பாவம் ஜெயபாலன்

கட்டுரைகள்

– ஷோபாசக்தி

னது வலைத்தளத்தில் எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் மற்றும் ‘தேசம் நெற்’ உட்பட சில இணையத்தளங்களை நான் விமர்சித்துப் ‘பழி நாணுவார்’ என்ற கட்டுரையை வெளியிட்ட உடனேயே சூட்டோடு சூடாக அக்கட்டுரையை ‘தேசம் நெற்’றில் அதன் ஆசிரியர் த. ஜெயபாலன் மறுபிரசுரம் செய்தார். முன்னொருமுறை ‘தேசம் நெற்’றில் என் குறித்து யமுனா எழுதிய கலப்பிடமில்லாத அவதூறுக் கட்டுரையொன்றிற்கு நான் வரிவரியாக விரிவான மறுப்பை எழுதி என் வலைத்தளத்தில் வெளியிட்டுவிட்டு அதைத் தேசத்தில் மறுபிரசுரம் செய்யுமாறு அப்போதைய தேசம் ஆசிரியர் குழுவில் ஒருவரான சேனன் மூலம் ‘தேசம் நெற்’றைக் கேட்டபோது மறுபிரசுரம் செய்ய மறுத்த தேசம், இப்போது நான் கேட்காமலேயே எனது கட்டுரையை மறுபிரசுரம் செய்ததால் நான் கொஞ்சம் ஸ்ரெடியானேன்.

முன்பு யமுனா எழுதிய கட்டுரையிலாகட்டும், பின்பு காலத்திற்கு காலம் ‘தேசம் நெற்’ வெளியிட்ட கட்டுரைகளிலாகட்டும், அவர்கள் கடந்த ஜனவரி 6ம் தேதி எழுதிய ‘ஷோபாசக்தி கைது’ என்ற செய்திக் குறிப்பிலாகட்டும் பின்னூட்டப் பகுதியில் என்னைக் குறித்தும் என் தோழர்கள் குறித்தும் அவதூறுகளை, பொய்களை, கட்டுக்கதைகளைத் தேசம் ‘வாசகர்கள்’ எழுதித் தள்ளினார்கள். நான் பொதுவாக இந்தப் பின்னூட்ட விவாதங்களில் அதிகமாக ஆர்வம் காட்டாததாலும் குறிப்பாகத் தேசம் இணையத்தின் பின்னூட்டப் பகுதிக்குள் ஒருபோதும் இறங்காததாலும் தேசம் வாசகர்களும் கட்டுரையாளர்களும் விருப்பம்போல விளையாடிக்கொண்டிருந்தார்கள். இந்த விளையாட்டை ‘பழி நாணுவார்’  என்ற இந்தக் கட்டுரையிலும் அவர்களைக் காட்ட விடுவதில்லை என்ற முடிவோடு அந்தக் கட்டுரைக்கு முதலாவது பின்னூட்டத்தை நானே இவ்வாறு அனுப்பி வைத்தேன்:

//கட்டுரையை மறுபிரசுரம் செய்ததற்கு நன்றி. அநேகமாக ‘உள்ளுக்க வரவிட்டு அடிக்கப் போறிங்க’ என்று நினைக்கிறேன்…செய்யுங்க! வாழ்த்துகள். //
தொடர்ந்து ‘தேசம்’ வாசகர்களின் வெவ்வேறு பின்னூட்டங்கள் வெளியாகின. ஒருவர் ஒரு கேள்வி கேட்டால் நான் மூன்று பதில்கள் சொன்னேன். எது குறித்து எவர் வந்தாலும் பதில் சொல்லி விவாதிப்பது என்ற முடிவோடு இருந்தேன். ஒன்றிரண்டு ‘விசர்’ விமர்சனங்கள் வந்தபோதும் அவற்றுக்குக் கூட எள்ளலான பதில்களைச் சொல்லிக் கடந்தேன். நான் ஒரு வேட்டை நாய்போல தேசம் பின்னூட்டப் பகுதிக்குள்ளேயே சுற்றிக்கொண்டு நின்றேன். இம்முறை பூரான்,பூச்சி போன்ற தேசத்தின் ஆஸ்தான பின்னூட்ட மன்னர்கள் அந்தப் பக்கமே வரவில்லை. பல்லி ஒருமுறை எட்டிப்பார்த்தாலும் ‘அறப் படிச்ச’ வேலை காட்டாமல் சைலண்டாய் வந்து போனது. குறிப்பாக, வழமையாகத் தேசத்தின் பின்னூட்ட விமர்சனங்களில் துள்ளி விளையாடும் யமுனா ராஜேந்திரன் இம்முறை துக்கம் விசாரிக்கக் கூட அந்தப் பக்கம் வரவில்லை. நேற்று மாலைவரை எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. நான் மாலையில் இந்தப் பின்னூட்டத்தைத் தேசத்திற்கு அனுப்பி வைத்தேன்:
//ஷோபாசக்தி on March 6, 2010 3:20 pm Your comment is awaiting moderation.


தேசம் இணையத் தோழர்களே! உங்கள் தணிக்கை விதிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. ‘எம்சிறீக்கு’ எழுதிய பதிலில் ‘மாத்தி யோசிங்க தலைவா’ என அன்பாக எழுதியிருந்தேன். ‘தலைவா’ என்பது உங்களிற்குத் தணிக்கைக்கு உரிய வார்த்தையாகத் தெரிந்திருக்கிறது.’தலைவா’ என்ற சொல்லை எடுத்துவிட்டு அந்த இடத்தில் ‘எம்சிறீ ‘ என்று நிரப்பியுள்ளீர்கள். பாராட்டுகள்! ஊடகம் உங்களுடையது. தணிக்கையும் உங்களது உரிமை.
ஆனால் ஒரு எளிய கேள்வி.. நீங்கள் ஜனவரி மாதம் 6ம் தேதி வெளியட்ட என் கைது குறித்த செய்தியில் வெளியாகி இப்போதுவரை உங்கள் தளத்திலிருக்கும் பின்னூட்டங்ளை ஒருமுறை படித்துப் பாருங்கள். ‘அவர் இவரின் கள்ளக் காதலர்’ என்றும் ஏக வசனத்தில் ‘அவள் – இவள்’ என்றும் பின்னூட்டங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. ‘தலைவா’ என்ற தோழமையான விளிப்பே தணிக்கைக்குரியதெனில் ‘கள்ளக் காதலன்’, ‘அவள் – இவள்’ போன்ற வசைகளை நீங்கள் எப்படி அனுமதித்திருக்கிறீர்கள்? தயவு செய்து விளக்கம் தேவை தலைவா! //

எனது இந்தப் பின்னூட்டத்தை ‘தேசம்’ பிரசுரிக்கவில்லை. இந்தப் பின்னூட்டத்தைப் பிரசுரிப்பதில் அவர்களிற்கு என்ன பிரச்சினை? இத்தகைய இருட்டடிப்புகளைச் செய்துகொண்டிருக்கும் இவர்களது இணையத்தளத்தில் போய் நான் எதை விவாதிப்பது? ஆனால் நான் குறிப்பிட்ட அந்த பிரச்சினைக்குரிய வார்த்தைகளை எனது பின்னூட்டம் அனுப்பப்பட்டவுடனேயே நைஸாக இணையத்தளத்திலிருந்து நீக்கி விட்டார்கள்.

நீக்கினால் முடிந்ததா பிரச்சினை? இரண்டு மாதங்கள் இந்தப் பின்னூட்டங்கள் உங்களது இணையத்தில் நாறிக்கொண்டிருந்தனவே. இதில் ஒரு பின்னூட்டம் இன்னொரு இணையத்தில் மறுபிரசுரம் செய்யப்பட்டு அது இப்போதும் அங்கே சவமாகக் கிடக்கிறதே, அதற்கு நீங்கள் பொறுப்பாளியில்லையா? நான் உங்களிற்கு அனுப்பியிருந்த கேள்விக்குப் பகிரங்கமாக விளக்கத்தைத் தருவது உங்கள் கடமையல்லவா! அதை விட்டுவிட்டு என் கேள்வியையே இருட்டிப்புச் செய்த உங்கள் செயல் எந்த ஊடக அறத்தில் சேர்த்தி? நீங்கள் தவறிழைத்தீர்கள் எனும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் பகிரங்கமாக வருத்தம் தெரிவிப்பது கட்டயாமல்லவா! பழம் பெரும் ஊடகக்காரரும் லண்டனில் நான்கு ஊடகங்களைக் கையில் வைத்திருப்பவருமான உங்களிற்கு இதையெல்லாம் நானா சொல்லித்தர வேண்டும். வருத்தமாயிருக்கிறது.

ஆக, ‘தேசம் நெற்’றில் தொடர்ந்து அவதூறுக்கு உள்ளாகிவரும் எனக்குத் ‘தேசம்நெற்’றின் பின்னூட்டப் பகுதியில் ஒரு எளிய கேள்வியைக் கூட எழுப்ப அனுமதியில்லாதிருக்கும்போது ‘தேசம் நெற்’றுக்கு நான் பின்னூட்டங்களையும் மறுப்புகளையும் விமர்சனங்களையும் எழுதியனுப்பி என்ன பயன்! அவதூறுப் பின்னூட்ட மன்னர்களே! இப்போது மகிழ்ச்சிதானே.. ஆளில்லாத கிரவுண்டில் அடிச்சு ஆடுங்க ராசா!

நண்பா ஜெயபாலன்! தவறிழைப்பது இயல்புதான். நீங்கள் தவறிழைக்கிறீர்கள் எனச் சில காலத்திற்கு முன்பு நாங்கள் எழுபத்துச் சொச்சப் பேர்கள் சேர்ந்து ‘தேசத்தின் அவதூறு அரசியல்’ என்று கையெழுத்து இயக்கம் நடத்தியது வீண் வேலையென நீங்கள் அப்போது சொன்னீர்கள். அது உண்மையிலேயே வீணான வேலையென்று நான் இப்போது உணர்கிறேன். கடுகளவேனும் பலன் தராத வேலையெல்லாம் வீண்வேலைதானே.

உங்கள் தவறுகள் மீதான விமர்சனங்களை  நேர்மையாக எதிர்கொள்வதை விடுத்து விமர்சனங்களை  இருட்டடிப்புச் செய்தும் நைஸாகப் பதிவுகளை அழித்துவிட்டும் குற்றவுணர்வேயின்றிப்  பம்மிக்கிடக்கும் உங்களை அயோக்கியன் என்றோ ஊடக வியாபாரி என்றோ சொல்லித் திட்டி உங்களை என் எதிரியாக்குவதை என்னால் செய்ய முடியாது. ஏனெனில் எதிரியென்றால் கொஞ்சமாவது ‘தண்டுசமத்தாய்’ இருக்க வேண்டும்.

பாவம் ஜெயபாலன் நீங்கள்!