அஞ்சலி: மங்கையற்கரசி அமிர்தலிங்கம்

அறிவித்தல்கள்

ழத் தமிழ்த் தேசிய அரசியலில் உரத்து எழுந்த முதலாவது பெண்குரல் மங்கையற்கரசி அவர்களுடையது.  சிங்கள ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம், காலிமுகத்  திடல் போராட்டம் தொடங்கித் தமிழரசுக் கட்சி நடத்திய அத்தனை போராட்டங்களிலும் முன்னணியில் நின்றவரவர்.  அவரது கையால் அன்னமிடப்படாத  போராளிக் குழுக்களின் தலைவர்களோ ஆரம்பகாலப் போராளிகளோ அநேகமாக எவருமிலர் என்பது வரலாறு.

தனது கணவர் அ. அமிர்தலிங்கத்தை அரசியலில் நிழலாகத் தொடர்ந்தவர். துணைவரோடு இணைந்து சிறைக்கும் சென்றவர்.  அமிர்தலிங்கம் புலிகளால் கொலை செய்யப்பட்ட அன்றே மங்கையற்கரசியும் உளவியல்ரீதியாகக் கொலை செய்யப்பட்டுவிட்டார்.  அன்றுடன் மேடைகள் தோறும் முழங்கிய, மேடைகள் தோறும் ‘எங்கள் ஈழத் திருநாடே’  என்று இசைத்த அந்தக் குரல் அடங்கிப்போனது.

பின்னொருமுறை அவரது அடங்கிய குரலை பாரிஸில் ஒரு மேடையில் கேட்டேன். “நான் தம்பி பிரபாகரனைக் கேட்கிறேன்… ஏன் எனது கணவரைக் கொன்றீர்கள்?” என்று அந்தக் குரல் அரற்றலாயிற்று.

இன்றிரவு மங்கையற்கரசியின் மூச்சும் லண்டனில் நின்று போயிற்று. தனது கேள்விக்கு விடை அறியாமலேயே அவர் போய்விட்டார்.  ஈழப் போராட்டப் புத்தகத்திலுள்ள எழுதப்படாத பக்கங்களில் சில அமரர் மங்கையற்கரசிக்கானவை.

*

 

2 thoughts on “அஞ்சலி: மங்கையற்கரசி அமிர்தலிங்கம்

  1. திரு.அமிதலிங்கம் அவர்கள் இலங்கை பாராளுமன்ற எதிர்கட்சி தலைவராக பொறுப்பேற்றவுடன் தமிழ் ஈழக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய வந்தார் திமுகழகம் சார்பில் தமிழ் நாடெங்கும் அவருக்கு மேடை அளிக்கப்பட்டது .
    விழுப்புரம் இராமலிங்கசாமி வள்ளலார் மடத்தில்திரு.அமிதலிங்கம் அவர்களும் , திருமதி மங்கையர்கரசி அவர்களும் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.பள்ளிமாணவன் என்ற நிலையில் ஆர்வமாக அந்நிகழ்வில் பங்கு கொண்டேன். ஈழப் பிரச்சையினையில் எனக்குஈர்ப்பு ஏற்படுத்தியது அந்நிகழ்வு.செஞ்சி இராமச்சந்திரன் அவைகளும்,நெல்லிக்குப்பம் கிருட்டிணமூர்த்தி அவர்களும் அதில் பங்கேற்றனர். அம்மையார் மங்கையர்கரசி அவர்கள் பாடிய ஈழவிடுதலைப்பாடலை என்னால் இத்தனை ஆண்டுகாலம் கடந்தும் மறக்கமுடியாத கீதமாக காதில் ஒலித்துக்கொண்டிருக்கின்றது

  2. தலைவர் அமிர்தலிங்க கொல்லப்பட்டதற்குச் சொல்லப்பட்ட காரணங்கள் அத்தனையும் அபத்தம். மக்களுக்கும், திரு.அமிர்தலிங்கம் அவர்களுக்கும், திருமதி.அமிர்தலிங்கத்துக்கும் தலைவர் ஏன் கொல்லப்பட்டாரென்பது இன்னும் தெரியவரவே இல்லை என்பது எல்லாவற்றையும்விட அபத்தம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *