குறைந்த அபாயம்!

கட்டுரைகள்

வ்வப்போது என்னைக் குறித்து ஏதாவதொரு வம்புச் செய்தியை, முகநூல் வம்பர்கள் கூட்டாகப் பரப்பிவிடுகிறார்கள். அந்தவகையில் புதிய வம்புச் செய்தி: ஷோபாசக்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்கிறார். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிற்போக்குத்தனங்கள் குறித்து அவருக்கு விமர்சனங்கள் இல்லை.

இதைக் கொஞ்சம் விளக்கிவிடுகிறேன். ‘யாவரும்.காம்’ இணைய இதழுக்கு கொடுத்த நேர்காணலில் நான் சொல்லியிருந்த ஒரேயொரு வாக்கியத்தை முன்வைத்தே, இந்த வம்புப் பேச்சு கிளப்பிவிடப்பட்டிருக்கிறது. அந்த நேர்காணலில் நான் இவ்வாறு சொல்லியிருந்தேன்:

“தேர்தல் காலங்களில் என்னுடைய ஆதரவை ஆயிரத்தெட்டு விமர்சனங்களோடும் ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே’ கொடுக்கிறேன்.”

அதுவென்ன ஆயிரத்தெட்டு விமர்சனங்கள்?

உண்மையில் அதற்கும் அதிகமாகவே எனக்குக் கூட்டமைப்பின் மீது விமர்சனங்கள் உண்டு. தமிழ்த் தேசியக் கூட்டைமைப்பின் யாழ் மையவாதம், தலைமையின் ஆதிக்கசாதிப் பின்னணி, சமூகநீதியில் அக்கறையின்மை, தலைவர்களின் கறைபடிந்த அரசியல் பின்னணிகள் எனச் சொல்லிக்கொண்டே போகலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளால் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட அமைப்பு. புலிகளின் குரலாகத்தான் அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்த முகநூல் வம்பர்கள் எப்போதாவது விமர்சித்ததுண்டா எனத் தெரியவில்லை. ஆனால் நான் அது உருவான நாளிலிருந்தே அதை விமர்சிப்பவன். இன்னும் சொல்லப்போனால் தமிழரசுக் கட்சி காலத்திலிருந்தே அவர்கள் எவ்வாறு ஆதிக்க சாதிச் சக்திகளாக இருந்தார்கள் என்பதையெல்லாம் நீள் கட்டுரைகளாக எழுதி இருக்கிறேன். அவ்வளவு ஏன்? கூட்டமைப்பை ஆதரிப்பதாகச் சொன்ன இதே நேர்காணலில், நான் அவர்களைக் குறித்து என்ன சொல்லியிருக்கிறேன் என்பதைக் கவனியுங்கள்:

“நீங்கள் தமிழ் அரசியல் தலைமைகளின் இராசதந்திரத்தைக் குறைத்து மதிப்பிடுகிறீர்கள் என்றே நினைக்கிறேன். சர்வதேசம் போர்க்குற்ற விசாரணையை நடத்தாது, இனப்படுகொலை நிகழ்த்தியவர்களை சர்வதேச நீதிமன்றம் தண்டிக்காது என்றெல்லாம் படிப்பறிவற்ற எனக்கே தெரியும்போது, சட்டங்களைக் கரைத்துக் குடித்த சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் கஜேந்திரகுமாருக்கும் விக்கினேஸ்வரனுக்கும் அது தெரியாதா! அவர்கள் சர்வதேசப் போர்க்குற்ற விசாரணை, தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு, என்றெல்லாம் மனமாரப் பொய்சொல்லி, தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கான இராசதந்திர நகர்வுகளை வெற்றிகரமாகச் செய்தார்கள். இப்போது அதைப் பேசுவதைக் கொஞ்சம் குறைத்து வைத்திருக்கிறார்கள். அடுத்த தேர்தல் வரும்போது மீண்டும் பேசக்கூடும்.”

கூட்டமைப்பைப் பொய்யர்கள், ஏமாற்றுக்காரர்கள் என்றுதானே சொல்கிறேன். அப்படியானால் தேர்தல் காலங்களில் எதற்கு நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்க வேண்டும்? என் பேச்சில் ஏனிந்த முரண்பாடு?

இந்த முரண்பாடு ஒன்றும் உலகம் அறியாத புதுமையல்ல. அரசியல்புலத்தில் இயங்கும் எல்லோருக்குமே இப்படியான ஒரு நிலையெடுக்க வேண்டிய நியாயமான சூழ்நிலை ஏற்படும். மிகவும் தீவிரமான இடதுசாரிக் குழுக்கள் கூட இந்த முரண்பாட்டிலிருந்து தப்பிக்க முடியாது.

ஓர் எடுத்துக்காட்டுச் சொல்கிறேன். பிரான்ஸில் கடந்த சில அதிபர் தேர்தல்களில் இறுதிச்சுற்றுக்கு வரும் இரண்டு வேட்பாளர்களில் ஒருவர் தீவிர நிறவெறியரும் பாசிச அரசியலை முன்வைப்பவருமாக இருக்கிறார். எதிர்த்தரப்பிலோ ஜக் சிராக், இம்மானுவல் மக்ரோன் போல கடைந்தெடுந்த வலதுசாரி வேட்பாளர் இருக்கிறார். இந்த நிலையில் நாம் என்ன செய்ய வேண்டியிருக்கிறது? வலதுசாரிகளைத் தீவிரமாக எதிர்க்கும் அமைப்புகள் கூட, நிறவெறி பாசிஸ்டுக்கு எதிராக வலதுசாரிக்கு வாக்களித்து, குறைந்த அபாயத்தைத் தேர்ந்தெடுக்குமாறு மக்களைக் கோருகிறார்கள்.

இதை இந்தியச் சூழலிலும் பொருத்திப் பார்க்கலாம். பா.ஜ.க – காங்கிரஸ் என இரண்டு அமைப்புகளுமே முற்போக்காளர்களாலும் இடதுசாரிகளாலும் கடுமையாக விமர்சிக்கப்படும் கட்சிகளே. எனினும் தேர்தல் காலத்தின்போது, பெரும்பாலான முற்போக்காளர்களும் இடதுசாரிகளும் மதச் சார்பின்மையை முன்நிறுத்தி காங்கிரஸ் கூட்டணியையே ஆதரித்தார்கள். இதனுடைய அர்த்தம் அவர்கள் காங்கிரஸ் விசுவாசிகளாக மாறிவிட்டார்கள் என்பதல்ல. இதுவொரு தேர்தல் நிலைப்பாடு. குறைந்த அபாயத்தைத் தேர்ந்தெடுக்கும் முயற்சி.

புலிகளுக்குப் பின்னான காலங்களில்தான் வடக்கு – கிழக்கில் நடக்கும் தேர்தல்களில் நான் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். இனி இலங்கையின் அரசியல், தேர்தல் மூலமான நாடாளுமன்ற அரசியலே என்ற எனது நம்பிக்கையின் விளைவாக அந்த அக்கறை ஏற்பட்டது.

கடைசி இரண்டு அதிபர் தேர்தல்களிலும், எவர் இராஜபக்ச குடும்பத்துக்கு எதிரான முதன்மை வேட்பாளராக இருந்தாரோ அவருக்கே எனது ஆதரவு இருந்தது. புதிய சனநாயக முன்னணியில் போட்டியிட்ட மைத்ரிபால சிறிசேனாவையும், அடுத்து அய்க்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட சஜித் பிரேமதாஸவையும் ஆதரித்தேன். நான் மட்டுமல்ல, சிறுபான்மை இனங்களின் பெரும்பாலோனோர் இவர்களையே ஆதரித்தார்கள்.

இந்த ஆதரவின் பொருள் என்ன? நாங்கள் புதிய சனநாயக முன்னணியையும், அய்க்கிய தேசியக் கட்சியையும் நம்பினோம் என்பதா? கிடையவே கிடையாது! இராஜபக்ச சகோதரர்கள் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே எங்களது முதன்மை நோக்கமாகயிருந்தது. குறைந்த ஆபத்தைத் தேர்ந்தெடுக்கும் முயற்சி.

இவ்வாறுதான், நாடாளுமன்றத் தேர்தல்களில் அல்லது மாகாணசபைத் தேர்தல்களில், நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்கிறேன். அப்படி ஆதரிப்பதற்கான காரணம் ஒன்றேயொன்றுதான்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும்தான், மத்தியிலிருக்கும் இனவாத ஒற்றையாட்சி அரசுக்கு எதிராக ஓரளவாவது செயற்படக் கூடிய, தேர்தலில் வெற்றிபெற வாய்ப்புள்ள கட்சியாக இருக்கிறது.

இனவாத அரசுக்கு எதிராக அப்படி என்னதான் கூட்டமைப்புக் கிழித்துவிட்டது? என யாராவது கேட்டால், ஓரளவு கிழித்துள்ளார்கள் என்பதே எனது கருத்து. மகாணசபைகளுக்கு முழுமையான அதிகாரங்களைக் கோருவது, இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை முழுமையாகச் செயற்படுத்தக் கோருவது என்ற நிலைப்பாட்டில் அவர்கள் உறுதியாக இருகிறார்கள். இறுதி யுத்தத்தின் போது இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலையே என அவர்கள்தான் 10.02. 2015 அன்று வட மாகாணசபையில் தீர்மானத்தை முன்மொழிந்தார்கள். இலங்கையில் வேறெந்தக் கட்சி இப்படியொரு தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றியது?

சிங்கள இனவாத ஒற்றையாட்சி முறைக்கு ஓரளவேனும் எதிர்ப்புக் காட்டக் கூடிய, தமிழ் மக்களை ஒருங்கிணைக்கக்கூடிய ஒரு கட்சி அதிகாரத்திற்கு வருவதை நான் விரும்புகிறேன். எனவேதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது கடுமையான விமர்சனங்களை வைத்தபடியே, நான் அவர்களை ஆதரிக்கிறேன். தேர்தல் காலங்களில் நான் தமிழ்த் தேசியக் கூட்டைமைப்பை ஆதரிப்பது என்பது குறைந்த அபாயத்தை ஆதரிப்பதுதான். தேர்தல் புறக்கணிப்பில் எனக்குச் சம்மதமில்லை. தேர்தல் புறக்கணிப்பு மோசமானவர்கள் ஆட்சிக்குள் நுழைவதற்கான புறவாசலை அமைத்துக் கொடுக்கிறது.

சில புனிதப் போராளிகள் இப்போது என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்கலாம். ஒருகாலத்தில் நானே இந்தக் கேள்வியைப் பலரிடம் கேட்டவன்தான்: பிற்போக்குத்தனத்தில் ஊறிப்போன கட்சிக்குப் பதிலாக முற்போக்கு இடதுசாரிக் குழுவொன்றுக்கு நீங்கள் ஏன் ஆதரவளிக்கக்கூடாது?

அப்படியொரு இடதுசாரிக் குழுவைத் தேர்தலில் தேடிக் கண்டுபிடிப்பதில் எனக்குச் சிரமமேயில்லை. இடதுசாரி அரசியலில் எனது தாய்க் கட்சியான ‘சோசலிஸ சமத்துவக் கட்சி’ பல காலங்களாகவே இலங்கை அதிபர் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் போட்டியிடுகிறது. இனப்பிரச்சினை மற்றும் சமூகநீதி போன்றவற்றில் அவர்களது நிலைப்பாடுகளோடு நான் இன்றும் பெருமளவு ஒத்துப்போகக்கூடியவனே. ஆனால் இந்தக் கட்சியினர் அதிபர் தேர்தலில் மொத்தமாகவே அய்யாயிரம் வாக்குகளுக்குக் குறைவாகவே பெறுவார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் நூறுக்கும் குறைவான வாக்குகளைப் பெறுவார்கள். எனவே தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை இக்கட்சி இனவாத அரசுக்குப் பலமான எதிர்த்தரப்புக் கிடையாது. இந்தக் கட்சிக்கு ஆதரவு கொடுப்பது எனது மனச்சாட்சியை வேண்டுமானால் திருப்தி செய்யலாம், ஆனால் இனவாத அரசின் அபாயத்தை எதிர்கொள்ள மனச்சாட்சி மட்டுமே போதாது. ஒருங்கிணைந்த வலுவான சக்தி வேண்டும்.

இந்த முகநூல் மரமண்டைகள் சித்திரிக்க முயல்வதுபோல, நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் என்னைக் குறுக்கிக்கொண்டவன் கிடையாது. கூட்டமைப்பு உட்பட அனைத்துச் சிறுபான்மை இனக் கட்சிகளும் அதிகபட்ச விட்டுக்கொடுப்புகளைச் செய்தாவது ஓரணிக்குள் வரவேண்டும் என்பதே எனது கருத்தாகயிருக்கிறது. இதையும் நான் அந்த யாவரும். கொம் நேர்காணலில் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளளேன்:

“இன்று இலங்கையிலுள்ள அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் நாடாளுமன்ற அரசியலில்தான் ஈடுபட்டுள்ளன. இலங்கையின் இடதுசாரிக் கட்சிகள் எல்லாமே தேர்தல் அரசியலில் பங்கெடுக்கின்றன. புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் கூட ஒரு தேர்தல் கட்சியை ஆரம்பித்திருக்கிறார்கள். நாடாளுமன்ற அரசியலில் சிறுபான்மை இனங்கள் இன்னும் முற்றாக வலுவிழந்து விடவில்லை. அவர்கள் ஓரணியில் நின்றுதான் மகிந்த ராஜபக்சவைத் தோல்வியடையச் செய்தார்கள். ‘தமிழர்களின் வாக்குகளாலேயே நான் தோற்கடிக்கப்பட்டேன்’ என மகிந்தவே சொன்னார். இம்முறை சனாதிபதி தேர்தலில் இன்னும் அற்புதமான முறையில் சிறுபான்மை இனங்கள் ஒருங்கே நின்று கோத்தபய ராஜபக்சவிற்கு எதிராக வாக்களித்தார்கள். மாகாண சபைத் தேர்தல்களிலும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தமிழர்களில் அறுதிப் பெரும்பான்மையினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பின்னேயே திரண்டார்கள். இந்த ஒற்றுமை இன்னும் வலுப்பட வேண்டும். தமிழ் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழ்க்கட்சிகள் வேற்றுமையிலும் ஒற்றுமையைக் கடைபிடிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் சிறுபான்மை இனங்கள், தீர்மானகரமான சக்திகளில் ஒன்றாக மாறுவதால் மட்டுமே இலங்கை அரசியல் சாசனத்திலோ அரசுக் கொள்கைகளிலோ மாற்றம் கொண்டுவர முடியும். இது நடக்காதென்றால் முழு இலங்கையும் நீண்டகாலப் போக்கில் சிங்கள மயமாக்கப்பட்டு விடும். பெரும்பான்மை இனத்தின் கீழே சிறுபான்மை இனங்கள் அடக்கி வைக்கப்பட்டிருந்த எத்தனையோ நாடுகளில் கடைசியாக இப்படித்தான் நடந்து முடிந்திருக்கிறது. கேட்கக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.”

இதையெல்லாம் இந்த முகநூல் வம்பர்கள் படித்துத்தானிருப்பார்கள். ஆனால் வம்பு பேசுவதற்குத் தோதான ஒற்றைவரியை மட்டுமே தேர்ந்தெடுத்து ஊசலாடிக்கொண்டிருக்கிறார்கள். இப்போதுகூட இவர்களின் வெறும்வாய் மூடப்போவதில்லை. ஆனால் வாசகர்களுக்கு என் நிலைப்பாட்டை விளக்குவது என் கடமையாகிறது. அதனாலேயே இதை எழுத வேண்டியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *