வாழ்தலுக்கான இச்சை

கட்டுரைகள்

-ஸ்ரீநேசன்

ஷோபாசக்தியின் “இச்சா” நாவலை எடுத்து மூன்று நாட்களில் படித்து முடித்தேன். ஏற்கனவே அவரது கொரில்லா, ம் -நாவல்களின் வாசிப்பு அனுபவமே இந்நாவலை வாசிக்கத் தூண்டியது. நண்பர் சீனிவாசன் நாவலை அன்பாகத் தந்து ஓராண்டை நெருங்குகிறது. அறுவை சிகிச்சைக்குப் பின்பான ஓய்வில் வாசிக்கப் பல நூல்களைத் தேர்ந்து கொண்டேன். அவற்றுள் இந்நாவலும் இருந்தது. சிகிச்சைக்குப் பின்பான இந்த அரை ஆண்டுக்காலத்தில் பல முக்கியமான நூல்களை வாசித்து முடித்திருக்கிறேன். ஆயிரம் பக்கத்தை நெருங்கிய ‘அசடன்’ நாவல் உட்பட. நினைக்க வியப்பாக உள்ளது. இத்தனைக்கும் எந்தக் கட்டாயமும் கெடுவுமில்லாமல் எப்போது ஒரு புத்தகம் என்னை அழைக்கிறதோ அப்போது மட்டுமே வாசித்து வந்தேன். வாசித்த நூல்கள் ஒன்றுகூட என்னை ஏமாற்றவில்லை. அதுவே எனக்குப் பெருமிதம்தான். கொடுத்த வாக்குக்காக, திட்டமிடாமல் தி.ஜாவின் சில நாவல்களை இடையே வாசித்து, பத்துப் பக்கக் கட்டுரை ஒன்றை எழுதி முடித்ததும்கூட நடந்தது.

ஷோபாசக்தி அவரால் தவிர்க்கவே முடியாத நினைவுகளான ஈழப்போராட்டச் சூழலையே இதிலும் களமாக்கியுள்ளார். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான விமர்சனப் பார்வையைத் தொடக்க நாவல்களைப் போலவே இதிலும் தொடர்ந்திருக்கிறார். ஆனால் அவற்றில் இருந்த “காட்டம்” இதில் குறைவு போல் தோன்றுகிறது. இன்னும் சொல்லப்போனால் அவர்களின் போர் செயல்பாடுகளால் சிறுவர் சிறுமியரைப் பயன்படுத்திக் காவு கொண்ட தீங்கைத் தம் எழுத்துகளில் கவனப்படுத்தியதைத் தொடர்ந்து, சிங்கள ஆதிக்க வன்முறைகளினால் அதற்குத் தேவையுமிருந்ததைக் குறிப்பாக இந்நாவலில் எடுத்துப் பேசவும் செய்திருக்கிறார். விடுதலைப்புலிகள் பேரழிப்புக்கு உள்ளானதுவரை இந்நாவலில் எழுதிவிட்டார். இப்போது ஏற்பட்டிருக்கிற இருண்மைக்குள் அவரும் திகைத்து நின்றிருப்பார். சர்வாதிகாரத்தைத் தகர்க்க ஆயுதமேந்தியவர்களையும் எதேச்சதிகாரிகளாக ஐயப்பட்ட அல்லது அச்சப்பட்ட பார்வை அவர்களின் அபத்த முடிவைக் கண்டுணர்ந்தபின்பு இனியும் புலிகளின் வழிமுறை நமக்குத் தேவை எனவும் அதுவே நமக்கு வெளிச்சம் தரக்கூடுமெனவும் நாவல் எழுதக்கூடும். எதேச்சதிகாரத்தின் கொடுங்கோன்மைக்கு மக்கள் கண்மூடி அடிபணியலாம்; கலைஞன் ஒருபோதும் தம் உலைக்களத்தை உறங்கவிடுவதில்லை. சமகால அரசியலைப் பேசும் இந்நாவலில் இயக்கம் சார்ந்த பல உண்மை நபர்கள் கற்பனைப் பாத்திரங்களாக்கப்பட்டுள்ளனர் என்பதோடு வேலுப்பிள்ளை பிரபாகரன் நாவலில் உண்மைப் பாத்திரமாக வருவதையும் கூறவேண்டும். கிழக்குச் சிறப்புத் தளபதி கருணா அம்மான், முதல் பெண் கடற்கரும்புலி கேப்டன் அங்கயற்கண்ணி, புலிகள் இயக்கச் செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா போன்றோர் குறித்த கதையாடல் நாவலில் உண்டு. காசிஆனந்தன் பெயர் கூட உச்சரிக்கப்படுகிறது லேசான எள்ளலோடு.

இன்று தம் நாவல்கள், சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளின் மூலமாகவும் தம் நடிப்புப் பணி சார்ந்தும் சர்வதேச அடையாளம் பெற்றிருக்கிறார் ஷோபாசக்தி. அதனாலும்கூட வடிவ, உத்தி நோக்கில் தொடக்க நாவல்களில் இல்லாத ஒரு நவீனத்தன்மையை இந்நாவலில் கையாண்டிருக்கிறார்போல. கதைசொல்லி, (சிறையதிகாரி) ஒருவர் ஆவணமாகத் திரட்டித் தன்னிடம் ஒப்படைத்த (ஆயுள் தண்டனைக் கைதியின்) கையெழுத்துப் பிரதியை ஒழுங்குபடுத்தி அதை வாசகர் முன் வைப்பதான உத்தி அவ்வளவு புதுமையானது இல்லை என்றபோதிலும். ஆனாலும் கதை நெடுகிலும் விவரணைப் பொதுமொழியைத் தாண்டிப் பயன்படுத்தப்பட்டுள்ள ஈழத்தமிழ் கிராமியப் பண்பாட்டுச் சொல்வழக்குகளும் வெளிப்பாடும், ஷோபாசக்தியின் படைப்பு மொழியும் நம்மை வாசிப்புக் கிளர்ச்சிக்கு இட்டுச் செல்லத் தவறுவதில்லை.

கேப்டன் ஆலா (வெள்ளிப்பாவை) என்கிற மனிதவெடிகுண்டுப் போராளி, கொழும்பில் அமைச்சர்களும், ராணுவத்தளபதிகளும் பங்கேற்கும் மேம்பாலத்திறப்பு விழாவில் ‘இரட்டைச் சிறகுகள்’ என்கிற திட்டத்தின்படி தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தாமல் (கடைசி நேரத்தில் அது தான் நினைத்தவாறு மகிமை பொருந்திய சாவாக இல்லாமல் வெறும் சுவரில் மோதி குருட்டு வெளவால் போலச் சாக நேருவதாக இருந்ததால்) கைவிட்ட சம்பவத்தால் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறப்பு விசாரணைக்கைதியாக இருந்து, தீர்ப்பில் முந்நூறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனைக்கு ஆளாகி (ஐந்து மரண தண்டனைக்குச் சமம்) கண்டி ரஜ வீதிய தனிமைச்சிறை கொட்டடியில் அடைக்கப்பட்டுள்ளார். அங்குத் தலைமைக்காவல் அதிகாரியாக இருந்த, சிறைக்கைதிகளால் ‘லொக்கு நோனா’ என்று அழைக்கப்பட்ட ‘மர்லின் டேமி’ என்ற வெள்ளை இன சிறைக் கண்காணிப்பாளரின் கருணையால் தம் அனுபவங்களைப் பதிவதற்கான தாள் கிடைக்கப்பெற்றுத் தம் வாழ்வனுபவங்களைப் பலவிதக் குறிப்புகளாகவும் சம்பவங்களாகவும் சங்கேதங்களாகவும் எழுதி வைக்கிறார். அவரது அகால மரணத்துக்குப் பின் அந்த அதிகாரியால் அவை ரகசிய நகலாகப் (பென் டிரைவ்) பதியப் பெற்றுக் கதைசொல்லியிடம் பிரான்சில் ஒப்படைக்கப்பட்டதே இந்த நாவலாக எழுதப்பட்டுள்ளது. இந்நாவலில் ஆலா எழுதியதாக ஒருவரி: ஒவ்வொரு சொல்லும் ஒரு சிறகு. ஒவ்வோர் எழுத்தும் ஓர் இறகு.

ஆலா தம் இளமைக்காலம் தொட்டுச் சாவதற்கு முன்தினம் வரையிலாகத் தாம் ஆட்பட்ட மிதமிஞ்சிய இம்சைகள், பாலியல் வன்முறைகள், விசாரணை வதைகள், கட்டாய போதை ஊசி மாத்திரை செலுத்தல்கள், அவற்றின் நீட்சியான கொடுஞ்சிறை அனுபவச் சித்திரிப்புகள் என அனைத்தையும் எழுதிவைத்துள்ளார். என்னைப்போல் இதய அறுவை சிகிச்சை செய்தவர்கள், பிறகு வாசித்துக் கொள்ளலாமோ என அஞ்சுகிற அளவுக்குக் கோரமான நிகழ்வுகள்; அதன் பதிவுகள். ஷோபாசக்தி என்னதான் சிறந்த படைப்பாளியாக இருப்பினும் இவ்வனுபவங்களை வெறும் கற்பனையின் துணைகொண்டு மட்டும் எழுதிவிட்டிருக்க முடியாது. சுய அனுபவங்கள், வந்துசேர்ந்த தகவல்கள், திரட்டிய செய்திகள் என உண்மையின் நெருப்பும் அவருக்கு வெளிச்சம் தந்திருக்கவேண்டும். ஆலா என்கிற கிராமப்புறச் சிறுமி இளமைப்பருவம் தொட்டு அச்சத்திலேயே வளர்ந்து, எதிர்பாராச் சந்தர்ப்பத்தில் தம்பியைச் சிங்கள ஆக்ரமிப்பாளர்களிடம் பறிகொடுத்துத் ( வாழ்வின் துயரத் திருப்பமே இங்கிருந்துதான் தொடங்குகிறது), தானும் அவர்களிடம் சிக்கி, மீண்டு தலைமறைவாக இடம்பெயர்ந்து இயல்பாகவே விதியின் நகர்வு போல் புலிகள் இயக்கத்தில் போய் விழுவது வரை நாவலில் வேகத்துக்குக் குறைவில்லை. இடையில் புலிகள் பயிற்சி முகாமில் சுல்தான் பப்பா என்கிற இயக்கத்தின் முதல்நிலைத் தளபதி அலுவலகத்தில் பணியாற்றும் காலம் – அது காதல் விழைவு கொண்டதாக உள்ளது மட்டுமே வாசகனுக்கும் ஓர் இளைப்பாறல். ஏற்கெனவே தனது கிராமத்தில் சிங்களப்பையன் தன்மீது ஒருதலைக் காதல் கொண்டிருந்தபோது உதிக்காத உணர்வு, தம் தளபதி மீதான ஒருதலைக் காதல் பேருணர்வாக வெளிப்பட்டு வாழுதலின் விருப்பத்தை – இச்சையை- ஊக்குவிக்கிறது. நாவலின் தலைப்பு இச்சா. சிறைச்சாலையில் மரத்துப்போன தம் அகத்தையும் புறத்தையும் கற்பனையின் பாலியல் இச்சையால் உயிர்ப்பாக்கிக் கொள்ள நாடுவதையும் ஆசிரியர் குறிப்பாகத் தந்திருப்பதால் தலைப்புக்குப் பொருள் கூடுகிறது.

ஈழத்தின் அம்பாறை நகரத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலுப்பங்கேணி கிராமத்தின் பதுமர் குடியில் பிறந்தவர் ஆலா. சிறுமியாகக் கிராமத்து வாழ்வைத் திளைத்து முழுமையாக வாழும் ஏதுமறியா அப்பாவியான ஆலா கொஞ்சம் கொஞ்சமாய்த் தம் கிராமத்தில் சிங்கள ஆக்ரமிப்பாளர்களின் விபரீதங்களை எதிர்கொள்வது நேர்த்தியாகக் கூறப்பட்டுள்ளது. கிராமிய வாழ்வின் விவரணைகள் கவித்துவ ஈர்ப்பாய் நிறைந்திருக்கின்றன. சிறுதெய்வ வழிபாடு, ஏறணைத் தம்புரான், குறளி, புலுடுப்பேய், ஏவல் போன்ற நாட்டார் நம்பிக்கைகளும், ஈழத்தமிழரின் கண்டி அரசன் கூத்து, ஞானசெளந்தரி கூத்து, அர்ச்சுனன் வில்வளைவு, நல்லதங்காள் கூத்து, கண்ணகி வழிபாட்டு திருக்குளிர்த்தி விழா, நீரரமகளிர் நாடகம், வசந்தன் கூத்துப்பாடல்கள் (ஆலாவின் அப்பாவே ஒரு கூத்து நடிகர்தாம்) போன்றவையும் மிகையில்லாமல் தேவைக்கேற்ப உயிரோட்டமாக ஷோபாசக்தியால் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஓர் ஆணாக இருந்து பெண்ணின் பொதுவெளிக்குப் பரிச்சயமற்ற அகப்புற விஷயங்களைப் பதிவு செய்துள்ளதிலும் அவர் வெற்றிகரமான படைப்பாளியாகத் தன்னை நிரூபித்துள்ளார். வாசிப்பினிடையில் நாவலில் பேசிக்கொண்டிருப்பது ஷோபாசக்தியோ என்ற மயக்கம் ஏற்படினும் தொடராதவாறு ஆலாவை உறுதிபடுத்திக்கொண்டே இருக்கிறார்.

“நான் பிறந்த கிராமத்தின் பெயர் இலுப்பங்கேணி. இலங்கை வரைபடத்தில் இப்போது அது ‘மடுப்பகம’ எனச் சிங்களத்தில் குறிப்பிடப்படுகிறது. என் அழகிய கிராமம், பட்டிப்பாளை ஆற்றின் கரையிலிருக்கிறது. எங்கள் கிராமத்துத் தமிழ் மக்கள் அதைக் களியோடை ஆறு என்பார்கள்.ஆறும் தனது பெயரை மறந்துவிட்டது. இந்த ஆற்றின் பெயர் இப்போது ‘கல்லோயா’ எனச் சிங்களத்தில் ஆகிவிட்டது”. இந்த ஒரு பத்தி விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எத்தனை தேவையிருந்தது என்பதை நமக்கு எடுத்துக்காட்டிவிடுகிறது. சிங்களர்களின் தமிழ்ப்பகுதி கட்டாய ஆக்ரமிப்பு அட்டூழியங்கள் எவ்வொரு தமிழனையும் ஆவேசப்படுத்தும். அது துல்லியப் பதிவாக்கப்பட்டுள்ளதானாலும் இது போன்ற அடாவடிகளுக்கு எதிராக இயக்கம் கண்ட புலிகள் அப்பாவித் தமிழ் இளைஞர்களையும் சிறுமிகளையும் பொருளற்ற உயிர்த்தியாகங்கள் புரிய எவ்வாறு ஊக்குவித்து அமைப்பை வலிமைப்படுத்திக்கொண்டார்கள் போன்ற பதிவுகளையும் இந்நாவல் முன்வைக்கத் தவறவில்லை.

அம்பாறைப் பாடசாலையில் காலை இறைவணக்கத்தில் தேவாரம் பாடி முடித்தவுடன் புலிகள் இயக்கத்து ‘உம்மா’ என்பவர் பேசுவது காட்சியாக விவரிக்கப்பட்டுள்ளது. “படிப்பை விட்டுவிட்டு முதலில் போராட்டத்தில் இணையச் சொன்னார். அதனால் மட்டுமே எங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியுமென்றும் குறிப்பாக, மாணவிகளின் மானத்தையும் கற்பையும் பாதுகாக்க முடியுமென்றார். அல்லது சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பிள்ளை பெற்றுக் கொடுக்கும் அடிமைகளாக நீங்கள் மாற்றப்படுவீர்கள் என்று எங்களைப் பார்த்து இரண்டு கைகளையும் விரித்துச் சொல்லி அது உண்மை என்பது போலத் தலையை மேலும் கீழுமாக அசைத்தார். கிருஷாந்தி என்ற பாடசாலை மாணவி, யாழ்ப்பாணத்தில் ராணுவத்தால் வல்லுறவு செய்யப்பட்டு செம்மணியில் ரகசியமாகப் புதைக்கப்பட்டதை உணர்ச்சி மேலிட்டுக் கண்கள் சிவக்கச் சொன்னார். அவரது உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. கேட்டுக்கொண்டிருந்த நாங்களும் கண்ணீர் விட்டோம். அடுத்த நாள் கம்சியும் தேனகாவும் பாடசாலைக்கு வரவில்லை. அவர்கள் புலிகள் இயக்கத்துக்குப் போய்விட்டதாகக் பள்ளிக்கூடத்தில் பேசிக்கொண்டார்கள்.” இப்படியெல்லாம் கட்டி எழுப்பிய அந்த இயக்கத்தையே தம் நெறியற்ற போர்முறையால் அழித்தொழித்த பேரினவாத வெறித்தனத்தை வேறு எப்படி எதிர்க்கொண்டிருக்க முடியும் என்ற கேள்வியும் எழத்தானே செய்கிறது. வீட்டுக்குள் நுழைந்தது ஆபத்தான நாகமாக இருப்பினும் காட்டுக்குள் கொண்டுபோய் விட்டுவிடலாம். வளர்த்துப் பயிற்றுவிக்கப்பட்ட வெறிநாய்களின் ஏவல் எனும்போது நாமும் பலத்தைத் திரட்டி அடித்துவிரட்டவோ, கொல்லவோ செய்துதானே ஆகவேண்டும்.

ஆலா தன்னுணர்வோ விருப்பமோ இன்றிதான் புலிகள் இயக்கத்தில் இணைய நேர்ந்தது எனினும் அங்குத் தரப்படுகின்ற கடுமையிலும் கடுமையான பயிற்சிகள் இந்தக் காட்டுச் சிறுமிக்கு இனிய விளையாட்டுகள்தாம்.

“வலது கையில் துப்பாக்கி வைத்திருப்பவர் இடது கையில் சாவை வைத்திருக்கிறார்” என்ற உண்மையை அறிந்திருப்பவரை, தனது கழுத்தில் தொங்கும் சயனைட் குப்பியை எந்தத் தருணத்திலும் தான் அருந்திவிடக்கூடாது எனத் தமக்குள்ளேயே இரகசிய உறுதியோடிருப்பவரை, சிறுபொறி பெருங்காட்டை விழுங்குவதுபோல இந்தக் குப்பி தன்னை விழுங்கிவிடக்கூடாது; அது சாவின் குறுக்குவழி என்ற முழுப் பிரக்ஞையுடன் உள்ளவரை, இரட்டைச் சிறகுகள் குண்டுவெடிப்புத் திட்டத்தின் எதிர்பாரா முடிவு தம் சாவை அர்த்தமற்றதாக்குவதாகக் கருத வைக்கிறது. “புலிகள் இயக்கத்தின் கல்லறைகளில் காணப்படும் ‘வீரமரணம்’ என்ற எழுத்துகள், வீழ்ந்ததற்கான குறிப்பல்ல. எப்படி நின்றோம் என்பதற்கான அடையாளம்.” அதற்குத் தம் இந்த அற்பச்சாவு பொருந்தாது என்ற சுரீர் நினைவை உண்டாக்கிவிடுகிறது. உலக அளவில் இலங்கை தற்கொலையில் முதலிடம் என்ற அவமானத் தகவலையும் அறிந்தவர்தாம் ஆலா. என் சாவு நிமிர்ந்த பார்வையுடன் எதிரியைப் பார்க்க வேண்டும் என்றெல்லாம் எண்ணமுடையவர் என்பதனாலேயே கொழும்பு குண்டுவெடிப்பில் தம் மரணம் வெற்றுத் தற்கொலையாக அர்த்தப்பட்டுவிடக்கூடாது என வெடிக்காமல் அமைதியாக நின்றுவிடுகிறார்.

இப்படிப்பட்ட லட்சியங்கள் நடைமுறை வாழ்வில் எப்போதும் சாத்தியமாகக்கூடுமா? தேசத்துரோகக் குற்றவாளியாகி தண்டனையும் பெற்ற பிறகு தாம் விரும்பிய வீரமரணம் அல்லது மகிமை பொருந்திய சாவுக்கு வழியுண்டா என்பதுதான் பேரவலம். ஆனாலும் ஆலா முந்நூற்றாண்டு கடுங்காவல் வதைக் கொடுமைகளுக்கு ஊடே தாம் விரும்பிய மாட்சிமைமிக்க மரணத்தை எப்படி நிகழ்த்திக் காட்டினார் என்பதுதான் ஆலாவின் வெற்றியும் நாவலின் வெற்றியும் ஆகிறது.

இந்நாவலின் மூலமாக ஷோபாசக்தி பெண்கள் தம் குழந்தைப்பருவம் தொட்டு மரணத்தருவாய் வரை ஆண்களால் உடல்ரீதியில் (பாலியல் ரீதியாகவும்) எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள் அல்லது வதைபடுகிறார்கள் என்பதையும் உரக்க வெளிப்படுத்தியுள்ளார். ஆலாவின் சித்தப்பாவின் (அம்மாவுடைய தங்கை கணவர்) தந்தை, அப்பாச்சி என்று அழைக்கப்படும் ஓய்வுபெற்ற ஆசிரியர் சிறுமியான ஆலாவுக்குத் தரும் தொடர் பாலியல் மீறல் வாசிப்பில் அதை எதிர்கொள்ளும் ஆண்களைச் சுய அவமானம் கொள்ளச் செய்பவை; இது ரகசியச் சுரண்டல் எனில் ஆதிக்க சிங்கள இனவாதிகளின் பேச்சும் செயலும் வெளிப்படையானது. கிராமத்துச் சிங்களப்பையன் காக்கிலால் மற்றும் விசாரணை அதிகாரிகளின் வெளிப்பாடுகள் அருவெறுப்பையும் அவலத்தையும் வெளிக்காட்டுவன. விசாரணைக்கைதியாக இருந்த அந்த இரண்டு ஆண்டுகளில் “உடலில் துணி இருந்த நாட்களை ஒற்றைக் கைவிரல்களால் எண்ணிவிடலாம். நான் அடிக்கப்படாதிருந்த நாட்களை மற்ற கைவிரல்களால் எண்ணிவிடலாம். அநேகமான நாட்கள் நிர்வாணமாகவே இருந்தேன். அப்போது மறைவிட ரோமங்கள்கூட என் நிர்வாணத்தை மறைக்கவில்லை. அவை மெழுகுவர்த்தி நெருப்பில் பொசுக்கப்பட்டிருந்தன” என்ற ஆலாவின் பதிவு நம் அமைதியைக் குலைக்கவே செய்யும். நாயைக் கொண்டு நடத்தும் போர்த்துகீசியர் காலத்துத் தண்டனை வாசகனை உலுக்கும். இந்திய ராணுவப் பகுதியில் காவலுக்கு நின்ற ராணுவக் காவலர் காரியவம்சத்தின் விநோத தகாச்செயலையும், அறுபது வயது கடந்த கைதி திரேசா அம்மாவின் வாழ்வு மற்றும் சிறை அனுபவங்கள் கவனம்கொள்ள வேண்டியவை. இதனூடே சுல்தான் பப்பா எதைச்சொன்னாலும் செய்யக் காத்திருக்கிற, அவர்மீது அளவற்ற நேசமும் மதிப்பும் வைத்திருக்கிற ஆலாவின் பிறந்தநாளிலேயே அவரைக் தற்கொலை குண்டுதாரியாக அவர் முன்மொழிவதும் கூட ஒருவகைப் பயன்பாடாகவே புரிந்துகொள்ள முடியும்.

“ஆலா தான் எழுதிவைத்திருக்கும் பக்கங்களில் குறிப்பிட்டிருப்பது போல கிறிஸ்துமஸ் தினத்துக்கு முன் தினம் ‘லன்டோ பிளான்சே’ நகரத்தின் குடியரசுச் சதுக்கத்தில் இறக்கவில்லை. அதற்கு இரண்டரை வருடங்கள் முன்னதாகவே 2013 ஜூன் மாதம் 16-ம் தேதி அவர் கண்டி ரஜவீதியச் சிறைக்குள் கடும் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். முந்நூறு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த அவர், ஒருபோதும் சிறையில் இருந்து வெளியே வரவேயில்லை.” இந்தக் குறிப்பு வாசகன் எதிர்பாராதது. ஆலாவின் விடுதலைச் சித்திரிப்புகளும் வெளிநாட்டில் வாமனனுடனான வன்ம வதை அனுபவங்களும், ‘லன்டோ ப்ளான்சே’ ரகசிய போலீஸ் சுற்றி வளைத்துச் சுட்டு வீழ்த்தும் காட்சிகளும் மிகையோ என்ற ஐயப்பாடு இந்தச் சிறு குறிப்பின் மூலம் களையப்படுகிறது.

உண்மைச் சிறை அனுபவங்களும் கற்பனை விடுதலை அனுபவங்களும் ஒன்றுடன் ஒன்று முயங்குவதாலும், மரணமுற்றது குறித்த இரு வேறு முடிவுகளாலும் எதார்த்தவாத நாவல் இயல்பாகவே பின் நவீனத்துவ நாவலாக மாறிவிடுவதை நாம் உணர்கிறோம். நாவலாசிரியர் கற்பனையை உண்மையாக வளர்த்தெடுத்த விதத்தில் உண்மையும் ஆசிரியரின் கற்பனையே என நம்மைச் சுயநினைவுகொள்ளவும் செய்துவிடுகிறது. வாசிப்போருக்கு சில ஆர்வமான கேள்விகள் எழலாம். சிறையில் மரணமடைவதற்கு முன்தினம் வரையில் ஆலா இதை எழுதியிருந்தார் எனில் விடுதலைக்குப் பின்பான கற்பனைகளை எப்போது எழுதத்தொடங்கியிருப்பார்? பேறுகால விடுப்பில் போன சிறையதிகாரி மர்லின் டேமி இடையில் நிறுத்தப்பட்டிருந்த தாளைப் பணியில் சேர்ந்து தர ஏற்பாடு செய்ததிலிருந்தா? சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது உண்மையா? அல்லது அதிலிருந்தே கற்பனை தொடங்கிவிட்டதா? அல்லது அதற்கும் முன்பேவா?

ஆலாவின் கூற்றாகவே நிகழ்ந்த அனைத்துப் பாலியல் வன்மங்களும் பதிவு பெற்றுள்ளன. இவ்வனுபவங்களின் விபரீத மனோவிளைவே நாவலின் பிற்பகுதியில் ஆலாவின் கற்பனையாக நடைபெறும் நிகழ்வுகளிலும் தொடர்கிறது. பாலத்திறப்பு விழாவின் திடீர் விருந்தாளியாக வந்து, ஆலாவால் உயிர் மீண்ட வெளிநாட்டுத் தூதுவரின் துணையோடு, புலம்பெயர் தமிழன் குடுமி வைத்த வாமதேவன் சிறையிலிருந்து ஆலாவை மீட்டு மணமுடித்து தாம் வசிக்கும் ஐரோப்பிய நாட்டுக்கு அழைத்துச்சென்று, ஒரு குழந்தையைப் பெறச் செய்து மனநோயாளி என்று குற்றஞ்சாட்டி இலங்கைக்குத் திருப்பி அனுப்பச் சூழ்ச்சி செய்து படுத்தும்பாடுகள் குறிப்பிடத்தக்கவை. அப்படியெனில் ஏன்தான் அவர் ஆலாவைச் சிறையிலிருந்து மீட்டார்? ஆலாவே குறிப்பிட்டுள்ளார்: இவருக்கு ஒரு போராளியைப் புணரவேண்டியிருந்திருக்கிறது. இது போன்றே புலம்பெயர் தமிழர்களின் சுயநல அக்கறையைப் பற்றிய கடுமையான விமர்சனத்தை ஷோபாசக்தி, வாமனனின் சொந்த வானொலி ஒளிப்பரப்புப் போலி உரைப்பொழிவின் மூலமாகவும் நிறைவேற்றிக்கொண்டுள்ளார்.

“போராட்டத்தின் பெயரால் புலம்பெயர்ந்த நாடுகளில் மக்களிடம் திரட்டப்பட்ட காசுகளும் சொத்துகளும் எங்கே? ஐரோப்பாவில் இவற்றை ஆண்டு அனுபவித்துக்கொண்டிருக்கும் பினாமிகளுக்கு மனசாட்சி சிறிதும் இல்லையா? அந்த வகையில் உங்களிடமிருக்கும் பணத்தில் முழு வன்னியையும் வாழவைக்க முடியுமே!”. நமக்கு இன்னொரு முக்கியமான கேள்வியும் எழாமல் இல்லை. விடுதலை பெறுவதோடு ‘உரோவன்’என்கிற கற்பனையான நாட்டை, மொழியை, ‘லின்டோ ப்ளான்சே’ நகரத்தை, வாமனனை, கறுப்பின இளைஞன் நிம்பாவை, குழந்தை பதுமனை கற்பனை செய்தவர். அந்தப் புதிய உலக அனுபவத்தையும் இத்தனை இன்னல்களாலானதாய் வரித்துக்கொண்டது அவரது லட்சிய வீரமரணத்தைச் சாத்தியமாக்கிக்கொள்ளும் ஒரே நோக்கத்துக்காக மட்டுமா?

ஜார்ஜ் லூயி போர்ஹேவின் ரகசிய அற்புதம் கதை நினைவிருக்கிறதா? நாடக ஆசிரியனான ‘யரோமிர் ஹ்லாடிக்’குவிற்குத் தம் நாடகத்தை முழுமைப்படுத்த ஓராண்டு தேவைப்பட்ட நிலையில், அரசு எதிர்ப்புச் செயல்பாட்டின் காரணமாக மரணதண்டனை பெற நேர்கிறது. துப்பாக்கியில் சுட்டு தண்டனையை நிறைவேற்றும் மேடையில், எழுதி முடிக்க ஓராண்டு தேவைப்பட்ட நாடகத்தை, சுடச்சொல்லிப் பிறப்பிக்கப்பட்ட ஆணைக்கும் அதன் நிறைவேற்றத்துக்கும் இடைப்பட்ட ஒரு நிமிடத்தில் முடிக்கிறான். ஆலாவுக்குக் கிடைத்த காகிதம்கூட அவனிடம் இல்லை. எல்லாம் கற்பனையின் மனோவேகத்தில்தாம். கடுங்காவல் சிறையில் அடைக்கப்பட்ட ஓவியன் ஒருவன் சிறைச் சுவரில் வெளிச்சம் பாயும் சன்னலை வரைந்து, அதனூடே வெளிக்காற்றையும் சுவாசித்துப் பின் அச்சன்னலின் வழியே சிறையிலிருந்து தப்பிக்கவும் செய்த கதை நிகழ்வை சிறைவாசியான ஆலா அறிந்திருக்கவே செய்கிறார். நாடக ஆசிரியன் மற்றும் ஓவியனின் அதே கற்பனைத்திறம்தான் எழுதும் கலை கைவந்த ஆலாவுக்கும் மரணத்தருவாயில் கைக்கொடுத்து சிறையிலிருந்து அவரை மீட்டு, விரும்பிய பெருமைமிக்க மரணத்தை அவர்தம் எழுத்துமூலமாக நிறைவேற்றிக்கொள்ள உதவியிருக்கிறது. ஷோபாசக்தியும் தம் எழுத்தின்மூலம் தன் படைப்பின் புதுமைப் பாய்ச்சலை நிகழ்த்திக்காட்டியுள்ளார்.

‘ஏகலைவன்’ சனவரி 2021 இதழில் வெளியாகியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *