இலங்கையில் பெருந்தேசியவாதத்தின் ஆரம்பம்

கட்டுரைகள்

-சபா நாவலன்

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் என்பது குடியேற்ற நாடுகளெங்கும் தேசியப் போராட்டங்களின்ன் காலகட்டமாகும். குடியேற்ற நாடுகளில் ஏற்பட்ட இயல்பான மூலதன வளர்ச்சியும், அதனூடான தேசிய உணர்வும், அந்நிய மூலதனத்தின் ஆதிக்கமும் இந்தப் போராட்டச் சூழலைத் தீவிரப்படுத்தியது. ஏகாதிபத்திய நாடுகள் தமது ஆளும் தந்திரத்தை மறு ஒழுங்கமைப்பாக்க ஆரம்பித்த இந்தக் காலகட்டத்திலிருந்து, நாகரீக உலகில் தேசிய இனப் போராட்டங்களும், நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகளும், மதக் கலவரங்களும் அதிகரிக்க ஆரம்பித்தன.

காலனி நாடுகளில் ஏற்பட்ட மூலதன உருவாக்கத்தால் தூக்கியெறியப்படக்கூடிய நிலையிலிருந்த நிலப்பிரபுத்துவ அணிகளைத் தமது பக்கம் சேர்த்துக்கொண்டு தமது நம்பிக்கைக்குரிய பிரதிநிதிகளாக்கினர். அதற்கேற்றவாறு கல்வி மற்றும் அரசியல் அமைப்புமுறைகளை ஒழுங்குசெய்தனர்.

முன்னரே குறிப்பிட்டவாறு, தேசிய உணர்வு கொண்டெழுந்த மத்தியதர வர்க்க அணிகள் உள்நாட்டின் மூலதன வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டிருக்க இவர்களின் நிலப்பிரபுத்துவ அமைப்புமுறைக்கெதிரான உணர்வும் அந்நிய பொருளாதார ஆக்கிரமிப்புக்கு எதிரான உணர்வும் மேலோங்கத் தொடங்கியது. இதனால் அந்நியப் பொருளாதாரமும் நிலப்பிரபுத்துவமும் கைகோர்த்துக்கொண்டு தேசியப் பொருளாதார வளர்ச்சியை அழிக்க ஆரம்பித்தது.

அதாவது, எகாதிபத்தியமும், நிலப்பிரபுக்களும் இணைந்துகொண்டு நாட்டின் தேசிய வளர்ச்சிக்கு எதிராகச் செயற்பட்டனர். இதனால் தொடர்ச்சியாக வந்த புதிய ஏகாதிபத்திய ஒழுங்கமைப்பில், இந்தப் பெருநிலப்பிரபுக்கள் ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதிகளாக மாறினர்.

இந்தக் கூட்டணிக்கு எதிராகத் தேசிய உணர்வுகொண்ட மத்தியதர வர்க்கம் தன்னைத் தயார் படுத்திக்கொள்ள ஆரம்பித்த வேளையில்தான், நிலப்பிரபுக்களின் உதவியுடன் ஏகாதிபத்தியங்கள் இந்தத் தேசிய உணர்வுகொண்ட மத்தியதர வர்க்கத்தைக் கூறுபோடத் தொடங்கினர்.ஆரியக் கோட்பாடு, சிங்கள-பௌத்த அடிப்படைவாதம், என்பன இந்த நோக்கத்திற்காகவே ஆரம்பிக்கப்பட்டன. உருவாகி வளர்ந்த தேசிய உணர்வும், உருவான தேசமும், தேசிய இன முரண்பாடுகளால் சீரழியத் தொடங்க ஆங்கிலேயர்களும் நிலப்பிரபுக்களும் இந்தச் சீரழிவுகளின் சுடுகாட்டில் தமது ஆட்சியை வலுப்படுத்திக்கொண்டனர்.

1915ம் ஆண்டில் முதன்முதலாக இலங்கைத்தீவில் இனக்கலவரம் உருவானது. சிங்கள-முஸ்லிம் கலவரத்தினைத் தூண்டியவர்கள் ஆங்கிலேயர்களுக்குச் சேவை செய்த நிலப்பிரபுக்களாக இருக்க இந்த நிலப்பிரபுக்களின் தலைமையில் கலவரத்துக்கு செயல்வடிவம் கொடுத்தவர்கள் மத்தியதர வர்க்க இளைஞர்களும் தொழிலாளர்களுமாவர்.
அதுவரையில் நிலப்பிரபுக்களை எதிர்த்த தேசிய உணர்வுகொண்ட மத்தியதர வர்க்க அணியும், தொழிலாளர்களும்கூட இந்தக் கலவரத்தில் நிலப்பிரபுத்துவத் தலைமைக்குள் உள்வாங்கப்பட்டனர். தமது எதிரிகளையே ஆதரவாளர்களாக அணிதிரட்டும் தந்திரோபாயத்தை இந்த இனக்கலவரம் அதிகாரத்திற்குக் கற்பித்தது. ஆக, தேசியப் பொருளாதாரத்தைச் சீரழிப்பதற்காகக் கூறுபோடப்பட்ட தேசம், அதனைக் கூறுபோட்டவர்களையே தியாகிகளாகவும் கதாநாயகர்களாகவும் பெறும் துர்ப்பாக்கிய நிலைக்கு உள்ளானது.

தொடர்ச்சியாக இவ்வாறான உள்முரண்பாடுகளை உருவாக்கி அவற்றைக் கையாள்வதனூடாக தேசியவாதத்தின் தலைமையையே தமது கையிலெடுத்துக்கொண்டு அதனைச் சீரழிக்கும் பணியைத் தமது அந்நிய எஜமானர்களுக்காக இந்த நிலப்பிரபுக்கள் மேற்கொண்டனர்.

1915ம் ஆண்டில் நடைபெற்ற முஸ்லிம் சிங்கள கலவரத்தினைத் தூண்டியவர்கள் எனக் கருதப்படுபவர்களுள் முக்கியமானவர்களாக D.S.சேனநாயக்க என்ற இலங்கையின் முதலாவது பிரதம மந்திரி, D.B.ஜெயதிலக்க, W.A.சில்வா, D.R. ஹேவா வித்தாரண என்ற அநகாரிக்க தர்மபாலவின் சகோதரர் ஆகியோர் அடங்குவர்.இவ்வாறு வலுப்பெற்ற நிலப்பிரபுக்களின் தலைமை, தேசிய பொருளாதார உருவாக்கத்திலிருந்தும் அபிவிருத்தியிலிருந்தும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும், நாடு தழுவிய தேசிய உணர்விற்கெதிராகச் செயற்படவும், அந்நிய மூலதனத்தின் தரகர்களாகச் செயற்படவும், ஏகாதிபத்தியங்களுடன் கூட்டுச் சேர்ந்தது மட்டுமல்லாது இனவாதத்தையும் தமது கொள்கைகளுள் ஒன்றாகக் கொண்டுமிருந்தது.

இந்தத் தலைவர்களில் D.S.சேனாநாயக்க போன்ற பலர் கிறிஸ்தவர்களாக இருந்த போதிலும் தம்மை பௌத்தத்தின் பாதுகாவலர்களாகவும், பௌத்த இனவாதிகளாகவும் காட்டிக்கொண்டு, கூறுபோடப்பட்ட தேசியவாதிகளின் பெரும்பான்மைப்பகுதியான சிங்கள தேசியவாதிகளைத் தமது தலைமைக்குள் கொண்டுவந்தனர்.

சந்தேக உணர்வும், உள்முரண்பாடுகளும் இனவாதமும் திட்டமிடப்பட்டு வளர்க்கப்பட்ட நிலையில், மக்களிடையே பரஸ்பரத் தொடர்பு குறைந்த நிலையில், மொழியையும் கலாச்சாரத் தொடர்புகளையும் பிரதேசவாதத்தையும் அடிப்படையாகக் கொண்டு சந்தைப் பொருளாதாரம் உருவாகத் தொடங்கியது. இந்தச் சந்தைப் பொருளாதாரத்தை நோக்கித் தேசிய இனங்கள் உருவாகின.

இவ்வாறு உருவான தேசிய இனங்கள் ஆதிக்கத்திலிருந்த நிலப்பிரபுத்துவம் சார்ந்த அந்நிய தரகுகளுக்கு எதிரான உணர்வுடன் வளர்ச்சியடைய முற்பட்டபோதெல்லாம், இன உணர்வு தூண்டிவிடப்பட்டு சீரழிக்கப்பட்டது.

இந்த அந்நிய மூலதன ஆதிக்கத்திற்கு வசதியான சமூகக் கட்டமைப்பைத் தொடர்ச்சியாகப் பேணும் வகையில் இலங்கையின் அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டது. இது தேசிய இனங்களுக்கு இடையிலான வேறுபாடுகளை ஊக்குவித்தது.

1945ம் ஆண்டில் சோல்பரிக் கமிஷன் சிபாரிசுகளின் பின்னர் சோல்பரியே பின்வருமாறு கூறினார்:
“மேற்கு நாடுகளின் ஜனநாயக அரசியல் திட்டங்களை இன மத ரீதியில் பிளவுண்ட நாடுகளில் அறிமுகப்படுத்தும்போது, அவர்கள் மேற்கு நாடுகளைப் போன்று சமூக, அரசியல் ரீதியில் பிரியாமல் இன மொழி அடிப்படையிலேயே பிரிவர். இதனால் மேற்குலகில் பின்பற்றும் பாராளுமன்ற அரசியல் முறைகளை இங்கு பின்பற்றுவது கடினமானது.”

இந்தக் கருத்தினை மேற்கூறப்பட்ட இலங்கையின் சமூக-அரசியல் பகைப்புலத்தில் பொருத்தி ஆராயும்போது பல உண்மைகள் புலப்படும்.
சோல்பரி கூறுவதுபோல, மக்கள் சமூக அரசியல்ரீதியில் பிளவுபடாதபோது, புதிய சமுதாய எழுச்சிகளினூடாக தேசியப் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட்டிருக்கும். புதிய ஒன்றிணைந்த தேசம் அந்நியப் பொருளாதார ஆதிக்கத்திற்கெதிராக சொந்த மூலதனத்தை உருவாக்கியிருக்கும்.

அவர் கூறுவது போல இன, மொழி அடிப்படையில் பிளவுபடும்போது, மக்கள் மத்தியிலிருக்கும் தேசிய உணர்வு கூறுபோடப்பட்டு அது தமக்குள்ளேயே மோதிக்கொள்ளும். இதனால் ஏகாதிபத்திய ஆதிக்கத்துக்கெதிரான உணர்வு மறைந்துபோகும். அந்நிய ஆதிக்கம் தமது உள்ளுர் பிரதிநிதிகளினூடாகத் தொடரும்.

எனவே இந்த அரசியல் அமைப்பு முறையானது தேசிய இனப் பிளவுகளை நிரந்தரமான தொடர்ச்சியாக்கியது. தேசிய மூலதன உருவாக்கத்தைத் தடைசெய்து, அந்நிய மூலதன எற்றுமதியை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அரசியல் பொருளாதார அமைப்புமுறையானது பல தேசிய இனங்களையும் நிலப்பிரபுத்துவ தரகர்களது ஆதிக்கத்தையும் தேசிய இனச்சிக்கல்களையும் உருவாக்கியது.

இந்தச் சமூகக் கட்டமைப்பிற்கு எதிரான மத்தியதர வர்க்க தேசியவாதிகளினது போராட்டங்கள் ஆரம்பத்தில் எழுந்தபோதும் அது இனவாத அரசியலினால் சீரழிக்கப்பட்டுச் சிதைக்கப்பட்டது.
மேல் மத்தியதர, மத்தியதர வர்க்கங்கள் தேசிய உணர்வுகொண்டு நாட்டையும் தேசியத்தையும் கட்டியமைக்க முற்பட்டபோதெல்லாம் இனவாதத்தை முன்னிறுத்தி அவர்களது குரல்கள் மழுங்கடிக்கப்பட்டன. இந்த இனவாத அரசியல் மறுபுறத்தில் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மத்தியில் விரக்தியையும் வெறுப்பையும் உருவாக்க, தேசிய விடுதலை இயக்கங்களும் தேசியக் கோரிக்கைக்காகவும் சிறுபான்மை இன மக்கள் மத்தியிலிருந்து உருவாகத் தொடங்கின.

சுதந்திரத்துக்குப் பின்னர் நிறுவப்பட்ட முதலாவது அரசாங்கம் டீ.எஸ்.சேனாநாயக்க தலைமையிலானதாகும். இவர்தான் இலங்கையின் முதலாவது பிரதம மந்திரியாவார். இவர் பதவிக்கு வந்த காலத்தில், மறுபடியும் தேசிய இயக்கங்களுக்கும், இடதுசாரி இயக்கங்களுக்கும் எதிராகவும், தமிழ் சிங்கள இணைவுபெற்ற நாடு தழுவிய தேசியவாதத்திற்கு எதிராகவும் தமது பலத்தை நிலைநாட்டவேண்டிய தேவை ஏற்பட்டது.
இதன் அடிப்படையில் தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்து குடியேறிய, தென்னிந்தியத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. இவர்களில் பெரும்பாலானோர் தேயிலை, ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஆங்கிலேயர்களால் காலத்திற்குக் காலம் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டவர்களாவர். சுதந்திரத்துக்கு முன்னர், இவர்களால் தெரிவுசெய்யப்பட்ட எட்டு அங்கத்தவர்கள் அரசவையில் இருந்தனர். 1947இல் பதவிக்கு வந்த டீ.எஸ்.சேனநாயக்கா அரசு இவர்களின் குடியுரிமையை, தனது குடியுரிமைச் சட்டத்தின் மூலம் ஒரே இரவுக்குள் பறித்து இந்தியத் தமிழர்களை நாடற்றவர்களாக்கிற்று.

இன ரீதியிலான அரசியலும், பௌத்த சிங்கள மேலாதிக்கமும் மேலும் வலுப்பெற ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட சமூகக் கட்டமைப்பின் ஆதிக்க சக்திகளாக இருந்துவந்த தமிழ் நிலப்பிரபுக்கள் தமது சொந்த அரசியல் நோக்கங்களோடு பல கட்சிகளை ஆரம்பித்தனர்.
தெற்கைப் போலவே வடக்கு-கிழக்கிலும் உருவாகி வளர்ந்த தேசியவாதம் அடிப்படையில் தேசிய மூலதனத்தையும் தேசிய சந்தையையும் ஆதாரமாகக் கொண்டிருந்தது. இந்தத் தேசிய மூலதனம் என்பது நிலப்பிரபுத்துவக் கட்டமைப்பிற்கும் அந்நிய மூலதனத்திற்கும் எதிரானதாக அமைந்திருந்தது. நிலப்பிரபுக்கள் அந்நிய மூலதனத்தோடு சமரசம் செய்துகொள்ள, மத்தியதர வர்க்கத்தின் மேலணிகள் தேசிய முதலாளிகளாக உருவாக முடியாத நிலையில் அந்நிய மூலதனம் ஆதிக்கம் செலுத்தியது. இதனால் இயல்பாகவே தேசிய உணர்வுகொண்ட அந்நிய மூலதனத்திற்கும், நிலப்பிரபுத்துவத்திற்கும் எதிரான வர்க்கமாகத் திகழ்ந்த தேசிய உணர்வுகொண்ட இந்த மத்தியதர வர்க்கம் தமது தேசிய நலனுக்காக சிங்கள பெருந்தேசியவாதத்துடன் போராட வேண்டியநிலை ஏற்பட, அடிப்படை முரண்பாடாக அமைந்த நிலப்பிரபுக்களுக்கு எதிரான முரண்பாடானது இரண்டாம் பட்சமாகத் தள்ளப்பட்டது. பிரதான முரண்பாடான பெருந்தேசியவாதம் மேல் நிலைக்கு வந்தது. இதனால் உற்பத்தி உறவுகளின் எதிர் எதிர் சக்திகள் சமரசம் செய்துகொள்ள, அடிப்படை முரண்பாட்டின் பிரதான எதிரிகளான நிலப்பிரபுக்கள் தமிழ் தேசியவாத்ததைக் கையிலெடுத்துக் கொண்டு தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக மாறினர்.

இந்தச் சிக்கலான சமூக அரசியற் பகைப்புலத்திலே 1949ம் ஆண்டில் எஸ்.ஜே.வீ. செல்வநாயகத்தின் தலைமையில் தமிழரசுக்கட்சி உருவானது. சமஷ்டி அரசுக்கான கோரிக்கையை முன்வைத்த தமிழரசுக்கட்சி, தமிழ்மக்களின் வாக்குகளை நம்பித் தனது அரசியலை ஆரம்பித்தது.

1956இல் S.W.R.D.பண்டாரநாயக்காவின் தலைமையில் அதிகாரத்திற்கு வந்த அரசாங்கம், மறுபடி சிங்கள மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டிருந்த இனவெறியைத் தட்டியெழுப்பி, தனிச்சிங்களச் சட்டத்தை முன்வைத்து ஆட்சியை நிலைநாட்டிக்கொண்டது. இதன் விளைவாக இலங்கையில் தமிழ்மக்கள் மீதான சிங்கள இனவாதிகளின் தாக்குதல் பெரும் இனக்கலவரத்தை எற்படுத்திற்று. பல தமிழர்கள் கொல்லப்பட்டும் வட கிழக்கு நோக்கி விரட்டப்பட்டும் இனவாதத் தீ கொழுந்துவிட்டெரிந்தது.

இவரது அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களின் பின்னர், 1958ம் ஆண்டில் தமிழரசுக்கட்சித் தலைவர் S.J.V.செல்வநாயகத்திற்கும் S.W.R.D.பண்டாரநாயக்காவிற்கும் இடையில் முதலாவது தமிழ்-சிங்கள ஒப்பந்தம் கைச்சாத்தானது. தமிழர்களுக்கு அடிப்படை உரிமைகளை வழங்குவது தொடர்பான இந்த ஒப்பந்தம் மீண்டும் ஒரு முறை இலங்கையில் இனமுறுகல் நிலையை ஏற்படுத்திற்று.

தமிழ்மொழிக்கு சிறுபான்மை அரச மொழி என அந்தஸ்து வழங்கவேண்டும் என்றும், வட-கிழக்கு மாகாண நிர்வாகத்திற்கான பிரதேச சபை அமைக்கப்படவேண்டும் என்றும், பிரதேச சபையின் பொறுப்பில் விவசாயம், கூட்டுறவு, குடியேற்றம், கல்வி, சுகாதாரம், கைத்தொழில், மீன்பிடி, வீடமைப்பு, நிதி, சமூகசேவை, மின் விநியோகம், நீர்ப்பாசனம் என்பன அமையவேண்டும் என்றும் கோரப்பட்டது.இதற்கு முதலாவதாக எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் பௌத்த குருமார்களேயாவர். இவர்களைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக்கட்சி இதனை அமைப்புமயப்படுத்திய நாடு தழுவிய எதிர்ப்பாக்கியபோது, அவ்வொப்பந்தம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் பிரிட்டிஷ் ஆட்சியில் உருவாக்கப்பட்டு அநகாரிக்க தர்மபாலவிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பௌத்த-சிங்கள பெரும் தேசியவாதம், முழுவதுமாக அமைப்புமயப்பட்டிருந்தது தெளிவாகின்றது. பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் திட்டமிட்டு வளர்க்கப்பட்ட இந்த பௌத்த – சிங்கள உணர்வானது, சிறிய கிராமங்கள் வரை பரவியிருந்தது.

ஆதிக்கம் செலுத்தும் சக்திகளாக பெருநிலப்பிரபுக்களும், அந்நிய மூலதனத் தரகர்களும் சமூகத்தின் உச்ச நிலையிலும், இவர்களது ஆதிக்கத்திற்கு எதிராக நேரடியாகவும் மறைமுகமாகவும் போராடிய மத்தியதர வர்க்கத்தின் பேரணிகளும், மத்தியதர வர்க்கமும் பிரதான எதிர்ப்புச் சக்திகளாகத் திகழ்ந்தனர். இங்கே தேசிய முதலாளிகளாக மாறத் தலைப்பட்டுக்கொண்டிருந்த இந்த மத்தியதர உயரணிகளின் நேச சக்திகளாக மத்தியதர, கூலி மற்றும் வறிய விவசாயிகளும் தொழிலாளர்களும் திகழ்ந்தனர்.

அடிப்படையில் தேசிய உணர்வுகொண்ட, தேச முதலாளிகளாக மாறத் தலைப்பட்ட மத்தியதர வர்க்கமும், அதனைச் சுற்றி அணிதிரண்ட சமூகத்தின் ஏனைய சமூகத்தின் பகுதிகளுக்கும் சமூகத்தின் அதிகார சக்திகளான அந்நிய மூலதனத் தரகர்களுக்கும் மற்றும் நிலப்பிரபுக்களுக்கும் இடையிலான முரண்பாடே, சமூகத்தின் அடிப்படை முரண்பாடாக அமைந்திருந்தது.

இந்த முரண்பாடான தமிழ் – சிங்களம் என்ற வேறுபாடு இல்லாதிருந்திருந்தால், அடிப்படையில் நாட்டின் சமூக உற்பத்தி சக்திகளுக்கிடையிலான முரண்பாடே பிரதான முரண்பாடாக அமைந்திருக்கும்.

ஆனால் மறுதலையாக, ஏற்கெனவே அமைப்புமயப்படுத்தப்பட்டிருந்த சிங்கள-பௌத்த பெருந்தேசியவாதமும், அதனை நோக்கி அணிதிரண்ட சிங்கள மக்களும் இந்த அடிப்படை முரண்பாட்டைக் காணத் தவறினர். இந்த நிலையில், இதனால் இலாபமடைந்தவர்கள் அந்நிய மூலதனத் தரகர்களும், நிலப்பிரபுக்களுமேயாவர். இந்த ஆதிக்க சக்திகள், தேசியவாதிகளான மத்தியதர வர்க்க அணிகளை, பௌத்த-சிங்கள தேசியவாதக் கோஷத்தின்கீழ் அணிதிரட்டுவதினூடாக, ஒரு புறத்தில் தமக்கு எதிரான இந்த அணிகளின் போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் முறியடிக்கச்செய்தும், மறுபுறத்தில் இந்த மத்தியதர வர்க்கத்தையும் அதன் நேச சக்திகளையும் தமது ஆட்சி அதிகாரத்திற்கான ஆதரவு சக்திகளாகவும் பெற்றுக்கொண்டனர்.அதாவது, அடிப்படையில் தமது எதிர்ப்புச் சக்திகளையே தமது வாக்குப் பலத்திற்கான ஆதரவு சக்திகளாகவும் பெற்றுக்கொண்டனர்.

பிரதான அரசியல் கட்சிகளான சிறீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் அடிப்படையில் அந்நிய மூலதனத் தரகர்களையும் பெருநிலப்பிரபுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி வந்ததால், இந்த அமைப்புமுறைக்கு எதிரான போக்கு என்பது அவர்களின் இருப்புக்கு எதிரான போக்கு என்பதால், இனவாதத்தையும் பௌத்த-சிங்கள தேசியவாதத்தையும் ஆதரித்தும் தூண்டியும் வந்தன.

இந்த அரசியல் சமூகப் பின்னணியில்தான் 1958இல் உருவான பண்டா-செல்வா ஒப்பந்தமும் கைவிடப்பட்டது. இந்த நிலையில் ஏற்கெனவே இருந்துவந்த தமிழ் மக்களின் சிங்கள அரசமைப்பு மீதான வெறுப்புணர்வு அதிகரிக்கத் தொடங்கியது. ஏற்கெனவே சைவத் துறவியான ஆறுமுக நாவலரின் காலத்திலிருந்து மூலதன உருவாக்கத்தின் மேல்கட்டுமானக் கூறாக வளர்ந்துகொண்டிருந்த தேசியவாதம் உறுதியான தமிழ்த் தேசியவாதமாக வளரத் தொடங்கியது.

சிங்களப் பகுதிகளைப் போலவே, நிலப்பிரபுக்களுக்கும் பிரித்தானிய அந்நிய மூலதனத்திற்கும் எதிரான தேசிய உணர்வுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய மத்தியதர வர்க்க அணிகளின் சாதிப்போராட்டங்கள் போன்றவற்றால் கலங்கிப் போயிருந்த தமிழ் அதிகார சக்திகள், தமிழ் தேசியவாதத்தைக் கையில் எடுத்துக்கொண்டு அதனூடாக இந்த மத்தியதர வர்க்கத்தையும் அதன் நேச அணிகளையும் இணைத்துக்கொண்டு தமது அதிகாரத்தை நிலைநிறுத்தும் கருவியாகத் தமிழ் தேசியவாதத்தை பயன்படுத்தத் தொடங்கின.

ஒரு புறத்தில் சிங்கள-பௌத்த பெருந்தேசியவாதத்தை, அதன் நிலப்பிரபுத்துவ சக்திகளும், அந்நிய மூலதனத் தரகர்களும் பிரதிநிதித்துவப்படுத்த, மறுபுறத்தில் தமிழ் தேசியவாதத்தை தமிழ் நிலப்பிரபுக்களும் அந்நிய மூலதனத் தரகர்களும் பிரதிநிதித்துவப்படுத்தி, ஒரு விசித்திரமான சமூக அமைப்பு முறையே நிலவி வந்தது.

மொத்த சமூகத்தையும் கூறுபோட்டுச் சீரழித்த இந்த முரண்பாடுகள் 1958ம் ஆண்டிலிருந்து மேலும் கூர்மையடையத் தொடங்க, தமிழ், தமிழ்பேசும் முஸ்லிம்கள், மலையகத் தமிழ் தேசிய இனங்கள் மீதான சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தின் அரசியல் பொருளாதார சமூக இராணுவ அடக்குமுறை அதிகரிக்கத்தொடங்கியது.

தேசியவாத முகமூடியை அணிந்துகொண்டிருந்த ஏகாதிபத்தியம் சார்பான முதலாளித்துவ சக்திகள், மேலும் மேலும் தமது அரசியல் பொருளாதார பலத்தை அதிகரிக்க இலங்கை மக்கள் மேலும் மேலும் வறுமைநிலைக்கும் அடிமைநிலைக்கும் தள்ளப்பட்டனர். 1958இலிருந்து வளர்ச்சியடைந்த இந்த அபாயகரமான அரசியல் சூழ்நிலையை சமூகத்தின் ஆதிக்க சக்திகள் மேலும் மோசமடையச் செய்தன.

1960ம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க தாம் தேர்தலில் பெரும்பான்மைப் பலம் பெறாமல் போய்விடலாம் என்ற சந்தேகத்தில், தமிழரசுக் கட்சியுடனும் லங்கா சமசமாஜக் கட்சியுடனும் செய்துகொண்ட உடன்பாடு அவர் பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டதும் கைவிடப்பட்டது.

1965இல் ஐக்கிய தேசியக் கட்சி பிரதம மந்திரி டட்லி சேனநாயக்காவிற்கும், தமிழரசுக் கட்சித் தலைவர் S.J.V.செல்வநாயகத்திற்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான ஒப்பந்தம் பௌத்த குருமாரினதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதும் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.

1977இல் பிரதமராகவும், பின்னர் ஆட்சியலமைப்பு முறையை மாற்றி, ஜனாதிபதியாகவும் உருவான J.R.ஜயவர்த்தனா வெளிப்படையாகவே தமிழர்களுக்கு எதிரான கோஷங்களை முன்வைத்து, சிங்கள பெரும் தேசியவாதத்தை மேலும் தீனியிட்டு வளர்த்தார். 1983இல் இலங்கை கொடூரமான இனக்கலவரத்தையும் சந்தித்தது. அரசால் மறைமுகமாகத் தூண்டிவிடப்பட்ட இந்தக் கொடூரமான இனக்கலவரம், தமிழர்களை கோரமான கொலைக்களத்திற்குத் தள்ளியது. இதன்பின்னர் 1983-84ம் ஆண்டுகளில் கூட்டப்பட்ட சர்வகட்சிக் கூட்டங்களும், மகாநாடுகளும் எந்த முடிவுமின்றி இடைநிறுத்தப்பட்டன.

1983ம் ஆண்டுக்குப் பின்னர் தமிழர்களின் தேசியப் போராட்டம் ஒரு புதிய பரிணாமத்தை எடுத்தது. ஆரம்பத்திலிருந்தே கொழும்புசார் அந்நிய மூலதனத்தையும் நிலப்பிரபுத்துவத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ் தலைமைகளே வடகிழக்கு தமிழர்களின் பிரதிநிதிகளாகவும் இருந்தனர். இவர்கள், ஒரு புறத்தில் சாதிய அமைப்புமுறையைப் பேணுவதனூடாகவும் இடதுசாரி மற்றும் தேசிய இயக்கங்களுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடிப்பதினூடாகவும் நிலப்பிரபுத்துவ அமைப்பு முறையின் பிரதிநிதிகளான இவர்கள் மறுபுறத்தில் சிங்கள அந்நிய மூலதனத்தின் தரகர்களுடன் கூட்டுச்சேர்ந்து அதன் அடிப்படை நலனைப் பிரதிபலிப்பவர்களாகவும் இருந்தனர்.

1956ம் ஆண்டு S.W.R.D.பண்டாரநாயக்க ஆட்சிக்கு வந்தபோது, தேசியவாதப் போக்கும், அரசிற்கெதிரான போக்கும், மத்தியதர வர்க்கத்தினைச் சுற்றி மக்கள் இணைந்துவந்த நிலைமையும் வெகுவாகக் காணப்பட்டன. இந்த நிலையில், இந்தப் புறச் சூழலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகார வர்க்கங்களுக்கிடையிலான போட்டியே தனிச்சிங்களச் சட்டத்தின் பின்புலமாகும். இவரது அரசுடன் கூட்டுச்சேர்ந்தவர்கள், அடிப்படையில், மத்தியதர வர்க்கமும் கிராமப்புற புத்திஜீவிகளும், பௌத்த பிக்குகளும், ஆசிரியர்களும் ஆயர்வேத வைத்தியத்துறையைச் சேர்ந்தவர்களுமேயாவர். உண்மையில் உத்தியோகபூர்வ மொழியாக இருந்துவந்த ஆங்கில மொழி சிங்கள மொழியால் பிரதியிடப்பட்டது. ஆனால் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டது.

ஆங்கிலத்தைப் பேசவும், புரிந்துகொள்ளக் கூடியவர்களுமாக இருந்தவர்களின் தொகை 6 சதவீதமாக மட்டுமே இருந்த நிலையில் சிங்கள மொழிப் பிரதியீடு பெரும்பான்மைச் சிங்கள மக்களைத் திருப்திப்படுத்தியதுடன் மட்டுமன்றி, வளர்ந்துவந்த தேசியவாதத்தையும், தேசிய உணர்வாளர்களையும் அணிதிரட்டியது. அதே நேரத்தில் தமிழ்த் தேசியவாதிகளையும் தேசப்பற்றையும் அந்நியப்படுத்தி நாடு தழுவிய தேச உணர்வைக் கூறுபோட்டு சிங்கள- பௌத்த பெருந்தேசிய உணர்வாக மாற்றியது.
ஆங்கிலம் மட்டுமே படித்த சிங்கள- தமிழ் உயர்வகுப்பினருக்கும் எதிரான இந்தச் சட்டம் S.W.R.D.பண்டாரநாயக்கவை உண்மையான தேசியவாதியாகச் சமூகத்திற்குக் காட்டிற்று.

இலவசக் கல்விமுறையும், தாய்மொழிக் கல்விமுறையும் சட்டமாக்கப்பட்டதால், சமூகத்தின் கீழ்மட்டத்தில் உள்ளவர்களுக்கும் உயர்கல்விக்கான வாய்ப்பை ஏற்படுத்திற்று. 1970ம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி (S.L.F.P.) அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தரப்படுத்தல் சட்டமானது பல்கலைக்கழக நுழைவில் இனவாரியான தரப்படுத்தலைக் கொண்டுவந்திருந்தது. இதன் காரணமாக தமிழ் மாணவன், சிங்கள மாணவனைவிட அதிகமான மதிப்பெண்களை, பல்கலைக்கழக நுழைவிற்காகப் பெறவேண்டியிருந்தது. இந்தச் சட்டமூலமானது கல்வியை அடிப்படையான சமூக அந்தஸ்துக்கான மூலதனமாக நம்பியிருந்த தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

தமிழர்கள், தொழில்ரீதியிலும், கல்வியிலும் மொழிரீதியான அடக்குமுறைக்கு உட்பட்டதாக உணரத் தொடங்கினர். இது தவிர, தமிழர்களின் பாரம்பரியக் குடியேற்றங்கள் திட்டமிட்ட குடியேற்றத்திட்டங்கள் மூலம் சிங்களவர்களால் நிரப்பப்பட்டன. திருக்கோணமலையில் 1946இல் 20.7 சதவீதமாக இருந்த சிங்களவர்களின் எண்ணிக்கை 1981ம் ஆண்டில் 33.6 சதவீதமாக உயர்ந்தது. அரச உதவியுடன் திட்டமிட்ட இந்தக் குடியேற்றங்கள் தமிழ் பகுதி முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

அதிகார வர்க்கம் உருவாக்கிய இனவாதிகளைத் தாமே தீனிபோட்டு வளர்க்கவேண்டிய சூழ்நிலை அந்த வர்க்கத்திற்கு ஏற்பட்டிருந்தது. ஒரு புறத்தில் தேசியவாதக் கருத்துக்களைப் பலப்படுத்தியும், தேசிய இனங்களைக் கூறுபோடுவதினூடாக அதனைப் பலவீனப்படுத்தியும் தனது இருப்பு நிலையை வலுப்படுத்திக்கொள்ளும் தந்திரோபாயத்தைப் பயன்படுத்திய இந்த அந்நிய மூலதனத் தரகர்களும் பெருநிலப் பிரபுக்களும் தமது சொந்த நலன்களுக்காக மொத்த நாட்டையே சீரழித்துக்கொண்டிருந்தனர்.

இந்த அரசியல் பாகுபாட்டுடன் கூடவே தமிழர்களுக்கெதிரான கலவரங்களும் வன்முறைகளும் பல சமயங்களில் அரச இயந்திரத்தின் ஆதரவுடன் அதிகரிக்கும் வேகத்தில் நடந்தேறியது. 1956, 1958, 1977, 1981, 1983ம் ஆண்டுகளில் நடைபெற்ற கலவரங்கள் பெரும் உயிர்ச் சேதங்களை ஏற்படுத்திற்று. 1972இல் திருத்தியமைக்கப்பட்ட சட்ட அமைப்பின்படி சிங்கள மொழி என்பது உத்தியோகபூர்வ மொழியாகவும், பௌத்த மதமே பிரதான மதமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டது.

இவ்வாறான தொடர்ச்சியான திட்டமிட்ட இன அடக்குமுறை வரலாறு என்பது சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ்தல் என்பது சாத்தியமற்றது என தமிழ் மக்களை உணரவைத்தது. தமிழ்த் தேசிய உணர்வை வெளிப்படுத்தும் போராட்டங்கள் வட கிழக்குப் பகுதிகளில் தீவிரமடைய தமிழ் அரசியற் கட்சிகளும் உள்ளக மாற்றங்களைச் சந்திக்கத் தொடங்கின. கொழும்பு அதிகார வர்க்கம் சார்ந்த தமிழ் தலைமையானது உள்ளுர் தேசியவாதிகளால் பிரதியீடுசெய்யப்பட்டதெனினும் குறுகிய காலத்திலேயே அது நிலப்பிரபுத்துவ தரகுமுதலளித்துவ உணர்வு கொண்ட சக்திகளின் கைகளிற்கு மாறலாயிற்று. உருவாகி வளர்ந்த தேசியவாதத்தை உள்வாங்கிக் கொண்டு அதற்குத் தலைமை தாங்க இடதுசாரிகள் பின்வாங்கியதனூடாக, நிலப்பிரபுத்துவ தரகு முதலாளிகளின் பிரதிநிதிகளான தமிழர் விடுதலைக் கூட்டணியும் அதன் வன்முறைத் தொடர்ச்சியான தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற அமைப்புக்களும் தேச விடுதலைப் போராட்டத்தலைமையைக் கைப்பற்றிக்கொள்ள, அடக்குமுறைக்கெதிரான தமிழ் பேசும் மக்களின் தேச விடுதலைப் போராட்டம் படிப்படியாகச் சீரழிக்கப்பட்டது.
(தேசம் வெளியீடாக வரவுள்ள ‘தேசியவாதம்’ பற்றிய நூலிலிருந்து ஒரு பகுதி)

3 thoughts on “இலங்கையில் பெருந்தேசியவாதத்தின் ஆரம்பம்

  1. புலியைப் பற்றி எல்லாம் பேசியாயிற்று. இப்போ தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்களாகவும் காட்டமுற்படுகிறீர்கள். யார் உங்களுக்கு தமிழ் தேசிய வாதிகள்? ரவுடி டக்ளசும் திருடன் ஆனந்த சங்கரியும் தானோ?

  2. // புலியைப் பற்றி எல்லாம் பேசியாயிற்று. இப்போ தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்களாகவும் காட்டமுற்படுகிறீர்கள். யார் உங்களுக்கு தமிழ் தேசிய வாதிகள்? ரவுடி டக்ளசும் திருடன் ஆனந்த சங்கரியும் தானோ? //

    பாரிய நிறுவனமயப்பட்ட எல்லையில்லா அதிகாரங்களை தனக்குள்ளே குவியப்படுத்தி வைத்துள்ள தமிழ் மக்களின் ‘ஏக எஜமானர்கள்’ புலிகளை விட ”ரவுடி டக்ளசும் திருடன் ஆனந்த சங்கரியும்” பேசும் ‘தமிழ் தேசியம்’ அழிவும் ஆபத்தும் குறைந்தது.

  3. முதலில் உலகநாடுகள் தங்கள்நாட்டில் உள்ள ஈழ்த்தமிழரை இலஙகாக்கு திருப்பி அனுப்பினால்தான் இது போன்ற விவாதங்கள் ஒரு முடிவுக்கு வரும்.அவனவன்நிலை புரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *