தமிழில் நவீன இலக்கியம் இருக்கிறதா

கட்டுரைகள்

-ம.நவீன்

ஷோபாசக்தியைப் பற்றி கூற முதலில் நான் பிரான்ஸ் போக வேண்டியுள்ளது. லண்டன் நகரில் ‘வல்லினம்’ அறிமுக நிகழ்விற்காகச் சென்ற எனக்கு பிரான்ஸில் வசிக்கும் ஷோபாசக்தியைப் பார்க்கும் ஆவல் ஏற்பட்டது. சில நேர்காணல்கள் வழியும் அவரின் ‘கொரில்லா’ மற்றும் ‘ம்’ நாவல்கள் தமிழ் இலக்கிய உலகில் ஏற்படுத்திய அதிர்வின் வழியும் நான் அவரை ஓரளவு அறிந்து வைத்திருந்தேன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் மனுஷ்ய புத்திரன் இல்லத்தில் தங்கியிருந்த ஓர் இரவில் அவர் சிலாகித்து பேசிய இரண்டு நாவல்களில் ஒன்று ஆல்பர் காம்யுவின் ‘அந்நியன்’ எனும் மொழிபெயர்ப்பு நாவலாகவும் மற்றது ஷோபாசக்தியின் ‘ம்’மாகவும் இருந்தது. மனுஷ்ய புத்திரனின் வாசிப்பு மற்றும் இலக்கியப்பிரதிகள் குறித்தான அபிப்பிராயங்கள் மீது எனக்கு அதிக நம்பிக்கை இருந்ததால் மறுநாளே ‘ம்’ நாவலைத்தேடி ‘நீயு புக் லெண்ட்’ சென்று கிடைக்காமல் ஏமாற்றமே மிஞ்சியது.

லண்டனிலிருந்து விமானம் வழி பிரான்ஸை அடைந்ததும் எந்த சிக்கலும் இன்றி கண்களில் தட்டுப்பட்டுவிட்டார் ஷோபாசக்தி. “ஏதும் சிரமம் கொடுத்துவிட்டேனா?” என வினவினேன். “நான் வேலை வெட்டி இல்லாத நாய்ங்க…நீங்க வாங்க” என கரம் பற்றினார். நான் ஷோபாவுடன் பேசிய முதல் வாசகம் அது.

ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் தனது சகோதரி தர்மினியின் குடும்பத்துடன் இருந்தார் ஷோபா ( தர்மினி ‘தூமை’ எனும் அகப்பக்கம் தொடங்கி நடத்தி வருகிறார். நல்ல கவிஞரும் கூட). நான் கொண்டுசென்றிருந்த ‘வல்லினம்’ இதழை ஆவலோடு வாசித்தப்படி இருந்தார். வீட்டின் வரவேற்பறையில் நூலகம். அதில் பெரியாரும் காரல் மார்க்ஸும் பிரதானமாக இருந்தார்கள். ஷோபாவின் உலகம் எனக்கு கொஞ்சம் புரிய ஆரம்பித்தது. அவருடன் நெருங்கி பழக அந்த உலகம் ஏற்றதெனப்பட்டது.

எங்களின் பேச்சு பல திசைகளுக்குச் சென்றாலும் மீண்டும் மீண்டும் இலக்கியத்திடமே வந்தது. இலக்கியம் தொடர்பாக நான் கொண்டிருந்த சில ஐயப்பாடுகள் ஷோபாவின் விளக்கங்களில் புரியத்தொடங்கியது. தமிழக இடைநிலை ஏடுகளில் நடக்கும் பம்மாத்துகளையும் அதன் மாய கட்டமைப்புகளையும் முதலில் என் மனதிலிருந்து அகற்றியவர் எம்.ஏ.நுக்மான். அதன் தொடர் வளர்ச்சியாக பின்நவீனப் பார்வை கொண்டிருந்த ஷோபாவின் பேச்சில் வாழ்வு, எழுத்து, மனிதன் தொடர்பான புரிதலுக்கு இன்னொரு பார்வை இருப்பதை அறிய முடிந்தது.

ஷோபாவின் நண்பர்கள் பலரும் அறிமுகம் ஆனது கூடுதல் மகிழ்ச்சியாக பிரான்ஸ் பயணத்தில் இருந்தது. சுகன், மனோகரன் ‘உயிர்நிழல்’ ஆசிரியர் லக்ஷ்மி என பலரிடமும் பல்வேறு வகையான கருத்து பரிமாறல்கள், புதிய அனுபவங்கள். ஒரு பயணம், எண்ணிக்கையில்லா புத்தகங்களின் தீவிரத்தையும் சிந்தனையையும் கொடுக்கும் என்பது எவ்வளவு பெரிய உண்மை.

இரண்டு இரவுகளுக்குப்பின் ஷோபாவிடம் விடைப்பெற்றேன். அவருடன் இருந்த நாட்களில் பல தருணங்களில் ஷோபா பெரியாரைப்பற்றி சிலாகித்துப் பேசியபடியே இருந்தார். அந்நேரங்களில் அவர் உணர்ச்சிப் பெருக்கோடே காணப்பட்டார். விரைவில் மலேசியா வருவதாகக் கூறினார், ‘காத்திருப்பேன்’ என்றேன்.

இனி மலேசியா…..

நானும் மஹாத்மனும்தான் விமான நிலையத்தில் காத்திருந்தோம். சற்று தாமதமாகவே வந்தார் ஷோபா. அவரிடம் கடப்பிதழ் இல்லை. பிரத்தியேக பயணச்சீட்டை பயன்படுத்துவதால் சில விசாரனைகளுக்கு உட்பட வேண்டியுள்ளது என்றார். அன்று இரவு உணவுக்குப்பின் நள்ளிரவைத்தாண்டி படுக்கைக்குச் சென்றோம். மறுநாள் காலையில் அறைக்கதவைத் திறந்தபோது ஷோபாசக்தி புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தார். என்னைக் கண்டவர் சட்டென தனது பையிலிருந்து ஒரு பரிசை எடுத்துக்கொடுத்தார். ‘கடிகாரமா?’ என்றேன்.’பிரான்ஸிலிருந்து செண்டும் கடிகாரமும் வாங்கிவர என்னை முட்டாளுனு நெனச்சீங்களா? பிரிச்சி பாருங்க’ என்றார். பிரித்துப்பார்த்தேன். vallinam என கண்ணாடியில் வடிவமைக்கப்பட்ட எழுத்து இரு கண்ணாடி டோல்பின்களுக்கு நடுவில் இருந்தது.

எங்கள் பயணம் தொடங்கியது. மிகச்சிறந்த ‘சுற்றுலாத் தளம்’ என்பதால் முதலில் பத்துமலைக்குச் சென்றோம். திருப்பதி போலவே இங்கும் பணம் கொட்டோ கொட்டு என கொட்ட வேண்டும் என ஆசைப்பட்டு, கோயில் நிர்வாகம் அமைத்திருக்கும் பெருமாள் ஆலய படிகட்டில் அமர்ந்து பெரியார் குறித்து ‘ஜனசக்தி’ இதழிற்காக மஹாத்மனிடம் பேசத் தொடங்கினார் ஷோபா.

2

வல்லினம் இதழ் ஏற்பாட்டில் ஷோபாசக்தியுடனான இலக்கிய சந்திப்பு (24-1-2009) கிராண்ட் பசிபிக் தங்கும் விடுதியில் நடந்தது. அனைவரையும் வரவேற்று பேசிய வல்லின இதழின் ஆசிரியர் ம.நவீன் ஷோபாசக்தியை சிறு அறிமுகம் செய்தார்.

ஷோபாசக்தியின் உரையிலிருந்து:

நான் மக்களுக்கு விடுதலையையும் நிம்மதியையும் எந்தத் தத்துவங்கள் பெற்றுத் தரும் என நம்பினேனோ அவை என்னை இரக்கமேயில்லாமல் கைவிட்டன. முதலில், தமிழ் தேசிய விடுதலை மக்களுக்கான விடுதலையாக இருக்குமென நம்பினேன். அதற்குப் பின்பு கம்யூனிஸ்ட் இயக்கம் என் மக்களுக்கான விடுதலையைச் சாதிக்குமென நம்பினேன். ஆனால் இவையெல்லாம் மக்களுக்கு விடுதலையை அல்லாமல் அதிகாரங்களையே பரிசளித்த போது நான் போராளிக் குழுவிலிருந்தும் கட்சியிலிருந்தும் விலகிக் கொண்டேன். ஆனால் அதற்கு பின்பும் எனக்கு சொல்வதற்கு விஷயங்கள் இருந்தன. சொல்வதற்கு நிறைய கதைகள் இருந்தன. நான் என்னுடைய முதலாவது சிறுகதையை எழுதினேன்.

அதன்பின்பு இன்று வரை எந்தவொரு அரசியல் இயக்கத்திலும் நான் இல்லை. சிறுவயது முதலே அரசியல் இயக்கங்களில் தீவிரமாகப் பங்கெடுத்து வந்தநான் இப்போது தனியனாக என்னைக் குறுக்கிக்கொண்டு பயனற்ற ஒரு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த ஆற்றாமைதான் என் எழுத்து.

இலக்கியக் கோட்பாடுகள், விதிகள், சர்வதேச எழுத்துகள், உள்ளொளி, தரிசனம், ஞானக்கிறுக்கு, ஞானச்செருக்கு, மொழி, படிமம், பன்னாடை இதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்குக் கொஞ்சம் கதைகள் தெரியும். இந்த உலகத்தின் ஆறு நாடுகளின் சிறைகளிலே இருந்திருக்கிறேன். தாய்லாந்தில் மட்டும் சின்னதும் பெரிதுமாக கிட்டதட்ட பத்து தடவைகள் சிறையிருந்திருக்கிறேன். பாஸ்போட்- விசா இல்லாமல் தாய்லாந்திலிருந்து பிரான்சுக்கு போயிருக்கிறேன். போகும்போது ஒரு பெயர். வரும்போது இன்னொரு பெயர். இப்படியாக எனக்கு வாழ்க்கையின் கதைகள் தெரியும். இந்தக் கதையைத்தான் நான் சொல்கிறேன். என்னுடைய மொழியில் சொல்கிறேன். என்னுடைய அம்மாவுக்கு இலக்கியம் தெரியாது. அய்யாவுக்கு இலக்கியம் தெரியாது. என் பரம்பரைக்கே கல்வி கிடையாது. கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த காலத்தில் கலை, இலக்கியம் குறித்த கட்சியின் கோட்பாடுகளில் பயிற்றுவிக்கப்பட்டேன். அது அப்போது ஒரு உந்துதலைக் கொடுத்தது என்பது எவ்வளவு உணமையோ அதேயளவிற்கு அவை வெறும் வரட்டுக் கோட்பாடுகளாகவேயிருந்தன எனபதும் உணமை.

அம்மா கதை சொல்வார், பாட்டி கதை சொல்வார், காவல்துறையிடம் அகப்பட்ட குற்றவாளி தப்பிப்பதற்காக அவனும் ஒரு அற்புதமான கதையை போலிசுக்குச் சொல்வான். அதுபோல நானும் கதை சொல்கிறேன். அம்மாவென்றால் காகமும் வடையும் என்றிருக்கும். என்னுடைய எழுத்து ஆர்மியும் படையும் என்றிக்கும். இவ்வளவு தான் வித்தியாசம் வேறொன்றுமில்லை. இன்று எதைப் பற்றி பேசுவதென்று நவீனிடம் கேட்டேன், ஈழத்து அரசியல் குறித்தோ, புலம்பெயர் வாழ்வு குறித்தோ பேசச் சொல்வார் என எதிர்பார்திருந்தேன். கவிழ்த்துவிட்டார். நவீன இலக்கியம் பற்றிப் பேசுங்கள் என்றார்.

இலக்கியம் குறித்து – ஏற்கெனவே நான் சொன்னது மாதிரி – சொல்வதற்கு என்னிடம் எதுவுமில்லை. இதிலே நவீனம் வேறு. ஆனால் நிச்சயமாகவே இலக்கியம் குறித்து என்னிடம் சில கேள்விகள் உண்டு. என்னிடம் சில உணர்வுகள் உண்டு. அது குறித்து நான் உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என விரும்புகிறேன். ஏனென்றால் எழுத்தாளன் என்பதற்கு முன்பு நானொரு வாசகன். ஒரு வாசகனைச் சிறப்புரையாளனாக்கிய அழியாப் பெருமையை இந்த அவை பெறட்டும்.

நவீன இலக்கியம் என்றால் என்னவென்று ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகச் சொல்கிறார்கள். இம்சையரசன் புலிகேசிக்கு பின்நவீனத்துவச் சினிமா என்று உரையெழுதிய எத்துவாளி எழுத்தாளர்களுக்கு மத்தியில்தானே நாமும் பொறுத்துக்கொண்டு வாழவேண்டியிருக்கிறது. நவீனத்துவம், பின்நவீனத்துவம் என்பதற்கெல்லாம் அரசியல் சார்ந்த செயற்பாடுகளும் நெகிழ்ச்சியான ஆனால் எல்லையிட்ட வரையறைகளுமுள்ளன. கோட்பாட்டாளர்கள் குறிப்பாக 15-ம் நூற்றாண்டையொட்டி நவீன காலம் ஆரம்பிக்கிறது என்பார்கள். எப்போது ஆட்சிலிருந்து, கலையிலிருந்து, இலக்கியத்திலிருந்து மதம் நீக்கம் செய்யப்படுகிறதோ தத்துவத்திலிருந்து மதம் நீக்கம் செய்யப்படுகிறதோ அதற்கு பின்னான காலத்தை அவர்கள் நவீன காலமென்று குறிக்கிறார்கள். இந்த நீக்கம் பொருளுற்பத்தி முறையின் பெருக்கம் எப்படி முதலாளிய சனநாயத்தின் வளர்ச்சிக்குத் துணைநின்றதோ அதேபோல பண்பாட்டுத்தளத்தில் முதலாளிய சனநாயத்தின் வளர்ச்சிக்குத் துணை நின்றது.ஆக, நவீன இலக்கியம் என்பது மதநீக்கம் செய்யப்பட்டதாகவும், அது ஆகக் குறைந்தது முதலாளிய சனநாயக விழுமியங்களைப் பேசுவதாயுமிருக்க வேண்டுமல்லவா! நம்முடைய தமிழ் இலக்கியம் அப்படித்தான் இருக்கிறதா? அது மதத்தையும் அதனிலிருந்து வேர்விட்டு விழுதெறிந்து நிற்கும் சாதியையும் சுற்றிப் படர்ந்திருக்கிறதா இல்லையா? இன்று தமிழ் இலக்கியத்தின் மையமான போக்குகளும் அவற்றின் பிரதிநிதிகளும் பிதாமகர்களும் இந்த மதவாதப் போக்கின் பிரநிதிகளல்லவா! சுயசாதிப் பெருமிதங்களை அவர்கள் இலக்கியத்திற்குக் கடத்திக்கொண்டல்வா இருக்கிறார்கள். தமிழில் நவீனத்தின் தொடக்கமாகக் கருதப்படும் பாரதியிலிருந்து ஞானக்கூத்தன் வரைக்கும் புதுமைப்பித்தனிலிருந்து லதா ராமகிருஷ்ணன் வரைக்கும் தங்கள் ஆதிக்க சாதிப் பெருமைகளுக்குப் பங்கம் நேரிட்டபோது துடித்தெழுந்தார்களா இல்லையா?

ஒருவர் நொன் லீனியர் பிரதியை எழுதலாம். இன்னொருவர் எழுத்துகளைக் கலைத்துப்போட்டு விளையாடலாம் அல்லது சுந்தர ராமசாமியைப் போல ஒவ்வொரு வரியையும் தட்டித் தட்டிச் செதுக்கலாம். அசோகமித்திரனைப் போல இதழோரம் கசியும் துயரப் புன்னகையோடு கதைசொல்லி மத்தியதர வர்க்க வாசகர்களைக் கண்ணீர்விட வைக்கலாம். ஆனால் இந்த எழுத்து நுட்பத்தை வைத்தோ உத்திகளை வைத்தோ நமது எழுத்தாளர்களில் அநேகருக்கு கைவந்த கலையான மணிப்பிரவாளத்தை வைத்தோ ஒரு பிரதியை நவீன இலக்கியப் பிரதியென மதிப்பிட முடியாதென்றே நான் கருதுகிறேன். பிரதியில் பொதிந்திருக்கும் அரசியலை வைத்தே அந்தப் பிரதி நவீனத்துவப் பிரதியா அல்லது இன்னுமே நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளைக் கூட மீறமுடியாத குப்பையா என நாம் மதிப்பீடு செய்ய முடியும். ஜே. ஜே. சிலகுறிப்புகளும், புலிநகக் கொன்றையும் பிற்போக்கு மதிப்பீடுகளை உருவாக்கும் குப்பைகள். அவற்றுக்கும் -சரியான பொருளில்- நவீன இலக்கியத்திற்கும் எதுவிதத் தொடர்புமில்லை என்று நான் துணிந்து சொல்வேன்.

தமிழ் இலக்கியம் என்று நாம் ஒரு பொதுவரையறையை உருவாக்குவது நமக்குக் கேடாகத்தான் முடியும். ஏனெனில் இதுவரை ஆதிக்க சாதியினரதும் ஆண்சாதியினரதும் இலக்கியமும் பண்பாடும்தான் தமிழ் இலக்கியமாகவும் தமிழ்ப் பண்பாடாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிராக வரலாறு நெடுகவும் ஒடுக்கப்பட்டவர்களின் இலக்கியம் நிமிரும்போது அது இழிசனர் இலக்கியம் எனப் பழித்துரைக்கப்பட்டது பழைய வரலாறு. ஆபாசம் என ஒழித்துக்கட்ட முயல்வது சமீபத்திய வரலாறு.

தமிழ் இலக்கியம் என்பது ஒன்று இல்லை. இங்கு பல்வேறு இலக்கியங்கள் இருக்கின்றன. பார்ப்பன இலக்கியம், வெள்ளாள இலக்கியம், தலித் இலக்கியம், பெண்கள் இலக்கியம், திருநங்கைகள் இலக்கியம் என ஒன்றுக்கொன்று பகையும் முரணும்கொண்ட பல்வேறு போக்குகள் இங்கு நிலவும்போது ஒடுக்குபவரின் இலக்கியத்தையும் ஒடுக்கப்படுபவர்களின் இலக்கியத்தையும் தமிழ் இலக்கியம் என்ற ஒரே வரையறைக்குள் மதிப்பிடுவது சரியற்றது. குறிப்பான அரசியல், சூழல் அமைவுகளைப் பொறுத்துத்தான் நாம் இலக்கியப் பிரதிகளை அணுகவேண்டியிருக்கிறது. இந்தப் பிரதிகளுக்குப் பொதுவான விமர்சன அளவுகோல்களையும் நாம் உபயோகிப்பதில் நியாயமில்லை. சுஜாதா போன்ற ஒரு கேவலங் கெட்ட நோய்க் கிருமியை உன்னதமாய் மதிப்பீடு செய்யும் விமர்சனக் குஞ்சுகளுக்கு ஒடுக்கப்பட்டவர்களின் தலித்துகளின் பெண்களின் திருநங்கைகளின் பிரதிகள் குறித்துக் கருத்துச் சொல்ல எந்த உரிமையும் கிடையாது. ஆனால் அவர்கள்தான் சூழலின் அதிகாரத்தைத் தங்கள் கைகளில் வைத்திருக்கிறார்கள். அவர்களின் கண் அசைப்புகளின் வழியேதான் விருதுகளும் அங்கீகாரங்களும் தீர்மானிக்கப்படுகின்றன. கனடாவில் அய்யர்மார்களுக்கு கொடுக்கவென்றே ஒரு விருது நிறுவனம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த விருதுக்கு ‘இயல்’ விருது என்று பெயர். வாழ்நாள் சாதனைக்காக அந்த விருது வழங்கப்படுகிறதாம். அய்யராய் இருப்பதெல்லாம் ஒரு வாழ்நாள் சாதனையா? அதற்காக ஒரு விருதா?

நவீன இலக்கியத்தின் கொடுமுடி என்று குறிப்பிடப்படும் புதுமைப்பித்தனிலிருந்து ஆரம்பிக்கலாம், அல்லது பிச்சமூர்த்தியிலிருந்து ஆரம்பிக்கலாம், சி.சு. செல்லப்பாவிலிருந்து ஆரம்பிக்கலாம், கு.பா.ரா.விலிருந்தும் ஆரம்பிக்கலாம். எப்படி ஆரம்பித்தாலும் ஒரு குறிப்பிட்ட காலம்வரை பார்ப்பன-வெள்ளாளர் சாதி இலக்கியமே தமிழ் இலக்கியத்தைத் தமது காலடியில் வைத்திருந்தது எனபதை நீங்கள் மறுக்க முடியாது. மணிக்கொடி, எழுத்து, கசடதபற, காலச்சுவடு என்று ஒரு பட்டியலே உண்டு.

நான் கிறிஸ்தவ சமூகத்தில் பிறந்ந்தவன். கிறிஸ்தவத்திலே சாதியில்லை என்று சொல்வார்கள். என் பாட்டன் காலத்திலே சர்ச்சிலே நடுவாகக் கயிறு கட்டி இருக்குமாம். ஒரு பக்கத்திலே வெள்ளாளர்கள். மறு பக்கத்திலே தலித்துகள். என் காலத்தில் கயிறு இல்லை. ஆனால் அங்கே மனக்கயிறு இருக்கும். அப்படி அப்படியே இடம் வலமாக அந்தந்த சாதி இருந்து கொள்ளும். வேதத்தை சூத்திரன் படித்தால் காதிலே ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டுமென்று மனுதர்மம் சொல்லுகிறது. வேதம் படிப்பதற்கு சூத்திரனுக்கு தடை என்று இந்திய அரசியல் சட்டம் சொல்கிறது. இவையாவும் நம்பமுடியவில்லை என்று நீங்கள் சொல்வீர்களென்றால் தோழர் எஸ்.வி.ராஜதுரை, ‘பெரியார்- மரபும் திரிபும்’ என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதைப் படித்துப் பாருங்கள். அதன் அட்டையிலேயே இந்துச் சட்டத்தை வெளியிட்டிருக்கிறார் அவர். இந்தக் கொடிய சாதியச் சூழலுக்குளிளிருந்தும் ஆண் முதன்மைச் சமூக அமைப்புக்குள்ளிருந்தும்தான் தடைகளை உடைத்துக்கொண்டு ஒடுக்கப்பட்டவர்கள் கல்வியைப் போராடிப் பெற வேண்டியள்ளது. மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணிகளைக் கடந்துதான் எழுதவேண்டியிருக்கிறது.

1990களில் அம்பேத்கர் நூற்றாண்டையொட்டி தமிழகத்திலே தலித் இலக்கிய எழுச்சி ஏற்பட்டது. இலக்கியத்திற்கெல்லாம் என்ன சாதி? இலக்கியத்திற்கெல்லாம் சாதி பார்க்கலாமா? இலக்கியம் என்றால் இலக்கியம்தானே. தமிழ் என்றால் தமிழ்தானே என்ற குரல்கள் இன்னொரு புறத்தில் எழுந்தன. காலப்போக்கில் தலித் இலக்கியம் தன்னுடைய வீரியத்திலும் தன்னுடைய உண்மைத் தன்மையிலும் இதுவரையில் தமிழ் இலக்கியத்தில் பேசப்படாத பகுதிகளை பேசியதற்காகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.

பொங்கலை தமிழர் திருநாள் என்று சொல்கிறார்களே. எப்போதிலிருந்து இது தமிழர் திருநாள்? 50 வருஷத்திற்கு முன்பு வரை ஈழத்தில் தலித்துகள் மேலாடை போட இயலாது. பாட்டன் வேட்டி கட்ட இயலாது. கோயிலுக்குள் போக இயலாது. வெளியில் நின்று தேங்காய் உடைக்க இயலாது. தங்க நகை அணிய இயலாது. பாயாசம் வைக்க இயலாது. இது சட்டம். பொங்கல் நாள் தினத்தன்று காலையில் வைத்த ஆறிப்போன பொங்கலை நயினார்கள் சிறைக்குட்டிகளுக்குப் போடுவார்கள். இது தமிழர் விழாவா இல்லை சாதி இந்துக்களின் விழாவா? இதே கேள்வியைத்தான் இலக்கியத்திற்கும் பொருத்தி பார்க்கிறேன். தலித்துகள் எழுத வரும்வரை தலித்துகளின் வாழ்க்கை தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா? ஒரு கே.டானியலும் பூமணியும் வரும்வரை தமிழ் இலக்கியத்தில் தலித் மக்களின் இடம் என்ன? எதுவுமே இல்லையெனில் இந்தப் பாழாய்ப்போன தமிழ் இலக்கிய மரபுக்கும் எங்களுக்கும் என்ன சம்மந்தம்?

அப்படித் தப்பித் தவறி ஆதிக்க சாதியனர் தலித் மக்களைக் குறித்து எழுதிய தருணங்களிலெல்லாம் தலித்துகளைக் கேவலப்படுத்தியும் நையாண்டி செய்துமே தங்கள் பிரதிகளைக் கட்டமைத்திருக்கிறார்கள். புதுமைப்பித்தனுக்குள்ளும் மௌனிக்குள்ளும் இயங்கிய சாதிய வக்கிரத்தை அ. மார்க்ஸும், சுந்தர ராமசாமியின் புளியமரத்தின் கதையை ராஜன் குறையும், சுஜாதாவின் மஞ்சள் ரத்தத்தை ரவிக்குமாரும் நிறப்பிரிகை இதழ்களில் தோலுரித்துக் காட்டினார்கள். ‘சந்தேகங்கள் வாழ்க’ எனப் புத்தகமே போட்டு பலபத்துச் சந்தேகங்களைத் தீர்த்து வைத்த சுந்தர ராமசாமி அவரின் ‘பிள்ளை கெடுத்தாள்விளை’ சிறுகதைக்கு எதிராகத் தலித்முரசு கூட்டம் போட்டுக் கேள்வி கேட்டபோது மௌனங்கள் வாழ்க எனப் பம்மிக்கொண்டார். மஹாகவிக்குள் இயங்கிய சாதிய மனதை சுகன் கட்டவிழ்த்துக் காட்டியிருக்கிறார். ஆனானப்பட்ட அயோத்திதாசப் பண்டிதரையே அருந்ததியர் நிலையிருந்து மதிவண்ணன் கேள்வி கேட்கும் காலமிது. நவீன இலக்கியம், கவித்துவம், மொழி, புனைவு, கியூபிஸம் என்று அய்.டி. அம்பிகளையும் மத்தியதரவர்க்கத்துப் புளியேப்பக்காரர்களையும் வேண்டுமானால் இந்த இலக்கியக் வால்நட்சத்திரங்கள் ஏமாற்றலாம், கவரலாம். ஆனால் அரசியல் ஓர்மையுள்ள சமூக மாற்றத்தை வேண்டி நிற்கும் ஒரு வாசகனிடமோ வாசகியிடமோ இனி இது செல்லாது.

தலித் இலக்கியம் அதன் தொடக்கத்தில் எதிர்கொண்ட சவால்கள் கொஞ்சநஞ்சமல்ல. தலித் இலக்கியத்தின் தந்தை கே. டானியல் கிராமம் கிராமாகச் சென்று தலித் மக்களின் குடியிருப்புகளில் தனது நாவல்களை வாசித்துக்காட்டி சாதி ஒழிப்புப் போராட்டத்தைத் தூண்டிய போராளி. ஆனால் இடதுசாரிகளைத் தவிர வேறெந்த யாழ்ப்பாணத்து வெள்ளாள விமர்சகனும் அவரது எழுத்துகளை அங்கீகரித்ததில்லை. ஈழத்திற்குச் சற்றுப் பிந்தி தமிழகத்தில் தலித் இலக்கியம் முகிழ்த்தபோது அது சந்தித்த சவால்கள்தான் எத்தனை! இலக்கியத்தில் பிரிவினை வேண்டுமா, இலக்கியத்தில் இடஒதுக்கீடு வேண்டுமா என எத்தனை குறுக்கீடுகள். பார்ப்பன எழுத்தாளர்களும் பார்ப்பன விமர்சகர்களும் முதன்முதலில் இமையத்தின் கோவேறு கழுதையைத்தான் தலித் இலக்கியமாக மடியில் தூக்கிக் கொஞ்சினார்கள். அந்த நாவல் பறையர் சாதியினரால் ஒடுக்கப்படும் புதிரை வண்ணார்களின் வாழ்க்கையைப் பேசும் நாவல். நாங்கள் மட்டுமா ஒடுக்குகிறோம் நீங்களும்தானே உங்களிற்குக் கீழேயுள்ளவர்களை ஒடுக்குகிறீர்கள் என்ற அவர்களின் வக்கிரமான நகைப்பில் தெறித்த எச்சில்தான் இமையத்தின்மீது பாராட்டு மழையாக இறங்கியது. இளிப்பெல்லாம் சரிதான். ஆனால் பெண்ணை ஆண்மட்டுமா ஒடுக்குகிறான் மாமியாரும்தானே ஒடுக்குகிறாள் என்று சொல்லக்கூடிய ஒரு மெகாசீரியல் பார்வையாளரின் கண்ணீருக்கு உள்ள பெறுமதிதான் அவர்களின் இளிப்புக்கான பெறுமதி. வாய்ப்புள்ள தோழர்கள் ராஜ்கவுதமன் அந்த நாவலைத் தும்பாய்க் கிழித்தெறிந்து எழுதிய விமர்சனக் கட்டுரையைத் தேடிப் படித்துப் பார்க்க வேண்டும்.

தலித் இலக்கியம் சந்தித்துவரும் அதே சவால்களையும் குழிபறிப்புகளையும் வஞ்சகப் புகழ்ச்சிகளையும் இன்றைய பெண்ணிய எழுத்துகளும் சந்தித்து வருகின்றன. காதலை எழுதுகிறோம், காமத்தை எழுதுகிறோம், வேட்கையை எழுதுகிறோம் என முகம் சிவந்து நாணமும் மறைவும் இருண்மையுமாய் எழுதிவந்த ஆண் கவிஞர் பரம்பரைக்கே ஆப்பு வைத்தவர்கள் பெண்ணியக் கவிஞர்கள்தான். ஏன் சாருநிவேதிதா போன்றவர்கள் வேட்கையையும் காமத்தையும் எழுதவில்லையா என நீங்கள் கேட்கலாம். தி. ஜானகிராமன் ஜெயகாந்தனெல்லாம் ஆட்டத்திலேயே இல்லை. சாருநிவேதிதாவின் முதல் இரண்டு நாவல்களும் அவற்றின் வடிவநடையாலும் அவைபேசும் சமூகப்புறநிலை மனிதர்களாலுமே முக்கியத்துவம் பெறுகின்றன. ஸீரோ டிகிரியில் அவர் முயன்ற சிலபகுதிகளும் பின்னால் வந்த ராசலீலாவும் அவரின் இன்றைய எழுத்துகளும் பாலியல் உறவுகள், உணர்வுகள் குறித்த அவரின் அறியாமையைத்தான் நமக்கு அறிவிக்கின்றன. அந்த அறியாமையிலிருந்து பிறப்பது வக்கிரமேயொழிய பாலியல் சுதந்திரம் அல்லது அத்துமீறல் குறித்த எழுத்தல்ல.

புள்ளிராஜாவுக்கு எய்டஸ் வருமா என்ற சொல்லாடல் எவ்வளவு பிரபலமோ அதேயளவிற்கு ஆசிரியர் இறந்துவிட்டார் என்ற பார்த்தின் கூற்றும் தமிழ் இலக்கிய முகாம்களிலே பிரபலமானது. ஒரு குறிப்பிட்ட பிரதியை ஒவ்வொரு குறிப்பிட்ட தன்னிலைகளும் வித்தியாசம் வித்தியாசமாகவே அணுகுகிறார்கள். ஒரு பிரதியை ஒரு ஆண்தன்னிலை வாசிப்பதிலும் பெண்தன்னிலை வாசிப்பதிலும் மட்டுமல்ல அந்தப் பிரதியை ஒரு தலித் பெண் வாசிப்பதற்கும் சூத்திரப் பெண் வாசிப்பதற்கும் பார்ப்பனப்பெண் வாசிப்பதற்கும் குறிப்பான வித்தியாசங்களுண்டு.

ஜி.நாகராஜனின் எழுத்துகளையும் ஜெயகாந்தனின் எழுத்துகளையும் ஒப்பிட்டு புத்திசாலி விமர்சகர்களால் அடிக்கடி சொல்லப்படும் ஒரு கருத்தை நான் கேட்டதுண்டு. அவர்கள் நாகராஜனின் பிரதியில் சித்திரிக்கப்படும் பாலியல் தொழிலாளி இயல்பானவராக அவரது குற்றம் குறைகளோடு சித்திரிக்கப்டுவார். ஆனால் ஜெயகாந்தன் பாலியல் தொழிலாளியை இயல்பிற்கு மாறாகக் கதையின் இறுதியில் வலுகட்டாயமாக ‘புரட்சிக்காரி’ ஆக்கிவிடுவதுண்டு என்பார்கள். இந்த விமர்சகர்களின் சுண்டியெடுத்த வாசிப்பின் மூலம், அவர்களின் சிறப்பு அளவுகோல்களின் மூலம் அவர்கள் நாகராஜனின் எழுத்தே கலையிற் சிறந்தது என்றும் ஜெயகாந்தனின் எழுத்து பிரச்சாரம் என்றும் தீர்ப்பிடுவார்கள். ஆனால் ஒரு பாலியல் தொழிலாளியின் மகனாக, சகோதரியாக இவ்விரு பிரதிகளையும் வாசிப்பவர்களின் வாசிப்பு அந்தப் புத்திசாலி விமர்சகர்களின் கருத்தைத்தான் ஒத்திருக்க வேண்டுமென எந்த அவசியமுமில்லை.

இங்கேதான் இதுவரையான நமது கலை விமர்சகர்களின் விமர்சனக் கருவிகள் மழுங்கிப்போகின்றன. வலதுசாரிக்கு கலை என்ற அளவுகோல் எனில் இடசாரிக்கு வர்க்கம் என்ற அளவுகோல். இந்த சாராம்சப்படுத்தும் தன்மைகளை பின்நவீனத்துவ அறிதல்முறை தனது கேள்விகளால் நிலைகுலையச் செய்கிறது. பின்நவீனத்துவ அறிதல் முறையின் பெருங்கொடையான கட்டவிழ்ப்பு அறிதல் முறைக்குப் பதில் சொல்ல வக்கற்றதுதான், ஒரு கேள்விக்கே முகங்குப்புற விழுந்துவிடக்கூடியதுதான் தமிழில் இதுகாறும் நவீன இலக்கியம் எனச் சொல்லப்பட்டு வந்த வஸ்து என்றே நான் கருதுகிறேன்.

என்னுடைய எளிய கேள்வியெல்லாம் தமிழ் இலக்கியத்தின் நவீனத்துவ முன்னோடிகள் எனப்படுபவர்களும் அவர்கள் கட்டமைத்த பிரதிகளும் சுயசாதிப் பெருமிதங்களையும் ஆண்முதன்மை மதிப்பீடுகளையும் விளிம்புகளுக்கு எதிரான குரல்களையும் தூக்கி நிறுத்தி தலித்துகளையும் பெண்களையும் விளம்புகளையும் விலக்கிவைத்த பிரதிகளாக இருக்கும்போது தமிழில் நவீன இலக்கியம், அதன் முன்னோடி பாரதி, நடுக்கொள்ள புதுமைப்பித்தன், இப்போது சேரன் என நாம் அடையாளக் கற்களை நட்டுவைப்பதில் ஏதாவது அர்தமுள்ளதா என்பதுதான்.

தலித் விடுதலையைக் குறித்து எழுத தலித்துகள் வரும்வரை காந்திருந்ததுபோல பாலியல் விடுதலையையும் பால் சமத்துவத்தையும் இலக்கியப் பிரதிகளில் பேசுவதற்காகப் பெண்கள் வரும்வரை தமிழ் இலக்கியம் காத்திருக்க வேண்டியிருந்ததென்றால் திருநங்கைகளின் பாடுகளை எழுதுவதற்கு ரேவதியும் வித்யாவும் வரும்வரை தமிழ் இலக்கியம் காத்திருந்ததென்றால் கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குள்தான் தமிழில் நவீன இலக்கியம் அதன் சரியான அர்த்தத்தில் முகிழ்க்கத் தொடங்கியுள்ளது எனச் சொல்வதில் தவறுள்ளதா!

3

நிகழ்வின் பல கேள்விகள் கேட்கப்பட்டன.அனைத்திற்கும் பதில் கூறிய ஷோபாசக்தி ஏறக்குறைய பதினொன்று மணியளவில் நிகழ்வை நிறைவு செய்தார். இரவில் விடுதி அறையில் மீண்டும் எங்கள் கலந்துரையாடல் தொடர்ந்தது. சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, மஹாத்மன், சிவா பெரியண்ணனுடன் ஷோபாசக்தி மிக ஆர்வமாகப் பேசிக்கொண்டிருந்தார்.ஈழ வரலாற்றை மிக விரிவாக எங்களுக்கு விளக்கிக்கொண்டிருந்தார். எல்லா கலந்துரையாடல்கள் போலவே இந்தக் கலந்துரையாடலும் விடிய விடிய நடந்தது. தூக்கமின்மையால் மறுநாள் ஷோபா அதிகம் சோர்ந்திருந்தார்.சில புத்தகக் கடைகள் ஏறி இறங்கினோம்.’ நான் வித்யா’ எனும் புத்தகத்தை வாங்கி எனக்குப் பரிசளித்தார்.ஒரு திருநங்கையின் வாழ்க்கை வரலாறு புத்தகம் அது. செந்தூல் திரையரங்கில் ஒரு படம் பார்த்தோம்.ஆறு மணியளவில் டாக்டர்.சண்முகசிவாவுடன் ஒரு சந்திப்பு ஏற்பாடானது. இம்முறை தமிழ் நாட்டு இலக்கிய படைப்பில் அமைந்துள்ள சாதிய கண்ணோட்டம் தொடர்பில் ஷோபாவின் பேச்சு இருந்தது.

அன்று இரவு நான்,மஹாத்மன் மற்றும் ஷோபாசக்தி மஸ்ஜித் இந்தியா மற்றும் புக்கிட் பிந்தாங் தெருக்களில் அலைந்து கொண்டிருந்தோம். மறுநாள் காலையில் புறப்பட வேண்டுமாதலால் விரைவிலேயே உறங்கிவிட்டார் ஷோபா.

மறுநாள் காலையில் நானும் ஷோபாவும் விமான நிலையத்திற்கு பயணமானோம். அதிகம் ஒன்றும் பேசவில்லை. இனம் தெரியாத மௌனம் இருவரையும் சூழ்ந்திருந்தது. ‘உங்களுக்கு நேரமானால் நீங்கள் புறப்படுங்கள்’ என மட்டும் அவ்வப்போது கூறிக்கொண்டிருந்தார். நேரமானதும் ஷோபாசக்தி கட்டியணைத்து விடைப்பெற்றார். மௌனம் இன்னும் சூழ்ந்தே இருந்தது.

(‘வல்லினம்’ ஜுன் – ஆகஸ்ட் இதழில் வெளியான ம. நவீனின் நீண்ட பதிவிலிருந்து சில பகுதிகள்)