இனவெறியின் இன்னொரு முகம்

கட்டுரைகள்

– ராகவன்

வரலாறுகளிலிருந்து படிப்பினைகளை இலங்கை அரசோ, அதன் அதிகாரிகளோ இன்னமும் பெறவில்லை என்பதையே சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அண்மையில் கனேடிய தேசிய நாளிதளொன்றிற்கு வழங்கிய நேர்காணல் படம்பிடித்துக் காட்டுகிறது.

இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தனது நேர்காணலில் “இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்கள் அளவுக்கு மீறிய உரிமைகளைக் கோருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும், இது சிங்கள மக்களது நாடு என நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால் சிறுபான்மை சமூகங்கள் எமது நாட்டில் இருக்கின்றன. அவர்களை நாம் எமது மக்களாக நடத்துகிறோம். நாங்கள் இலங்கையில் எழுபத்தைந்து சதவீதமாக இருக்கிற காரணத்தால் இங்கு விட்டுக்கொடுப்புகளுக்கு இடமில்லை. எமது நாட்டை பாதுகாக்க எங்களுக்கு உரிமை உண்டு. எமது நாடு பலம் வாய்ந்தது. அவர்கள் விரும்பினால் இங்கு இருந்து விட்டு போகலாம். ஆனால் அவர்கள் சிறுபான்மையினர் என்ற போர்வையின் கீழ் அளவுக்கு மீறி உரிமைகளை கோருவதை நிறுத்த வேண்டும்” என்றவாறாகவெல்லாம் துடுக்குத்தனமான கருத்துகளை உதிர்த்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

இலங்கை அரசின் பெரும்பான்மையினத்துக்குச் சாதகமான பண்பு/ சிறுபான்மை இனங்களின் உரிமைகளை மதிக்கத் தவறி அவர்களை இரண்டாம் மூன்றாம் தரப் பிரசைகளாக்கியது போன்ற பல்வேறு இனவாதப் போக்குகளே இனப் பிரச்சினைக்கான அடிப்படைக் காரணம் என்பதையும் இந்தப் போக்குகளிலிருந்தே இனமுரண்கள் கூர்மையுற்றன என்பதையும் 1994க்குப் பின்பு வந்த சிறிலங்கா அரசுத் தலைவர்கள் ‘ஓரளவுக்கு’ ஒத்துக்கொண்டுள்ளதாக ஒரு கருத்துண்டு.

ஜனாதிபதியிடமும் மத்தியிலும் குவிந்திருக்கும் அதிகாரங்களை பரவலாக்கல், பல்லின மக்கள் பல்வேறு கலாச்சார விழுமியங்களோடு வாழும் இலங்கையில் அந்தந்த இன – கலாச்சார அடையாளங்களைப் பாதுகாப்பது; அதேசமயம் இலங்கையர் எனத் தம்மைச் சிறுபான்மையினங்கள் உளப்பூர்வமாக கருதும் அரசியல் நிலையை தோற்றுவிப்பது முதலான முன்னெடுப்புகளாலேயே இனப் பிரச்சினைக்குத் தீர்வைக் காண முடியும் என்பன போன்ற கருத்து நிலைகள் கடந்த காலங்களில் அரசியல் கட்சிகளாலும் அறிஞர்களாலும் திரும்பத் திரும்பப் பேசப்பட்டுச் சிறுபான்மை இனங்களின் உரிமைகளைக் உறுதி செய்யும் வகையில் அரசியல் சாசனத்தில் மாற்றத்தின் அவசியம் பற்றிய தேவையைப் பல்வேறு தரப்புகளும் உணர்ந்திருப்பதாகத் தெரியும் இக்காலகட்டத்தில் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக சரத் பொன்சேகாவின் இனவாதக் கருத்துச் சிதறல்கள் அமைந்துள்ளன.

‘நாங்கள்’ = சிங்களவர்கள்.
‘அவர்கள்’ = சிறுபான்மை இனங்கள்.

இந்த இரட்டைச் சூத்திரத்தின் பின் பெரும்பான்மைவாத கருத்தியலும் சிங்கள இனவாத கருத்தியலும் உறைந்து கிடக்கின்றன. ‘நாங்கள்’ என பொன்சேகா கூறும் போது எனது இனம், நாம் பெரும்பான்மையினர், இது எமது தேசம், எங்களுக்கே இங்கு முழு உரிமையும் உண்டு. அவர்கள் புறத்தியார்,’அவர்கள்’ விரும்பினால் எம்முடன் சேர்ந்து இருக்கலாம். ஆனால் இருக்குமிடத்தில் இருக்கவேண்டும். எனவே ‘நாங்களும்’ ‘அவர்களும் ‘ சமமானவர்களல்ல. ‘அவர்கள்’ அந்நியர்கள். ‘நாங்கள்’ மண்ணின் மைந்தர்கள் என்று இனஒதுக்கல் அரசியலையே பொன்சேகா பேசுகிறார். வேறுபாடுகளை அங்கீகரித்து பல்கலாச்சார, பல்லின மக்களின் நாடு இலங்கையென்பதை அவர் மறுக்கிறார்.

“இனப் பிரச்சனையை நாம் தீர்ப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்கிறோம், ஆனால் விடுதலை புலிகள் தான் இதற்கு தடையாக இருந்து வருகிறார்கள்” என இலங்கை அரசு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கூறிக்கொண்டு மறுபக்கம் இலங்கையில் இருப்பது ‘ பயங்கரவாத’ பிரச்சனை எனத் தனது இராணுவ நடவடிக்கைகளுக்குத் தார்மீக நியாயமும் கற்பித்து கொண்டு கொழுந்து விட்டெரியும் இன முரண்பாடுகளிற்கு எவ்வித அரசியல் தீர்வுகளையும் முன்மொழியாமல் அரசு இயந்திரம் யுத்தத்தை முடுக்கிவிட்டிருக்கும் இவ்வேளையில் தளபதி சரத் பொன்சேகாவின் பொறுப்பற்றதனமான இனவெறிப் பேச்சு இன முரண்பாடுகளை மேலும் உக்கிரப்படுத்தும்.

அதுமட்டுமல்லாமல் வரலாற்றுரீதியாகவே அனைத்து சிறுபான்மை மக்களும் இலங்கை அரசு தம்மை இரண்டாம்தர பிரசைகளாக நடத்துகின்றதென்று நம்பி வந்துள்ளனர். சரத் பொன்சேகாவின் இந்தக் கருத்துச் சிதறல்கள் இந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதாகவே இருக்கின்றது.

“ஐக்கிய இலங்கையில் அனைத்து மக்களும் தங்கள் அரசியல் – பொருளாதார – சிவில் உரிமைகளை சமமாக நிலை நாட்டும் வண்ணம் இலங்கை அரசியல் சாசனம் மாற்றப்பட வேண்டும் இதுவே இனப்பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வாக அமையும். இதுவே நீதியும் ஜனநாயக நெறிகளும் கொண்ட வருங்கால இலங்கையைக் கட்டமைக்கும்” என்றெல்லாம் குரல் கொடுக்கும் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த மக்களையும் பெரும்பான்மை இனத்துக்குள்ளேயேயிருக்கும் ஜனநாயகக் குரல்களையும் அவமதித்து இராணுவ வெற்றிகளின் மமதையில் பேசும் ஒரு கடைந்தெடுத்த இனவாதியின் குரலாகவே தளபதி சரத் பொன்சேகாவின் குரல் அமைந்திருக்கிறது.

தளபதியின் பொறுப்பற்ற பேச்சுக் குறித்து அரசு இன்னும் மவுனமாகவேயிருக்கிறது. இந்தப் பேச்சுக்கு அரசுத் தலைவரிடமிருந்து வாயளவிலான கண்டனம் கூட இதுவரை தெரிவிக்கப்படவில்லை. தொடர்ந்தும் இந்த இனவாதப் போக்குகளுக்குள் இலங்கை அரசும் அதன் அதிகாரிகளும் தளபதிகளும் சிக்குண்டிருக்கும் வரைக்கும் இலங்கையில் அமைதி திரும்புவதற்கான சின்னவொரு அறிகுறியும் கூடத் தோன்றாது. மகிந்தவின் வெற்றி வன்னிப் போர்முனையிலில்லை. மாறாக அந்த வெற்றி, அரசியல் தீர்வொன்றை உருவாக்கி எழுதப்படும் இலங்கையின் புதிய அரசியல் சாசனத்தின் பக்கங்களுக்குள்தான் ஒளிந்திருக்கிறது.

15 thoughts on “இனவெறியின் இன்னொரு முகம்

  1. காலத்தின் தேவை கருதிய சிறந்த படைப்பு இப்படியான இன்வாதம் கக்கும் கருத்துக்கள் சிங்கள தரப்பிடம் இருந்து வெளிவருவது இது முதற் தடைவையல்ல.எப்படி இத்ற்கான கண்டணத்தை எதிர்பார்க்கிறீர்கள்.?த்ங்களின் எழுத்துக்களில் இந்த கட்டுரை வித்தியாசமானது.வாழ்துக்கள்.

  2. வரலாற்றில் மிகவும் சிக்கலானதும் துயரம் மிகுந்ததுமான அனுபவங்களைக் கொண்டிருந்த பெல்ஜியத்தின் இனப்பிரச்சனைக்கு இந்த மொழிக்குழுப் பிரதிநிதித்துவ ஏற்பாடு ஒரு புதிய தீர்வை முன்வைத்து ஒரளவு வெற்றியும் கண்டுள்ளது.இந்த அரசியல் ஏற்பாடானது இணைப்பாட்சிக்கு ஒருபடி மேலே போய்விட்டதென்றும் எனவே உறவாடலாட்சி (கன்சோசியேசன்)என அழைப்பதே பொருந்தும் எனவும் சில அறிஞர்கருதுகின்றனர். பெல்ஜியத்தின் மொழி,கலாசாரப்பிளவுகள் அரசியலமைப்பு ரீதியாக இன்று நிரந்தரப் பிரிவுகளாகவே ஏற்கப்பட்டு விட்டன .அதாவது வேற்றுமையை ஏற்றுக்கொண்டதன்மூலம் தமக்குள் ஒற்றுமையை நிலைநாட்டும் முயற்சியிது.இந்த முயற்சி ஓரளவிற்கு வெற்றியளித்தமையினாற்தான் பெல்ஜியம் முன்னரைவிட இப்போது ஸ்திரத்தன்மை மிக்கதாய்க் காட்சியளிக்கிறது.
    வி.ரி.தமிழ்மாறன்_இனப்பிரச்சனைத் தீர்வுகள்._
    ரஜனி பதிப்பகம்_பரிஸ்_

  3. ஜனநாயகம் என்பதன் அடிப்படையக்கூட அறியாமல் உளறி இருக்கிறார் பொன் சேகரா.இதுபோன்ற முட்டாள்த்தனமான சிங்கள ஆதிக்க கருத்துகள்தான் இலங்கையில் இன மோதலை உருவாக்கியது. தமிழ் மக்கள் ஜனநாயக முறையில் அறவழியில் போராடிபோது ஆயுதங்களால் நசுக்கப்பட்டனர் என்பது இலங்கையின் இனமோதல் வரலாறு.தமிழர்கள் ஈழ போராட்டத்தை சரியானது என தன் சொற்களால் மெய்ப்பித்திருக்கிறார் பொன்சேகரா.

  4. /மகிந்தவின் வெற்றி வன்னிப் போர்முனையிலில்லை. மாறாக அந்த வெற்றிஇ அரசியல் தீர்வொன்றை உருவாக்கி எழுதப்படும் இலங்கையின் புதிய அரசியல் சாசனத்தின் பக்கங்களுக்குள்தான் ஒளிந்திருக்கிறது./
    தமிழுக்கு சம உரிமை என்று அரசியல்சாசனத்தின் பக்கங்களில் இருக்கிறது.ஆனால் நடைமுறையில் இல்லை.எனவே வெற்றி வெறுமனே அரசியல் சாசனப்பங்களில் வருவது மட்டுமல்ல அதற்கு மேலாகவும் நடைமுறையில் வரவேண்டும்.அதற்கு போராடாமல் கிடைக்குமா?

  5. தேசத்தில் கொன்ஸ் என்பவர் இராணுவத்தளபதியின் கூற்று குறித்து ஈபிடிபி போன்ற கட்சிகள் கருத்து என்ன என்று கேட்டுள்ளார்.இவர் இலங்கை வெளிநாட்டமைச்சர் லண்டன் வந்தால் றூம் புக் பண்ணி பராமரிக்கிறார்.அப்போது அவரிடம் கூறினால் அவர் நடவடிக்கை எடுக்கமாட்டாரா என்ன?இதை இவர் செய்தால் தமிழ் மக்கள் என்றென்றும் இவருக்கு நன்றியுள்ளவர்களாக இருப்பார்களே?

  6. பாகிஸ்தான் போன்று இலங்கையில் இராணுவம் அரசியலில் செல்வாக்கு செலுத்தும் சக்தியாக இல்லாத நிலையில் இராணுவ தளபதியின் கூற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கத்தேவையில்லை எனக் கருதுகிறேன்.எத்தனையோ முக்கிய விடயங்கள் இருக்கும் போது எதற்காக இந்த விடயத்திற்கு நேரத்தை செலவு செய்ய வேண்டும்?ஒருவேளை கருத்துக் கூறாமல் இருந்தால் அரசின் கைக்கூலி என்று குற்றம் சுமத்திவிடுவார்கள் என்று பயமா?

  7. ரங்கன், தேசம் போல கருத்துச்சுதந்திரம் என்று கண்டதையும் எழுதுவதையும் பார்க்கிலும் இப்படியான கட்டுரைகள் வரவேற்கக்கூடியது என நான் கருதுகிறேன்

  8. சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தான் வெள்ளாளன்,பின் பிரபாகரன்

  9. சபா தாஸ், பொய்ப் பிரச்சாரம் செய்யும் ஊடகங்களுக்கு எப்போதும் பயப்படத்தான் வேண்டும்.ஏனெனில் அவைகள்தான் இனவெறி அரசைவிட,கொலைகாரரைவிட,கொள்ளைக்காரரைவிட சமூகத்தை சீர்கெடச் செய்யும் நச்சுப்பாம்புகள்.

  10. சுகன்>
    உப்பிடித்தான் எங்களுக்கு பாண்டவரையும் அறிமுகப்படுத்தினவங்கள்..

  11. ஒரு இராணுவத்தளபதியின் பேச்சுக்கள் அல்லது பேட்டிகள்
    இன்னமும் இனவாதத்தன்மை நீறுபூத்த நெருப்பாகவே இருக்கிறது
    இதையும் வெற்றி கொள்ளமுடியும்.
    இந்த நுhற்றாண்டில் பொதுஇடத்தில் குண்டுவைப்பதும் அல்லதுதற்கொலை தாக்குதலை நடத்துவதும் போராட்டம் அல்ல
    வன்முறை அல்லது பயங்கரவாதம்.
    பேரினவாதத்தை தோற்கடிகடிப்பதற்கு தமிழ்மக்கள் ஜனநாயகத்தை
    கற்றுகொள்வதும் பயங்கரவாத தன்மையை எதிர்த்து போராடி
    ஒரு ஐக்கியதமிழ்மக்கள் முண்ணியை கட்டியெழுப்ப தயாராக வேண்டும்.
    இதுவே இனவாதத்தை தோற்கடிப்பதற்கான முதல் படி அதை நாம்
    கற்றுக்கொள்ளுவோம். நடைமுறைப்படுத்துவோம்.

  12. /பொய்ப் பிரச்சாரம் செய்யும் ஊடகங்களுக்கு எப்போதும் பயப்படத்தான் வேண்டும்.ஏனெனில் அவைகள்தான் இனவெறி அரசைவிடஇகொலைகாரரைவிடஇகொள்ளைக்காரரைவிட சமூகத்தை சீர்கெடச் செய்யும் நச்சுப்பாம்புகள்./

    உண்மைதான்.இதைவிட சிறப்பாக தேசம் பற்றிக் கூற என்ன இருக்கிறது.?

  13. கீழ்தரமான ‘அவதூறு’களை ஊடகத்துறையின் நடுநிலைத்தர்மமாக வாய்ச்சவடால் அடிக்கும் தேசம்நெற் ஜெயபாலன் திருந்துவதற்கான வாய்ப்பு அச்சம் தரும் வகையில் மிகக்குறைந்தே செல்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *