21ம் நூற்றாண்டில் விடுதலைப் போராட்டங்கள்

கட்டுரைகள்

1983 ஜுலைப் படுகொலைகளை நினைவுகூர்ந்து 27 ஜுலை 2008 அன்று பிரான்ஸில் நடைபெற்ற ‘நெடுங்குருதி’ நிகழ்வில் தோழர்.அ.மார்க்ஸ் ஆற்றிய உரைவீச்சு:

லைமை ஏற்றுள்ள தோழர் ராகவன் அவர்களே, நண்பர்களே வணக்கம்.

வெலிகடைச் சிறைப் படுகொலை மற்றும் அதைத் தொடர்ந்த தமிழ் இன அழிப்புக் கொலைகளின் 25ம் ஆண்டு நினைவையொட்டிக் காலை முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்நிகழ்வில் பல்வேறு கோணங்களிலிருந்து பார்வைகள் வெளிப்பட்டன. வெலிகடைப் படுகொலையின் போது தப்பிப் பிழைத்தவர்கள், முஸ்லிம்கள், கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனப் பலகோணங்களிலிருந்து கருத்துகள் வந்தன.

குறிப்பாக, படுகொலைகளின்போது சிறையிலிருந்தவர்களின் பேச்சுகள் நம் நெஞ்சை நெகிழ்த்தின. சிறையில் தம்முடனிருந்த இதர பெண்கள், சிறைக் காவலாளிகள் ஆகியோரின் அணுகல் முறை குறித்துப் பேசிய நிர்மலா ராஜசிங்கம், கொலையுண்ட 53 தோழர்களின் தியாகத்தால் தான் இன்று தான் உயிருடன் உள்ளதாகச் சொன்னதும், தோழர் அழகிரி இன்றைய நிலை குறித்துக் கவலை தெரிவித்து ஆற்றிய உரையும் இங்குள்ள எல்லோரது மனங்களிலும் ஈரம் கசிய வைத்துவிட்டன.

21ம் நூற்றாண்டில் விடுதலைப் போராட்டங்கள்

பல்வேறு கோணங்களிலிருந்து இங்கே பேச்சுக்கள் பேசப்பட்ட போதும் எல்லோரும் ஒரு விசயத்தில் ஒன்று சேர்வதை நான் காண்கிறேன். இத்தனை தியாகங்கள், படுகொலைகள், புலப்பெயர்வுகள், பொருளிழப்புகளுக்குப் பின் ஈழப்போராட்டம் ஒரு முட்டுச் சந்திற்கு இட்டுச் சென்றிருப்பது குறித்த கவலைதான் அது. ஈழப் போராட்டம் சந்தித்துள்ள தேக்கத்திலிருந்து விடுபடுவது எப்படி என்கிற கவலை இன்று எல்லோரையும் பிடித்துக் கொண்டிருப்பதை உணர முடிகிறது.

இங்கே பேசியவர்கள் சில முக்கிய புள்ளிகளைத் தொட்டுச் சென்றுள்ளனர். இந்தத் தேக்கம் குறித்த உசவாலை இந்தப் புள்ளிகளிலிருந்துதான் தொடங்க வேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது. தோழர் ராகவன் பேசும் போது பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் குறித்த இன்றைய சொல்லாடல்களை நினைவூட்டினார்.தேசியம் என்கிற வரைச்சட்டகத்திற்கு அப்பாற்ப்பட்ட புதிய வரைச்சட்டகம் இன்று தேவைப் படுகிறது என்றார் நிர்மலா. வேற்றுமையில் ஒற்றுமை, வானவில் கூட்டணி ஆகியவற்றை நினைவூட்டினார் தோழர் ஞானம் என்கிற எம்.ஆர். ஸ்ராலின். இந்த மூன்று புள்ளிகளும் இன்றைய சிந்தனைக்குரியவை.

இவை குறித்துச் சிலவற்றைச் சொல்ல முனைவதும் சமீபத்தில் நடைபெற்ற நேபாள குடியரசுப் புரட்சியில் மாவோயிஸ்டுகளின் பங்கிலிருந்து நாம் ஏதேனும் பாடங்களை அறிய முடியுமா எனச் சிந்திப்பதும் இன்று எனது உரையின் நோக்கம்.

இதற்கு முன்னதாக யூலைப் படுகொலைகள் தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கம் பற்றியும் குறிப்பிட வேண்டும். மிகப்பெரிய ஒரு ஈழப் போராட்ட ஆதரவு அலையை அது தமிழகத்தில் ஏற்படுத்தியது. ஆயுதப் போராட்ட இயக்கங்கள் அனைத்தும் தமிழகத்தை பின்புலமாக வைத்து இயங்கக் கூடிய ஒரு நிலையும் ஏற்பட்டது. எம்.ஜி.ஆர், கலைஞர் எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு இயக்கங்களுக்கு நிதி அளித்த நிகழ்வுகளும் நடந்தேறின.

யூலைப் படுகொலைகளுக்குப் பின் சில மாதங்களில் நா.சண்முகதாசன் அவர்கள் சென்னை வந்திருந்தார். இலங்கை மாவோயிஸ்ட் கட்சியின் தலைவரும், உலக அளவில் இடதுசாரி வட்டத்தில் அறியப்பட்டவரும், 1970களுக்குப் பின் இலங்கையில் நடைபெற்ற ஆயுதப் போராட்டங்களுக்கெல்லாம் ஒருவகையில் தத்துவார்த்த முன்னோடியாகவுமிருந்த ‘சண்’ணை அன்று தமிழகத்தில் யாரும் கண்டு கொள்ளவில்லை. இங்கிருந்த எல்லாக் கம்யூனிஸ்ட் கட்சிகளாலும் வெறுக்கப்பட்டவராக அவர் அன்று இருந்தார். இன்றளவுக்கு எனது செயற்பாடுகள் விரிவடையாத ஒரு காலகட்டமாயினும் கே.டானியல் மூலமாக எனக்குச் ‘சண்’ணுடன் பரிச்சயமுண்டு.

நான் அப்போது தஞ்சைக் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். சென்னை வந்து ‘சண்’ணை சந்தித்தபோது அவர் ‘ஒரு கூட்டம் ஏற்பாடு செய்ய இயலுமா, யூலைப் படுகொலைகளைப் பற்றி நான் பேச விரும்புகிறேன்’ என்றார். அவசரமாக ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்தோம். ஏராளமான புகைப்பட ஆதாரங்களுடன் அவர் முன்வைத்த கருத்துகள் எல்லோரையும் நெகிழ வைத்தன. அப்போது எனக்கு முன்பின் அறிமுகமில்லாத சில ஈழத்து இளைஞர்கள் உள்ளே நுழைந்தனர். ‘இத்தனை காலம் பிரச்சினைக்கு முகம் கொடுக்காத நீங்கள் இப்போது என்ன இது குறித்து பேச வேண்டியிருக்கிறது’ என்ற ரீதியில் பேசி ‘சண்’ணைப் பேசவிடாது செய்தனர். கூட்டம் பாதியில் முடிந்தது.

பாரம்பரிய இடதுசாரிகள் மீது தமிழ் இளைஞர்கள் அன்று கொண்டிருந்த ஆத்திரத்தை எங்களால் விளங்கிக் கொள்ள முடிந்தது. அன்று அக் கூட்டத்தைக் குழப்பியவர்களில் வரதராஐப்பெருமாளும் இருந்தார் என்பதைப் பின்னாட்களிலேயே அறிந்தேன். தொடர்ந்து இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைகளைக் கண்டித்து ஏராளமாகக் கூட்டங்களில் பேசியதற்காக நான் சார்ந்திருந்த மார்க்ஸிஸ கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலக்கப்பட்டேன்.

தமிழகத்தில் ஈழப் போராட்ட ஆதரவு என்பது நாளாக நாளாக வெறுமனே விடுதலைப் புலிகளின் ஆதரவாக மாறியது. ஈழப் போராட்டத்தையும் ஈழ மக்களையும் ஆதரிப்பது என்பது முழுக்க முழுக்க விமர்சனமின்றிப் புலிகளை ஆதரிப்பது என்கிற நிலையே இன்றளவும் தொடர்கிறது.

1994 ல் நாங்கள் நடத்திய ‘புலம்பெயந்த தமிழர்கள் நல மாநாடு’ குறிப்பிடத்தக்க ஒன்று. பெருங் கெடுபிடிகளுக்கு மத்தியில் நடைபெற்ற அம் மாநாட்டில் வெளியிடப்பட்ட மலர் இன்றளவும் ஒரு முக்கிய ஆவணமாகத் திகழ்கிறது. உலகெங்கிலுமிருந்தும் புலம் பெயர் தமிழர்கள் அதில் கலந்து கொண்டனர்.

இன்றளவும் தமிழகத்தில் புலம் பெயர்ந்து அகதி முகாம்களில் வதியும் ஈழத் தமிழர்களின் நிலை மிக மோசமாகவே உள்ளது. 2006 ல் மீண்டும் பெரிய அளவில் அகதிகள் வருகை தொடங்கியபோது மண்டபம் முகாம் உள்ளிட சுமார் 12 முகாம்களை சென்று பார்வையிட்டு நாங்கள் அளித்த அறிக்கை ஒன்றும் முக்கியமானது.

2

21ம் நூற்றாண்டில் விடுதலைப் போராட்டங்கள்ஈழப்போராட்டத்தில் இன்று ஏற்பட்டுள்ள தேக்கத்தை விளங்கிக் கொள்ள கொஞ்சம் உலகளாவிய பின்னணியிலிருந்தும் சிந்திக்க வேண்டியுள்ளது. இது 21ம் நூற்றாண்டு. செப்டம்பர் 11க்கு பிந்திய காலம். ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்கிற சொல்லாடல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள காலகட்டம் என்பதைப் போராடுகிறவர்களும் சரி போராட்டத்தை ஆய்வு செய்பவர்களும் சரி மறந்துவிடலாகாது. ‘போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்’, ‘போரும் சமாதானமும்’ ‘சமாதானத்துக்கான போர்’ என்கிற சொல்லாடல்களோடு களத்தில் இறங்கியிருந்த முந்தைய ஐனாதிபதிகளுக்கும் மகிந்த ராஐபக்சவுக்கும் உள்ள அணுகுமுறை வேறுபாட்டைப் புரிந்து கொள்வதற்கு இந்த உலகளாவிய பின்னணியை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இன்றைய அணுகல்முறை மாற்றத்தை ராஐபக்ச என்கிற தனிமனிதனின் குணாதிசயம் சார்ந்த ஒரு பிரச்சினையாக மட்டும் பார்க்கலாகாது.

ஈழப்பிரச்சனை இன்று ஒரு இனப்பிரச்சினையாகவன்றி ‘பயங்கரவாதப்’ பிரச்சினையாக மட்டுமே பார்க்கப்படுகிறது. பெரிய முயற்சிகளின்றி இத்தகைய வகைப்படுத்தலுக்கு உலகளாவிய ஆதரவையும் பெற்றுவிட இயல்கிறது. சமீபத்தில் அறிக்கை அளித்த ‘அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு’ (All Party Representative Committee-APRC) கூட ஈழப்பிரச்சினையை ஒரு பிரிவினைவாத, பயங்கரவாதப் ( ‘Seperatist and Terrorist’) பிரச்சினையாகவே காண்கிறது.

பயங்கரவாதம் என்கிற சொல்லாடல் அவிழ்த்து விடப்படுவதன் மூலம் அரசு இரண்டு அம்சங்களை சாதித்துக் கொள்கிறது:

1. ஈழத் தமிழர்களின் அரசியல் நியாயங்கள் அனைத்தும் புறக்கணிக்கப்படுகின்றன. போராட்டம் அரசியல் நீக்கம் (depoliticization) செய்யப்படுகிறது. அதன் நியாயப்பாடு மறுக்கப்படுகிறது.

2. பயங்கரவாதம் என்கின்ற போது அது ஒடுக்கப்பட வேண்டிய ஒன்று என்று மட்டுமே ஆகிறது. எனவே எந்த விதமான அரசியல் தீர்வும் இனி சாத்தியமில்லை. எனவே அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கும் இனி இடமில்லை.

முந்தைய அணுகல் முறைகளில் பேச்சுவார்த்தைக்கு ஒரு இடமிருந்தது. போர் மூலம் போராடுகிற இயக்கங்களைப் பலவீனப்படுத்தி பேச்சுவார்த்தைக்கு நிர்ப்பந்திப்பது, போர் நிறுத்தத்தின் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவு பிரச்சினையை இராணுவ நீக்கம் (demilitarization) செய்வது ஆகிய அணுகல் முறைகள் இன்று கிடையாது. போர்! போர் ஒன்றின் மூலமாகவே எதிரியை -வெல்வது- வென்றொடுக்குவது என்கிற இந்த அணுகல் முறைக்கு செப்டம்பர் 11க்குப் பிந்திய உலகம் தன் முழு ஆதரவையும் நல்குகிறது. இந்தச் சூழலை நாம் இன்று சரியாக விளங்கிக் கொள்வது அவசியம்.

இந்தச் சூழலைக் கணக்கிலெடுத்துக்கொண்டு தம் அணுகுமுறைகளை மாற்றிக் கொள்ளக்கூடிய இயக்கங்களுடன் மட்டுமே இன்று பேச்சுவார்த்தை என்கிற நிலையை உலகம் எடுத்துள்ளது. இதுகாறும் பயங்கரவாத இயக்கங்களாக கருதப்பட்டிருந்த ‘நோபாள மாவோயிஸ்ட் இயக்க’மும் ‘பாலஸ்தீன ஹமாசு’ம் இன்று தேர்தல் பாதையை ஏற்றுள்ளன. மாவோயிஸ்ட் கட்சி இன்று ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது. ஹமாஸ் ஆட்சியிலுள்ளது. இன்னொரு “பயங்கரவாத” அமைப்பான ‘ஹிஸ்புல்லா’ என்கிற அரசு எதிர்ப்பு இயக்கமும் இஸ்ரேல் அரசும் இன்று எகிப்தின் முயற்சியில் பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்துள்ளன. முன்னதாக ஹிஸ்புல்லாவும் லெபனான் அரசும் இணைந்துதான் முதன் முதலாக இஸ்ரேலை வெற்றி கொண்டன (2006) என்பதையும் நாம் மறந்துவிடலாகாது. அத்தகைய வெற்றிக்குப் பின்பு ஹிஸ்புல்லா இன்று பேச்சுவார்த்தைக்குரிய இயக்கமாகியுள்ளது.

தலிபான்களை அழித்தொழிக்க முடியாது என்கிற நிலை வந்த போது இரண்டாண்டுகளுக்கு முன்பு ஜனாதிபதி புஷ் ஆப்கானிஸ்தானத்தின் ஹமித் கர்சாயிடம் தலிபான்களையும் அரசில் இணைத்துக் கொள்ளுமாறு அறிவுறித்தியதையும், தலிபான்கள் அதற்கு இசையாததையும், அதனால் இன்று தலிபான்களை முற்று முழுதாக அழித்தொழிப்பது என்கிற நிலைப்பாட்டுடன் அமெரிக்கா இறங்கியுள்ளதையும் கூட நாம் கவனிக்க வேண்டும்.

இரண்டு அம்சங்கள் இவற்றிலிருந்து நமக்கு விளங்குகிறது,

ஒன்று: இன்றைய சூழலைக் கணக்கிற் கொண்டு நெகிழ்ச்சி காட்டும் இயக்கங்களுடன் மட்டுமே பேச்சுவார்த்தை. இந்தப் பேச்சவார்த்தை என்பது வெறுமனே தந்திரமாகக் காலத்தை ஒத்திப்போடுவது என்ற நோக்கிலன்றி நேர்மையான அணுகல்முறை மாற்றமாக இருக்க வேண்டும்.
இரண்டு: தோல்வியுறும் வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் இயக்கங்களுடன் பேச்சுவார்த்தையைத் தவிர்த்தல்.

3

இந்தப் பின்னணியில் இன்று இலங்கை அரசு மேற்கொண்டுள்ள நிலைப்பாட்டின் மூன்று பிரதான அம்சங்களாகக் கீழ்க்கண்டவற்றைச் சொல்லலாம்:

1. பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற அடிப்படையில் போர் நிறுத்தம், பேச்சுவார்த்தை, அரசியல் தீர்வு ஆகியவற்றைத் தவிர்த்து இராணுவப் பாதை ஒன்றையே செயற்படுத்துதல்

2. 1987 இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை ஒட்டி இங்கு மேற்கொள்ளப்பட்ட வடக்கு – கிழக்கு தற்காலிக ‘இணைப்பு'(merger) இன்று முற்று முழுதாகக் கைவிடப்பட்டு வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணங்கள் என்ற ‘துண்டிப்பு’ (demerger) முழுமையாகியுள்ளது. J.V.P தொடர்ந்த வழக்கொன்றில் 2006 ல் இலங்கை உச்ச நீதிமன்றம் துண்டிப்பை உறுதி செய்துள்ளது. இன்று அங்கே தேர்தல் நடத்தப்பட்டு மாகாண ஆட்சி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய வடக்கு – கிழக்கு துண்டிப்பில் இலங்கை அரசு முழுமையான வெற்றியடைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் ‘தமிழர்’ என்கிற விரிந்த அடையாளத்தின் கீழ் ஒற்றை அடையாளத்தைச் சூட்டிக் கொள்வதைக் காட்டிலும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழர்களும் முஸ்லிம்களும் தமது தனித்துவத்தைப் பேணுவதற்கே முன்னுரிமை அளிக்கின்றனர். பிரதேச மற்றும் இன, மதரீதியானயான இந்த அடையாள உறுதிப்பாடு இன்று மக்கள் மத்தியிலும் முழுமையாக்கப்பட்டுவிட்டது.

3. பேச்சுவாத்தைகளில் இனி விடுதலைப் புலிகளுக்கு இடமில்லை என்கிற நிலையை எடுத்ததன் விளைவாக விடுதலைப் புலிகளல்லாத தமிழ் இயக்கங்களுடன் மட்டுமே பேச்சுவார்த்தைகள் என்பதாக அரசின் அணுகல்முறை உள்ளது . அரசு – தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கூட்டணி(TMVP) ஏற்பட்டு பிள்ளையான் என்கிற சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்று கிழக்கு மாகாண முதலமைச்சராகியுள்ளார்.

அரசு இதன் மூலம் கடந்த பல ஆண்டுகளாக அமுல்படுத்தியிருக்கும் அவசர நிலைப் பிரகடனத்தைத் தொடர முடிகிறது. கடும் விலைவாசி ஏற்றம், பணவீக்கம், வேலையின்மை ஆகியவறிற்கு எதிரான மக்கள் எதிர்ப்பை ஒடுக்கும் அதிகாரத்தை அது இதன் மூலம் பெறுகிறது. ஒரு காலத்தில் மார்க்சிய அடையாளத்துடன் விளங்கி இந்திய விரிவாக்கத்திற்கு எதிராக முழங்கிய J.V.P இன்று உடைந்துள்ளது. சோமவன்சே அமரசிங்க தலைமையிலான தாய்க் கட்சி இத்தகைய பொருளாதாரப் பிரச்சினைகட்கு முக்கியத்துவம் அளித்துப் போராட வேண்டும் என்கிற நிலையையும் 39 எம்பிகளுடன் பிரிந்து செனறுள்ள விமல் வீரவன்ச தலைமையிலுள்ள ‘தேசபக்தி இயக்கம்’ அப்பட்டமான இனவாத அரசியலைப் பேசி நிபந்தனையின்றி ராஐபக்ஷ அரசை ஆதரிக்கும் நிலைப்பாட்டையும் எடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. வர்க்கப் போராட்டம் x தேசியம் என்கிற அடிப்படையில் இந்த பிளவு ஏற்பட்டுள்ளமை சிந்திக்கத்தக்கது.

4

‘தமிழ் பேசும் மக்கள்’ மத்தியில் இன்று ஏற்பட்டுள்ள இந்த உள் அடையாள விகசிப்புகளையும் தனித்துவங்களையும் கணக்கில் கொள்ளாது இனி ஈழ மக்களின் பிரச்சினையில் முன்னேற்றம் சாத்தியமில்லை. தமிழ் பேசும் மக்களிடையே உள்ள இந்த உள் வேறுபாடுகளையும் பிரதேச, மத மற்றும் சாதிரீதியிலான நீண்ட கால அதிருப்திகளையும் கணக்கில் கொள்ளாதது இன்றைய தேக்கத்தின் பிரதான காரணங்களில் ஒன்று. ‘ஈழம்’, ‘தமிழர்கள்’ முதலான தேசியப் பெருங்கதையாடல் இன்று ஒரு பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்த அதிருப்திகளை மறைத்தும் மறந்தும் சிங்களப் பேரினவாத அரச பயங்கரவாதத்தை எதிர்த்து வெற்றி கொள்வது சாத்தியமல்ல என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மீண்டும் நினைவு படுத்திக்கொள்வோம். இது 21ம் நூற்றாண்டு. சோவியத்துக்குப் பிந்திய உலகில் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சோவியத்துக்கு பிந்திய உலகில் இதுகாறும் அடையாளம் மறுக்கப்பட்ட பலதரப்பினரும் தமது அடையாளத்தை உறுதி செய்யும் போக்கு இன்று வலுப்பெற்றுள்ளது. அடையாள அரசியல் இன்று உலகெங்கிலும் கோலோச்சுவதை இந்தியச் சூழலில் இருந்தும் நீங்கள் புரிந்து கொள்ள இயலும். தலித் இயக்கங்களும், அடித்தள மக்கள் மற்றும் பிராந்திய இயக்கங்களும் இன்று மேலெழும்பியுள்ளன.

ஈழத்தில் உள்ள சாதியக் கொடுமைகளுக்கெதிரான கசப்பு தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் எத்தனை அளவு இருந்ததென்பதை டானியலின் நண்பர்களான நாங்கள் அறிவோம். தேசியப் போராட்டம் சாதிய உணர்வுகளை ஒழித்து விட்டது என்கிற கூற்று இன்று பொய்ப்பிக்கப்பட்டுள்ளதைப் புலம் பெயர் சூழலில் உருவாகியுள்ள ‘தலித் சமூக மேம்பாட்டு முன்னணி’, லண்டனிலும் பாரிஸிலும் நடைபெற்ற தலித் மாநாடுகள், ‘வடு’முதலான இதழ்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

யாழ்ப்பாணத்தவர்கள், வன்னிப் பகுதியினர், முஸ்லிம்கள், கிழக்கு மாகாணத்தினர், மலையகத்தோர் என்பதான இந்த தனித்துவ அடையாளங்களைக் கணக்கில் கொள்ளாத தேசிய அரசியல் இனி சாத்தியமில்லை. இத்தனை சிறிய பிரதேசத்துக்குள் இத்தனை அடையாளங்களை உள்ளடக்கக் கூடிய அரசியல் எப்படிச் சாத்தியமாகும் என்கிற கேள்வி எழலாம் . இதே போன்ற சின்னஞ்சிறிய தென்னாசிய நாடான நேபாள முன்னுதாரணம் இங்கே நமக்குப் பயன்படக்கூடும்.

சுமார் 22.8 மில்லியன் மக்கள் மட்டுமே உள்ள அந்தச் சின்னஞ்சிறு நாட்டில் 22 சாதிகள் 59 உள்நாட்டு இனக் குழுக்கள் 93 மொழிகள் இன்று நிலவுகின்றன.
இந்த 93 மொழிகளில் 6 முக்கியமானவை. இதைத்தவிர சுமார் 1800 மைல் நீளமுள்ள திறந்த எல்லை வெளியே உள்ளே வந்து வளம்மிக்க ‘தராய்’ சமவெளியில் கடந்த சில நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் இந்திய வம்சாவழியினரான ‘மாதேசிகள்’ எனப் பலதரப்பட்ட அடையாளத்தினரும் இணைந்து வசித்து வரும் நாடு அது. ‘பர்வதியா’க்கள் எனப்படும் மலைப்பகுதியைச் சேர்ந்த பிராமண – சத்திரியர்களே அங்கே ஆண்டாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்துபவர்கள். மொத்த மக்கள் தொகையில் இவர்கள் 13 +18 = 31 சதம். ஆனால் 70 சத அளவில் அரசு பதவிகள், கட்சித் தலைமை எல்லாம் இவர்கள் கையில். ‘ஜனஜாதிகள்’ எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் 59 உள்நாட்டுத் தேசிய இனங்கள், மாதேசிகள் மறறும் 20 சத அளவிலான தலித்துகள், 4 சத முஸ்லிம்கள் ஆகியோர் காலம் காலமாக அடையாளமும் அதிகாரமும் மறுக்கப்பட்டவர்கள். இந்தியாவைப் போலவே அங்கும் தலித்துக்களே ஆகக் கீழாய் உள்ளனர்.

1990 வரை இங்கே பலகட்சி ஐனநாயக ஆட்சிமுறை கிடையாது. நிர்வாக அதிகாரமுள்ள மன்னராட்சியில் அரசனே எல்லா அதிகாரமும் உடையவன். இந்து அரசாக நேபாளம் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. 1991ல் முதலாவது மக்கள் புரட்சி (ஐன அந்தோலன்) ஏற்பட்டு பலகட்சி ஆட்சிமுறை கொண்டுவரப்பட்டது. 2006 ல் நடைபெற்ற இரண்டாம் ஐன அந்தோலன் முடியாட்சியைத் தூக்கியெறிந்து குடியாட்சியை இன்று அங்கே உருவாகியுள்ளது.

முதல் ஐன அந்தோலனுக்கும் இரண்டாம் ஐன அந்தோலனுக்குமிடையிலுள்ள வித்தியாசம் முடியாட்சி நீக்கப்பட்டு குடியாட்சி நிறுவப்பட்டது மட்டுமல்ல. மாறாக இன்னொரு முக்கியமான வேறுபாடும் உண்டு. அது பல்வேறு அடையாளங்களும் உள்வாங்கப்பட்ட தேர்தல் முறையும் ஆடசி அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளதுதான்

90 களுக்குப் பின் ஏற்பட்டுள்ள இந்த அடையாள உறுதிப்பாட்டால் ஈர்க்கப்பட்ட நேபாள மக்கள் தமது அடையாள உறுதிப்பாட்டிற்காகவும் அதிகாரத்தில் தமக்கான பங்கிற்காகவும் தொடர்ந்து போராடினர். ஜனஜாதிகள், மாதேசிகள், தலித்கள் ஆகியோர் தனித்தனி அமைப்புகளை அமைத்து அரசு பதவிகளிலும் ஆட்சியிலும் தமது பங்கைக் கோரினர். ‘ஜனஜாதி ஆதிவாசி மகாஜன சங்கம்’, ‘மாதேசி ஜனதிகார முன்னணி’, ‘தலித் ஜனஜாதிக் கட்சி’ முதலியன சில குறிப்பிடத்தக்க அமைப்புகள்.

நேபாள மைய நீரோட்டக் கட்சிகளான ‘நேபாள காஙகிரஸ்’ மற்றும் ‘நேபாள கம்யூனிஸ்ட் கட்சி’ முதலியன இந்தத் தனித்தனி அடையாளங்களை அங்கீகரிக்க மறுத்தன. ‘நேபாள மாவோயிஸ்ட் கட்சி மட்டுமே இந்த வேறுபாடுகளை அங்கீகரித்தது. மக்கள் யுத்தத்தை அறிவித்து (1996) ஆயுதப் போராட்டத்தின் மூலம் முதலில் ஒன்பது சுயாட்சிப் பிரதேசங்களை பிரகடனப்படுத்தியபோது அவற்றில் ஆறு, இன அடையாளங்களின் அடிப்படையிலேயே அமைந்தன. அந்தந்தப் பகுதியில் பெரும்பான்மையாகவிருந்த இனத்தவருக்கே கட்சியிலும் ஆட்சியிலும் தலைமை அளிக்கப்பட்டது. கட்சியின் மையக் குழு உறுப்பினர்களிலும் அவர்களே பெரும்பான்மையாக இருந்தனர். ஒரு மாகாணத்தின் தலைவராக தலித் ஒருவர் நியமிக்கப்பட்டார்.

முதன்முதலாக விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில்தான் தேர்தலை நடத்த வேண்டுமென ஜனஜாதிகளும், மாதேசிகளும் போராடியபோது அதை முழுமையாக ஆதரித்துப் பேச்சுவார்த்தைகளில் அதை நிபந்தனையாக்கியவர்களும் மாவோயிஸ்டுகளே*.

இறுதியில் மொத்தமாக உள்ள 601 பாராளுமன்ற இடங்களில் 40 சதத்தை (240 இடங்கள்) இந்தியாவிலுள்ளதுபோல அதிகம் வாக்குப்பெற்ற வேட்பாளர்கள் வெற்றிபெறும் நேரடித் தேர்தல் மூலம் நிரப்புவது எனவும், அறுபது சதத்தை (335 இடங்கள்) கட்சிகள் பெற்ற வாக்கு வீதத்தின் அடிப்படையில் நிரப்புவது எனவும் மீதி 26 இடங்களை புதிய அரசு நியமிக்கும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. மேற்சொன்ன முறையில் பிரதிநிதித்துவம் பெறாத சிறு பிரிவுகளக்கு இந்த 26 இடமும் பிரித்துத் தரப்பட வேண்டும். வீதாசார அடிப்படையில் ஒவ்வொரு கட்சியும் தாம் பெற்ற இடங்களைப் பல்வேறு பிரிவினருக்கும் பிரித்தளித்தல் நிபந்தனையாக்கப்பட்டது. இதன்படி தலித்துகளுக்கு 13 சதம், மாதேசிகளுக்கு 31.2சதம், ஜனஜாதியினருக்கு 37.8 சதம், பிற்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு 4 சதம் எனப் பிரிக்கப்பட்டது. இந்த ஒவ்வொரு பிரிவிலும் பாதிப்பேர் பெண்களாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக: ஏதேனும் ஒரு கட்சி 100 இடங்களைப் பெற்றுள்ளதென்றால் அதில் 13 தலித்துகள் இடம்பெற வேண்டும். இந்த 13 பேரில் குறைந்தது 6பேர்கள் தலித் பெண்களாக இருக்க வேண்டும். இதேபோல் இட ஒதுக்கீடும் மிகவும் நுணுக்கமாக எல்லோரும் உரிய பங்கு பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மாவோயிஸ்டுகள் ஆயுதப் போராட்டத்தை விட்டுவிட்டுத் தேர்தல் முறைக்கு வந்தபோது பேச்சுவார்த்தைகளில் நெகிழ்ச்சியுடன் பலவற்றை விட்டுக்கொடுத்த போதும் மூன்று அம்சங்களில் அவர்கள் உறுதியாயிருந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக இவற்றை எதிர்த்த மைய நீரோட்டக் கட்சிகளையும் தம் பக்கம் இழுப்பதில் வெற்றி பெற்றனர். அந்த மூன்று அம்சங்கள்:

1. முடியாட்சி ஒழிக்கப்பட்டு குடியாட்சி அமைக்கப்பட வேண்டும்.
2. தேர்தல் மூலம் புதிய அரசியல் சட்ட அவை உருவாக்கப்பட வேண்டும்.
3. எல்லோரும் பங்கேற்கும் இடைக்கால அரசு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் இவை நிறைவேற்றப்பட வேண்டும்.

மாவோயிஸ்டுகள் இது 21ம் நூற்றாண்டு என்பதைப் புரிந்துகொண்டு தமது புதியபாதையை வகுத்தனர். தம்மை மாவோயிஸ்டுகள் என அழைத்துக்கொண்டபோதும் 20ம் நூற்றாண்டுக்கான மாவோவின் பாதை அப்படியே இன்று பொருந்தாதென அறிவித்தனர். அதனாலேயே நேபாளப் பாதை ‘பிரசாண்டா பாதை'(மாவோ பாதையல்ல) என அழைக்கப்படுகிறது. மாவோவின் ‘புதிய ஜனநாயக’த்திற்குப் பதிலாக 21ம் நூற்றாண்டுக்கான ஜனநாயகம்” என்கிற கருத்தாக்கத்தை வைக்கின்றனர். ‘பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்’ என்பதற்குப் பதிலாக “பல கட்சி ஆட்சிமுறையே பரவலான சகல மக்களின் அதிகாரத்திற்கும் வழிவகுக்கும்” என்கின்றனர்.

சொல்கிற அனைத்தையும் அவர்கள் நேர்மையாக நடைமுறைப்படுத்துகின்றனர். பேச்சுவார்த்தைகள், போர்நிறுத்தம் முதலியவற்றைக் கால அவகாசம் பெறும் யுக்தியாகவின்றி மிக்க நேர்மையோடு அவற்றை செயல்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
5

நேபாளத்தைப் பற்றி இவ்வளவு விரிவாகச் சொல்கிறேனே என நினைக்காதீர்கள். நமது சூழலுக்கும் நேபாளத்திற்குமுள்ள பொருத்தப்பாட்டையும் நேபாள மாவோயிஸ்டுகள் மாறியுள்ள உலகச் சூழலை கணக்கில் எடுத்துக்கொண்ட பாங்கையும் சுட்டிக்காட்டுவதற்காகவும் அதன்மூலம் நாமேதும் கற்றுக்கொள்ள இயலுமா எனச் சிந்திக்கும் நோக்கிலும் மட்டுமே இவற்றைச் சொன்னேன்.

உலகம் பெரிய அளவில் மாறுகிறது என்பதை நாம் மறந்துவிடலாகாது. பூனை கண்களை மூடிக்கொண்டது போல மாற்றங்களுக்கு முகங் கொடுக்காமல் பழைய பல்லவியை நாம் பாடிக்கொண்டிருக்க முடியாது.

ஆயுதம் தாங்கிய போராட்டங்களின் அவசியத்தை நாம் மறுக்காத போதும் உலக அளவில் ஆயுதம் தாங்கிய போராட்டங்களுக்கு ஏற்ப்பட்டுள்ள தேக்கங்களையும் எல்லா ஆயுதப் போராட்டங்களிலும் ஊடாடியுள்ள தார்மீக நியாயங்களை மீறிய கொடுமைகளையும் நாம் சிந்திக்காதிருக்க இயலாது.

எல்லா ஆயுதப் போராட்டங்களிலும் அநீதியான கொலைகள், அழித்தொழிப்புகள், ஆட்கடத்தல்கள், பணப்பறிப்புகள் நடைபெறுகின்றன. குழந்தைகள் கடத்திச் செல்லப்பட்டுப் போர்முனைகளில் பலி கொடுக்கப் படுகின்றனர். எல்லா ஆயுதப் போராட்டங்களிலும் பெரிய அளவில் நிதி ஊழல்கள் நடைபெறுகின்றன. யாசிர் அரபாத்தின் ஃபடா இயக்கம் கூட இதற்கு விதிவிலக்கல்ல.

யாசிர் அரபாத் தன இறுதிக் காலத்தில் காந்தியின் பேரனைச் சந்தித்து அஹிம்சை பற்றிக் கதையாடியதை எல்லாம் கூட நாம் கவனிக்காதிருக்க இயலாது.

திறந்த மனத்துடன் நாம் பல்வேறு சாத்தியப்பாடுகளையும் யோசிக்க வேண்டும். எக் காரணம் கொண்டும் அறம் சார்ந்த நிலைப்பாடுகளிலிருந்து நாம் வழுவி விடக் கூடாது. பல்வேறு அடையாளங்களையும் அங்கீகரித்து ஏற்கும் மனப்பக்குவம் இல்லாத இயக்கங்களுக்கு எதிர்காலம் இல்லை. எல்லா நாடுகளிலும் இன்று அகதிகள், புலம் பெயர்ந்தவர்கள் உள்ளனர். தேசியம் என்கிற இறுக்கமான வரையறையை தாண்டி நாம் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். தேசியத்தைத் தாண்டிய ஒரு வாழ்முறையை இன்று புலம் பெயர்ந்தவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தேசியம் தாண்டிய ஒரு அரசியலையும் கூட நாம் யோசிக்க வேண்டியுள்ளது. இதன் பொருள் ஒரு பெருந்தேசிய ஒடுக்கு முறையை சகித்துக் கொள்வதல்ல. மாறாக இந்தப் பெருந்தேசிய ஒடுக்கு முறைக்கு எதிரான அரசியல் இன்னொரு அடையாள ஒடுக்குமுறைக்கு காரணமாகிவிடக் கூடாது. அத்தகைய ஒடுக்குமுறைக்கு காரணமாகும் ஒரு போராட்டமும் இயக்கமும் இன்றைய சூழலில் வெற்றி பெற இயலாது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இறுதியாக ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். அடையாள அரசியலின் எல்லைகளையும் வரம்புகளையும் நாம் மறந்து விடக்கூடாது. இந்தியாவில் தற்போது நடைபெற்றுக் கொண்டுள்ள இந்திய – அமெரிக்க அணு ஒப்பந்த அரசியலில் சரியோ தவறோ இந்திய அளவிலான கட்சிகளே ஒரு நிலைப்பாட்டை மேற்கொண்டன. அடையாள அரசியலை முன்வைத்த சாதி மற்றும் பிராந்திய அடைப்படையிலான கட்சிகள் இறுதிவரை ஒரு நிலைபாடு எடுக்காமலும் தொலைநோக்கில் பிரச்சனையை பரிசீலிக்காமலும் குறைந்தபட்ச உடனடி லாபங்கள், பதவிகள் ஆகியவற்றை மனதிற்கொண்டு முடிவெடுத்தன.

அது போன்ற போக்கை நாம் தவிர்க்க வேண்டும். எக்காரணம் கொண்டும் இன்றைய அரசுகளின் பாசிசப் போக்குகளையும் ஒடுக்கு முறைகளையும் நாம் நியாயப்படுத்திவிட இயலாது இந்த எச்சரிக்கையோடுதான் நாம் அடையாள அரசியலை முன்னெடுக்க வேண்டும்.

ஈழப் போராட்டத்தின் இன்றைய தேக்கம் குறித்து யோசிக்கும் போது நம் மனதில் தட்டுப்படக் கூடிய ஒருசில அம்சங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எனக்கு ஒரு வாய்பை அளித்த தோழர்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.

வணக்கம்.
————————————————————
( *விரிவுக்குப் பார்க்க: “நேபாளம்: மக்கள் வரலாறு மாவோயிஸ்டுகள்“/ அ.மார்க்ஸ்/பயணிகள் வெளியீடு : 2008)

9 thoughts on “21ம் நூற்றாண்டில் விடுதலைப் போராட்டங்கள்

  1. நன்றி சத்தியக்கடதாசி வளரும் தலைமுறைகளான நாம் சிந்திக்க வேண்டியவை பற்றிய அறிமுகமாக இது இருக்கிறது புதிய சிந்தனைக்ள மறுக்கப்பட்ட சூழலில் இவ்வாற கருத்தக்கள் பெரிதும் பயனுடையன போரா.அ.மார்க்ஸின் சரளமான நடை விடய்ஙகளை தெளிவாக புரிந்துகொள்ள எப்போதும் போல இதிலும் உதவுகிறது

    ச.சத்யன்

  2. தமிழ் தேசிய வாதம் யாழ் உயர்குடி மக்களின் அபிலாசைகளை பிரதினிதித்துவப்படும் தேசியவாதமாக ஆரம்பித்து அது விடுதலை புலிகளின் தலைமையில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து பேணுகிறது.நேபாள மாவோயிஸ்டுகளின் பார்வை விரிந்த பார்வை. அவர்கள் தேசிய வாத கருத்தியலில் தம்மை குறுக்கி கொள்ளவில்லை. எனவே அனைத்து இனத்தவர்களையும் வேறு பாடுகளையும் புரிந்து கொண்டு அணைத்து போகும் பக்குவம் அவர்களுக்கு இருந்தது. ஆனால் இதே விசயத்தை இலங் கையில் எதிர்பார்ப்பது தத்துவார்ர்த்த ரீதியான தவறு.

  3. //தேசியம் தாண்டிய ஒரு அரசியலையும் கூட நாம் யோசிக்க வேண்டியுள்ளது. இதன் பொருள் ஒரு பெருந்தேசிய ஒடுக்கு முறையை சகித்துக் கொள்வதல்ல.//
    //அடையாள அரசியலின் எல்லைகளையும் வரம்புகளையும் நாம் மறந்து விடக்கூடாது.//
    //எக்காரணம் கொண்டும் இன்றைய அரசுகளின் பாசிசப் போக்குகளையும் ஒடுக்கு முறைகளையும் நாம் நியாயப்படுத்திவிட இயலாது. இந்த எச்சரிக்கையோடுதான் நாம் அடையாள அரசியலை முன்னெடுக்க வேண்டும்.// -அ.மார்க்ஸ்

    இந்தக் கருத்துகளினூடான ஓர் அடையாள அரசியலை இலங்கையில் எந்த வடிவத்தில் எடுக்கலாம்? அதன் செயற்பாட்டுத்தளம் எது? அமைப்பாக்கம் பற்றிய அதன் கோட்பாடு அல்லது சிந்தனைமுறை என்ன? இலங்கைப் பேரினவாதத்தின் ஒடுக்குமுறைகளை அடையாள அரசியல் எப்படி பதிவு செய்கிறது? ஒடுக்குமுறைகளை எதிர்கொள்ளும் அதன் வழிமுறை என்ன?. (பெருந்தேசிய ஒடுக்குமுறையை சகித்துக் கொள்வதை ஏற்காத) அடையாள அரசியல் சிங்களப் பெருந்தேசிய ஒடுக்குமுறையின் அரச இயந்திரத்தோடு கூட்டுச் சேர்வதை எப்படிப் பார்க்கிறது? என்பது பற்றி அடையாள அரசியலாளர்களிடமிருந்து விளக்கம் கிடைக்காதவரை விவாதம் தொடரச் சாத்தியமில்லை.

    வேற்றுமையில் ஒற்றுமை என்பது சைவ சித்தாந்தத்தின் “யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற” சித்தாந்தத்திலிருந்து மாவோவின் முரண்பாடுகள் பற்றிய கோட்பாடுகள் வரை பேசப்பட்ட ஒன்றுதான். வேற்றுமையில் ஒற்றுமை ஒன்றும் புதுமையானதல்ல. வேற்றுமையில் ஒற்றுமை காண விளையும் போக்குகளை மொத்தத்துவம் என்று வசதிக்கேற்றபடி நிராகரித்துவிடுவதும், தனித்துவங்களை அங்கீகரித்தல் என்பதை பிரிவுகளாக வேற்றுமைப்படுத்துவதும் என்றெல்லாம் அர்த்தம் கொடுத்துப் பேசப்பட்டவைகளை நாம் கேட்டிருக்கிறோம். இந்த நிலைகளைத் தாண்டிய “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற சித்தாந்தத்தை புரிந்துகொள்ள முடியவில்லை. இலங்கை அரசின் உறவுகளை நியாயப்படுத்த இந்த வேற்றுமையில் ஒற்றுமை என்ற கதையாடல் தேவைப்படுகிறதோ என்று (மலினமாக) ஐயம் கொள்ள வேண்டியிருக்கிறது. -ரவி

  4. அதோழமையோடு ரவிக்கு!

    யாதுமூரே யாவருங் கேளிர்_ சைவசித்தாந்தமல்ல,அது சமய சிந்தனை முறைக்கு முற்பட்டது.கணியனாரை ஆசீவகத்துடனுடன் ஓரளவு தொடர்புபடுத்தும் ஆய்வுமுறையும் உண்டு.
    அது இங்கு முக்கியமல்ல.ஆயினும் யாதுமூரேயின் தொடர்ச்சியான தீதும் நன்றும் பிறர் தரவாரா! இங்கு அரசியல் முக்கியத்துவமுடையதுதான்.

    இலங்கைப்பேரினவாத ஒடுக்குமுறைகளை அடையாள அரசியல் எப்படிப் பதிவு செய்கிறது? என்ற உங்கள் கேள்வி இப்போது தீவிரமாக எழக் காரணமுண்டு. தமிழன் என்ற அடையாளத்தை நோக்கி அப்போது இக்கேள்வி தீவிரமாக எழுப்பப்பட்டதில்லை!

    தமிழர் என்ற அடையாளத்தை தலித்துகள் எதிர்கொண்டு தம்மை வேறுபடுத்தும் நிலையை வெள்ளாளர்கள் ஏற்படுத்தியபோது சிறுபான்மைத்தமிழர் என்ற வேற்றுமையையும் வித்தியாசத்தையும் அடையாளத்தையும் தலித்துகள் 1930ல் எடுத்தது உங்களுக்கு இங்கு நினைவில் வரவேண்டும். உங்களுக்கு நியாயமாகவே மலினமான ஐயம் அன்றைய அரசியலில் வந்திருக்கவேண்டும். 1990ல் மீண்டும் யாழ்ப்பாணத்தில் சிறுபான்மைத்தமிழர் மகாசபை அதன்பேரில் இயங்கத்தொடங்கியபோது புலிகள் இந்தப்பேரில் எவரும் இயங்கக்கூடாதென அன்பாகக் கேட்டுக்கொண்டு அதன் ஆவணங்களையும் பறீத்துச்சென்றதை தமிழன் என்ற அடையாளத்தோடு பிறந்தோர் மலினமாக ஐயம் கொள்ளவில்லை.

    பெருந்தலைவர் மாவோவின் முரன்பாடுகள் பற்றி கோட்பாட்டை வெள்ளாளர்கள் இப்போது லாவகமாக முன்நிறுத்துவது தமது சாதிஅடையாளத்தை அடைகாக்கத்தானா?
    நாம் மலினமாகவன்றி நியாயமாகவே ஐயம் கொள்வோம்.
    அடையாள அரசியல் ஏன் தலித் அரசியல் என்றே பேசுவோமே! அல்லது கதையாடலை நிகழ்த்துவோமே!
    தலித் அரசியல் பேரினவாத ஒடுக்குமுறையை மறுப்பதில்லை .
    இன்னும் துல்லியமாக இனவாத ஒடுக்குமுறைகளை அது எப்போதும் எங்கும் எதிர்க்கிறது. வெள்ளைத்திமிர் முதலாக.
    பேரினவாத ஒடுக்குமுறையை மறுத்து அப்படி ஒன்றே இல்லை என்றே நாம் எங்காவது பேசினோமா? அல்லது தலித்துகள் இமுஸ்லிம் மக்கள் இகிழக்குமாகாண மக்கள்,மலையக மக்கள் இப்படி எவரும் பேரினவாத ஒடுக்குமுறை இல்லை என்று மறுத்ததாக நான் புரிந்துகொள்ளவில்லை.
    இங்கு பிரச்சனை அரசியல் அதிகாரம் சார்ந்தது.
    சிறுபான்மையோர் ( கிழக்கு மாகாணமக்கள், முஸ்லிம் மக்கள், மலையக மக்கள் )தமது உரிமைகளை உறுதிப்படுத்த அரசும் சர்வதேச உதவிகளும் அடிப்படையானவை. அவர்கள் அரச கட்டமைப்பில் இப்போதுதான் இனைந்துகொள்கிறார்கள்.
    வெள்ளாளர்களுக்கு இது தாங்க முடியாததாக இருக்கிறது.
    எப்படி முன்னுக்கு வரமுடியும் .

    தோட்டக்காட்டானில் 12அமைச்சர்கள் , சோனியளில் 12 ,
    மட்டக்கிளப்பன் முதலமைச்சர்.
    பாவம் வெள்ளாளன் .
    அரசாங்கத்தை எதிர் எதிர் எதிர் என்று எதிர்க்கச் சொல்லி மற்றவர்களுக்கு நயவன்சகமாகச் சொல்லி மறித்துப்போட்டு தான் அரசாங்கத்தின் அதிகாரத்தை எப்போதும்போலச் சுகிப்பதற்கு காட்டும் காரணங்களில் ஒன்று பேரினவாத ஒடுக்குமுறை.
    நிலைமை 1983ல் இல்லை தோழர் ரவி! வரலாற்றுச்சக்கரம் முன்நோக்கிச்சுற்றுகிறது வழமைபோல.
    இப்போது உங்கள் முன்னுள்ள ஒரே ஒரு தெரிவு
    வெள்ளாள அதிகாரமற்ற வட மாகாணசபை .
    இல்லை யாழ்ப்பாணத்தமிழ்த்தேசியம் அல்லது வெள்ளாள அதிகாரம் எனில் 1930 மீண்டும் இ 1967 ஒக்டோபர் மீண்டும் .
    புத்தூர்இ வில்லூன்றி, கன்பொல்லை, நிச்சாமம் மீண்டும் .
    வட்டுக்கோட்டை மீண்டும். சுழிபுரம், வேலனை மீண்டும்.
    மலினமாகவன்று , நியாயமாகவே ஐயம் கொள்வோம்.
    மொத்தத்துவம் என்பது வித்தியாசங்களினதும் வேற்றுமைகளினதும்
    இணைப்புக் கண்னிகளாலானது.

    மேலும் புரிதல்களுக்குப் பார்க்க்
    இலங்கை அரசின் அங்கமாக இருக்கும் மலையக மக்கள் முன்னணி, (லோரன்ஸ்) , புத்திரசிகாமணி போன்றோர் மலையகமக்கள் தனித்தேசிய இனம் என்ற அடையாளத்தையும் முன்நிறுத்துகிறார்கள். ஒடுக்கப்படுபவர்கள் எல்லாஆயுதங்களையுமே கையில் வைத்திருப்பார்கள். சூழ்நிலைக்குத்தகுந்த மாதிரி தற்காக்கவும் தகவமைக்கவும் எறீவார்கள்.

    தமிழ் அடையாளம் பல்வேறு சிக்கல்களைக்கொண்டது.

    அன்பு ரவி !
    சைவ சித்தாந்தத்தின் அடிப்படைநூல்கள் காமிகம் முதல் வாதுளம் ஈறாக 28.
    பிரதானமானவை சைவசித்தாந்தத்தின் அடிப்படைகளை விளக்குவதென்றவகையில் மெய்கண்ட சாத்திரங்கள் .
    அவை 14.
    அதற்கான பாடல் ;

    உந்தி களிறு உயர்போதம் சித்தியார்
    பிந்திருபா உண்மைப்பிரகாசம் வந்தவருட்
    பண்புவினா போற்றிக்கொடி பாசமிலா நென்சுவிடு
    உண்மைநெறி சங்கற்ப முற்று.

    1; திரு உந்தியார்
    2;திருக்களிற்றுப்படியார்
    3; சிவஜானபோதம்
    4;சிவஜான சித்தியார்
    5; இருபா இருபஃது
    6;உண்மைவிளக்கம்
    7;சிவப்பிரகாசம்
    8;திருவருட்பயன்
    9;வினா வெண்பா
    10; போற்றிப்பஃறொடை
    11;கொடிக்கவி
    12;நென்சுவிடுதூது
    13; உண்மைநெறிவிளக்கம்
    14; சங்கற்ப நிராகரணம்

    இவை சைவ சித்தாந்தம் ,

    வேற்றுமையில் ஒற்றுமை என்ற சித்தாந்தத்தை புரிந்துகொள்ள முடியவில்லயா?
    வானவில் கூட்டணி என்று சொல்லுவோமே அது.
    வானவில் என்றால் வானத்தில் மழைக்காலத்தில் அரைவட்ட வடிவில் வில்லாய் வளைந்து தெரியும் பல்வேறு நிற மாலை.
    கூட்டணி என்றால் தமிழர் விடுதலைக் கூட்டணி.
    ஆனந்த சங்கரியாரோ மாவையோ எண்டுகேட்கக் கூடாது.
    சில விமானிகள் முழு வட்ட வானவில்லைப் பார்த்திருக்கிறார்கள்.
    தரையிலிருந்து முழு வட்ட வானவில் கூட்டணியை பார்ப்பது சாத்தியமில்லை.

  5. அ.மார்க்ஸ் அவா;களடைய எழுத்து மென்மையாக ஓடிச்செல்கிறது.
    மென்போக்கு எல்லா இடத்திற்கும் பொருந்தக்கூடியது அல்ல. கருத்துச்சொல்லுமிடத்து ஒரு உறுதிவேண்டும். இல்லை. அது வெறும் ஆய்வுமுறையே. கிழக்கின் இன்றைய நிலை பற்றி வந்த கட்டுரைகளுள் அ.வரதராஜப்பெருமாளின் கட்டுரை தெளிவானது.
    அரசோடு கூட்டுச்சேர்தல் அல்லது வானவில் எல்லாவற்றையும் எல்லாவிதமாகவம் பார்க்கலாம். எல்லாவிதமாகவும் புரட்டிப்போடலாம். கருத்துகள்கூட காலத்தோடும் மாறுபடும் உண்மையாயின் இன்றையகருத்தக்களை உரத்துச்சொல்லுதல் நல்லவிவாதத்திற்க வழிவகுக்கும்

  6. நேபாளத்தில் நடந்த மாற்றங்களுக்கு சர்வதேச அளவில் தரப்பட்ட நெருக்குதல்கள் ஒரு காரணம்.அங்கு உள்ள நிலையும்,ஈழ நிலையும் வெவ்வேறானவை.ஈழப் போராட்டத்தினை எதிர்க்கும்
    அரசு ஒரு குடியரசாக, குடியாட்சி நிலவும் அரசாகவே சர்வதேச
    சமூகத்தால் நோக்கப்படுகிறது. அதன் மனித உரிமை மீறல்கள்
    கண்டிக்கப்பட்டாலும் அதன் குடியாட்சித்தன்மை கேள்விக்குட்படுத்தப்படவில்லை. நேபாளத்தில் அப்படியல்ல.
    மேலும் நேபாளத்தில் நடந்த போராட்டத்தில் ஒரு காலகட்டத்தில்
    அனைத்துக் கட்சிகளும் ஜனநாயகம் தேவை எனப் போராடின.
    அதை பிற நாடுகள் அங்கீகரித்தன.ஈழப் போராட்டத்திற்கு
    எத்தகைய அங்கீகாரம் இருக்கிறது.

    மாவோயிஸ்ட்கள் ஆயுதம் ஏந்திப் போராடினர் என்பதையும், இப்போதும் கூட நேபாளத்தில் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கபட வில்லை என்பதனையும் நினைவு கொள்வது நல்லது.
    .இன்று சரியாகத் தோன்றும் விகிதச்சாரப் பிரதிநிதித்துவம் நாளை வேறுவிதமான சிக்கல்களுக்கு இட்டுச்செல்லும்.அ.மார்க்ஸ் வழக்கம் போல் அவசரப்பட்டு நேபாளத்தில் நடந்தது குறித்து ஒரு நூல் எழுதிவிட்டாரா.இன்னும் அங்கு அரசியல் ரீதியாக குழப்பங்கள்
    நிலவுகின்றன.நேபாள அரசு மாவோயிஸ்ட்கள் தலைமையிலான
    அரசாக, உலக வங்கி,அமெரிக்கா,சீனா, இந்தியா ஆதரவுடன்
    செயல்படும்.அது புரட்சிகரகமான அரசா இல்லை ஜனநாயகப் போர்வையில் மேற்கூறிய உலகவங்கியும்,பிற நாடுகளுக்கு
    உதவும் பொருளாதாரக் கொள்கைகளை நிறைவேற்றும் ‘நல்ல’
    அரசா என்பதற்கான பதிலை காலம் சொல்லும்.
    எனவே நேபாள மாவோயிஸ்ட்களை முன்மாதிரியாகக் கொள்ளமுடியுமா என்ற கேள்விக்கான பதிலை இன்று
    தேடுவதும், கூறுவதும் அரைவேக்காட்டு அரசியல் கண்ணோட்டத்தினையே காட்டுகின்றன.

  7. இனறு உண்மை போல் இருப்பதுநாளை பொய்க்கலாம். அதற்காக இன்றைய ‘உண்மைகளையும்’ யதார்த்தங்களையும் கவனத்தில் எடுக்க கூடாதென்பது ஆருடம் கூறுபவர்களுக்கு சரியாக இருக்கலாம். அ. மார்க்ஸ் வெறும் புத்தகப்படிப்பளர்மட்டுமல்ல ஒரு செயல்பாட்டாளர். மக்களின் இன்றய வாழ்னிலை விடுதலை ஜனனாயக உரிமை சம்ப்னதமான் ஆழ்ந்த பார்வையின்றி கற்பனை உலகில் அனைத்தும் ஏகாதிபத்திய சதி என கூறிக்கொண்டு காலம் கடத்துவது சும்மா இருப்பவர்களின் செயல். முதலாளிய ஜனனாயகத்துக்கூடாகவே சில போராட்டங்களை முன்னெடுப்பதன் அவசிய்ம் பற்றி ஆராயாமல் ஒளிமயமான எதிர்காலமொன்றைப்பற்றிய கனவுலகு பேசுவதற்கும் எழுதுவதற்கும் நடைமுறை அரசியலில் பங்கு பற்றாமல் தப்புவதற்கும் நல்ல சாக்கு.நாங்கள் எப்போதும் சரியானவர்கள். உத்தமசீலர்கள் எனும் போர்வைக்குநல்லாயிருக்கும். மாவோயிஸ்டுகள்நேபாளத்தில் மன்னர் ஆட்சிக்கெதிரான போராட்டத்தில் வெற்றி பெற்றிருக்கின்றனர். இது ஒரு ஜனனாயக போராட்டம். அவர்கள் உடனடியாக மாக்சிய லெனினிய அடிப்படையில் சோசலிச அரசைநிறுவவில்லை என்பது சமூக அரசியல் பற்றிய அறிதல் அந்த போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்பினரின் அனுபவங்கள் போன்றவற்றில் அக்கறை காட்டாமல் மேலெழுந்தமானமாக இது அமெரிக்க மேற்கத்திய ஜனனாயக சதி என்று கூறல் அர்த்தமற்ற வெற்று சொல் வீரம். நேபாள மாவொவிஸ்டுகளின் போராட்டங்கள் அனுபவங்களிருந்துநாம் எதையாவது கற்று கொள்ள முடியுமா என்பதே அமார்க்சின் பார்வை.

  8. சிங்கள இனவாத அரசு என்ற பொது எதிரிக்கு எதிராகப் போராடுவது என்ற பொதுக் குறிக்கோளுடன் போராடிய ஒரு பாசறையின் போராளிகள் என்றாலும் வெள்ளாளரிடம் சேகரித்த சோற்றுப் பார்சல்களை வெள்ளாளருக்கும் தலிததுக்களிடம் சேகரித்த சோற்றுப்பார்சல்களை தலித்களுக்கும் சாப்பிடக் கொடுத்த வரலாறு எம்முடையது. சிங்களவன் என்ற பொது எதிரிக்கு எதிராகவே போராடிய போதும் அதே குறிகோளுடன் போராடிய இன்னுமொரு இயக்கத்தை பள்ளன் கட்சி என்று பரிகாசமாக அழைத்ததும் எமது போராட்ட வரலாற்றில் தான்.

    பல இனங்களையும் சாதிகளையும் பல மொழி பேசுபவர்களையும் அவர்களுடைய தனித்துவத்திற்கான அங்கிகாரத்துடன் ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் இணைக்க முடியும் னெ;பதை நேபபாள மாவோயிசக் கட்சியிடமிருந்தும்> சாதாரவ பொது மக்கள் மீது வன் முறையைப் பிரயோகிக்காமை> ஒரு இசுலாமிய அபை்பு என்ற போதிலும் லெபனான் ஒரே ஒரு மதத்தின் நாடல்ல என்ன கொள்கை தலைமைத்தவத்தில் அனைத்து மதப்பிரிவுகிளயும் உள்ளடக்கியமை சகோதரப் படுகொலைகளைத் தவிர்தமை போன்ற விடயங்கலை லெபனானின் கிசுபுல்லா இயக்கத்திடமிருந்தும் கற்றுக் கொhhள்ள நிறைய இருக்கிறது. ஆயுதமேந்தினால் சகோதர இனக் கொலைகளையும் உட்கொலைகளையும் தவிர்பபது கடினம் என்ற சாக்குப் பொக்குகளை பொய்ப்பித்தவர்கள் அவர்கள்.

    இலங்கையில் பேரினவாதம் என்ற அதிகாரப் பொறிமுறை சிறுபான்மைக் குழுப்பளின் உரிழமகளைப் பலியெடுத்தே வளர்ந்த இரத்தமும் சதையுமான வரலாற்றை மறுப்பதற்கில்லை. அதே நேெெரம் தமிழ்ஆயுதக்குழுக்களின் குறிப்பாக புலிகளின் பாசிசக் கூறுபளை பேரினவாத ஒடுக்குமுறையின் பிரதி பிம்பங்களாக மாத்திரமு பார்ப்பதை விட தமிழ் தேசியத்தின் மூலவேர்களில் இருந்த வலதுசாரித்தனம் சாதிவெறி போன்றவற்றின் தொடர்ச்சியாகப் பார்ப்பது பொருத்தமாகும்.

  9. /நேபாளத்தில் நடந்த மாற்றங்களுக்கு சர்வதேச அளவில் தரப்பட்ட…… -பெரியர் ச்ரிடிச் /
    periyar critic கூறுவது ஏற்றுகொள்ளதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *