வெள்ளைக்கொடி விவகாரம்

கட்டுரைகள்

தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (லண்டன்) நடத்தும் நிகழ்வில் ‘காலச்சுவடு’ ஆசிரியர் கண்ணன் உரையாற்ற அழைக்கப்பட்டிருப்பது குறித்துப் பல்வேறுவிதமான கருத்துகள் தோழர்களால் Facebook லும் மின்னஞ்சல்களிலும் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. இது குறித்து எனது கருத்துகளையும் தோழர்களுடன் பகிர்ந்து கொள்வதே இந்தக் குறுங்கட்டுரையின் நோக்கம்.

“நாங்கள் மாற்று செயற்பாட்டாளர்களுமல்ல, மாற்று உரையாடல்களை நடத்துவது தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகத்தின் நோக்கமும் இல்லை ” எனத் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் த.மொ.ச.செயற்பாட்டகம், ‘பல தரப்புகளும் பேசுவதற்குக் களம் அமைத்துக் கொடுப்பதே நோக்கம்’ என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டே தமது நிகழ்ச்சியை நடத்துகின்றார்கள். ஒளிவு மறைவற்ற மிகவும் நேர்மையான கருத்துகளாக இவை இருக்கின்றன.

த.மொ.ச.செ கூறியிருக்கும் இந்தக் கருத்துகள் முகப் புத்தத்தில் பரவலான வரவேற்பைப் பெற்றிருப்பதிலிருந்தே அவர்களது புதுவகையான முயற்சிக்கு திரளான ஆதரவு இருப்பதும் தெளிவாகின்றது.

கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக இந்தப் புலம் பெயர் இலக்கிய உலகமும் அவர்கள் நடத்திய கருத்தரங்குகளும் சந்திப்புகளும் கடைப்பிடித்த கிறுக்குத்தனமான தீவிரவாதப் போக்குகளிற்கு மாற்றான முயற்சி த.மொ.ச. செயற்பாட்டகத்தினுடையது. அதனாலேயே இம்முயற்சி நடுநிலையாளர்களினுடைய ஆதரவை மட்டுமல்லாமல் இலக்கிய அமைதிப் படையினரது ஆதரவையும் ஒருசேரப் பெற்றுள்ளது.
புலம் பெயர் இலக்கியம் கிறுக்குத்தனமான தீவிரவாதப் போக்குடையது என்றேன். த.மொ.ச. செயற்பாட்டகத்தினர் போல “நாங்கள் மாற்றுச் செயற்பாட்டளர்களல்ல” என அவர்கள் அறிக்கையிட மறுத்துவிட்டது மட்டுமின்றி அவர்களில் பலர் தங்களை ‘மறுத்தோடிகள்’ எனவும் அழைத்துக்கொண்டார்கள், விடுதலைப் புலிகளிடம் அடியும் உதையும் வாங்கிக் கூட புலிகளுடன் உரையாடலுக்குப் போக அவர்கள் விடாப்பிடியாக மறுத்தார்கள். இந்த மறுத்தோடிகளும் பல்வேறு தரப்பினரையும் அழைத்து, தங்களது அரங்குகளில் பேச வைத்தவர்கள்தான். எனினும் இவர்கள் கொஞ்சங்கூட இரக்கமேயில்லாமல் அடுத்தவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் எழுத்திலும் சாதியமோ , ஆணாதிக்கமோ, அதிகாரத் தரப்புகளின் மீதான சாய்வோ தெரிகின்றதாவெனக் கண்ணுக்குள் எண்ணை விட்டுக்கொண்டு கண்காணித்தார்கள். அவ்வாறு தப்பித் தவறி ஒரு சாதியச் சாய்வோ, அதிகாரச் சாய்வோ காணப்பட்டால் வானத்துக்கும் பூமிக்குமாகக் குதித்தார்கள். பிரதியைக் கட்டவிழ்த்துப் பார்ப்பதென்றார்கள், புனிதங்களை தலைகீழ் ஆக்க வேண்டும் என்றார்கள், ஒழுக்கவிழ்ப்புவாதம் என்றார்கள், தலித்தியம் என்றார்கள், சாதியச் சாய்வுடையவனும் இந்துத்துவ வெறியர்களும் எங்களது அரங்குகளுக்குள் பிரவேசிக்கவே கூடாது என்று சட்டாம்பிள்ளைத்தனம் செய்தார்கள். இலக்கிய முதலாளிகளைப் பார்த்த மாத்திரத்திலேயே மரியாதையில்லாமல் கெட்ட வார்த்தைகளைக் கொட்டினார்கள். எதிர்ப்பு இலக்கியம் என்று ஏதேதோ செய்தார்கள். இப்படிப் பேசிப் பேசியே ஊருலகம் முழுவதும் பகையைச் சம்பாதித்துக்கொண்டு நாட்டுக்கு நாலு பேராகச் சிறுசிறு குழுக்களாகத் திரிகின்றார்கள்.

இவர்களிடமிருந்து வேறுபடுவதாக த.மொ.ச. செயற்பாட்டகத்தின் நடவடிக்கைகள் அமைந்திருப்பதை மறுபரிசீலனைக் காலகட்டத்தின் கொடையெனக் கொள்ளலாம். “உங்களைப் போல எங்களையும் கொள்கை, கோதாரி எனப் பேசுமாறு வற்புறுத்தாதீர்கள்” என்ற த. மொ. ச. செயற்பாட்டகத்தின் உருக்கமான வேண்டுகோள் தனித்துவமானது. கொள்கை கோட்பாடென்ற பிடிவாதங்கள் ஏதுமற்று, யாராக இருந்தாலும் பேசுவதற்கு அரங்கை உருவாக்கிக் கொடுப்பதே த. மொ. ச. செயற்பாட்டகத்தின் நோக்கமாயிருக்கிறது. எனவே இதுவரை புகலிட இலக்கியக் குழுக்களின் அரசியல் கறார்தன்மையால் வஞ்சிக்கப்பட்டிருந்தவர்களிற்கான புதியதொரு களத் திறப்பாகவும் இது இருக்கின்றது. இந்த வகையில் ‘காலச்சுவடு’ கண்ணனின் வருகை முன்னுதாரணம் வாய்ந்தது.

த. மொ. ச. செயற்பாட்டகத்தின் இந்த முயற்சி புகலிடத்துக்குத்தான் புதியதே அல்லாமல் தமிழ்நாட்டுச் சூழலில் இந்தகைய முயற்சிகள் ஏற்கனவே வெற்றிகரமாக நடைமுறையிலிருப்பவையே. இந்த வகையில் ‘அரட்டை அரங்கம்’, ‘நீயா நானா ‘ஆகிய நிகழ்ச்சிகள் அங்கே மக்களிடம் பெருத்த ஆதரவைப் பெற்றிருக்கின்றன. எனினும் அந்த நிகழ்ச்சிகள் வணிக நோக்கத்துடன் நடத்தப்படுகின்றன, மாறாக த.மொ.ச. செயற்பாட்டகத்தின் நிகழ்வுகள் வணிக நோக்கின்றி நடத்தப்படுகின்றன என்ற வித்தியாசத்தையும் நாம் மறந்துவிடலாகாது. நடத்துபவர்களுக்கு வணிக நோக்கங்கள் கிடையாது என என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் எனினும் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுபவர்களிற்கும் வணிக நோக்கங்கள் கிடையாது என என்னால் உறுதிபடச் சொல்ல முடியாது என்பதையும் நான் ஒப்புக்கொண்டுதானாக வேண்டும்.

எனவே, கறாரான அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்ட குழுக்களுக்கும் ‘யாராயிருந்தாலும் பேச இடம் தருவோம்’ என்ற த.மொ.ச.செயற்பாட்டகத்திற்குமுள்ள அடிப்படை வித்தியாசத்தை நாங்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். யாராயிருந்தாலும் பேச இடம் தருவதற்கு ஒரு சமூக செயற்பாட்டு நிறுவனம் எதற்கு? அதற்கு மண்டபங்களை வாடகைக்கு விடும் ஒரு முதலாளியே போதுமே என ஒருவர் கேட்டால் அது தருக்கமான கேள்வியே தவிர நடைமுறை சார்ந்த அரசியலறிவுள்ள கேள்வி அல்ல.

“யாராயிருந்தாலும் வந்து பேசலாம், எல்லோருடனும் உரையாடுவோம் என்பது” ஒரு கோட்பாடு முழக்கமே தவிர ஒரு சுரணையுள்ள சமூகச் செயற்பாட்டாளாரால் அவ்வாறெல்லாம் செயற்படவே முடியாது. எடுத்துக்காட்டாக, சென்ற வாரம் இதே லண்டனில் கணேசன் அய்யர் எழுதிய ‘ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்’ நூலுக்கு விமர்சன அரங்கு நடத்தப்பட்டது. சத்தியசீலன், பி.ஏ. காதர் போன்ற ஆளுமைகளெல்லாம் அந்த அரங்கில் பேசினார்கள். கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த அதே நேரத்தில் லண்டனின் இன்னொரு மூலையில் தமிழ் மொழி சமூகங்களின் செயற்பாட்டகத்தின் அமைப்பாளர் பௌஸரும், செயற்பாட்டகத்தின் வேறு சில தோழர்களும், நானுமாக மதுவருந்தி அரட்டையடித்துக் கொண்டிருந்தோம்.

‘எல்லோருடனும் உரையாடுவோம்’ என்று முழங்குபவர்கள் அன்று ஏன் அந்த விமர்சனக் கூட்டத்தில் போய் உரையாடலில் பங்குகொள்ள மறுத்தோம்? ஏனெனில் அந்த நிகழ்வை நடத்திய அமைப்பினது அரசியலோடு எங்களுக்கு உடன்பாடில்லை. ஆகவே ‘மோசமான அரசியல் முரண்களைக் கடந்தும் எல்லோருடனும் பேசுவோம்’ என்பது உண்மையிலேயே எங்களை நாங்களே ஏமாற்றிக்கொள்வதற்கான முழக்கமே. உரையாடலும் புறக்கணிப்பும் நமது அரசியல் விருப்பு வெறுப்புகளாலும் அரசியல் முனைப்புகளாலும் நிர்பந்தங்களாலும் சிலவேளைகளில் தனிநபர்களிற்கிடையேயான உறவுகளாலும் மட்டுமே தீர்மானிக்கப்படுகின்றனவே அல்லாமல் எல்லோருடனும் பேசுவோம் என்ற அரசியலற்ற ‘பச்சைத்தண்ணி’ வாதத்தால் உரையாடல்கள் தீர்மானிக்கப்படுவதில்லை.

இதற்காக “எல்லோருடனும் உரையாடுவோம் அவன் கடைந்தெடுத்த அரசியல் அயோக்கியனாகிலும், சாதி வெறியனாகிலும் நட்புணர்வுடனும் சினமற்றும்உரையாடுவோம்” என்ற முழக்கத்தையும் நாம் கைவிடத் தேவையில்லை. ‘பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே’ என்பதுபோல இதுவுவொரு இனிமையான முழக்கம். அவ்வளவே.

“கூட்டத்தில் பேசுபவர்கள் தொடர்பாக கேள்விகளை எழுப்புவது அவரவருக்கான உரிமையாகும்” என த. மொ.ச. செயற்பாட்டகம் அடக்கமாகச் சொல்லி ஒதுங்கிக்கொள்கிறது. இந்தத் தன்முனைப்பற்ற போக்கும் பாராட்டுக்குரியதே. கூட்டத்தில் பேசுபவர்கள் குறித்துத் தனது விமர்சனத்தை அது வைக்காமல் மற்றவர்களிடம் அது பொறுப்பை நகர்த்திவிடுகின்றது.

தலைவணங்கி அந்தப் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

2

Facebook விவாதங்களில் காலச்சுவடு பத்தரிகையை விமர்சித்து அடுக்கடுக்கான வாதங்கள் வைக்கப்பட்டபோதும் ‘காலச்சுவடின் ஆள்காட்டி அரசியல்’ என்ற நூலிலிருந்து சிலபல கட்டுரைகள் முகப்புத்தகத்தில் வெளியிடப்பட்ட போதும் அந்த விமர்சனங்களை ராஜன்குறையைத் தவிர வேறுயாரும் கருத்தியல்ரீதியாக எதிர்கொண்டதாகத் தெரியவில்லை. காலச்சுவடை விமர்சிப்பவர்கள் காலச்சுவடுடன் கொண்ட தனிப்பட்ட பகைமையாலும் வெறும் குழுநிலை மனநிலையிலிருந்துமே தங்களது விமர்சனங்களை வைக்கிறார்கள் என்பதே காலச்சுவடு பொறுப்பாசிரியரினதும் இன்னும் பலரினதும் திசைதிருப்பல் வாதங்களாயிருந்தன. கடந்த இருபது வருடங்களாக காலச்சுவடு பத்திரிகைக்கு எதிராகத் தமிழ்ச் சூழலில் முன்னெடுக்கப்பட்டுவரும் எதிர்ப்பு எழுத்து இயக்கத்தையே மறைத்துவிடும் மலிவான தந்திரமிது.

காலச்சுவடு இதழின் பார்ப்பனியக் கருத்துநிலையையும் அதனது தலித்துகளிற்கும் இஸ்லாமியர்களிற்கும் எதிரான விரோதப் போக்கையும் கண்டித்து நிறப்பிரிகை, தலித் முரசு,களம் புதிது, புதுவிசை, கேபியார், புதிய தடம், வல்லினம் (புதுவை), அம்மா, எக்ஸில், கவிதாசரண்,அநிச்ச போன்ற சிறுபத்திரிகைகளும் தலித் – பெரியாரிய இயக்கங்களும் ம.க.இ.க போன்ற அமைப்புகளும் உதிரியான எழுத்தாளர்களும் தங்களுக்குச் சாத்தியமான வழிகளிலெல்லாம் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்கள்

கட்டுரைகள், துண்டுப்பிரசுரங்கள், தொகுப்பு வெளியீடுகள், கண்டனக் கூட்டங்கள், புறக்கணிப்புகள் என்று பல வகைகளிலும் இந்த எதிர்ப்புகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. புனிதபாண்டியனுக்கும் பீர்முகமதுவுக்கும் மருதையனுக்கும் மார்க்ஸுக்கும் அப்படி என்னதான் காலச்சுவடோடு தனிப்பட்ட பகைமைகள் இருக்கமுடியும்? காலச்சுவடுக்கு எதிரான கருத்துகள் ஒடுக்கப்பட்டோரின் விடுதலையின் மீதுள்ள கரிசனத்தால் உருவானவையே தவிர அவை தனிப்பட்ட பகைமைகளால் உருவாக்கப்பட்டவையல்ல. அவ்வாறு தனிப்பட்ட பகையால் காலச்சுவடை எதிர்ப்பவர்கள் யாராவது இருப்பார்களானால் அவர்கள் காலச்சுவடின் முன்னாள் கூட்டாளிகளான கனிமொழியையும் மனுஷ்யபுத்திரனையும் தவிர வேறு யாராகவும் இருக்க வாய்ப்பில்லை.

காலச்சுவடின் பார்ப்பனியக் கருத்துநிலை மீதும் இலக்கிய அரசியலின்மீதும் வைக்கப்படும் விமர்சனங்களை ” தனிப்பட்ட பகைமைகளாலும் வெறும் குழுநிலைகளில் நின்றும் விமர்சிக்கிறார்கள்” என்று திசைதிருப்பி விடும் காலச்சுவடின் தந்திரத்தைப் புரிந்துகொண்டு கீழுள்ள புள்ளிகளைத் தோழர்கள் கவனமாகப் பரிசீலிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன். சுய இலாபங்களிற்காக தகிடுதத்தங்களைம் இரட்டை நாக்குப் பேச்சுகளையும் நிகழ்த்தி இலக்கிய வெளியையும் சமூக வெளியையும் சீரழிப்பவர்கள் யாரென்பதைத் தோழர்கள் மதிப்பீடு செய்ய வேண்டும்.

3

‘பண்டிட் குயின்’ கனிமொழியுடன் காலச்சுவடு நட்புக்கொண்டிருந்த காலத்தில் மாநிலங்களவையில் கனிமொழி நிகழ்த்திய அவரது முதலாவது உரை முழுவதுமாகக் காலச்சுவடில் பிரசுரிக்கப்பட்டது. . இத்தகைய மாநிலங்களவை, நாடாளுமன்ற உரைகளை வெளியிடும் வழக்கம் காலச்சுவடில் அதற்கு முன்பும் இருந்ததில்லை, பின்பும் இருந்ததில்லை. கனிமொழியை குஷிப்படுத்தும் நோக்குடனேயே அந்த உரை காலச்சுவடில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.

வெளியிடப்பட்ட கனிமொழியின் உரை நூறுசதவீதம் ஏகாதிபத்திய சார்பு கொண்டது. அமெரிக்காவுடன் இந்தியா செய்துகொள்ளவிருந்த அணுசக்தி உடன்படிக்கைகையை முழுவதுமாக ஆதரித்துக் கனிமொழி உரையாற்றியிருந்தார். இந்த உடன்படிக்கையை ‘தேசத் துரோக உடன்படிக்கை’ எனக் கூறி இடதுசாரிக் கட்சிகள் மத்திய அரசுக்கு அளித்திருந்த ஆதரவை விலகிக்கொண்டன. அத்தகையொதொரு சீரழிவு உரையை காலச்சுவடு எந்தக் குற்றவுணர்வுமின்றி தனது நலன்களின் அடிப்படையில் மட்டுமே வெளியிட்டது. இளவரசியை மகிழ்ச்சிப்படுத்தி ஏதாவது பொறுக்குவதைத் தவிர இந்த இழவுக் கட்டுரையை வெளியிட்டதற்கு வேறு என்ன நோக்கம் இருக்க முடியும்?

கனிமொழியோடு மோதல் நிலை ஏற்பட்டதும் காலச்சுவடு ஆசிரியர் கனிமொழியைத் தாக்கி எழுதத் தொடங்கினார். அது வரவேற்புக்குரியது, எனினும் கனிமொழியின் அணுசக்தி உடன்படிக்கை ஆதரவு உரையை வெளியிட்டபோது கண்ணனின் இந்த ‘அறச்சீற்றம்’ எங்கே ஒளிந்திருந்தது எனக் கேள்விகள் எழுந்தன. அதற்கு கண்ணன் இவ்வாறு சொன்னார்: “கனிமொழியை அம்பலப்படுத்தவே நாங்கள் அந்த உரையை வெளியிட்டோம்.”

இதுவொரு யோக்கியமான பதிலா? தேங்காய் பறிப்பதற்காகத் தென்னை மரத்தில் ஏறிய திருடன் மாட்டிக்கொண்டபோது நான் ‘புல்லுப் பிடுங்க தென்னை மரத்தில் ஏறினேன்’ என்றானாம்.

‘பாபர் மசூதி அகற்றப்பட்டு அந்த இடம் ராமன் கோயில் கட்ட இந்துகளுக்கு வழங்கப்படவேண்டும் ‘எனக் கடப்பாரை கிருஷ்ணன் எழுதிய கட்டுரையைக் காலச்சுவடு வெளியிட்டது. அதை வெளியிடும்போது அந்தக் கட்டுரையுடன் தங்களுக்கு உடன்பாடில்லை, ஆனால் கருத்துச் சுதந்திரத்தின் பெயரால் அதை வெளியிடுகிறோம் என்று சொல்லியே அதை வெளியிட்டார்கள்.

கருத்துச் சுதந்திரம் என்பது ஒருவர் தனது கருத்தை அவரளவில் சொல்வதை நாம் தடுக்காமலிருப்பதுதான். நமக்கு உடன்பாடே இல்லாத ஒரு கருத்தை நாம் நடத்தும் பத்திரிகையில் வெளியிட மறுத்தால் அது கருத்துச் சுதந்திர மறுப்பாகாது. “இலங்கையில் தமிழர்கள் வந்தேறு குடிகள் அவர்கள் அடங்கியிருக்க வேண்டும் அல்லது அவர்கள் கொல்லப்படுவார்கள்” என்றொரு கட்டுரை நீங்கள் நடத்தும் பத்திரிகைக்கு அனுப்பிவைக்கப்பட்டால் கருத்துச் சுதந்திரத்தின் பெயரால் அதை நீங்கள் வெளியிடுவீர்களா தோழர்களே? அவ்வாறு வெளியிட்டால் அங்கே நிகழும் இரத்தப் பழிகள் உங்களது கைகளிலிருக்காதா?

‘இதோ இன்னொரு பார்வை’ என்றளவில் கடப்பாரையாரின் கட்டுரையை வெளியிட்டோம் என்றெல்லாம் சாக்குப்போக்குச் சொல்லி காலச்சுவடு தப்பிக்க முடியாது. ஏனெனில் அது இன்னொரு பார்வை கிடையாது. அது இந்துத்துவ வானர சேனைகளின் பொதுப் பார்வை. அதை வெளியிட அவர்களிடம் ஏராளமான பத்தரிகைகளும் ஊடகங்களுமிருந்தன. காலச்சுவடு போன்ற ஒரு சிறுபத்திரிகை ஏன் இந்த ‘இன்னெரு பார்வை’யை வெளியிட வேண்டும்?

அக் கட்டுரையை வெளியிட்டு வருடங்களாகி விட்டன. எனவே அக்கட்டுரையை வைத்துக்கொண்டு இன்றைய காலச்சுவடை மதிப்பிட முடியாது என்றொரு வாதமும் உண்டு. அவ்வாறானால் கடப்பாரையாரின் கட்டுரையை வெளியிட்டதற்காக இன்றைய காலச்சுவடு தனது வருத்தத்தைத் தெரிவித்திருக்க வேண்டும். மாறாக இது குறித்த பேச்சு வரும்போதெல்லாம் கடப்பாரையாரின் கட்டுரையை வெளியிட்டதை நியாயப்படுத்தியே கண்ணன் பேசி வருகின்றார். காலச்சுவடு இதழ் 39ல் அவர் எந்தக் குற்றவுணர்வமற்று ஆணவத்துடன் இவ்வாறு சொன்னார்: ‘பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு ஆதரித்து எழுதவில்லை. இடிப்பதற்கு முன்பேயே இடிப்பதை ஆதரித்துக் கட்டுரை வெளியிட்டோம்.’

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வாரத்தில் வெளியான ‘துக்ளக்’ இதழின் முன்அட்டை முழுவதுமாகக் கருப்பு நிறத்தில் வெளியிடப்பட்டிருந்தது எனது நினைவுகளில் இன்னும் கருமையாக இருக்கின்றது.

பெரியார் சிறப்பிதழ் என்ற பெயரில் பெரியார் எதிர்ப்பிதழ் ஒன்றைக் காலச்சுவடு வெளியிட்டிருந்தது. பெரியார் ஜெர்மனியில் நிர்வாண சங்கத்துக்குச் சென்றதைப் பெரியாரின் ‘தாசிலோல’ மனநிலையாகக் கொச்சைப்படுத்தி ரவிக்குமார் எழுதியிருந்த கட்டுரை மட்டுமல்லாமல் பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய ‘அக்கிரகாரத்தில் பெரியார் ‘ என்ற கட்டுரையும் அந்த இதழிலேயே வெளியாகியிருந்தது. ரவிக்குமார் பெரியாரைப் ‘பொம்பளப் பொறுக்கி’ என்று எழுதியிருந்தாரெனில் கிருஷ்ணனோ பெரியார் இயக்கத்தையே ‘பொம்பளைப் பொறுக்கிகள் ‘என எழுதியிருந்தார். ‘அக்கிரகாரத்தில் பெரியார்’ என்ற தலைப்பில் பி.ஏ.கிருஷ்ணனின் கட்டுரைத் தொகுப்பையும் காலச்சுவடு வெளியிட்டுள்ளது.

இது குறித்துக் கண்டனங்கள் எழுந்தபோது வாய்மூடியிருந்த காலச்சுவடு இப்போது ‘இது குறித்து ஏன் ரவிக்குமாரிடம் கேள்வி எழுப்பக்கூடாது’ எனக் கேட்கிறது. கனிமொழியையே கைவிட்டவர்களிற்கு ரவிக்குமாரைக் கைவிடுவது பெரிய வேலையா என்ன?

ரவிக்குமாரிடம் இது குறித்து ஆயிரம் கேள்விகளை வைத்தாகி விட்டது. தேர்தல் அரசியலுக்குள் நுழைந்ததும் ரவிக்குமார் பெரியாரை விமர்சிப்பதைத் தந்திரமாக நிறுத்திக்கொண்டார். ரவிக்குமாரின் அந்தக் கட்டுரை வெளியானபோது ரவிக்குமார் காலச்சுவடின் ஆசிரியர் குழுவில் இருந்தார் என்பதே எனது ஞாபகம். இப்போது ரவிக்குமாரை நோக்கி காலச்சுவடின் பொறுப்பாசிரியர் பழியை தள்ளிவிட்டிருப்பது என்னவகையான அரசியல்?

ரவிக்குமாரினது அவதூறுக் கட்டுரையை வெளியிட்டதில் காலச்சுவடு ஆசிரியர் கண்ணனுக்கு எந்தப் பங்குமே இல்லையா? அதையும் கருத்துச் சுதந்திரத்தின் பெயரால் அவர் நியாயப்படுத்தப் போகிறாரா? சுந்தர ராமசாமி ஒரு ‘பொம்பளப் பொறுக்கி’ என நான் எழுந்தமானத்துக்கு ஒரு கட்டுரையை எழுதி அனுப்பி வைத்தால் அதையும் அவர் காலச்சுவடில் வெளியிடுவாரா? தனது தந்தையை அவதூறு செய்வதாக அவர் கொதித்துப்போவாரா மாட்டாரா? சுந்தர ராமசாமி, கண்ணனுக்கு மட்டும்தான் தந்தை ஆனால் பெரியாரோ நாலு கோடி மக்களிற்குத் தந்தை என்பதை இலக்கிய அமைதிப் படையினர் மனங்கொள்ள வேண்டும்.

பெரியாரை இவ்வாறு அசால்டாக கொச்சைப்படுத்திய காலச்சுவடு, கொலை வழக்கில் காஞ்சிப் ‘பெரியவா’ கைது செய்யப்பட்டு சங்கர மடமே நாறியபோது எவ்வாறு பதறிப்போனது என்பதைக் கவனியுங்கள். அது தனது தலையங்கத்தில் இவ்வாறு எழுதியது: “சங்கர மடத்திற்கும் அதன் பக்தர்களுக்கும் ஒரு வார்த்தை. மடம் இன்று சந்தி சிரிக்கிறதென்றால் அதற்குக் காரணம் மடம் நடந்து வரும் விதம்தான்…. ஜெயேந்திரரை ஓரங்கட்டிவிட்டு விஜயேந்திரரின் தலைமையில் மடம் தனது வழக்கமான போக்கில் செயல்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. தனிநபரை மாற்றிவிட்டால் எல்லாம் சரியாகி விடாது. மடத்தை உண்மையான சமய ஆன்மீக அமைப்பாக மாற்றுவதற்கான போராட்டத்தை அவர்கள் மேற்கொள்வதே மடத்தின்பால் அக்கறை கொண்டவர்களின் முயற்சியாக இருக்க முடியும்.”

காலச்சுவடு தனது வரலாற்றிலேயே முதலும் கடைசியுமாகப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த தருணம் இது ஒன்றுதான். சங்கர மடம் நாசமாகப் போகின்றதெனனால் அது கொண்டாட வேண்டிய மகிழ்ச்சியான செய்தியல்லவா. சங்கர மடத்தின் இருப்பு பார்ப்பனியத்தின் இருப்பு. பார்ப்பனியத்தின் இருப்பு சாதியத்தின் இருப்பு. சாதிய நிறுவனமான சங்கர மடத்தைக் காப்பாற்றுவதில் காலச்சுவடுக்கு என்ன அவ்வளவு அக்கறை? இந்த அக்கறை காலச்சுவடின் சமூக அக்கறையிலிருந்து பிறக்கின்றதா அல்லது பார்ப்பனியப் பாசத்திலிருந்து பிறந்ததா? தோழர்கள் சிந்திக்க வேண்டும்.

“மதச்சார்பின்மை – மறு ஆய்வு” என்றொரு சிறப்பிதழையும் காலச்சுவடு வெளியிட்டிருந்தது. இஸ்லாமியர்கள் மீது முழுக்க முழுக்க வெறுப்பைக் கக்கிய அந்த இதழில். ‘இஸ்லாமியத் தலித்துகள்’ என்றெல்லாம் புதிய சொற்களைக் கண்ணன் உருவாக்கினார். “இஸ்லாத்தில் தலித்துகளுக்குக் கிடைத்த சமத்துவம் பற்றிய கண்ணனின் மனக்குமைச்சல் இஸ்லாமிய தலித்துகள்’என்ற சொல்லாடல் மூலம் வெளிப்படுகின்றது. சனாதனத்திற்கெதிராகக் கலகக் குரலுயர்த்திய பௌத்த / கிறிஸ்தவத்தை, ‘நவ பௌத்தர்கள், தலித் கிறிஸ்தவர்கள்’ என நாமகரணஞ்சூட்டிச் செரித்த சாணக்கிய தந்திரம் இஸ்லாத்திடம் சொல்லாது.” எனத் தோழர் சாளை பஷீர், கண்ணனைக் கடுமையாகக் கண்டித்து எழுதியிருந்தார். பஷீரைத் தவிர இன்னும் தோழர்களும் காலச்சுவடின் இஸ்லாமிய வெறுப்பை அம்பலப்படுத்தி காலச்சுவட்டின் யோக்கிய முகமூடியைக் கிழித்தெறிந்திருந்தனர். அந்தக் கட்டுரைகளுக்கான தொடுப்புகளை இக்கட்டுரையின் அடியில் கொடுத்திருக்கின்றேன். இந்தக் கட்டுரைகள் பேசும் விசயங்களைக் கண்டுகொள்ளாது காலச்சுவடுக்கு மதச்சார்பின்மை ‘சான்றிதழ்’ வழங்குவது அறிவு நாணயமற்ற செயலாகும். காலச்சுவடின் மதச்சார்பின்மை கண்டிப்பாக மறு ஆய்வுக்குரியது.

ஈழப் போராட்டத்தில் காலச்சுவடு நடுவு நிலை எடுத்தது, அது புலிகளை விமர்சித்துக் கட்டுரைகளையும் வெளியிட்டது என்றொரு வாதமும் முன்வைக்கப்படுகின்றனது. இந்த வாதம் உண்மையில் மிகவும் பலவீனமானது. மே 2009 – ற்குப் பின்பாக முன்னாள் புலி ஆதரவாளர்களது கட்டுரைகள் சில காலச்சுவடில் வெளியானதை வைத்துக்கொண்டு அப்படியொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தச் சிலர் முயற்சிக்கின்றார்கள். ஆனால் அந்தக் கட்டுரைகள் போர் நிலவரங்களைக் குறித்த சம்பவத் தொகுப்புகளாகவும் இலங்கை அரசியல் குறித்த மேம்போக்கான அரசியலைப் பேசும் கட்டுரைகளாகவும் இருந்தனவே அல்லாமல் அவை புலிகளின் பாஸிச அரசியலையும் தமிழ்த் தேசியத்தின் வங்குரோத்தையும் துல்லியமாகப் பேசிய கட்டுரைகளல்ல. எனினும் இதை எழுதியதற்கே அவர்கள் பல பக்கங்களிலிருந்தும் ‘துரோகி’ பட்டங்களை எதிர்கொண்டது காலத்துயர்.

புலிகளை ஆதரித்தும் மாற்றுக் கருத்தாளர்களை விமர்சித்தும் எழுதப்பட்ட மிக மோசமான கட்டுரைகளை காலச்சுவடு தாராளமாகவே வெளியிட்டிருக்கிறது. மு. புஷ்பராஜன் மாற்றுக் கருத்தாளர்களை ‘விலங்குப் பண்ணை’யுடன் ஒப்பிட்டு எழுதிய கட்டுரையும் சை. பீர்முகமதுவின் ‘துரோகிகள்’ குறித்த கட்டுரையும் முதல்தரமான மோசடிக் கட்டுரைகள். எனினும் இந்த எண்ணிக்கை அளவுகளை வைத்துக்கொண்டு ஈழப் பிரச்சினையில் காலச்சுவடின் நடுவுநிலையை மதிப்பிடுவது சரியல்ல.

ஏனெனில் ஈழப் பிரச்சினையின் இரு தரப்புகள் புலிகளும் இலங்கை அரசுமே தவிர புலிகளும் மாற்றுக் கருத்தாளர்களுமல்ல. இரு தரப்புகளில் ஒரு தரப்பான இலங்கை அரசுமீது மிகக் கடுமையான விமர்சனங்களையும் கண்டனங்களையும் காலச்சுவடு வைத்திருக்கிறது. உண்மையில் இதற்காகக் காலச்சுவடை நான் பாராட்டியாக வேண்டும். ஆனால் காலச்சுவடின் மறுபக்கம் அந்தப் பாராட்டை வழங்குவதிலிருந்து என்னைத் தடுத்துப் போடுகின்றது.

முப்பது வருடங்களாக எங்களது எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் தொழிற்சங்கவாதிகளையும் கொம்யூனிஸ்டுகளையும் தலித் தலைவர்களையும் நாடாளுமன்ற அரசியல்வாதிகளையும் சிறுகச் சிறுகப் புலிகள் கொன்ற கதை காலச்சுவடுக்கு தெரியாதா? புலிகள் சிறுவர்களைக் கட்டாயமாகப் படைகளில் இணைத்துக்கொண்டது காலச்சுவடுக்குத் தெரியாதா? இஸ்லாமிய மக்கள் விரட்டப்பட்டதும் பள்ளிவாசல்களில் வைத்துக் கொத்துக் கொத்தாகப் புலிகளால் கொல்லப்பட்டதும் காலச்சுவடுக்குத் தெரியாதா? எதுதான் தெரியாவிட்டாலும் இறுதி யுத்தத்தின் கடைசி அய்ந்து மாதங்களில் புலிகளால் பொதுமக்கள் பணயமாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்ததும் அங்கிருந்து தப்பியோடிய மக்களைப் புலிகள் கொன்றதும் காலச்சுவடுக்குத் தெரியாதா? இவை குறித்து காலச்சுவடின் ஆசிரிய பீடம் மே 2009க்கு முன்னதாக எப்போதாவது தனது கருத்தை வெளியிட்டிருக்கிறதா? புலிகளால் பணயமாகப் பிடிக்கப்பட்ட மக்களுக்காகவும் கொல்லப்பட்ட மக்களுக்காகவும் அது பேசியிருக்கிறதா? அ.மார்க்ஸ், ஆதவன் தீட்சண்யா போன்றவர்கள் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் இதையெல்லாம் அப்போது தமிழகத்தில் பேசிக்கொண்டுதானேயிருந்தார்கள். சர்வதேச இஸ்லாமியப் பயங்கரவாதங்களால் ஏற்படும் துயரங்களைக் குறித்துப் பேசிய காலச்சுவடு வெறுமனே முப்பது மைல்களுக்கு அப்பால் நடந்த புலிகளின் கொடூரங்கள் குறித்தும் கூட்டுப் படுகொலைகள் குறித்தும் ஏன் பேச மறந்தது? காலச்சுவடின் மனித உரிமைப் பார்வைகள் புலிகளின் முன்னால் மட்டும் ஏன் மண்டியிட்டது? புலிகளின் அரசியலை ஆதரித்து எழுதப்பட்ட எந்தக் கட்டுரையும் பாஸிச அரசியலுக்கான நேரடி – மறைமுக வக்காலத்துத்தான். காலச்சுவடில் வெளியான புலிகள் ஆதரவுக் கட்டுரைகளும் பாஸிசத் துக்கான வக்காலத்துகளே. புலிகளால் கொல்லப்பட்ட ஈழத் தமிழ் மக்களின் இரத்தம் காலச்சுவடின் பக்கங்களில் காலாதி காலத்துக்கும் படிந்துதானிருக்கும்.

காலச்சுவடு ஈழத்தவர்களின் நூல்களை வெளியிடுவதால் அது கவனத்துக்குரியது என்றும் ஒரு தரப்புச் சொல்கின்றது. காலச்சுவடு ஈழத்து நூல்களை மட்டுமல்ல ‘பிராமின் டுடே’யை வெளியிடவும் உதவுகின்றது என்பதையும் தயவு செய்து மானமுள்ள தோழர்கள் கவனிக்க வேண்டும்.

தமிழகத்திலிருந்து வெளியாகும் ‘பிராமின் டுடே ‘அப்பட்டமான பார்ப்பனிய சாதி வெறிப் பத்திரிகை. சாதி மறுப்புத் திருமணங்களையும் பார்ப்பனரின் நிலங்கள் பார்ப்பனரல்லாதவர்களுக்கு விற்கப்படுவதையும் கண்டித்து இரத்தத் தூய்மை பேசும் நவ நாஸி இதழது. அந்த இதழ் தனது அய்ம்பதாவது இதழில் இவ்வாறு காலச்சுவடுக்கு நன்றி தெரிவித்தது:

“வணிக நோக்கத்தின் வரம்புக்குள் எண்ணாமல் சிற்றிதழ்கள் ஆதரிக்கப்பட வேண்டும் என்ற ஒற்றை நிலைப்பாட்டின் அடிப்படையில் இத்தனை மாத இதழ்களும் இனிதாக வெளிவருவதற்கு அத்தனை உதவிகளையும் தொடர்ந்து செய்துவரும் சுவடி நிறுவனத்தினருக்கு என்றென்றும் நாம் நன்றிக் கடன்பட்டவர்கள். ‘காலச்சுவடு’ என்னும் தலையாய தரமான தமிழ் இலக்கிய இதழின் வெளியீட்டுப் பிரிவான சுவடியின் ஆசிரியர்கள் திரு. கண்ணன், திரு. அரவிந்தன் மற்றும் அதன் பணியாளர்கள் குறிப்பாக கீழ்வேளூர் ராமனாதன் போன்றவர்கள் ‘பிராமின் டுடே’யின் 50ஆம் இதழ் வெளியீட்டுத் தருணத்தில் கட்டாயம் நினைக்கப்பட வேண்டியவர்கள்.”

இந்தச் செய்தி முகப்புத்தகத்தில் விவாதத்திற்கு வந்ததும் காலச்சுவடின் பொறுப்பாசிரியர் ஓடோடி வந்து பிராமின் டுடேயை அச்சிட்டுக் கொடுக்கும் ‘சுவடி நிறுவனம்’ காலச்சுவடு இயங்கும் கட்டடத்தில் இயங்குவதைத் தவிர அதற்கும் காலச்சுவடுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்றார். ‘சுவடி’ காலச்சுவடின் கிளை நிறுவனமே என்ற உண்மை நிறுவப்பட்ட போது காலச்சுவடுக்கும் பிராமின் டுடேக்கும் இடையில் உள்ளது வெறும் வணிக உறவு மட்டுமே என்று பொறுப்பாசிரியர் சப்பைக்கட்டுக் கட்டினார். பிராமின் டுடேயை மட்டுமல்ல வேறுபல தலித் இதழ்களையும் அச்சிட்டுக் கொடுக்கிறோமே என்றார்.

தலித் இதழ்கள் வெளிவர நம்மால் இயன்ற உழைப்பையும் உதவியையும் வழங்குவது நம் ஒவ்வொருவருடைய கடமையாகும். அதே போல் சாதி வெறி கக்கும் இதழ்களை இல்லாதொழிப்பதும் இந்தச் சாதியச் சமூகத்தில் பிறந்த நமது கட்டாயக் கடமையாகும்.

ஆனால் காலச்சுவடு கண்ணன் என்ன செய்கிறார்? பார்ப்பனியச் சாதி வெறியை அப்பட்டமாகக் கக்கும் ஓர் இதழை அச்சிட்டுக் கொடுக்கிறார். இந்த இதழ் சமூகத்தில் பரப்பும் தீமைகள் குறித்துச் சிந்திக்கவிடாமல் அவரைத் தடுப்பது எது? வணிகமா! பார்ப்பனியமா! தோழர்கள் சிந்திக்க வேண்டும்.

இதேபோன்று பார்ப்பன சங்கத்தின் விளம்பரங்கயும் காலச்சுவடு வெளியிட்டு வருகின்றது. பார்ப்பன சங்கத்தினர் காலச்சுவடு போன்ற ஓர் இலக்கியப் பத்திரிகைக்கு எதற்காகத் தங்களது விளம்பரங்களைக் கொடுக்க விரும்புகிறார்கள் என்ற கேள்வியும் நமது கவனத்திற்குரியது. ‘துக்ளக்’ கூட பார்ப்பன சங்கத்தின் விளம்பரங்களை வெளியிட மறுத்துவிட்டதாக நண்பர்கள் சொல்கின்றார்கள். துக்ளக் சோவுக்குள்ள கொஞ்ச நஞ்ச அறம் கூட காலச்சுவடு கண்ணனுக்குக் கிடையாதா என நாம் கேட்க வேண்டியுள்ளது.

காலச்சுவடு இதழின் நிரந்தரப் புரவலர் சாதிக்கலவரங்களைத் தூண்டிவிடுவதிலும், நக்ஸல்பாரிகளை காவற்துறைக்குக் காட்டிக்கொடுப்பதிலும், தலித் அரசு அதிகாரிகளுக்குக் குழி பறிப்பதிலும் புகழ்பெற்ற பார்ப்பனியத் தினமலர். அதேபோல் காலச்சுவடின் இன்னொரு புரவலர் ‘கிருஷ்ணா ஸ்வீட்’ நிறுவனம் இந்த நிறுவனமும் காலச்சுவடும் இணைந்து ‘அற்றைத் திங்கள்’ என்றொரு நிகழ்வையும் மாதம் தோறும் நடத்தி வருகிறார்கள்.

இந்தக் கிருஷ்ணா ஸ்வீட் நிறுவனம் அண்மையில் கோவையில் ஓர் இலவச மின் மயானத்தை அமைத்தது. இந்த மயானத்தில் பார்ப்பனர்களை மட்டுமே தகனம் செய்ய முடியும். தனிச் சுடுகாட்டுக் கொடுமைக்கு எதிராக நூறு ஆண்டுகளாகப் போராடி வரும் தேசத்தில் இப்படியொரு கொடுமை. இதை எதிர்த்து ‘தந்தை பெரியார் திராவிடர் கழகம் ‘ஒரு போராட்டத்தையும் நடத்தியது.

காலச்சுவடுக்கு அடிப்படை நேர்மையாவது எஞ்சியிருந்தால் அது ‘கிருஷ்ணா ஸ்வீட்’ நிறுவனத்துடனான தனது தொடர்புகளை உடனடியாகவே முறித்துப் போட்டிருக்க வேண்டும். ஆனால் அது தொடர்ந்தும் அந்தச் சாதி வெறி நிறுவனத்துடன் இணைந்து ‘அற்றைத் திங்கள்’ நிகழ்வுகளை நடத்துகின்றது. தங்களது கூட்டாளியின் இந்த வன்கொடுமையைக் கண்டித்து காலச்சுவடு ஒரு வரிகூட எழுதவில்லை. இதை நக்குண்டார் நாவிழந்தார் என்பதா அல்லது சாதி அபிமானம் என்பதா?

ஆக, காலச்சுவடு குறித்த இத்தனை கேள்விகளும் சந்தேகங்களும் நம்பகமான ஆதாரங்களுடனான விமர்சனங்களுமிருக்க இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டுக் காலச்சுவடு ஆசிரியரோடு வேறு விடயங்களைப் பேசுவது என்பது சுத்த அயோக்கியத்தனம். இந்த விமர்சனங்களுக்கான நியாயமான பதில்களை காலச்சுவடு ஆசிரியர் வழங்காதவரை அவருடன் ‘இணக்க’ அரசியல் செய்வது காலச்சுவடின் அநீதிகளுக்கு நாமும் துணை போகும் செயலே. தன்னைச் சாதியாக உணரும் மனம் வேறெந்த அறங்கள் குறித்தும் பேசத் தகுதியற்றது. அதனிடமிருந்து சூழ்ச்சிகளைத் தவிர கற்றுக்கொள்வதற்கு நமக்கு எதுவுமிராது.

தோழர்களே நாம் கூட்டுச் செயற்பாடுகளிலும் சனநாயகத்திலும் மிகுந்த நம்பிக்கையுடையவர்கள். நமக்கிடையேயான இணக்கம் என்பது அறம் சார்ந்த அரசியலை நோக்கிய பயணத்தில் உருவானதே தவிர, கேவலமான அடிபணிவுகளாலும் காட்டிக்கொடுப்புகளாலும் உருவானதல்ல.

நமக்கு எதிரான கருத்துகளும் மாற்றான கருத்துகளும் கொண்டவர்கள் முன்னால் வெள்ளைக்கொடியைப் பறக்கவிட்டு அவர்களுடனான சமரசத்துக்கு நாம் செல்வோம். ஆனால் நாம் கைகளில் ஏந்தும் வெள்ளைக்கொடி சமரசத்திற்கானதே தவிர சரணடைவுக்கானது அல்ல என்பதில் நாம் உறுதியோடிருப்போம். மானிட விழுமியங்களை மதிக்காதவர்களினதும் அதிகார நிலையிலிருந்து இறங்கிவர மறுப்பவர்களினதும் பொய்யர்களினதும் முன்னால் உயர்த்திப் பிடிக்கப்பட்ட வெள்ளைக் கொடி பயனற்றது. அங்கே வெள்ளைக் கொடி ஏந்திச் செல்வோர் படுகொலை செய்யப்படுவார்கள் என்பதே வரலாறு.
***

தொடுப்புகள்:

காலச்சுவடின் ஆள்காட்டி அரசியல் : நிறப்பிரிகை

காசு கண்ணனின் ஆள்காட்டி அரசியல் -நீலகண்டன்

காலச்சுவடு ஒர் இலக்கியத் தினமலர்

கொடும் நிகழ்வின் இன்னொரு பாரம்  – மு.சிவகுருநாதன், அப்துல் காதர், ச.பாண்டியன்

காசு கண்ணனின் நரித்தனத்தைக் கண்டிக்கிறோம் -சாளை பஷீர்-