தூற்று .கொம்

கட்டுரைகள்

தோழர்களே!

கீற்று.கொம் என்றொரு இணையத்தளம் தொடர்ந்து தூற்றுவதையே ஒரு ‘களப்பணி’யாக முன்னெடுத்து வருவதை நீங்கள் அறிந்திருக்கலாம். அந்த வரிசையில் கீற்று லேட்டஸ்டாக எழுதியிருக்கும் ‘கீற்றுவை முடக்க அ.மார்க்ஸ் குழு சதி’ என்ற தூற்றலுக்கு நான் அவர்களிற்கு அனுப்பிவைத்த எதிர்வினை இது:

காலையில் எழுந்ததும்  கணனியைத் திறந்து அவதூறுகளிற்குப் பதிலளிப்பதே எனது  அன்றாட வேலையாகிப்போனது. சனி, ஞாயிறு கூட லீவு கிடையாது. பதிலளிக்காவிட்டால் அவதூறாளர்கள் “ஏன் பதிலில்லை” எனக் கொக்கரிக்கிறார்கள். பதிலளித்தாலோ தோழமைகள் “எதற்காக நேரத்தையும் சக்தியையும் விரயம் செய்கிறாய்” என  என்னைக் கண்டிக்கிறார்கள்.

எதுவாயிருந்தாலும் சாத்தியமான தளங்களிலெல்லாம் வெளிப்படையாக எனது குரலைப் பதிவு செய்ய வேண்டுமென்பது எனது நிலைப்பாடு. எனது குரல், திட்டத்துடன் இயங்கிக்கொண்டிருக்கும் அவதூறாளர்களை மனமாற்றம் செய்யப்போவதில்லை என்பது உண்மையானால் கூட பொதுவாசகர்களிற்கும் எனக்குமான உரையாடல் இதன்  வழியே சாத்தியப்படும் என்றே நான் உறுதியாயாக நம்புகிறேன். நான் எப்போதுமே ஒரு நம்பிக்கைவாதி.

எனவே இந்தப் பதில் ‘கீற்று’ நந்தனுக்கானது அல்ல. அவர் இந்த விடயத்தில் பொய்மையையும் அரைவேக்காட்டுத்தனமான அரசியல் பார்வையையும் வதந்திகளையுமே முன்னிறுத்தியே உரையாட விரும்புகிறார். அதுவும் ஆயிரம் தடவை நான்  வெவ்வேறு இடங்களில் பதில் சொல்லித் தீர்த்த விடயங்களை வைத்தே அவர் மல்லுக்கு நிற்கிறார். எனவே அவரை விட்டுவிட்டு பொது வாசகர்களுக்காகவே சில விளக்கங்களை மிகச் சுருக்கமாகத் தர விரும்புகிறேன்.

1. பிரியா தம்பி என்ற மினர்வா, தமிழச்சி குறித்து என்மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கு நான் எனது பதிலைக் கீற்றிலேயே தெளிவாக அளித்துவிட்டேன். மினர்வா விவாதத்தைத் தொடக்கியதால் முதலும் கடைசியுமாக ஒரு தடவை அது குறித்துப் பேசவேண்டியதாயிற்று. இனிமேல் அது குறித்துப் பேச நான் விரும்பவில்லை. எனினும் இறுதியாக ஒரேயொரு சிறுவிளக்கம் மட்டும்: நந்தன் குறிப்பிடுவதுபோல முதலில் நான் குற்றச்சாட்டை மறுத்து பின்பு ஒப்புக்கொள்ளவில்லை. நான் எப்போதுமே அந்தக் குற்றச்சாட்டை ஒப்பவில்லை. அதற்கான எனது விளக்கமே நான் கீற்றுவுக்கு அனுப்பிய பின்னூட்டம்.

2. நந்தன் குறிப்பிடும் அவர் வகைப்பட்ட பண்பாடு, ஒழுக்கவாதம், கலாசாரம் எல்லாம் எனக்குக் கால்தூசுகள். இந்த மீறல்களை நான் இருபது வருடங்களாக  எழுத்தில் மட்டுமல்லாமல் சொந்த வாழ்க்கையிலும் கடைப்பிடித்து வருபவன். இந்த மீறல்களை எதேச்சையாக அல்லாமல் அரசியல் கோட்பாடுகளிடம் பெற்ற சுடரின் வெளிச்சத்தில் செய்துவருபவன் நான். எனவே நந்தன் தனது ஒழுக்கப் போதனைகளை என்னிடம் வைப்பது நம் இருவருக்குமே நேர விரயமே தவிர வேறொன்றுமில்லை.

3. சுகுணா திவாகருக்கு நான் பணம் கொடுத்தேன் என்பதெல்லாம் கலப்படமற்ற பொய்யைத் தவிர வேறொன்றில்லை. இவ்வாறான  ஓர் அயோக்கியத்தனமான  கட்டுக்கதையை முன்வைத்து அதற்குப் பதில்வேறு சொல்லென்று நந்தன் நச்சரிப்பது அருவருப்பான தந்திரமே தவிர அரசியல் விவாதமல்ல. இதற்கு ஒரு துணைக் கேள்வியையும் நந்தன் உருவாக்கியுள்ளார். நீ பேசும் தலித் அரசியலில் உனக்கு பற்றுறுதி இருந்தால் ஏன் நீ தலித் முரசுவுக்குப் பணம் கொடுக்கவில்லை என்பது அவரது அடுத்த லொஜிக்கான கேள்வி. சரி நான் தலித் முரசுவுக்கு பணம் கொடுத்திருப்பின் என்னை இந்தக் குற்றச்சாட்டிலிருந்து கீற்று விடுவித்துவிடுமா? அப்படியானால் சொல்கிறேன். ஆம், ‘தலித் முரசு’ நெருக்கடியான ஒரு சூழலை எதிர்கொண்டபோது  நான் முன்னின்று அய்ரோப்பாவில் தோழர்களிடம் பணம் திரட்டித் தலித் முரசுக்குக் கொடுத்திருக்கிறேன்.  தவிரவும், சந்திரகேசன் காலத்திலேயே தலித் முரசுவை அய்ரோப்பிவிற்கு வரவழைத்து அதை வாசகர்களிடம் எடுத்துச் சென்றது சுகன் முதலான தோழர்களே. இதையெல்லாம் நந்தன் அறியமாட்டார். இவ்வாறு அவருக்குப் பல விடயங்களில் அறிவு கிடையாது.

4. நந்தனுக்கு பல விடயங்களில அறிவு கிடையாது எனச் சொன்னேன். அதன் உட்சபட்ச வடிவம்தான்  இப்போது கீற்றில் நடந்துவரும் புலிகள் /சாதியம் /பிரபாகரன் /வெள்ளாளர் /கரையார் விவாதங்கள். அந்தக் கட்டுரையை எழுதிய மினர்வா ஈழத்தின் சாதியமைப்புக் குறித்த அடிப்படைப் புரிதல் கூட இல்லாமல் தொகுத்த குப்பைகளிற்கு பதில்வேறு கேட்டு கொக்கரிக்கும் நந்தனது அறியாமை உள்ளபடியே நமக்குக் கடுப்பேற்றக்கூடியது.

புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு தலித் சாதியைச் சேர்ந்தவர் என பழ. நெடுமாறன் ஒரு நேர்காணலில் குறிப்பிட்ட சில நாட்களிற்குள்ளாகவே அதை மறுத்து  ‘புதிய கோடாங்கி’ இதழில் நான் சொல்லியிருந்தவற்றை எல்லாம் மினர்வா படித்திருக்க வாய்ப்பில்லை. பிரபாகரன் பிறந்த ‘கரையார்’ சாதி ஈழத்தில் வெள்ளாளருக்கு அடுத்தபடியில் உள்ள ஆதிக்கசாதி. மேலும் தெளிவு வேண்டுமெனில் ‘எதுவரை’ இதழிற்காக தோழியர் புஸ்பராணி வழங்கியிருந்த நேர்காணலை மினர்வா படித்துப் பார்க்கலாம். ஈழத்துச் சாதியமைப்புக் குறித்தும் அந்த சாதியமைப்பபைப் புலிகள் எதிர்கொண்ட விதம் குறித்தும் அவர் தெளிவாக அறிய விரும்பினால் புதிய சனநாயக் கட்சியைச் சேர்ந்த மூத்த தோழர்கள் சி.கா. செந்திவேலும், இரவீந்திரனும் இணைந்து எழுதிய ‘ இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்” என்ற நூலை (சவுத் விஷன் வெளியீடு) அவர் படிக்கலாம். இதொன்றும் தெரியாமலே அவர் எடுத்தடி மடக்காக எழுதியிருக்கும் குப்பைத் தொகுப்பிற்கு நான் பதில் வேறுதர வேண்டுமாம். என்னவொரு கொழுப்பு!

புலிகள் இயக்கமே அதுவரையான வெள்ளாளத் தலைமைகளை உடைத்து எழுந்த முதலாவது இயக்கம் என்றும் பிரபாகரன் சிறுவயதிலிருந்தே வெள்ளாள ஆதிக்கத்திக்கு எதிரான மனநிலை கொண்டவர், புலிகளின் தலைமை தோற்கடிக்கப்படும்போது  ஆதிக்கசாதி வெள்ளாளர்கள்
பிரபாகரனினின் சாதியைக் குறிப்பிட்டுத் தாக்குதலைத் தொடுப்பார்கள் என்றெல்லாம் நான் பல்வேறு இடங்களில்  புலிகள் இயக்கத்தின் தனித்தன்மை குறித்து எழுதியிருந்ததையும் மினர்வா படித்திருக்கமாட்டார்.

அம்ருதா இதழ் நேர்காணலில் நான் (நவம்பர் 2009) இவ்வாறு சொன்னேன்:

“புலிகள் இயக்கத்தில் குறிப்பிட்ட காலம் செயற்பட்டவன் என்ற முறையில் இயக்கத்திற்குள் சாதி ஏற்றத்தாழ்வுகள் கடைப்பிடிக்கப்பட்டதில்லை என்பதையும் என்னால் கூற முடியும். இயக்கத்தில் தனிநபர்கள் சாதிய உணர்வோடு எங்காவது வெளிப்பட்டிருந்தாலும் கூட அதை இயக்கத்தின் பொதுப் பண்பாக வரையறுக்க முடியாது. இயக்கத்தின் தலைமைப் பொறுப்புகளில் தலித்துகள் இருந்தார்கள் என்பதும் உண்மையே. புலிகள் குறிப்பிட்ட பகுதிகளில் குடிமைத் தொழில் முறையையும் ஒழித்திருந்தார்கள். இந்த உண்மைகளோடுதான் சாதியும் புலிகளும் என்பது குறித்துப் பேசமுடியும். ஆனால், புலிகள் சாதியொழிப்புப் போராட்டத்தை காத்திரமாகச் சமூகத்தளத்தில் முன்னெடுக்கவில்லை. அந்த முன்னெடுப்புகள் பெரும்பான்மையாயிருக்கும் ஆதிக்க சாதியினரிடமிருந்து தங்களை அந்நியப்படுத்திவிடும் என அவர்கள் கருதினார்கள். இதை அடேல் பாலசிங்கம் தனது சுதந்திர வேட்கை நூலில் ஒப்புக்கொண்டிருப்பதை நான் எனது கட்டுரையில் விரிவாகச் சுட்டிக்காட்டியிருக்கிறேன். சமூகத்தில் சாதிய முரண்கள் எழுந்தபோதெல்லாம் அங்கே எப்படிப் பிரச்சினைகளை ஊத்திமூடி அமைதியைக் கொண்டுவருவது என்றே புலிகள் முயற்சித்தார்களே தவிர அவர்கள் ஒடுக்கப்பட்ட சாதியினரின் பக்கத்தில் நின்று அவர்களின் உரிமைகளிற்காகக் குரல் கொடுத்தார்களில்லை. புலிகளின் ஆட்சிக்காலத்திலேயே வடபுலத்தில் ஏராளமான கோயில்களும் பொது இடங்களும் தலித்துகளிற்கு மூடியே கிடந்தன. இவற்றைத் திறந்துவிடுவதற்கான அதிகாரம் புலிகளிடமிருந்தும் கூட அவர்கள் அதைச் செய்யவில்லை. குறிப்பாக இந்து மதத்திற்கும் சாதிக்குமான உறவுகள் குறித்தெல்லாம் அவர்கள் அக்கறையே காட்டவில்லை. அவர்களே இந்து மரபுப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றினார்கள். புலம்பெயர் நாடுகளில் புலிகள் இந்துக் கோயில்களை நடத்தினார்கள். இந்த அடிப்படையில்தான் புலிகள் மீது நான் விமர்சனங்களை வைத்தேன். நிலவும் சமூக ஒடுக்குமுறையைக் கண்டுகொள்ளாமலிருப்பது என்பது அந்த ஒடுக்குமுறையைக் காப்பாற்றுவது என்றுதான் பொருள்படும். தமிழீழம் கிடைத்த பின்பு உள்முரண்கள் தீர்க்கப்படும் என்று புலிகள் ஆதரவு அறிவுஜீவிகள் சொன்னதற்கெல்லாம் ஏதாவது பொருளிருக்கிறதா?”

மினர்வா இதையாவது படித்தாரா என்பது தெரியவில்லை.

“பிரபாகரன் கரையார் என்பதால் வெள்ளாளர்கள் புலிகளை எதிர்த்தார்கள்” என்று மினர்வா  சொல்வதெல்லாம் அடி முட்டாள்த்தனமான கண்டுபிடிப்பு மட்டுமே. புலிகளின் ஆதரவுத்தளத்தின் முதன்மைச் சக்தியே யாழ்ப்பாணத்து வெள்ளாளர்களே என்பதெல்லாம் எத்தனையோ பேர்கள் எத்தனையோ தடவைகள் எழுதி நிரூபணம் செய்த விடயங்கள். புலிகளின் தோல்விக்குப் பின்பு மூழ்கிய கப்பலிலிருந்து முதலில் வெளியேறுபவவர்களும் அவர்களே என்பது இன்னொரு உண்மை.

புலிகளை விமர்சிக்கும் மூன்று வெள்ளாளர்கள் கொண்ட ஒரு பட்டியலைப் போட்டு தனது வாதத்தை தூக்கி நிறுத்த முயல்கிறார் மினர்வா. புலிகளைக் கடுமையாக விமர்சித்த, உறுதியாக எதிர்த்து நிற்கும் முன்னூறு தலித்துகளின் பட்டியலை நான் தரவா? கே.டானியல், தங்கவடிவேல், தெணியான் என்று மூத்த தலைமுறையினரின் பட்டியலைத் தரவா, இல்லை கலாமோகன், ஜோர்ஜ் குருஷேவ், அருந்ததி என்று இன்றைய தலைமுறையின் பட்டியலைத் தரவா? அதேபோன்று புலிகளிற்கு ஆதாரவாக் கொடிபிடிக்கும் மூவாயிரம் வெள்ளாளர்களை நான் பட்டியலிடவா? அன்ரன் உருத்திரகுமாரன் என்று ‘அ’ வரிசையில் அரசியலில் ஆரம்பிக்கவா இல்லை மு.பொன்னம்பலம், சு.வில்வரத்தினம் என இலக்கியத்தில் ஆரம்பிக்கவா? அதேபோல் புலிகளால் கொன்றொழிக்கப்பட்ட தலித் தலைவர்களை நான் பட்டியலிடவா? ஆனால் இந்தப் பட்டியலிடல்கள் மூலம் ஈழத்துச் சாதியமைப்பு மற்றும் புலிகளும் சாதியமும் என்ற மிகச் சிக்கலான விடயத்தை மினர்வா நினைப்பது போல அவ்வளவு சுலபமாக அவிழ்த்துவிட முடியாது. மினர்வா இட்ட பட்டியல் வெறும் சேறடிப்பின்றி வேறில்லை. அந்தப் பட்டியலிலிருந்து மினர்வா கட்டியெழுப்பிய கட்டுரை அறியாமையல் நிறைந்த குப்பையைத் தவிர வேறில்லை.

5. கீற்று நந்தனுக்கு எனது வெளிநாட்டுப் பயண வரவு செலவுக் கணக்குகள் தேவைப்படுகின்றன போலயிருக்கிறது. ஒரு சாதாரணனால் எவ்வாறு இவ்வாறு அடிக்கடி பயணம் செய்ய முடியும் என்பது அவரது கேள்வி. வேறொன்றுமில்லை, நான் ராஜபக்சவிடம் காசு வாங்குகிறேன் என அவர் சொன்னால் “ஆதாரத்தைச் சொல்லப்பா” என நான் அரியண்டம் கொடுப்பேனல்லவா, அதைத் தவிர்க்க அவர் இவ்வாறு சுற்றி வளைத்துப் பயணம் குறித்த கேள்விகளை எழுப்புகிறார்.

பயணம் செய்வதும் கிட்டத்தட்ட இலக்கியம் எழுதுவதுபோல ஒரு கலைதான். ஒரு சிறந்த கவிஞர் எவ்வாறு மிகக் குறைந்த சொற்களால் ஒரு மிகச் சிறந்த கவிதையை எழுதுவாரோ அதேபோல ஒரு சிறந்த ‘ட்ரவலர்’ பயணத்தின் இரகசியச் சூக்குமங்களைத் தெரிந்து வைத்திருப்பார். 2007ல் விமானப் பயணச்சீட்டுத் தவிர்த்து வெறும் 300 ஈரோக்களுடன் 20 நாட்கள் கியூபா முழுவதும் தனியே சுற்றித் திரிந்திருக்கிறேன். கையில் ஒரு சதமும் இல்லாமலேயே பிரான்ஸிலிருந்து ரஷ்யாவரை ‘லிப்ட்’ கேட்டுக் கேட்டே பயணிக்கும் நண்பர்களை எனக்குத் தெரியும்.  கீற்று நந்தன் எல்லாவற்றையும் தவறாகப் புரிந்து வைத்திருப்பது போலவே அய்ரோப்பிய வாழ்வு, வேலைமுறை, வேலையிழப்புக் காப்பீடு, சமூக நல உரிமைகள் – உதவிகள் போன்ற எல்லாவற்றையும் தவறாகவே விளங்கியுள்ளார். ஏதோ விபரங்களைத் தனது அய்ரோப்பிய நண்பரிடம் விசாரித்துத் தெரிந்துகொண்டாராம் நந்தன். அந்த அய்ரோப்பிய நண்பரை நந்தன் என்னிடம் அனுப்பிவைக்கட்டும். எனது கணக்கு வழக்குககளை அவரிடம் காண்பிக்கிறேன். ஆனால் ஒரேயொரு நிபந்தனை. எனக்குப் பயணமுகவர் நிறுவனங்களிலும் வங்கியிலுமுள்ள கடன்கள் அத்தனையையும் அவர் அடைக்கச் சம்மதித்தால் அவர் வந்து எனது ஆவணங்களைப் பார்வையிடலாம்.

6. அ.மார்க்ஸ், ஆதவன் தீட்சண்யா, ஷோபாசக்தி போன்றவர்களெல்லாம் கேள்விகளை எதிர்கொள்ளப் பயப்படுபவர்கள், பொதுமேடைகளில் விவாதிக்கப் பின்வாங்குபவர்கள் என்பது நந்தனின் கருத்து. இனி, நாங்களெல்லோரும் எத்தனை பொதுமேடைகளில் விவாதித்தோம், எத்தனை விவாதங்களை நடத்தி வெளியிட்டோம், எத்தனை கருத்தரங்குகளை வடிவமைத்து நடத்தியிருப்போம், எத்தனை ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கிறோம் என்றெல்லாம் நான் பட்டியல் போடவேண்டுமாக்கும். எங்களது வாழ்க்கையில் முக்கால்வாசியே பதில்சொல்லியே கழிகிறது. இதில் இவருக்குத் தனியாக, பேஸ்புக் தம்பிகளுக்குத் தனித் தனியாகப் பதில்களைச் சொல்ல வேண்டுமாம். அ.மார்க்ஸ் அவரது எழுபத்துச் சொச்ச நூல்களில் எழுதியிராத எந்தவொரு விடயத்தையும் நந்தன் புதிதாகக் கேள்வியாக்கியதில்லை. அதாவது இன்றைய கேள்விக்கு நேற்றே பதிலுள்ளது. இதனது பொருள் அ.மார்க்ஸ் ‘அட்வான்ஸ்’ என்பதல்ல. நந்தன் ‘லேட்’ என்பதுதான் இதன் பொருள்.

ஆகப் பதில் சொல்லவோ, விவாதத்திற்கோ, விவாதித்தை நூலாக்கவோ, அவற்றைத் தோழர்களிடம் எடுத்துச் செல்லவோ நாங்கள் ஒருபோதும் தயங்கியதில்லை. வேண்டுமானால்  நந்தன் விரும்பாத பதில்களைச் சொல்லியிருப்போம். அவ்வளவே. எனவே இந்தப் “பதில் சொல்லு!” என்ற நித்திய கூப்பாடுவைத் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டு யாரை விமர்சிக்க ஆசைப்படுகிறார்களோ அவர்களை முதலில் ஒழுங்காகப் படித்துவிட்டு  கீற்று நந்தன் போன்றோர் கீ போர்டில் கை வை க்கட்டும்.

7. இப்போது நந்தனின் கட்டுரையின் மையப் பொருளுக்கு வருவோம். ‘கீற்றில் எழுத வேண்டாம் என்றும் கீற்றில் சிறுபத்திரிகைகளை வெளியிட வேண்டாம் என்றும் எழுத்தாளர்களைக் கேட்டு அ.மார்க்ஸ் குழு சதி செய்கிறது’ என்பது நந்தனின் கருத்து.  மொஸ்கோ சதி போல, நெல்லைச் சதிபோல ஓர் அடையாறுச் சதி அரங்கேறுகிறது என்று ‘பில்டப்’ செய்யும் வேலைதான் நந்தனின் கட்டுரையின் மற்றைய பகுதிகள்.

மிகத் தெளிவாகச் சொல்கிறேன்: ஓர் ஊடகம் தொடர்ந்து அவதூறுகளையே பரப்பும்போது அதனடிப்படையில் தவறான அரசியலையும் குழுக்களையும் கட்டியமைக்க முற்படும்போது அந்த ஊடகத்தை நிராகரிக்குமாறு தனது சக படைப்பாளியிடமும் சக களச் செயற்பாட்டாளரிடம் ஒருவரோ அல்லது ஒரு குழுவினரோ கோருவது மிக அடிப்படையான சனநாயக வழிசார்ந்த எதிர்ப்பு. இதில் சதியுமில்லை ஒரு மயிருமில்லை.

ஏற்கனவே அய்ரோப்பாவில் ஓர் இணையம் தொடர்ந்து அவதூறுகளை (கீற்றை விடக் கொஞ்சம் குறைய – இனியொருவைவிடச் சற்று அதிகம்) எழுதிக்கொண்டிருந்தபோது  நாங்கள் எழுபதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், கலைஞர்கள் இணைந்து அந்த இணையத்தைக் கண்டித்து ஒரு கையெழுத்து இயக்கம் நடத்தினோம். அந்த இணையம் எங்களால் நிராகரிக்கப்பட்டது. நிறப்பிரிகைக் குழுவினரால் இந்தியா டுடேயின் பக்கங்கள் மலம் துடைத்து அனுப்பி வைக்கப்பட்டன. எனவே இதுவெல்லாம் ஒன்றும் கீற்றுக்காகவென்றே வடிவமைக்கப்பட்ட புதிய எதிர்ப்பு வடிவமோ, கருத்துரிமை மறுப்போ, சதியோ கிடையாது.

சென்ற வருடம் கீற்றுவின் மேடையொன்றில் ஓர் ஈழத்து இஸ்லாமியத் தோழர் விடுதலைப் புலிகளை விமர்சித்துப் பேசும்போது இடையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டாரே அதற்குப் பெயர்தான் கருத்துரிமை மறுப்பு! கூட்டத்தின் முடிவில் “அவர் இப்படியெல்லாம் பேசுவார் எனத் தெரியாது, தெரியாமல் பேச வைத்துவிட்டேன்” எனக் கீற்று ஆசிரியர் மழுப்பி ஈழத்திலிருந்து நம்பி வந்த தோழரைக் காட்டிக்கொடுத்தாரே… அதுதான் சதி!

நன்றி, வணக்கம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *