ரோஹிங்யா அகதிகள் : இந்திய அரசு நிகழ்த்தும் இரண்டாம் இனப்படுகொலை!

கட்டுரைகள்

நான் 1991-ம் ஆண்டின் முற்பகுதியில் `சட்டவிரோத அகதி’ எனக் கைதுசெய்யப்பட்டு, தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் உள்ள குடியேற்றவாசிகள் தடுப்பு மையச் (Immigration Detention Center) சிறையில் அடைக்கப்பட்டேன்.

நான் அடைக்கப்பட்ட சிறையில் ஆண்களுக்குத் தனியான பகுதியும், பெண்கள், குழந்தைகளுக்குத் தனியான பகுதியும் இருந்தன. உலகில் உள்ள மிக மோசமான சிறைகளைப் பட்டியலிட்டால், முதல் மூன்று இடங்களுக்குள் வருவதற்கு அந்தச் சிறைக்கு எல்லாவிதமான தகுதிகளும் உண்டு.

நான் சிறையில் அடைக்கப்பட்டதற்கான காரணம், நான் நாடற்ற அகதியாக இருந்தது மட்டுமே. அந்தச் சிறைக்குள் அடைக்கப்பட்டால், அங்கிருந்து நாம் நாடு கடத்தப்படும் வரை சூரிய ஒளியையே பார்க்க முடியாது. மருத்துவ வசதி கிடையாது. கைதி, இட நெருக்கடி காரணமாக கால் நீட்டிப் படுக்க ஆறடி நிலம் கிடைக்காது. ஒரு நாளைக்கு இரு வேளைகள் மட்டுமே கைப்பிடி அளவு சோறும், நீராலும் உப்பாலுமான குழம்பும் வழங்கப்படும். இந்த அளவுக்கு அந்தச் சிறையில் உள்ள ஒவ்வொரு கைதியின் உணவுக்கும் ‘போதுமான அளவு’ பணத்தை அகதிகளுக்கான ஐ.நா ஆணையம் தாய்லாந்து அரசுக்கு வழங்கிவந்தது. அந்தப் பணத்தில்தான் சிறைத் துறையின் ஊழல் அதிகாரிகள் கொழித்தார்கள்.

ஆண்கள் சிறையின் நான்கு பகுதிகளிலுமாகச் சேர்த்து, ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டிருந்தோம். அந்தக் கைதிகளில் பல நாடுகளையும் இனங்களையும் சேர்ந்தவர்கள் கலந்து இருந்தனர். இருந்தாலும், அங்கு 95 விழுக்காட்டுக்கும் அதிகமாக ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களே அடைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள், மியான்மரிலிருந்து தஞ்சம் கேட்டுத் தப்பி ஓடிவந்த ரோகிங்கியா அகதிகள்.

பழகுவதற்கு இனியவர்களும், சற்றே உலகம் அறியாதவர்களும்போலக் காணப்பட்ட அந்த அகதிகளோடு நிறையப் பேசியிருக்கிறேன். இப்போது நடப்பதுபோலவே அப்போதும் ரோகிங்கியா மக்கள்மீது மியான்மார் அரசு பெரும் இனவொழிப்புத் தாக்குதலை நடத்திக்கொண்டிருந்தது. என்ன ஒரு வருந்தத்தக்க முரண் என்றால், அப்போது இனவொழிப்பை நடத்தியது ராணுவ சர்வாதிகார அரசு; இப்போது இனவொழிப்பை நடத்திக்கொண்டிருப்பது அமைதிக்காக நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகியின் அரசு.

நீண்ட காலங்களாகவே மியான்மரில் ரோஹிங்யா மக்கள் பர்மியத் தேசியவாதிகளாலும் பெளத்த மத அடிப்படைவாதிகளாலும் ஒடுக்கப்பட்டே வருகிறார்கள். 1982-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட மியான்மர் குடியுரிமை விதிகளின்படி, ரோகிங்கியா மக்கள் நாடற்றவர்களாவும் வங்காளதேசத்திலிருந்து வந்த சட்டவிரோதக் குடியேறிகளாகவுமே நடத்தப்பட்டு, மியான்மர் அரசால் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

கடந்த பத்து ஆண்டுகளாகவே அந்த மக்கள் அகதிகளாகச் சிதறி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் செறிந்து வாழ்ந்த `ரகைன்’ மாகாணம், இப்போது படுகொலை நிலமாகிவிட்டது. ரோகிங்கியா மக்கள் சுற்றிவளைக்கப்பட்டு, அரசுப் படைகளாலும் இன – மதவாதிகளாலும் கொல்லப்படுகிறார்கள். ரோஹிங்யா மக்களின் மொத்த ஜனத்தொகையில் பாதிப்பேர் அகதிகளாக நாட்டிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். மீதமுள்ள அரைவாசிப்பேர் கேட்க நாதியற்றுக் கொலை வளையத்துக்குள் சிக்கியிருக்கிறார்கள்.

ஆங் சான் சூகியின் அரசு, நடந்துகொண்டிருக்கும் அனர்த்தங்களுக்கான பொறுப்பை ரோஹிங்யா ஆயுதக் குழுக்கள் மீது வஞ்சமாகச் சுமத்துகிறது. மாறாக, ஐ.நா `ரகைன் பகுதியில் ரோஹிங்யாக்கள்மீது நடந்துகொண்டிருப்பது, இனப்படுகொலைக்கு இணையான திட்டமிட்ட அழிப்பு’ எனப் பிரகடனப்படுத்தியுள்ளது.

உலகில் நடக்கும் இனவொழிப்புகள் தொடர்பாக ஐ.நா கொடுக்கும் குரலை நீண்டநாள்களாகவே கவனித்துவருபவன் என்ற முறையில், எனக்கு ஒன்று சொல்லத் தோன்றுகிறது. இந்த விஷயத்தில் ஐ.நா-வின் குரலுக்கு நம்முடைய டிராஃபிக் ராமசாமியின் குரல் அளவுக்கே மதிப்பிருப்பதாகத் தெரிகிறது. அந்தக் குரல் பெரும்பாலான தருணங்களில் சரியாக இருந்தபோதிலும் அந்தக் குரலுக்கு எந்தப் பெறுமானமும் இல்லாமல்போய்விடுகிறது. எதுவுமே நடப்பதில்லை. இதற்கு மிகச் சரியான எடுத்துக்காட்டு, 2009-ம் ஆண்டில் ஈழத்தில் நடந்த தமிழினப் படுகொலை. அங்கு நடந்த ஒரு சாவைக்கூட ஐ.நா-வால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அகதிகள் பிரச்னையிலும் ஐ.நா-வுடைய பாத்திரம் தடுமாற்றமாகத்தான் அமைகிறது.

இந்தியாவில் இப்போது சுமார் 40,000 ரோஹிங்யா அகதிகள் உள்ளனர். இவர்களில் 16,000 அகதிகள் ஐக்கிய நாடுகள் அவையால் அகதிகளாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளனர். இந்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு `இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கும் 40 ஆயிரம் ரோஹிங்யா மக்களையும் இந்தியா நாடு கடத்தும். ஐக்கிய நாடுகள் அவையின் அகதிகள் நிறுவனத்தில் பதிவுசெய்திருப்பதால் எந்தப் பயனும் இல்லை. எங்களைப் பொறுத்தவரை அவர்கள் அனைவரும் சட்டப்பூர்வமற்ற குடியேறிகளே’ என்று அறிவித்திருக்கிறார்.

இலங்கையில், வெறும் 30 ரோஹிங்யாக்கள்தான் இருக்கிறார்கள். இந்தியாவிலிருந்து படகில் ஆஸ்திரேலியா செல்லும் வழியில் திசை மாறி, இலங்கைக் கரையில் பிள்ளைக்குட்டிகளோடு ஒதுங்கியவர்கள் இவர்கள். இந்த அகதிகளை, இலங்கை அரசு தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்திருக்கிறது. இந்த அகதிப்பெண்களில் ஒருவர், போலீஸால் பாலியல் வன்முறைக்கும் உள்ளாகியுள்ளார்.

அகதிகளுக்கான 1951-ம் வருட ஜெனிவா உடன்படிக்கையில், இந்தியா, இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகள் கைச்சாத்திடாதவை. இந்த நாடுகளில் இயங்கும் அகதிகளுக்கான ஐ.நா ஆணையப் பிரிவுகள், இந்த நாடுகளை நோக்கி உயிர்பிழைக்க ஓடிவரும் அகதிகளை அகதிகளாக ஏற்றுப் பராமரித்தாலும் ஐ.நா-வின் முடிவு இந்த அரசுகளைக் கட்டுப்படுத்தாது. எனவேதான், ஐ.நா அகதி என ஏற்றுக்கொண்ட ஒருவரை, இந்த நாடுகளின் அரசுகள் `சட்டவிரோதக் குடியேறி’ எனச் சிறையில் அடைக்கின்றன அல்லது நாடு கடத்துகின்றன.

இப்போது இந்தியாவில் உள்ள 40,000 ரோஹிங்யா அகதிகளை நாடு கடத்தப்போவதாக, இந்திய அரசு அறிவித்திருப்பதற்கு எதிரான ஜனநாயகக் குரல்களும் ஒலிக்கத்தான் செய்கின்றன. ஆனால், அவை மிக சன்னமாக ஒலிக்கின்றன. போதாக்குறைக்கு சர்வதேச அளவில் ரோகிங்கியா மக்களுக்கு ஆதரவாக எழுப்பப்படும் குரல்கள் பெரு ஊடக நிறுவனங்களால் முடக்கப்படுகின்றன எனச் செய்திகள் கிடைக்கின்றன. முகநுாலிலும் யூடியூபிலும் ரோஹிங்யா அகதிகளுக்கு ஆதரவாக ஒலிக்கும் குரல்களை அந்த நிறுவனங்கள் பெருமளவில் நீக்கிவிடுவதாகத் தெரிகிறது.

இந்திய தேசம், ஈழத்து அகதிகள் உள்பட பல தேசத்து அகதிகளுக்கு நீண்டகாலமாகவே புகலிடம் கொடுத்துள்ளது. இவ்வாறாக லட்சக்கணக்கான அகதிகளின் உயிரை அது காப்பாற்றியுள்ளது. ஒப்பீட்டுரீதியாக,செல்வந்த மேற்கு நாடுகள்போல அது தன்னிடமுள்ள அகதிகளைப் பராமரிக்கவில்லை என்பது உண்மைதான். அதற்கான நிதி மற்றும் நிர்வாகக் கட்டமைப்புகள் இந்தியாவிடம் குறைவாகவே உள்ளன. இந்திய குடிமக்களிலேயே நான்கில் ஒருவர் இரவு பட்டினியாகப் படுக்கைக்குச் செல்லவேண்டியிருக்கும் நிலையில்தான், இந்திய தேசம் தன்னிடம் ஓடிவரும் அகதிகளையும் அரவணைத்துக் காப்பாற்றவேண்டியிருக்கிறது.

இந்தியா – இலங்கை இவற்றுக்கு இடையேயான உறவுகள் ஆயிரம் அரசியல் கணக்குகளாலும் குத்து, வெட்டுகளாலும் இயங்குபவை என்பதற்கு அப்பால், கடந்த நாற்பது வருடங்களாக இந்திய தேசம் தக்க தருணங்களில் ஈழத்து அகதிகளை ஏற்றுக்கொண்டிருக்காவிட்டால், ஈழத்தின் சாவு எண்ணிக்கை இன்னும் இருமடங்காகியிருக்கும் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அதேபோன்றுதான் இப்போது ரோஹிங்யா அகதிகளையும் ஏற்று அவர்களது உயிர்களைக் காப்பாற்றவேண்டிய மனிதநேயக் கடமை இந்திய தேசத்து மக்களின் கையிலுள்ளது.

இப்போது ரோஹிங்யா அகதிகளை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற முடிவெடுத்திருக்கும் பா.ஜ.க அரசின் வெளிப்படையான இந்துத்துவ முகமும் இஸ்லாமிய வெறுப்பும் உலகறிந்தவை. ரோஹிங்யா அகதிகள் விஷயத்தில் அவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால், அவர்களை வெளியேற்ற ஆளும் பா.ஜ.க அரசு தீவிர முனைப்புக்காட்டக்கூடும். அரசுடைய குரல் அவ்வாறுதான் ஒலிக்கிறது.

`ரோஹிங்யா அகதிகளோடு கலந்து இஸ்லாமிய மத அடிப்படைவாதத் தீவிரவாதிகளும் இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டார்கள். ரோகிங்கியா போராளிக் குழுக்களுக்கு, சர்வதேச தீவிரவாத இயக்கங்களோடு தொடர்பு இருக்கிறது’ என்கிறது இந்திய அரசு.

இவையெல்லாம் நடக்க வாய்ப்பில்லை என நான் சொல்ல மாட்டேன். இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்கலாம். ஆனால், இந்தக் குற்றங்களுக்கு ரோஹிங்யா அகதிகள் பொறுப்பாக மாட்டார்கள். இந்திய அரசு ஒட்டுமொத்த அகதிகளையும் வெளியேற்றினால், அது சந்தேகத்துக்கு இடமின்றி அந்த மக்கள் மீதான இரண்டாம் இனப்படுகொலை.

ரகைன் பிரதேசத்தில் இயங்கிவரும் அர்சா போன்ற ரோஹிங்யா ஆயுத அமைப்புகள், நாட்டிலிருந்து ரோஹிங்யா ஆண்களைச் செல்லவிடாமல் தடுத்துவைத்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது. மியான்மர் ராணுவத்திடமிருந்து மட்டுமல்லாமல் தங்களது சொந்த இன ஆயுத அமைப்புகளிடமிருந்து தப்பித்தும்தான் இந்த அகதிகள் ஓடிவந்துகொண்டிருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் அனைத்து அரசுகளாலும் நிறுவனங்களாலும், பல சமயங்களில் தஞ்சம் புகுந்த நாட்டு மக்களாலும் ஆயிரம் சந்தேகக் கண்கள்கொண்டே அகதிகள் பார்க்கப்படுகிறார்கள். ஒருவர் அகதியாக இருப்பதைவிடக் கடினமானது எதுவெனில், அவர் தான் பயங்கரவாதி அல்ல, அகதி என மற்றவர்களுக்கு நிரூபித்துக்காட்டுவதே! தீவிரவாதிகளையும் அகதிகளையும் வேறுபடுத்தி அணுகவேண்டியதைவிடுத்து, ஒட்டுமொத்த அகதிகளையும் குற்றவாளிகளாக்குவது நீதியன்று.

விகடன் இணையத்தளம் 27.09.2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *