உரையாடல் தொடர்கிறது

கட்டுரைகள்

வடமராட்சி

18.07.2006

 அன்புடன் தோழருக்கு

நீங்கள் அனுப்பிய அநிச்ச 2005 மார்ச் 2006 இதழ்கள் கிடைத்தன. இதழ்கள் காத்திரமாக வந்துள்ளன அ.மார்க்சின் ‘பார்ப்பனர்கள் அரங்கேற்றும் ஆரியக்கூத்து’ கட்டுரை மிக விரிவாகவும் ஆழமாகவும் எழுதப்பட்டுள்ளது. வரலாறுகள் உண்மையானதாய் எழுதப்படல் வேண்டும்.

மகாகவியிடம் மாத்திரமல்ல, ஈழத்தவர்கள் பலரிடம் சாதியம் மறையாமலே இருக்கின்றது. ஒவ்வொரு சாதியும் தனக்கு கீழ் உள்ள சாதியை மிதிப்பதிலேயே கருத்தாக இருக்கின்றது. ஒரு முற்போக்குக்காரருடன் கதைத்துக் கொண்டிருந்த பொழுது ஊரின் மறுபகுதியில் வசிப்பவர்களைச் சுட்டி ‘நாங்கள் அங்கு கை நனைப்பது இல்லை’ என்றார். இருபகுதியும் ஒரே சாதிதான். சில காலங்களுக்கு முன் இந்த நண்பர் வீட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சில நண்பர்கள் சாப்பிட வராமல் தவிர்த்துக் கொண்டார்கள். இத்தனை அழிவுகள் உயிர் இழப்புகளுக்குப் பின்கூடச் சாதியத்தைப் பிடித்துக் கொண்டிருப்பது வேதனையாக இருக்கின்றது.

ரகுநாதனின் நேர்காணல் பற்றி; மாவிட்டபுரப் போராட்டம் 1968ல் நடந்தது, யாழ் பல்கலைக்கழகம் 1974 பிற்பகுதியில் திறக்கப்பட்டது.”அக் காலையில் இவ்விரு பேராசிரியர்களும் யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்கள். மாணவர் மத்தியில் இக் கருத்துகளை வலியுறுத்தி சாதி ஒழிப்புப் போராட்டத்தில் அவர்களையும் ஈடுபடச் செய்தார்கள்” என அவர் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. அக்காலகட்டத்தில் சு.வே.சீனிவாசகம், சூடாமணி போன்றவர்களுடன் நான் ஒவ்வொரு நாளும் போய் வந்தவன். ஒருநாள் கூட இவ்விரு பேராசிரியர்களையும் மாவிட்டபுர வீதிகளில் கண்டதில்லை. சிவத்தம்பியின் ஊரில் இருக்கும் பிள்ளையார் கோவில் இன்றுவரை சிறுபான்மையினரை கோவில் உள்ளே விடவில்லை. ‘கந்தன் கருணை’ ஆடிய இளைய பத்மநாதனின் குடும்பக் கோயிலான முருகையன் கோவிலிலும் உள்ளே விடுவதில்லை இவைதான் யதார்த்தம்.

தன் சமகால எழுத்தாளரான மு.தளையசிங்கம் பற்றி ஒன்றும் தெரியாது என்று கூறும் தான் ஒரு சமூகபொறுப்பு உள்ள எழுத்தாளர் என்று கூறுவது கேலியாக இருக்கிறது. தீவகப்பகுதியில் சாதி எதிர்ப்பு போராட்டத்தில் எவ்வளவு மூர்க்கத்தனமாக மு.த ஈடுபட்டார் என்பதை குடாநாடு அறியும். சாதிமான்மாரின் தாக்குதலே அவரின் மரணத்தை விரைவு படுத்தியது என்பது ஈழத்து இலக்கிய உலகத்துக்கும் தெரியும். ஊரைச் சொன்னாலும் பேரை சொல்ல கூடாது என்பர்.ஆனால் இங்கு இரண்டையும் கூறக் கூடாது. அதனால் S.ராமகிருஷ்ணன் என பெயரை மாற்றுகிறேன்.

அன்புடன்

S.ராமகிருஷ்ணன்

10.08.2006

———————————————————————————————–

Paris

15.08.2006

தோழர் S. ராமகிருஷ்ணனுக்கு,

பிரெஞ்சுப் பிரதமர் டோமினிக் து வில்பன் இற்கு நான் கைகொடுத்த அன்று இது நிகழ்ந்தது – 28-07-2006 மாலை

லாச் சப்பலில் ஒரு புடைவைக் கடையின் முன்னே பொலிசார், அவசர மருத்துவ உதவிப்பிரிவு, எல்லோரும் வந்து ஓர் இளைஞனைப் பிணத்தை ஏற்றுவது போல் ஏற்றிக்கொண்டு போகின்றனர்.

கடை முதலாளி தனது மகளுடன் இந்தியாவிற்கு ‘எஸ்கேப்’ ஆகிவிட்டார்.

நியாயம் கேட்டும், இந்திய ரெலிபோன் நம்பர் கேட்டும், எதிர்த்தும் இளைஞனால் முடியாது போகவே, விசத்தை எடுத்து அவர்களுக்கு முன்னால் குடித்து மயங்கி இப்போது ஆஸ்பத்திரியில் இருக்கிறார் இளைஞர்.

இச்சம்பவத்திற்குப் பின்னர்தான் அக்கடை வெள்ளாளர்களின் கடை என்று எனக்குத் தெரிந்தது.

சுவிஸிலிருந்து ஒரு வானொலி நேயர் சொன்னார். “சாதி பாராமல் ஒரு வெள்ளாளன் ‘ஒரு புரொப்போசல் மரேஜ்’ செய்தால் நான் ஒரு லட்சம் பிராங் நன்கொடையாகவே தருவேன்.”

நன்றியோடும்

நெகிழ்ச்சியோடும்

சுகன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *