அஞ்சலி : எலிசபெத் சேதுபதி

கட்டுரைகள்

கடந்த  முப்பத்தைந்து ஆண்டுகளாக, பிரஞ்சுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழியைக் கற்பித்துவந்த பேராசிரியை எலிசபெத் சேதுபதி அவர்கள்  தன்னுடைய 66-வது வயதில் இம்மாதம் 11-ம் தேதி பாரிஸில் காலமானார்.

இரண்டாயிரத்தின் தொடக்கத்தில், தோழர். அ.மார்க்ஸை  தலைமை  உரையாளராக அழைத்து நாங்கள் நடத்திய ‘மார்க்ஸியமும் பின்நவீனத்துவமும்’ என்ற கருத்தரங்கில்தான் நான் முதன் முதலில் எலிசபெத்தைச் சந்தித்தேன். அதன் பின்பு, சென்ற ஆண்டின் இறுதியில் அவர் நோயின்வாய் வீழும்வரை அவ்வப்போது கூட்டங்களிலும் கருத்தரங்குகளிலும் அவரைச் சந்தித்துக்கொண்டிருந்தேன். கடந்த செம்டம்பர் மாதம்,  இலக்கியப் பிரதிகளைத் தமிழிலிருந்து பிரஞ்சுக்கு மொழியாக்கம் செய்வது குறித்து  INALCO நடத்திய கருத்தரங்கிற்கு எலிசபெத் தலைமையேற்றிருந்தார். அதுதான் நான்  அவரைக் கடைசியாகப் பார்த்த தினம்.

Institut national des langues et civilisations orientales -ல் தமிழ் மொழிப் பிரிவிற்கு பொறுப்பாளராக 1984 முதல் அவர் மறையும்வரை பணியாற்றிய எலிசபெத், இந்நிறுவனத்தின் தெற்காசிய மொழி – பண்பாட்டு மையத்தின் இயக்குனராக 2010 – தொடக்கம் நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். எண்பதுகளில் தமிழ் அகதிகளிற்கான நிர்வாகரீதியான  மொழிபெயர்ப்பாளராகவும் அவர் செயற்பட்டவர். தமிழ் மொழியைப் பயில்வதற்கான இரண்டு நுால்களையும் எலிசபெத் எழுதியிருக்கிறார்.

எனக்குத் தெரிந்து பாரிஸ் தமிழ் புத்தக்கடைகளிற்கு வரும் அனைத்து தமிழ் இலக்கிய இதழ்களையும் சிறுபத்திரிகைகளையும் மாதாமாதம் தவறாமல் பெற்று வாசிக்கும் ஒரே இலக்கிய வாசகர் எலிசபெத் சேதுபதிதான். இன்று பாரிஸ் BULAC நுாலகத்தில் (Bibliothèque universitaire langues civilisations)  தமிழின் நவீன இலக்கிய எழுத்தாளர்கள் அனைவரதும் நுால்களைக் கிடைக்கச் செய்ததில் எலிசபெத் அவர்களிற்கே பெரும் பங்குண்டு.

 

கி .ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’ நாவலை எலிசபெத் பிரஞ்சுக்கு மொழிபெயர்த்தார். தமிழில் வெளிவரும் இலக்கிய இதழ்களெல்லாம் எலிசபெத் வழியே அவரது மாணவர்களிற்கு தமிழ் கற்பதற்கான பிரதிகளாயின. ஒரு கருத்தரங்கில் எலிசபெத்தின் மாணவி லற்றிஷியா  (Léticia Ibanez-Masse)  மௌனியின் கதைகள் குறித்து மிக விரிவாக உரையாற்றியதை வியப்புடன் கேட்டேன்.  மெளனியையே படித்துப் புரிந்துகொண்டாரென்றால் கோணங்கியெல்லாம் அந்த மாணவிக்குச் சர்வசாதாரணமாயிருக்கும் என உள்ளுற ஒரு பொறாமையும் எழுந்தது.

எலிசபெத்தின்  தமிழ் இலக்கியத் தொடர்பு  வட்டமும் மிகப் பெரிது. பிரான்ஸூவா க்ரோ, சுந்தர ராமசாமி, அ. முத்துலிங்கம், க்ரியா ராமகிருஷ்ணன், வெ, ஸ்ரீராம்,  கண்ணன்.எம், திலீப்குமார் போன்ற பலர்  எலிசபெத்தின் நண்பர்களே.

எலிசபெத்தின் தமிழ் மொழி மீதான காதல் உயிர்ப்பானதும் நீடித்ததும். அவர் ஈழத் தமிழரான உதயணன் சேதுபதியை மணம் முடித்தார். அவர்களிற்கு வித்யா என்ற மகளுண்டு.

ஏற்கனவே எனது ‘வெள்ளிக்கிழமை’ கதையை மொழிபெயர்த்திருக்கும் எலிசபெத், சென்ற வருடம்  BOX கதைப்புத்தகத்தை  மொழிபெயர்க்கத் தொடங்கினார்.  அந்தப் புத்தகத்தில் டைடஸ் லெமுவல் என்றொரு பிரஞ்சுக்காரர் இலங்கை போய் தமிழைக் கற்பதாகவும் கற்பிப்பதாகவும்   பரப்புவதாகவும் எழுதியிருந்தேன். மொழிபெயர்ப்பில் எலிசபெத் அந்த இடத்தைக் கடந்திருந்தாரா தெரியவில்லை. யாரைக் கேட்பதெனவும் தெரியவில்லை.

எலிசபெத் அம்மையாருக்கு என் அஞ்சலிகள்!

 

 

2 thoughts on “அஞ்சலி : எலிசபெத் சேதுபதி

  1. இன்று நேற்றல்ல தமிழை உலக அளவில் கொண்டு மதம் நாடு மொழி கடந்து கொண்டு சென்றவர்கள்.அவர்களுல் இதுவரை என்னைப் போல இவரை பலரும் அறிய வாய்ப்பில்லை .ஆனால் தமிழை பேசிய அதன் வளர்ச்சிக்கு உதவிய எல்லா ஆன்மாக்களும் எங்கோ ஒளிந்திருக்கும் சுவர்க்கம் செல்கிறார்களோ இல்லையோ தமிழை நேசிப்பவர்கள் மனதில் நிரந்தமாக வசிப்பார்கள் …

  2. I have also heard and read about Elisabeth Sethupathy,she has contributed immensely to the tamil literature and her fascination for tamil is remarkable.May her Soul rest in Peace.Rip.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *