என் கதை

கட்டுரைகள்

கே.டானியல்

எழுத்து எனக்குத் தொழில் அல்ல, பொழுதுபோக்குமல்ல. ஏறக்குறைய நான் எழுதத் தொடங்கிய காலத்தை 35 வருடங்களுக்கு உட்படுத்தலாம். இந்த 35 வருடகால எல்லைக்குள் சுமார் 10 ஆண்டு காலத்தைச் சிறுசிறு மன ஆசைகளுக்காகவும், விளம்பர மோகத்துக்காகவும் இவைகளோடு ஒட்டிய காரண காரியங்களுக்காகவும் செலவு செய்தேன் என்று சொல்வதில் வெட்கப்பட வேண்டியதில்லை.

கிராமத்தில் பிறந்து கிராமத்திலேயே வாழ்ந்த எனக்கு கிராமப்புறங்களையும், கிராமப்புற மக்களையும் சந்தித்துப் பேசிப் பழகிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் கிடைத்தது. அத்துடன் சுமார் 2O வயது வரையிலே நான் ஏற்றுக்கொண்ட அரசியல் வேலைகள், கிராமப்புறங்களுக்கு இன்றியமையாததாயும் இருந்தமையால் எனது பெரும்பகுதி கவனத்தையெல்லாம் அதில் வைத்திருக்க வேண்டியதாயிற்று. அது கிராமப்புறங்களில் நண்பர்களையும் தேடிக்கொள்ள உதவியாகவும் இருந்தது.

என் கதை/கே.டானியல்/satiyakadatasi

கிராமப்புறத்து மக்களிடம் கற்றுக்கொள்வதற்கு எவ்வளவோ இருந்தன. அரசியலைப் பொதுமக்களிடமிருந்தே கற்றுக்கொள்ளவும், அவர்களிடமே அவைகளைப் பரிசோதனை செய்து சரியானவைகளை ஏற்று, தவறானவைகளை நிராகரித்தும் தான் அரசியல் அனுபவங்களைப் பெறவும் வேண்டும்.

அன்று தேசியரீதியாகவும், சர்வதேசரீதியாகவும் சரியான அரசியல் போதனைகளைப் பெற்றுக்கொள்வதற்கான தமிழ் நூல்கள் மிகவும் அருந்தலாகவே இருந்தது. இந்த நிலமை, நாட்டையும், மக்களையும், கிராமங்களையும் படித்து அதன் மூலம் பெற்றுக்கொண்ட அனுபவங்களையே அரசியல் முதலீடாகக்கொள்ள எனக்கு ஏற்பட்ட வாய்ப்பு, என்னை மேலும் மேலும் கிராமப்புறங்களை ஊடுருவிப் பல்வேறு பட்ட அனுபவங்களை மேலும் மேலும் சம்பாதித்துக்கொள்வதற்கு உற்சாகத்தை தந்தது எனலாம்.

இன்று உலகின் பல பகுதிகளின் அரசியல் – இயக்க அனுபவங்கள் ஆயிரக்கணக்கில் நூல்வடிவு பெற்றிருக்கின்றன. இவைகளையெல்லாம் அரைஅவியலாக விழுங்கிவிட்டு, இவைகள் யாவும் அந்தந்த நாட்டு நிலைமைக்கும், பிரதேச நிலைமைகளுக்கும், உற்பத்திமுறை அடிப்படை உறவுகளின் தன்மைக்கேற்பவும் நடைமுறைப்படுத்தப்பட்டன என்பதனை மறந்து அவைகளை அப்படி அப்படியே நமது நாட்டின் அரசியலாக நிர்ணயித்துக் கொண்டு சாதாரண மக்களைப் பலவிதமான தத்துவ விசாரங்களுக்கு உட்படுத்தும் காலம் போலல்ல எனது அரசியல் பிரவேசகாலம்.

நகர்ப்புற மனிதனின் வாழ்க்கைக்கும், கிராப்புற மனிதனின் வாழ்க்கைக்கும் பல்வேறு விதங்களிலான வேறுபாடுகள் உண்டு. நகர்ப்புற மனிதர்களின் வாழ்க்கையை வகைக்கு ஒன்றோ இரண்டோ விதங்களுக்குள் அடக்கி விடலாம். ஆனால் கிராமப்புற மனிதர்களின் வாழ்க்கையைக் குறிப்பிட்ட வகைகளுக்கு உட்படுத்தி விடுவது கடினமான காரியமாகும். அன்றாட வயிற்றுப்பாட்டுக்காக அவன் எடுக்கும் வழி முறைகளைப் பலவிதங்களுக்குள்ளும், படுத்தெழும்பும் குடிசைக்காக அவன்படும் அவஸ்தைகளையும், குந்தியிருக்கும் நிலத்திற்காகவும், பலவிதங்களில் அவனுக்கு மேலாக இருக்கும் வழிவந்த ஆதிக்க அடக்கு முறைகளுக்குள் அவன் அழுந்திக் தவிக்கும் விதங்களையும், இன்னும் வாழ்க்கையோடு ஒட்டிய ஏனையவைகளுக்காக அவன்படும் அவஸ்தைகளையும் வகைக்குப் பலநூறுகளாகப் பார்க்க முடியும். இவைகளில் ஒவ்வொன்றையும் தனித்தனியாகவே கிரகித்து, இந்த வாழ்க்கைக்கான காரணகாரியங்களைக் காணமுயல்வதும், கண்டவற்றை அவர்களிடமே ஒழுங்குபடுத்திக் கூறுவதும் இலேசுபட்ட ஒன்றல்ல என்பது எனது அனுபவங்கள் தந்த உண்மையாகும்.

பள்ளிப் படிப்பை 5ம் வகுப்புடன் முடித்துக்கொண்டிருந்த எனக்கு அதற்கு உ ட்பட்ட அளவுக்கு எழுதவும், பேசவும் தெரிந்திருந்தது. எந்தவித வேற்று மொழியையும் படிக்க, அல்லது குறைந்தபட்சம் பேசிக்கொள்ளவாவது எனக்கு ஆர்வம் பிறக்கவில்லை. இதற்கான காரணத்தைச் சுருக்கத்தில் கூறிவிட வேண்டுமானால் எனது குடும்பதின் வறுமைநிலை. இன்னும் கூறப்போனால் நாளொன்றுக்கு ஒருநேரச் சோற்றுக்கே வழியில்லாத நிலை, சாதி அடக்கு முறைகளுக்கு உட்பட்டு பட்ட அவஸ்தைகள். இவைகளுக்காக ஏங்கி ஏங்கிச் செத்துக்கொண்டிருக்கும் நேரத்தைத் தவிர மிகுதி நேரம் கிடைக்கவில்லை என்றே கூறலாம்.

எனது குடும்பத்தொழில் சீலை வெளுப்பு. இதைச்சற்று நேராகச் சொன்னால் சாதியில் நான் வண்ணான். அதைவிடவும் ‘தமிழர்’களுடைய அழகு தமிழில் குறிப்பிடுவதானால் ‘கட்டாடி’ என்று சுருக்கி விடலாம். இதை ஏன் குறிப்பாக நான் கூறவேண்டும்? சமூக அடக்குமுறைக்குள் மிகவும் கீழ்ப்படியில் இருக்கும் இந்தக் கட்டாடிகள் எவ்வளவு தூரத்திற்குச் சாதியின் கொடுமையை அனுபவித்திருக்க முடியும் என்பதனை எனது வாசர்களை அறியவைப்பதற்காகவும், ‘இந்தாள் நெடுகச் சாதியைத்தான் எழுதுது, ஏன் இப்படிச் செய்யுது?’ என்று என்மீது கேலிக்கீதம் பாடுபவர்களுக்கு நான் ஏன் இப்படி எழுதுகிறேன் என்பதை இவர்கள் சற்றுத் தொட்டுப் பார்க்க வேண்டும் என்பதற்காகவுமேயாகும்.

“நீர் சொல்லுற விஷயம் முந்தி இருக்கேல்லை எண்டு நாங்கள் சொல்லேல்லை. இப்ப தமிழருக்கை அதொண்டுமில்லை” ஒருவிதமான நசியல் நியாயம் சொல்லுபவர்கள்தான், நான் வாழும் யாழ்ப்பாணத்தில் பெரும்பான்மையினராக இருக்கின்றனர். இந்தப் பெரும்பான்மையினரில் ஒருவர் தன்னும் தள்ளுபடி இல்லாமல் எல்லோர் வீட்டிலும் அன்றாட வாழ்க்கையோடு சாதி சங்கமமாகி நிற்பதைப் பல உதாரணங்கள் மூலம் விளங்கிக்காட்ட முடியும். ஆயினும் இக்கட்டுரை வேறு திசைக்குத் திரும்பிவிடும். என்பதனால் அதை விட்டுவிடுகிறேன்.

ரஷ்ய எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கியினுடைய நூல்கள் பல தமிழில் வந்திருந்தமையால் அவைகளில் சிலவற்றை நான் படித்தேன். முதன் முதலில் கார்க்கியின் ‘தந்தையின் காதலி’ என்ற நாவலையும், ‘அமெரிக்காவிலே’ என்ற அவரின் கட்டுரை நூலையும் படித்தேன். விஷயங்களைச் சொல்லும் போது கார்க்கியால் ஆளப்பட்ட முறைகள், அவைகளில் இருந்த எளிமை எனக்கு மிகவும் விருப்பமாக இருந்தது. ‘தந்தையின் காதலி’ என்ற அவரின் நாவலைப் படித்தபோது ஏற்பட்ட உந்தலினால் ‘வீராங்கனைகளில் ஒருத்தி’ என்ற சிறுகதை ஒன்றினை எழுதினேன். இதுவரை அக்கதை நான்கு தடவைகள் மறுபிரசுரமாகியுள்ளது. என்றுடைய சிறுகதைகளில் எனக்குப் பிடித்தமான முதல் கதை அது. அக்கதையில் என்னால் பாவிக்கப்பட்ட சொல் பிரயோகமுறையும், எடுத்துக்கொள்ளப்பட்ட பொருளின் புறப்பாடும் எனது வேறெந்தக் கதையிலும் இருப்பதாக நான் கருதவில்லை.

மாக்ஸிம் கார்க்கியின் ‘தாய்’ நாவலை நான் படித்தேன். நீண்ட காலமாக அது என்மனதில் கிடந்தது. ரஷ்ய நாட்டின் விடுதலைக்கான நடைமுறைச் செயல்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அந்தத் தாயைப்போன்று நமது நாட்டினதும், சமூகத்தினதும் விடுதலைக்காக அன்றாட வாழ்க்கையோடு சேர்ந்து வழி நடத்தக்கூடிய ஒருபாத்திரம் ஏன் பிறக்கக்கூடாது என எண்ணினேன், தேடினேன், சம்பங்களைச் சேகரித்தேன். அதே தாய்போன்று எனது கண்ணுக்கு முன்னால் நடமாடித் திரிந்த ஒரு மனிதரையும் பிடித்துவிட்டேன். அவரின் நடைமுறை வாழ்க்கை முறைகளை அவதானிக்க, அவர் பேசும் சொல் முறைகளைச் சேகரிக்க, அவரின் உடை – நடை பாவனைகளை அறிந்து கொள்ள, மொத்தத்தில் அவரைச் சரியானபடி நான் படித்துக்கொள்ள சுமார் மூன்று ஆண்டு காலத்தைக் கழித்தேன்.

அவருடைய யாழ்ப்பாண நடைமுறை வாழ்க்கையோடு மாக்ஸிம் கார்க்கியின் தாயையும் சேர்த்துக் கணக்கிட்டு, சமப்படுத்தி, நான் கற்றுகொண்ட அனுபவங்களையும் சேர்த்து “இராசாண்ணர்” என்ற அவரை “ஐயாண்ணர்” ஆக்கினேன். “பஞ்சமர்” என்ற நாவல் பிறந்து விட்டது. யாழ்ப்பாணத்து வாழ்க்கைமுறை, யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கு, யாழ்ப்பாணத்துச் சம்பிரதாயங்கள், யாழ்ப்பாணத்து உடை நடை பாவனை, யாழ்ப்பாணத்து வீடு வாசல் அமைப்பு, யாழ்ப்பாணத்து விவசாய வாழ்க்கை வளர்ச்சி, யாழ்ப்பாணத்து அரசியல் நடமுறைகள், யாழ்ப்பாணத்து மண்ணின் அவலங்கள், வீழ்ச்சிகள், எழுச்சிகள் ஆகியவற்றில் எதையுமே பிற நீங்கலாகி நிற்கவிடாமல் பஞ்சமரில் சகலதையுமே உள்ளடக்கியதில், நான் கார்க்கியையே வழிநடத்தல்காரனாக ஏற்றுக்கொண்டுள்ளேன்.

ஆயினும் பஞ்சமரில் என்னால் பிறப்பிக்கப்பட்ட பாத்திரங்களில் யாழ்ப்பாண மண்ணின் இயல்புகளுக்கு மாறான பல குறைபாடுகள் இருப்பதை இப்போது என்னால் உணரமுடிகிறது. இதற்குப் பின்னாலும் எனக்கு இப்படி ஒரு நாவல் எழுதும் வாய்ப்புக் கிட்டுமோ என்ற ஐயப்பாட்டால், யாழ்ப்பாண மண்ணில் நடந்த, நான் பார்த்த, நான் அறிந்த என்னால் அறியப்பட்டவர்கள் அறிந்த பல சம்பங்களைத் திணித்ததின் மூலம், நாவல் என்ற உருவத்துக்கப்பால் “பஞ்சமர் ஒரு சம்பவக்கோர்வை” என்ற குற்றச்சாட்டை மற்றவர்கள் சுமத்த வாய்ப்பளித்திருக்கிறேன் என்றே கூற வேண்டும். இந்தப் பஞ்சமர் நூலுக்குப் பின்பு “உருவம் என்பது எடுத்துக்கொள்ளப்படும் கருப்பொருளாலும், அதை வெளிக்கொணர்வதற்கான ஆள்வினாலும் தன்போக்கிலேயே தான் அமைவதாகும், இவைகள் தன்னிச்சையாகவே இந்த உருவம் என்பதனை அமைத்துக்கொள்கின்றன” என்ற கருத்துக்கு நான் வந்துவிட்டேன்.

பஞ்சமருக்குப் பின்னால் என்னால் எழுதப்பட்ட ‘கோவிந்தன்’, ‘அடிமைகள்’, ‘கானல்’, ‘பஞ்சகோணங்கள்’, ‘தண்ணீர்’ ஆகியவைகளும், ‘முருங்கையிலைக்கஞ்சி’, ‘மையக்குறி’, ‘சொக்கட்டான்’ ஆகிய தொடர் நாவல்களும் உருவத்தைப் பொறுத்தமட்டில் எனது பஞ்சமரின் பிறப்பிலிருந்து அந்த வழியைப் பின்பற்றியவைகளேயாகும்.

பஞ்சமரில் 35க்கு மேற்பட்ட பாத்திரங்களும், கோவிந்தனில் 20க்கு மேற்பட்ட பாத்திரங்களும், அடிமைகளில் 40க்கு மேற்பட்ட பாத்திரங்களும், கானலில் 30க்கு மேற்பட்ட பாத்திரங்களும், பஞ்சகோணங்களில் 28க்கு மேற்பட்ட பாத்திரங்களும் வருகின்றன. இவைகளில் உலாவிவரும் ஒவ்வொரு பாத்திரங்களின் இயல்பான முறைகளைக் கவனிப்பதில் நான் மிகவும் கவனமாகவே இருந்துவந்துள்ளேன். ஆயினும் எனது கவனத்திற்கு அப்பாலும் சில பாத்திரங்கள் சென்றுள்ள தவறுகளுக்குப் போலித்தனமான சமாதனங்களை சொல்வதைவிட அவைகளை என் தலைமையிலே சுமத்தி விமர்சித்துக் கொள்ள நான் தவறுவதில்லை.

ஒன்றை எழுத முற்படும்போது அந்த ஒன்று என்ன என்ற கேள்விக்கு முடிவுகட்டிக் கொள்வதோடு அந்தப்பிரச்சனை பின்பு பெரிதாக இருப்பதில்லை. நான் எழுத முற்படும் அந்த அடிக்கரு அல்லது நாதம் முன் முனைப்பு பெறுவதற்கான பிரதேசங்களையும், பாத்திரங்களையும், அந்த அடிநாதம் மனதுக்குள் வருவதற்கான சந்தர்ப்ப சூழ்நிலையை உண்டாக்கிய பின்னணியைச் சுற்றிச் சுற்றியே சேகரித்துக்கொள்கின்றேன். அத்தோடு அந்தப் பின்னணியில் வதியும் மனிதர்களைப் படிக்க முயல்கின்றேன். பெரும் பகுதி நேரத்தை அதிலேயே செலவு செய்கிறேன். இந்தவேளை அந்தப் பின்னணியில் வசிக்கும் மக்களின் பேச்சு முறைகளைக் கவனிக்கின்றேன். அந்தப் பேச்சுவழக்குகளுக்கிடையே இருக்கும் மிகவும் செறிவான சொல் தொடர்களை உள்வாங்கிக்கொள்வதில் நான் என்றும் தவறியதில்லை.

ஒரு நாவலுக்குத் தலைச்சனாகக் கொள்ளப்படும் ஒரு பாத்திரம் சகல நிறைவுகளும் கொண்ட அப்பழுக்கற்ற பாத்திரமாக இருக்கவேண்டும் என்பது (சட்டப்படி சொல்லப்படாது விட்டாலும்) இதுகாலவரை வழிவழி வந்த ஒன்றாகும். எனது நாவல்கள், சிறுகதைகள் சகலத்திலும் இது மீறப்பட்டுள்ளது. இப்போது நடைமுறையிலுள்ள சமூக அமைப்புக் காரணமாக எல்லோர் மீதும் தன்னாதிக்கம் செய்யக்கூடிய தீய பழக்கவழக்கங்களிலிருந்தும் எனது பாத்திரங்களை நான் விடுவிப்பதில்லை. தனி ஒருமனிதன் மேல் சகல இலட்சணங்களையும் ஏற்றி இவர்தான் இந்நாவலின் கதைத்தலைவன் என்று யாரையும் நான் குறிகாட்டுவதில்லையாயினும், சிலபாத்திரங்கள் இயல்பாகவே அந்தத் தலைச்சன் அந்தஸ்துக்கு உயர்ந்து விடுகின்றன என்பதை வைத்துக் கொண்டு பார்த்தாலும் கூட, பஞ்சமரின் ஐயாண்ணரும், போராளிகள் காத்திருக்கின்றனரின் சந்தியாவும் கோவிந்தனின் எதிர்மறைக்கதா அந்தஸ்தைப் பெறும் சண்முகம்பிள்ளையும் அடிமைகளின் கந்தனும், கானலில் ஞானமுத்துப்பாதிரியாரும், பஞ்சகோணங்களின் சுப்பையை வாத்தியாரும் பல வேறுபட்ட குறைபாடுகளுக்கு உட்பட்டவர்களாகவே இருக்கின்றனர்.

இதை நான் வேண்டுமென்றே செய்கின்றேன் என்பதுதான் பலரின் குற்றச்சாட்டு. இதற்கு நான் கூறும் பதில் “இந்தச் சமூக அமைப்பில் எந்த ஒரு மனிதனும் நிறைவானவனாக இருக்கவே முடியாது!” என்பதுதான். பஞ்சமரின் ஐயாண்ணார் ஒரு கள்ளுக்கடையின் வாடிக்கைகாரராகவே பிறப்பிக்கப்படுகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் அவர் சூது விளையாடுவதும், வேறோர் சந்தர்பத்தில் அவர் குடிகாரர்களுடன் கூடிக் கூழ் காய்ச்சிக் குடித்து மகிழ்வதும், பல சந்தர்பங்களில் அவர் கொச்சைகள் பேசி வம்பளப்பதும் பலருக்குப் பிடிக்கவில்லை. “ஒரு கதைத்தலைவனை இப்படிச் சீர் கெட்டநிலைக்கு உட்படுத்தலாமா?” என்று என்னிடம் கேட்டவர்களும், விமர்சனம் எழுதியவர்களும் உண்டு. இவர்களுக்கெல்லாம் நான் அப்போது சொன்ன மொட்டையான பதில் “எனது ஐயாண்ணர் அப்படிப்பட்டவர்தான்” என்பதுதான்.

அதே போன்ற இன்னொரு கேள்வியையும் பலர் எழுப்பினார்கள்.“பஞ்சமரில் வரும் உயர்ஜாதிப் பெண்கள் எல்லாம் ஒழுக்கம் கெட்டவர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்களே! ஆனால் அதில் வரும் பஞ்சமப்பெண் ஒருத்தியைத் தன்னும் அப்படிச் சித்தரிக்கவில்லையே ஏன்?” இதுதான் அந்தக் கேள்வியாகும். “என்னுடைய பஞ்சமரில் வந்த கமலாம்பிகை அம்மாளும், மாம்பழத்தியும் அப்படிப்பட்டவர்களாகப் பிறந்து விட்டதாக நீங்கள் ஏன் இப்படி வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்கிறீர்கள்? நான் பஞ்சமரைப் படைத்தது சகலவசதிகளும் கொண்ட கமலாம்பிகை அம்மாளினதும் மாம்பழத்தினதும் ஒழுக்கக் கேட்டுக்கான பெருஞ்சுகபோக ஏகபோகத்தை அம்பலப்படுத்துவதற்கே அன்றி, கொதிக்கும் வயிற்றுக்காக உடலையே விற்றுக்கொள்ளும் சூழ்நிலைகளிலும் தங்களைத் தாங்களே கட்டி அவிழ்த்துக் கொள்ளும் பஞ்சைப் பெண்களை அம்பலத்தில் கொண்டுவருவதற்காக அல்ல! இது எனது வேலையுமல்ல!” என்றுதான் பதில் சொன்னேன்.

“போராளிகள் காத்திருக்கின்றனர்” என்ற எனது நாவலில் சந்தியா என்ற வயோதிபனை நாவல் முடிவுவரை கொண்டுவந்திருக்கிறேன். அந்தச் சந்தியாதான் கதாநாயகன் என்று பலர் கூறுகிறார்கள். “கோவிந்தன்” என்ற எனது அடுத்த நாவலில் “கோவிந்தன்” என்ற ஒரு நாயையும், கோவிந்தன் என்ற ஒரு சீவல் தொழிலாளியையும் கொண்டு வந்திருக்கிறேன். கோவிந்தன் என்ற நாயினைக் கடைசி வரை கொண்டு வந்தமையால் அதையே கதாபாத்திரமாகக் கொள்கிறார்கள். சீவல்காரக் கோவிந்தன் இடையே வந்து இடையே போய்விடுகிறான். ஆனால் இந்த இரு கோவிந்தன்களில் யார் கதைத்தலைவன் என்பதை நான் தீர்மானிக்கவில்லை. வாசகர்களே அதைத் தீர்மானித்தார்கள்.

போராளிகளில் வந்த சந்தியாவும், கோவிந்தனில் வந்த இரு கோவிந்தன்களும் பல குறைபாடுகளுக்குட்பட்டவர்களாகவே இருக்கின்றனர். “அடிமைகள்”என்ற எனது அடுத்த நாவலில் ‘கந்தன்’ என்ற பாத்திரத்தை மூளைத் தெளிவற்ற வெருளியாகவே படைத்தேன். ஆனால் அதே வெருளிக் கந்தன் தான், அடிமைகளின் தலைவனாகி விட்டான். அந்தக் கந்தனை போர்த்தேங்காய் அடிகாரனாக, சேவலடிக்காரனாக, இன்னும் பல தாழ்ந்த செயல்பாடுகளுக்கு உட்பட்டவனாக ஆக்கிவிட்டிருக்கிறேன்.

“கானல்” என்ற எனது அடுத்த நாவலில் ‘ஞானமுத்தர்’ என்ற ஒரு பாதிரியாரைப் படைத்தேன். கிறிஸ்துவத்தைப் பரப்புவதன் மூலமாக சமூக அமைப்பு முறைகளையே தகர்த்து விடமுடியுமென்று அவர் நம்பினார். ஆனால் அவரால் அதைத் சாதிக்க முடிந்ததா? அவரிடம் இருந்த குறைபாடுகளே அவரைச் சமூக அவலங்களுக்கு இட்டுச் சென்றதைக் காட்டியபோது அவரைப் புனிதமானவராக ஆக்க எனது பேனாவுக்கு முடியவில்லை.

“பஞ்ச கோணங்கள்” என்ற நாவலில் சுப்பையா வாத்தியாரைப் பிறப்பித்தேன். இன்றைய அரசியல் சூழ்நிலையில் சரியானதற்கும் பிழையானதற்குமிடையே அவர்படும் அவஸ்தையைச் சித்தரிப்பதில் அந்தப் பாத்திரத்தைப் புனிதனாக்கிவிட என்னால் முடியவில்லை. எம்மையும் எம்மைச் சுற்றியும் சதா பல்வேறுபட்ட சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் நாளாந்த நிகழ்வுகளுக்கூடாக சுழி ஓடிச் செல்வதுவே வாழ்க்கையாகிவிட்டது. பெருமளவில் இந்தச் சுழி ஓட்டத்தையே சரிவரச் செய்து முடிப்பதில் தான் மனிதனின் கவனமெல்லாம். பல காரியங்கள் அவன் கவனத்தை ஈர்ப்பதில்லை. எல்லாவற்றையும் அவன் தேவையெனக் கருதுவதுமில்லை.

என்னுடைய நாவல்களைப் படிப்பவர்கள் ஒவ்வொன்றிலும் பல புதிய புதிய நிகழ்ச்சிகளைக் காண்பார்கள். அவைகளைப் படிக்கும் போது தான் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் உள்ள கனதியைப் புரிந்து கொள்வதாகப் பலர் கூறுகின்றனர். இதிலிருந்து ஒரு உண்மையை என்னால் கற்றுக் கொள்ளமுடிகிறது. அதாவது “என்னால் கிரகிக்கப்படும் சம்பவங்கள் உண்மை நிகழ்வுகளாக இருப்பதால் தான், அதை எழுத்தில் படிக்கும் போது அது மற்றவர்களுக்குக் கனதியைக் கொடுக்கிறது” என்பதாகும்.

“சமூகத்தில் பல உண்மைகள் அன்றாடம் நடக்கின்றன. அந்த உண்மைகள் எல்லாவற்றையும் எழுத்தில் கொடுத்து விடவேண்டுமா?” என்ற ஒரு கேள்வி இயல்பாகவே உங்கள் மனதில் எழ இடமிருக்கிறது. இதற்கு நான் ஒரு வரையறை வைத்திருக்கிறேன். “தனிமனிதனதும், அவனுக்கூடாக அவன் வாழும் சமூகத்தினதும், அல்லது அதற்கும் மேலாக முழு உலகத்தினதும் பொதுவான மனுசீக உணர்வினை இலேசாகவேனும் தட்டிவிடக்கூடிய நாதக் கூர்களைக்கொண்டவைகளாக எவை எனக்குப் படுகின்றனவோ அவற்றை மட்டுமே எழுத்துருவில் வடிப்பது” என்பதாகும்.

இருபது ஆண்டுகளுக்கு முன் நான் “அசை” என்ற சிறுகதை ஒன்றினை எழுதினேன். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் “பொன்னம்மாள்” என்ற ஒருவிபச்சாரியின் கதை அது. அவளுக்கு நடுவயதாக இருக்கும் போது நான் அவளைக் கண்டிருக்கிறேன்; பேசியிருக்கிறேன். அவளையும் அவளின் வாழ்க்கை முறைகளையும் அவதானித்திருக்கிறேன். பெரிதும் பொய்க் கலப்பின்றி அவளின் வாழ்க்கையை எழுதமுற்பட்டு, அதை எழுதிப்பிரசுரித்தபின் “அந்தக் கதையில் சற்றேனும் பொய்க் கலப்பில்லை” என்று அவளுடன் நெருக்கமாகப் பழகிய பலர் கூறிய போது நான் பெரிதும் ஆச்சரியப்பட்டேன்.

உண்மைகளை உண்மையின்படி, ஒரு விபசாரியின் வாழ்க்கையை எழுதும்போது எப்படி எல்லாம் எழுதியிருக்க வேண்டுமென்பது உங்களுக்குத் தெரியாததல்ல. ஆனால் இன்றுவரை அந்தக் கதையில் விரசம் இருந்தது என்று யாரும் குறிப்பிட்டுச் சொன்னதாக எனக்கு நினைவில்லை. அந்த விபச்சாரியின் வாழ்க்கையில் எதைச்சொல்வது என்பதில் என்னை வழி நடத்தியது ‘எதைச்சொல்வது’ என்பதில் நான் வைத்துள்ள கொள்கையேயாகும்.

எனது சிருஷ்டிகளில் நான் பார்த்துப் பேசிப்பழகாத பாத்திரங்களை நான் உள்ளடக்குவதில்லை. எனது படைப்புகளில் கற்பனைப் பாத்திரங்கள் இருப்பதே இல்லை. இதனால் பாத்திரப்படைப்புக்களில் எனக்கு அதிகம் சிக்கலும் சிரமமும் ஏற்பட்டதில்லை. எனது பஞ்சமரில் சின்னாச்சி என்ற ஒரு பாத்திரம் வருகிறது அந்தச் சின்னாச்சி எனது பிறந்த ஊரில் எனது வீட்டுக்குப் பக்கத்தில் குடியிருந்தவள். பஞ்சமர் எழுதத் தொடங்கி அது முடிவுக்கு வந்த காலப்பகுதிக்குள் அந்தச் சின்னாச்சியை நான் பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்திருக்கிறேன்; பேசியிருக்கிறேன். பஞ்சமரில் எந்த இடத்திலும் அந்தச் சின்னாச்சியின் தோற்றத்தை, நான் தனியாகச் சித்தரிக்கவில்லை. அவளின் வழமையான அன்றாட நிகழ்வுகளைப் பிசகின்றிச் சித்தரித்ததன் மூலம் அவளின் தோற்றத்தை வாசகர்கள் மனதில் படிவைத்ததுடன், அவளின் மேல் ஆசிரியனாகிய எனது எந்தத் தலையீடும் செலுத்தாமல் பேசவைத்ததன் மூலமே அவளைப் பரிபூரணமான ஒரு கிராமத்துச் சின்னாச்சியாக ஆக்கிவிட்டேன்.

“என்னடா மோனை என்னை வைச்சுக்கதை ஒன்று எழுதியிருக்கிறியாம், அதில் என்ரை குறுநாட்டுச் சீலைக்கொய்யகத்தைக்கூட அச்சுப்பிசகாமல் எழுதியிருக்கிறாயெண்டு பொடியள் கதைக்கிறாங்கள்” இப்படி அந்தச் சின்னாச்சியே என்னிடம் வாய்விட்டுக் கேட்குமளவுக்கு அவளை நான் வென்றுவிட்டதில் எனக்குப் பரமதிருப்தி.

எப்போதும் கிராமங்களையே எழுதிக்கொண்டிருக்கிறேன் என்பதில் என்மீது பலருக்கு வெறுப்பு. “இதுகளை விட இந்தாளுக்கு வேறை ஒண்டும் எழுதத் தெரியாது” என்று எனது காதுக்குக் கேட்கும்படி பலர் பேசியிருக்கிறார்கள். அதை நான் மறுத்து ஒருவார்த்தை பேசியதில்லை. அவர்கள் உள்ளதையே சொல்கிறார்கள். உண்மையாகவே எனக்கு அப்படி எழுதவராததுதான். இதை ஒப்புக்கொள்வதில் நான் வெட்கப்படவில்லை. உதாரணத்துக்கு ஒன்று:

சமீபத்தில் யாழ்ப்பாணத்து நகரத்து நடுப்பகுதியால் நான் போய்க்கொண்டிருந்தபோது ஒரு வீட்டுவாசலில் ஒரு சிறு கூட்டம் கூடி நின்றது. அந்த வீட்டின் உட்புறம் இருந்து அழுகுரல் வந்தபொழுதுதான் அது ஒரு இழவு வீடு என்று அறிந்து கொண்டேன். சாவீட்டுக்கு மேளம் தட்டும் சாம்பான் கூட்டம் ஒன்று வாயிலை அடைத்துக் கொண்டு நின்றது. அவன் உள்ளே போய் இருந்து மேளந்தட்ட இடமில்லாததினால் அதிலேயே நின்ற நிலையில் மேளம் தட்டும்படி பலரும் வற்புறுத்திக் கொண்டிருந்ததையும், “நம்மாளையாக்கும், நான் பச்சைக்கிடுகிலை இருக்காமல் றோட்டிலை நிண்டு தட்டமாட்டனாக்கும்” என்ற அந்தச் சாம்பான் கூட்டத் தலைவன் மறுத்துக்கொண்டிருந்ததையும் நான் அவதானித்தேன்.

இது ஒரு விசித்திரமான தர்க்கமாக எனக்குப்பட்டது. ஏறக்குறைய இரண்டு மணிநேரம் வரையில் அங்கேயே நான் நின்று விட்டேன். கட்டாடி என்ற வண்ணான் வந்தான். உள்ளே போய் அவன் வெள்ளை கட்ட இடமில்லை. பின்பு பரியாரி என்ற அம்பட்டன், அவனும் உள்ளே போய் தனது தொண்டு துரவுகளைச் செய்யமுடியவில்லை. பாடை கட்டுபவன் வந்தான். அவன் பாடையை வைத்துக் கட்ட இடமில்லை. நான் கண்ட இவ்வளவையும் வைத்துக் கொண்டு ஒரு சிறுகதையை எழுதினேன். ஒரு நீண்ட சிறுகதை அது. “மயான காண்டம்” என்ற அந்தச் சிறுகதை பட்டினத்துச் சூழ்நிலையில் எழுதப்பட்ட போதும் கிராமப்புற வாழ்க்கையின் மிச்ச சொச்சங்களால் பாதிப்படைந்தமையால், அது முற்று முழுதாகவே ஒரு கிராமத்துக் கதையாகவே அமைந்துவிட்டது. நான் என்ன செய்ய? எனது சுபாவம் அப்படி. எனக்கு அப்படித்தான் எழுத வருகிறது.

இக்கதையைப்படித்த ஒரு பிரபல விமர்சகர் “இதுவரை இப்படிப்பட்ட கிராமியச் சித்தரிப்பு ஒன்றைத் தான் படித்ததில்லை” என்று கூறியது இன்றும் என் காதுக்குள் கேட்கிறது. ஒரு நாவலில் காட்டப்படுவதான காலம், அந்தக் காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்வுமுறை, பேச்சுமுறை, பழக்கவழக்கங்கள், நாவலின் கால நகர்ச்சியின் புலப்பாடுகள், இயல்பான நடைமுறைகளோடு அந்த நாவலை நிலையிலிலிருந்து இயங்கியல் வரை இட்டுவருதல், அந்தக் கால நடமுறைகளுக்கேற்ப உலக வியாபகமான பரிணாம வளர்ச்சிக்கு அதன் பாத்திரங்களின் வர்க்க குணாம்சங்களை வெளிக்கொண்டு வருதல் ஆகியவைகளில் நான் தவறியிருக்கிறேனா என்பதனை நாவல் அச்சுக்குப்போகுமுன் பலரிடம் அதைப் படிக்கக் கொடுத்து, படிப்பவர்களின் அபிப்பிராயங்களையும் உள்வாங்கிக்கொள்வதில் நான் தவறுவதில்லை.

அச்சேறுவதற்கு முன் அவைகளைப் படிப்பதற்கு, 75 வயதுக்கு மேற்பட்ட ஒருவர், ஒரு குடும்பப் பெண், ஒரு உயர்பள்ளி மாணவன், ஒரு உடல் உழைப்பாளி, வர்க்க சமூக அமைப்பினைத் தெளிவுறப் படித்த ஒருவர் உட்படக் குறைந்தது எட்டு பேர்கள் வரையிலாவது இருப்பர். இவை எல்லாவற்றையும் தொகுத்து மொத்தமாகச் சொன்னால் ஒவ்வொரு படைப்பிலும் ‘டானியல்’ என்ற பெயர் ஒரு சம்பிரதாயத்திற்காகவே அன்றி வேறெதற்காகவுமல்ல. உண்மையாகவே இவைகளின் எஜமானர்கள் நான் மேலே குறிப்பிட்டவர்களேயாகும்.

எனது நாவலில் மாந்தர்களே அதற்கான மொழியையும், கருவூலங்களையும், உடை நடை பாவனைகளையும் தருவதோடல்லாமல், தாங்களாகவே உருவத்தையும் அமைத்துக் கொள்கின்றனர். கடைசியில் குறிப்பிட்ட வாசகர்கள் சரிபிழைகளைப் பார்த்துக் குறிப்பிட்டுக் கொடுக்கின்றனர் என்றுதான் கூறலாம்.

சரியான மூலிகைகளைச் சேகரித்துத்தர பல மூலிகை நிபுணர்களும், அவர்களால் தரப்பட்ட மூலிகைகளைச் சரியாகப் புடம்போட்டு எடுக்க நல்ல அனுபவஸ்தர்களும் கிடைத்துவிடும் பட்சத்தில் வைத்தியனின் வேலை மிகச்சிறிய அளவுதான். வேண்டுமானால் “இது எனது மாத்திரை” என்று அவன் சொல்லிக் கொள்ளலாம். நலிந்த மனிதர்களின் வாழ்க்கை, அந்த வாழ்க்கைக்காக அவர்கள் நடத்தும் நடவடிக்கைகள், இடங்களுக்கும் காலத்திற்கும், சூழ்நிலைக்கேற்பவும் வெவ்வேறு வகைப்படினும் மொத்தத்தில் அவைகளைப் “போராட்டங்கள்” என்பதற்குள்ளேயே அடக்க வேண்டும்.

அந்தப் போராட்டங்கள் முறைப்படி வரிசைப்படுத்தப்பட்டால் அது நிச்சயமாக வரலாறு ஆகப் பரிணாமம் பெறாமல் இருக்கவே முடியாது. பஞ்சமர், கோவிந்தன், அடிமைகள், கானல், பஞ்சகோணங்கள், தண்ணீர் ஆகிய இந்த நாவல்களை படிப்படிவர்கள் இந்தப் பரிணாமத்தைக் காண்பார்கள். யாழ்ப்பாணப் பிரதேசத்தின் முழுமையான (சாதாரண மக்களின் போராட்டங்கள் உள்ளடங்கிய) வரலாற்றைக்காண விரும்புவர்களுக்கு இவை கைகொடுத்து உதவும் என்பதில் எனக்கு நிறைந்த நம்பிக்கை உண்டு. அதேபோல காலத்தால் அருகிப்போன சொற்றொடர்களையும் புதிது புதிதாக உண்டாக்கப்படும் பிரயோகங்களையும், ஆகவும் குறைந்த பட்சம் ஒரு நூற்றாண்டு கால யாழ்ப்பாண வாழ்க்கை முறையும் அறிந்து கொள்ளவும் பயன்படக் கூடும்.

தற்போது எனக்கு வயது ஐம்பத்தெட்டைத் தாண்டிவிட்டது. மலைபோல 6 பிள்ளைகளையும், 4 பேரன் பேத்திகளையும் கண்டுவிட்டேன். அதுமட்டுமல்ல, அன்றாட வாழ்க்கைக்காகப் போராடுபவர்களோடு சேர்ந்து நானும் எனது வாழ்க்கைக்காகப் போராடவும் வேண்டியிருக்கிறது. எனது இத்தனை ஆண்டுகால இலக்கிய – வாழ்க்கை அனுபவங்களில் நான் பலதைச் சந்தித்திருக்கிறேன். அவற்றுள் எனது சின்ன வயதில் நடந்த ஒரு நிகழ்வு இத்தனை வருடகால இலக்கிய அனுபவங்களுக்கு மேலான இலக்கிய அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது:

எனக்கு அப்போது வயது சுமார் 15 வரையில் இருக்கும். ஏற்கனவே நான் குறிப்பிட்டதைப் போன்று ஒருநேரச் சோற்றுக்கே ஆலாய்பறக்கும் வாழ்க்கை. காலை பழைய கஞ்சியுடனும், மதியவேளை கிழங்கு வகைகளுடனும் வாழ்க்கை போக, சோறு என்ற ஒன்று இரவில்தான் கிடைக்கும் அதுவும் அர்த்த ஜாமவேளையில்தான்! எனது அப்பன் ஒரு நிரந்தரக் குடிகாரர். அவர் இரவுச் சோற்றுக்கான அரிசியை என் அம்மாளிடம் கொண்டு வந்து வீசிவிட்டு மண்திண்ணையில் புரண்டு விடுவார். அம்மா சோறு காய்ச்சுவாள். குழந்தைகளின் கொதிக்கும் வயிற்றுக்காகக் கஞ்சியை வடித்து முதலில் குடிக்கவைப்பாள். ஒரு நாள் அளவுக்கு அதிகமாக சோறு அவித்து குழைந்து விட்டது. அப்பாவுக்கு அம்மா சோறு பரிமாறினபோது சோறு குழைந்திருந்ததைக் கண்டு அவருக்கு கோபம் பிறந்து விட்டது. மது வெறியில் அவர் ஒரு கவிதையே பாடிவிட்டார்.

அம்மாவுக்கு பெயர் மரியாள். அப்பருக்கோ கையெழுத்துப் போடவே தெரியாது. ஆனாலும் அவர் ஒரு கவிதை பாடினார். அர்த்த ஜாமத்தில் பாடினார்:

“சுந்தர மரியாள் செய்த
சூதை நான் அறியேனோ
கஞ்சிக்காக வல்லவோ
சோற்றைக் குழையவிட்டாள்”

என் அம்மாவாகிய மரியாள் செய்த செயலை எவ்வளவு அற்புதமாக, அ-அறியாத அப்புவால் பாடமுடிந்திருக்கிறது. அனுபவத்திலிருந்து பிறப்பதுதான் உயிர் உள்ள இலக்கியமாக முடியும்.

-1985-

1 thought on “என் கதை

  1. நான் பஞ்சமரைப் படைத்தது சகலவசதிகளும் கொண்ட கமலாம்பிகை அம்மாளினதும் மாம்பழத்தினதும் ஒழுக்கக் கேட்டுக்கான பெருஞ்சுகபோக ஏகபோகத்தை அம்பலப்படுத்துவதற்கே அன்றி, கொதிக்கும் வயிற்றுக்காக உடலையே விற்றுக்கொள்ளும் சூழ்நிலைகளிலும் தங்களைத் தாங்களே கட்டி அவிழ்த்துக் கொள்ளும் பஞ்சைப் பெண்களை அம்பலத்தில் கொண்டுவருவதற்காக அல்ல! இது எனது வேலையுமல்ல. டானியலின் படைப்புகள் சாதியத்தின் கொடுமையை வெளிக்கொண்டுவந்தன என்பது உண்மைதான். ஆனாலும் ஒழுக்கம் சம்பந்தமான கருத்துநிலைகளில் டானியல் கன்சர்வேட்டிவ் ஆக இருந்தார் என்பதே அவரதுநாவல்களிலும் பதில்களிலும் தெரிகிறது. விபச்சாரி தனது உடலை வறுமை காரணமாக விற்கிறார் எனவே அதுநிர்ப்பந்தம். இங்கு விபச்சாரியின் ‘ஒழுக்க கேடு’ மன்னிக்கப்படுகிறது. வெள்ளாள பெண்ணின் திருமணத்திற்கு புறம்பான உறவுகள் ‘ ஒழுக்க கேடாக’ சித்தரிக்கப்பட்டு அது பெருஞ்சுகத்தின் காரணமாக சொல்ல படுகிறது. இங்கு ‘ஒழுக்கம்’ என்பது குடும்ப வாழ்வு ஒருவனுக்கு ஒருத்தி என்ற கருத்தியல்களுக்குள் கட்டப்பட்டிருக்கிறது. விபச்சாரியின் நடவடிக்கை சமூக ஏற்றத்தாழ்வால் விழைந்தது. ஆனால் சமூகம் ஏற்றத்தாழவில்லாமல் போய்விட்டால் விபச்சாரி ‘ஒழுக்கமாக’ மாறிவிடுவாள். வெள்ளாடிச்சி பெருஞ்சுகத்தின் பயனால் காமம் அதிகமாகி பிற மனைநாடுகிறாள். இந்த வகையில் டானியலின் ‘ ஒழுக்கம்’ மரபு வழி பூர்சுவா சிந்தனையே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *