெள்ளாளர் பஞ்சமர்களுக்கு ஆலயத்தையும் தேவாலயத்தையும் மறுப்பதன் அரசியல் இதனோடு இணைந்து வருமொன்று. லக்சுமி அக்கா அழகாக குறிப்பிட்டார்.வெள்ளாளார்களுக்குச் சுடலைதான் என்று. தங்களுக்குக் கோவிலையும் தலித்துகளிற்கு சுடலையையும் வழங்கி வருவதுதானே வெள்ளாளத்துவம். சுடலையுடன் சேர்ந்த வாழ்க்கையை தலித்துகளிற்கு வழங்கிவரும் வெள்ளாள அதிகாரம் அனைத்துத் தளங்களிலும் ஒழிக்கப்பட்டாகவேண்டும். பிணத்தை எரித்து வெளிச்சம் காணும் வாழ்க்கை மாறியாக வேண்டும்.

வெள்ளாளார்கள் சுடலைக் கிருத்தியங்களை தமது சாதிக்குரிய தொழிலாக கைக்கொள்ள வேண்டும்.

அதிகார மறுப்பிற்கும் மாற்றுக் கருத்தை எதிர்கொள்ளும் பக்குவத்திற்கும் மிகச்சிறந்த உதாரணம் பெரியார். இரண்டு கோணங்களிலும் இங்கு பேசப்படவில்லை. ஈழச்சூழலில் எந்த வெள்ளாளன் அதிகார மறுப்பாளனாக இருந்திருக்கிறான்? இன்று -குறிப்பாக – இடதுசாரி அரசியல் பேசும் அல்லது சனநாயத்திற்கான அரசியல் பேசும் வெள்ளாளப் பின்னணியிலிருந்து வந்த, போராட்டப் பின்னணியிலிருந்து வந்த தோழர்கள் ஈழத்து அரசியலைப் பொறுத்தவரை கடைசிவரை அதிகாரத்தில் பங்குகொள்ளாத பெரியாரின் சுயமரியாதை இயக்கம்போல் தமக்கு நாத்திகத்தையும் தலித்துகளிற்கு அரசியல் அதிகாரத்தையும் உறுதிப்படுத்த வேண்டும்.

அடுத்து மாற்றுக்கருத்தை எதிர்கொள்பவர் என்ற ரீதியில் பெரியாரிய உதாரணத்தைக் குறிப்பிடலாம். ஒருமுறை பெரியார் வண்டியில் போய்க்கொண்டிருக்கும்போது அவருக்குச் செருப்பு வீசப்பட்டது. பெரியார் வண்டியை விட்டு இறங்கி அந்தச் செருப்பை எடுத்து வண்டியைச் செலுத்தியவரிடம் அச் செருப்பு வந்த இடத்துக்குப் போகச் சொன்னார். ‘ஏனையா’ என்றார் வண்டியைச் செலுத்தியவர். ஒருசெருப்பு என்னிடம் இருக்கிறது. மற்றச்செருப்பு இனி யாருக்கும் பயன்படாது, மற்றச் செருப்பும் இருந்தாற்தான் உபயோகமாகும் என்று அதை ஏலத்தில் விட்டவர் பெரியார். மாற்றுக்கருத்தை எதிர்கொள்வதில் நமக்கு இந்தப்பக்குவம் வேண்டும்.

பெரியார் தனது கூட்டங்களில் தீர்மானங்களை நிறைவேற்றுவது வழக்கம்.
இக்கூட்டத்தில் இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 22 பாராளுமன்ற உறுப்பினர்களில் தலித் மக்களின் பிரதிநிதித்துவம் தவிர்க்கப்படுவதைக் கண்டித்து கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவது நல்லது.

(பெரியார் நினைவேந்தலில் கூட்டு விவாதத்தில் பங்கெடுத்து சுகன் கூறிய கருத்துகளின் தொகுப்பு)

4 thoughts on “வெள்ளாளர்க்கு நாத்திகமும் தலித்துகளிற்கு ?

  1. சிவனேசன் எம்பியை தலித்துகளிலிருந்து தமிழ்தேசியக்கூட்டமைப்பு தேர்ந்தெடுத்ததைப்பார்த்தால் உங்கள் மதிப்பீடு குழப்பமாக இருக்கிறதே!

  2. றொகுநாதன்
    சிவனேசன் எம்பி தற்கொலை செய்துகொண்ட பிறகு அந்த இடத்திற்கு இன்னொரு தலித்தைதேர்வு செய்திருக்கலாமல்லவா. இல்ல ஒரு முஸ்லிம்ற்கு இடம் ஒதுக்கவேணுமென்றால் மிச்சமாய் சும்மா இருக்கிற மாவையோ வேறுயாராவது விட்டுக்கொடுத்திருக்க்லாமில்லே!

  3. அன்புடன் ரகு!
    தலித்துகளின் விகிதாசாரத்தைப் பொறுத்து குறைந்தபட்சம் 4 தலித் பா.உ.கள் தெரிவு உறுதிப்படுத்தப்பட்டிருக்கவேண்டும்.
    இதுவரையான தமிழ் அரசியலில் ஒரு இராசலிங்கம்,முப்பது வருடத்தின்பின் ஒரு சிவனேசன்.
    சிவனேசன் பா.உ மறைவிற்குப்பின் அவ்விடமும் கேள்விக்குரியதாகிவிட்டது.
    தமிழ் அரசியல் ஆய்வாளர் ஒருவர் இந்த நிலைமையை பின்வருமாறு சுட்டிக்காட்டுகிறார்:
    சிவனேசன் எம்பியின் இடத்திற்கு மீண்டும் ஒரு தலித்தை நியமிக்குமிடத்து அவ்விடம் எப்போதும் தலித்துகளுக்காகவே நிரந்தரமாக உறுதிப்படுத்தப்படுவது சாதிரீதியாக புலிகளின் அணுகுமுறைக்கு விமர்சனமாக எழலாம். இங்கு நிஸ்தர் எனும் முஸ்லிமை புலிகள் சிவனேசனுக்குப் பதிலாக நியமித்து அப்பதட்டத்தைத் தணித்துக்கொண்டிருக்கலாம்.
    அன்றியும் பெரும்பாலான தலித்துகள் பார்லிமென்ற் போவது இன்றைய தமிழ்த்தேசிய நெருக்கடியில் வெள்ளாளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சூழலில் குழப்பத்தில் முடியலாம்.
    ஒரு விவாத வசதிக்காக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் தலித்,யாழ்ப்பாண மேயர் தலித்,அரசாங்க அதிபர் தலித்,யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் தலித்….இப்படிப்பட்ட சூழலைக் கற்பனைபண்ணிப்பார்க்கும்போது அங்கு வேறு அரசியல் தானே இயங்கமுடியும்,சிங்கள மக்களிலிருந்து இன்றுங்கூட முப்பது,நாப்பது பேர் கம்யூனிஸ்ட் கட்சிப் பின்னணியிலிருதோ வேறு இடது சாரிப் பின்னணியிலிருந்தோ பாராளுமன்றம் போகிறார்கள்,நமது சூழலில் ஒரே ஒரு பொன்.கந்தையா ,
    இனிய ரகு! நம்மைத் தோற்கடித்தது எது?

  4. அடிப்படையில் தோழர் என்னும் ஒரு சொல் எவ்வாறு இன்று தமிழர்களால் ஒரு இழி சொல்லாக பார்க்கப்படுகிறதோ அவ்வாறே தான் தலித் என்னும் சொல்லும் உயர் சைவ அல்லது உயர் வேளாளா அல்லது வேளாள சமூகத்தால் அல்லது அதற்குள் வாழ்பவர்களால் பார்க்கப்படுகிறது,நண்பர் என்ற சொல்லுக்கு ஒத்த கருத்து எது என்றால் தோழர் என்று கீறிவிட்டால் சிறிய வயதில் ஒரு புள்ளி விழும்,அத்தோடு நண்பர் தோழர் பிரிந்து விட்டார்கள்,இந்த சொல்லை இழிநிலை ஆக்கியோரில் பிரதானமானவர்கள் ப்ளாட் மற்றும் நாபா தோழர்கள்,இப்போது டக்கிளஸ்.எப்போதும் தமது ஊத்தையை வெளியில் வைத்து துவைக்காத கந்த புராண கலாசாரம்,இன்று துப்பாக்கி முனையில் தலையணை அடியில் தலித்தியலை மறைத்து தூங்குகிறது,வெள்ளாளர் தலித் மக்களை ஆயுத பாணியில் கொலை செய்ய ஆரம்பித்து இருந்தால்,தாங்கள் தலித்துகள் என்று சொல்லி இங்கே வெளி நாடுகளுக்கு வந்து அசேலம் அடித்திருப்பாங்கள் ஆறுமுக நாவலரின் வாரிசுகள்,,,கவலை வேண்டாம் ஒரு நாள் ஒரு பூகம்பம் வெடித்து சிதறும்,அப்படி நாம் கனவு காண முடியாது,அதற்குரிய வேலைத்திட்டங்கள் தேவை வெள்ளாளனிடம் போய் தலித்தியம் பேசுவது புலியிடம் டக்கிளஸ் நல்லவர் என்றும்,டக்கிளஸிடம் பிரபாகரண் நல்லவர் என்றும் சொல்வதற்கு நிகரானது,நான் விரும்புவது புலி எதிர்ப்பு வாதம் என்ற வட்டத்தில் ஒரு அடிப்படை பிரச்சினையை சுருக்கி கொள்ள வேண்டாம்,கூட்டங்கள் நடத்துவதோடு குறுக்கி கொள்ள வேண்டாம்,அதற்குரிய வேலைத்திட்டங்களை முன்வைத்து செயற்பட ஆரம்பியுங்கள்

    தோழமையுடன்
    அப்புச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *