ஈஸ்டர் கொலைகள்

கட்டுரைகள்

இந்த தேவாலயத்தை நிர்மூலமாக்கினாலும், மூன்றே நாட்களில் கட்டியெழுப்புவேன்
-இயேசுக் கிறிஸ்து

நேற்று இலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகளால் நிகழ்ந்த புகை அடங்க முதலே, இஸ்லாமியர்கள் மீதான பழிப்பும், வன்மம் மிக்க நினைவுகூறல்களும் சமூக வலைத்தளங்களில் புகையத் தொடங்கிவிட்டன. இலங்கையில் அமைதியே இருக்கக்கூடாது, இரத்தமும் குண்டும் கொலையும் பழிவாங்கல்களும் தொடர்ந்துகொண்டேயிருக்க வேண்டும் என்ற இரத்த வேட்கை, புலம் பெயர்ந்த எளிய தமிழ்ப் பிள்ளைகளின் முகப்புத்தகங்களில் வழிந்துகொண்டேயிருக்கிறது.

இதுவரை கிடைத்த ஊடகச் செய்திகளின்படி, இந்தக் குண்டுவெடிப்புகளை சர்வதேச வலைப்பின்னலிலுள்ள இலங்கையர்களான இஸ்லாமிய அடிப்படைவாத, பயங்கரவாதிகளே செய்துள்ளதாகத் தெரிகிறது. இத்தகைய பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளிற்கு இஸ்லாமிய மக்கள் பொறுப்பாக மாட்டார்கள் என்கிற அடிப்படை உண்மையைக் கூடப் பார்க்க முடியாதளவிற்கு இந்தத் தமிழ்ப் பிள்ளைகளின் இருதயம் கெட்ட வன்மத்தால் கடினமாயிருக்கிறது.

காத்தான்குடிப் பள்ளிவாசல் கொலைகளிற்கு தமிழ் மக்கள் பொறுப்பல்ல, புலிகளே பொறுப்பு. நவாலி தேவாலயத்தின் மீதான விமானத் தாக்குதலிற்கு சிங்கள மக்கள் பொறுப்பல்ல, இலங்கை அரசே பொறுப்பு. அதுபோலவே இந்தக் குண்டுவெடிப்புகளிற்கும் அடிப்படைவாதப் பயங்கரவாதிகளே பொறுப்பு. இஸ்லாமியப் பொதுமக்கள் பொறுப்பாக மாட்டார்கள் என்பதோடு இனி அரசால் திணிக்கப்படும் பாதுகாப்பு கெடுபிடிகளையும் சந்தேகப் பார்வைகளையும் சுமக்க வேண்டிய துன்ப நிலைக்குள் அவர்கள் தள்ளப்பட்டுமிருக்கிறார்கள்.

இலங்கை அரசாங்கமோ அல்லது எதிர்க்கட்சி வரிசையிலிருப்பவர்களோ இந்தத் தாக்குதல்களிற்குப் பின்னாலிருக்கிறார்கள் என்ற ஊகங்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த ஊகங்கள் சரியற்றவை என்றே நான் நினைக்கிறேன். போர்ச்சூழல் அற்றுப்போய் மெதுமெதுவாக இயல்பு வாழ்க்கையை நோக்கி நகரும் நாட்டையும் இலங்கையின் முக்கிய பொருளாதார அலகான உல்லாசப் பயணத்துறையையும் அவர்கள் சீரழிக்க நினைக்கமாட்டார்கள். தாக்குதலில் சிங்கள மக்களும் வெளிநாட்டவர்கள் முப்பது பேர்கள்வரையும் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் வைத்துப் பார்க்கையில் இலங்கை அரசு இதன் பின்னணியில் இருப்பதாகச் சொல்லப்படும் ஊகம் தவறான ஊகமே.

இலங்கை அரசின் கண்காணிப்பை மீறி இத்தகையதொரு பாரிய தாக்குதல் ஒருங்கிணைக்கப்பட்டிருக்க முடியாது என்ற சந்தேகமும் வலுவற்றதே. பல தடவைகள், பல வளர்ச்சியடைந்த நாடுகளின் இறுக்கமான கண்காணிப்புகளை மீறியும் தீவிரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தியுள்ளார்கள். பாதுகாப்புத் துறையில் நுாறுசதவீத வளர்ச்சியை எட்டிய பிரான்ஸில் நான்கு வருடங்களிற்கு முன்பாக இதேபோன்ற தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.

இஸ்லாமிய மக்களுக்கு எதிராக, பவுத்த இனவாதிகள் மிக இலகுவாக ஓர் இனக் கலவரத்தை ஏற்படுத்தக் கூடிய இந்தச் சூழலை இலங்கை அரசு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கத் துரிதமாக முயன்றதும் நன்நம்பிக்கை வெளிச்சங்களே. இலங்கை அரசுமீது நமக்கு ஆயிரம் விமர்சனங்களும் முரண்களும் இருந்தாலும் இந்தக் குறிப்பான ஆபத்தான நிலமையை இலங்கை அரசு கையாளும் முறையில் குற்றங்காண இதுவரை ஏதுமில்லை. அப்படியொரு இனக்கலவரம் நிகழாதா? தமிழருக்கு நடந்த கொடுமைகள் இஸ்லாமியருக்கும் இப்போது நிகழாதா என ஏங்கும் எளிய தமிழ்ப் பிள்ளைகளின் ஆசைகள் நிறைவேற வாய்ப்புகள் இல்லை.

சில தமிழ்ப் பிள்ளைகள் இந்தச் சந்தர்ப்பத்தில், இதுதான் மடுத் தேவாலயத்தில் நிகழ்ந்தது, இதுதான் நவாலியில் நிகழ்ந்தது என நனவிடை கொடூரமாகத் தோய்வதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இப்போது இறந்தவர்களிலும் கணிசமானோர் தமிழர்கள்தானே. தெற்கில் மட்டுமா குண்டு வெடித்தது, கிழக்கிலும்தானே வெடித்துத் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில் இவர்கள் இலங்கை அரசின் முன்னைய கொலைகளை ஞாபகப்படுத்துவதன் மூலம் என்னதான் சொல்லவருகிறார்கள்? “துன்பம் தந்தவனுக்கு அதையே திருப்பிக்கொடு“ என்ற மேதகு தலைவரின் மொக்கு மொழியிலா இவர்கள் பேச விழைகிறார்கள்?

இலங்கையில் இன அடிப்படைவாதங்கள் நம்மைப் பேரழிவிற்குள் தள்ளின. இதுவரை இருந்த பவுத்த அடிப்படைவாதத் தீவிரவாதிகளோடு இப்போது இஸ்லாமிய அடிப்படைவாத் தீவிரவாதிகளின் அபாயத்தையும் இந்நாடு எதிர்நோக்குகிறது. இந்துத்துவ அடிப்படைவாதம் இந்தியாவிலிருந்து எல்லைகடந்து இலங்கைக்குள் நுழையும் முயற்சிகளில் இருக்கிறது. நம் சந்ததியினரை எல்லாவித அடிப்படைவாத அரசியலிலிருந்தும் விலகி நிற்கச் செய்வதே அழிவுகளைத் தவிர்ப்பதற்கான ஒரே மார்க்கமும் அதே அமைதி மார்க்கமுமாகும்.

மத, இன, மொழி அடிப்படைவாதிகள் You Tube-களிலும் மேடைகளிலும் மதவழிப்பாட்டிடங்களிலும் ஆற்றும் உரைகளைக் கேட்க விறுவிறுப்பாகத்தானிருக்கும். குண்டுகள் தயாரிப்பதற்கான பொருட்கள் வேறாயிருந்தாலும் இத்தகைய உரைகளும் அறைகூவல்களும் முட்டாள்தனமான அடிப்படைவாத நம்பிக்கைகளுமே குண்டுதாரிகளைத் தயாரிக்கின்றன. அடிப்படைவாதத்தில் முற்போக்கானது என்றோ ஆபத்தற்றது என்றோ எதுவுமில்லை.

இந்த சின்னஞ்சிறிய அழகிய தீவை எவர் நிர்மூலமாக்கினாலும் அதை நாங்கள்தான் ஆளும்பேருமாக மீளக் கட்டியெழுப்ப வேண்டும். மூன்றே நாட்களில் கட்டியெழுப்ப இயேசு வரார்!

1 thought on “ஈஸ்டர் கொலைகள்

  1. I Think its the retaliation by Jihadists against the west . They found soft target in S.L. Most Christians affected are tamils , so minimal chance of anti Muslim riots or anything.
    தாக்குதலுக்கு திட்டமிட்டவர்கள் தலை நகரிலும் அதற்கு அடுத்த மாவட்டமான நீர்கொழும்பிலும் , 200 கிலோ மீட்டார் தொலைவில் உள்ள மட்டக்ளப்பையும் தேர்ந்தெடுத்தது தற்செயலானது என எந்த பகுத்தறிவு உள்ளவனும் சிந்திக்க மாட்டான் .
    அது மட்டுமல்ல மேற்குறிப்பிட்ட தேவாலயங்களுக்கு சிங்களவர்களும் செல்வார்கள் என்றாலும் தமிழர்களே பெரும்பான்மையாக செல்வார்கள் .
    தமிழ் service தனியாயாகவும் , சிங்கள சர்வீஸ் தனியாகவும் மேற்குறிப்பிட்ட தேவாலயங்களில் நடைபெறுவது வழக்கம் .
    குறிப்பிட்ட நாளில் தமிழ் சேர்விஸ்த்தான் முதலில் நடைபெற்றிருக்கிறது .
    மூன்று தேவாலயங்களிலும் குறிப்பிட்ட தமிழ் சேவை நடைபெறும் நேரத்திலேயே குண்டு வெடிக்க வைக்கப்பட்டிருக்கிறது .
    இது தற்செயலானது என யாரும் சப்பைக்கட்டு கட்ட முடியாது .

    தாக்கத்தை திடடமிட்டவர்கள் தாம் சார்ந்த முஸ்லீம் சமூகம் பெரும்பான்மை சமூகத்தாலும் , இலங்கை அரசாலும் பாதிக்கப்படக்கூடாது என திட்டமிட்டு தமிழர்களை பெருமளவில் பலியெடுத்திருக்கிறார்கள் .
    உல்லாச பயணிகள் தாக்கப்பட்டதற்கு காரணம் இந்த ஜிகாதிகளுக்கு பெர்குலகத்தினர் மீது இருக்கு வெறுப்புணர்வுதான் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம் . இதனாலேயே இலங்கை அரசுக்குஇந்த தாக்குதல் பற்றி எதுவுமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை என வேப்பிலை அடிக்க முற்படாதீர்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *