அமெரிக்காக்காரன் விண்ணன்தான்!

கட்டுரைகள்

அய்.நா வல்லுனர் குழுவின் அறிக்கை புலிகள்மீது வைத்திருக்கும் ஆறு குற்றச்சாட்டுகள் இவை:
1. பொது மக்களை மனித கவசங்களாக பயன்படுத்தியது.
2. தமது பிடியில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற பொதுமக்களைக் கொன்றது.
3. பொதுமக்கள் வாழ்ந்த பகுதிகளில் இருந்து படைக்கருவிகளை இயக்கியது.
4. சிறுவர்களைக் கட்டாயமாக படைகளில் சேர்த்தது.
5. பொதுமக்களிடம் கட்டாயமாக வேலைவாங்கியது.
6. போர் நடைபெறாத பகுதிகளில் தற்கொலைத் தாக்குதல்களின் மூலம் பொதுமக்களைக் கொன்றது.

இதைத் தானே நாங்கள் இரண்டு வருடங்களாகச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். இதைச் சொன்னதற்காகத்தானே இத்தனை ஏச்சுப் பேச்சுகளும், நிராகரிப்புகளும், வசைகளும், துரோகிப் பட்டங்களும், அவதூறுகளும்!

வல்லுனர் குழுவின் இலங்கை அரசின் மீதான குற்றச்சாட்டுகளை முன்னிலைப்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் (TNA) அறிக்கை வெளியிட்டுள்ளனர் என்றபோதும், புலிகள் மீது வல்லுனர் குழு சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுகளை கூட்டமைப்பு நிராகரிக்கவில்லை.

விமர்சனங்களோடு புலிகளை ஆதரிப்பதாகச் சொல்லும் புதியவகை ‘சனநாயகவாதிகள்’ இந்த ஆறு குற்றங்களையும் பொறுமையாக -குறிப்பாக இரண்டாவது குற்றச்சாட்டை – படிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

தமது சொந்த மக்களையே கொன்றழித்த ஓர் இயக்கத்தை அவர்கள் யார் பொருட்டு ஆதரிக்கிறார்கள் என அவர்கள் சிந்திக்கட்டும். தமிழ் பொதுமக்களையே கொல்லத் துணிந்த புலிகளின் போராட்டம் யாருக்கானது என அவர்கள் சிந்திக்க வேண்டும். அநேகமாக அய். நா. வல்லுனர் குழுவின் அறிக்கையையும் அவர்கள் விமர்சனத்தோடு ஆதரிப்பதாகவே சொல்வார்கள் என நினைக்கிறேன். அவர்கள் அறிக்கையின் மேற்பாதியை ஆதரித்து கீழ்ப்பாதியைக் கிழித்தெறியக் கூடும்.

வசையாளர்களையும் சந்தர்ப்பவாதிகளையும் விடுங்கள்…நமது மதிப்புக்குரிய  தோழர்கள் தீபச்செல்வன்,  தியாகு  போன்றவர்கள் கூட புலிகளின் இந்தக் குற்றச் செயல்களை மறுத்துத்தானே பேசினார்கள்.

தீபச்செல்வனும் தியாகுவும் உண்மைகளை மறைத்துப் பேசியிருப்பார்கள் என நான் நினைக்கவில்லை. உண்மைகளை அவர்கள் அறியாமலிருந்தார்கள் என்றே நான் கருதுகிறேன்.

போர் நிலத்திலிருந்த தீபச்செல்வனுக்கும், முப்பது மைல்களிற்கு அப்பாலிருந்த தியாகுவுக்கும் தெரியாதிருந்த உண்மையைப் பத்தாயிரம் மைல்களிற்கு அப்பாலிருந்து வந்த அமெரிக்காக்காரன்  கண்டுபிடித்திருக்கிறான்.

என்னயிருந்தாலும் அமெரிக்காக்காரன் விண்ணன்தான்!

* * *

ஐ.நா செயலாளர் நாயகம் நியமித்த வல்லுநர் குழுவின் அறிக்கை:

போரின் இறுதி நாட்களில் நடந்தது இதுதான் என சிறிலங்கா அரசாங்கம் கூறிவருவது எதுவோ அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதையே வல்லுநர்கள் குழுவிற்குக் கிடைக்கப் பெற்ற நம்பகரமான குற்றச்சாட்டுக்கள் வெளிப்படுத்துகின்றன.

‘பொதுமக்கள் எவரும் கொல்லப்படாத’ ‘மனிதாபிமான மீட்பு நடவடிக்கை’ ஒன்றையே தான் மேற்கொண்டதாகச் சிறிலங்கா அரசாங்கம் கூறுகிறது.

ஆனால் இதற்கு முற்றிலும் முரணான நம்பகரமான குற்றச்சாட்டுக்கள் வல்லுநர்கள் குழுவிற்குக் கிடைக்கப் பெற்றிருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனிதஉரிமைச் சட்டங்களை மீறும் வகையிலும் செயற்பட்டிருக்கிறார்கள்.

போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களும் இதற்குள் அடங்கும். போர் மற்றும் அமைதிக்காலங்களின் போது தனிநபர்களது கௌரவத்தினைப் பாதுகாப்பதற்கென உருவாக்கப்பட்ட அனைத்துலகச் சட்டங்களை மீறும் வகையில் போர் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக போரின் இறுதிநாட்களிலே நம்பகமான பல குற்றச்சாட்டுக்கள் இடம்பெற்றிருப்பதை குழு கண்டுகொண்டது.

செப்ரெம்பர் 2008 தொடக்கம் 19 மே 2009 வரையிலான காலப்பகுதியில் சிறிலங்கா இராணுவமானது வன்னிப்பகுதியில் தனது படை நடவடிக்கையினை தீவிரமுடன் மேற்கொண்டு வந்தது.

இதன்போது வகைதொகையற்ற வகையில்- பரந்துபட்டளவில் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதல்களின் விளைவாக பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் செத்து மடிந்திருக்கிறார்கள்.

வன்னிவாழ் மக்கள் அடக்கி ஒடுக்கப்படுவதற்கு இது வழிசெய்தது.

நாளுக்கு நாள் சுருங்கிச் சென்ற நிலப்பகுதியினுள் சிக்கித் தவித்த 330,000 பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற முடியாதவாறு விடுதலைப் புலிகளால் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டனர்.

அரசாங்கம் மூர்க்கமுடன் முன்னெடுத்த போருக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருந்தவர்களையும் ஊடகங்களையும் அச்சுறுத்தி அமைதிப்படுத்தும் வகையில் அரசாங்கம் கட்டாயக் காணமற்போதல்கள் மற்றும் வெள்ளைவான் கடத்தல்கள் உள்ளிட்ட பல்வேறுப்பட்ட வழிமுறைகளைக் கைக்கொண்டது.

தொடராக மூன்று போரற்ற வலயங்களை அறிவித்த அரசாங்கம் அங்கு மக்கள் பல்லாயிரக்கணக்கில் செறிவாகத் திரளுவதை உறுதிசெய்த பின்னர் இந்தப் போரற்ற வலயங்களை இலக்குவைத்து வகைதொகையற்ற செறிவான எறிகணைத் தாக்குதல்களை நடாத்தியிருக்கிறது.

கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படமாட்டாது என்பதை அரசாங்கம் சுட்டிக்காட்டிய பின்னரே அரசாங்கம் இவ்வாறு நடந்திருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டு மையங்கள், நிவாரணப் பொருட்களை வழங்கும் மையங்கள் மற்றும் காயமடைந்த மக்களை ஏற்றி இறக்குவதற்கென அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவினால் ஒழுங்குபடுத்தப்பட்ட கப்பலுக்கு ஏறுவதற்காக நோயாளிகள் காத்திருந்த இடம் ஆகியன உள்ளிட்ட பல பகுதிகளை இலக்கு வைத்து சிறிலங்கா அரச படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியிருந்தார்கள்.

தான் மேற்கொள்கின்ற எறிகணைத் தாக்குதல் தொடர்பான பொதுமக்கள் இழப்பு விபரங்கள் தொடர்பாக தகவல்களை நன்கறிந்த நிலையிலும் இந்த எறிகணைத் தாக்குதல்கள் தொடர்ந்திருக்கின்றன.

தனது புலனாய்வு வலையமைப்பு, ஐக்கிய நாடுகள் சபை, அனைத்துலக செஞ்சிலுவைக்குழு மற்றும் இதர தகவல் மூலங்கள் ஊடாக பொதுமக்கள் இழப்புக்கள் தொடர்பான விபரங்கள் அரசாங்கத்திற்குச் சென்று சேர்ந்திருக்கிறது. போரின் இறுதிநாட்களில் அதிகளவிலான பொதுமக்கள் மடிவதற்கு அரசாங்கத்தின் எறிகணைத் தாக்குதல்களே காரணமாக அமைந்திருக்கிறது.

சிறிலங்கா அரசாங்கமானது திட்டமிட்டவகையில் மருத்துவமனைகளைக் கூட இலக்கு வைத்து எறிகணைத் தாக்குதலை நடாத்தியிருக்கிறது.

மருத்துவமனைகளின் அமைவிடம் தொடர்பான தகவல்கள் அரசாங்கத்திடம் இருந்தபோதும், வன்னியிலுள்ள மருத்துவமனைகள் அனைத்துமே எறிகணை மற்றும் மோட்டார் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. குறித்த சில மருத்துவமனைகள் திரும்பத் திரும்ப இலக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

உணவு நிவாரணம் முதல் மருந்துப்பொருட்களின் விநியோகம் வரை அடிப்படை மனிதாபிமான உதவிகள் மோதல் பகுதியில் சிக்கியிருந்த பொதுமக்களுக்கு கிடைக்காதிருப்பதை அரசாங்கம் திட்டமிட்ட வகையில் வழங்க மறுத்திருக்கிறது. குறிப்பாக சத்திரசிகிச்சைக்குத் தேவையான மருந்துப்பொருட்கள் அனுப்பிவைக்கப்படவில்லை. இவை அனைத்தும் மக்களின் துன்ப துயரங்களை மேலும் அதிகரிப்பதற்கே வழிசெய்திருந்தது.

அத்துடன் மோதல் இடம்பெற்ற பகுதிகளில் சிக்கியிருந்த பொதுமக்களின் தொகையினை அரசாங்கம் வேண்டுமென்று குறைத்து மதிப்பிட்டது. சனவரி 2009 தொடக்கம் மே 2009 வரையிலான காலப்பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக இறுதி நாட்களில் ஆங்காங்கே மக்கள் செத்து மடிந்திருக்கிறார்கள்.

மோதல்களின் மத்தியில் சிக்குண்டு மோசமான துன்பங்களையெல்லாம் அனுபவத்த பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற பொதுமக்களின் துன்பங்கள் மேலும் மேலும் அதிகரிக்கும் வகையிலேயே அரசாங்கம் நடந்துகொண்டது.

வெளிப்படைத் தன்மையோ அன்றி வெளியக பாதுகாப்போ எதுவும் அற்றதொரு சூழமைவிலேயே இடம்பெயர்ந்து வந்த பொதுமக்களுக்குள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களும் இருக்கிறார்களா என்பதை அறிவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

போர் இடம்பெற்ற பகுதிகளிலிருந்து தப்பி வந்த பலர் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட சில பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இடம்பெயர்ந்து வந்தவர்கள் பலர் இவ்வாறு படையினரால் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் காணாமற்போயிருப்பதை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு இவர்களது துணைவிமார் வழங்கிய வாக்குமூலங்களிலிருந்து தெரியவருகிறது.

வன்னிப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த அனைத்துப் பொதுமக்களும் மூடப்பட்ட முகாம்களில் அடைக்கப்பட்டனர். இடம்பெயர்ந்தோர் முகாம்கள் நிரம்பி வழிய அங்கு மோசமான நிலைமை காணப்பட்டது. தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்த மக்களின் அடிப்படை சமூக மற்றும் பொருளாதார உரிமைகள் மறுக்கப்பட்டன.

தேவையற்ற வகையில் உயிர்கள் பல இடம்பெயர்ந்தோர் முகாம்களிலும் காவுகொள்ளப்பட்டன. இடம்பெயர்ந்தோர் முகாம்களிலும் விசாரணையும் சித்திரவதையும் தொடர்ந்திருக்கிறது.

விடுதலைப் புலிகளின் உறுப்பினர் எனச் சந்தேகிக்கப்பட்டவர்கள் குடும்பங்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு வெளிஉலகத்துடன் எந்தத் தொடர்புமில்லாத வகையில் தடுத்துவைக்கப்பட்டனர். இது இவர்கள் மேலும் மேலும் முறைகேட்டு உட்படுத்துவதற்கே வழிசெய்தது.

மோதல் இடம்பெற்ற பகுதிகளில் கடுமையான ஆபத்து நிறைந்திருந்த போதும் விடுதலைப் புலிகள் பொதுமக்களை அங்கிருந்து வெளியேற அனுமதிக்கவில்லை.

மக்கள் பணயக் கைதிகள் போல நடாத்தப்பட்டனர். குறிப்பிட்ட சில சமயங்களில் முன்னேறிவரும் அரச படையினருக்கும் தமக்கும் இடையில் மனிதக் கேடயங்களாகவும் மக்களைப் புலிகள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

வன்னிப் பிராந்தியத்தில் போர் தீவிரம் பெற்றது முதல் தங்களது படையணிகளுக்கு ஆண் பெண் இளைஞர்கள் கட்டாய ஆட்திரட்டலுக்கு உட்படுத்துவது என்ற தனது கொள்கையினை புலிகளமைப்பு நடைமுறைப்படுத்தியிருந்தது. ஆனால் போரின் இறுதிநாட்களில் இந்தக் கட்டாய ஆட்திரட்டல் முழுவேகம் பெற்றிருந்தது. இதன்போது 14 வயதுச் சிறார்கூட படையில் இணைக்கப்பட்டிருந்தனர்.

தங்களது படைத்துறைசார் பணிகளுக்காக கட்டாயத்தின் பெயரில் புலிகள் பொதுமக்களை ஈடுபடுத்தியிருக்கிறார்கள். பதுங்குகுழிகளை அமைத்தல், காப்பரண்களை நிர்மாணித்தல் போன்ற பணிகளை இவர்கள் கட்டாயத்தின் பேரில் ஈடுபடுத்தப்பட்டமையானது பொதுமக்கள் இழப்புக்கள் அதிகரிப்பதற்கு வழிசெய்தது.

போரில் தாங்கள் தோற்கப் போகிறோம் என்பதை நன்கறிந்த நிலையிலும் இந்தக் கையறு நடவடிக்கைகளைப் புலிகள் மேற்கொண்டிருக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் இலக்கு மற்றும் தலைமையினைப் பாதுகாக்கும் அந்த அமைப்பின் முனைப்பு ஆகியவற்றுக்காக பல பொதுமக்கள் தங்களது உயிர்களைத் தியாகம் செய்திருக்கிறார்கள்.

பெப்பிரவரி 2009 முதல் தங்களது கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து தப்பிச்செல்ல முற்பட்ட பொதுமக்களை இலக்குவைத்து துப்பாக்கிச்சூடு நடாத்தியிருக்கிறார்கள்.

போரின் இறுதிநாட்களில் கொல்லப்பட்ட பொதுமக்களின் தொகை அதிகரிப்பதற்கு இதுவுமொரு காரணம். பொதுமக்கள் இடம்பெயர்ந்து செறிந்துவாழும் இடங்களுக்கு மிக அண்மையில் வைத்து விடுதலைப் புலிகள் தங்களது ஆட்லறி எறிகணை செலுத்திகளை இயக்கியிருக்கிறார்கள் அல்லது மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களுக்கு அருகாமையில் படைத்தளபாடங்களைக் களஞ்சியப்படுத்தியிருந்தார்கள்.

மோதல்கள் இறுதிக்கட்டத்தினை நெருங்கிய வேளையில் விடுதலைப் புலிகள் களமுனைக்கு வெளியே ஆங்காங்கே தற்கொலைக்குண்டுத் தாக்குதலை மேற்கொண்டனர்.

மேற்குறித்த இந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு போரின் இறுதி நாட்களில் சிறிலங்கா அரசாங்கம் புரிந்த குற்றச்சாட்டுக்கள் ஐந்து வகையாக வகைப்படுத்தப்படுகிறது:

1.பரந்துபட்டளவிலான எறிகணை தாக்குதலை மேற்கொண்டு பொதுமக்களைக் கொலைசெய்தமை,
2. மருத்துவமனைகள் மற்றும் மனிதாபிமான இலக்குகள் மீது எறிகணைத் தாக்குல் நடாத்தியமை,
3. மனிதாபிமான உதவிகளை மறுத்தமை
4. போரில் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த பொதுமக்கள் மற்றும் விடுதலைப் புலிகள் சந்தேகநபர்களின் மனிதஉரிமைகளை மீறியது.
5. ஊடகங்கள் மற்றும் அரசை விமர்சிப்பவர்கள் மீதும், போர் நடைபெற்ற பகுதிகளுக்கு வெளியே மனிதஉரிமை மீறல்களில் ஈடுபட்டது.

இதுபோல போரின் இறுதிநாட்களில் விடுதலைப் புலிகள் புரிந்த குற்றங்களை ஆறு வகையாக வல்லுநர்கள் குழு வகைப்படுத்துகிறது:

1. பொதுமக்களை மனிதகவசங்களாக பயன்படுத்தியது.
2. தமது பிடியில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற பொதுமக்களைக் கொன்றது.
3. பொதுமக்கள் வாழ்ந்த பகுதிகளில் இருந்து படைக்கருவிகளை இயக்கியது.
4. சிறுவர்களைக் கட்டாயமாக படைகளில் சேர்த்தது.
5. பொதுமக்களிடம் கட்டாயமாக வேலைவாங்கியது.
6. போர் நடைபெறாத பகுதிகளில் தற்கொலைத் தாக்குதல்களின் மூலம் பொதுமக்களைக் கொன்றது.

பொறுப்புச்சொல்லும் முறை:

அனைத்துலக மனிதாபிமான அல்லது மனித உரிமைச் சட்டங்கள் மோசமாக மீறப்படும்போது அது தொடர்பான பொறுப்புச்சொல்லும் செயற்பாட்டினை முன்னெடுப்பது ஒரு தெரிவோ அன்றி கொள்கையோ அல்ல. மாறாக அனைத்துலக மற்றும் உள்ளூர் சட்டங்களுக்கு அமைய இது ஒரு கடமை.

மேற்குறித்த இந்த மோசமான குற்றச்சாட்டுக்கள் முறையாக விசாரிக்கப்படுவதோடு இதற்குப் பொறுப்பானவர்கள் நீதியின்முன் நிறுத்தப்படவேண்டும். இந்தக் குற்றங்கள் நிரூபிக்கப்படுமிடத்து இதற்குப் பொறுப்பானவர்கள் யாரோ அவர்கள் அனைத்துலக குற்றவியல் சட்டங்களுக்கு அமையத் தண்டிக்கப்பட வேண்டும்.

சிறிலங்கா இராணுவத் தளபதிகள் மற்றும் அரசாங்கத்தின் மூத்த அலுவலர்கள், விடுதலைப்புலிகளின் படைத்துறைசார் மற்றும் அரசியல் தலைவர்கள் என குற்றமிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவது அவசியம்.

அதேநேரம், பொறுப்புச்சொல்லும் முறை என்பது இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றங்களை முறையாக விசாரித்து குற்றமிழைத்தவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு அப்பாலும் செல்லும். பொறுப்புச்சொல்லுதல் என்பது கடந்தகாலத்தில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்களுக்கு உட்பட்ட தனிநபர்கள் மற்றும் அலகுகளின் அரசியல்சார், சட்டரீதியிலான மற்றும் தார்மீக பொறுப்புக்கள் தொடர்பாகக் கவனம் செலுத்தும் பரந்துபட்டதொரு செயற்பாடு.

மேற்கூறப்பட்ட பொறுப்புச்சொல்லும் செயற்பாடு தொடர்பான அனைத்துலக நியமங்களின் அடிப்படையில் உண்மை வெளிக்கொணரப்படுவதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் நட்டஈடும் கிடைப்பதற்கும் வழிசெய்யப்பட வேண்டும். பொறுப்புச்சொல்லும் செயற்பாட்டின் அடிப்படையில் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்ட இந்த விடயத்தில் தனது பங்கும் பொறுப்பும் என்ன என்பதை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்வது அவசியம்.

ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகளுக்கு அமைய, ‘அனைவருக்கும் பொருந்தும் ஒரு அளவு’ என்ற கோட்பாட்டினையோ அன்றி சிறிலங்காவில் முன்னெடுக்கப்படவேண்டிய பொறுப்புச்சொல்லும் முறைமைக்கு வெளிநாட்டு மாதிரிகளைப் பயன்படுத்தவேண்டும் என்றோ வல்லுநர்கள் குழு வாதிடவில்லை. மாறாக, மக்களின் பரந்துபட்ட பங்களிப்பு அவர்களது தேவைகள், அபிலாசைகளின் அடிப்படையில் உள்ளூர் மதிப்பீடுகளுக்கு அமைய சிறிலங்காவிற்கான பொறுப்புச்சொல்லும் முறை எதுவென்பது இனங்காணப்பட வேண்டும்.

எது எவ்வாறிருப்பினும், இலங்கைத்தீவில் உள்நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் பொறுப்புச்சொல்லும் செயற்பாடுகள் அனைத்துலக தரத்திற்கும் நியமங்களுக்கும் அமைவாக இல்லை.

போரின் இறுதிநாட்களில் போரின் மத்தியில் சிக்குண்டிருந்த பொதுமக்கள் எந்தவிதமான அச்சமுமின்றி உண்மையினை வெளிப்படுத்துவதற்கும் நீதியினையும் இழப்பீடுகளையும் பெறுவதற்கும் வழிசெய்யும் வகையில், அனைத்துலக தரத்திற்கும் நியமங்களுக்கும் அமைய பரந்துபட்ட அனுபவங்களின் அடிப்படையில் சிறிலங்கா தானே முன்னெடுக்கும் பொறுப்புச்சொல்லும் செயல்முறையானது அமையவேண்டும்.

குற்றமிழைத்தவர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக பாதிக்கப்பட்டவர்களதும் குற்றமிழைத்தவர்களதும் தேவைகளைப் போக்குவதன் மூலம் நிலைமையினைச் சீர்செய்யும் நீதி முறையின் அடிப்படையில் (restorative justic) சமப்படுத்தப்பட்ட நல்லிணக்கம் மற்றும் பொறுப்புச்சொல்லும் செயற்பாட்டினையே தான் முன்னெடுக்கப் போவதாகச் சிறிலங்கா கூறிவந்திருக்கிறது.

தவறிழைத்தவர்களுக்கு நேரடித் தண்டனை வழங்கும் நீதி முறை (Retributive justice) மற்றும் குற்றமிழைத்தவர்களதும் பாதிக்கப்பட்டவர்களதும் தேவைகளைப் போக்கி நிலைமையினைச் சீர்செய்யும் (restorative justice) நீதிமுறை ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது என்பது தவறானதொரு கருதுகோள்.

மேலும் நீதி, உண்மை மற்றும் நட்டஈடு வழங்குதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்திய பொறுப்புச்சொல்லும் நேர்மையான செயன்முறையினை முன்னெடுப்பதற்கும் பயங்கரவாதத்திலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும் தவறியமை மற்றும் இதற்கு வழிசெய்த கடந்தகால அரசாங்கங்களின் கொள்கைகளுக்காக அரசியல் பொறுப்பினைத் தட்டிக்கழிக்கும் வகையிலேயே restorative justice இனை அரசாங்கம் நாடுவதாகவே வல்லுநர்கள் குழு கருதுகிறது.

அதேநேரம் குற்றமிழைத்ததாகக் கருதப்படும் விடுதலைப் புலிகளின் முதன்மையான முன்னாள் உறுப்பினர்களுக்குத் தண்டனை வழங்குவதற்கும் ஏனையவர்களை புனர்வாழ்வின் பின்னர் விடுவிப்பதற்கும் சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது.

இங்கு பொறுப்புச்சொல்லும் செயல்முறை தொடர்பாக அரசாங்கம் இரட்டை அணுகுமுறையினைக் கைக்கொள்ள விரும்புவது தெளிவாகிறது. கடந்தகால அரசாங்கங்களின் செயற்பாடுகள் மற்றும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கான பொறுப்புச்சொல்லும் நடவடிக்கைகளைத் தனியாகவும் போரின் இறுதிநாட்களிலும் அதன் பின்னரும் தனது முடிவுகளால் நடத்தைகளாலும் இடம்பெற்ற சம்பவங்களை வேறுவகையிலும் கையாழுவதற்கே அரசாங்கம் விரும்புகிறது.

பொறுப்புச்சொல்லும் செயல்முறை தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அனைத்துலக தரம் மற்றும் நியமங்களுக்கு அமைவானதாக இல்லை. இரண்டு தரப்பினராலும் புரியப்பட்டதாகக் கூறுப்படும் குற்றங்கள் மற்றும் உரிமை மீறல்களை நேர்மையுடன் அணுகாதவிடத்து, போரின் விளைவாகப் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளும் கௌரவமும் முறையாக மீளப்பெறப்படாதவிடத்து சிறிலங்கா மேற்கொள்ளும் பொறுப்புச்சொல்லும் செயல்முறை எதுவும் அனைத்துலகத்தினது எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்வதாக அமையாது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு:

2002ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டமை முதல் போர் முடிவுக்குவந்த மே 2009 வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களை ஆராய்வதற்காக சிறிலங்கா அரசாங்கமானது தன்பங்கிற்குக் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை அமைத்திருந்தது.

சிறிலங்காவினது இனப் பிரச்சினைக்கு தேசிய ரீதியிலமைந்த பேச்சுக்களுக்கான முக்கியமானதொரு வாய்ப்பினை இந்த ஆணைக்குழு ஏற்படுத்தியிருந்தது. நாட்டிலுள்ள பலதரப்பட்டவர்கள், குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட தரப்பினர் இதுபோன்ற பேச்சுக்களுக்கான முக்கியத்துவம் பற்றில் ஆணைக்குழுவிடம் எடுத்து விளக்கியிருந்தனர்.

எது எவ்வாறிருப்பினும் இந்த ஆணைக்குழுவில் அங்கம் வகிப்பவர்களது பின்புலம் மற்றும் அதன் உறுப்பினர்கள் மத்தியில் காணப்படும் ஆழமான முரண்பாடுகள் ஆகியவற்றினை அடிப்படையில் நோக்குமிடத்து சிறிலங்கா அமைத்திருக்கும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது சுதந்திரமாகவும் பக்கச்சார்பின்றியுமே செயற்படுகிறது என்ற திருப்தியினை ஏற்படுத்துவதற்கு அது தவறிவிட்டது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட ஆணை மற்றும் அதன் இதுநாள் வரையிலான செயற்பாட்டுமுறை ஆகியன இடம்பெற்றதாகக் கூறப்படும் அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனிதஉரிமைச் சட்டங்களை விசாரிப்பதாகவோ அன்றி பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த இனப்போரின் அடிப்படைக் காரணங்கள் எவையென ஆராய்வதாகவோ தெரியிவில்லை. பதிலாக இவை மேற்குறிப்பிட்ட பரவலான அரசியல் பொறுப்புக்களிலேயே கவனஞ் செலுத்துகின்றன.

ஆணைக்குழுவின் இதுநாள் வரையிலான பணியினை ஆராயும்போது இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்றது என்ன என்பதைக் கண்டறியும் வகையில் நேர்மையான உண்மையறியும் முனைப்புக்கள் அதனையும் இது மேற்கொள்ளவில்லை.

இறுதிப்போரின் போது இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறுப்படும் பல்வேறுபட்ட மோசமான மீறல்களை பக்கச்சார்பின்றியும் முறையாகவும் விசாரிப்பதற்கான எந்த நடவடிக்கையினையும் இந்த ஆணைக்குழு மேற்கொள்ளவில்லை. போரின் போது பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு முழு மதிப்பினையும் கௌரவத்தினையும் வழங்குவதோடு அவர்களது துன்ப துயரங்களை ஏற்றுக்கொள்ளும் அதேநேரம் சாட்சியங்களுக்குப் பாதுகாப்பளிக்கும் எந்தவிதமான அணுகுமுறையினையும் இந்த ஆணைக்குழு கைக்கொள்ளவில்லை.

ஒரே வார்த்தையில் கூறுவதானால் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது குறைகள் நிறைந்ததொரு கட்டமைப்பு.

காத்திரமானதொரு பொறுப்புச்சொல்லும் பொறிமுறை ஒன்றுக்கான அனைத்துலக நியமங்கள் எதனையுமே கொண்டிராத ஒரு அலகு. ஆதலினால் சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றங்களுக்கான பொறுப்புச்சொல்லும் செயல்முறை தொடர்பான அதிபர் ராஜபக்சவினதும் செயலாளர் நாயகம் பன் கீ மூனினதும் கூட்டு உறுதிப்பாட்டினை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது எவ்வகையிலும் திருப்திப்படுத்தப்போவதில்லை.

( கொழும்பிலிருந்து வெளியாகும் ‘ஐலன்ட்‘ நாளேட்டில் வெளியாகியிருந்த இன்னமு்ம் அதிகாரபூர்வமாக வெளியிடப்படாத, ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கையின் ஒருபகுதி / மொழியாக்கம் :தி.வண்ணமதி / நன்றி: புதினப்பலகை)

2 thoughts on “அமெரிக்காக்காரன் விண்ணன்தான்!

  1. அப்போ நிங்கள் அர்மிகரனின் சித்திரவதையை
    அவன் செய்த கொடுமையை போட்டோமுலமோ (c.d ) பாக்கவே இல்லையா
    ஒருமனிதன எத்தனை பிழைகள் செய்தலும் இப்படி கொடுமை செய்து சாக வைத்து
    நல்ல கெட்டிக்காரன் என்று மரபு தட்டுகிறான் சிங்களவன்
    உங்கள் மனதை துறந்து பாருங்கள்
    பிளஸ்
    …………………………

  2. || போர் நடைபெறாத பகுதிகளில் தற்கொலைத் தாக்குதல்களின் மூலம் பொதுமக்களைக் கொன்றது.||

    நல்ல பம்மாத்து தான்.ஸோபாவுக்கு மகிந்த ஊத்தி கொடுக்கிறார் போல இப்படி எழுதுவதற்கு . என்ன மனித பிறவிகளோ இப்படி மனம் வந்து எழுத.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *