எம்.ஜி.ஆர். கொலைவழக்கு

கதைகள்

கேளுங்கள் பௌசர்! இதுதான் கதை. இந்தக் கதையை நீங்கள் நம்பலாம் அல்லது நம்பாதிருக்கலாம். இந்தக் கதையை நீங்கள் உங்கள் பத்திரிகையில் பிரசுரிப்பதும் பிரசுரிக்காமல் விடுவதும் உங்கள் பிரச்சினை. இந்தக் கதை நடந்து அதிக நாட்களாகவில்லை. நீங்கள் பெரியார் நினைவு விழாவுக்குப் பாரிஸுக்கு வந்துவிட்டுப் போனீர்களே, அதற்கு இரண்டு நாட்கள் கழித்து எனக்கொரு தொலைபேசி அழைப்பு வந்தது.

அன்று கடும் குளிர்நாள். மைனஸ் ஏழு என்றளவில் குளிர் வதைத்தது. நான் வெளியே எங்கேயும் போவதில்லை என்ற முடிவுடன் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய மஹ்முட் தர்வீஷ் பற்றிய விவரணப் படம் ஒன்றை நான் பார்த்துக்கொண்டிருந்தபோது எனது சொந்தக்காரப் பொடியன் நியூட்டன் என்னைத் தொலைபேசியில் அழைத்து “மாமா நாங்கள் டொனாஸைப் பிடிச்சு வைச்சிருக்கிறம். நீங்கள் ஒருக்கா என்ர வீட்ட வரவேணும்” என்றான்.

எனக்கு டொனாஸ் என்றால் யாரென்று தெரியவில்லை. நான் “அது ஆர் டொனாஸ்?” என்று கேட்டேன்.

“அது மதிலேனம் அன்ரியின்ர கடைசி மகன் மாமா, அவன் ஊரில இயக்கத்திலயிருந்து கன சனத்தைக் கொலை செய்திருக்கிறான்” என்றான் நியூட்டன். எனக்கு இப்போது ஞாபகம் வந்தது. நான் தொலைக்காட்சியை அணைத்துவிட்டு உடைகளை அணிந்துகொண்டு வெளியே கிளம்பினேன். நியூட்டனின் வீடு பாரிஸின் புறநகரான மூலோனில் இருந்தது. அந்த வீட்டில் எங்கள் ஊர்ப் பொடியன்கள் ஆறுபேர் சேர்ந்திருக்கிறார்கள். எல்லோருக்குமே இருபதிலிருந்து இருபத்தைந்து வயதுக்குள்தானிருக்கும்.

நான் அவர்கள் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்றபோது நேரம் இரவு ஏழாகியிருந்தது. அங்கிருந்த பொடியன்கள் ஒரு விறுவிறுப்புடன் என்னை வரவேற்றார்கள். அந்த வீட்டின் ஹோலில் நடுவாகயிருந்த ஒரு நாற்காலியில் டொனாஸ் என்ற அந்த அழகிய இளைஞன் கண்களில் மிரட்சியுடன் உட்கார்ந்திருந்தான். அவன் அசாதாரணமான அழகன். நெற்றியிலும் பிடரியிலும் புரளும் அடர்த்தியான தலைமுடியும் உருளைக் கண்களும் ஓங்குதாங்கான உடலும் பவுண் நிறமுமாக அடிவாங்கிய ஒரு பந்தயக் குதிரைபோல அவன் நாற்காலியில் அமர்ந்திருந்தான். அவனின் உதடுகள் வீங்கிக் கிடந்தன. இடப்புறக் கண் அடியால் சிவந்திருந்தது. அவன் என்னைப் பாரத்ததும் எழுந்திருக்க முயன்றான். அவனின் வாயில் ஒரு பரிதாமான இளிப்பு வந்து போயிற்று. அவன் என்னிடம் “மாமா என்னைத் தெரியுதா?” என்று கேட்டுக் கேட்ட வாயை மூட முன்பே நியூட்டன் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். டொனாஸ் என்னைப் பார்த்ததும் நான் தன்னைக் காப்பாற்றக்கூடும் என்று நம்பியிருக்கலாம். நியூட்டனின் அந்த அடியுடன் அவனின் நம்பிக்கை சிதறிப்போயிருக்கும்.

பதினைந்து வருடங்களிற்கு முன்பு நான் வெளிநாட்டுக்கு வரும்போது டொனாஸுக்கு அய்ந்து அல்லது ஆறு வயதிருக்கும். வறுமையாலும் வெயிலாலும் வாடி வதங்கிக் கருவாடாயிருந்த எங்கள் ஊர்ச் சிறுவர்களிடையே இவன் ஒரு தேவதையைப் போல திரிந்துகொண்டிருந்தான். எல்லோருக்கும் அடித்த வெயில்தான் இவனுக்கும் அடித்தது. எல்லோர் வீட்டுக் குழந்தைகளைப் போலவே இவனும் வீசிக் கந்தோரில் கொடுக்கப்படும் திறிபோசா மாவைச் சாப்பிட்டுத்தான் வளர்ந்தான். ஆனாலும் இவன் பனங்குருத்துப் போல இருப்பான். மதிலேனம் மாமி நல்ல அழகி. அவரிலிருந்து அந்தச் சிவப்பும் பொலிவும் இவனுக்கும் கிடைத்திருந்தது. நான் அவனைப் பார்க்கும்போதெல்லாம் அவனைக் கைகளில் தூக்கி முத்தமிடுவேன்.

நான் டொனாஸையே பார்த்துக்கொண்டிருந்தேன். மற்றைய பொடியள் மௌனமாக டொனாஸைச் சுற்றி நின்றிருந்தார்கள். திரைப்படங்களில் குற்றவாளியைப் பெரிய பொலிஸ் விசாரணை செய்யும்போது சின்னப் பொலிசுகள் கைதியைச் சூழ அடிப்பதற்குத் தயாராக நிற்பார்களே அப்படியிருந்தது அந்தக் காட்சி. நான் எழுந்து போய் டொனாஸின் முன்னால் நின்றேன். நானும் அவனுக்கு அடிக்கப் போவதாக அவன் நினைத்திருக்கலாம். அவனின் இமைகள் வெட்டித் தெறிக்க அவனது தேகம் ஒருமுறை நடுங்கி நின்றதை நான் பார்த்தேன். அவன் மெதுவாக “மாமா நான் விரும்பி இயக்கத்துக்குப் போகயில்ல, என்னை வைபோசாய்தான் பிடிச்சு வைச்சிருந்தவங்கள்” என்றான். அவன் அடுத்த வார்த்தை பேசினால் அது அழுகையாகத்தான் இருக்கும் போலயிருந்தது.

அவனுக்குப் பின்னால் நின்றிருந்த பொடியன் ஓங்கி அவனின் பிடரியில் குத்தினான். சாதாரணமாக அந்த அடிக்குப் பொறி கலங்கி டொனாஸ் முகங்குப்புற விழுந்திருக்க வேண்டும். ஆனால் ஒரு சிறிய அசைவுடன் டொனாஸ் அடித்தவனைத் திரும்பிப் பார்த்தான். அடித்தவனுக்கு அவமானமாயிருந்திருக்கும். அடித்தவனிடம் டொனாஸ் “மச்சான் உங்கள் எல்லாரையும் நம்பித்தானே நான் பிராஞ்சுக்கு வந்தனான்” என்றான்.

அல்லைப்பிட்டியிலோ மண்கும்பானிலோ ஒவ்வொரு அனர்த்தமும் கொலையும் கைதும் நடக்கும்போது இயக்கத்தின் பெயர் செய்திகளில் அடிபடும். இயக்கத்திலிருந்த டொனாஸின் பெயரையும் இணைத்தே எங்கள் ஊர்ச் சனங்களிடமிருந்து எங்களுக்குச் செய்திகள் வரும். டொனாஸ் இலங்கையிலிருந்து சென்ற கிழமைதான் பிரான்ஸுக்கு வந்திருக்கிறான். இன்று காலையில் ‘லாச்சப்பல்’ கடைத்தெருவில் நியூட்டன் இவனைக் கண்டிருக்கிறான். பார்த்தவுடனேயே “என்ன மச்சான்? எப்ப வந்தனி?” என்று பாசத்தைக் பொழிந்து தனது வீட்டுக்கு வருமாறு நியூட்டன் கேட்டிருக்கிறான். முதலில் டொனாஸ் நியூட்டனுடன் வர மறுத்திருக்கிறான். நியூட்டன் கொஞ்சம் தந்திரமாக அவனுக்குத் தங்குவதற்கு நல்ல இடமும் நல்ல வேலையும் ஒழுங்குசெய்து தருவதாக நாடகமாடியிருக்கிறான். அதை நம்பி டொனாஸ் நியூட்டனோடு கிளம்பி வந்திருக்கிறான். வரும் வழியிலேயே நியூட்டன் தொலைபேசியில் தன்னுடைய நண்பர்களுக்குத் தான் டொனாஸை அழைத்துவரும் செய்தியைச் சொல்லியிருக்கிறான். டொனாஸ் நியூட்டனின் வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்ததுமே எல்லாப் பொடியன்களுமாகச் சேர்ந்து டொனாஸை அடித்திருக்கிறார்கள். அதற்குப் பின்பு அவனை என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியாததால் எனக்குப் போன் செய்திருக்கிறார்கள்.

நான் டொனாஸிடம் “ரத்தினத்தின்ர கடைக்குள்ள எட்டுப்பேரை நீதான் சுட்டனியாம்?” என்று கேட்டேன்.

“இல்லை மாமா, அது என்ன நடந்ததெண்டால் வேவியற்ற மகள் ஒரு நேவிக்காரனைக் கலியாணம் கட்டியிருக்கிறாள். அதுக்குப் பிறகு அல்லப்பிட்டியில வேவியும் அவற்ற மகளும் வச்சதுதான் சட்டம். அவையளும் ஒரு கடை வைச்சிருந்தவை. பிஸினஸ் பிரச்சினையிலதான் வேவியற்ற மகள் நேவிக்காரன்கள வைச்சு ரத்தினத்தின்ர கடைக்குள்ள சுடப் பண்ணினவள்” என்றான்.

“நேவியோட நீங்களும் போனது எண்டுதானே சொல்லுறாங்கள்?”

“அது எனக்குத் தெரியாது மாமா, நான் அது நடக்கயிக்க நெடுந்தீவில இருந்தனான்.”

“சில்வஸ்டர நீதானே சுட்டனி?”

“இல்லை மாமா அவர் என்ர தொட்டையா. எனக்கு அவர்தான் தலை தொட்டவர். அவர நான் சுடுவனா? அவரைக் கொட்டிதான் சுட்டது” பொடியன் புலிக்குக் ‘கொட்டி’யென்று சொல்கிறான்.

எல்லாக் கேள்விக்கும் டொனாஸ் இல்லை என்ற வார்த்தையுடனேயே பதிலைத் தொடங்கினான் பதிலை முடிக்கும்போது மாமன், மச்சான், சித்தப்பா என்று பதிலை முடித்தான். எங்கள் விசாரணைக்குழு சோர்ந்துவிட்டது. அப்போது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. நியூட்டன் போய்க் கதவைத் திறந்ததும் திறக்காததுமாகக் கதவைத் தள்ளிக்கொண்டு “எங்க அவன், எங்க அவன்” என்று கேட்டுக்கொண்டே திரவியம் உள்ளே ஓடிவந்தார். திரவியத்திற்கு அய்ம்பது வயதுக்கு மேலேயிருக்கும். உயர்ந்த ஒல்லியான பலவீனமான மனிதர். இரண்டு வருடங்களிற்கு முன்பு அவரின் பதினைந்து வயதான மகனைக் கடத்தி வைத்துக்கொண்டு அய்ந்து இலட்சம் ரூபாய்கள் பணயத் தொகையாகக் கேட்டிருக்கிறார்கள். அந்தத் தொகையைத் திரட்டுவதற்காக அந்த மனிதர் பாரிஸ் முழுவதும் ஓடித்திரிந்தார். நான்கூட ஆயிரம் ஈரோக்கள் கடனாகக் கொடுத்திருந்தேன். அவர் பணயத்தொகையை அனுப்ப முன்னமே அவரின் மகன் சடலமாக வேலணைக் கடற்கரையில் கிடந்தான். அந்த ஆயிரம் ஈரோக்களை என்னிடம் திருப்பித் தந்த நாளில் திரவியத்தின் முகத்தில் ஒட்டிக்கிடந்த துயரப் புன்னகை என்னைத் தலைகுனிய வைத்தது. திரவியத்தின் மகனைக் கடத்துவதற்கும் கடத்தினால் வெளிநாட்டிலிருந்து காசு வருமென்றும் டொனாஸ்தான் துப்புகள் கொடுத்ததாக அப்போதே திரவியம் என்னிடம் சொல்லியிருந்தார்.

ஓடிவந்த திரவியம் முதலில் டொனாஸின் முகத்தில் காறி உமிழ்ந்தார். பின்பு அவனின் தலைமுடியை பற்றிப்பிடித்து அவனின் முகத்தில் கைகளால் அறைந்தார். திரவியம் அவனின் சட்டையைப் பற்றி இழுத்தபோது அவன் நாற்காலியிலிருந்து முன்னே விழுந்தான். அவனை இழுத்து விழுத்துமளவிற்குத் திரவியம் பலசாலியல்ல. அவர் அடிப்பதற்கும் உதைப்பதற்கும் விழுத்துவதற்கும் தோதாகத் தன்னுடைய தேகத்தை டெனாஸ் அப்போது வளைத்துக் கொடுத்துக்கொண்டிருப்பதாகவே எனக்குப்பட்டது. நான் திரவியத்தைத் தடுக்க முயற்சித்தபோது திரவியம் அழத் தொடங்கினார். பின்பு தளர்நடையுடன் போய்க் கைகளைக் கழுவிவிட்டு வந்தார். பின் அமைதியாக ஒரு நாற்காலியில் உட்கார்ந்தார். அதற்குப் பின்பு அவர் ஒரு வார்த்தை பேசவில்லை. அவர் அங்கே வரும்போதே என்ன செய்ய வேண்டும் என ஒரு நிகழ்ச்சி நிரலைத் தயாரித்துக்கொண்டுவந்து அதன்படி நிகழ்ச்சிகளை நடத்தி முடித்ததும் திருப்பதியாக அமர்ந்திருப்பது போலத் தோன்றியது.

டொனாஸ் தரையில் மல்லாக்கக் கிடந்தான். அவனது ஆடைகள் தும்பு தும்பாகக் கிழிந்திருந்தன. உண்மையில் அவனை அடிக்கிறேன் என்ற பெயரில் திரவியம் அவனது ஆடைகளைத்தான் கிழித்திருந்தார். டொனாஸ் மெதுவாக எழுந்து தலையைக் குனிந்தவாறே தரையில் சப்பணம் கட்டி அமர்ந்தான். நான் அவனிடம் “இப்ப நீ என்ன சொல்றாய்? உன்ர முகத்தைப் பார்த்தாலே ஆயிரம்பேரைக் கொலை செய்தவன்ர முகம் மாதிரி இருக்கு, நீ ஒருத்தரையும் கொலை செய்ய இல்லையோ?” என்று கேட்டேன்.

டொனாஸ் நிமிர்ந்து என்னைப் பார்த்தான். பின்பு கண்களைத் தாழ்த்திக்கொண்டு “மாமா நான் உண்மையச் சொல்லுறன், அந்தோனியார் சத்தியமா நான் எம்.ஜி.ஆரை மட்டும்தான் கொலை செய்தனான், வேற எதிலும் எனக்குச் சம்மந்தமில்லை” என்றான்.

அங்கிருந்த நாங்கள் எல்லோருமே அப்போது திடுக்கிட்டோம். ஏனென்றால் எம்.ஜி.ஆர் தற்கொலை செய்ததாகத்தான் எங்களுக்குச் செய்தி வந்திருந்தது. அவர் தலையில் தொப்பியுடனும் கண்களில் கறுப்புக் கண்ணாடியுடனும்தான் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தாராம்.

2

பழைய கதை சொல்கிறேன் கேளுங்கள் பௌசர்! எங்கள் ஊருக்கு அல்லைப்பிட்டி என்று பெயர் வைத்ததற்குப் பதிலாக எம்.ஜி.ஆர்.பட்டி என்று பெயர் வைத்திருக்கலாம். அப்போது எங்கள் கிராமம் எம்.ஜி.ஆர். ரசிகர்களாலும் பக்தர்களாலும் நிரம்பியிருந்தது. ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள்:

எனது அண்ணனுக்குப் பதினைந்து வயதிருக்கும்போது வீட்டை விட்டு ஓடிப்போனான். அப்போது எங்கள் கிராமத்துச் சிறுவர்களுக்கு இரண்டு பொழுதுபோக்குகள்தான் வழமையாயிருந்தன. ஒன்று, சூள் கொளுத்தி நண்டு பிடிக்கப்போவது. இரண்டாவது, வீட்டை விட்டு ஓடிப்போவது. சினிமா பார்ப்பது என்பது எங்களைப் பொறுத்தவரை பொழுதுபோக்கு என்ற வகைக்குள் அடங்காது. அது வாழ்க்கை முறைமை, கடமை, இலட்சியம்.

வீட்டை விட்டு ஓடிப்போவதில் மூன்று முக்கியமான படிகள் இருந்தன. முதலாவதாக வீட்டிலிருந்து கொஞ்சம் பணம் திருடவேண்டும். வீட்டில் எப்போது பணம் திருட வாய்ப்பிருக்கிறதோ அதுவே ஓடிப்போவதற்கான நாளாக அமையும். இரண்டாவது படியாக யாழப்பாணம் போய் இரவுவரைக்கும் தொடர்ச்சியாகப் படம் பார்க்க வேண்டும். மூன்றாவது படியாக இரவு ரயிலைப் பிடித்துக் கொழும்புக்குப் போக வேண்டும். கொழும்பில் நான்காம் குறுக்குத் தெருவிலோ, அய்ந்தாம் குறுக்குத் தெருவிலோ அரிசிக் கடைகளில் வேலை கிடைக்கும்.

வீட்டை விட்டு ஓடிப்போன எனது அண்ணன் இரண்டாவது படியை நிறைவேற்றுவதற்காகப் படம் பார்க்கப் போயிருக்கிறான். அன்று அவன் எம்.ஜி.ஆரின் ‘அன்னமிட்ட கை’ படம் பார்த்திருக்கிறான். படத்தைப் பாரத்ததும் அண்ணனுக்குள் தாய்ப்பாசம் பொங்கிவிட்டது. அவன் கொழும்புக்குப் போகாமல் அம்மாவைத் தேடித் திரும்பவும் வீட்டுக்கே வந்துவிட்டான்.

ஒரு ஊரென்றால் அங்கே எம்.ஜி.ஆர் ரசிகர்களும் சிவாஜி கணேசன் ரசிகர்களும் ஜெய்சங்கர் ரசிகர்களும் கலந்திருப்பதுதானே வழமை. ஆனால் அந்த வழக்கமெல்லாம் எங்கள் கிராமத்தில் கிடையாது. சிவாஜி கிவாஜி என்று யாராவது முணுமுணுத்தால் நாங்கள் முளையிலேயே அந்தக் குரலைக் கிள்ளியெறிவதுதான் வழக்கம். எம்.ஜி.ஆரைத் தவிர வேறு எவருக்கும் எங்கள் ஊரில் ரசிகர்கள் இருக்கக் கூடாது என்பது எங்கள் கொள்கை. ஏக பிரநிதித்துவக் கொள்கை. 1979ல் யாழ்ப்பாணத்தில் தொலைக்காட்சியும் டெக்கும் அறிமுகமாகி கிராமங்கள் தோறும் திருவிழாவாக அது கொண்டாடப்பட்டபோது ‘அண்ணன் ஒரு கோயில்’ என்ற சிவாஜியின் படமே முதன் முதலாக எல்லா இடங்களிலும் காண்பிக்கப்பட்டது. அப்போது வேறு படப் பிரதிகள் புழக்கத்திலில்லை. நாங்கள் காத்திருந்து ‘மீனவ நண்பன்’ என்ற எம்.ஜி.ஆரின் படத்துடன்தான் மாதா கோயில் பெருநாளில் எங்கள் ஊரில் தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தினோம். அப்போது காலையில் எழுந்ததும் உத்தரியமாதா, அந்தோனியார் இவர்களுடன் சேர்த்து எம்.ஜி.ஆரையும் வணங்கும் பழக்கம் எனக்கிருந்தது.

அப்போதெல்லாம் இந்தியாவில் படம் வெளியாகி நான்கு, அய்ந்து வருடங்களுக்குப் பிறகுதான் இலங்கையில் படம் வெளியாகும். அப்படியும் எம். ஜி. ஆரின் ‘சங்கே முழங்கு’, ‘பட்டிக்காட்டு பொன்னையா’ என்ற இருபடங்களும் கடைசிவரை இலங்கையில் வெளியாகவேயில்லை. படம் வெளியாவதற்குச் சில மாதங்களுக்கு முன்னமே தியேட்டரில் படத்தின் சுவரொட்டியும் படத்தின் நான்கைந்து ஸ்டில்களும் ஒட்டப்படடிருக்கும்; அந்த ஸ்டில்களையும் சுவரொட்டியையும் வைத்தே நான் எனக்குள் அந்தப் படத்தைக் கற்பனை செய்துகொள்வேன். அப்போது படக்கதை சொல்வது என்றொரு அருமையான பழக்கமிருந்தது. வெறும் நான்கு ஸ்டில்களைப் பார்த்ததை வைத்துக்கொண்டே நான் என் பள்ளிக்கூடச் சிநேகிதர்களுக்கு முழுநீளப் படக்கதையும் சொல்வேன். படம் வெளியாகும்போது பார்த்தால் நான் சொன்ன கதை கிடடத்தட்டச் சரியாகவேயிருக்கும். ‘ராமன் தேடிய சீதை’ மட்டும்தான் கொஞ்சம் மிஸ்ஸாகி விட்டது. சுவரொட்டியிலும் ஸ்டில்களிலும் எஸ்.ஏ.அசோகன் சக்கரநாற்காலியில் உட்கார்ந்திருந்ததால் அசோகனுடன் எம்.ஜி.ஆர். சண்டையிடும்போது எம்.ஜி.ஆரும் சக்கரநாற்காலியில் அமர்ந்துதான் சண்டையிடுவார் என நான் நினைத்திருந்தேன். இதற்கு ஒரு முன்னுதாரணமும் இருந்தது. ‘அடிமைப் பெண்’ படத்தில் ஒரு காலில்லாத அசோகனுடன் எம்.ஜி.ஆரும் ஒருகாலைக் கட்டிக்கொண்டுதான் சண்டையிடுவார். ஆனால் இந்தப்படத்தில் சக்கரநாற்காலியில் உட்கார்ந்திருந்த அசோகன் கடைசிக் கட்டத்தில் சக்கர நாற்காலியிலிருந்து துள்ளியெழுந்து இருகால்களையும் ஊன்றி நின்று சண்டை போடுவார் என்பதை நான் எதிர்பார்த்திருக்கவில்லை.

‘ஒளிவிளக்கு’ இரண்டாவது தடவையாக ராஜா தியேட்டரில் வெளியாகி நூறு நாட்களைக் கடந்தபோது நாங்கள் எங்களது கிராமத்தின் சார்பில் தியேட்டருக்கு முன்பு கஞ்சி காய்ச்சி ரசிகர்களுக்கு வழங்கினோம். ‘நாளைநமதே’ ராணி தியேட்டரில் தொடர்ந்து 140 காட்சிகள் ஹவுஸ்புல்லாகக் காண்பிக்கப்பட்டது. இது அகில இலங்கை வசூல் சாதனை. அப்போது எம்.ஜி.ஆரின் படங்களுக்குக் காட்சி நேரம் நிர்ணயிக்கப்படுவதில்லை. கொழும்பிலிருந்து ரயிலில் படப் பெட்டி வந்தவுடனேயே அதிகாலையிலேயே காட்சி தொடங்கிவிடும். இரவு முழுவதும் நாங்கள் தியேட்டருக்கு முன்புதான் படுத்துக்கிடப்போம். எம்.ஜி.ஆரின் புதிய பட விளம்பரங்களுக்குக் கீழே ‘கொட்டகை நிறைந்ததும் காட்சிகள் ஆரம்பமாகும், பாஸ்கள் சலுகைகள் ரத்து’ என்ற வரிகள் தவறாமல் இடம்பெறும்.

எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்குப் புகழ்பெற்றிருந்த குருநகரில் கூட வாசகசாலைக்கு ‘அண்ணா சனசமூக நியைம் ‘என்றே பெயர் வைத்திருந்தார்கள். ஆனால் எங்கள் ஊர் வாசகசாலைக்கு நாங்கள் ‘மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சனசமூக நிலையம்’ என்று கட்டன் ரைட்டாக பெயர் வைத்திருந்தோம். மட்டக்களப்பில் புயலால் ஏற்பட்ட சேதத்துக்கு நிவாரணமாக அப்போது எம்.ஜி.ஆர் பத்து இலட்சம் ரூபாய்கள் வழங்கியதற்கு நன்றி தெரிவிப்பதற்காக மனோகரா தியேட்டரில் பத்து நாட்களுக்கு எம்.ஜி.ஆரின் பத்துப் படங்களை அரை ரிக்கட்டுக்குக் காண்பித்தார்கள். எம்.ஜி.ஆர். மட்டக்களப்புக்கு நிதி வழங்கியதையொட்டி நாங்களும் எங்கள் வாசகசாலையின் பெயரிலிருந்த ‘மக்கள் திலகம்’ என்ற பட்டத்தை நீக்கிவிட்டு ‘பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் சனசமூக நிலையம்’ எனப் புதிதாகப் பெயரிட்டோம். அந்த வாசகசாலைக்கும் நாங்கள் நடத்திவந்த எம்.ஜி.ஆர் கலாமன்றத்துக்கும் பரிமளகாந்தன் தான் தலைவர்.

எம்.ஜி.ஆர் கலாமன்றத்திலிருந்த நாங்கள் எல்லோரும் விடலைகளாகவேயிருந்தோம். பரிமளகாந்தன் மட்டுமே எங்களில் வயதில் மூத்தவர். பரிமளகாந்தனுக்கு அப்போதே முப்பது வயதுக்கு மேலிருக்கும். எங்கள் ஊர் கிராமசபைக் கட்டடத்தில் அவர் இரவு நேரக் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். எம்.ஜி.ஆர் போலவே பரிமளகாந்தனுக்கும் குழந்தைகள் கிடையாது. பரிமளகாந்தன் எம்.ஜி. ஆருக்கு ரசிகர் என்றால் பரிமளகாந்தனின் மனைவி பரிமளகாந்தனுக்கு ரசிகை. மாலைநேரங்களில் இரண்டுபேருமாகச் சோடிபோட்டுக்கொண்டு கையில் தேநீர் குடுவையுடன் கடற்கரைக்குப் போய் மணலில் உட்கார்ந்திருப்பார்கள். கடற்கரைக்குப் போய்க் காற்று வாங்கும் பழக்கமெல்லாம் எங்கள் ஊரில் அப்போதும் கிடையாது, இப்போதும் கிடையாது. இவர்கள் ஏன் கடற்கரையில் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று எங்கள் ஊர்ச் சனங்களுக்குக் கடைசிவரை விளங்கவேயில்லை. பரிமளகாந்தனின் வீட்டில் பக்கத்துக்குப் பக்கம் எம்.ஜி.ஆரின் படங்கள் மாட்டப்பட்டிருக்கும். எல்லாப் படங்களுக்கும் நடுவாக அறிஞர் அண்ணாவின் படமும் மாட்டப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆர் படங்களின் பாடல் புத்தகங்கள் அழகாக பைன்ட் செய்யப்பட்டு அவரிடமிருந்தன.

எங்கள் எம்.ஜி.ஆர். கலாமன்றத்தால் ‘காதலா கடமையா’, ‘விமலாவின் வாழ்வு’, ‘பெண்ணின் பெருமை’, ‘இரு துருவங்கள் இணைந்தபோது’ போன்ற நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. எல்லா நாடகங்களிற்கும் பரிமளகாந்தன்தான் கதை, வசனம், டைரக்சன். ‘பெண்ணின் பெருமை’ நாடகத்தில் நீதிதேவதை பாத்திரத்தில் பரிமளகாந்தன் தன் மனைவியை நடிக்க வைத்தார். எங்கள் கிராமத்திலெல்லாம் கல்யாணமான ஒரு பெண் மேடையில் ஏறி நடிப்பதைக் கற்பனை செய்யவே முடியாது. ஆனால் பரிமளகாந்தனின் மனைவி நடித்தார்.

நாடக விழா கேள்விப்பட்டிருப்பீர்கள். நாடகம் போடுவதையே விழாவாகக் கொண்டாடுவதை நீங்கள் எங்கள் ஊரில்தான் பார்க்க முடியும். பரிமளகாந்தன் நாடகம் எழுதும்போதே எங்கள் மன்றத்திலுள்ள எல்லோருக்கும் பாத்திரங்களை உருவாக்கித்தான் எழுதுவார். ஒத்திகை அவர் வீட்டில்தான் நடக்கும். அவரின் மனைவி கணவரின் முகத்தையே பூரிப்போடு பார்த்தவாறிருப்பார்.

அநேகமாக மாதா கோயில் பெருநாள் அல்லது அம்மன் கோயில் திருவிழா இரவில் நாடகம் மேடையேறும். நாடகத்தில் நடிப்பவர்களின் வீட்டில் அன்று பெருவிழாவே நடக்கும். “எங்கிட மகன் நாடகம் நடிக்கிறான், நீங்கள் கட்டாயம் வரவேணும்” என்று அயலூர்களிலுள்ள உறவினர்களுக்கெல்லாம் அழைப்புப் போகும். நாடகத்தின் ஒரு பாத்திரம் மேடையில் தோன்றும்போது அந்த நடிகனின் உறவினர்கள் பட்டாசு வெடிப்பார்கள். சரவெடி தூள் பறக்கும். மேடையில் மன்னாதி மன்னன் தோன்றும்போதும் வெடிதான், வில்லன் தோன்றும்போதும் வெடிதான், துறவி தோன்றும்போதும் வெடிதான். அநேகமாக நாடகத்தின் கடைசிக் காட்சியில் பொலிஸாக நடிக்கத்தான் எங்கள் பொடியன்கள் விருப்பப்படுவார்கள். பொலிஸ் யூனிபோர்மும் சப்பாத்துகளும் அணிந்து மிடுக்காக நடிப்பதில் அவர்களுக்கு ஒரு விருப்பம். ஒத்திகை தொடங்குவதற்கு முன்பே அவர்கள் சீருடைகளைத் தயார் செய்து விடுவார்கள். அநேகமாக எங்கள் ஊர் தபால்காரரின் மற்றும் நுளம்புக்கு மருந்தடிப்பவரின் காக்கிக் காற்சட்டைகளையும் மேற்சட்டைகளையுமே அவர்கள் இரவல் வாங்குவார்கள். ஒத்திகைக்கு வரும்போதே காக்கிச் சீருடை தரித்துக் கையில் பெற்றன் பொல்லுகளுடன் மிடுக்காக வருவார்கள். நாடகம் நடத்தும் நாள்வரை அவர்கள் அந்த உடைகளுடனேயே ஊருக்குள் சுற்றிக்கொண்டிருப்பார்கள்.

ஒருமுறை எனக்கு நீதிக்காகப் போராடி பொலிஸாரிடம் அடிவாங்கும் தியாகி பாத்திரம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் என் அப்பாவுக்கு நான் அந்தப் பாத்திரத்தில் நடித்தது பிடிக்கவில்லை. என்னை அடிக்கும் பொலிஸ் பாத்திரத்தில் நடித்தவன் அய்ந்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தியிருந்தான். நான் அப்போது ஒன்பதாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன். என் அப்பா “அவன் அஞ்சாம் வகுப்புப் படிச்சவன் அடிக்கிறான், நீ படிச்ச முட்டாள் அடிவாங்கிறாய், நீயெல்லோ பொலிசுக்கு நடிச்சிருக்க வேணும், வேலணை சென்றல் ஸ்கூலில என்னதான் படிக்கிறியோ” என்று சலித்துக்கொண்டார்.

நாடகம் நடக்கும் நாளன்று அங்கே இணக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மேடையாலும் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் திரைச்சீலைகளாலும் இறுதி நேரத்தில் கவரப்படும் மன்றத்தில் இல்லாத பொடியன்கள் தங்களுக்கும் அன்றிரவு நாடகத்தில் நடிக்க வாய்ப்பு வேண்டுமெனப் பரிமளகாந்தனிடம் கேட்பதுண்டு. உடனேயே பரிமளகாந்தன் நாடகத்தில் அவர்களுக்கு ஒரு சிறிய பாத்திரமும் ஒன்றிரண்டு வசனங்களும் கொடுத்துக் கெட்டிக்காரத்தனமாக அவர்களையும் நாடகத்தில் நுழைத்துவிடுவார். அது அநேகமாக மேடையில் சிக்கலில்தான் முடியும். நாடகம் குழம்புகிறதே என நாங்கள் துடிப்போம். ஆனால் பரிமளகாந்தனுக்கு நாடகம் முக்கியமில்லை. அதில் நடிப்பவர்களின் மகிழ்ச்சியே அவருக்கு முக்கியம். அவருக்குக் கோபமே வராது.

பரிமளகாந்தனுக்கு ஒருமுறை கோபம் வந்தபோது அது அடிதடியில்தான் முடிந்தது. அந்தச் சண்டை வாசகசாலையில்தான் நடந்தது. வாசகசாலைக்கு முன்னால் பரிமளகாந்தனுடன் நாங்கள் நின்றிருந்தபோது மத்தியாஸ் கொஞ்சம் வெறியில் அந்தப்பக்கம் வந்தான். மத்தியாஸ் கொஞ்சம் சண்டியன். அவனுக்கு என்ன கோபமோ எங்களைப் பார்த்துக் காறித் துப்பிவிட்டு வாசகசாலைக்குள் போனவன் அங்கேயிருந்த வாங்கில் நீட்டி நிமிர்ந்து படுத்தவிட்டான். பரிமளகாந்தன் உள்ளே போய் அவனின் தோளில் தட்டி “இஞ்ச படுக்கக் கூடாது, வெளிய போ!” என்றார். மத்தியாஸ் “ஏன் படுக்கக் கூடாது” என்றான். அவனின் கேள்வி நியாயமான கேள்விதான். எங்கள் வாசகசாலையில் ஒரு எம்.ஜி.ஆர். படத்தையும் ஒரு மேசையையும் இரண்டு வாங்குகளையும் தவிர வேறெதுவுமில்லை. முன்னொரு காலத்தில் ‘ஈழநாடு’ பத்திரிகை மட்டும் வாசகசாலையில் போடப்பட்டது. பின்பு பணமில்லாததால் அதுவும் நிறுத்தப்பட்டுவிட்டது. நாங்கள் எங்கள் கலாமன்றக் கூட்டங்களை நடத்தவும் ஒரு கௌரவத்திற்காகவும்தான் அந்த வாசகசாலையை நடத்திவந்தோம். வாசகசாலையின் கௌரவத்தை மிகக் கண்டிப்புடன் பரிமளகாந்தன் காப்பாற்றி வந்தார். எங்களைக் அங்கே கடதாசி விளையாடக்கூட அவர் அனுமதிப்பதில்லை.

வாசகசாலையிலிருந்து வெளியே வந்து மத்தியாஸ் காலைத் தூக்கி வாசகசாலை வேலியை உதைத்தான். ஒரு உதையில் வேலி பாட்டில் பாறி விழுந்தது. பரிமளகாந்தன் அமைதியாகக் கைகளைக் கட்டியவாறே மத்தியாஸைப் பார்த்து அங்கிருந்து போய்விடும்படி சொன்னார். மத்தியாஸ் அங்கிருந்து போவதாயில்லை. அவன் பரிமளகாந்தனை ‘மலடன்’ என்று ஏசினான். பரிமளகாந்தன் அமைதியாகக் கையைக் கட்டிக்கொண்டு நிதானமாக மத்தியாசுக்கு அருகில் வந்து அவனுக்குப் புத்திமதி சொன்னார். “நீதிக்கு முன்பு அநீதி ஜெயிக்காது, “அநீதிக்கு முன்பு நீதி தோற்காது”, “என் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு” என்று அவர் சொன்னதெல்லாம் எம்.ஜி.ஆர். பட வசனங்களாகவேயிருந்தன. மத்தியாஸ் திடீரெனப் பரிமளகாந்தனின் கன்னத்தில் ஒரு அறைவிட்டான். நாங்கள் பொடியன்கள் கொதித்துப்போய் மத்தியாஸை நோக்கிப் பாய்ந்தோம். பரிமளகாந்தன் தனது வலது கையால் அடிபட்ட கன்னத்தைத் தடவிக் கொடுத்தவாறே இடது கையால் எங்களைத் தடுத்து நிறுத்திவிட்டு “இது எனக்கும் மத்தியாசுக்குமான பிரச்சினை நீங்கள் தலையிட வேண்டாம்” என்றார். இதுவும் எம்.ஜி.ஆர். பாணிதான். இதைக் கேட்டவுடன் மத்தியாஸ் துள்ளி இன்னொரு அறைவிட்டான். பரிமளகாந்தன் அடுத்த கன்னத்தைத் தடவிக் கொடுத்தார். அவரின் கண்களில் கோபம் கொப்பளித்தது. மூன்றாவது அடியையும் மத்தியாஸ் அடித்தபோது பரிமளகாந்தன் பொறிகலங்கி மல்லாக்க நிலத்தில் விழுந்தார். அதற்குமேல் எங்களால் பொறுக்க முடியவில்லை. எல்லாப் பொடியன்களும் ஒருசேரப் பாய்ந்து மத்தியாஸைக் கும்மிவிட்டோம். அடிப்பதை நாங்கள் நிறுத்தினால் மத்தியாஸ் எங்களைத் திரும்ப அடிப்பான் என்ற பயத்திலேயே நாங்கள் நிறுத்தாமல் அடித்தோம். கடைசியில் தன்னை விட்டுவிடுமாறு மத்தியாஸ் கெஞ்சியபோதுதான் நாங்கள் அடிப்பதை நிறுத்தினோம். எங்கள் அடியின் வேகத்தில் மத்தியாஸ் ஒட்டகப்புலத்தாரிடம் போய் புக்கை கட்டினான் என்று கேள்விப்படடோம். அவனின் மனைவி எங்கள் வாசிகசாலைக்கு வந்து நாங்களும் எங்கள் மன்றமும் தொலைய வேண்டுமென மண்ணள்ளி எறிந்து சாபமிட்டாள்.

அவளின் சாபம் பலிக்கத் தொடங்கியது. அப்போது யாழ்ப்பாணத்தில் ‘கிழக்கே போகும் ரயில்’ படம் ஓடிக்கொண்டிருந்தது. எங்கள் ஊர் குமர்ப்பெண் ஒருத்தி தனது சிநேகிதிகளுடன் சேர்ந்து அந்தப் படத்திற்குப் போவதற்கு அனுமதி கேட்டபோது அவளின் தாயார் அனுமதி மறுத்துவிட்டார். அந்தப் பெண் உடனே பொலிடோல் குடித்துச் செத்தப்போனாள். அந்தப் படம் ஓடிய தியேட்டரில் ‘இந்தப் படத்தைக் காண முடியாததால் நஞ்சு குடித்துக் காலமான அல்லைப்பிட்டி சூரியகலாவுக்கு இந்தப் படம் சமர்ப்பணம்’ என்று ஸ்லைட் போட்டுவிட்டே காட்சியைத் தொடங்கினார்கள். மித்திரன் பேப்பரில் தலைப்புச் செய்தியாக அவளின் சாவு எழுதப்பட்டது. இதற்குப் பிறகு ஊருக்குள் தொலைக்காட்சியில் படம் ஓடுவதையோ நாங்கள் கலாமன்றம் நடத்துவதையோ சனங்கள் கொஞ்சம் கடுப்புடன்தான் பாரத்தார்கள். அடிமேல் விழுந்த அடியாகப் பரிமளகாந்தனின் மனைவியும் திடீரென இறந்து போனார்.அம்மாள் வருத்தம் என்று படுத்தவர் செங்கமாரி மங்காமாரியாக்கி இறந்துபோனார். பரிமளகாந்தன் தனித்துப் போனார். அவர் தனியாக வீட்டிலிருந்து எம்.ஜி.ஆரின் போட்டோவோடு பேசிக்கொண்டிருப்பதைப் பொடியன்கள் பார்த்திருக்கிறார்கள்.

எங்கள் ஊரில் நடந்த முதலாவது இயக்கக் கூட்டம் எங்கள் வாசகசாலைக்குள்தான் நடந்தது. அப்போதெல்லாம் இயக்கக் கூட்டங்கள் திடீரெனத்தான் ஏற்பாடு செய்யப்படும். கூட்டத்துக்குப் பதினைந்து இருபதுபேர்கள்தான் வருவார்கள். அவ்வளவுபேரும் இளந் தரவளிகளாக இருப்பார்கள். அன்றைய கூட்டத்திற்கு இரண்டு இயக்க இளைஞர்கள் வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவரின் கையில் ஒரு பையிருந்தது. அந்தப் பைக்குள்தான் துவக்கு இருக்கும் என நாங்கள் இரகசியமாகப் பேசிக்கொண்டோம். ஆனால் அந்தப் பையை அவர் திறந்தபோது அதற்குள் பத்திரிகைகளும் தமிழீழப் படம் அச்சடிக்கப்பட்ட 1984ம் ஆண்டுக்கான கலண்டர்களுமேயிருந்தன. அன்று கூட்டத்தில் அந்த இளைஞர்கள் பேசியதில் முக்கால்வாசி எங்களுக்கு விளங்கவில்லை. ஆனால் அவர்கள் பேசி முடித்தபின்பு அவர்களில் எங்களுக்கு மிகப்பெரிய மரியாதை வந்தது. கூட்டத்திற்கு பரிமளகாந்தன் வரவில்லை. கூட்டம் முடிந்ததும் வந்திருந்த இரண்டு இயக்கப் பொடியன்களும் ‘பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். சனசமூக நிலையம்’ என்றிருக்கும் வாசகசாலையின் பெயரை மாற்றியமைப்பது நல்லது என்றார்கள். எங்களின் மதிப்புக்குரிய அந்த இளைஞர்களுக்கு என்ன பதிலைச் சொல்வது எனத் தெரியாமல் நாங்கள் தடுமாறினோம். நாங்கள் அவர்களைச் சற்றுக் காத்திருக்குமாறு கூறிவிட்டு பரிமளகாந்தனை அழைத்துவர ஆள் அனுப்பினோம்.

பரிமளகாந்தன் தூய வெள்ளை வேட்டியும் வெள்ளைச் சட்டையும் தோளில் சால்வையும் அணிந்து வரும்போதே அந்த இளைஞர்களை நோக்கிக் கைகளைத் தனது முகத்துக்கு நேராகக் கூப்பிக் கும்பிட்டவாறே வந்தார். அந்த இளைஞர்கள் தமிழ்ப்பற்று, விடுதலை, புரட்சி இவைகளைக் குறிக்கும் வகையில் வாசகசாலையின் பெயரை மாற்றலாம் என்றார்கள். அந்தப் பண்புகள் ஒன்றாகக் குவிந்திருக்கும் முன்றெழுத்து மந்திரம்தான் எம்.ஜி. ஆர். என்றார் பரிமளகாந்தன். அந்த இளைஞர்கள் கொஞ்சம் யோசித்துவிட்டு வாசகசாலையின் பெயரை ‘புதியபூமி சனசமூக நிலையம்’ என மாற்றலாம் என்றார்கள். அதுவும் எம்.ஜி.ஆர் நடித்த படம்தான் என்றார் பரிமளகாந்தன். கடைசிவரை வாசகசாலையின் பெயரை மாற்றப் பரிமளகாந்தன் மறுத்துவிட்டார். எங்களாலும் இயக்க இளைஞர்கள் தங்களது உடல்களில் எங்கே துப்பாக்கிகளை ஒளித்து வைத்திருந்தார்கள் என்பதைக் கடைசிவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

அடுத்தடுத்த வருடங்களில் எம்.ஜி.ஆர் கலாமன்றத்தின் பாதிப்பொடியன்கள் இயக்கத்துக்கென்றும் பாதிப்பொடியன்கள் வெளிநாடுகளுக்கென்றும் தெறிக்கத் தொடங்கினார்கள். வெளிநாடுகளுக்குப் போனவர்கள் சவூதி அரேபியா, அய்ரோப்பா, கனடா என்று பல நாடுகளுக்கும் போனார்கள். ஆனால் இயக்கத்துக்குப் போன நாங்கள் அப்படியே ‘செட்’டாக ஒரு இயக்கத்துக்குத்தான் போனோம். எங்கள் ஊரில் நாங்கள்தான் கடைசி எம்.ஜி.ஆர். ரசிகர்களாக இருந்தோம். இரண்டு வருடங்கள் கழித்து நான் ஊருக்குத் திரும்பிவந்தபோது எங்கள் ஊரில் டி.ராஜேந்தருக்கும் கராட்டி மணிக்கும்தான் அதிகமான ரசிகர்கள் இருந்தார்கள். அப்போது ‘தங்கக் கோப்பை’, ‘அதிசயப் பிறவிகள்’ போன்ற படங்களில் நடித்துக் கராட்டி மணி பிரபலமாயிருந்தார். ஊருக்குள் தொலைக்காட்சியில் படம் போட்டு இந்த ரசிகர்கள் கூடியிருந்து பார்க்கும்போது நாங்கள் அந்த இடத்தைச் சுற்றி வளைத்து அவர்களைப் பிடித்துச் சென்றி பார்க்கக் கூட்டிச் சென்றோம்.

எங்களுக்கு ஒரு காரியமாகத் தீவுப்பகுதியின் நிலவியல் வரைபடம் தேவைப்பட்டது. அதை எங்கே எடுக்கலாம் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஒரு பொடியன் அது கிராமசபை அலுவலகத்தில் இருக்கலாம் என்றான். கிராமசபைக்குப் புதிய ஓவிசியர் வந்திருந்தார். அவர் வெளியூரிலிருந்து எங்கள் ஊருக்கு வேலைக்கு வந்து போய்க்கொண்டிருந்தார். நான் கிராமசபை அலுவலக்திற்குப் போய் இன்ன இன்ன மாதிரி நான் இன்ன இயக்கம் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு எங்களுக்கு அவசரமாகத் தீவுப்பகுதியின் நிலவியல் வரைபடம் தேவையாயிருக்கிறது என்றேன். ஓவிசியர் முதலில் முழித்தார். பின்பு மென்று விழுங்கி அது தன்னிடமில்லை என்றார். அவரின் முகத்திலிருந்தே அங்கே நிலவியல் படம் இருக்கிறது என்று நான் விளங்கிக்கொண்டேன்.

இரவு, நாங்கள் கிராமசபைக் கட்டடத்துக்குச் சென்றோம். கட்டடத்தின் வாசலில் இரவுக் காவலாளி பரிமளகாந்தன் தூங்கிக்கொண்டிருந்தார். அவரைத் தட்டியெழுப்பி ஒரு பொடியன் கட்டத்தின் சாவியைக் கேட்டான். பரிமளகாந்தன் கையைக் கட்டிக்கொண்டு உதட்டைக் கடித்துக்கொண்டு தலையைச் சாய்த்துப் பார்த்தார். அது அச்சொட்டான எம்.ஜி.ஆர். பார்வை. நான் சிரித்தக்கொண்டே கையை நீட்டினேன். பரிமளகாந்தன் என்னை முறைத்துப் பார்த்துவிட்டு “நீ கொள்ளையடிக்கவும் தொடங்கிற்றியா?” எனக் கேட்டார். நான் “அண்ணே இது மலைக்கள்ளன் படம்மாதிரி” என்றேன். அரைமணிநேரம் பேசிய பின்பு அவர் சாவியைத் தந்தார். நான் கதவைத் திறந்து உள்ளே போனேன். உள்ளே அலுமாரி பூட்டப்பட்டிருந்தது. அலுமாரியை உடைக்க வேண்டியதாயிருந்தது. அங்கே நிலவியல் வரைபடம் இருந்தது.

1987 நத்தாருக்கு முதல்நாள் எம்.ஜி.ஆர் இறந்துபோனார். எம்.ஜி.ஆர் இறந்த செய்தி வந்ததுமே பரிமளகாந்தன் மொட்டையடித்துக்கொண்டார். என்னைத் தெருவில் கண்டபோது என்னிடம் “அவர் இப்படித் திடீரெண்டு போவார் எண்டு நான் எதிர்பார்க்கயில்ல” என்றார். மொட்டைத் தலையை மறைப்பதற்காக பரிமளகாந்தன் தொப்பியணியத் தொடங்கினார். அது எம்.ஜி.ஆர் அணியும் அதேபாணியிலான வெள்ளைத் தொப்பி. சில நாட்கள் கழித்து அவர் கறுப்புக் கண்ணாடியும் அணியத் தொடங்கினார். இப்படித்தான் அவரை ஊருக்குள் பொடியன்கள் எம்.ஜி.ஆர் என்று அழைக்கத் தொடங்கினார்கள். எங்கள் ஊரில் மலேரியாக் காய்ச்சலும் பட்டப் பெயரும் டக்கெனப் பரவும்.

நான் பிரான்சுக்கு வந்ததற்குப் பிறகும் பரிமளகாந்தனைப் பற்றி அவ்வப்போது கேள்விப்பட்டுக்கொண்டிருந்தேன். அவர் பென்ஷன் வாங்கி விட்டார் என்றும் இப்போதும் அதே அழுக்குத் தொப்பியுடனும் கறுப்புக் கண்ணாடியுடனும்தான் திரிகிறார் என்றும் கேள்விப்பட்டேன். ஒரு வருடத்திற்கு முன்பு பரிமளகாந்தன் தனது வீட்டில் தூக்கில் தொங்கித் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி வந்தது. அந்தச் செய்தியைக் கதையோடு கதையாக எனக்குத் தொலைபேசியில் சொன்ன எனது அம்மா “எம்.ஜி.ஆர். தூக்குப் போட்டுச் செத்துப்போனான்” என்றுதான் சொன்னார். அவர் சாகும்போதும் தொப்பியும் கறுப்புக் கண்ணாடியும் அணிந்திருந்தாராம்.

3

டொனாஸ் தலையைக் கவிழ்ந்தவாறே தரையில் அமர்ந்திருந்தான். நியூட்டன் ‘அடிக்கவோ’ என்று என்னிடம் சைகையால் கேட்டான். நான் அவனைப் பொறுத்திருக்குமாறு சொல்லிவிட்டு டொனாஸின் அருகில் சென்று அவனுக்குப் பக்கத்தில் தரையில் உட்கார்ந்துகொண்டேன். பின்பு அவனிடம் “அது தற்கொலையில்லையா?” என்று கேட்டேன்.

டொனாஸ் தலையை நிமிர்த்தாமலேயே “இல்லை. நான்தான் கழுத்தை நெரிச்சுக் கொலை செய்துபோட்டு எம்.ஜி. ஆரின்ர கழுத்தில கயிறுபோட்டு முகட்டில கட்டித் தூக்கினான்” என்றான்.

“ஏன் அப்பிடிச் செய்தனி?” என்று கேட்டேன்.

டொனாஸ் முகத்தை நிமிர்த்தாமலேயே “எம்.ஜி.ஆர். கொட்டிக்கு ஆதரவு” என்றான்

“என்ன கதை சொல்லுறாய், தீவுப் பகுதி முழுக்க உங்கிட கட்டுப்பாடு அங்க எங்க புலி வந்தது?” என்று நான் கேட்டேன்.

டொனாஸ் தலையை நிமிர்த்தி என்னைப் பார்த்தான். அவனின் உருண்டைக் கண்கள் விரிந்திருந்தன. அவன் ஒரு இரகசியத்தை வெளியிடும் தோரணையில் குரலைத் தாழ்த்தி “உங்களுக்குத் தெரியாது மாமா, எம்.ஜி.ஆர். கோடி கோடியாய் கொட்டிக்குக் காசு குடுத்தவர்” என்றான்.

நம்ப முடிகிறதா பௌஸர்? அந்தக் கொலைக்கு அவன் சொல்லும் காரணத்தை உங்களால் நம்ப முடிகிறதா? டொனாஸை நியூட்டனின் பொறுப்பிலேயே விட்டுவிட்டு நானும் திரவியமும் அங்கிருந்து புறப்பட்டோம். நாங்கள் வெளியே வந்தபோது என் பின்னாலேயே வந்த நியூட்டன் “மாமா அவனை என்ன செய்யிறது” என்று கேட்டான். “அவன் இரவுக்கு இஞ்சயே இருக்கட்டும் நான் விடியப் போன் செய்யிறன்” என்று சொல்லிவிட்டு வந்தேன்.

நான் காலையில் ஒன்பது மணிக்குப் போன் செய்தபோது நியூட்டனின் வீட்டில் யூட்டைத் தவிர மற்ற எல்லோரும் வேலைக்குப் போயிருந்தார்கள். யூட்டும் வேலைக்குப் போகும் அவசரத்திலிருந்தான். “டொனாஸ் எங்கே?” என்று கேட்டேன். “அவனைப் பார்க்கப் பாவமாயிருந்தது, அவனை விடியப்புறமே விட்டுட்டம்” என்றான் யூட்.

இது நடந்து நான்கு நாட்களுக்குப் பிறகு நான் டொனாஸை லாச்சப்பல் தெருவில் கண்டேன். என்னைக் கண்டதும் டொனாஸ் ஓடிவந்து என் பக்கத்தில் நின்றான். “எப்படியிருக்கிறாய்?” என்று கேட்டேன் “நல்ல சுகம் மாமா” என்றவன் கொஞ்சம் நிறுத்தி, “அண்டைக்கு நீங்கள் போன பிறகும் யூட் மச்சான் எனக்கு அடிச்சவர்” என்றான். தலையசைத்து விட்டு நான் அங்கிருந்து நடக்க முயன்றபோது டொனாஸ் என்னை ‘மாமா’ என்று மெதுவாகக் கூப்பிட்டான். நான் நின்றேன். டொனாஸ் என் கண்களைப் பார்த்தவாறே “மாமா நான் இப்ப ரெண்டு மூண்டு எம்.ஜி.ஆரின்ர படம் பார்த்தனான். எம்.ஜி.ஆர். உண்மையிலேயே நல்ல ஆள்” என்றான். எனக்கு அப்போது ஏற்பட்ட உணர்வுக்கு என்ன பெயர் என்று தெரியவில்லை. அந்தரம் என்பதுகூட எனது உணர்வை விளக்கப் போதுமான சொல்லல்ல. நான் “எம்.ஜி.ஆரும் புண்டையும்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நடந்தேன்.

‘எதுவரை’ (ஏப்ரல்- மே) இதழில் வெளியான சிறுகதை

7 thoughts on “எம்.ஜி.ஆர். கொலைவழக்கு

  1. ஷோபா, இதென்ன வெறுமெனே ஒரு கற்பனை சிறுகதையா அல்லது நான் நம்புவதுபோல் உண்மையாக நடந்ததொரு நிகழ்ச்சியா? எப்படியோ, அனைத்தும் அருமை. ஆனால் எனக்கு எம்.ஜி.ஆரை கொஞ்சமும் பிடிக்காது. உங்கள் ஊர்களில் காமராசரைப்பற்றி எந்த அளவுக்கு அவர்மீது மரியாதை என்று கொஞ்சம் தெரிந்துகொள்ளாமா?

    நன்றி ஷோபா.

  2. அவலங்களால் சிதறுண்ட மனம் உருவாக்கும் விழுமியங்கள் எத்தனை அபத்தமானவை.வாயடைத்து நிற்கிறென்.விரிவாக மறுவாசிப்புக்கு பின் எழுதுகிறேன்.

    அன்புடன்,
    சு.யுவராஜன்.

  3. நம்ப முடியவில்லை நிறுவப்பட்ட கதைகளை உடைக்கும் யதார்த்தமா இது. புலிகளின் மறைக்கப்பட்ட பக்கங்கள் புறட்டப்படும் காலமாக இது மாறியிருக்கிறது. கருணா அம்மான் பற்றிய புதிய தகவல்கள் காலச்சுவட்டில் கட்டுரையாளர் மிகத் தெளிவாக எழுதியிருந்தார். இவ்வாறு புலிகளின் மறைவான பக்கங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
    -நஜிமிலாஹி-

  4. அருமையாகக் கதை சொல்கின்றீர்கள். இருந்தும் //“எம்.ஜி.ஆரும் புண்டையும்”\\ இது தேவைதானா? இனிமேல் கோவித்துக் கொள்வதற்கு ஆண் குறிகளை உபயோகப் படுத்துங்கள். வழக்கம் இதுதானே என்ற சாட்டுக்கள் வேண்டாம். மாற்றங்கள் அனைத்திலும் வேண்டும்.

  5. அல்லைப்பிட்டியில் இருந்து ஒரு இயக்கத்துக்கே எல்லா இளைஞர்களும் சென்றார்கள் என்ற தரவு தவறானது. கொலைகள் மலிந்திருப்பது உண்மையேயெனினும் பரிமளகாந்தன் கொலை செய்யப்படுவதற்கு எம்.ஜி.ஆர். என்ற பெயரே காரணமாகவிருந்தது என்கின்ற கற்பனை அபரிமிதம்.

  6. அற்புதம்.

    ஒரு கோவை ரசிகன்.

Comments are closed.