அவதூறுகளிலிருந்து தண்டனையை நோக்கி! (தூற்று.கொம் – பகுதி 9)

கட்டுரைகள்

வதூறுக் கலாசாரம் குறித்துச் சொல்லும்போது “A dirty slipper is nothing to fear, but an unclean razor is very dangerous” என்பார் ட்ரொட்ஸ்கி. அவதூறுக் கலாசாரத்தை உற்சாகத்தோடு முன்னெடுக்கும் ‘கீற்று’ இணையத்தளத்தை, நமது தோழர்கள் குறைத்து மதிப்பிட்டு ‘அழுக்கடைந்த செருப்பென்று’ அலட்சியப்படுத்துவதாகவே தெரிகிறது. மாறாக, கீற்று இணையத்தளம் ‘தூய்மையற்ற சவர அலகு’ என்றே நான் கருதுகிறேன். மாற்றுக் கருத்துகளைக் கொண்டவர்கள் மீதும், தனது அரசியல் எதிராளிகளாக  அது அடையாளப்படுத்துபவர்கள் மீதும் கொட்டிவந்த அவதூறு எழுத்துகளிலிருந்து முன்நகர்ந்து எதிராளிகள் மீது உடல்ரீதியான தாக்குதல்களையும் முன்மொழியக் கூடியளவிற்கு ஆபத்தானது இந்தத் தூய்மையற்ற சவர அலகு என்பதையே அண்மையில் வெளியாகிய “அன்புத்தோழர் அ.மார்க்சுக்கு அரசியலை ஆணையில் வைப்போம்!” என்ற கட்டுரை நமக்கு முன்னறிவிக்கிறது.

அந்தக் கட்டுரையை கீற்று இணையத்தளத்தில் சந்திரசேகர ஆசாத் என்பவர் எழுதியிருந்தார் (15 மார்ச் 2011). சந்திரசேகர ஆசாத் யாரென நான் அறியேன். இதற்கு முன்பு அவரின் எழுத்துகளை நான் வேறெங்கும் படித்ததுமில்லை. அவர் தன்னை இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மாவோயிஸ்ட்)யின் முன்னாள் உறுப்பினரெனவும் முன்னாள் தலைமறைவுப் போராளி எனவும் அக்கட்டுரையில் அடையாளப்படுத்தியிருந்தார்.

சந்திரசேகர ஆசாத்திற்கு “ஷோபாசக்தி இலங்கை அரசிடமோ அல்லது இலங்கை அரசின் கைக்கூலிகளிடமோ பணம் வாங்கிக்கொண்டுதான் புலிகளைப் பற்றி விமர்சித்து எழுதுகிறார்” என்றொரு சந்தேகம். இலங்கை அரசிற்கு ஆதரவான எனது ஏதோவொரு சொல்லைத்தானும் ஆசாத் கண்டுபிடித்து முன்னிறுத்தியிருந்தால் இந்தச் சந்தேகம் ஓரளவு நியாயமானது. அல்லது எனக்கும் இலங்கை அரசிற்கும் அல்லது இலங்கை அரசின் கைக்கூலிகளிற்கும் ஏதாவது சாடைமாடையான உறவிருப்பதைக் கண்டுபிடித்து அதனடிப்படையில்  பணம் பெறும் சந்தேகத்தை எழுப்பியிருந்தால் இந்தச் சந்தேகம் முற்றிலும் நியாயமானது. ஆனால் ஆசாத்தின் சந்தேகம் இவற்றின் அடிப்படையில் கிளப்பப்படுவது அல்ல.

