கசகறணம்: பதிலும் எதிர்வினைகளும்

கட்டுரைகள்

‘வல்லினம்’ இணைய இதழில் விமல் குழந்தைவேலின் ‘கசகறணம்’ நாவல் குறித்துக் கேட்கப்பட்டிருந்த ஒரு கேள்விக்கு நான் அளித்த பதில் பல தோழர்களிடம் அதிருப்தியை உண்டாக்கியிருக்கின்றது. தோழர்களின் பல்வேறு எதிர்வினைகள் Face bookல் பதிவு செய்யப்பட்ட தருணத்தில் நான் இந்தியாவில் இருந்ததால் என்னால் அந்த விவாதத்தில் பங்கெடுத்து எனது தரப்பை முன்வைக்க முடியாமல் போயிற்று. இப்போது பிரான்ஸ் திரும்பிவிட்டேன். தோழர்களின் எதிர்வினைகள் குறித்து இப்போது பேசிவிடலாம்.

தோழர்களின் பல்வேறு எதிர்வினைகள் வெவ்வேறு முகப் புத்தகங்களின் திரிகளிலே காணக் கிடைக்கின்றன. எனினும் அந்த எதிர்வினைகளின் அடிச்சரடுகளான கருத்துகளாக மூன்று கருத்துகளைத் தொகுத்துக்கொள்ளலாம்.

1. எனது பதிலில் தெரிவது யாழ் மேலாதிக்கவாதம்.
2. எனது பதிலில் அதிகாரத் தொனியுள்ளது.
3. எனது பதில் இலக்கிய அறிவின்மையால் சொல்லப்பட்டது.

எனது தரப்பை நான் சொல்வதற்கு முன்பாக “கசகறணம் நாவல் படித்துவிட்டீர்களா? நாவல் குறித்து உங்களது அபிப்பிராயம் என்ன?” என்ற கேள்விக்கு நான் அளித்த பதிலை ஒருமுறை படித்துவிடுங்கள்:

“படித்துவிட்டேன். அது பயங்கரமான கசகறண அனுபவமாயிருந்தது. ஒரு நாவலில் அல்லது கதையில் கதைசொல்லி வட்டார வழக்கைக் கையாள்வது கதைசொல்லிக்கு ஒரு வகையில் வசதிதான். அந்த வசதியை நான் பலதடவைகள் உணர்ந்திருக்கிறேன். கதையின் மடிப்புகள் அறுபடும் போதும், தாவிச் செல்லவும், முன்னே பின்னே கதையில் காலங்களில் ஊடாடவும் வட்டார வழக்கு வசதியானதுதான். முக்கியமாக வட்டார வழக்கு கதைக்கு ஒருவித நம்பகத்தன்மையை வழக்குகிறது. ஆனால் வட்டார வழக்கில் கதை சொல்வதில் ஒரு எல்லையுமுண்டு. ஒரு கட்டத்திற்கு மேல் வட்டார வழக்கு நமக்கு ஒத்துழைக்காது. மொழியின் கட்டற்ற சாத்தியங்களுக்கு வட்டார வழக்குத் தடையாகிவிடும். வட்டார வழக்கில் நவீன கவிதை எழுதுவதைக் குறித்து சிந்திக்கும்போது அது சாத்தியமேயில்லை எனத் தோன்றுகிறதல்லவா. வட்டார வழக்கின் இனிமை என்பது அதை அப்படியே எழுதுவதில்லை இல்லை. அதை இலக்கியத்துக்கான கருவியாக மாற்றுவதுதான் சவால். வட்டார வழக்கால் நாவலுக்கு உருவாகும் ஒருவித நம்பகத்தன்மை நாவலை இறுக்கமாகக் கட்டியமைப்பதாலேயே சாத்தியமாகும். நாவல் இறுக்கமாகக் கட்டப்படாது அலம்பல் செய்தால் வாசகருக்கு இலக்கிய அனுபவம் கிடைக்காது, பிரதியில் வெறும் வட்டார வழக்கு அகராதியும் சில தகவல்களும் மட்டுமே கிடைக்கும். கசகறணத்தில் அது கிடைக்கிறது.”

எனது பதிலில் மட்டக்களப்பு வட்டார வழக்குப் புரியவில்லை என்று நான் சொல்லவில்லை. மட்டக்களப்பு வட்டார வழக்கென்றில்லை எந்த வட்டார வழக்கென்றாலும் எனக்குப் புரிந்துவிடும். கரிசல் காட்டு, நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கையே படித்து புரிந்துகொள்ளும் ஓர் ஈழத்து இலக்கிய வாசகனுக்கு மட்டக்களப்பு வட்டார வழக்கை விளங்கிக்கொள்வதிலோ அதன் இனிமையை அனுபவிப்பதிலோ எந்தத் தடையும் இருக்கப்போவதில்லை. வட்டார வழக்குக்கு நாவலின் பின்னிணைப்பாக ‘சொல் அகராதி’ கூடத் தேவையற்றது. அது இல்லாமலேயே ஒரு தேர்ந்த வாசகரால் தனது சொந்த கற்பனை வளத்தோடு இடைவெளிகளை நிரப்பி நாவலைப் படித்துச் செல்ல முடியும். ‘கொரில்லா’ நாவலின் முதற்பகுதி முழுக்க முழுக்க வட்டார வழக்கில் எழுதப்பட்டது. வாசகர்களின் தீவிரத்தின் மீதுள்ள நம்பிக்கையால் நான் சொல் அகராதியை நாவலில் இணைக்கவில்லை.

விமலின் முந்தைய நாவலான ‘வெள்ளாவி’ குறித்து நான் முன்பொருமுறை எழுதிய கருத்தொன்றை இங்கு குறிப்பிடுவது பொருத்தம். “மட்டக்களப்பு வட்டார மொழி கையாளப்பட்டிருக்கிறது என்பதற்கு அப்பால் அந்த நாவலில் சிறப்புகள் ஏதுமில்லை” என்று நான் சொல்லியிருப்பேன் (வேலைக்காரிகளின் புத்தகம் பக்:44). இதே வல்லினம் இதழில் கசகறணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அடுத்த கேள்விக்கான பதிலில் எனக்குப் பிடித்த பத்து ஈழத்து நாவல்களைக் குறிப்பிட்டிருப்பேன். அதிலொன்று ஆர்.எம்.நெளசாத் எழுதிய ‘நட்டுமை’ (காலச்சுவடு வெளியீடு). நௌசாத்தின் நாவலின் தலைப்பும் ‘கசகறணம்’ போல வட்டார வழக்குத்தான். நட்டுமையிலும் பின்னிணைப்பாக சொல் அகராதி உள்ளது. நட்டுமையின் கதை மாந்தர்கள் முழுக்க முழக்க கிழக்கின் இஸ்லாமியத் தமிழ் வட்டார வழக்கையே பேசுகிறார்கள். அதுவும் 50 வருடங்களுக்கு முந்தைய மொழி வழக்கு. ஆக எனக்கு மட்டக்களப்பு வட்டார வழக்குத்தான் பிரச்சினையெனில் ‘நட்டுமை’ நாவலை எனக்குப் பிடித்த 10 நாவல்களில் ஒன்றாகக் குறிப்பிட்டிருக்கமாட்டேன் அல்லவா. பிரச்சினை குறிப்பான மட்டக்களப்பு வட்டார வழக்கல்ல.

யாழ்/ மட்டக்களப்பு/ கரிசல் எந்த வட்டார வழக்கெனினும் வட்டார வழக்கில் கதை சொல்லிச் செல்வதில் சில எல்லைகளுள்ளன, ஒரு கட்டத்திற்கு மேல் வட்டார வழக்கு நமக்கு ஒத்துழைக்காது. மொழியின் கட்டற்ற சாத்தியங்களுக்கு வட்டார வழக்குத் தடையாகிவிடும் என்பதுதான் எனது கருத்து. இதை நான் போகிற போக்கில் உதிர்த்துச் செல்லவில்லை. முற்று முழுவதுமாக வட்டார வழக்கைக் கையாண்டு ஆகக் குறைந்தது அய்ந்து சிறுகதைகளும் ‘கொரில்லா’ வின் முதற் பகுதியையும் எழுதிய எனது சொந்த அனுபவத்திலிருந்தே இந்தக் கருத்தை நான் உருவாக்கிக்கொண்டேன்.

வட்டார வழக்கு என்பது ஒரு குமுகத்துக்கு உரித்தானது. கொஞ்சம் எளிமைப்படுத்திச் சொன்னால் அந்தக் குமுகத்துக்குள்ளான சங்கேதக் குறிகளின் தொகுப்பு என்று கூடச் சொல்லலாம். நமது நிலங்களின் அனைத்து வட்டார மொழிகளும் சாதியக் கறைபடிந்தவை, ஆணாதிக்கக் கறைபடிந்தவை. இந்தக் கறைபடிந்த மொழியைக் கையாண்டு கதைசொல்வதில் சில தடைகளுள்ளன. எடுத்துக்காட்டாக திருநங்கை ஒருவர் குறித்து கதைசொல்லி தனது பிரதியில் வட்டார வழக்கில் எழுதிச் செல்கிறார் என வைத்துக்கொள்வோம். யாழ் வழக்கோ, மட்டக்களப்பு வழக்கோ, கரிசல் வழக்கோ ‘அலி’, ‘பொண்ணையன்’, ‘ரெண்டுங்கெட்டான்’ என்ற சொற்களில் திருநங்கையை சித்திரிக்கும் எல்லைகளைக் கொண்டவை. திருநங்கை என்ற சொல்லோ அரவாணி என்ற சொல்லோ நமது வட்டார வழக்குகளில் இதுவரை கிடையாது. எனவே நாம் தவிர்க்க முடியாமல் வட்டார வழக்கைக் கடந்து வரவேண்டியிருக்கிறது. அவ்வாறு கடக்க முடியாமல் வட்டார வழக்கையே ‘அலி’யென்றும் ‘பொண்ணைய’னென்றும் கட்டிப்பிடித்து அழுதால் நாம் பெரும் அநீதி இழைத்தவர்களாவோம். இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. சாதி குறித்து எழுதும் போதும் பெண்கள் மற்றும் விளிப்பு நிலையினர் குறித்து எழுதும் போதும் வட்டார வழக்கு இந்தச் சிக்கலை எதிர்கொண்டேயாகும். ‘நமது மொழி சாதி காப்பாற்றும் மொழி’ எனப் பெரியார் சொன்னதை நாம் எப்போதும் கவனம் கொள்ள வேண்டும்.

இதுதவிர மொழியின் எல்லையற்ற சாத்தியங்களை படைப்பாளி உருவாக்கிக்கொள்ளவும் தனது பிரதியூடே படைப்பாளி புதிய மொழியைக் கண்டறிந்து செல்வதற்கும் வட்டார வழக்கு தடை என்பதே எனது கருத்து. அதனால்தான்  “வட்டார வழக்கில் நவீன கவிதை எழுதுவதைக் குறித்து சிந்திக்கும்போது அது சாத்தியமேயில்லை எனத் தோன்றுகிறதல்லவா” என நான் சொன்னேன். இதற்கு எதிர்வினையாக வட்டார வழக்கில் எழுதப்பட்டதாக என்.டி.ராஜ்குமாரின் ஒரு கவிதையை ஒரு தோழர் சுட்டிக்காட்டினார். ராஜ்குமாரின் கவிதை மொழி வட்டார மொழியல்ல என்றே நான் கருதுகிறேன். தொன்மங்களிலிருந்து உருவாக்கப்பட்ட மந்திரவாதியின் அல்லது சித்தனின் மொழி அவருடையது. சரி அவரது மொழி வட்டார வழக்கே என தோழர் சொல்வதை ஒரு வாதத்திற்காக ஏற்றுக்கொண்டாலும் வட்டார வழக்கை இலக்கியமாக்குவதிலுள்ள சவாலை ராஜ்குமார் எதிர்கொண்டு வெற்றிபெற்றிருக்கிறார் எனச் சொல்லலாம். இதைத்தான் நான எனது பதிலில் “வட்டார வழக்கின் இனிமை என்பது அதை அப்படியே எழுதுவதில்லை இல்லை. அதை இலக்கியத்துக்கான கருவியாக மாற்றுவதுதான் சவால்” எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன்;

வட்டார வழக்கை இலக்கியத்திற்கான கருவியாக விமல் குழந்தைவேல் மாற்றிச் செல்லவில்லை என்பதே எனது எளிமையான கருத்து. கசகறணத்தைப் படித்தபோது  விமல் பிரதியில் மொழியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திராமல் மொழியின் வசீகரத்தில் அவர் மொழியைத் தொடர்ந்து செல்வதாக நான் உணர்ந்தேன். அதனால்தான் நாவல் இறுக்கமாக அமையாமல் வளவளத்துச் செல்வதாக நான் கருதுகிறேன். இதைச் சொன்னால் இது யாழ்ப்பாண மையவாதமா? அவ்வாறானால் நான் புதுவை இரத்தினதுரையையும் பத்மநாப ‘அய்யரை’யும் விமர்சித்து எழுதியதெல்லாம் எந்த மையவாதம் தோழர்களே? ஒருவேளை தீவு மையவாதம் என்பீர்களோ. அப்படிக் கூட சொல்ல முடியாதே.. ஏனெனில் நான் கி.பி. அரவிந்தனையும், க.வாசுதேவனையும் கூட விட்டு வைத்தேனா என்ன.

உமா வரதராஜனின் நாவலுக்கு சில எதிர்மறை விமர்சனங்கள் வந்தன. அவற்றை யாழ் மையவாதம் எனவும் யாழ்ப்பாணத்தாரின் வயிற்றெரிச்சல் எனவும் சொல்வீர்களா? அல்லது காசி.ஆனந்தனின் கவிதைகளையும் கருணாவின் அரசியலையும் விமர்சித்தால் அது யாழ் மையவாதப் பார்வை என்பீர்களா?  சொல்லுங்கள் தோழர்களே!  இங்கே காசி ஆனந்தனையும் விமலையும் நான் ஒரே தட்டில் வைத்து எடைபோடுகிறேன் எனத் தயவு செய்து தோசையைத் திருப்பிப்போட்டு விடாதீர்கள் தோழர்களே. ஒரு கருத்தை அளவிடுவதற்கு வெறும் பிரதேசப் பின்னணியை மட்டுமே அளவுகோலாக நீங்கள் கொண்டால் காசி. ஆனந்தனை விமர்சிப்பதையும் யாழ் மையவாதக் கூற்று எனச் சொல்லிவிட்டுப் போய்விடலாம் என்பதையே நான்  உங்களுக்கு உணர்த்த விரும்புகிறேன்.

கசகறணத்திலுள்ள அரசியல் முக்கியத்துவம் உனக்கு உறைக்கவில்லையா என்பது இன்னொரு கேள்வி. கசகறணத்தில் பேசப்பட்டுள்ள அரசியல் எல்லாம் எனக்கு உறைத்து இருபது வருடங்களாகின்றன. தமிழ் – முஸ்லீம் முரண்பாடுகள் குறித்து நான் ஓயாமல் பேசிக்கொண்டுதானுள்ளேன். நாவலிலுள்ள அரசியல் முக்கியமானதுதான். அனால் அந்த அரசியல் கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’ போல இலக்கியமாக மாற்றப்படாமல் அருளரின் ‘லங்காராணி’ போல வெறும் தகவல்களாகவே எஞ்சிவிட்டது என்பதுதான் எனது வாசிப்பு.
தோழர்களே இங்கே நாங்கள் ஒரு இலக்கியப் பிரதியைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. இலக்கியத்தை மதிப்பிட ஒற்றை அளவுகோல் ஏதுமில்லை. ஒவ்வொரு வாசகரும் தனது தன்னிலை சார்ந்தும் வாசிப்புச் சார்ந்தும் அவர்களுக்கே உரிய தனித்துவமான பார்வைகள் மூலமும் ஓர் இலக்கியப் பிரதியை மதிப்பிடலாம். அதேபோல கசகறணம் நாவல் குறித்த என்னுடைய பார்வையும் மதிப்பீடும் இது. அதனால்தான் “நாவல் இறுக்கமாகக் கட்டப்படாது அலம்பல் செய்தால் வாசகருக்கு இலக்கிய அனுபவம் கிடைக்காது, பிரதியில் வெறும் வட்டார வழக்கு அகராதியும் சில தகவல்களும் மட்டுமே கிடைக்கும். கசகறணத்தில் அது கிடைக்கிறது” என்றேன்.

எனது பதிலில் தொனிப்பது அதிகாரத் தொனி என்ற விமர்சனத்திற்கு நான் எனது தலையை எங்கே போய் முட்டிக்கொள்ள! என்னிடம் என்ன அதிகாரமுள்ளது? அதை யார் எனக்கு வழங்கியிருக்கிறார்கள். ஒருவேளை நான் ஓரளவு அறியப்பட்ட எழுத்தாளனாக இருப்பதால் கற்பனையான அதிகாரத்தை நானே சுவீகரித்துக்கொண்டு தீர்ப்புகள் வழங்குபவனாக என்னை மாற்றிக்கொண்டேன் எனச் சில தோழர்கள் கருதுகிறார்களோ தெரியவில்லை. நான் அவ்வளவாக அறியப்படாத காலத்திலேயே வெட்டொன்று துண்டு இரண்டாகப் பேசித்தான் எனக்குப் பழக்கம். ‘கல்வெட்டு’ , ‘ஆண்டாள் மார்க் அளவுநாடா’ கதையெல்லாவற்றையும் பழைய தோழர்கள் மறந்திருக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன். ஒரு நாவலைக் குறித்து ஒரு கருத்தைச் சொன்னால் அது அதிகாரமா? அவ்வாறெனில் விமர்சனக் கலாசாரம் என்பது என்ன? அவ்வாறானால் கசகறணம் நாவலுக்காக ஏன் விமர்சனக் கூட்டங்கள் நடத்தப்பட்டன? ஒரு கருத்தைச் சொன்னால் அவர்கள் ‘துரோகி’ என்கிறார்கள் இவர்கள் ‘அதிகாரம்’ என்கிறார்கள். வார்தைகள்தான் வேறு, ஆனால் வார்த்தைகளை ஏவும் நோக்கம் ஒன்றே. அது சகிப்பின்மை.

ஒரு இலக்கியப் பிரதியில் படைப்பாளிக்கு மட்டுமல்ல வாசகருக்கும் இடமிருக்கிறது. படைப்பாளியின் பிரதியை வாசகர் தனது பட்டறிவுக்குள்ளால் எடைபோட்டு ஒரு முடிவுக்கு வருகிறார். ஒருவகையில் வாசகர் இலக்கியப்பிரதியின் இணைப் படைப்பாளியே. ஒரு பிரதியில் கதைசொல்லிக்கு இருக்கும் அதே உரிமை வாசகருக்கும் உண்டு. இதை அதிகாரம், அது, இது எனச் சொல்வதெல்லாம் என்ன நியாயம் என்று கேட்கிறேன்.  ஓர் இலக்கியப் பிரதியை நான் விமர்சிப்பது அதிகாரம் சார்ந்தது என்றால் ஓர் இலக்கியப் பிரதியை நான் கொண்டாடுவதும் அதிகாரம் சார்ந்ததாகத்தானே இருக்க வேண்டும். அவ்வாறால் நான் என்ன செய்ய வேண்டும். வாயை இறுக மூடிக்கொண்டு ‘முட்டப்பனாக’ இருக்கட்டுமா?

தீராநதி இதழில் வெளியான எனது நேர்காணலில் ஒரு கேள்விக்கு நான் இவ்வாறு  பதிலளித்தேன்:

தீராநதி: உங்கள் நண்பரான எழுத்தாளர் கற்சுறா ‘கொரில்லா’வை இன்னொரு ‘ஹே ராம்’ என்றும் விடுதலைப் புலிகள் சார்பு நாவலென்றும் குறிப்பிட்டுள்ளார். உங்கள் மற்றொரு நண்பரான சாருநிவேதிதா சென்னையில் நடந்த விமர்சனக் கூட்டத்தில் அது இலக்கியமே அல்ல என்றார். இந்த விமர்சனங்கள் பற்றி?

ஷோபா: கற்சுறாவின் வாசிப்புக்கும் சாத்தியமுள்ளது. நம்முடன் இணைந்து பல வருடங்களாக சனநாயத்துக்காகக் குரல் கொடுத்தக்கொண்டிருக்கும் தோழர் அவர். அது அவருடைய பார்வை.  சென்னையில் நடந்த கூட்டத்தில் சாருநிவேதிதா, இந்நாவலின் அரசியலுடன் நான் உடன்படுகிறேன் ஆனால் இது இலக்கியமல்ல வெறும் செய்திப் பதிவாக இருக்கிறது என்றார். அது அவரது பார்வை, வாசிப்பு. அதற்கும் சாத்தியமுள்ளது. எல்லோரும் நம்முடைய பார்வையையும் அறிதல் முறையையும்தான் கொண்டிருக்கவேண்டும் என நாம் எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொருவருக்கும் தன்னிலை சார்ந்த பார்வைகள் சாத்தியம்தானே. (ஜுன் 2004)

யாழ்மையவாதம், அதிகாரம் என்ற இரு விமர்சனங்களுக்கான எனது தரப்பை மேலே சொல்லியள்ளேன். மூன்றாவதாக ஒரு விமர்சனம் எஞ்சியுள்ளது. அது எனக்கு இலக்கிய அறிவில்லை என்ற விமர்சனமே. முதலிரண்டு விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ள மறுத்த நான் இந்த மூன்றாவது விமர்சனத்தை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஒன்று! அறிஞர்களுக்கு மட்டுமல்ல அறிவிலிகளுக்கும் கருத்துச் சொல்லும் உரிமையுள்ளது தோழர்களே. அதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். யாழ் மையவாதம், அதிகாரம் போன்ற கருத்தாங்கங்கள் மிகவும் ஆழமானவை. துரோகி என்ற சொல்லைப் போலவே அவற்றையும் சும்மா சும்மா எடுத்தடிமடக்காய் பயன்படுத்தித் தொலைக்காதீர்கள்… கக்கிசமாயிருக்கிறது!

3 thoughts on “கசகறணம்: பதிலும் எதிர்வினைகளும்

  1. அன்பின் ஷோபாசக்தி…

    ///வட்டார வழக்கு என்பது ஒரு குமுகத்துக்கு உரித்தானது…/// என்று தொடங்கும் பத்தியின்மூலம் நீங்கள் குறிப்பிட விளைவது என்ன???

    ///நமது நிலங்களின் அனைத்து வட்டார மொழிகளும் சாதியக் கறைபடிந்தவை, ஆணாதிக்கக் கறைபடிந்தவை. இந்தக் கறைபடிந்த மொழியைக் கையாண்டு கதைசொல்வதில் சில தடைகளுள்ளன///

    ///சாதி குறித்து எழுதும் போதும் பெண்கள் மற்றும் விளிப்பு நிலையினர் குறித்து எழுதும் போதும் வட்டார வழக்கு இந்தச் சிக்கலை எதிர்கொண்டேயாகும்///

    மேலுள்ள இரு மேற்கோள்களையும் நான் இவ்வாறாகப் புரிந்துகொள்கிறேன். அதாவது வட்டாரவழக்குகளில் இருக்கக்கூடிய ஆணாதிக்கச் சொல்லாடல்கள், விளிம்புநிலை மனிதர்களுக்கு எதிரான சொல்லாடல்கள் தொடர்பில் விளிப்புடன் இருக்கவேண்டும், முடிந்தவரை இவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும் என்பது உங்களது கருத்தாக இருக்கவேண்டும் என்றே நினைக்கிறேன். மற்றவர்களை விடுங்கள், அப்படியான சொற்களை சர்வசாதாரணமாக நீங்களே பயன்படுத்துவதுண்டு அல்லவா? உதாரணத்துக்கு கொஞ்ச நாட்களுக்கு முன்பாக பெருமளவில் விவாதிக்கப்பட்ட ‘கப்டன்’ பொன்ராசா கூட ‘தாயோளி’ (இது எந்த வட்டாரத்து வழக்கோ நானறியேன்), ‘வேசைக்கூட்டம்’ போன்ற சொற்களை நீங்கள் பயன்படுத்தியிருந்தீர்கள். ஆகவே, கறைபடிந்த வட்டாரமொழிகளைப் பயன்படுத்துவது தொடர்பில், அல்லது கறைபடிந்த மொழியைப் பயன்படுத்துவது தொடர்பில் ஒரு பிரதிமீதான விமர்சனத்தை நீங்கள் வைப்பது பொருத்தமற்ற செயலாகவே தெரிகிறது. (இதற்கு எங்காவது பதிலளிப்பீர்கள் என நம்புகிறேன்)

    நன்றி.

  2. அன்புள்ள கிருத்திகன்
    ஒரு இலக்கியப்பிரதியில் கதை சொல்லியின் மொழிக்கும் கதைசொல்லியால் உருவாக்கப்படும் கதை மாந்தர்களின் மொழிக்குமுள்ள வேறுபாட்டை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். கதை சொல்லி தனது ஒவ்வொரு சொற்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும். கதை மாந்தர்கள் அவர்களது இயல்பின்படியே பேசிச் செல்லவும் அவன் அனுமதிக்க வேண்டும். எல்லாமே கத்திமுனையில் நடக்கிற வித்தைதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *