அஞ்சலி:

கட்டுரைகள்

பேராசான் இ.வெ.செல்வரட்ணம் அவர்கள்.

(1930 – 2009)

இலங்கை அரசியல் ஆடுகளத்தில் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் இவற்றின் தோற்றங்களை ஆய்வுறுவோருக்கும் ஆர்வலருக்கும் பேராசான் இ.வெ.செல்வரட்ணம் அவர்களின் பெயரும் இடமும் தெரியவரும்.

அடங்காத்தமிழர்,இரும்பு மனிதர் ,வீரமறவர், கோப்பாய்க்கோமான்……. இன்னோரன்ன தமிழ் அரசியல் அபத்தநிலைகளுக்கு முன்னர் மகத்தான நேர்மையான தமிழ் அரசியற் செல்நெறியான ‘சிறுபான்மைத்தமிழர் மகா சபையின்’ முதலீட்டாளர் பேராசான் இ.வெ.அவர்கள்.

இனவெறியிலும் கொடுமையான, ஏகாதிபத்திய ஒடுக்குமுறைகளுக்கு நிகர்த்த கச்சிதமாகவும் அரக்காதும் ஒழுங்கமைக்கப்பட்ட யாழ்ப்பாண வெள்ளாள நிறுவனத்தின் ஒடுக்குமுறையை மறுத்து திமிறிஎழுந்த நாகரீகத்தின் முதற்தலைமுறையான யோவேல் போல் அவர்களின் அடுத்தகாலடி இலங்கையன் எனவும் அறியப்பட்ட இ.வெ.செல்வரட்ணம் அவர்கள்.

சிறுபான்மைத் தமிழர் மகாசபை செயற்பாடுகளிலிருந்து அவரது ‘வாழ்வும் வடுவும்’ நூல்வரை அவரது போராட்டம் விரவிக்கிடக்கிறது.மேற்சாதியினருக்குக் கல்வி ஓர் கடமை, வாழ்க்கைநெறி எனில் தலித்துகளுக்கு அது ஒரு போராட்டம்! பெருங்கனவு!!

பிறப்பின் அடையாளமே சாதி அடையாளமாக உரைத்துப் பார்க்கும் சனாதன தர்மம் அவரது பிறப்பிலிருந்தே அவரைச் சீண்டுகிறது.சாதி வெறியனான வெள்ளாள விதானையிடமிருந்து ‘மெலிஞ்சியன்’ என இ.வெ. அவர்களின் பிறப்புச் சான்றிதழை அவரது தந்தையார் பெற்றுக்கொள்கிறார். மேற்சாதி கொடுத்த இழிவான பெயரைத் தானே மாற்றியதிலிருந்து யாழ்ப்பாண சமூகத்தின் மிகப்பெரும் கல்வியாளனாக அவர் மாற்றமுறுகிறார்.

117.பருத்தித்துறை வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் முகவரியில் அமைந்த அகில இலங்கை சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் 16 வது வருட மாநாட்டின் கெளரவ இணச்செயலாளர்களில் ஒருவரான கவிஞர் க.பசுபதி அவர்களுடன் இணைந்து 03.08.1959 இல் அவர் வடிவமைத்த அறிக்கை அவர் மேதமையையும் அறிவு விசாலத்தையும் சொல்கிறது. அவ் அறிக்கையின் ஒரு பகுதி இப்படிச் சொல்கிறது:

உதவித்தொழில் மந்திரியின் வருகையும் நெருக்கடியும் :

09.06.57 இல் 14 வது ஆண்டு மாநாட்டிற்கு அப்போதைய உதவித் தொழில் மந்திரி M.P.D. சொய்சாவை அழைத்திருந்தோம் அன்னாரின் வருகையைப் பெரும்பான்மைத் தமிழர்கள் பலரும் சிறப்பாக ஒரு அரசியற் கட்சியும் ஆர்ப்பாட்டம் செய்து கற்களையும் கறுப்புக் கொடிகளையும் வீசி, தங்கள் எதிர்ப்பைக் காட்டியதுடன் நில்லாமல் மாநாடு நடைபெற இருந்த மாநகரசபை மண்டபத்தையும் ஆக்கிரமித்து நம்மைக் கூட்டம் நடாத்த விடாதும் மந்திரி அவர்களை மாநாட்டில் கலந்துகொள்ளவிடாதும் கத்தினர். காலை 10 மணிக்கு நடக்கவிருந்த மாநாடு ஆக்கிரமிப்புக்காரர்களின் தலையீட்டால் பகல் 12 மணிக்கே நடத்த முடிந்தது.

இந்த எதிர்ப்பிற்கு மத்தியிலும் அன்று மாலை மந்திரியவர்களுக்கு திரு.இ.வே .செல்வரட்ணம் அவர்கள் வீட்டில் வைத்து வரவேற்பு நடத்தியது குறிப்பிடத்தக்கது. நமது சரித்திரத்திலே ஏன் தமிழர்களுடைய சரித்திரத்திரத்திலேயே இது கறைபடிந்த நிகழ்ச்சியாகும்.இந்த வேளையில் நாம் நெஞ்சில் நிறுத்தவேண்டியதொன்று.
நாம் மந்திரியை வரவழைத்தது சிறுபான்மைத் தமிழர்களின் வாழ்க்கைநிலை ,கல்வி ,பொருளாதாரநிலைகளைப்பற்றி எடுத்துச்சொல்லி நியாயமான இதுகாலவரை மறுக்கப்பட்ட உரிமைகளை அரசாங்கத்திடமிருந்து பெறுவதற்காகவே. இது நமது குற்றமா? பல வழிகளிலும் உரிமை இழந்திருந்த நாம் எமது உரிமைகளைப்பெற முனைவது குற்றமென்றால் இன்று தமிழர்கள் சிங்களவர்களிடம் உரிமைப்போராட்டம் நடத்துவதில் என்ன அர்த்தமிருக்குமோ?
இ.வெ.செல்வரட்ணம் அவர்களின் நுட்பமான தூரநோக்கான மகாசபை தீர்மானங்களில் ஒன்று பல்வேறு கட்சிகளில் அங்கத்துவராகவோ பொறுப்புகளிலோ இருக்கும் ஒருவர் மகாசபையின் நிர்வாகத்தில் பங்குபெறுவதைத் தவிர்த்தல் என்பதாகும். அந்த வகையில் தலித்துகளிற்கான தனித்துவமான அமைப்பை அவர் அவாவி நின்றார்.

28.02.1930 இல் உடுப்பிட்டி நாவலடியில் பிறந்து 21.03.2009 கனடாவில் இவர் காலமானார். இலங்கையில் கல்வி அதிகாரியாகவும், கனடாவில் கல்வி ஆலோசனைகளிலும் பணியாற்றினார். சென்ற்-பற்றிக்ஸ் கல்லூரியை அரசுடமையாக்குவதற்கு யாழ்-வேளாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தபோது அதற்கெதிராக ஏ.ஜே.கனகரட்ணா குரலெழுப்பியதை அவரது அஞசலி நிகழ்வில் இ.வெ. நினைவுகூர்ந்தார்.

தமிழ்ச்சமூகத்தின் அநேகமான, சிறப்பான தலைவர்கள் எல்லோருமே அகதியாய் பனியும் நோயும் மிடிமையும் என புகலிட வாழ்வு நோற்று இறந்துபடும் காலம் இவர் மரணத்தோடாவது முடிவுறவேண்டும்.

– சுகன்
08.04.2009

1 thought on “அஞ்சலி:

  1. கல்விமான் செல்வா இலங்கையன் மறைவு!
    டொரோண்டோவில் வசித்து வந்த எழுத்தாளரும், கல்விமானுமான கனடாத் தமிழ் இலக்கிய உலகில் செல்வா இலங்கையன் என அறியப்பட்ட இலங்கையர் செல்வரத்தினம் மார்ச் 21ந்திகதி காலமான செய்தியினையும், அவரது இறுதிச் சடங்குகள் பற்றிய விபரங்களையும் எழுத்தாளர் நவம் எமக்கு அறியத் தந்திருந்தார். அவ்விபரம் வருமாறு:

    Mr. Ilankaiyar Selvaratnam passed away on 21st March 2009 in Toronto. Mr. Ilankaiyar, a progressive minded Social Activist, Writer, retired Science Education Officer, Teacher at St. Patrick�s College and Vaitheeswara College, Jaffna, will be greatly missed by his family, students, and friends.

    Viewing takes place on 26th Thursday and 27th Friday March 2009 at Heritage Funeral Centre, 50 Overlea Blvd., (Don Mills & Eglinton) between 5 pm and 9 pm.

    The funeral Service will be held on 28th Saturday March 2009, at 10 am at the above Centre and the cremation will take place at St. John�s Norway Cemetery & Crematorium, 256 Kingston Road at 1pm.

    செல்வா இலங்கையன் அண்மையில் தனது வாழ்வு அனுபவங்களை ஒளிவு மறைவின்றிச் சுயசரிதையாக வெளியிட்டிருந்தார். இது தவிர கனடாவிலிருந்து வெளிவந்த தமிழ் ஊடகங்களில் அவ்வபோது கல்வித்துறை சார்ந்த கட்டுரைகள் பலவற்றையும் எழுதியுள்ளார். இவரது மறைவையொட்டி ‘நம்நாடு’ என்னும் வலைப்பதிவில் வெளிவந்த கவிதை கீழே:

    இலங்கையன் வணக்கம்! – கல்விமான் செல்வரத்தினம்(செல்வரத்தினம்) ஆசிரியர் மறைந்தநாள் கவிதை.

    – புதியபாரதி –

    மனிதரில் நேயம் மிக்கோர்
    மாமனி தன்னே என்பார்
    புனிதராய் நிற்போர் எல்லாம்
    புத்தனாய் மதிக்கக் காண்பார்
    கனிதரும் சுவைபோல் கல்வி
    கண்டவர் பயனே ஈவார்
    இனியதின் மகிமை எல்லாம்
    இலங்கையன் கொண்டான் என்பேன்!

    எறும்புகள் ஊர்தல் போன்று
    இவன்நடை இருக்கும் சின்னக்
    குறும்புகள் சிரிப்பி னோடு
    குறுமொழி கனமாய் மின்னும்
    பெறும்புகழ் இவனைச் சார்ந்து
    பெரும்தமிழ் அறிஞன் ஆனான்
    தொறும்நிலக் கனடா மன்றில்
    செந்தமிழ் மனிதம் தந்தான்!

    கரும்புகள் இனிக்கா திந்தக்
    கல்விமான் கதைக்கும் போதில்
    அரும்புகள் விரிதல் போலே
    அழகுற மொழிவான் சாதி
    நொரும்புகள் நிலத்தில் கண்டு
    நொடிந்தனன் அதற்குள் நின்றும்
    திரும்பினான் செல்வா என்னும்
    சிந்தனை யாளன் என்பேன்!

    ஆயிரம் குடங்கள் வைத்து
    அளன்கின்ற ஓமம் தோற்கும்
    பாயிரம் கொண்டு இந்தப்
    பரிதியின் பாடல் பூக்கும்
    தாயினும் சிறந்தான் இந்தத்
    தமிழறி வாளன் கண்டீர்
    நோயினை வென்றான் ஆயின்
    நின்றவன் போயே விட்டான்!

    ஊன்றிய தடியே இல்லான்
    உலவிய அறிஞன் எங்கே?
    வான்மடி சென்றார் மன்றில்
    வந்துநின் றழுவான் எங்கே?
    கூன்பணி கொள்ளான் தேசக்
    கூட்டமாய் நிற்பான் எங்கே?
    ஏன்இவன் சென்றான் என்றே
    என்னுளம் கனக்கு தம்மா!

    ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

    ஒரு தூயனின் இறப்பில் இதயத்தால் வணங்கி
    புதியபாரதி

    http://namnaadhu.blogspot.com/2009/03/blog-post_26.html

    தகவல்: எழுத்தாளர் நவம்
    [email protected]

Comments are closed.