Islamophobia – சேனன்

கட்டுரைகள்

ஹிஜாப் (Hijab) தடையும் இஸ்லாமிய எதிர்ப்பும்

-சேனன்

லகெங்கும் வலதுசாரி அரசுகளும் ஊடகங்களும் ஆசிய, ஆபிரிக்க மக்களின் குறிப்பாக முஸ்லீம் மக்களின் மீதான தாக்குதலை ஓங்கி நடத்துகின்றன. “எங்களது கலாச்சாரத்துக்கு உட்பட்டு நடவுங்கள். அப்படி முடியாதென்றால் இங்கு வர வேண்டாம்” என்று ஏதோ தகப்பன் தனக்கு எழுதி வைத்த காணித்துண்டு போல் இங்கிலாந்து பற்றி பிரதமர் அண்மையில் கூறியது அனைவரும் அறிந்ததே. ஈராக்கில் அநாவசியமாக மில்லியனுக்கும் மேலான அப்பாவி மக்களின் சாவுக்கு நேரடிக்காரணமான இந்த நாய் அமெரிக்க கிறிஸ்தவ வலதுசாரி தலைவர்களின் கால்களை நக்கிக்கொண்டு முஸ்லீம்களைப் பார்த்து எங்கள் கலாச்சாரத்துக்கு அடிபணியுங்கள் என்று சொன்னது சகிக்க முடியாதது. ஏற்கனவே வெறுப்படைந்துள்ள ஏராளமான இளைஞர்களை பயங்கரவாதத்தை நோக்கித் தள்ளும் வேலைதான் இது.

இவர் சொல்லும் காலச்சாரத்துக்கு எதிராகத் தான் மில்லியன் கணக்கான மக்கள் தெருத்தெருவாய் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். இவர் குறிப்பிடும் இந்த கலாச்சாரத்துக்கும் பெரும்பான்மை இங்கிலாந்து மக்களுக்கும் எதுவித தொடர்பும் இல்லை. ஜாக் ஸ்ரோ, ஜோன் ரீட் போன்ற அமைச்சர்கள் மக்கள் நலம் என்ற பெயரில் சுயநலமாக முஸ்லீம்களை வேதனைப்படுத்துகின்றனர். ஜனநாயக முறைகளுக்காவது இவர்கள் கட்டுப்படுவார்கள் என்று நப்பாசை கொண்ட சனங்களின் முதுகில் சாட்டை வீசிக்கொண்டிருக்கிறார் ஜோன் ரீட்.

சில ஜனநாயக உரிமைகளை விட்டுக்கொடுக்கக் கூடிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம் என்று அவர் கூறிய போது நாம் பேச்சிழந்துவிட்டோம். ஹிட்லரைப்போல முஸ்லீம்களைப் பொறுக்கி எடுத்து வதை முகாம்களில் புதைக்கும் நடைமுறை வெகுதூரத்தில் இல்லை என்று நாம் சந்தேகப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் ஜோன் ரீட் பயங்கரவாதத்துக்கு எதிரான போருக்கும் பாசிசத்துக்கு எதிரான போருக்கும் வேறுபாடில்லை என்று அறிவித்துத் துவேசம் துப்பினார்.

இவர்கள் அச்சப்படும் இங்கிலாந்து முஸ்லீம்களின் நிலை பற்றி நாம் கதைத்துத்தான் ஆகவேண்டும். இந்நாட்டில் மிகவும் ஒடுக்கப்படும் மக்களாகவும் மிகவும் வறுமையில் வாடுபவர்களாகவும் இருப்பவர்களின் மேல்தான் இவ்வளவு துவேசமும் காட்டப்படுகின்றது. இங்கிலாந்து முஸ்லீம்களில் 35 வீத குடும்பங்கள் எந்தவித வருவாயும் அற்று வாடுகின்றன. 73 வீதமான முஸ்லீம் சிறுவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றனர். 28 வீதமான இளைஞர்கள் வேலையற்று இருக்கின்றனர். முஸ்லீம்கள் வாழும் பகுதிகள் நாட்டின் அதிகூடிய வறுமையான பகுதிகளாக இருக்கின்றது. இப்படியிருக்க உலகின் மிகப்பெரிய பணக்கார நாடு ஒன்றின் அரசாங்கம் இந்த வறுமையை- வேலையின்மையை போக்க முயற்சி எடுக்கும் என்று சிலர் கனவு காணலாம். ஆனால் அதற்கு எதிர்மறையாகவே எல்லாம் நடக்கின்றது.
2001ம் ஆண்டிற்குப் பிறகு ஆசியர்கள் மத்தியிலான பொலிசின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த இரண்டு வருடத்திற்குள் ஆசியர்களை நிறுத்தி விசாரணை செய்வது மிகவும் அதிகரித்துள்ளது. இதை உள்துறை அமைச்சு பெருமையாக வெளியிடுகிறது. 47 வீத ஆசிய இளைஞர்கள் இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நடைமுறைகளுக்கு ஆதரவாக இமாம்கள், பல்கலைக்கழக கல்வியாளர்கள், வியாபாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் என்று ஒரு சிறுபான்மையைத் தன்வசம் இழுத்து வைத்துள்ளது அரசாங்கம். ஏறத்தாள 5000க்கும் மேற்பட்ட முஸ்லீம் மில்லியனர்கள் வாழும் இங்கு இது சாத்தியப்படுவது ஒரு புதிரில்லை. இருப்பினும் 1.6 பில்லியனுக்கும் அதிகமாக வாழும் முஸ்லீம் வறிய மக்களை இந்த ஆயிரத்துச் சொச்ச முஸ்லீம் ஆதரவாளர்களை கொண்டு கட்டி ஆளலாம் என்று நினைப்பது தான் தவறு.

இதில் அதிகூடிய அளவில் பாதிக்கப்படுபவர்கள் முஸ்லீம் பெண்கள் தான். அரச ஒடுக்கு முறைகளுக்கு மேலாக குடும்ப ஆணாதிக்க ஒடுக்குமுறைகளையும் அவர்கள் எதிர்நோக்கியுள்ளார்கள். அதற்கு உதவுமுகமாக முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் பாராளுமன்ற தலைவருமான ஜாக் ஸ்ரோ முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார். குறிப்பிட்ட சில புத்திஜீவிகள் இதைப்பற்றிப் பிடித்துக் கொண்டு பிரச்சனையைக் கிளப்புகின்றனர். ஹிஜாப் அணிவதை எப்படி நியாயப்படுத்துவது? மதமொன்றின் பெண்களின் மீதான அடிமைப்படுத்தலின் அடையாளத்துக்கு ஆதரவு கொடுக்கலாமா? என்று அவர்கள் ஓங்கிக் கத்துகின்றனர். அவர்களுக்கு முதல் தெரிய வேண்டியது ஹிஜாப் அணிவது முற்றுமுழுதாக மதம் சார்ந்த நடவடிக்கை அல்ல என்பது.

இன்று உலகெங்கும் கிறிஸ்தவர்களாலும் ஏனைய மதத்தவர்களாலும் கொண்டாடப்படும் கிறிஸ்மஸ் கூட ஒரு மதச்சடங்கல்ல. பதினெட்டாம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகப் புற்றீசல் போல கிளம்பிய வியாபார நடவடிக்கைகளின் மூலம் மாறிய பொருளாதார சமூக உறவுகளே அதன் தோற்றத்தின் அடிப்படை. இயேசு காலத்தில் இருந்து கொண்டாடப்படுவது போல் ஒரு பிரேமையை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். உண்மையில் 18ம் நூற்றாண்டுக்கு முந்திய தலைமுறைக்கு கிறிஸ்மஸ், கிறிஸ்மஸ் தாத்தா என்றால் என்னவென்று தெரியாது. மதத்தின் செல்வாக்கு காரணமாக கிறிஸ்மஸ்க்குள் இயேசு புகுந்து மதச்சடங்காகிப் போனது. நிலப்பிரபுத்தவத்தின் கை ஒடுங்கி முதலாளித்துவ புரட்சியின் ஆரம்ப கட்டத்தில் இது நிகழ்ந்தது.

இதுபோல் தான் நிலப்பிரபுத்தவத்தின் கை உச்சிக்கு வந்த பொழுது மதம் சமுதாயத்தின் பல்வேறு நடவடிக்கைகளை நிர்ணயித்தது. ஹிஜாப்பின் கதையும் இது தான். சுமேரியர் காலத்தில் இருந்து ஹிஜாப் அணியப்பட்டதற்கான ஆதாரங்கள் உண்டு. பல்வேறு மதத்தினரும் இதை அணிந்து வந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. (இந்துமதம், கிறிஸ்தவ மதம் உட்பட) ஏறத்தாள ஒரு 600 ஆண்டுகளுக்கு முன்பு Umayyad and Abbasid Dynasties காலத்திலேயே இது மதத்துடன் இணைக்கப்படத் தொடங்கியது. பின்பு சவுதி அரேபியாவில் இஸ்லாமில் ஏற்பட்ட பிரிவான வாகாயிப் பிரிவு கொண்டு வந்த பல்வேறு ஷெரியா சட்டதிட்டங்களில் இதுவும் ஒன்றானது.

குர்ரானில் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் எழுதப்படவில்லை. நபிகளின் மனைவியார் ஹிஜாப் அணிந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. அக்காலத்தில் ஹிஜாப் அணிவது உயர்தரவர்க்க நடவடிக்கையாக – அதுவும் பெண்கள் இளைஞர்களை கவரும் ஒன்றாகவே நிகழ்ந்தது.

நிலப்பிரபுத்துவ வரலாறு முடிவுக்கு வந்த பொழுது இஸ்லாமிய நாடுகளில் இதற்கு எதிரான குரல் எழும்பியது. 1923ல் துருக்கியில் ஹிஜாப்புக்கு மறுப்புத் தெரிவித்தார்கள். அதே ஆண்டு லெபனான், சிரியா, துனிசியா முதலான நாடுகளில் பொதுமக்கள் மத்தியில் ஹிஜாப்பை துறத்தல் நடவடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. ஈரானில் 1927ல் இருந்து 1941 வரை Reza Pahlavi கிஜாப்பை தடை செய்திருந்தார். 2006 நவம்பர் 3ல் பாகிஸ்தான் புஸ்வார் உயர் நீதிமன்றம் பெண் வழக்கறிஞர்கள் ஹிஜாப் அணிவதற்கு தடைவிதித்தது. இவ்வாறு அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் ஒடுக்குமுறைக்கான போராட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.

இருப்பினும் ஹிஜாப்பின் அரசியல் இங்கு முன்னணிக்கு வந்துள்ளமைக்கான முக்கிய காரணம் ஈராக் யுத்தமும் இவர்கள் கூறும் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தமுமே. இவர்கள் இதை முன்னிலைப்படுத்துவதற்கான காரணம் முஸ்லீம்களை கட்டுப்படுத்த மட்டுமே. மதத்துக்கு எதிரான அல்லது பெண்கள் உரிமைக்கான என்ற எந்த புனிதக் காரணங்களும் அவர்களுக்கு இல்லை.

மதம் பிற்போக்கானது, மதச்சடங்குகள் பல அடக்குமுறையின் வடிவங்கள் என்பது தெளிவானது. இஸ்லாம் மட்டுமன்றி கிறிஸ்தவ, இந்து, பௌத்த, யூத என்று அனைத்து மதங்களினதும் தேவை இன்று இல்லாமல் போய்விட்டது. மதங்களுக்கான வரலாற்றுத் தேவை இனிமேல் இல்லை என்று உறுதியாக கூறலாம். இருப்பினும் ஒரு குறிப்பிட்ட மதத்தை கடைப்பிடிப்பதற்கு தடையளிப்பது ஜனநாயகத்துக்கு புறம்பானது. எந்த மதத்தை பின்பற்றவும் விரும்பிய உடை அணியவும் அனைவருக்கும் உரிமை உண்டு. இது ஒவ்வொருவரதும் அடிப்படை ஜனநாயக உரிமை. தடை செய்வது அல்லது மத, உடை அடிப்படையில் உரிமைகளை நிராகரிப்பது ஒடுக்குமுறைகளை அதிகரிக்க மட்டுமே உதவும். ஜனநாயகத்தை நாம் விட்டுக்கொடுக்க வேண்டியுள்ளது என்று ஜோன் ரீட் சொல்வது இதைத்தான். பிரான்சில் ஜாக் சிராக் செய்ததும் இதைத்தான். பிரெஞ்சு தொழிற்சங்க மற்றும் இடதுசாரி அமைப்புகள் இதற்கு ஆதரவழித்தன.

‘அரச கருமங்களில் இருந்து மதத்தை வேறுபடுத்திய வரலாறு கொண்ட பிரான்சில் பாடசாலையில் ஹிஜாப் அணிவதை தடுப்பது நியாயமானதே. அதை தடுப்பது மதம், பொதுமக்கள் நடவடிக்கைகளில் தலையிடும், வரலாற்றைப் பின்னோக்கித் தள்ளும் செயற்பாடு’ என்று பிரஞ்சு தொழிற் சங்கங்கள் வாதிட்டன. ஹிஜாப் போட்டு வந்ததற்காக ஒரு மாணவி பாடசாலையை விட்டு வெளியேற்றப்பட்டதோடு அவர்கள் விதண்டா வாதங்கள் ஒரு முடிவுக்கு வந்தன.

பாடசாலைக்காகவும் அரசாங்கத்திற்காகவும் கதைப்பதா அல்லது வெளியேற்றப்பட்ட மாணவிக்காக போராடுவதா என்ற கேள்வியில் வேற்றுக்கருத்து ஏற்பட முடியாது. தொழிற்சங்கங்களுக்கு அவர்கள் அரசாங்கம் சார்ந்து எடுத்த முடிவு இந்த மாணவிக்காக போராட்டத்தை நடத்த முட்டுக்கட்டையாக இருந்தது. இத்தருணத்தில் ‘புரட்சிகர இடதுசாரிகள்’ என்ற கட்சி மட்டும் அந்த மாணவியின் உரிமைக்காக போராட உடனடியாக முன்வந்தது. அவர்கள் மட்டுமே அரசாங்க தடைக்கெதிரான சரியான வாதத்தை தொடர்ந்து வைத்து வந்தார்கள்.

அரச நடவடிக்கை – தடை முஸ்லிம் மக்களுக்கெதிரான திட்டமிட்ட நடவடிக்ககை அன்றி அவர்களுக்கு பெண்ணுரிமை பற்றி எந்த கவலையுமில்லை என்பதை ஆதாரத்துடன் தோலுரித்து காட்டினார்கள் புரட்சிகர இடதுசாரிகள். இந்தத் தடை வென்றெடுத்த பெண்ணுரிமை எது? என்று கேட்டார்கள். இதன்பின் இவர்கள் முன்னெடுத்த போராட்டத்தை ஆதரிக்க ஏனைய இடதுசாரிகள் கொஞ்சம் கொஞ்சமாக முன் வந்து தாமும் புரட்சிச் சாயம் பூச முற்பட்ட வெக்கக்கேடு நிகழ்ந்தது.

இதே தடை இங்கிலாந்தில் நடந்த பொழுது இங்குள்ள தொழிற்சங்கங்கள் முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்தன. கேள்வியின்றி ஹிஜாப்புக்கு ஆதரவாக தங்களை அவர்கள் வெளிப்படுத்தினர். ஹிஜாப் அணிந்த ஆசிரியை பாடசாலையை விட்டு வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து இந்த பிரச்சனை விவாத மேடைக்கு தள்ளப்பட்டது.

வலதுசாரி மற்றும் மதம்சார் ஒடுக்குமுறைகளில் இருந்து விலகி ஜனநாயக உரிமை என்ற அடிப்படையில் இருந்து தெளிவை ஏற்படுத்துவதன் தேவை இவர்கள் கவனிக்க தவறிய ஒரு முக்கியமான விடயம். கண்மூடி ஆதரவளிப்பது பிற்போக்கான மதசார்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் செயலாக மாறிப்போகும் அபாயத்தை பற்றி இவர்கள் அக்கறை எடுக்கவில்லை. ஜனநாயக உரிமை என்று சுருக்கமாக குறித்தல் ஒரு பெரும் கதையாடல். அந்த கதைக்குள் பல்வேறுபட்ட உரிமைகள் மோதிக்கொண்டிருக்கின்றன. எந்த உரிமையை முன்னிலைப்படுத்துவது என்ற முடிவை இவர்கள் கண்மூடி எடுப்பது கண்டிக்கப்பட வேண்டியதே. இருப்பினும் பிரெஞ்சு தொழிற் சங்கங்கள் போல அல்லாது பாதிக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுக்க உடனடியாக முன்வந்த நடவடிக்கையை பாராட்டித்தான் ஆகவேண்டும்.

கல்வித்துறையில் ஹிஜாப் அணிவது பல்வேறு சிக்கல்களை எழுப்புகின்றது. முகத்தை மூடிமறைத்த ஆசிரியையிடம் இருந்து மாணவர்கள் கற்றுக் கொள்வதால் அவர்களின் கல்வி வளர்ச்சி பாதிக்கப்படுகிறதா? என்ற முக்கிய கேள்வி எழும்புகிறது. மனிதர்களுக்கிடையிலான உரையாடலில் முகத்திற்கான பங்கு ஆசிரிய – மாணவர்களின் நெருக்கம் எவ்வளவு தூரம் கல்வி வளர்ச்சிக்கு உந்துதலாய் இருக்கின்றது போன்ற பல்வேறு சிக்கலான கேள்விகளை எழுப்புகின்றது. இதற்கு சுருக்கமான விடை கிடையாது. ஹிஜாப் அணிவது பல்வேறு தொழில்களை (பெரும் லொறிகள் ஓ ட்டுவது, வழக்கறிஞர் தொழில் உட்பட) செய்வதற்கு தடங்கலாக இருக்கும் என்று பொதுவாக சொல்லலாம். ஆனால் அது ஒரு முழுமையான வரைவு அல்ல. கைகள் இல்லாத ஓவியக் கலைஞர்களையும் கண் தெரியாத பாடகர்களையும் இசைஞர்களையும் உடலின் ஒரு பாகமும் உபயோகமற்று முளை மட்டும் வேலை செய்யும் விஞ்ஞானிகளையும் என்று எத்தனையோ சாதனைகளை சாதித்த மனித குலத்திற்கு சேவை செய்ய ஹிஜாப் பெரும் தடை அல்ல. இருப்பினும் ஒப்பீட்டளவில் ஹிஜாப் அணிவதை முன்னிலைப்படுத்த முடியாது.

எவ்வளவு தூரம் ஹிஜாப் அணிவதற்கான உரிமைக்காக குரல் கொடுக்கிறோமோ அதே அளவு ஹிஜாப் அணியாமல் இருக்கும் உரிமைக்காகவும் நாம் குரல் கொடுக்க வேண்டும். இந்த விடயத்தில் தான் பல இங்கிலாந்து தொழிற்சங்கங்கள் தவறு செய்கின்றன. பல குடும்பங்களில் வற்புறுத்தலாலேயே ஹிஜாப் அணிகின்றனர். அதற்கு எதிராக கல்வி புகட்ட வேண்டியதும் தொழிற்சங்கங்களின் கடமை தான். ஆனால் அதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.

எனவே எவ்வளவு தூரம் ஹிஜாப் அணிவதற்கான உரிமைக்காக குரல் கொடுக்கிறோமோ அதே அளவு ஹிஜாப் அணியாமல் இருக்கும் உரிமைக்காகவும் நாம் குரல் கொடுக்க வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவோம்.

19 thoughts on “Islamophobia – சேனன்

  1. “எவ்வளவு தூரம் ஹிஜாப் அணிவதற்கான உரிமைக்காக குரல் கொடுக்கிறோமோ அதே அளவு ஹிஜாப் அணியாமல் இருக்கும் உரிமைக்காகவும் நாம் குரல் கொடுக்க வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவோம்”

    உங்களுக்கு வேற வேலயே இல்லையா!

  2. சேனன்,

    இதேபோல ஈழத்தில் நடக்கும் யுத்தத்திற்கு ஆயுத உதவிகளி அள்ளீக் கொடுக்கும் இங்கிலாந்து, அமெரிக்க்க நாய்களுக்கும் அப்பாவி மக்களின் சாவுக்கு “மறைமுக” க்காரணமான இந்த நாய்க்கு எதிராகவும் அவர்களின் கால்களை நக்கும் ‘ஜனநாய்’ களுக்கும் உறைக்கும் படியும் ஒரு பதிவு போடுங்கள்!!!!

  3. //..அதற்கு எதிராக கல்வி புகட்ட வேண்டியதும் தொழிற்சங்கங்களின் கடமை தான். ஆனால் அதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை….//

    அடக்கி வாசியுங்கோ! இல்லாட்டி தொழிற்சங்கங்கள் முதலாளித்துவ (G-8) வலையில் விழுந்துவிட்டன என அழகலிங்கம் தமிழரசன் வந்து கத்தப்போறார். அவரின்ர அலம்பலை வாசிக்க அஞ்சு நாள் வீணாக்க வேணும்!!!

  4. சேனனாலும் ஒரு விடயத்தை ஒழுங்காகச் சொல்லிவிடமுடிகிறது.
    வாழ்த்துக்கள்.

    “கிறிஸ்தவ> இந்துஇ பௌத்தஇ யூத என்று அனைத்து மதங்களினதும் தேவை இன்று இல்லாமல் போய்விட்டது. மதங்களுக்கான வரலாற்றுத் தேவை இனிமேல் இல்லை என்று உறுதியாக கூறலாம்.”
    அப்ப தலித் இயக்கத்திற்கான தேவையும் இனிமேல் இல்லையென்று கூறிவிடமுடியுமா?

  5. சர்வதேச பிரச்சனைகள் பற்றி காட்டும் அக்கறையில் ஒரு வீதமாவது வன்னியில் புலிகள் ஆட்பிடிப்பில் காட்டும் கொடூரத்தை அம்பலப்படுத்த காட்டக்கூடாதா? சமூக அக்கறையுள்ளவர்களாக காட்டிக்கொள்ள ஐரோப்பிய அரசியலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் பற்றி சொன்னால்த்தான் அங்கீகாரம் கிடைக்கும் என்ற நினைப்பா? இல்லை நாங்களும் உலகம் படிச்சவங்கள்தானென்று காட்டும் அதிமேதாவிதன அலசல்களா? எங்கட பல்லைக் குத்தி நாங்களே மணப்பதா என்ற புத்திசாலித்தனமா? இல்லாவிட்டால் புலியோட ஏன் வீண்பகையை தேடி இருக்கிற இடத்திலயும் நிம்மதியை இழப்பான் என்ற தந்திரமா? தங்கைக்காக தமையனும்> அக்காவுக்காக தம்பியும்> காதலனுக்காக காதலியும் பிள்ளைக்காக தகப்பனும் புலிகளினால் பலாத்காரமாக சேர்க்கப்பட்டு பயிற்சி கொடுக்கப்படுவதும் அந்தக் குடும்பங்களின் மனக்குமுறல்களும் கதறல்களும் உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா? விஸ்கியும் பிரண்டியும் அடிச்சிட்டு அரசியலும் விடுதலையும் பற்றி சிந்திக்க வசதியானதும் வாய்ப்பானதும் அமெரிக்காவும் ஐரோப்பாவும் தான். இங்க வந்து கள்ளு அடிச்சிட்டு யோசியுங்க அப்பவாவது ஊரில நடக்கிறதுகள பற்றி எமுத வருதா எண்டு பார்ப்பம்.

  6. தலித்தியம் ஒரு மதமில்லை

    ரூபன்: இவர்கலை எதிர்கத்தான் நாமிருக்கிறோம். இன்னும் வரும்!

  7. அன்புள்ள சேனன் அண்ணா அறிவது>
    தலித் மேம்பாட்டு இயக்கமும் ஏன் பெரியாரும் கூட இந்துமதம்தான் சாதியின் மூலம் என்றும் அது அழிஞ்சாத்தான் சாதிஅழியும் எண்டும் சொல்லியருக்கினம்.
    ஆகவே மதங்களுக்கான வரலாற்றுத்தேவை இனிமேல் இல்லவே இல்லையென்று நீங்கள் உறுதியாக ஏலங்கூறும்போது….
    தலித் இயக்கததிற்கான தேவையும் இல்லையென்று வாதிடமுடியுமா என்பதுதான் எனது தாழ்மையான கேள்வி.
    நன்றி.
    வணக்கம்

  8. வாழ்த்துக்கள் தக்சன் இவை கொஞசப்பேர் கள்ளையும் தென்னை பனையையும் மறந்து கன நாளாச்சு. தப்பித்தவறி ஞாபகப்புடுத்தினால் டக்கெண்டு தலித்தியம் கதைக்க வெளிக்கிட்டிடுவனம்.இதெல்லாம் இருப்புக்கான இருப்பு பாருங்கோ.

  9. ஓமோம் நீங்கள் இலங்கையிலயிருந்தே கள்ளை இறக்குவிச்சு குடிச்சு நாட்டுப்பற்ற தக்கவைச்சிருந்தாக்கள் எண்டது தெரியும்.
    அது கிடக்க.
    ஒவ்வருத்தரும் தங்களுக்குத் தெரிஞ்சதை தான் எழுதேலும் கதைக்கேலும். சும்மா பாட்டுக்கு எதிர்பாட்டு பாடாமல் உருப்படியா எழுதுங்கோ. வன்னியில நடக்கிற பிரச்சினையை லண்டனிலஇருந்து சேனன் எழுதேலாது. அதோட சேனன் எழுதிறது அனாவசியாமான செய்தியெண்டா மட்டுந்தான் சேனனோடடும் சத்தியக்கடதாசியோடயும் கோவிக்கலாம்.
    மற்றும்படி புதுவிசயங்கள் வரட்டும்.

    புலி ஆட்கடத்திறதும் கொல்லிறதும் ஒண்டும் புதுவிசயமில்ல.நாங்கள் திரும்ப திரும்ப ஒப்பாரிவைச்சு என்னசெய்யப்போறம். பிலத்துக்கத்தினாலும் எடுபடாது. ஏனெண்டால் புலியை எதிர்த்துஆகப்பிலத்து கத்திறாக்கள் அதவிட மோசமாயிருக்கினம். அதால சும்மா கத்திறதும் ஒண்டும் எடுபடாது. சாவுக்கு ஆருக்குத்தான் விருப்பம்? ஆனாலும் ஏதாவது பிரயோனமா செய்து செத்தாலும் பரவாயில்லை. யாரவது வழியிருந்தா சொல்லுங்கோ…

  10. 28/07/2007 பிபிசி தமிழ் செய்தி கேட்டனீங்களோ? யாரோ ஒரு வெள்ளையன் வன்னியில் ஆள்பிடிக்கும் அநியாயத்தை தன்னால் முடிந்தவரை இங்க வந்து நின்டு அலசி ஆராய்ந்து தனக்கு கிடைத்த ஆதாரங்களோட அம்பலப்படுத்தினார். நீங்கள் உங்க நின்று சனத்துக்காக என்னத்தை செய்து கிழிக்கிறியள்? சும்மா தலித்தியம்> கொம்யூனிசம் பேசுரதால இங்க கஸ்ரபடுரவயின்ற> அடக்கி ஓடுக்கப்படுகிற உங்கட மூலதனமான(?) சனத்தின்ர எந்த பிரச்சனைக்கும் ஏதாவது ஒரு தீர்வை தரலாமெண்டு நீங்கள் மனதார நம்புறீங்களா? குறைந்த பட்சம் ஒரு ஆறுதலையாவது தரலாமெண்டு நீங்க நம்புறியள் எண்டால் உங்கட நம்பிக்கைக்காக உங்கட அப்பாவித்தனமான முயற்சிகளுக்கு ஒரு அனுதாபத்தையாவது தர முயற்சிக்கலாம். உண்மையில் இதெல்லாம் பிழைப்புவாதம் அல்லது சுயவிலாச தம்பட்டங்களாக கருதப்படக்கூடிய பிரச்சாரங்களாக இருந்துவிடக்கூடாது என்கிற ஏக்கம் என்னுள் இருப்பதாலேயே இங்கு வந்து எனது கருத்துக்களையும் சொல்லலாமென நினைக்கத் துர்ண்டுகிறது. களத்தில் நின்று நியாயங்களுக்காக போராட முடியாத அளவுக்கு எமது போராட்டம் திசை தவறி> தறிகெட்டுப்போய்விட்டதற்கு சுயசிந்தனையுடைய ஓவ்வொருவரும் ஒருங்கிணைய முடியாமல்போய்விட்டது முக்கியகாரணம். போராட்டத்தின் புறச்சூழ்நிலைகளை தமது சுயநலன்களுக்காக பயன்படுத்திய பிரகிருதிகள் நிறைந்த சமுதாயம் எங்களுடையது என்பது மறுக்க முடியாதது என்கிற அபிப்பிராயம் என்னுள் உள்ளது. 80க்களில் 25 லட்சமாக இருந்த எமது இருப்பு 15 லட்சத்துக்கும் குறைவானதாக மாறிவிட்ட உண்மையை யாரறிவார். இன்று 25 வருடங்களில் எமது தொகை இயற்கையின் நியதிப்படி 40 லட்சத்திற்கு அதிகமாக இருந்திருக்க வேண்டும். தப்பிப்பிழைத்து அல்லது சமூகத்தின் அழிவில் சுய பச்சாதாபம் சொல்லி பொருளீட்ட> தன்னை மேம்படுத்த அகதி வேடமிட்டவர்களின் தொகை 100க்கு 99 வீதம் என்பதை உங்களில் யாராவது மனட்சாட்சியின்படி மறுக்க முடியுமா? இனத்துக்கு> சமூகத்திற்கு விடுதலை வேண்டுமெனில் தளைகளை உடைத்தெறிய வேண்டுமேயொழிய தஞ்சம் கோரிநின்று கொண்டு வழி சொல்வ முனைவதெல்லாம் இருப்புக்கும் பிழைப்புக்கும் முகவரி தேடும் கீழ்நிலை உயிர்வாழ்தலே ஒழிய வேறில்லை. தவறுகளையும் தடம்புரழ்வுகளையும் அவ்வப்பொழுதில் சுட்டவும் அதற்கெதிராக போராடவும் முனைந்திருந்தால் இந்த முட்டாள்களிடமிருந்து உண்மையான விடுதலையை பெற்றவர்களாக நாமும் எமது சந்ததியும் வாழ்திருப்போம். முட்டாள்களின் கைகளில் தமது தலைவிதியை தாரைவார்த்த சமூகம் தானும் உருப்படாது; எதிரியையும் புரிதலுக்குட்படுத்தாது.

  11. சரியாகச் சொன்னீர்கள் சேனன்! வாழ்த்துக்கள்!!

    நூஃபா இஸ்மாயீல், துபை, ஐக்கிய அறபு அமீரகம்.

  12. தக்சன் உங்கட கோபங்களில இருகிற நியாத்தைவிட அப்பாவித்தனமே அதிகம். வெளிநாடுகளில் உல்லாசஅகதியளா வாழ்ந்துகொணடிருக்கிறவையிட்ட நீங்கள் அதிகம் எதிர்பார்க்கிறியள். உங்களுக்கு இப்படி இணையங்கள்ள ஒளிச்சிருந்து விலாசம(?) எழுப்பிறவையத்தான்தெரியும். மற்ற உலகம் தெரியாது. ஏதோ இணையத்துக்கால சில விசங்களாவது நடக்குதெண்டு பார்க்கிறது புத்திசாலித்தனம். இன்னும் இப்பிடி இருக்கிறவைய கொண்டு எதாவது செய்யலாமா எண்டுயோசிக்கிற பொறுப்பான செயல். அதவிட்டிட்டிட்டு உப்பிடிபோட்டடிக்கிறதால ஆகப்போறது ஒண்டுமில்ல. யோசியுங்கோ

  13. ராஜன்,

    தக்சன்மாதிரி கடைசியில் தங்கட பிழைப்பில மண்விழேக்க தன்னைத்தவிர எலோருமே பிழை எண்ட மாதிரி அலம்பிறவை கூட்டம் கூட்டமா இருக்கினம். அவையள் புலிக்கு சாதகமா ஆராவது எழுதினால் வெள்ளக்காரன் ஏதோ ‘புடுங்கும்’ எண்ணத்தோட எழுதுறான் எண்டு கதை அளப்பினம் ஆனால் புலிக்கெதிரா எழுதினா உடன ‘பி.பி.சீ பாத்தனியளோ கேட்டனியளோ …எண்டு விடுவினம் கதை பாருங்கோ சொல்லிமாளாது. ஆனாப்பாருங்கோ பி.பி.சி காரனை சுட்டதுக்கு ஒருகதையிமில்ல பாருங்கோ!
    மற்றது நீங்கள் சொல்லுறமாதிரி அப்பாவித்தனம் இல்லை அவரிட்ட இருக்கிறது ‘சந்தில சிந்து பாடுறது’ பாருங்கோ! இந்த ‘சிந்து’ பாட்டிக்காறர் அந்தக்காலத்தில வெவ்வேற பெரோட அரசியல் படிப்பு க்கூட்டம் நடத்தினவை இப்ப வலைப்பின்னலில குழப்பியடிக்கினம்.
    இணயத்தில ஒளிச்சிருந்து (வன்னியில இருக்கிற மாதிரி) எழுதிறவை எண்டு ஆரசச்சொலுறியள்?

  14. புரிகிறது ராஜன். உண்மையில் இவர்களில் கோவிப்பதில்லை. ஆனால் இவர்களால் இன்னும் அதிகம் செய்யமுடியும் என நம்புவதாலேயே ஆதங்கத்தை கொட்டிக்கொள்கிறேன். சோபாசக்தி> சுகன் போன்றோரில் நம்பிக்கையுண்டு. ஓரளவாவது தங்கள் எழுத்தாற்றலை சமூகப்பார்வை கொண்ட சிந்தனையுடன் இணைத்துள்ளார்கள். இது இன்னமும் உக்கிரமாக உண்மைகளை வெளிக்கொணர பயன்படவேண்டும். தள நிலைமைகள்> உண்மைகள் புலம்பெயர்ந்தவர்களுக்கு உணர்த்தப்படல் வேண்டும். வெறும் மாயைக்குள் சிக்கி தங்கள் உழைப்பையும் இழந்து மற்றவர்களின் உயிர்களையும் பலியாக்காது அடுத்துவரும் சந்ததியாவது ஆரோக்கியமான வாழ்வை அனுபவிக்க விட வேண்டும். அதற்காக அடிமைவாழ்வை பழகிக் கொள்ள வேண்டுமென்று அர்த்தமல்ல. வாழ்வின் சுதந்திரம் யாருக்கும்> எதற்கும் பறிபோய் விடக்கூடாது. அடிமைத்தளைகள் சரியான இடத்தில் சரியான வழியில் உடைக்கப்பட வேண்டும். ஒரு விலங்கை ஒடிக்க ஒரு விலங்கால் கட்டுண்டு கொள்ளக்கூடாது. ஆயுதங்களை விட எழுத்துக்கள் வலிமையானவை என நம்புவதாலேயே இந்த எதிர்பார்ப்பு. நன்றி.

  15. இன்மை பிரதிகள் விரைவில் வெளிவர இருக்கிறது.
    இன்மை.நெட் பார்கவும்.

    மதங்களுக்கான வரலாற்றுத்தேவை இனிமேல் இல்லையென்று
    கூறுவதும் மதம் இல்லை அதனால் எதிர்ப்பு தேவை இல்லை என்பதும் ஒன்றல்ல.
    ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் வரைக்கும் அவற்றுக்கு எதிர்ப்பு இருந்தே ஆகும்.
    மதம் பற்றிய உரையாடல்/ ¡¢சர்ட் டவ்கின்ஸ் இன் ‘கொட் டில்லுசனின்’ விமர்சனம் வரும் இதழில் பார்க்க.

  16. ஹிஜாப் தொடர்பான விடயத்தினில் வரலாற்றுப் பார்வை முக்கியத்துவப்படுவதோடு அதன் அழகியலும் முக்கியத்துவப்படுவப்படுத்தப்பட வேண்டும் என நினைக்கிறேன்.

    மதங்கள் அற்ற உலகு என்பதன் பின்னால் என்ன வகைத்தத்துவம் ஆட்சியேறப்போகிறதோ….சில விடயங்கள் இன்னும் கதைப்பதற்கு அழகுதான் மணி…நடைமுறைக்கு…

  17. சேனன்>
    இன்மை மூன்றாவதும் வெளிவந்திருக்கலாம். ஆனால் ஒன்றுமே எங்களுக்கு கிடைக்கவில்லை. பிரான்ஸில் எங்கு பெற்றுக்கொள்ளலாம் என்பதை தயவுசெய்து அறியத்தாருங்கள்..

  18. If any of you guys are genuinely interested in the truth about religions and their actual role on earth and their current function,get hold of books by Idries Shah as opposed to Richard Dawkins’ so-called ‘scinetific’ analysis, His works are the most contemporary take on Humanity’s destiny. You will also realise believing in a higher being is not opposed to progress or the same as holding on to traditions that are out of date and irrelevant, sorry, i haven’t worked out the use of the Tamil font.
    rajan (another)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *