பா.செயப்பிரகாசத்துக்கு மறுப்பு

கட்டுரைகள்

1980களில் ஈழப்போராளிகள் தமிழகத்தை ‘பின்தளம்’ என்றே குறிப்பிடுவார்கள். ஈழப்போராட்டத்தில் தமிழக மக்களுடைய வகிபாகம் அளப்பெரிது. தமிழகத்துக் கட்சித் தலைவர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், இயக்கப் போராளிகள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள், வெகுசனங்கள் எனப் பல தளங்களிலிருந்தும் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவு கிடைத்தது. ஈழப்போராட்டத்தில் அடுத்தடுத்து கசப்பான சம்பவங்களும் வரலாற்றுத் தவறுகளும் இழைக்கப்பட்டபோதும் இன்றுவரை ஈழத் தமிழ் மக்களுக்காகத் தமிழகம் வலுவான குரலை ஒலித்துக்கொண்டிருக்கிறது.

ஈழப்பிரச்சினையை மிகவும் பொறுப்புடனும் உணர்வுபூர்வமாகவும் தியாகங்களுடனும் அணுகுபவர்களைப் போலவே ஈழப்போராட்டத்தையும் ஈழத்தமிழர்களின் இன்னலையும் பிழைப்புவாதமாகவும் மலிவான அரசியல் இலாபங்களுக்காகவும் ஒரு சாகச மனநிலையிலும் அணுகுபவர்களும் தமிழகத்தில் இல்லாமல் இல்லை. அப்படியான ஒரு பெருங்கும்பல் இலங்கையிலும் புகலிடங்களிலுமே இருக்கும்போது தமிழகத்தில் இந்தப் பிழைப்புவாதநோக்கும் இருப்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஈழப்பிரச்சினையை முன்னிறுத்தி அரசியல் கட்சிகள் அடித்த பிழைப்புவாதக் கூத்தை இன்றையத் தேர்தல் கூட்டணிகள் அம்பலப்படுத்தியுள்ளன. ராணி, தேவி வாராந்திரிகள் முதற்கொண்டு கிழக்குப் பதிப்பகத்தின் ‘பிரபாகரன்’ நூல், இன்று குமுதத்தில் பா.ராகவன் எழுதிவரும் தொடர் போன்றவை எந்தவிதப் பொறுப்புமில்லாமல் ஈழத்தவர்களின் மனிதவுரிமைப் பிரச்சினைகளை மிகத் தவறான தரவுகளைக்கொண்டு மனோரதிய நிலையிலிருந்து விளக்குபவை.

மிகவும் ஆய்வு நோக்கிலும் பொறுப்புணர்வோடும் செயற்படுவதாக வாயடிக்கும் ‘காலச்சுவடு’ம் வம்புத்தனத்தைச் செய்யத் தவறவில்லை. அப்பத்திரிகையின் இம்மாத இதழில் சை. பீர்முகம்மது “காட்டிக்கொடுக்கும் கருணா: ஒரு போராளி துரோகியான கதை” என்றொரு கட்டுரையை எழுதியுள்ளார். இது ஒன்றும் அரசியல் ஆய்வுக் கட்டுரை கிடையாது. இதுவும் பா.ராகவன் எழுதுவதைப்போல ‘புலனாய்வு’க் கட்டுரைதான். சை. பீர்முகம்மது கருணாவைப் பாரத்தபோதே மின்வெட்டும் நேரத்தில் கருணா நம்பிக்கைக்குரிய மனிதர் அல்ல என்பதைக் கண்டுபிடித்துவிட்டாராம். பன்னாட்டு விமானநிலைய சோதனைகளின்போது நூற்றுக்கணக்கான காவற்துறையினரையும் அதிநவீன கருவிகளையும் இனிப் பயன்படுத்தத் தேவையில்லை. சை. பீர்முகம்மதுவை வாயிலில் நிறுத்தி வைத்தால் போதும். தீவிரவாதிகளை மின்வெட்டும் நேரத்தில் முகத்தைப் பார்த்தே கண்டுபிடித்துவிடுவார்.

கட்டுரையில் பீர்முகம்மதுவின் கண்டுபிடிப்புகளைப் படித்தால் பிரபாகரனே அதிர்ச்சியடைவார். மட்டக்களப்புக் கட்டளைத் தளபதி கண்ணன் அல்லது கர்ணன் என்றொரு கற்பனைத் தளபதியை உருவாக்கும் சை.பீர்முகம்மது அந்த இல்லாத தளபதி உடைவுக்கு முன்னமே கருணாவால் கொல்லப்பட்டார் என்றொரு செய்தியைச் சொல்கிறார். இந்த முழுப்பிழையான தகவலைக் கூட விட்டுவிடலாம். கிட்டுவும் புலேந்திரனும் குமரப்பாவும் வந்த கப்பலை இந்திய கடற்படை வழிமறித்ததால் அவர்கள் கப்பலை வெடிக்க வைத்து ஒருசேர இறந்தார்கள் என்ற ஒரு தகவல் போதாதா சை. பீர்முகம்மதுவின் புலனாய்வுத் திறமைக்கு. பன்னாடை! பன்னாடை!!

கருணாவை விமர்சனங்களிலிருந்து காப்பாற்றுவது நமது வேலையல்ல. தவிரவும் நம்மிடமே அவர் குறித்த ஏகப்பட்ட விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளுமுண்டு. ஆனால் கிழக்கின் சுயாதீன அரசியலையும் கிழக்கில் வாழும் மூவின மக்களின் தனித்துவமான அரசியல் உரிமைகளையும் அங்கு காலாதிகாலமாய் கனன்றுகொண்டிருந்த யாழ் மையவாதத்திற்கு எதிரான எதிர்ப்புணர்வு கருணாவின் உடைவையொட்டி வீறுடன் எழுந்ததையும் வெறுமனே ‘கருணாவின் துரோகம்’ என்ற ஒற்றைச் சொல்லாடலுக்குள் மறைத்துவிட முடியாது. ஆனால் அந்த வேலையைத்தான் நூற்றுக்கு நூறு விழுக்காடு தவறான தகவல்களோடு சை. பீர்முகம்மது செய்துள்ளார். அதைப் பொறுப்பில்லாமல் காலச்சுவடும் வெளியிட்டுள்ளது. அரசியல் நிலைப்பாடுகளைத்தான் சரிபார்க்க மாட்டீர்கள், நேற்று நடந்த வரலாற்று நிகழ்வுகளைக் கூடவா சரிபார்க்க மாட்டீர்கள்? இதற்குள் காலச்சுவடுக்கு சேரன், பத்மநாபன், மகாலிங்கம் என ஏழெட்டு ஈழத்து மதியுரைஞர்கள் வேறு. ‘தந்தை’ செல்வா சொன்னதைத்தான் நாம் மறுபடியும் அவருப்புடன் சொல்ல வேண்டியிருக்கிறது.

இதற்கிடையில்தான் பா. செயப்பிரகாசம் “யாருக்காகப் பேசுகிறார் அ. மார்க்ஸ்” என்றொரு கட்டுரையை ‘கீற்று’ இணையத்தில் எழுதியிருந்தார். அ.மார்க்ஸ் ‘புத்தகம் பேசுது’ இதழுக்கு வழங்கியிருந்த நேர்காணலை எப்படியெல்லாம் திரிக்க முடியுமோ அப்படியெல்லாம் திரித்து, மேற்கோள்களை எப்படியெல்லாம் சிதைக்கமுடியுமோ அப்படியெல்லாம் சிதைத்து பா.செ. அந்தக் கட்டுரையில் புலிகளுக்கு வக்காலத்து வாங்கியிருந்தார். பல இடங்களில் பா.செயப்பிரகாசம் காலச்சுவடுக் கட்டுரையாளரை மட்டுமல்லாமல் குமுதம் கட்டுரையாளரையும் தாண்டிச் சிந்தித்துள்ளார். ஓவராய் சிந்தித்ததன் விளைவுதான் ராஜீவ் காந்தியைப் புலிகள் கொல்லவில்லையென்ற அவரது புதிய கண்டுபிடிப்பு. சிவராசனுக்கும் அகிலாவுக்கும் தனுவுக்கும் சூசகமாக வீரவணக்கக் குறிப்புகளை புலிகள் தங்களது பத்திரிகைகளில் எழுதியதை பா. செ. அறியாமலிருந்திருக்கலாம். ராஜீவ் காந்தியை எதற்காகக் கொன்றீர்கள் என்ற கேள்விக்கு வன்னிப் பத்திரிகையாளர் மாநாட்டில் பிரபாகரன் தலைகுனிந்ததைக்கூட பா.செ. அறியமாட்டாரா? இதிலே பின்நவீனத்துவம் குறித்து பா.செக்கு விமர்சனம்வேறு. தமிழ்நாட்டில் மதுரை ஆதீனம் மட்டும்தான் இன்னும் பின்நவீனத்துவம் மீது விமர்சனம் வைக்கவில்லை.

ஆனால் பா.செயப்பிரகாசம் நம் மதிப்புக்குரிய எழுத்தாளர். அவர் ‘மனஓசை’யைப் பொறுப்பேற்று நடத்திய காலங்களுக்காக நம்மிடம் மதிப்புப்பெற்றவர். எனவே காசுக்காக எழுதித் தள்ளிக்கொண்டிருக்கும் பா.ராகவனைப் போலவோ முகரேகை சாஸ்திரி சை.பீர்முகம்மதுவைப் போலவோ நாம் அவரை அலட்சியம் செய்துவிட முடியாது. எனவே நாம் பொறுப்புடன் அவர் கட்டுரையைப் படித்து, பொறுப்புடன் மறுக்க வேண்டியிருந்தது. சுகன் கீற்றுவுக்கு ஒரு மறுப்புக் கட்டுரையை அனுப்பி வைத்தார். அது கீற்றுவின் பின்னூட்டப் பகுதியில் வெளியாயிற்று. இப்போது மிகுந்த பொறுப்புடனும் சரியான சான்றுகளுடனும் சிராஜூதீன் அதே கீற்று இணையத்தளத்தில் பா.செக்குப் பதில் அளித்துள்ளார். அந்தப் பதிலை கீழே படிக்கலாம். நூறு அறிவாளிகளுடன் போராடுவதைவிட ஒரேயொரு முட்டாளோடு மோதுவது சிரமமானது என்பார் தந்தை பெரியார். சிராஜூதீனும் சிரமப்பட்டுத்தான் எழுதியிருப்பார். வாழ்த்துகள் சிராஜூதீன்.

பா.செயப்பிரகாசம் கட்டுரைக்கான எதிர்வினை:
– சிராஜூதீன்

புத்தகம் பேசுது இதழுக்காக அ. மார்க்ஸ் அவர்களை நான் எடுத்த நேர்காணல் குறித்து ‘யாருக்காக பேசுகிறார் அ. மார்க்ஸ்’ என்ற கட்டுரையை கீற்று இணையதளத்தில் எழுதியது மட்டுமல்லாமல் நகலெடுத்து தான் செல்லுமிடமெல்லாம் விநியோகித்து வருகிறார் பா. செயப்பிரகாசம். நேர்காணல் செய்தவன் என்ற முறையில் சில விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1. அ. மார்க்ஸிடம் ஈழப் பிரச்சனை குறித்து மட்டுமே நேர்காணல் செய்ய வேண்டும் என்கிற நோக்கில் எங்களின் ஆசிரியர் குழுவின் முடிவின்படி தொகுத்தெடுத்துக் கொண்ட கேள்விகளுக்கான பதிலை அவரிடம் பெற்று வெளிவந்த நேர்காணல் அது. ஆய்வுபூர்வமான அடிப்படையில், சிந்திக்கத்தக்க, ஆழமான கருத்துகளைக் கொண்டு இருந்தது அந்த நேர்காணல். இனவெறி, மொழி வெறி அற்றவர்கள் மத்தியிலும், தமிழகம் அயல்நாட்டிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஒரு மூத்த எழுத்தாளர் பா.செ. தரங்கெட்ட மொழியிலும் முற்றிலும் அவதூறுமிக்க ஒரு எதிர்வினையை அந்நேர்காணலுக்கு எழுதி இருப்பதும், அதை பெருமைக்குரிய செயலாக செல்லுமிடமெல்லாம் விநியோகித்துக் கொண்டு திரிவது மிகவும் கேலிக்குரியது. தன்னைப் பற்றிய கவன ஈர்ப்புக்காக எதையும் செய்பவர், எதையும் குளறுபடியாக விதைப்பவர், கேள்வியும் நானே பதிலும் நானே என அவதூறுகளில் அவர் சரண் புகுவதில் இருந்தே மார்க்ஸ் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் அவரிடம் தரவுகள் இல்லை என்பதையே காட்டுகிறது.

2. சிவத்தம்பி, கைலாசபதி, குணவர்த்தனே ஆகியோரின் கருத்துகள் மற்றும் வரலாற்று தகவல்கள் அடிப்படையில் அ.மா. சில கருத்துகளை முன்வைத்துள்ளார். இதில் தேவையில்லாமல் பின்நவீனத்துவத்தை இழுப்பதும், மார்க்சியத்தை எள்ளி நகையாடுவதும் அ.மா. எழுப்பிய எந்தக் கேள்விகளுக்கும் அவரிடம் சரக்கு இல்லாததையே காட்டுகிறது.

அந்த நேர்காணலில் பின்நவீனத்துவம் என்ற சொல்லையோ, மார்க்சியம் என்ற ஆய்வு முறையையோ அ.மா. சுட்டிக்காட்டவில்லை. இலங்கைத் தமிழர் என்ற சமூக உருவாக்கம் எண்பதுகளுக்குப் பிறகு ஏற்பட்ட சமூக மாற்றங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அவர் தனது பதிலைச் சொல்லி உள்ளார். இங்கே தேவையில்லாமல் பின்நவீனத்துவமும், மார்க்சியமும் எங்கே வந்தது?

3. பா. செயப்பிரகாசம் பின் நவீனத்துவத்தைக் காட்டிலும் மார்க்சியத்தையே தாக்குகிறார். தங்களின் தவறான செயல்பாடுகளின் மூலம் மக்களின் விடுதலையை சிதைத்த புலிகளின் முகவர்களில் ஒருவரான பா.செயப்பிரகாசத்திற்கு ந. சண்முகநாதன் போன்ற மார்க்சியர்களையும், கம்யூனிஸ்ட் கட்சியையும் குறை சொல்வதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது? இன்று ராஜபக்ஷேயின் கொடும் பாசிச ஆட்சியை எதிர்த்து வருவது மட்டுமல்ல மலையகத் தமிழர்கள் நாடற்றவர்களாக சிங்கள பேரினவாத அரசால் அறிவிக்கப்பட்ட போதும் குரல் கொடுத்தவர்கள் கம்யூனிஸ்டுகள்தான்.

4. சோவியத் பின்னடைவிற்குப்பின் உலகெங்கிலும் தேசிய முரண்பாடுகள் மேலெழுந்தன எனவும், மார்க்சிஸ்டுகள் இதைக் கவனிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டுகிறார் பா.செ. தேசிய இன அடையாளம் மட்டுமல்ல, பல்வேறு அடையாளங்களும் தங்களை உறுதி செய்து கொள்ளும் அரசியல் மேலெழுந்தது என்பதை அ.மா. ஆதாரப்பூர்வமாக சுட்டிக்காட்டுகிறார்-

இந்தியாவில் தலித், நேபாளத்தில் ஜனசாதி, மாதேசிகள், ஈழத்தமிழர்கள் மத்தியில் தலித்கள், முஸ்லிம்கள், கிழக்கு மாகாணத்தினர் என்றெல்லாம் இன்று அடையாள உருவாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொள்ளாததோடு வன்முறையாக ஈழத்தில் எழும்பிய அடையாள எழுச்சியை ஒடுக்க முயற்சித்ததின் விளைவாகத்தான் இன்று புலிகள் களத்தில் மட்டுமல்ல அரசியலிலும் தோற்றுப்போய் உள்ளனர்.

ஈழத் தமிழ் சமூகத்திற்குள் ஏற்பட்டுள்ள இந்த அடையாள விகசிப்புகளுக்கு முஸ்லிம்களால் நடத்தப்படும் ‘பெருவெளி’, தலித்துகளால் நடத்தப்படும் ‘தூ’ கிழக்கு மாகாணத்தவர்களால் நடத்தப்படும் ‘எக்ஸில்’ போன்ற சஞ்சிகைகளே சான்று பகரும்.

இது குறித்து பா.செயப்பிரகாசத்தின் கள்ள மௌனத்திற்கு அர்த்தம் என்ன?

5. ம.க.இ.க.வினர் புலிகளை பாசிஸ்ட் இயக்கம் என சொல்வதாக அ.மா. சொல்கிறார். இதற்குப் பதிலாக பா.செ. என்ன சொல்கிறார் என கீற்று வாசகர்கள் படிக்கவும். ம.க.இ.க.வினர் அப்படி குரல் எழுப்பினார்கள், இப்படி குரல் எழுப்பினார்கள் எனச் சொல்லும் பா.செ. ம.க.இ.க.வினர் புலிகளை பாசிஸ்ட் இயக்கம் எனச் சொல்லவில்லை என எந்த தரவுகளோடும் மறுக்க முயலவில்லை.

6. வடக்கு மாகாணத்தில் இருந்து முஸ்லிம்களை வன்முறையாக வெளியேற்றியதற்கு புலிகள் வருந்தி முஸ்லிம்களை திரும்ப அழைத்தார்களாம். இராணுவம்தான் அவர்களை தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறார்களாம். கீற்று வாசகர்கள் எல்லோரும் காதில் பூ சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என பா.செ. நம்புவதுபோல் தெரிகிறது. வெறுமனே வருத்தம் தெரிவித்தல் போதாது மீண்டும் அவரவர் இடத்திற்கு வரலாம் என அதிகாரப்பூர்வமாக புலிகள் அறிவிக்க வேண்டுமென்றுதான் முஸ்லிம்கள் கெஞ்சினார்கள். புலிகளின் இரக்கமற்ற மனம் கடைசி வரை அதைச் செய்யவில்லை. ‘பெருவெளி’ அக்டோபர் 07 கட்டுரையை பா.செ. வாசிக்குமாறு பரிந்துரைக்கிறேன்.

முஸ்லிம்களை இராணுவம் தடுத்து வைத்திருக்கிறது என்பதும், முஸ்லிம்கள் சிங்கள பேரினவாதத்திற்கு துணைபோகிறார்கள் என எழுதுவதும் (தாரகா) முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளிக்கிறது என்பதுவும் உங்களிடமுள்ள இந்து மனத்தைத்தான் வெளிப்படுத்துகிறது.

7. தீராநதியில் ஷோபா சக்தியின் பேட்டியின் வழியாக அ.மார்க்ஸ் உடன்பட்ட கருத்துக்கும், பின்னர் அவர் புத்தகம் பேசுது நேர்காணலில் வெளியிட்ட கருத்துக்கும் ஏதோ பெரிய வேறுபாடு இருப்பதாக மிகப்பெரிய கண்டுபிடிப்பை கண்டதாக சொல்கிறார் பா.செயப்பிரகாசம்.

கருணா மற்றும் பிள்ளையானை ஷோபா சக்தியோ அ.மார்க்ஸோ அந்த நேர்காணலிலும் இந்த நேர்காணலிலும் ஆதரித்தது கிடையாது. அங்கு ஒரு தேர்தல் நடந்தது மக்கள் விரும்பி பங்கேற்றார்கள். தேர்தலுக்குப்பின் ஒப்பீட்டளவில் மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள். இப்பொழுது வேண்டுவது அமைதி மட்டுமே. பேட்டியில் சொல்லப்பட்ட கருத்துகளை தனது காஷ்மீர் பயண அனுபவத்தையும் இணைத்து அ.மா. சொல்லியுள்ளார். 30 ஆண்டு காலப் போரில் அனைத்தையும் இழந்து களைத்துப் போன மக்கள் அமைதி வேண்டுவதை மையப்படுத்தியே ஷோபாவின் பேட்டியும் மார்க்ஸின் பேட்டியும் அமைந்துள்ளது.

கொலைகள், ஆள் கடத்தல் குறிப்பாக குழந்தைகளை கட்டாயமாக போர்க்களத்திற்கு இழுத்துச் செல்வதெல்லாம் ஒப்பீட்டளவில் குறைந்திருக்கிறது என தீராநதி நேர்காணலில் ஷோபா கூறி இருந்தார். இன்னும் முழுமையாக அமைதி திரும்பவில்லை என மார்க்ஸ் கூறுகிறார். இதிலென்ன முரண்பாட்டை அவர் கண்டார்.

8. புலிகளின் முகவர் என பா.செயப்பிரகாசத்தையும், அவரையொத்தவர்களையும் மார்க்ஸ் சொல்வதால் செயப்பிரகாசத்திற்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறதே!

இராஜபக்ஷேவையும், கருணாவையும் மார்க்ஸ் ஆதரிப்பதனால் அவர்களின் ஏஜெண்ட் என மார்க்ஸை சொல்லலாமா என ரொம்பவும் புத்திசாலித்தனமாக கேட்கிறார் பா.செ. ராஜபக்ஷேவையும், கருணாவையும் மார்க்ஸ் எந்த இடத்தில் ஆதரித்தார்? நேர்மை இருந்தால் ஒரு சிறிய ஆதாரத்தையாவது அவர் தரட்டுமே.

‘எதுவரை’ என்றொரு சஞ்சிகை பிரிட்டனிலிருந்து வெளிவருகிறது. அவ்விதழில் ராஜபக்ஷேவின் அரசு கொடூரமான இனவாத பாசிச அரசாக உள்ளது என்பதை இதுவரையும் சொல்லாத தரவுகளோடு எழுதி உள்ளார். அந்தச் சஞ்சிகையையும் பா.செயப்பிரகாசம் வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

மார்க்ஸ் மீது புலிகளுக்கு உள்ள காழ்ப்பெல்லாம் அவர் ராஜபக்ஷேவை, கருணாவை ஆதரிக்கிறார் என்பதற்காக அல்ல. அவர் ஆதரிக்கவில்லை என்று புலி முகவர்களுக்கு தெரியும். பிரச்சனை என்னவெனில், ராஜபக்ஷே, கருணா ஆகியவர்களோடு புலிகளின் அக்கிரமங்களையும், பாசிச நடவடிக்கைகளையும் கண்டிக்கிறார் என்பதுதான்.

ஒருவரை முகவர் என வரையறை செய்வதற்கான காரணிகளை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்த இயலுமென நினைக்கிறேன்.

_ யாருக்கு முகவர்களாக இருக்கிறார்களோ அவர்களின் செயல்பாடுகளுக்கும், அநீதிகளுக்கும் ஒத்தூதுவது.
_ அவர்களுக்காக தங்கள் வாழும் இடத்தில் லாபி செய்வது
_ அவர்களுக்குப் பயன்படுவது, அவர்களால் ‘பயன்’ பெறுவது

எல்லாம் போகட்டும் முகவர் என மார்க்ஸ் சொன்னதற்காக பா.செ. இவ்வளவு பொங்குகிறாரே கருணாநிதி தனது பத்திரிகையில் புலிகளின் பேரால் காசு சுருட்டும் காகிதப் புலிகள் என எழுதினாரே அப்போது எங்கே போனார்கள் முகவர்கள்? கருணாநிதிக்கு எதிராக பா.செ. தான் செல்லுமிடமெல்லாம் துண்டறிக்கை ஏன் விநியோகிக்கவில்லை? அவர் கையில் உளவுத் துறை இருக்கிறது என்ற அச்சமா? ஒரு பெரியவர், மூத்த அரசியல்வாதி இப்படிப் பேசலாமா என்கிற ரீதியில் தானே நசுக்கி, நசுக்கி புலி முகவர்கள் கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.

புலிகளுக்காக எதையும் செய்யக்கூடியவர்தான் பா.செ. என்பதை நவீன தமிழ் இலக்கிய உலகம் நன்கறியும். ஈழம் தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த டெல்லிக்கு சென்ற ‘தோழமையின் குரல்’ நவீன தமிழ் இலக்கிய குழாமிற்கு பயணச்சீட்டு இரயிலில் வாங்குவதற்கு ரூபாய் முப்பத்தி நான்கு ஆயிரத்தை அனாயசமாக உருவித் தந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பா.செயப்பிரகாசம். தமிழகத்தில் நடக்கும் எந்தப் போராட்டத்திற்கும் இந்த மாதிரி உதவி செய்ததாக நமக்குத் தெரியவில்லை. (பின்னால் புலிகளுக்கு ஆதரவான முழக்கத்தை ஆர்ப்பாட்டத்தின்போது வைக்க முடியாது என அவர்கள் மறுத்ததால் அவர்களிடமிருந்து பணத்தை திரும்பப் பெற்றுக்கொண்டது வேறு கதை). தலித்துகள் மீது தமிழகத்தில் நடத்தப்படும் வன்முறைகளை ஒரு தமிழன் இன்னொரு தமிழன் மீது வன்முறையை நிகழ்த்த வேண்டாம் என வன்முறையை நிகழ்த்தும் மேல்சாதி தமிழனை பார்த்து எந்தப் புலி முகவர்களும் தமிழின ஒருமைப்பாடு பேச முன்வரவில்லையே. ஏன்?

புலி ஆதரவு, தமிழ் ஆதரவு, தமிழர் ஆதரவு என்ற பெயரால் இங்கே எப்படியெல்லாம் காசு சுரண்டப்படுகிறது என்பதை கீற்று வாசகர்களுக்கு விளக்கத் தேவையில்லை. ஓவியர் புகழேந்தி மென்பொருள் துறையைச் சேர்ந்தவர்களிடம் காசு பறித்ததை கீற்று நந்தன் எழுதியதை வாசித்திருப்பீர்கள். அந்தச் சம்பவம் ஒன்று தான் வெளிவந்திருக்கிறது. வெளிவராத சம்பவங்கள் இன்னும் நிறைய.

பத்மநாபா உள்ளிட்ட இதர போராளிகளை புலிகள் கொன்றதெல்லாம் இந்திய உளவுத் துறையின் ஊடுருவலைத் தடுக்க, ராஜீவ் காந்தியைக் கொன்றது சந்திரசாமி, ஈழத்தில் நடக்கும் போரை இந்தியாவே நடத்துகிறது. தமிழினமே என்ற அடையாளமே இல்லாமல் செய்ய இந்தியா மூலசக்தியாக இயங்குகிறது என்றெல்லாம் பல ‘அதிரடியான’ உண்மைகளை அடுக்குகிறார். இப்படி விஷயங்களை மிக எளிமைப்படுத்தி பார்ப்பதுதான் புலி ஆதரவாளர்கள் வழக்கம்.

இலங்கை அரசாங்கத்திற்கு இந்திய ஆயுத மற்றும் பொருளாதார உதவி வழங்குகிறது. இந்தியாவின் விரிவாக்க நோக்கத்திற்கு உட்பட்ட செயல் இது என்றுதான் நாம் கூறமுடியுமே தவிர, இந்தியாவே போரை நடத்துகிறது என்று சொன்னால் அதன் பொருள் என்ன? ஆதாரங்கள் இருக்கிறது என்கிறாரே சொல்லுங்களேன்.

பத்மநாபன் இந்திய உளவுத்துறையின் ஆள் எனச் சொல்கிறீர்கள். சரி வைத்துக் கொள்வோம். மாத்தையாவைப் புலிகள் கொன்றார்களே அவர் இந்திய உளவாளியா? விபச்சாரிகள் என்றும் திருடர்கள் என்றும் மின் கம்பத்தில் கட்டி வைத்து சுடப்பட்ட தமிழர்கள் எல்லாம் இந்திய உளவாளிகளா? பள்ளி வாசலில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களை சுட்டுக் கொன்றது அவர்கள் இந்திய உளவாளி என்பதாலா? முஸ்லிம்களை இருபத்து நான்கு மணி நேரத்தில் 500 ரூபாய் பணம் அல்லது அத்தொகைக்கு நிகரான பொருளோடு வெளியேற வேண்டும் என்று புலிகள் உத்தரவு போட்டார்களே இதெல்லாம் எதனால்? அவர்கள் இந்து வெள்ளாள மனநிலைதான் என்பது கூடவா உங்களுக்குத் தெரியாது. உங்களுக்கு எல்லாம் தெரியும். புலிகள் தமிழர்களை காப்பாற்ற மாட்டார்கள் என்று கூட உங்களுக்குத் தெரியும்.

அவர்கள் தமிழர்களை காப்பாற்ற மாட்டார்கள் என்பதற்கு சமீபத்திய நிகழ்வுகளே சான்று. தமிழர்களை மனிதக் கேடயமாக பயன்படுத்தி அபயம் தேடுகிறார்கள். புலிகள் தப்பிச் செல்லும்போது தமிழர்களை கொன்றொழிக்கிறார்களே இதுவும் உங்களுக்குத் தெரியாதா என்ன?

ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தை பிரபாகரனே அது ஒரு துன்பியல் சம்பவம் என ஒத்துக்கொண்ட பிறகு நரசிம்மராவுக்காக சந்திராசாமி, சுப்பிரமணியசாமி தான் ராஜீவைக் கொல்வதற்கு துணைபோனார்கள் எனச் சொல்வது நல்ல நகைச்சுவை.

அ. மார்க்ஸ் புலிகளை ஆதரிக்கும் எல்லோரையும் முகவர் எனச் சொல்லவில்லை. புத்தகம் பேசுது நேர்காணலின் கடைசிப் பதிலை ஊன்றிப் படித்துப் பாருங்கள். மாவோயிஸ்டுகளைக் கூட அப்படிச் சொல்லவில்லை. உங்களைத்தான் உங்களைப் போன்றவர்களைத்தான் அப்படிச் சொல்ல முடியும்.

சி.பி.எம்.முக்கும், அ.மார்க்சுக்கும் நிறைய கருத்து முரண்பாடுகளும், கருத்து வேறுபாடுகளும் உண்டு. அவரும் எங்களை விமர்சனம் செய்வதுண்டு. நாங்களும் அவரை விமர்சிக்கத்தான் செய்கிறோம்.

ஈழம் தொடர்பான கருத்து நிலைகளில் கூட அவருக்கும் எங்களுக்கும் நிறைய முரண்பாடுகள் இருக்கிறது. எங்கள் இருவருக்கும் ஈழப்பிரச்சினையில் ஒத்த கருத்து இல்லை என சி.பி.எம்.மையோ, அ.மார்க்ஸையோ அவதானிப்பவர்களால் விளங்கிக் கொள்ள முடியும். அது உங்களால் முடியாது. ஏனென்றால் நீங்கள் ஈழத் தமிழ் மக்களை நேசிப்பவர் அல்ல. புலிகளை ஆதரிப்பவர். நாங்கள் மக்களை நேசிப்பவர்கள். அந்தப் புள்ளியில் மட்டும்தான் இந்த நேர்காணல் புத்தகம் பேசுது இதழில் வெளியானது. அவ்வளவே.

‘பெருவெளி’ இதழின் வழியாக முஸ்லிம்கள் ‘சோனகர் தேசம்’ என்ற கருத்தாக்கத்தை முன்வைக்கிறார்கள். அவர்கள் இந்த கருத்து நிலைக்கு தள்ளப்பட்டதற்கு புலிப் பாசிசம்தானே காரணம். மார்ச் 10, 2009 அன்று நடைபெற்ற மீலாது விழாவில் புலிகளின் மனித வெடிகுண்டு தாக்குதலில் 20 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிகழ்வுக்கு பா.செயப்பிரகாசம் என்ன விளக்கமளிக்கப் போகிறார்? புலிகள் தலித்துகள், முஸ்லிம்கள் விரோதி மட்டுமல்ல; மனிதகுல விரோதிகள். அவர்களின் நடவடிக்கைகளை, படுகொலைகளை மீலாது ஊர்வலத் தாக்குதல் வரை தொகுத்துப் பாருங்கள். ஒரு தேர்ந்த மார்க்சியவாதி நீங்கள். ஒரு மார்க்சியவாதிக்கு மட்டுமே உண்மைகளை மிக எளிதாக அடையாளம் காணமுடியும்

7 thoughts on “பா.செயப்பிரகாசத்துக்கு மறுப்பு

  1. கனநாளைக்குப்பிறகு சத்தியக்கடதாசியில் வாசிக்ககூடிய ஒரு குறிப்பு.
    எதுக்கும் அ.மா. வை குறிவைத்தால்மட்டும் சுருக்கென்று ஏறுகிறது சத்தியக்கடதாசி. இது ஏனுங்கோ?

  2. 1991ம்ஆண்டு தமிழ்மக்கள்பாதுகாப்பு பேரவையைச் சேர்ந்த பல போராளிகளை புலிகள் கைது செய்தபோது அதனைக்கண்டித்து உடனடியாக விடுதலைசெய்ய வேண்டும் எனக்கோரி தமிழ்நாட்டில் பல புரட்சிகர அமைப்புகள் கோரினர்.இதில் தோழர் ஜெயப்பிரகாசம் மத்திகமிட்டி உறுப்பினராக இருந்த மனஓசை -கேடயம் குழுவினரும் அடங்குவர்.இப்பேரவைப் போராளிகள் பின்பு புலிகளால் கொல்லப்பட்டனர் என்பதும் இவருக்கு நன்கு தெரியும்.இவ்வாறு பல புரட்சிகர போராளிகளை கொன்று ஒரு புரட்சிகர இயக்கத்தை தடைசெய்த புலிகளை அன்று கண்டித்த இந்த தோழர் இன்று அது குறித்து எவ்வித சுயவிமர்சனும் இன்றி எந்த முகத்துடன் மார்க்சியத்தின் பேரால் புலிகளை ஆதரிக்கிறார்?மாக்ஸ் ஆன்மா இவர்களை மன்னிப்பீராக!!!

  3. புலிகள் தங்கள் வராற்றில் தங்களையும் அறியாமல் செய்த இரண்டு நல்ல விடயங்கள் ஒன்று-ராசீவ்காந்தி கொலை.மற்றது அமிர்தலிங்கம் கொலை.இதை நேரிடையாக சொல்ல புலிகளுக்கும் வக்கில்லை.அவர்களை ஆதரிக்கும் இந்த செயப்பிரகாச கும்பல்களுக்கும் தைரியமில்லை.வந்துட்டானுக எங்களுக்கு கதை சொல்ல.செம்மறியாட்டுக்கூட்டம்.

  4. மாத்தையா ஏஜன்ட் இல்லாமல் வேற என்ன? அவரை போடமல் விட்டிருந்தல் அவர் இவரை போட்டுஇருப்பர், எனவெ போராட்டகுளுக்களிற்கு இதை தவிர வேரு வழி இல்லை, இப்பவும் உதயே சொல்லிகொன்டிருஙொ, எல்லரும் செத்த பிரகு ஆர்ரயநக்குரீங பாப்பம்

  5. கிட்டுவும் புலேந்திரனும் குமரப்பாவும் வந்த கப்பலை இந்திய கடற்படை வழிமறித்ததால் அவர்கள் கப்பலை வெடிக்க வைத்து ஒருசேர இறந்தார்கள் என்ற ஒரு தகவல் போதாதா சை. பீர்முகம்மதுவின் புலனாய்வுத் திறமைக்கு. பன்னாடை! பன்னாடை!!//

    அவர் சரியாகத்தான் எழுதினார். அச்சுக் கோக்கும் போதுதான் காலச்சுவடு தவறு செய்து விட்டது என இனி அவர் சொல்லுவார்.:)

    ஐரோப்பிய யூனியனிலிருந்து நோர்வே விலக வேண்டும் புலிகள் கோரியதாக பா ரா எழுதிய பகிடிக்கு இப்படடியான விளக்கம்தான் கொடுக்கப்பட்டது.

  6. தோழர் ஜெயப்பரகாசத்தை எனக்கு சூரியதீபன் என்ற பெயரில் தெரியும்.அவருடன் எனக்கு அதிக பழக்கம் இல்லையாயினும் அவர் சார்ந்திருந்த மனஓசை-கேடயம் குழுவினருடன் அதிக உறவு கொண்டிருந்தவன்.அவருடைய புலிசார்பு கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.இதை நான் அவரிடம் நேரிடையாகவே கூறியுள்ளேன்.மேலும் தோழர் சண்முகதாசன் கட்சி பற்றிய அவர் விமர்சனங்களும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.எனினும் அவர் நீண்டகாலமாக இலங்கைத்தமிழர்கள் பிரச்சனையில் அக்கறை கொண்டுள்ளார்.அத்துடன் சமாதான காலத்தில் இலங்கையின் தமிழ்பகுதிகளுக்கு சென்று மக்களுடன் நேரிடையாக உரையாடியுள்ளார்.இது குறித்து தனது அனுபவங்களை புத்தகமாக வெளியிட்டுள்ளார்.எனவே அவர் எமது பிரச்சனை குறித்து கருத்து சொல்ல பூரண தகுதியுடையவர் என கருதுகிறேன்.எனவே அவருடைய கருத்துக்களை பிரசுரித்து அது தொடர்பாக மாக்ஸ் சோபாசக்தி ஆகியோர் நேரிடையாக பதில் கூறுவது சிறந்தது என கருதுகிறேன்.மேலும் இந்தியாவில் கருணாநிதி வைகோ ராமதாஸ் திருமாவளவன் போன்றோருக்கு மட்டுமல்ல ஜெயப்பிரகாசம் மாக்ஸ் போன்ற மாக்சிய ஆய்வாளருக்கும் இலங்கைப்பிரச்சனை பூரணமாக விளங்கவில்லை என்பதே உண்மை.(அது சரி இலங்கை தமிழருக்கே பலருக்கு இதுபற்றி சரியாக விளங்கவில்லை.அப்படியிருக்க இந்தியர்களுக்கு எப்படி விளங்கும் ? என்று நீங்கள் மனதில் நினைக்கக்கூடும்.)இது எம்மத்தியில் ஒரு புரட்சிகர கட்சி இல்லாததன் விளைவே.

  7. புலி எதிர்ப்பு-புலி ஆதரவு இவை தவிர எதுவும் ஷோபா சகதிக்கும் மா.செ க்கும் தெரிவதில்லை.

    சின்னவன்

Comments are closed.