“ஷோபாசக்திக்கு பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது (பயணவிவரம், சொந்த இணையதளம், பெரும்குடி)” என்பதுவே அவரின் கண்டுபிடிப்பு. இந்தப் பணம் எங்கிருந்து வருகிறது என்ற கேள்வியின் அடிப்படையிலேயே அவர்  கைக்கூலிச் சந்தேகத்தைக் கிளப்பிக் கலாய்த்திருந்தார். இது குறித்து அ.மார்க்ஸ் தலைமையில் ஒரு பகிரங்க விசாரணையை ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும் அந்த விசாரணையின் இறுதியில் நான் கைக்கூலி எனபது உறுதியானால் தண்டனை வழங்கப்படும், அல்லது நான் வருந்தி மன்னிப்புக் கோரினால் மன்னிப்பு வழங்கப்படும் எனவும்  பரிந்துரை செய்த ஆசாத், மாறாக நான் கைக்கூலி இல்லையென்பதும் நான் கடன் தொல்லையால் அவதியுறுவதும் உண்மையானால் அவரே முன்னின்று மா.லெ தோழர்களை முடுக்கிவிட்டு பணம் வசூல் செய்து எனது கடனை அடைப்பதாகவும் சொல்லியிருந்தார். அந்த டீலிங் எனக்குப் பிடித்திருந்தது. நான் அவரது கட்டுரைக்கு கீற்றுவின் பின்னூட்டப் பகுதியில் இவ்வாறு எதிர்வினையாற்றினேன்:

“அன்புத் தோழர் சந்திரசேகர ஆசாத், உங்கள் கட்டுரை படித்து உவகையடைந்தேன். தயவுசெய்து சட்டுபுட்டென்று விசாரணையை முடித்து என் கடனை அடைத்துவிடுங்கள். விசாரணைக்கு எனது பாஸ்போர்ட், வங்கிக் கணக்குகள் மற்றும் நீங்கள் கேட்கும் ஆவணங்கள் அனைவற்றையும் சமர்ப்பிப்பேன். அ.மார்க்ஸ் விசாரணைக்குத் தலைமை தாங்காவிட்டாலும் வேறு யாரையாவது வைத்து விடயத்தை முடித்துவிடுங்கள். ஏனெனில் தாள முடியாத கடன் சுமையில் இருக்கிறேன். விசாரணை முடிவில் நான் இலங்கை அரசிடம் பணம் வாங்குவது உறுதியானால் தண்டனை வேறு உண்டா. அப்பிடிப் போடுங்க! தண்டனையென்ன தண்டனை! நீங்கள் ‘அழித்தொழிப்பு’ செய்தாலும் சம்மதமே. அதேபோல என்மீதான குற்றச்சாட்டுகள் தவறென்றானால் என்மீது அவதூறாகக் குற்றம் சுமத்தியவர்களிற்கும் தண்டனையுண்டா தோழர்? எதுவானாலும் விசாரணையை உடனடியாக முடித்து வையுங்கள். இதுவொன்றும் புரட்சியல்ல தள்ளிப்போட. தனிமனிதனின் வாழ்க்கைப் பிரச்சினையிது. தயவு செய்யுங்கள். வேகம் தோழர்! வேகம்!”

எனது இந்தப் பதிலோடு ஆசாத் மறுபடியும் தலைமறைவு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டார் என நினைக்கிறேன். இன்றுவரை எனது எதிர்வினை குறித்து ஆசாத்தோ, அவரின் கட்டுரையைப் பிரசுரித்த கீற்று ரமேஷோ எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை செய்ய வேண்டிய அவதூற்றைத் திருப்தியாகச் செய்தாகி விட்டது. தங்களது அவதூறால் பாதிக்கப்பட்டவன் தரப்புக் கருத்துகளையெல்லாம் அவர்கள் கேட்டு அதற்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்புணர்வைக் குறித்தெல்லாம் அவர்களிற்குக் கவலையில்லை. ஆசாத்தின் பின்வாங்கலிற்குக்குப் புரட்சிகர அடையாளம், கீற்றுவின் பொறுப்பின்மைக்குக் கருத்துச் சுதந்திர அடையாளம். இன்குலாப் ஜிந்தாபாத்!

என்மீது ஆசாத் கோரும் விசாரணையின் போது ஆசாத் முன்வைக்கும் சில ‘ மேட்டர்கள்’ உண்மையிலேயே விறுவிறுப்பானவை. விசாரணைக்கு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மருததையனும் வீராச்சாமியும் அழைக்கப்படுவார்களாம். தண்டனை வழங்குவதென முடிவாகிவிட்டால் ம.க.இ.கவினரையே தண்டனை வழங்கப் பரிந்துரைப்பாராம். தண்டனை எதுவென நினைக்கிறீர்கள்.. “ஈடு செய்யமுடியாத அல்லது ஈடு செய்யவேண்டிய இழப்புதான்” என இலங்கை அரசு எழுதுமாம். அதாவது என்னைப் போட்டுத் தள்ளப் போகிறார்களாம். இதைப் படிக்கும் தோழர்களிற்குச் சிரிப்பு வரக் கூடும். ஆனால் இவ்வாறு சிரித்துச் சிரித்துத்தான்

நாம் பலவற்றை வாரிக்கொடுத்தோம் என்பதுதான் வரலாறு தோழர்களே. கீற்றுவின் கட்டுரை அழுக்குச் செருப்பல்ல, அது தூய்மையற்ற சவர அலகு.

இங்கே சந்திரசேகர ஆசாத்தோ, கீற்றுவோ என்னை ஏதாவது செய்துவிடுவார்கள் என்ற பொருளில் நான் இதைக் கூறுவதில்லை. ஆசாத்தின் விசாரணையோ மண்ணாங்கட்டியோ எதுவும் நடக்கவும் போவதில்லை. அவர்கள் அந்தக் கட்டுரையை ஒரு பிரச்சினைக்கான முடிவு கோரி எழுதாமல் வெறும் அவதூறுப் பரப்புரைகளைக் கிளப்பிவிடவே எழுதியுள்ளார்கள். அந்தக் கட்டுரையில் சொல்லப்படும் விடயங்களில் அவர்களிற்கே நம்பிக்கையோ பற்றுறுதியோ கிடையாது. இருந்திருப்பின் ‘விசாரணைக்கு வருகிறேன்’ என நான் சொன்ன பின்பும் ஆசாத்தும் ரமேஷும் வாய்களை மூடிக்கொண்டு வாலைச் சுருட்டிக் காலுக்குள் வைத்துக்கொண்டிருக்கமாட்டார்கள். இங்கே நாம் கவனத்தைக் குவிக்க வேண்டியது இத்தகைய தண்டனைகள் கோரும் அரசியற் சொல்லாடல்களை நோக்கியே. இத்தகைய சொல்லாடல்களிற்கு கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் களம் அமைத்துக்கொடுக்குக்கும் கீற்றுவின் அரசியல், எதிர்காலத்தில் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக நடத்தப்படும் வன்முறைத் தாக்குதல்களிற்கு வழி சமைக்கும் ஆபத்தான அரசியல் என்பதே நமது கவனத்திற்குரியது.

வன்முறை அரசியல் என்பது ஒருபோதும் வானத்திலிருந்து குதிப்பதில்லை. வெறுமனே தனிநபர்களின் அல்லது ஒரு குழுவின் முரட்டுத்தனத்தால் அவை தான்தோன்றித்தனமாக உருவாக்கப்படுவதுமில்லை. அரசியலில் வன்முறைக்கான விதைகளைச் சொற்களே முதலில் விதைக்கின்றன. வன்முறை மட்டுமல்லாமல் எல்லாவித முற்போக்கு, பிற்போக்கு அரசியல் செயற்பாடுகளும் செயல்களில் ஆரம்பிக்காமல் சொற்களிலேயே ஆரம்பிக்கின்றன. சொற்கள் செயற்பாடுகளுக்கான களங்களைத் தோற்றுவிப்பதோடு செயற்பாடுகளுக்கான நியாயங்களையும் ஓயாமல் கட்டியெழுப்புகின்றன.

சொற்களின் மூலம் முதலில் மக்களிடையே ஓர் அரசியல் போக்கு பரப்புரை செய்யப்படுகிறது. அந்தப் போக்கு நியாயமென மக்கள் நம்புவதற்குச் சொற்கள் மக்களைப் பயிற்றுவிக்கின்றன. அந்த நம்பிக்கைகளை மக்களிடம் உருவாக்கும் போது மக்கள் திரளிடமிருந்து செயலுக்கான உத்வேகம் பிறக்கிறது. நிலவும் சமூகக் காரணிகளால் மக்கள் அரசியல் களத்திற்குள் ஈர்க்கப்படுவார்கள் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவிற்கு களத்தில் ஏற்கனவே உருவாக்கி வைக்கப்பட்டிருக்கும் கருத்துகளே அவர்களை வழிநடத்திச் செல்கின்றன என்பதும் உண்மையே. ஆக்கபூர்வமான கருத்தெனில் முற்போக்குச் செயற்பாடுகளையும் பலசமயங்களில் அரசியல் வெற்றிகளையும், செத்தலான கருத்துகளெனில் பிற்போக்கு செயற்பாடுகளையும் இறுதியில் பேரழிவையும் மக்கள் திரள் எதிர்கொள்ள நேரிடுகிறது.

வன்முறைக்கான அரசியலும் இவ்விதமே உருவாக்கப்படுகிறது. வன்முறை கத்தியிலிருந்தோ துப்பாக்கியிலிருந்தோ அல்லாமல் நாவிலிருந்தும் எழுத்திலிருந்துமே முதலில் உருவாக்கப்படுகிறது.

இதற்கு ஈழப் போராட்ட அரசியல் நமக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. அல்பிரட் துரையப்பா கொலை செய்யப்பட வேண்டியவர் என்ற முடிவு பிரபாகரன், கிருபாகரன், கலாபதி, பற்குணம் போன்ற அரசியல் பாலகர்களாலா அன்று எடுக்கப்பட்டது? கொன்றதென்னவோ அவர்கள்தான். ஆனால் தங்களது வீராவேசச் சொற்களால் அதற்குத் தூண்டுதலாயிருந்தவர்களும், துரையப்பா அவ்வாறு கொலை செய்யப்பட வேண்டியவர் எனத் தமது சொற்களால் நியாயம் தெண்டி மேடைக்கு மேடை தீர்ப்பு வழங்கியவர்களும் தமிரசுக் கட்சியினரல்லாவா. ‘துரையப்பா போன்றவர்களிற்கு இயற்கை மரணம் நிகழாது’ எனச் சொன்னவர்கள் அவர்களே. தமிழரசுக் கட்சியின் சொற்களைச் செயலாக்கியவர்கள் பிரபாகரன் குழுவினர். மறைந்த தோழர். சி. புஸ்பராஜாவின் ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’ நூலில் துரையப்பாவின் கொலையைப் பற்றி ஒரு பதிவிருக்கும். துரையப்பா கொல்லப்பட்ட செய்தியை அறிந்ததும் யாழ்ப்பாண மக்கள் மகிழ்ந்தது போல தனக்குத் தோன்றியது என அதில் புஸ்பராஜா குறிப்பிட்டிருப்பார்.

அந்த மகிழ்ச்சி எவ்விதம் தோன்றியது? கொலை செய்யப்படக் கூடிய அளவிற்கு துரையப்பா என்ன கெடுதியை யாழ் மக்களிற்குச் செய்துவிட்டிருந்தார்? கொல்லப்படக் கூடிய அளவிற்கு அவர் என்ன துரோகத்தை தமிழினத்திற்கு இழைத்திருந்தார்? தமிழரசுக் கட்சியால் அரசியல்ரீதியாக வெற்றிகொள்ளப்படவே முடியாமலிருந்த துரையப்பாவை அரசியலிலிருந்து அகற்ற தமிழரசுக் கட்சியினர் கையிலெடுத்த ஆயுதம்தான் ‘துரோகி’ பட்டம். அவர்கள் மக்களிடையே பரந்தளவில் செய்து வைத்திருந்த ‘துரோகி’ பிரச்சாரத்தால் ஒருபகுதி மக்கள் துரையப்பாவின் கொலையை ஏற்றுக்கொண்டார்கள். அதேவேளையில் மேயர் துரையப்பாவிற்காகக் கண்ணீர்விட்ட மக்களையும், மாநகரசபைத் தொழிலாளர்களையும், நகரத்துச் சேரிகளின் ஏழை எளியவர்களையும் வரலாறு பதிவுசெய்துதான் வைத்துள்ளது. ஆனால் தமிழரசுக் கட்சியினர் தொடக்கிவைத்த இந்தத் துரோகிப் பட்டக் கலாசாரம் எங்கே சென்று முடிந்தது? தமிழரசுக் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரை அவர்கள் அடுத்த பத்தே ஆண்டுகளில் புலிகளின் துப்பாக்கிக்குப் பறிகொடுக்க நேர்ந்தது. இந்த வன்முறைக் கலாசாரத்திற்கு ஈழத்தமிழர்கள் கொடுத்த ஒட்டுமொத்த விலை ஆகப் பெரியது. வெலிகடைப் படுகொலைகளைத் தவிர்த்து, புலிகளல்லாத தமிழ்ப் போராளி இயக்கங்களின் தலைமைகள் இலங்கை அரசால் அல்லாமல் புலிகளாலேயே கொன்றொழிக்கப்பட்டன. உமாமகேசுவரன் கொலை விதிவிலக்கு. எனினும் அவரைக் கொன்ற சன்னமும் தமிழனின் துப்பாக்கியிலிருந்து புறப்பட்டதே. எல்லா இயக்கங்களும் சிலாவிச் சுட்டார்கள்.  தங்களது சொந்த மக்களையே கொன்றார்கள். துரையப்பா கொல்லப்பட்டதிலிருந்து சரியாக முப்பது வருடங்களிற்குப் பின்னாக மரணித்த தோழர் சி. புஸ்பராஜாவின் மரணசாசனத்தின் இறுதிவரி இவ்வாறிருந்தது: “தயவு செய்து கொலைகளை நிறுத்துங்கடா!”

சொற்கள் எவ்வாறு வன்முறைகளை உருவாக்குகின்றன என்பதற்கு தமிழகத் தமிழத் தேசிய அரசியலிலிருந்தும் அண்மைய ஒரு நிகழ்வைச் சான்றாகச் சொல்லலாம். “கடலில் தமிழக மீனவர்களைத் தாக்கினால், சென்னையில் சிங்கள மாணவர்களைத் தாக்குவோம்” என்றார் சீமான். இந்த உரையைத் தொடர்ந்து அவர் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து சீமானின் கைதைக் கண்டித்தவர்கள் ஒருவாதத்தை முன்வைத்தார்கள். சீமான் தரப்பில் வழக்குமன்றத்திலும் அதே வாதம் வைக்கப்பட்டது. ‘சீமானின் உரையால் தூண்டப்பட்டு வன்முறை நடந்திருந்தால் மட்டுமே அதை வன்முறையைத் தூண்டிய பேச்சாகக் கொள்ளலாம், சீமானின் உரையாலால் தூண்டப்பட்டு வன்முறைகள் ஏதும் நடக்காததால் அது வன்முறையைத் தூண்டிய பேச்சாக அமையாது’ என்பதுவே சீமான் தரப்பினரின் வாதமாயிருந்தது.

சீமானின் சொற்களின் தூண்டுதலால் சீமானின் ‘நாம் தமிழர்’ இயக்கத்தினர் சிங்கள மாணவர்களைத் தாக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் சில மாதங்களிலேயே இன்னொரு அரசியல் இயக்கத்தினர் எழும்பூர் மகாபோதியைக் கல்லெறிந்து தாக்கினார்கள். அங்கிருந்த சிங்கள பவுத்த துறவிகளும் தாக்குதலிற்கு உள்ளானார்கள். இந்த வன்முறைக்கு “அங்கே அடித்தால் இங்கே அடிப்போம்” என்ற சீமானின் சொற்கள் பொறுப்பில்லையா? அரசியல் களத்தில் விதைக்கப்பட்ட சீமானின் வன்முறை சார்ந்த சொற்கள் வன்முறைத் தாக்குதலிற்கான ஒரு நியாயத்தைத் தமிழ்த் தேசியர்களிற்கு வழங்கிவிடவில்லையா? அந்த நியாயத்தின் ‘ஒளி’யில் ஒட்டுமொத்தத் தமிழ் அறிவுலகமே இந்தத் தாக்குதல் குறித்து மவுனித்திருந்தது  என்றே சொல்லலாம். பவுத்த துறவிகள்மீது நடந்த தாக்குதலைக் கண்டித்தவர்கள் ஒருசிலரே.  மாறாக இணைய எழுத்தாளர்களில் பலர் அந்தக் கோழைத்தனமான தாக்குதலிற்காக மகிழவும் செய்தார்கள். அதாவது துரையப்பா கொல்லப்பட்டபோது யாழ்ப்பாணத்தவர்கள் மலர்ந்துபோல. வன்முறை மீதான இந்தக் காதல் அல்லது மவுனம் எதிர்காலத்தில் வன்முறையாளர்களிற்கு மேலும் உற்சாகத்தையே வழங்கும். வன்முறைக் கலாசாரம் வெறுமனே இனப் பிரச்சினையில் தொழிற்படுவதோடு நின்றுவிடாது. அது சனநாயகத்தையும் மாற்று அரசியலாளர்களையும் மதச் சிறுபான்மையினரையும் கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் சவால் செய்யும். ஈழப் போராட்டத்தில் நாம் கற்றறிந்த பாடங்கள் அனைத்திலும் முதன்மையான பாடம் இதுவெனவே நான் கருதுகிறேன். தமிழகத்தின் தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள் பட்டுத் தெளிய அவசியமேயில்லாமல், ஈழத்தின்  இரத்த பாடம் அவர்களிற்கு முன்னால் தெள்ளத் தெளிவாக உள்ளது. கற்றுக்கொள்வது யாவருக்கும் நல்லது.

கீற்று இணையத்தளம் இப்போது செய்ய முற்படுவது இதைத்தான். அது தொடராகச் சீரான இடைவெளிகளில் அவதூறுக் கட்டுரைகளை வெளியிடுகிறது. அவதூறுகளால் தாக்கப்பட்டவர்கள் அளிக்கும் மறுமொழிகளை அது புறக்கணித்துவிட்டு மீண்டும் மீண்டும் அதே அவதூறுகளை வெளியிடுகிறது. அவதூறுகளாலும் தகவற் பிழைகளாலும் நிறைந்த அந்தக் கட்டுரைகளின் மொழிநடையில் அது குறைந்தபட்ச எழுத்து நாகரிகத்தையும் அரசியல்தொனியையும் தக்கவைத்திருக்கிறது. அதன் மூலம் அவதூறுக் கட்டுரைகளை அரசியற் கட்டுரைகளாக நிறமாற்றம் செய்ய முயற்சிக்கிறது. அதே வேளையில் அது தனது பின்னூட்டப் பகுதியில் எல்லாவித மூன்றாம்தர எழுத்துகளிற்கும் அவதூறுகளிற்கும் பொய்களிற்கும் பழிப்புகளிற்கும் முற்று முழுவதுமாக வழி சமைத்துக்கொடுக்கிறது. இந்த இரு வழிகளாலும் தனது அரசியல் எதிராளிகள் மீது கீற்று அவதூறுச் சொற்களால் ஒரு வெறுக்கத்தக்க கோழைத்தனமான போரை நடத்துகின்றது. அந்த அவதூறுகளின் பலத்தால் எதிராளிகளைக் குணச்சித்திரப் படுகொலை செய்கிறது. தனது அரசியல் எதிராளிகள் தண்டனைகளிற்கும் ‘இல்லாமல் செய்யப்படுவதற்கும்’ தகுதியானவர்களே என நேரடியாகவே அது இப்போது நிறுவ முயற்சிக்கின்றது. இதன்முலம் வன்முறை அரசியலை அது தூண்டிவிடுகிறது. இவ்வளவு காரியங்களையும் அது அவதூறுகளின் பலத்தால் மட்டுமே செய்கிறது. அவதூறுகள் அருவருக்கத்தக்கனவாகவும் மதிப்பற்றவையாகவும் இருக்கலாம். ஆனால் அவை எப்போதுமே சக்தியற்றவை எனச் சொல்லிவிட முடியாது. அவதூறுகள் சக்தியாக மாற்றப்படும்போது இருதரப்புமே விலைகொடுக்க வேண்டியிருக்கும்.

வெறும் பொய்களின் பலத்திலேயே ‘பழி பாவங்களிற்கு’ அஞ்சாமல் எவ்வாறு அவதூறாளர்களால் தில்லாக நிற்க முடிகிறது? அவர்கள் அளவிற்கு எதிர்த் தரப்பும் கீழிறங்கிப் பேச மாட்டார்கள் என்ற தைரியம் மட்டுமே அவர்களை இயக்குகின்றதா? ஆனால் மதிப்புக்குரிய தோழமையால் நமது மனதைக் கவரக் கூடிய தோழர்களும், தமது அரசியல் நம்பிக்கைகளிற்காகத் தயங்காமல் சுய தியாகங்களைச் செய்த ஆளுமைகளும், நன்னெறிகளை ஓயாமல்  முன்மொழிந்துவரும் நமது  மதிப்புக்குரிய மனிதர்களும்   கூடத் தங்களது அரசியல் நன்னெறிகளை இழந்து சடுதியில் அவதூறு இயந்திரத்தின் பாகங்களாக மாறிவிடுகிறார்களே, அவர்களை அவதூறுகளின் அரசியல் நோக்கி நகர்த்தும் விதியெது?

“அருவமான, நுண்ணிய அடிப்படை நன்னெறிக் கோட்பாடுகளை முன்வைத்து அரசியலில் இயங்குவது நல் நம்பிக்கைகளை அளிப்பதில்லை. அரசியல் நன்னெறிகள், அரசியலிலிருந்து அவையாகவே வெளிப்பட்டுத் தோன்றுவனவாகும். அவ்வாறு தோன்றுவது அவற்றின் செயல்முறைகளில் ஒன்றாகும். மகத்தான வரலாற்றுக் கடமைக்குப் பணிபுரியும் அரசியல் மட்டுமே நன்னெறி சார்ந்த நேர்மையான வழிமுறைகளை உறுதிப்படுத்தும். மாறாகத் தரம் தாழ்ந்த அரசியல் தவிர்க்க முடியாமல் நன்னெறிச் சரிவுகளிற்கே வழிவகுக்கும்” என்கிறார் லியோன் டிரொட்ஸ்கி.

மோசமான, இழிவான அரசியல் நிலைப்பாடுகளும் கருத்தியல்களுமே அவதூறுகளின் வற்றாத ஊற்றுகள். எனவே தோற்கடிக்கப்பட வேண்டியது அந்த மோசமான, இழிவான அரசியலே. அதைத் தோற்கடிக்காமல் வெறுமனே அவதூறுகளை முறியடிக்க முயல்வது யானைக்கு கோவணம் கட்டிவிடும் முயற்சியே. அவதூறுகளிற்கு எதிரான போராட்டம் என்பது சரியான அர்த்தத்தில் அரசியற் போராட்டமே!

இத்துடன் ‘தூற்று.கொம்’ தொடர் முடிகிறது. இதுவரை பொறுமையாகப் படித்த தோழர்களிற்கு நன்றி. குறிப்பாக, அடுத்த பகுதி எப்போது வெளியாகும் என விசாரித்து என்னை உற்சாகமூட்டிய சிறுபான்மைத் தோழர்களும்,  ‘இத்தகைய விவாதங்களை விட்டுத் தொலைத்து படைப்பிலக்கியத்தில் கவனத்தைச் செலுத்து’மாறு  என்னை அறிவுறுத்திய பெரும்பான்மைத் தோழர்களும் தயவுடன் எனது நன்றிகளை ஏற்றுக்கொள்ளுங்கள்.

6 thoughts on “அவதூறுகளிலிருந்து தண்டனையை நோக்கி! (தூற்று.கொம் – பகுதி 9)

  1. Shoba,

    one kind request,The best thing u can do is “NEGLECT THEM”.These people doesn’t deserve ur attention or criticism

  2. மொத்தத்தில் இந்திய தமிழன் தான் ஈழதமிழனுக்கு சாவுமணி அடிக்கிறான்!வருத்தப்படுவதை தவிர்த்து என்ன செய்வது என அறியாமல் இருக்கிறோம்!1983 கலவர நேரத்தில் தமிழகத்தில் எழுந்த எழுச்சி இன்றைய தலைமுறைக்கு தெரியாது! தெரிந்த வையாபுரி மகன்களும்(!)நெடுமாறன்களும் அதை பற்றி இன்றைய தலைமுறைக்கு சொல்லவும் மாட்டார்கள்!வித்தியாசத்தை எங்களால் உணரமுடிகிறது! அதற்குள் எல்லாமே முடிந்துவிட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *