எழுதுவது சிலுவையைச் சுமப்பதுபோல…

நேர்காணல்கள்

இந்து தமிழ் இதழில் 21.01.2023 அன்று வெளியான நேர்காணல்
சந்திப்பு:மண்குதிரை

ஷோபா சக்தி, தமிழின் புகழ்பெற்ற நாவலாசிரியர். தன் கதைகளின் மொத்த சொற்களுக்கும் உயிர் கொடுக்கும் திருத்தமான கதை சொல்லி. ‘கொரில்லா’, ‘ம்’, ‘BOX: கதைப் புத்தகம், ‘இச்சா’ என எழுதிய நாவல்கள் ஒவ்வொன்றும் பேசப்பட்டவை. சிறுகதைகள், கட்டுரைகள் எனப் பல வடிவங்களில் இயங்கிவருகிறார். சர்வதேசப் புகழ்பெற்ற கான் திரைவிழாவில் தங்கப்பனை விருதை வென்ற ‘தீபன்’ பிரெஞ்சுப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இவரது படைப்புகளை கருப்புப் பிரதிகள் பதிப்பகம் (புத்தகக் காட்சி அரங்கு எண்: 378, 379) வெளியிட்டுள்ளது.

‘ஸலாம் அலைக்’ நாவல் பின்னணி என்ன?

எட்வர் செய்த் இதை அகதிகளின் யுகம் என்கிறார். உலக மக்கள்தொகையில் கணிசமான அளவு மக்கள் அகதிகளாக வாழ்ந்துவருகிறார்கள். இந்த அகதிகளை மேற்குலக நாடுகள் வரவேற்று நல்லபடி வாழவைப்பார்கள் என்று ஒரு மாயை இருக்கிறது. ஆனால், அது உண்மையில்லை. ஐரோப்பாவில் கிட்டத்தட்ட அகதிகளுக்கான எல்லாக் கதவுகளும் மூடப்பட்டுவிட்டன. மேற்கு நாடுகள் அகதிகளை எப்படி வஞ்சிக்கின்றன என்பதை விளக்கியிருக்கிறேன். இலங்கைப் பின்னணியில் ஒரு அகதி எப்படி உருவாகிறான் என்பதை விவரித்திருக்கிறேன்.

கதைகளுக்கான கூற்றுமொழியை எப்படி உருவாக்கினீர்கள்?

பாரதி சொல்வார் இல்லையா, ‘உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின், வாக்கினிலே ஒளி யுண்டாகும்’ அது மாதிரிதான். உண்மையைத்தான் என் கதைகளில் பேசுகிறேன். அதனால் மொழிக்காக ரொம்ப மெனக்கெடுவதில்லை. நம்ம வீடுகளில் பாட்டி கதை சொல்வாள் இல்லையா, அதுமாதிரிதான் கதை சொல்கிறேன்.

யதார்த்தம் என்பதைத் தாண்டி, வாசக சுவாரசியத்தையும் கணக்கில் கொள்வீர்களா?

இது ஒன்றும் புதிதல்ல. நம் நாட்டார் கதைகளில் இதுபோலத் திருப்பம், மாயம் எல்லாம் இருக்கிறது இல்லையா? கப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் மாய யதார்த்தவாதம் எல்லாம் நம் மரபில் இருக்கிறது. என் ‘இச்சா’ நாவலில் பேய்கள் பேசுவது போன்ற அம்சங்கள் எல்லாம் நம் கதை மரபில் எடுத்ததுதான். கதைக்குப் பிரதி இன்பம் முக்கியம். அதனால் வாசகரைக் கணக்கில் கொண்டுதான் எழுதுகிறேன்.

இலங்கைத் தமிழ் இலக்கிய மரபிலிருந்து உங்கள் எழுத்து வேறுபட்டது இல்லையா?

இலங்கை இலக்கியத்துக்குள் பல பிரிவுகள் உள்ளன. 16 வயதிலேயே விடுதலை இயக்கத்தில் இணைந்து, பயணம் செய்து, வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து, ஒரு அகதியாக மாறிய எனது வாழ்க்கை வேறு மாதிரியானது. இதெல்லாம் கலந்துததான் என் இலக்கியம். என் எழுத்து இலங்கைத் தமிழ் இலக்கிய மரபிலிருந்து வேறுபட்டதா, என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

உங்கள் எழுத்துகளில் சமூக ஒழுக்க மீறல்கள், குற்றங்கள் குறித்த பதிவுகள் அதிகம் உள்ளன…

ஒரு குற்றம் நடந்தது என்றால், அதற்கான காரணத்தை ஆராய்வேன். குற்றத்தைவிடத் தண்டனைகள் கொடிது என்பது ஆல்பர்ட் காம்யூவின் கருத்து. அது எனது ஆழமான நம்பிக்கை. இந்தச் சமூக அமைப்புகள்தான் குற்றவாளிகளை உருவாக்குகின்றன. இயல்பிலேயே யாரும் குற்றவாளி ஆவதில்லை இல்லையா? இந்தப் பகுதியை விலாவாரியாக ஆய்வுபண்ணுவேன். யாரும் தொடாத புள்ளிகளைத் தேடிப் போவேன். எழுத்தாளராக இதை விசாரிக்கிறேன்.

உங்கள் மொழியில் உள்ள எள்ளலை எங்கிருந்து பெற்றீர்கள்?

எனக்கு எப்போதும் வழிகாட்டி சார்லி சாப்ளின்தான். ஹிட்லரைப் பற்றி எத்தனையோ படங்கள் வந்துள்ளன. ஆனால், சார்லி சாப்ளினின் ‘கிரேட் டிக்டேட்ட’ரைத் தாண்டி ஒரு படம் இல்லை. ‘தி மாடர்ன் டைம்ஸ்’ முதலாளித்துவத்தின் வன்முறையையும் அதிகாரப்பசியையும் விளக்கும் படம். ஆனால், அது குழந்தைக்குப் புரியும். அதுதான் முக்கியம். என் எழுத்து முறை அப்படி இருக்க வேண்டும் என விரும்புகிறேன். நானும் இயல்பாகவே கொஞ்சம் நக்கல் பிடிச்சவன்தான்.

உங்கள் கதைகளில் செய்யக்கூடிய பரிசோதனைகள் அதன் உள்ளடக்கத்தைப் பாதிக்கும் வாய்ப்புள்ளதா?

அது இரண்டையும் இணைப்பதுதானே வெற்றி. கி.ராஜநாராயணன் சொல்வார், ‘ஏய்… என்று ஒரு சத்தம் கேட்டால் அதிலிருந்து ஒரு கதையை உருவாக்குவேன்’ என்று. என்னால் அப்படி முடியாது. நான் அதற்கு ரொம்ப யோசித்து, அதற்கு ஒரு சட்டகத்தை உருவாக்குவேன். அ.முத்துலிங்கம், ‘எழுதுவது மகிழ்ச்சியைத் தருகிறது’ எனச் சொல்வார். எனக்கு எழுதுவது சிலுவையைச் சுமப்பது மாதிரி. ரொம்ப வேதனையானது.

ஈழப் போராட்டம் குறித்து முழுமையான பதிவுகள் இன்னும் வரவில்லையே…

ஈழப் போராட்டத்தின் பல பகுதிகள் இருண்மையாகத்தான் இருக்கின்றன. புலிகளின் தலைமைகளுக்கு என்ன நடந்தது என்பது யாருக்கும் உறுதியாகத் தெரியாது. இந்தப் போராட்ட வரலாறு இன்னும் இருண்மையாகவும் புதிராகவும்தான் இருக்கிறது. தலைவர்கள் யாரால் கொல்லப்பட்டார்கள் என்பது தெரியவில்லை. அதனால், எங்களுக்குத் தெரிந்த சின்ன சின்ன பாடல்களை எழுதிவருகிறோம். இதெல்லாம் இணையும்போது ஒரு முழுமையான வரலாறு, ‘புனைவு’ என்கிற வடிவில் கட்டப்படும் என நம்புகிறேன். அறப் போராட்டத்தில் இறந்த விடுதலைப் புலிகள் உறுப்பினர் திலீபனைக் குறித்து ஒரு கதை எழுதியிருக்கிறேன்.

திலீபன் தன் உடலை யாழ்ப்பாண மருத்துவக் கல்லூரிக்குக் கொடுத்தார். யாழ்ப்பாணத்தைப் புலிகள் கைவிட்டு வெளியேறும்போது திலீபன் உடலை எடுத்துக்கொண்டு பயணித்திருக்கிறார்கள். 14 ஆண்டுகள் போர்ச் சூழலில் காடுகளுக்குள் அந்த உடலுடன் அலைந்து திரிந்திருக்கிறார்கள். கடைசியாக மே, 2009இல் அதை அடக்கம் செய்தார்கள். இந்த உண்மை இப்போதுதான் தெரியவந்தது. இது மாதிரி சில உண்மைகள் தெரிய வரலாம்; வராமலும் போகலாம்.

‘விடுதலைப் புலி எதிர்ப்பு’ உங்கள் கதைகள் மீதுள்ள ஒரு விமர்சனமாக வைக்கப்படுகிறது…

ஈழத் தமிழ்ப் படைப்பாளிகளில் என்னளவுக்கு யார் இலங்கை அரசாங்கத்தை எதிர்த்து எழுதியிருக்கிறார்? புலி எதிர்ப்பாளன் என என்னை அடையாளப்படுத்த முடியாது. அதிகாரத்தை எதிர்க்கிறேன். ஜனநாயகத்துக்காகக் குரல் கொடுக்கிறேன். ஒரு இடதுசாரி மரபில் வந்த ஆள் நான். இந்தப் பின்னணியில்தான் நீங்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டுச் சூழல் எப்படி இருக்கிறது?

சென்னை இலக்கியத் திருவிழாவில் கலந்துகொண்டேன். அதில் பெண்ணியம், தலித்தியம், புலம்பெயர் தமிழர்கள் எனப் பல விஷயங்களுக்கு இடம் கொடுக்கப்பட்டது. புத்தகக் காட்சியில் பால்புதுமையினருக்குத் தனி அரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பேசாத பல விஷயங்கள் இப்போது பேசப்பட்டுவருகின்றன என்றே நான் கருதுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *